இத்தகைய உயிர்களுக்கு உன்னை ஒப்பிடலாமா?
இந்த குளத்தில் தாமரை உண்டு. அதில் சகதிகள் இருப்பதில்லை. அதனால் அது ஆன்மீக பொருளாக கருதுகிறார்கள். உற்றுப்பார்...
அந்த தாமரையிலும் அதன் தண்டுப்பகுதி சகதியில் ஊன்றியே மேல் எழுந்து நிற்கிறது. தாமரையிலும் சகதி உண்டு, குளத்தின் நீர் சில துளிகள் அதன் மேல் ஒட்டும் தன்மை உண்டு.

அதனால் தான் உன்னை அம்ஸம் என்கிறேன். அம்ஸ என்றால் அன்னம் என பெயர். அன்னத்தை பார்த்திருக்கிறாயா? வெளிர் வெண்மை நிறத்தில் கால்களிலும் மூக்கிலும் மட்டும் செந்நிறத்துடன் உலாவருமே அந்த அம்ஸம்.
அதன் மேல் ஒரு துளி கசடு இருக்காது. சகதிகள் அதன் மேல் ஒட்டாத வண்ணம் இறைவன் படைத்துள்ளான். இதனால் தானே தமிழில் கூட ஒரு விஷயத்தை அழகாக இருக்கிறது என்பதற்கு அம்ஸமாக இருக்கிறது என்கிறார்கள்?
நம் ஊரில் பல கட்டுக்கதைகள் உண்டு. அம்ஸம் பாலையும் நீரையும் பிரித்து குடிக்கும் என்பார்கள். அது கற்பனையாக இருந்தாலும் ஆன்ம-உண்மையில் எது கலக்கபட்டாலும் அதை பிரித்து அறிபவன் அம்ஸத்தின் அம்ஸம் என கூறலாம் தானே?
அப்பழுக்கற்ற விஷயத்தை அம்ஸம் எனலாம். ரசிகர்களில் மிகவும் உயர்வானவனை பரம ரசிகன் என்பார்கள். அதுபோல அம்ஸத்தின் இயல்பில் உச்சமான உள் தூய்மை அடைந்தவனை பரமஹம்ஸன் என்பார்கள் என்பது உனக்கு தெரியுமா?
ஆன்மீகவாழ்வில் மிக எளிமையாக வாழ்ந்து தன் சிஷ்யன் நாரேந்திரன் மூலம் உலகுக்கு தெரியவந்த ராமகிருஷ்ணர் கூட தன்னை பரமஹம்ஸன் என அழைப்பதை விரும்பவில்லை. அதனால் தான் இச்சொல் அவரின் இயற்பெயருக்கு பின்னால் இருக்கிறது.
உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எந்த அம்ஸமும் தன்னை அம்ஸம் என கூறிக்கொண்டதில்லை. எந்த அம்ஸத்தின் தலைவரும் தன்னை பரமஹம்ஸம் என பிரகடனப்படுத்தியதில்லை.
நம்மிடைய வாழ்ந்த பல பரமஹம்ஸர்கள் பிறப்பிலேயே பரமஹம்ஸர்களாக இருந்தார்கள். பல பரமஹம்ஸர்கள் பரமஹம்ஸர்கள் என தெரியாமலேயே இறைவனில் இணைது இருக்கிறார்கள். பரமஹம்ஸமாக இருந்துகொண்டு சகதியில் இருக்கக்கூடாதா பலர் கேட்கலாம்.
சகதியில் உழன்றதால் தானே மீனும்,தவளையும், பாம்புகளும் தாமரையும் நீருக்கு அடியில் வாழ்கிறது?
பரமஹம்ஸமான நீ, நீருக்கு மேல் அல்லவா வாழும் இயல்பு கொண்டவன்?
பரிசுத்தத்தின் உச்சமான பரமஹம்ஸமாக இருக்க தேவையில்லை, குறைந்தபட்சம் தாமரையாக இருக்கப்பழகு. குளத்தில் இருக்கும் புழுவாகிவிடாதே..





