நேற்று நாளிதழ்களில் வந்த செய்தி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கருத்தரிப்பு மருத்துவமனையில் ஒரே நாளில் 26 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்றதை படிக்கும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.
செயற்கை கரு உற்பத்தி முறையில் பல குழந்தைகள் பிறக்கிறது என்பதை படத்துடன் வெளியிட்டு அதை கொண்டாடும் மனநிலையில் நாம் இருக்கிறோம். இத்தகவலை கண்டவுடன் நாம் சிந்திக்க வேண்டியது என்ன தெரியுமா?
ஒரே நாளில் இத்தனை சோதனை குழாய் குழந்தைகள் என்றால் மாதத்திற்கு எத்தனை..மேலும் எத்தனை தம்பதிகள் மலட்டுத்தன்மையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து இத்தனை குழந்தைகள் பிறப்பதை ஒரு அதிசயமாக தினசரியில் போடுவது நல்லதா?
இவை ஒரு புறம் இருக்க சோதனைக்குழாய் குழந்தைகள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பார்த்தால், முதலில் மூன்று கருக்களை கருப்பையில் வைத்து சோதனை செய்வார்கள். அதில் ஒரு கருவை கலைத்து, இரு கருக்களை வளரவிடுவார்கள். கருப்பை இரு கருக்களை சுமக்கும் திறன் இல்லாமல் போனால் மற்றொன்றையும் அழித்துவிடுவார்கள். மேற்கண்ட படத்தில் உள்ள 26 குழந்தைகளில் 7 குழந்தைகள் இரட்டை குழந்தைகள் ஆகும். மீதி 12 குழந்தைகள் தங்களுடன் உருவான இரட்டை கருக்களை இழந்து பிறந்தவைகள்.
தங்கள் கருத்தரிப்பு மையத்திற்கு வருபவர்கள் ஏமாறக்கூடாது என்பதாலும், தாங்கள் அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொடுத்தோம் என்ற வெற்றியை கூறுவதற்கும் சில மருத்துவர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேலும் நான் கேள்விப்பட்ட ஒரு அதிர்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தம்பதியினரின் விந்து மற்றும் கருமுட்டை பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை பலப்படுத்தாமல் வேறு ஒரு நபரின் விந்து மற்றும் கருமுட்டையை பயன்படுத்துகிறார்கள். கருத்தரிப்பு மையத்தில் 50%க்கு மேல் பிறக்கும் குழந்தைகள் பிறப்பு தன்மை இதுதான். இந்த உண்மை தம்பதிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. கருத்தரிப்பு மையத்தின் வெற்றிக்காகவும் பணத்திற்காகவும் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை...!
சரி நம்ம விஷயத்திற்கு வருவோம்....
உணவு பழக்கத்தை பற்றி நான் குறிப்பிட்டதும் பலர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டார்கள்.
தினமும் சாப்பிடும் உணவிலேயே நாங்கள் எத்தனை அஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம் என தங்களின் கருத்துக்களை கூறினார்கள்.
உடலில் ரசாயனம் சேர விடாமல் மிகத்தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்பதை புரிந்துகொண்டால் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என விளக்கும்.
மேலும் நம் உடைகளை மேற்கத்திய பாணியில் உடலுடன் மிகவும் இறுக்கமாக அணிகிறோம். ஆண்களும் பெண்களும் மிகவும் தடிமனான ஜீன்ஸ் வகை உடைகளை இடுப்பு சார்ந்த ப்ரதேசங்களில் இறுக்கமாக அணிவதால் உடலில் வெப்ப நிலை அதிகமாகி உடல் சமநிலை தவறுகிறது.
நம் பாரம்பரிய முறைப்படி திருமணமான தம்பதிகள் அணியும் உடையை கவனமாக பாருங்கள். வேஷ்டியும் சேலையும் ஒரு வித தளர்வு நிலையை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நம்மில் பலர் நவீன நாகரீகத்தில் இவ்வாறு அணியாமல் குளிர் பிரதேச மக்கள் அணியும்
இறுக்கமான உடையை அணிந்து வலம்வருகிறோம். குறைந்தபட்சம் வீட்டிலாவது இயல்பான நம் கலாச்சார உடை அணிவது அவசியம். கலாச்சார உடை என்றவுடன் ஏதோ நான் கலாச்சார காவலன் என நினைத்துவிடாதீர்கள். நீங்கள் மேற்கத்திய நாட்டில் வாழ்ந்தால் அத்தகைய உடை அணியுங்கள், இந்தியாவில் வாழ்ந்தால் அதற்கு தக்க உடை அணியுங்கள் என்கிறேன்.
உடையை பற்றி பேசிய நாம் பழக்க வழக்கத்தை பற்றியும் பேசலாம். ப்ளாஸ்டிக் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. ப்ளாஸ்டிக் எந்த வயதிலிருந்து பயன்படுத்துகிறோம் நாம் தெரியுமா?
மிகச்சிறிய குழந்தையாக இருந்த பொழுது ப்ளாஸ்டிக் பொம்மையை கடித்து சுவைக்க ஆரம்பித்து இப்பொழுது எது என்றாலும் ப்ளாஸ்டிக் தான். நம் வீட்டில் இருக்கும் பொருட்களில் ப்ளாஸ்டிக்
உள்ள பொருளை தூக்கி வீச வேண்டும் என விரும்பினால் 90% பொருட்கள் வீச வேண்டி வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? ப்ளாஸ்டிக் பொருட்கள் குழந்தை இன்மையை கொடுக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று.
மேலும் ரெப்ரிஜ்ரேட்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் உடல் நலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும்.
நம் உடல் டாக்ஸின் (நச்சு) பொருட்களால் நிரப்பப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை இனி மேல் உடலில் சேராதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை தெய்வத்திற்கு சமம் என கூறுகிறார்கள். அப்படிப்பட்ட தெய்வம் வந்து வசிக்கும் நம் உடல் என்ற கோவில் கழிவுகள் இன்றி தூய்மையாக இருக்க வேண்டும் அல்லவா?
நச்சுகளும் கழிவுகளும் இல்லாமல் தூய்மையான உடலை பெற நம் உணவு, உடை மற்றும் பழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இனிமேல் உடலில் சேரும் நச்சுக்களை தடுக்க உணவு உடையில் மாற்றம் செய்யலாம்.இத்தனை நாள் சேர்ந்த நச்சுக்களை (டாக்ஸினை) எப்படி வெளியேற்றுவது?
இதற்கு தீர்வு யோக பயிற்சியும் யோக க்ரியைகளும் தான்...!
உடல் வளைவு கொண்ட ஆசனம், சக்தி உடலை மேம்படுத்தும் ப்ராணாயாமம், மன உடலையும் அறிவுடலையும் தளர்வாக்கும் ஆழ்நிலை தியானம் என யோகத்தில் ஈடுபட்டு நான்கு உடலையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்ல எதிர்காலத்தில் நச்சுக்கள் சேராமலும் தடுக்கலாம்.
ஸ்வாமி யோகப்பயிற்சியா?... யோகப்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைபாடு வரும்னு சொல்றாங்களே.. தாம்பத்திய உறவில் நாட்டம் போயிடுமே... ஒரு சினிமாவுல கூட அப்படி காண்பிச்சாங்களே அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும்-னு உங்களுக்கு சந்தேகமா?
அடுத்தப்பகுதியில ஒரு மகிழ்ச்சியான செய்தியோட இதை விளக்கறேன்.
(கரு உருவாகும்)