Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 24, 2010

காசி சுவாசி - பகுதி 12

பாரத கலாச்சாரம் அனைத்தையும் இறை பொருளாக கணும்பேறு பெற்றது. எந்த ஒரு விஷயம் வாழ்க்கைக்கு ஆதாரமானதோ அதை இறைவனாக பாவித்தனர். இறைவன் அனைத்திலும் இருக்கிறான் என தத்துவார்த்தமாக கூறிவிட்டாலும் யாராவது ஒருவர் ஹிரண்ய கசிப்பு போல இதில் இருக்கிறானா என கேட்டால் நம்மால் பிரஹல்லாதன் பதில் கூற முடியாது. மாறாக நரசிம்ம அவதாரம் எடுத்து அவர்களை கிழித்துவிடுகிறோம்.

நாய், மாடு, காகம், நாகம், கருடன் போன்ற விலங்குகளும் மின்னல், மழை, பூமி போன்ற இயற்கை சக்திகளையும் நாம் வணங்கி வருகிறோம். அவ்வாறு ஆதார விஷயங்களை வணங்கும் வரிசையில் உணவையே இறைவனாக வணங்கும் வழக்கம் தான் அன்னபூரணி வழிபாடு.

அன்னபூரணி ஜகன்மாதா என அழைக்கப்படுகிறாள். உணவு என்பது முதலில் மனிதனுக்கு கிடைக்கத் துவங்குவது தாய் மூலம் தான். அதனால் உணவின் மூலமாக பெண்மையே இருக்கிறது. பிறரின் பசியை ஆற்றி அதில் இன்பம் காண்பது பெண்மையின் இயல்புகளில் ஒன்று.



காசி மாஹா நகரத்தில் காலபைரவர் காக்கும் கடவுள் என்றால், அன்னபூரணி தாயாக இருந்து அனைவர் பசியையும் போக்குகிறாள். இங்கே பசி என்பது ஊண் உடலில் ஏற்படும் பசி அல்ல. ஞான உடலில் ஏற்படும் பசி.

காசியில் சிவன் அன்னபூரணியிடம் யாசகம் கேட்கிறார் என்பது மரபு. அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் இறைவன் இங்கே யாசிக்கிறார். அதுவும் கபாலத்தில்...

அவர் யாசிப்பது அனைவருக்கும் வழங்க ஞான வைராக்கியத்தை தான். அன்னம் என்பது நம் உடல் வளர்க்க ஒரு கருவி என்றாலும் அதனால் நம் ஞான பாதையும் முடிவு செய்யப்படுகிறது. எதை நீ உண்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற அற்புத கருத்தை கொண்டது கடோபநிஷத். அன்னபூரணி நமக்கு அன்னம் மூலம் ஞானம் வழங்குபவளாக இருக்கிறாள்.

பூரணம் என்றாள் முழுமை. அன்னத்தின் வாயிலாக முழுமையை வழங்குபவள் அன்னபூரணி.

அன்னபூரணி கோவிலில் தினமும் மதியம் 12மணிக்கு அன்னதானம் நடைபெறும். அன்னதானத்தின் பொழுது உணவுகள் மிகவும் சுவையுடனும், நீர் விடுவது போல நெய் விட்டும் அளிப்பார்கள். தினமும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உணவு உண்கிறார்கள். அன்னபூரணியே இந்த அன்னதான கூடத்தில் தான் இருப்பதாக கூறுவதுண்டு.



பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த அன்னதானத்தில் அனைவருக்கும் சமபந்தி போஜனம்தான்.

மடாதிபதி வந்தாலும், மாடுமேய்ப்பவன் வந்தாலும் ஒரே இடத்தில்தான் உணவு உண்ண வேண்டும். சிவனே இங்கே பிச்சை எடுக்கிறாரம், இங்கே பிறருக்கு மதிப்புகொடுத்து போஜனம் கிடைக்குமா? அனைவரும் இங்கே சமம்தான். ஆனால் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றில் காசியில் அந்தணர்களுக்கு மட்டுமெ உணவு அளிப்பதாக பதிவுசெய்யப்பட்டது. அந்த சம்பவம் பிற அன்ன சத்திரத்தில் நடந்திருக்கலாம். அன்னபூரணி என்றும் அதற்கு இடம் தந்ததில்லை. ஆனால் அவள் பற்றி எதுவும் எழுதப்படவில்லை என்பது என்னை பல ஆய்வுகளுக்கு செலுத்தியது.

முதன் முதலாக காசிக்கு சென்ற நான் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு லோக மாதா அன்னபூரணியின் கோவிலுக்குள் நுழைந்தேன்.

விஸ்வநாதர் கோவிலைக் காட்டிலும் ஆடம்பரமான கட்டிட அமைப்புடன் காட்சி அளித்தது. நேராக சன்னதிக்கு சென்றேன். சன்னதி சாத்தப்பட்டு இருந்தது. மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். சன்னதி திறந்ததும் தரிசித்துவிட்டு செல்லலாம் என சன்னதிக்கு இடப்பக்கம் இருக்கும் அலுவலக வாயிற்படியில் சென்று அமர்ந்துகொண்டேன்.

கோவிலின் நிர்வாக மேலாளர் பரபரப்புடன் அங்கும் இங்கும் பலரை ஏவிக்கொண்டிருந்தார். பலர் பதட்டமாக இருந்தனர். நான் வேறு நடைபாதையில் அமர்ந்திருந்ததால் மேலாளர் நகர்ந்து உட்காரும்படி கூறினார். அவர்கள் பேசுவதிலிருந்து ஒருவிஷயம் புலப்பட்டது.

அன்னபூரணிக்கு விஷேஷகாலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி இருக்கும் அறையின் சாவி காணவில்லை என்பதும், ஒருவர் அந்த அங்கியை அணிவித்து அழகுபார்க்க பணம் செலுத்தி காத்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

ஒரு பத்து நிமிடம் சென்றது, பதட்டம் அதிகரித்தது. நான் மேலாளரிடம் சென்று, “ஐயா நான் சாவி கிடைக்க உதவலாம?” என கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்தார். பிறகு சரி என்றார்.

மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.

அந்த அறையில் இருக்க வாய்ப்பில்லை என்றும் அது தீபாவளி நேரத்தில் பயன்படுத்தும் திருவிழா பொருட்கள் வைக்கும் அறை என்றார். மேலும் அது தினமும் திறக்கப்படாது என்று விளக்கினார்.

எங்கள் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த கோவில் ஊழியர், நேற்று அந்த அறை ஒரு பணிக்காக திறக்கப்பட்டதை கூறினார். இருவரும் சென்று தங்க அங்கி இருக்கும் அறையின் சாவியுடன் திரும்பினார்கள்.

கோவிலுக்கு சென்றால் சாதாரணமாக வணங்கிவிட்டு என் வருகையை பலருக்கு தெரியாத வகையில் பயணிக்கும் எனக்கு அன்று ராஜ உபச்சாரங்கள் நடைபெற்றது. இன்றும் அது தொடர்கிறது.

அன்னபூரணி கோவிலின் பக்கவாட்டில் இருக்கும் ஒரு விஸ்தாரமான அறையில் காளி, ஸ்ரீராமர் என உப சன்னிதிகள் இருக்கும். கோவிலில் கூட்டம் இருந்தாலும் இப்பகுதில் கூட்டம் இருக்காது. அங்கே சென்று தியானத்தில் அமர்ந்தேன்.

அனைத்தும் சுழன்று என்னுள் அடங்கியது. அன்னம் அளிப்பவள் என்னுள் பூரணமானாள். உணர்வுகளுக்கு அப்பாலும், காலத்தை கடந்தும் பயணிக்கச் செய்து எனக்கு அமுதூட்டி என்னை அமிழ்த்தினாள்.

மெல்ல கண்விழித்து பார்த்தேன். கண்களில் பரவசத்தால் கண்ணீர் பெருகியது. உடலில் ஒருவித ஆனந்தம் மிச்சமிருந்தது.

அப்பொழுது தான் கவனித்தேன். எனது மடியில் சில நாணயங்கள் சிதறி கிடந்தது. அவள் வழங்கியது. அன்னபூரணி வழங்கிய நாணயங்களை இன்றும் என்னுடன் வைத்திருக்கிறேன்.

நான் வைத்திருப்பதை பார்த்து இது என்ன நாணயம் என பலர் கேட்பது உண்டு. அவர்களிடம் விளையாட்டாக நான் கூறுவது இதுதான்...

“பிரபஞ்சத்தையே வீட்டாக வைத்திருப்பவளின் அறை சாவியை கண்டறிந்து கொடுத்ததற்கு எனக்கு கிடைத்த சன்மானம் இது...”

என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...

வாரணாசியின் குறுகலான சந்துகள் வழியே அன்னபூரணியை காண சென்று கொண்டிருக்கிறேன்... நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்...


[சுவாசிப்பேன்...]

அடுத்தப்பகுதியில் நிறைவு பெறும்...

Thursday, February 18, 2010

காசி சுவாசி - பகுதி 11

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

-------------------------------------------------- திருமந்திரம் 1911

மனிதர்களுக்கு உள்ளே சக்தி நிலை இருக்கிறது. ஆனால் அதை அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஒருவர் எவரஸ்ட் ஏறுகிறார் மற்றொருவர் சிறப்பாக இசை கோர்வை செய்கிறார் என எத்தனையோ திறன் இருந்தாலும் இயற்கை அனைவருக்கும் இந்த ஆற்றலை உள்ளே கட்டமைத்தே படைத்திருக்கிறது. படைக்கப்பட்ட திறன்களில் எதை ஒருவர் தீட்டுகிறார்களோ அதில் அவர்கள் வெளிப்படுகிறார். அது போல ஆன்மீக ஆற்றல் என்பது அனைத்துக்கும் அடிப்படையான சக்தி. அந்த சக்தியை அனைவரும் தூண்டுவதோ தீண்டுவதோ இல்லை.

ப்ராணன் என்ற இந்த சக்தியானது பலருக்கு செயல்படாமலேயே அவர்கள் இறப்பு நிலைக்கு சென்று பிறப்பு சுழற்சியில் சுற்றிவருவார்கள். ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும். ப்ராணனை செயல்படுத்தாத சாதாரண மனிதர்கள், ஆன்மீகவாதிகளின் உடலில் இருக்கும் ப்ராணனை பெற்று மேம்படுகிறார்கள்.

ப்ராணன் ஆன்மீகவாதிகளிடம் இருந்து பெறப்படுவதால்தான், முழுமையான ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவரை சந்திக்கும் பொழுது வேறு சிந்தனை எதுவும் எழாமல் முற்றிலும் ஒரு ஆனந்தத்தை உணர முடிகிறது. அவரை விட்டு நீங்கினால் ஏதோ இழந்த நிலைக்கு மனம் செல்லுகிறது.

ப்ராண சக்தி உடல் நிலையில் செயல்படுவதில்லை. உண்மையில் ப்ராணன் ஆன்மாவிலிருந்து செயல்படுகிறது. அதனால் ஒருவர் தனது உடலை இழந்தாலும் ஆன்ம சொரூபமாக ப்ராணனை பிறருக்கு வழங்க முடியும். சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.

அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். ஆனால் ஆன்மீகவாதிகளின் இறப்பு என்ற செயல் நிகழும் பொழுது அவர்களின் ப்ராணன் வெளியேறாமல் உள்ளேயே அடங்கிவிடுகிறது.

எளிமையாக சொல்லுவதென்றால் ப்ராணனை வெளிச்செலுத்தாத மனிதன் இறப்பில் ப்ராணனை வெளிச்செலுத்துகிறான். வெளிச்செலுத்தும் யோகி ப்ராணனை இறப்பில் உள்ளே கட்டமைக்கிறார். யோகியின் உடலில் ப்ராணன் நிலைப்படுத்தப்படுவதால் அவரின் உடலை சமாதி என்ற செயல் மூலம் நிலையாக ஒரு இடத்தில் வைத்து பின்வரும் காலத்தில் அனைவருக்கும் அதிலிருந்து ப்ராணன் கிடைக்கச்செய்கிறார்கள். இதற்கு சமாதி கிரியை என்று பெயர். சாதாரண மனிதனுக்கு ப்ராணன் உடலில் இல்லாததால் அதை எரித்து உடலை பஞ்சபூதத்தில் ஐக்கியப்படுத்துகிறார்கள். பஞ்சபூதத்தில் உருவான உடலை பஞ்சபூதத்தில் இணைப்பது என்பதை ஒருவித குறியீடாக மதசடங்குகள் அமைந்திருக்கிறது.
இடைக்கடார் சமாதி - அருணாச்சலேஸ்வரர் கோவில்,திருவண்ணாமலை

ஆன்மீகவாதிகளின் சமாதியில் ப்ராணன் அளவிலாத சூழலில் வெளிப்படும். திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி ஆலயம், பழனி, திருப்பதி, சபரிமலை என
அனைத்து புகழ்பெற்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் எல்லாம் ஒரு ஜீவசமாதி உண்டு. அதாவது சமாதி இன்றும் ஜீவனுடன் இருக்கிறது.

மயானத்தில் யோகிகளுக்கு சமாதி வைக்கப்படுவதில்லை. காரணம் வணங்கத்தக்க நிலையில் இருக்கும் சூழலில் மட்டுமே அவர்களுக்கான ஜீவசமாதி அமைக்கப்படும். அதே போல யோகிகளின் உடல் எரிக்கப்பட்டால் அதில் உள்ள ப்ராணன் வீணாகி அதனால் சமூக கேடுகள் நடைபெறும் என திருமூலர் கூறிகிறார்.

காசி நகரம் அனைத்து நகரம் மற்றும் நாகரீகத்தைவிட முற்றிலும் வேறுபட்டது அல்லவா? அந்த நகரமே மயானமாக இருக்கிறது. மஹா மயானம். அதனால் அங்கே யோகிகளுக்கு சமாதி வைப்பதில்லை. இவர்கள் யோகிகளின் உடலை கங்கையில் சேர்த்துவிடுகிறார்கள். கங்கையின் மையத்தில் சென்று உடல்களை கங்கையில் வேத மந்திரத்துடன் விட்டுவிடுவார்கள். அந்த உடல் சில மணி நேரத்தில் நீர்வாழ் உயிரினங்களுக்கு இறையாகும். அப்படியானால் யோகிகளின் ப்ராண சக்தி வீணாகிவிடுமே என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. காரணம் யோகிகள் காசியில் இருக்கும் வரை காசியே அவர்களின் உடல். ஆகவே காசி என்ற உடலில் ப்ராணன் அடங்கி நகரத்தையே சக்தி ஊட்டுவதால் அந்த உடல் கங்கையில் இணைக்கபடுகிறது. காரணம் கங்கை ப்ராண சக்தியின் நீர் உருவில் ஜீவ சொரூபமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ப்ராணன் உடல் ப்ராண பரவாகத்தில் சேர்க்கப்படுகிறது.

சில யோகிகள் தங்களின் உடல் முடிவுக்கு வரும் தன்மையை உணர்ந்து கங்கையில் இறங்கி மறைந்துவிடுவார்கள். இதுவும் காசியில் பல நூற்றாண்டுகளாக நடக்கும் விஷயம். அதனால் யோகியின் உடலும், மனித உடலும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது காசி வாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது.

பல பகுதிகளாக காசியை கூறிவருகிறேன். ஆனால் காசியின் அற்புதங்களின் அற்புதமான அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை ?

இது எவ்வளவு மஹாபாதகச் செயல்?

வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...


[சுவாசிப்பேன்]

Wednesday, February 10, 2010

காசி சுவாசி - பகுதி 10

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை கேட்டு இருப்பீர்கள். உண்மையில் இதற்கு ஆயிரம் ’முறை’ போய் தங்களை பற்றி சொல்லி பெண் கேட்டு திருமணம் நடத்த வேண்டும் என்ற வாக்கியம் திரிந்து இந்த அவல நிலையில் இருக்கிறது. இதற்கு பெயர்தான் ‘முறை’ தவறுவது என்பார்களோ? இது போல ஏத்தனையோ அர்த்தங்கள் அனர்த்தங்களாக நம்மிடையே உலாவுகிறது. அதில் ஒன்றுதான் காசியில் இறந்தால் முக்தி என்ற வாக்கியமும்.

காசி என்ற தலத்தில் தன்னை கடந்த நிலைக்கு செல்லும் உன்னதத்தை விடுத்து எத்தனையோ ஆட்கள் இறந்து போவதற்காகவே வருகிறார்கள்.

தங்களில் முதிய வயதில் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு காசிக்கு வந்து இறப்பை எதிர்நோக்கி தினமும் காத்திருக்கிறார்கள். உங்களால் இந்த சூழலை உணரமுடியுமா? தினமும் காலையில் இன்று நான் இறப்பேனா என ஒருவர் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?


சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்ற சினிமா வசனத்தை கேட்டிருப்பீர்கள். இங்கே சாகும் நாளுக்கு தினமும் காத்திருக்கிறார்கள். வாழும் நாள் இவர்களுக்கு நரகமாகிவிடுவதில்லை, மாறாக ஒரு வித உன்னத உள் நிலையில் இந்த உலகை காண்கிறார்கள். இப்படி இருப்பதற்கு மஹா வைராக்கியமும் தைரியமும் தேவை. தற்கொலை செய்பவர்களுக்கு கூட தான் இறப்பேன் என்று எண்ணும் துணிச்சல் சில விநாடிகள் தான் இருக்கும். இவர்கள் அத்தகைய துணிச்சலை தினமும் பெற்று இருக்கிறார்கள்....!

காசியில் முதியவர்கள் பலர் இவ்வாறு வாழ்கிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவை மிக சுவாரசியமானது. தினமும் அதிகாலை எழுந்து கங்கையில் குளித்து கோவிலுக்கு செல்லுகிறார்கள். அங்கே விருப்பமான உணவை உண்கிறார்கள். சிலர் பணம் வைத்துக்கொள்கிறார்கள். சிலர் அவையும் இல்லாமல் மடங்களிலும், கோவிலிலும் ஒரு வேளை மட்டும் உணவு உண்கிறார்கள். காசியில் இவர்களுக்கு என இருக்கும் உணவகத்திலோ, மருந்துக்கடையில் தினமும் கையெழுத்து இடுகிறார்கள். ஒரு நாள் இவர்கள் கையெழுத்து இட வரவில்லை என்றால் அந்த கடைக்காரர் சிலருடன் சென்று அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்லுவார். வேறு எதற்கு தகனம் செய்யத்தான்...

தங்களின் உறவினர்கள் முகவரியை அந்த கடைகளில் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இறந்ததும் உரியவர்களுக்கு கடைக்கார் தெரியப்படுத்துகிறார். இவை அனைத்தும் சேவையாகவே அங்கே இருக்கும் கடைகாரர்கள் பலர் செய்கிறார்கள். இறப்பை எதிர் நோக்கி இருந்தாலும் தினமும் தங்களை சுத்தமாக வைத்திருப்பதிலும், பக்தியிலும் இவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களில் சிலரை சந்தித்த பொழுது அவர்களிடம் அனுபவம் வாய்ந்த முதியவரிடம் பேசுவது போல இல்லை. அவர்கள் புதிய குழந்தையாக உற்சாகம் காட்டினார்கள். இவர்கள் பழுத்த இலை அல்ல, உள்ளே துளிர்த்த இலை...!

உலக பந்தங்களை விடுத்து, தனக்கு என்ற தேவைகள் இல்லாமல் இந்த உலகை காணும் பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள். வனப்ரஸ்தம் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நிலை. கடமைகளை முடித்ததும் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு தனித்து வாழ்வது. இவர்கள் இருப்பதும் ஒருவகை வனப்ரஸ்தம் தான்.

குடும்ப சுமையால் தங்களால் முன்பு ஆன்மீகமாக இருக்க முடியவில்லை. முக்தி பெற வேறு வழி தெரியவில்லை. இங்கே இறந்தால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறோம் என்பதே இவர்களின் பெரும்பாலனவர்களின் கருத்து.


மேலைநாட்டுக்காரர்களுக்கு இறப்பை எதிர்நோக்கி இருக்கும் இவர்கள் ஒரு அசாத்திய மனிதர்கள். வெளிநாட்டினரிடம் நீங்கள் பத்து நிமிடம் தொடர்ந்து இறப்பை பற்றி பேசினால், மனம் வருந்தி பல நாட்களுக்கு அவர்கள் உங்களிடம் விலகி இருப்பார்கள். ஆனால் நம் கலாச்சாரம் இறப்பை கொண்டாட நம்மை பழக்கி இருக்கிறது. இன்றும் பல வெளிநாட்டினர் அதிசயம் என எண்ணி இறப்பை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களை வைத்து குறும்படம் செய்து கொண்டிருக்கிறார்கள். முதியோர் இல்லங்கள் என்ற தற்கால நாகரீகத்திற்கும் நம்நாட்டினர் அனைத்து நாட்டினருக்கும் முன்னோடியாக இருந்தார்கள்.

காசியில் இறப்பவர்கள் எரிக்கப்படுகிறார்கள். ஆனால் சன்யாசிகள் எரிக்கப்படுவதில்லை...! அவர்கள் ஜலசமாதி என அவர்களின் உடல் கங்கையில் விட்டுவிடுகிறார்கள். இறந்த உடலை கங்கையில் போட்டால் கங்கை அசுத்தமாகி விடாதா? இவற்றிற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா? உடல் ஏன் எரிக்கப்பட வேண்டும்? ஏன் சிலர் உடல் எரிக்கப்படுவதில்லை? உங்கள் கருத்தை சொல்லுங்கள்...

[சுவாசிப்பேன்..]

Friday, February 5, 2010

பழைய பஞ்சாங்கம் 05-02-2010

டெல்லியில் ஒரு கில்லி

ஒரு மாதகால பயணமாக தில்லி வந்துள்ளேன். இங்கே பயிற்சி வகுப்புகள் நடத்தி மக்களின் வாழ்க்கையை உய்விப்பது என முடிவெடுத்துவிட்டேன். தில்லியில் தமிழ் பதிவர்கள் இருப்பதாக படித்தேன். தில்லி வாழ் தமிழ் பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். பின்னூட்டத்திலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மணிநேர அறுவைக்கு நான் காரண்டி..!

உலக புத்தக கண்காட்சி

தில்லி கண்காட்சி மைதானத்தில் உலக புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை புத்தக திருவிழாவில் புத்தகம் வாக்குவதை விடுத்து பதிவர்களுடன் பேசி பதிவர் சந்திப்பு நடத்தும் இடமா இது என சிலர் கேட்டிருந்தார்கள். அப்படிபட்டவர்களுக்கு ஏற்ற இடம் உலக புத்தக கண்காட்சி. நீங்கள் தனியாக வந்து தனியாக கும்பி அடிக்கலாம். யாரும் கேட்கமாட்டார்கள். சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாததால் தில்லியில் அந்த ஆவலை தீர்த்துக்கொண்டேன்.

தில்லி வாழ் அல்லது கண்காட்சிக்கு வரும் தமிழர்களுக்கு மருந்துக்குக்கூட தமிழ் புத்தகம் இல்லை. கிழக்கு பதிப்பகம் தனது அரங்கை வைத்திருந்தது. இவர்களும் ஆங்கில புத்தகம் மட்டும் வைத்து தமிழ் வளர்த்தார்கள். அரங்கில் பிரபாகரன் சுயசரிதை ஆங்கிலத்தில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு யாரும் கூறவில்லையா இந்த சரக்கு தில்லியில் விற்காது என்று?

நக்‌ஷத்திரா கண்காட்சி

உலக புத்தக கண்காட்சிக்கு அருகில் நக்‌ஷத்திரா என்ற சாஸ்திரங்கள் பற்றிய கண்காட்சி இருந்தது. இதில் வேத சாஸ்திரம், ஜோதிடம், வாஸ்து, கைரேகை, மருத்துவம், ராசிக்கல் என அனைத்து வகையானவர்களும் அரங்கு அமைத்திருந்தனர். ஒரு அரங்கில் ராசிகற்கள் மற்றும் ருத்திராட்சம் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஏகமுக ருத்திராட்சம் என்ன விலை என அரங்கில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். ஒரு லட்ச ரூபாய் என்றார். அவ்வளவு விலைக்கு என்ன இதில் இருக்கு என்றேன். இதை அணிந்தால் குபேரனுக்கு இணையான பலன் கிடைக்கும். கோடிஸ்வரன் ஆகலாம் என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் விற்கிறீர்கள்? நீங்கள் இதைவைத்தே கோடிஸ்வரன் ஆகக் கூடாதா? என்றேன். சிந்திக்க தெரிந்தவனை எல்லாம் இந்த கண்காட்சிக்குள் யார் உள்ளே விட்டது என்பது போல என்னை மேலும் கீழும் பார்த்தார்...

அமைதியாக நடந்து அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மற்றொரு அரங்கினுள் நிழைந்தேன். அது ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் அரங்கு ....ஸ்வாமி ஓம்காருக்காக சிலர் காத்திருந்தார்கள்.

சிகரெட் சீக்கரெட்

உலக புத்தக கண்காட்சியில் ஒரு பத்திரிகையாளரை சந்தித்தேன். இந்தியாவின் பிரபல பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இருக்கிறார். கண்காட்சிக்கு வெளியே அவர் எதிர்பட்டதால் இருவரும் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடம் பேச்சுக்கு பிறகு, “ஸ்வாமி உங்கள் முன் சிகரெட் பிடிக்கலாமா? உங்களுக்கு பிரச்சனை இல்லையே?” என்றவாறே சிகரெட் பாக்கெட்டை எடுத்தார்.

அவரை கூர்ந்து
நோக்கிவிட்டு கூறினேன்...”சிகரெட் உடலுக்கு பிரச்சனை என தெரிந்தும் புகைக்கும் உங்களுக்கே பிரச்சனை இல்லாத பொழுது எனக்கு என்ன பிரச்சனை?” என்றேன். எடுத்த சிகரெட் பாக்கெட்டை உள்ளே வைத்தார்.

காசி வாசி

இம்மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காசியில் இருப்பேன். காசிபயணத்தை பற்றி அறிவுப்பு கொடுத்தவுடன் 20க்கும் மேற்பட்ட்ட மின்னஞ்சல்கள் வந்து குவிந்தது மகிழ்ச்சியை அளித்தது. அதில் அனேகர் இதற்கு முன் பின்னூட்டம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ என்னை தொடர்பு கொள்ளாத புதியவர்கள். அனைவரையும் நான் வருக என அழைக்கவில்லை. காசிக்கு செல்ல ப்ராப்தம் வேண்டும். எல்லோராலும் வர முடியாது. காசியை உணர நல்ல முயற்சியை எடுத்திருக்கிறார்கள் இவர்கள். நீங்களும் வர விருப்பம் கொண்டால் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் உதவுகிறேன்.

ஜென் கவிதை

ஜென் கவிதை எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டதால் உங்களுக்காக ஒன்று இதோ. :)

மூங்கிலின் வெளியே
காற்று - ஓசை
மூங்கிலின் உள்ளே
காற்று - இசை

Wednesday, February 3, 2010

காசி சுவாசி - பகுதி 9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே

-------------------------------------------------------திருமந்திரம் - 121.

இறப்பு என்ற வார்த்தை மனிதனின் வேர்களை ஆட்டம் காணச்செய்யும். எந்த மொழி கலாச்சாரம் ஆனாலும் பிறப்பும் இறப்பும் ஒன்றுபோலவே நிகழ்கிறது. இறப்புக்கு பின் என்ன நிகழும் என்பதை புரிந்துகொள்ள முடியாத மனிதன் இறப்பு என்றதும் மிகவும் கலவரம் அடைகிறான்.

உலக கலாச்சாரங்களை கவனிக்கும் பொழுது பாரத கலாச்சாரம் மட்டுமே இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்பதை மனிதனுக்கு புகட்டுகிறது. மதங்கள் இறப்புக்கு பிறகு ஒரு உலகம் இருக்கிறது அதில் சொர்க்கம் நரகம் உண்டு என விளக்குகிறது. ஆனால் பாரத கலாச்சாரம் இறப்புக்கு பின் நிகழும் தன்மையை மிகவும் வெளிப்படையாக சிறுவயதிலிருந்தே உணரச்செய்கிறது.

கடோபநிஷத்தில் நாசிகேதன் என்ற சிறுவன் இறப்பு என்ற நிலையுடன் கலந்துரையாடும் கதை ஒன்று உண்டு. அந்த கதை மூலமாக நமக்கு இறப்பு என்றால் என்ன, அதன் பிறகு நிகழும் தன்மை என்ன என்பதை வேதாந்தம் விளக்குகிறது. கடோபநிஷத்தை படித்து உங்களின் இடத்தில் நாசிகேதனை வைத்துபாருங்கள் அனைத்தும் உணரப்படுவீர்கள்.

எதற்கு இத்தனை விளக்கம்.. இறப்புக்கு பின் என்ன நிகழும் கூறுங்கள் என கேட்பது புரிகிறது. இறப்புக்கு பின் என்ன நடக்கும் என கேள்விபடுவதை விட உணரப்படுவது அவசியம்.

எப்படி உணர்வது? மிக எளிது..

உடனடியாக செத்துவிடுங்கள்.


அப்பொழுது தானே தெரிந்து கொள்ள முடியும்?


சாவம் என்பது இயக்கமற்ற உயிர் அற்ற உடல். இயக்கும் மற்ற உயிர் கொண்ட உடல் சிவம். சவத்திற்கும் சிவத்திற்கும் இடையே ஆன வித்தியாசம் மிக நுட்பமானது.

தியானத்தில் திளைத்து மிகவும் உன்னத நிலை அடைவது சமாதி. அப்படி ஒருவர் சமாதி நிலை அடைந்தால் அவரின் உடல் அசைவற்று இறந்த உடல் போல இருக்கும். அதே நேரம் அவரின் உடல் இறைநிலையுடன் இணைந்து பிரகாசிக்கும். சாமாதி நிலையில் இருக்கும் வரை வெளிமுகமாக பார்த்தால் இறந்த சவத்தை போல இருப்பார்கள். உண்மையில் அவர்கள் சவமல்ல பரம்பொருளுடன் இணைந்த சிவம்..!

சமாதி நிலையை ஆன்மீக மேல்நிலையில் மட்டுமே உணரமுடியும். அவ்வாறு உணர்ந்தாலும் வெளிப்படுத்துவது என்பது மிகக்கடினம்.

தற்காலிக மரணம் என்பது சமாதி. அனைத்து செயலுடனும், உலகத்துடன் வாழ்ந்துகொண்டே எப்பொழுதும் சமாதி நிலையிலேயே இருப்பது சாத்தியம் உண்டு அதன் பெயர் நிர்விகல்ப்ப சமாதி. இவற்றை பின்பு ஒருநாள் விளக்குகிறேன்.

ரமண மஹரிஷிக்கு இளம் வயதில் மரணம் பற்றிய ஒர் அனுபவம் ஏற்பட்டது. அந்த அனுபவம் அவரை திருவண்ணாமலையை நோக்கி செலுத்தியது. அது போல நம் உடலை விட்டு வெளியே பயணித்து மீண்டும் நம்முள்ளே அடங்கினால் அந்த பரமானுபவம் நம்மை மற்றொரு உலகுக்கு கொண்டு செல்லும்.

சிலர் மரண நிகழ்வை செயற்கையாக நினைத்துக்குள்வது போன்ற தியானத்தை செய்கிறார்கள். சாப்பிடுவது போல கற்பனை செய்தால் வயிறு நிறையுமா? அதுபோன்றதே இது.


ஆன்மீக நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். ஆனால் சாதாரண இயல்பு வாழ்க்கை வாழும் ஒருவரால் சாமாதியை ஒரு ஷணம் உணர வேண்டுமானால் அதற்கு பல முயற்சிகள் செய்ய வேண்டும். தக்க குருவின் உதவி மற்றும் சூழல் அவசியம்.

சமாதியை உணரும் அந்த சூழலை காசி எப்பொழுதும் பெற்று இருக்கிறது. காசிக்கு சென்றால் அங்கே உங்கள் மனம் என்ற தளம் மிக விசித்திரமாக செயல்படத்துவங்கும். அங்கே நீங்கள் நினைப்பது உணர்வது ஒரு கனவைப்போல புரிபடாத உணர்வில் இருப்பீர்கள். இதற்கு என்ன காரணம் என்றால் அங்கே தினமும் உங்களுக்கு கிடைக்கும் காட்சி.



காக்ஷி (காட்சி) என்ற சொல்லே காசி என மருவி இருக்கிறது. தினமும் எழுநூறு முதல் ஆயிரம் வரையிலான பிணங்கள் எரிகிறது. அத்தகைய மயான சூழலில் பிணம் எரிவதை ஒரு தியானமாக அமர்ந்து பார்க்க வேண்டும். முதலில் நமக்கு ஏற்படம் உணர்வு சிறுக சிறுக விலகி புதுவிதமான ஒரு உணர்வு ஏற்படும்.

காசியில் இரவு பன்னிரண்டு மணிக்கு அமர்ந்து ஒரு பிணம் முழுவதும் எரிந்து சாம்பலாவதை காண வேண்டும். அவ்வாறு கண்ட பிறகு வேறு ஒரு நாள் நீங்கள் ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் தருவாயில் எதிர்பாராத விதமாக உங்கள் உடலைவிட்டு வெளியேறி நீங்கள் உங்களின் உடலை சாட்சியாக காண்பீர்கள்.

அதுவே சரியான ஒரு முறையில் மரணத்தை பற்றிய தியானமாக அமையும். காட்சியாக பார்த்ததின் சாட்சியாக மாற்றம் கொள்வீர்கள்.


இதைத்தான் கூறினார்கள்...

காசியில் இறந்தால் முக்தி..!

[சுவாசிப்பேன்..]