Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 1, 2009

இசையும் இறைவனும் - 2

நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்.


இசை என்றவுடன் சிலர் அதில் மனோமயக்க விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகம் என்பது இசையின் முதுகெலும்பு கொண்டே வளர்க்கபட்டது. இசையை மாயை என காண்பவர்களும் , இசையை உன்னதமாக காண்பவர்களுக்கும் இடையே இருப்பது சின்னஞ்சிறிய வித்தியாசம் தான். ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். அது போல இசையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

சிலர் இசையை மருத்துவ நிலையில் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து இருக்கிறார்கள் (Music therapy). மருந்து என்பது நம்மில் இல்லாத குறைவிஷயங்களை வெளியில் இருந்து கொடுப்பது அல்லவா? ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இசை மருத்துவம் என்பது அடிப்படையில் தவறு என்பேன். நம்மில் இசை இல்லா நேரம் எதுவும் இல்லையே..! அப்படி இருக்க எவ்வாறு வெளியில் இருக்கும் இசை நம்முள் நுழைந்து நம்மை குணமாக்கும்.?

வேத மந்திரங்கள் ஒருவித ஒலி அலையை ஏற்படுத்துகிறது. வேத ஒலி ஒரு இசையின் வடிவம்தான். வேதத்தை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும் அதுதான். வேதம் என்பது மதம் கடந்தது என நான் அடிக்கடி கூறகாரணம் இந்த ஒலிவடிவம் தான்.

குயில் கூவுகிறது, பசு சப்தம் எழுப்புகிறது, மயில் அகவுகிறது இந்த ஒலி எல்லாம் எந்த மதத்தை சார்ந்தது? அப்படித்தான் வேத ஒலிகளும். சென்ற பதிவில் ஒரு ஒலிக்கோப்பை வைத்திருந்தேன். அது 2 நிமிடம் ஒலிக்கக்கூடிய ஒலி அலைகள். அதில் 1.06 நிமிடத்திற்கு நான்கு வேதத்தில் ஒன்றான சாம வேதமும், முடிவு வரை குரானில் தேனீ பற்றி ஓதும் வரிகளும் இருக்கிறது.

குரல் மற்றும் ஒலி தெளிவு தவிர பிற விஷயங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது பார்த்தீர்களா? இதில் சிலர் நாங்கள் இந்து என சொல்லி மார்தட்டும் எத்தனை பேருக்கு இது சாம வேதம் என தெரியும்? வேதத்தின் சுருதியை அறியாமல் இவர்கள் இந்து தர்மத்தை காப்பாற்றுகிறேன் என மசூதியை இடிக்கிறார்கள். இவை இரண்டையும் கேட்டு மகிழ்ந்திருந்தால் அதன் ஓசையில் இருக்கும் ஒற்றுமையை கேட்டு லயித்திருந்தால் உடைக்கவும் வேண்டாம் அதற்கு கமிஷனும் வேண்டாம்.

சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் ஓசைக்காகவே அமைந்திருக்கிறது. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்று இருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகாணம் வாசித்தால் கைலாய மலையே உருகுமாம். இது போல சாம கானத்தின் ஆற்றலை பலவாறு புகழ்ந்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரும் பகவத் கீதையில் நான் வேதத்தில் சாமமாக இருக்கிறேன் என்கிறார். அதில் இசையின் வடிவாக இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. இலவசமாக அதை கணினியில் கேட்கமுடியும். ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)

ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் பொழுது எல்லோரும் தசவித நாதம் என்ற நிலையை அடைவார்கள். நம்முள் பத்துவிதமான ஒலிகள் கேட்கத்துவங்கும். அவ்வொலி மத்தளம், பறை, பேரிகை, துந்துபி என பல்வேறு இசை கருவிகளை போல இருக்கும்.

இந்நிலையை உணரும் பொழுது நம் மூன்னோர்கள் தங்களில் உணர்ந்த ஒலியை எப்படி வெளியே கருவிகளாக செய்தார்கள் என்று ஆச்சரியம் அடைவீர்கள். முன்பின் தெரியாத ஓசை நம்மில் கேட்கும்பொழுது நமக்கு நோய் வந்ததாக முடிவுக்கு வருவோம். வெளியே கேட்கும் ஓசைகள் உங்களுள் கேட்கும் பொழுது அதை பிடித்து மேலே செல்ல முயலுவோம். அதனால் அவற்றை வெளியே இசை கருவியாக உண்டு செய்தார்கள்.

பல்வேறு வகையாக ஒலி இறைவனின் ரூபம் என கூறினாலும் நாம் அதை உணர்ந்தால் தானே புரிந்துகொள்ள முடியும். எளிய தியான பயிற்சி மூலம் நீங்களும் ஒலி ரூபமான இறைவனை உணர முடியும். அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா?

அமைதியான ஒரு அரை இருள் கொண்ட அறையில் அமருங்கள். உங்கள் முதுகு பகுதியை சுவரில் சாய்த்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆழமாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். தொடர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.

சில நிமிடத்தில் உங்கள் இதயத்தின் ஓசை மிகவும் நுட்பமாக உங்களுக்கு கேட்கத்துவங்கும். இந்த ஓசை உங்கள் காது என்ற புலனுக்கு கேட்’காது’. அது உங்களுக்குள்ளே கேட்கும். உங்கள் இதய ஓசையின் அளவை கவனியுங்கள். ஒரு ஓசைக்கும் அடுத்த ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளியை கவனித்த வண்ணம் இருங்கள். பிறகு அனைத்தும் தானாகவே நடக்கும்.

அதிகமாக நீங்கள் சாப்பிட்டுவிட்டு இந்த தியானத்தை செய்தால் உங்கள் தூக்கத்தில் எழும் நாதத்தை (குறட்டை ஒலி) பிறர் கேட்கத் துவங்குவார்கள். :)

இரயில் பயணங்களை நான் அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு அதன் தாள லயம் ஒரு காரணம். ரயிலில் அமர்ந்து கண்களை மூடி அதன் தாளத்தை தியானம் செய்தபடியே பயணித்தது உண்டா? அருமையான ஒரு தியானவழிகாட்டி என்றால் ரயிலின் ஓசையை கூறலாம். அதே போல மாட்டு வண்டியும் சிறந்த கருவியே. அதில் அமர்ந்து பயணிக்கும் பொழுது நம்மை தியான நிலைக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

அடுத்த முறை ரயிலிலோ மாட்டுவண்டியிலோ பயணிக்கும் பொழுது கண்களை மூடி அதன் தாளத்தில் தியானித்து பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் நாதவடிவம் எங்கும் நிறைந்திருப்பது புரியதுவங்கும்.

எனக்கு ஒரு ரகசிய எதிரி ஒருவர் உண்டு. நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். அவர் பயன்படுத்தும் வார்த்தையும், கருத்தும் சில நேரங்களில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

அவரின் வரிகளை படித்தால் செயலற்று கல்லாகிப்போவேன். அவரை போல கருத்துக்கள் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரை எதிரியாக்கியது. நீங்களும் அந்த எதிரியை தெரிந்து கொள்ளுங்கள். நான் இரு பகுதிகளாக எழுதிய இந்த கட்டுரையை அவரின் நான்கே வரி கள் மூலம் உணரலாம். அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் என் எதிரியின் பெயர் திருமூலன்.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
---------------------------------------------------------------திருமந்திரம் 30.


மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்........... நீங்க?


30 கருத்துக்கள்:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்வாமி.
அமைதியான சூழலில் ,உள்ளோசை கேட்பதுண்டு.
ரயில் தாளமும் அவ்வாறே. ஏதோ நிம்மதி,ஒரு இசைவு பயணங்களில் கிடைக்கும். மிகவும் நன்றி.

கோவி.கண்ணன் said...

//ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். //

அட நீங்களுமா ?
:) அவ்வ்வ்வ்

sarul said...

ஸ்வாமி

ஒரு தடவை தியானம் செய்த போது உடல் பலபகுதிகளாகி ஒவ்வொரு பகுதிகளும் சில வலஞ்சுழியாகவும் சில இடஞ்சுழியாகவும் சுழல்வதுபோல உணர்ந்தேன் ,நல்லவேளை உண்மையில் அப்படி நிகழவில்லை :-))
சில நாட்கள் முன் உள்ளே போன அல்கஹாலின் வேலையோ தெரியவில்லை

ஒரு கேள்வி
திருமூலருக்கும் மூலநட்சத்திரத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா

இப்படிக்கு

சுப்பாண்டி

Mahesh said...

உண்மை... இசையைப் போல ஒரு தியானம் இல்லை....

ஒரு இருட்டறையில் வேறெந்த கவனச் சிதறல்களும் இல்லாமல் இசையை அனுபவிக்கும்போது.. அதன் சுகமே அலாதி !!

sarul said...

கோவி.கண்ணன் அவர்களிற்கு
ஒரு நாளைக்கு 3 யுனிட் அளவு அல்கஹால் உடம்புக்கு நல்லது ,மருத்துவரிடம் இந்த அளவுபற்றியும் j curve பற்றியும் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் நண்பன்.

எம்.எம்.அப்துல்லா said...

மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்........... நீங்க?


//

சாமி,

’....நீங்க?’ அப்படின்னு முடிச்சதுக்கு பதிலா ‘அப்ப..நீங்க’ அப்படின்னு மாத்திப்பாருங்க. ஒரு ஃபர்பெக்ட் பினிஷிங் டச் கிடைக்கும் :)))

இப்படிக்கு,
எழுத்தாளர்.அப்துல்லா

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு கேள்வி
திருமூலருக்கும் மூலநட்சத்திரத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா

//

மூலன் என்ற இடையனின் உடலில் வாழ்ததால் திருமூலர் என்று அழைக்கப்பட்டார் என எங்கோ படித்த ஞாபகம்.

இப்படிக்கு,

பெரிய சுப்பாண்டி.

துளசி கோபால் said...

ஆஹா.... அருமை & எளிமை.

ரசித்தேன் ஸ்வாமிகளே.

அமைதியான இரவில், அரைத்தூக்கத்தில் கண் மயங்கும்போதும் நெஞ்சாங்கூட்டில் துடிக்கும் இதயத்தின் ஓசை.....

அனுபவித்து இருக்கேன் பலமுறை.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி வல்லிசிம்ஹன்,

உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

////ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். //

அட நீங்களுமா ?
:) அவ்வ்வ்வ்//

என்ன செய்ய சிலருக்கு போதை பற்றி பார்ப்பார்கள். சிலருக்கு பார்ப்பான் என்றாலே போதை :)

உங்கள் வருகை நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சுப்பாண்டிக்கும் பெரிய சுப்பாண்டிக்கும்..

மூலர் என்ற வார்த்தை மிகவும் ஆன்மீக தொடர்பு உண்டு.

மூலர் என்றால் காரணமானவர் என்று அர்த்தம். கோவில் உருவாக காரணமான தெய்வத்திற்கு மூலவர் என்று பெயர். அது போல ஆன்மீக வளத்திற்கு காரணமானவர் என்பதால் இவர் மூலர். திரு என்பது மரியாதையான அடைமொழி.

கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலன் என்ற இடையன் உடல் புகுந்தது எல்லாம் நம் மக்களின் கற்பனைவளத்தின் சான்றுகள். :)


மூல நோய்க்கும் திருமூலருக்கும் சம்பந்தம் உண்டானு கேட்காம போனீங்களே:) அது வரைக்கும் சந்தோஷம்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி துளசி கோபால்,
உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

//இப்படிக்கு,
எழுத்தாளர்.அப்துல்லா//

நாரயணா ....இந்த இலக்கியவாதிகள் தொல்லை தாங்க முடியலடா :)

ஜிகர்தண்டா Karthik said...

//ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)//

அட அதுலயும்.. வேதா மந்திரத்தை கொத்து பரோட்டா போட்டு ஒரு பாடல் இருக்கிறதே.... மக்கள் அந்த புது வேதத்தில் மயங்கிவிட்டனர்..
கோமா வேதம் அது....

இதைக் கண்டித்து நீங்களும் பதிவு எழுதியிருந்தீர்கள்.

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

பார்ப்பான் என்றாலே போதையா

புதிய தத்துவம் சொன்ன சாமி வாழ்க

சூப்பர் சுப்பாண்டி

Jayashree said...

"Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife."
முனிவர்கள்,சூஃபிக்கள் இவர்களோட ஸ்லோகம், பாட்டு, PHRASES ஐ ஆழ்ந்து படிக்கும்போது நமக்குள்ள ஒரு ரிதம் வந்து ஏதோ அதிருவது, ஆனந்தகூத்து மாதிரி இதுதான் இந்த ATTRIBUTE ஓட ENERGY யோனு தோனவைக்கும். அதுவும் ஒரு இசை தானோ!!.example: ஆதி சங்கரரின் கால பைரவாஷ்டகம். அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி

Siva Sottallu said...

அருமையான பதிவு ஸ்வாமி, மிக்க நன்றி.

// நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். //

ஆனால் அவரின் சில வரிகள் என்னைபோன்ற சாமானியர்களுக்கு எளிதாக புரிவதில்லையே ஸ்வாமி. நீங்கள் பலமணிநேரம் உரையாற்றுவதாலும், பல பக்கங்கள் எழுதுவதாலும் தான் எதோ அவர் கூறியதில் பாதியாவது புரிந்துகொள்ள முடிகின்றது.

பாவனாவை பற்றி கிசு கிசு எழுதிவிட்டு நீங்களே அவரை எதிரியாக பார்கலாமா ஸ்வாமி?

வாணகமும், விண்ணகமும் வெவ்வேறா ஸ்வாமி? இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?

sarul said...

ஸ்வாமி excellent

//மூல நோய்க்கும் திருமூலருக்கும் சம்பந்தம் உண்டானு கேட்காம போனீங்களே:) அது வரைக்கும் சந்தோஷம்//

this is called perfect finishing touch.

( இலக்கிய வாதிகள் கவனிக்கவும் )

இது தான் ஸ்வாமியின் பின்னால் என்னை அலைய வைக்கிறது.

உள்ளங்கவர் கள்வன் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இப்படிக்கு
சின்னச் சுப்பாண்டி

( ஆஹா குருவினால் வழங்கப்பட்ட நாம தீட்சை ரொம்ப அருமை )

Siva Sottallu said...

// நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. //

அந்த இணையதள முகவரியை கொடுத்தல் மகிழ்ச்சி அடைவேன் ஸ்வாமி.

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...

////ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். //

அட நீங்களுமா ?
:) அவ்வ்வ்வ்//

என்ன செய்ய சிலருக்கு போதை பற்றி பார்ப்பார்கள். சிலருக்கு பார்ப்பான் என்றாலே போதை :)

உங்கள் வருகை நன்றி
//

விஷ(ம)ம் விஷ(ம)ம் !

ஐ மீன் பாம்பு விசம் தான் பயமாகவும், மருந்தாகவும் பயன்படும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//வாணகமும், விண்ணகமும் வெவ்வேறா ஸ்வாமி? இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?//

வானகம் என்றால் நம் கண்ணுக்கு தெரியும் வானத்தை குறிக்கும். விண்ணகம் என்றால் பிரபஞ்சம் மற்றும் ஏனைய விண்கூட்டத்தை குறிக்கும்.

Simply we can say...Sky and Galaxy.

//அந்த இணையதள முகவரியை கொடுத்தல் மகிழ்ச்சி அடைவேன் ஸ்வாமி.//

"veda mp3" என கூகிளில் தேடுங்கள் பல இணைய தளங்கள் தருகிறது. அனைத்தும் இலவச தறவிரக்கம்.

பிரகாசம் said...

இந்த இணைப்பில் இருந்து நான்கு வேதங்களையும் இலவசமாக இணையிறக்கம் செய்து கொள்ளலாம்(வன்தட்டில் இடம் இருந்தால்)

http://www.uppathil.net/IISH/vedams/

Siva Sottallu said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

இணையதள முகவரி உங்களிடம் கேட்கும் முன்பு நான் கூகிள் செய்தேன் ஸ்வாமி, நீங்கள் கூறியது போல் பல இணைய தளங்கள் கிடைத்தன, ஆனால் வேதத்தின் உச்சரிப்பு அவசியம் என்று நீங்கள் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, அதனால் தான் உங்களிடம் கேட்டேன் ஸ்வாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

கேழுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல அழகு கேட்க ஒளி கொடுத்தது...

Siva Sottallu said...

திரு பிரகாஷ், உங்களுக்கு எனது நன்றிகள்.

Siva Sottallu said...

// அழகு கேட்க ஒளி கொடுத்தது //

ஸ்வாமி, எனது பெயருக்கு அழகு என்று ஒரு அர்த்தம் உள்ளதா? நன்றி ஸ்வாமி.

Chiruthuli said...

திரு ஓம்கார் சுவாமி அவர்களுக்கு எனது வணக்கங்களும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் பதிவுகளை எனக்கு நேரம் கிடைக்கும் சமயம் படித்து வருகிறேன் ஆன்மீகம், ஜோதிடம், மூடநம்பிக்கை, சாஸ்திரம், நல்ல கதைகள், சிந்திக்க கருத்துக்கள், என்று அனைத்தையும் இயல்பாகனதாகவும் துணிவுடனும் இருக்கிறது. தங்களின் பதிவுகளை படித்தவரை இறைவன் குரலுக்கும் உண்மைக்கும் தவிர வேறு எதற்கும் செவி சாய்க்க மாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன். தங்களின்
பதிவுகள் தொடரவேண்டும்
அன்புடன்
சிறுதுளி
(திரு. சுப்பையா வாத்தியாரின் மாணவன்)

Tamil Home Recipes said...

நீங்கள் சொல்வது அருமை

K DhanaseKar said...

ஒலி செய்யும் வேலைகளை புத்தகங்களிலும், இணையத்திலும் சிலவற்றை படித்திருக்கிறேன். அதில் ஒரு விளக்கத்தை உங்களிடம் கேட்பது சரி என நினைக்கிறேன்.

காயத்திரி மந்திரம் ஒரு வினாடிக்கு 2 இலட்சம் அதிர்வெண்களை உண்டுபண்ணக்கூடியதெனவும், அந்த அதிர்வின் மூலம் அது சொல்லப்படும் இடத்திலிருந்து 1600 மைல் துாரம் சுத்திகரிக்கப் படுகிறது எனவும் சொல்லப் பட்டிருக்கறது.

எனில் பல காலமாக காயத்திரி மந்திரத்தை சொல்லி வந்த நமது பாரதமும், ஒரு சில பக்கத்து நாடுகளும் கூட இன்றைய தேதியில்
சுத்தத்தின் சின்னங்களாயிருக்க வேண்டுமல்லவா? ஆனால் சின்னாபின்னமாகவல்லவா ஆகியிருக்கின்றன (ஆச்சரியக் குறி தேவையில்லைதானே).

உங்களிடம் நான் கேட்க நினைக்கும் சிறிய கேள்வி இதுதான்.

ஏன்?