சரஸ்வதி நதியின் கலாச்சாரத்தில் இயல்பான மனிதர்களைவிட உயர் சக்தி கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றில் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இருந்தது. அவர்களிக்கு மெய்ஞானம் சார்ந்த அறிவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஆதிநாத் என்பதே பதிலாக இருக்கும்.
உலகம் உருபெற்ற காலம் தொட்டு மனித இனத்தின் மேம்பட்ட
பரிமாணத்திற்காக இறையாற்றல் உருபெற்று வந்து வழி நடத்துகிறது. அடிப்படை மனித
நிலையில் இருந்து உயர்மனித நிலைக்கு முன்னேற்றம் செய்ய குருவாக இருந்து பல்வேறு
தூண்டுதல்களை செய்கிறது.
வேத காலத்தில் சரஸ்வதி நதியின் கரையில் வாழ்ந்து
வந்தவர்களை ஆன்மீகத்தில் செலுத்தி மனித நிலையிலிருந்து உயர் மனித நிலைக்கு
உயர்த்தினார் ஆதிநாத்.
இவர் யார் இவரின் பின்புலம் என்ன என்பது தெரியாது.
முதலில் தோன்றியவர் என்பதால் ஆதிநாத் என அழைக்கப்பட்டார். இவருடன் இருந்த பிரதான
சீடராக இருந்தவர் உமாநாத். எப்பொழுதும் உடன் இருப்பவர் என்பதால் உமா என
அழைக்கப்பட்டார். இருவரும் இணைந்து பலர் ஆன்மீக விடுதலை பெறுவதற்கு காரணமாக
இருந்தனர்.
இருவரும் உருவாக்கிய பாரம்பரியம் நாத பாரம்பரியம்
எனப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றிணைந்து இவர்களின் வழிகாட்டுதலில்
ஆன்மீக உயர்நிலையை அடைந்தார்கள். சன்யாசிகள், துறவிகள் என்ற கருத்தியல்கள்
அப்பொழுது இல்லை. குடும்ப அங்கத்தினர்கள் என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர்.
குழந்தை முதல் முதியவர் வரை குடும்பத்தில் இருக்கும்
அனைவரும் ஆன்மீக நிலையில் இருந்தனர். விழிப்புணர்வுடன் வாழ்ந்த குடும்பத்தில்
பிறக்கும் குழந்தைகள் முழுமையான விழிப்புணர்வுடனேயே பிறந்தன. சிறப்பான குடும்பங்கள்
ஒன்றிணைந்து வேதகால வாழ்க்கையை வாழ்ந்தனர். குல வாழ்வியல் முறை என இதற்கு பெயர்.
உமாநாத் வழிகாட்டுதலில் ஒளி பொருந்திய பரிமாணத்திற்கு
பலர் சென்றார்கள். உலகில் வாழ்ந்தாலும் உடல் கடந்து ஆற்றல் நிலையில் வாழும்
பரிமாணத்தை பலருக்கு உமாநாத் அளித்தார்.
குலாதிபதி என குலத்திற்கு அதிபதியான ஆதிநாத் வேத அறிவை
அனைவருக்கும் கிடைக்கச்செய்ய பைரவ நிலையை பெற்று உமாநாதரை பைரவியாக்கி அனைவரையும்
உச்சம் பெற்ற விழிப்புணர்வில் வைத்திருந்தார்கள்.
மனித குலம் ஆணவத்தால் உரைந்து போகும் தருணத்தில் அவர்கள்
உண்மையை உணரச்செய்ய ஓவ்வொரு காலத்திலும் ஆதிநாத் மனித உருவில் வருகிறார். உமாநாத்
உடன் இருக்கிறார் என்பது நாத பாரம்பரியத்தின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப ஆதிநாத்
என்ற அடையாளமும் பெயரும் மாறுமே தவிர அவரின் இறை நோக்கம் மாற்றம் அடையாது.
இமய மலையில் துவங்கி தற்காலத்தில் இமாச்சல பிரதேசம் என
அழைக்கப்படும் இடத்தில் அதிகரித்து, ராஜஸ்தானின் கிழக்கில் பிரவாகமாகி விரிவடைந்து
குஜராத்தில் கடலில் கலந்தது சரஸ்வதி நதி.
குல மார்க்கம் என்ற தன்மையில் அனைவரும் சரஸ்வதி நதி
நாகரீகத்தில் இணைந்து செயல்பட்டு சரஸ்வதி நதியை ஆன்மீக கருவியாக்கினார்கள். ஆன்மீக
உச்ச நிலையில் அங்கே வாழ்ந்த அனைவரும் வேறு ஒரு பரிமாணத்திற்கு பைரவி தன்மையில்
இருந்த உமாநாத் மூலம் மாற்றம் அடையும் தருணம் ஏற்பட்டது.
உலக கால சக்கரத்திற்கும் உயர் பரிமாண சக்கரத்திற்கும்
உள்ள வேறுபாட்டை நாம் அறிய வேண்டும்.
பைரவர் மற்றும் பைரவி இருக்கும் உயர் பரிமாணத்தில் ஒரு நாள் என்பது உலகில்
நமக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு சமம் என கணக்கிடலாம்.
ஆதிநாதரும் உமாநாதரும் தங்களின் இருப்பை தினமும் நமக்கு உணர்த்தினாலும் நம்மால் அதை பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணர முடியும். அத்தகைய காலத்தையே மஹா கும்பமேளா என்கிறோம்.
மஹா கும்பமேளா நடக்கும் தருணத்தில் உயர் பரிமாண நிலையில் இருந்து சரஸ்வதி நதி நமது பரிமாணத்தில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரீகத்தை பிரதிபலிக்கும் குல வாழ்வியல் முறை மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை மஹா கும்பமேளாவில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி அப்பரிமாணத்தின் ஆன்மீக ஊற்றாக பெருகி நம் பரிமாணத்தில் நீராக காட்சி அளிக்கிறது. குரு, ஆன்மீக சதனா, சாஸ்திரங்கள் என பல மெய்யறிவை நதியாக கும்பமேளாவில் பெருகச்செய்கிறது.
ஆதிநாதரும் உமா நாதரும் தங்களின் ஆன்மீக ஆற்றல் வடிவமாக
ஒவ்வொரு நாளும் இணைகிறார்கள். நமக்கு மஹா கும்பமேளா பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு
முறை நடக்கிறது. உயர் பரிமாணத்தில் தினமும் நடக்கும் நிகழ்வாக மஹா கும்பமேளா
இருக்கிறது.
ஆதிநாதரின் பரிமாணத்தில் தினமும் அதிகாலை நடைபெறும்
முதல் நிகழ்வு மஹா கும்பமேளாவாகும். அப்பரிமாணத்தின் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை
நடைபெறும் நிகழ்வே பிற கும்பமேளாவாகும்.
இரு பரிமாணங்கள் எனப்படும் ஆற்றல் உலகுக்கும் பூமி எனும்
நம் உலகுக்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே கும்பமேளாவை
புரிந்துகொள்ள முடியும். இல்லை எனில் மேற்கத்திய கல்வியை படித்தவர்கள் அழுக்கானவர்கள்
கூட்டமாக கூடும் நிகழ்வாக மட்டுமே பார்ப்பார்கள்.
உயர்பரிமாணம் அருவி போல இறங்கி பிரவாகமாக செயல்படும் மஹா கும்பமேளா என்ற நிகழ்வுக்கு ஞானிகளும், முனிவர்களும், யோகிகளும் ஏன் ஓடோடி வருகிறார்கள் என புரிகிறதா? இது சாதாரண திருவிழாவிற்கு கூடும் கூட்டமல்ல என்பதையும் உணர வேண்டும்.
பேராற்றல் இணையும் இத்தகைய இடத்திற்கு கோவில் அவசியமா? சடங்குகள் அவசியமா என கேள்வியை நாமே கேட்டு பதில் அளிக்கலாம்.
ஆதிநாத ஆற்றலும் நாத பாரம்பரியத்தின் விழிப்புணர்வும் பொங்கி பெருகும் மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?
ஆம் என்றால் அதற்கான தகவல்களை அளிக்கிறேன்.
(தொடரும்)