Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 29, 2008

இணைய வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?

அனைவருக்கும் வணக்கம்.


இந்த இனிய நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.


ஜோதிட சாஸ்திரத்தை மெய்யுணர்வுடன் பயன்படுத்தும் நோக்கில் இந்த வலைதளம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.ஜோதிட விழிப்புணர்வு வரவேண்டும் என்றால் அதிக பட்ச மக்கள் ஜோதிடத்தை தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அதை செயல்படுத்தும் விதமாக இணைய வழியில் ஜோதிட கல்வி அளிக்கும் எண்ணம் உருவானது.


ஜோதிட சாஸ்திரம் என்பது வேதம் தோன்றிய காலத்தில் உருவானதாக இருந்தாலும் சுலோகங்கள் மற்றும் கடினமான விதிகள் நிறைந்தது. ஆனால் அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் நோக்கில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறையை கற்றுக்கொடுக்க இருக்கிறோம்.


கிருஷ்ண மூர்த்தி முறை (KP) என்பது நவீன காலத்தில் உருவான விஞ்ஞான பூர்வமான முறை.
கற்பது எளிது மேலும் துல்லிய தன்மை மிகுந்தது.


ஜோதிடத்தை கற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால் அருகில் இருக்கும் சட்டகத்தில் ஓட்டளியுங்கள்.

பெருவாரியான ஓட்டுக்கள் விழும் கருத்தை மக்கள் கருத்து என கொள்ளாமல் மகேஸ்வரனின் கருத்தாக எடுத்துகொண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படலாம்.

மேலும் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Tuesday, November 25, 2008

சாம்பு மாமாவின் சந்தேகங்கள்

சாம்பு மற்றும் வெங்கி என்ற இரு கதாபத்திரங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இருவர் பேசும் உரையாடல் மூலமாக நமக்கு பல கருத்துக்கள் தெரியவரும். இவர்களை பற்றிய ஓர் அறிமுகம்..

சாம்பு மாமா என எல்லோராலும்
அழைக்கப்படும் சாமிநாத அய்யர் ஓர் ஜோதிட "வித்து"வான். ஜோதிடம் தெரியும் என்ற நினைப்பில் பரிகாரம் போன்ற வழிகளில் மக்களை ஏமாற்றும் வகையில் ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர். இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பல ஜோதிட அமைப்புகள் ஜோதிட சாம்ராட், ஜோதிட வாச்சஸ்பதி என பல பட்டங்கள் கொடுத்திருக்கிறது என்பது வேடிக்கை. அவர் கேட்கும் பல கேள்விகள் முட்டாள் தனமாக இருந்தாலும் பல உண்மைகளை உங்களுக்கு வெளிச்சமிட்டு காட்டும்.


வெங்கி என்று அழைக்கப்படும் வெங்கட்ராமணன் இளவயதில் ஜோதிடத்தை ஆழமாகக் கற்று தெளிந்த நிலையில் இருக்கிறான். சாம்பு செய்யும் வேலைகள் அவனுக்கு பிடிக்காவிட்டாலும், சம்புவுக்கும் அவன் குடும்பத்திற்கும் நெருக்கமானவன். சாம்புவின் கேள்விகளுக்கு விவேமான பதில் சொல்லிவதில் வெங்கியை யாரும் மிஞ்ச முடியாது.
------------------------------------------------------------------------------

சாம்பு மாமாவின் சந்தேகங்கள்

(திரையரங்கு வாசலில்...)

சாம்பு: என்னடா அம்பி, டிக்கெட் கிடைக்கலையா?
வெங்கி: என் கூட சினிமா பார்க்க வந்திருக்கீங்க , நிச்சயம் கிடைக்கும்.

(டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..சாம்புவின் பொறுமை குறைய )

சாம்பு: டென்ஷன் குறைய சினிமாக்கு வந்தா...டிக்கெட் கிடைக்காம டென்ஷன் அதிகமாயிடும் ..நா வரேண்டா அம்பி.

வெங்கி: மாமா..பொறுமையா இருங்க. .கண்டிப்ப நாம இன்னைக்கு சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஏன்...? இந்த தியேட்டர் ஓனர் உனக்கு தெரிஞ்சவரா?

வெங்கி: (புன்னகையுடன்) அவரை விட எனக்கு தெரிஞ்சது ஒன்பது கிரகங்கள் தான். அதை வைத்து பார்த்தால் நாம கண்டிப்பா இன்னைக்கு சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஐயோ! நானே டிக்கெட் கிடைகலேனு இருக்கும் போது தான் உனக்கு 9 கிரகமும் ஜோசியமும்.

வெங்கி: மாமா.. ஆளுங்கிரகங்கள் வைத்து பார்த்தால் 5,11 உடன் சுக்கிரன் தொடர்பு இருக்கு...ஆக நாம் சினிமா பார்ப்போம்.

சாம்பு: ஆரம்பிச்சுடியா உன் ஆளும்கிரகத்தை.. 5,11 சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் பொழுதுபோக்குன்னு நான் ஒத்துக்கறேன், ஆன அது சினிமாவா இருக்கணும்னு அவசியம் இல்லயே... பார்க், பீச்-னு வேற இருக்க கூடாதா?

வெங்கி: 5,11 சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் பொழுதுபோக்குன்னு நீங்களே சொல்லிட்டிங்க.....மேலும் நாம சினிமா தியேட்டரில் தானே இருக்கோம்? பார்க் , பீச்சில் இல்லியே?

சாம்பு: ரொம்ப புத்திசாலியா பதில் சொல்றதா நினைப்போ? கிரகம் சொல்லுமா? பார்க், பீச் எந்த கிரகத்தை வைத்து சொல்லுவே?

வெங்கி: 5,11 நினைகாட்டும் சுக்கிரனுடன்- புதன்
தொடர்பு பார்க், சந்திரன் தொடர்பு பீச்,
செவ்வ்வாய் தொடர்பு விளையாட்டு மைதானம். சூரியன் தொடர்பு அரசு
பொருட்காட்சி, குரு தொடர்பு நூலகம் என சொல்லலாம்.

சாம்பு: அருமைடா அம்பி. அப்போ வெறும் சுக்கிரனின் தொடர்பு சினிமா, நாடகம் மட்டும் காட்டுது. ஆளும்கிரகத்தை வச்சு நாம பார்க்கப் போகிற சினிமாவின் கதை எப்படி இருக்கும்னு சொல்லுவியா?

வெங்கி: அது ரொம்ப சுலபம். ஓடும் லக்னத்திற்கு 5 ஆம் இடம் பாருங்க. சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் குடும்பம்-காதல் கதை, செவ்வாய் தொடர்பு அடிதடி மற்றும் கொலை , புதன் தொடர்பு நகைச்சுவை, சூரியன் தொடர்பு நாட்டுப்பற்றுள்ள படம், குரு தொடர்பு டாக்குமெண்டரி படம்.

சாம்பு: அப்போ சனி தொடர்பு இருந்தால் பழைய படத்தின் கதையை திருப்பி எடுப்பாங்களா?

வெங்கி: ஹ..ஹா.. ஹ உங்களோட ஒரே தமாஷ்தான்...சனி தொடர்பு இருந்தால் புராண கால கதை.
சாம்பு: ஓஹோ...அதுசரி இப்பொ ஆளும்கிரகம் என்ன சொல்லுது? இப்ப நாம என்ன மாதிரி கதை உள்ள படத்தை பார்க்க இருக்கோம் ?

வெங்கி : செவ்வாயும், சுக்கிரனும் தொடர்பு இருக்கு ஆக காதலும் , கொலை அடிதடி கதை உள்ள பாடம்தான்.

சாம்பு: அம்பி எனக்கு அடிதடி, கொலைன்னா பயம்டா... சினிமா பார்த்துட்டு நீதான் என்னை ஜாக்கிரதையா ஆத்துக்கு அழைச்சுண்டு போகணும்

(இருவரும் திரையரங்கினுள் செல்கிறார்கள்)


Saturday, November 22, 2008

இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?

தேவேந்திரன் என்று அழைக்கப்படும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். வஜ்ராயுதம் தாங்கி தேவலோகத்தில் வசிப்பார் என புராணங்களிலும் , திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம். இந்திரன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது அசுரர்கள் அவரை தோற்கடிப்பார்கள், இறைவனிடம் முறையிட்டு மீண்டும் அப்பதவியை அடைவார் என்பது தானே?

பெண்கள் மேல் மையல் கொள்ளும் இந்திரனாகவும், ரம்பா ஊர்வசி மேனகையின் நடனத்தை காணும் இந்திரன் என அவர் மேல் நமக்கு நல்ல நினைப்பே வரும் அளவுக்கு அவரை பற்றி கதைகள் இல்லை. முனிவரின் மனைவி மேல் மையல், கையை பிடித்து இழுத்தார் என பல வில்லங்கமான கதைகள். அப்படிபட்ட தேவேந்திரன் யார் என பார்ப்போம்.

இந்திய கலாச்சாரத்தில் பலவகையான எழுத்து வகைகள் உண்டு. அவற்றை தெளிவாக தெரிந்து கொண்டால் இந்திரனை அறிய வசதியாக இருக்கும். காவியங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்பவையே மூன்று வகையாக எழுத்துவகைகள்.

காவியங்கள் என்பது முழுமையாக கற்பனை கதாப்பத்திரங்களை வைத்து எழுத்தாளர் எழுதும் புதினம் எனலாம்.

உதாரணமாக சகுந்தலம் எனும் காவியம் புனையப்பட்டது. தற்காலத்தில் நாவல் எனும் தன்மை இதற்கு ஒப்பாக சொல்லாம். இதிகாசம் என்பதன் வடமொழி விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். “இதி” என்றால் “இவ்வாறு” , ஹாசா என்றால் “நடந்தது”. ஓர் சம்பவம் இவ்வாறு நடத்தது என்பதனை உலகுக்கு உணர்ந்த எழுதப்பட்டது இதிகாசம். ராமாயணம், மஹாபாரதம் என்பவை இதிகாசங்கள்.

புராணங்கள் என்பது சில உயர்நிலையில் உள்ள சூட்சுமமான விஷயங்களை பாமரனுக்கு புரியும் நோக்கில் சுவாரசியமாக கூறும் எழுத்துவகை. டார்வின் தியரி எனும் விஷயத்தை பாமரனுக்கு விளக்கினால் புரியாது என்பதால் அவனுக்கு நெருக்கபான விஷ்யத்தை வைத்து கூறப்பட்டது தசாவதாரம் எனும் புராண கதை. இந்த விஷயம் பாகவதம் எனும் புராணத்தில் இருக்கிறது.

புராணங்களில் வரும் கதைகளையோ, கதையின் உள்நோக்கத்தையோ காணாமல் மேலெழுந்த வாரியாக பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். பாமர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு உயர் ஞான விஷயத்தை விளக்குவதே புராணங்களின் நோக்கம்.

புராணங்களை தொகுத்து உலகிற்கு அளித்தவர் வியாசர். அவர் தனது ஞான நிலையிலிருந்து இறங்கி சராசரியான மனிதனுக்கு புரியும் நோக்கில் பதினோரு புராணங்களை தொகுத்தார். நீங்கள் பிரம்மாண்டமான விஷயங்களை புரிந்து கொள்ளாதவராக இருந்தால் இந்திரன் என்பவர் தேவலோகத்தில் மனித வடிவில் இருப்பவர் என்றே கற்பனை செய்ய முடியும். இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிசொல் அவ்வளவே.

மின்சாரத்தை தான் இந்திரன் என உருவகபடுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்திரன் என்பவர் ஒருவர் கிடையாது. தேவந்திர பதவிக்கு பலர் போட்டியிடுவர் என்றும் புராணங்களில் உண்டு.

வருணன் (நீர்), வாயு ( காற்று), அக்னி, சூரியன் மற்றும் பிற தேவர்கள் இந்திரனுக்கு கீழே இருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் இவர்கள் கீழே இருக்க வேண்டும்? இந்திரன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்?

நீர், காற்று, அக்னி, மற்றும் சூரியன் என அனைத்திலிருந்தும் நவீன மனிதன் மின்சாரத்தை தயாரிக்க முடியும். மின்சாரம் அனைத்திலும் பிரதானமாக இருப்பதால், இந்திரன் எனும் மின்சாரம் அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது.

இந்திரனுக்கு ஆயிரம் கண் என்றும் அது ஏன் எற்பட்டது என்ற விவகாரமான கதையையும் படித்திருப்பீர்கள். மின்சாரத்திற்கு ஓர் முனை செயல்பாடு கிடையாது, பல இணைப்புகளை கொடுக்க கொடுக்க, அனைத்திலும் மின்சாரம் பாயும். இதை உணர வைக்க எப்படிப்பட்ட கதை சொல்ல வேண்டி இருக்கிறது....!

மின்சாரம் என்பது பல பொருட்களுக்கு உற்பத்தி ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான் உற்பத்தி சம்பந்தமான (உறுப்புகள்) விஷயங்களுக்கு இந்திரனை காரணமாக்குகிறார்கள்.

தொலைகாட்சி மற்றும் இதர சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும். நவீன காலத்தில் தொலைகாட்சி, கணினி மற்றும் வானொலி தான் ரம்பா, ஊர்வசி மேனகா.

இக்கட்டுரையை வாசிக்கும் சமயம் தியானத்தில் உற்கார்ந்து பாருங்கள், பக்கத்து வீட்டின் டீவி ஒலி, உங்கள் செல்போன் என பல விஷயங்கள் உங்களை இடையூராக்கும். விஸ்வாமித்திரருக்கும் இதே அனுபவம் நேர்ந்தது. இந்திரன் எனும் மின்சாரம் மனிதன் எனும் விஸ்வாமித்திரர்களை தன்னை போல் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாறாமல் தடுக்க தியானத்திற்கு இடையூரு செய்யும் நோக்கில் தொலைகாட்சி-வானோலி-கைபேசி எனும் ரம்பா-ஊர்வசி-மேனகை அனுப்புகிறார்.

மனித உடலில் கூட மின்சாரம் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம். யோக சாஸ்திரமும் மனித உடலின் முதுகெலும்பு பகுதியில் இந்திரன் வசிக்கிறார் என்கிறது. இந்திரனின் கையில் இருப்பது வஜ்ராயும் என்னும் கருவி. மின்னல் என்பதன் வடமொழி சொல்லே வஜ்ரம் என்பதாகும். மின்னலில் எண்ணிலா மின்சார சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்திரன் மின்சார உருவகம் என்பதில் வஜ்ராயுதமே சாட்சி.

தற்காலத்தில் இந்திரன் தனது பதவியை இழந்து மறைந்து கொண்டான். இதனால் அசுரர்கள் அதை தன்வசமாக்கினார்கள். புரியவில்லையா? உங்கள் வீட்டில் 3 மணி நேரம் தினமும் மின்சாரம் இல்லாமல் இருப்பதைதான் சொல்லுகிறேன். அசுரர் கொட்டத்தை அடக்க இறைவனை வேண்டுவோம்.

Wednesday, November 12, 2008

உங்களுக்கு பேச்சாற்றல்,மொழி அறிவு உண்டா? -ஓர் ஜோதிட ஆய்வு

(கொஞ்சம் நிண்ட பதிவு)

மனித இனம் ஜாதி, மதம் மற்றும் மொழி என அனைத்திலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் செயல் நிலை ஒன்றாக இருக்கிறது என்பதை உணரலாம்.
இதில் ஜாதி, மத வேறுபாடு தோன்றலுக்கு முன்பாகவே மொழி என்பது உண்டானது. மொழி என்பதை பற்றி கூற வேண்டுமானால் பல கருத்துகளை கூறிகொண்டே போகலாம். அரசியல் மற்றும் இலக்கியம் என பேசுபவர்கள் மொழி மேல் பற்றுடனும் , இன்னும் சிலர் வெறி உடனும் இருப்பதை பார்க்கிறோம்.

மொழி என்பது செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் ஓர் ஒலி வடிவம் என்பதை தவிர்த்து அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒருவரிடம் நேரடியாக கருத்துக்களை பரிமாற்றம் செய்ய மொழியானது ஒலி வடிவிலும், நேரடியாக இல்லாத பொழுது வரிவடிவிலும் பயன்படுகிறது. வரி வடிவம் பெரும் மொழி இலக்கணம் இலக்கியம் எனும் கட்டுப்பாட்டில் அமைந்துவிடுகிறது.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணியின் அசைவுகளையும், தேவைகளையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? அதே போல தனது நன்றியையோ மகிழ்ச்சியையோ அந்த பிராணிகளும் உங்களுக்கு உடல் அசைவால் புரியவைக்கும். இதுவும் ஓர் மொழிதான். மொழி என்பது இயற்கையானது.

காரணம் மொழி என்பதை உருவாக்கியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தமிழை எடுத்து கொண்டால் கல்தோன்றி மண் தோன்றா காலம் என்போம். இதே போல அனைத்து மொழிக்கும் உருவாக்கியவர்கள் இல்லை என்பது ஓர் பொதுவான ஒற்றுமை. இதற்கான காரணத்தை முண்டக உபநிஷத் சொல்லுகிறது. பிரபஞ்சம் அனைத்தும் உருவக்கபட்டதும், அந்த பிரபஞ்ச இயக்கத்திற்கும் ஒலி வடிவமான இறைவன் “நாத பிரம்மம்” காரணமாக இருக்கிறது. இதை ப்ரணவம் அல்லது ஓங்காரம் என்கிறோம்.

இறைவன் எனும் சித்தாந்ததில் இருவேறு கருத்துகளுடன் மனிதர்கள் இருப்பார்கள். ஆத்தீகம் மற்றும் நாத்தீகம் எனும் இந்த பிரிவுகள் உலகில் பல காலகட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. நான் சில நேரங்களில் இப்படி வேடிக்கையாக சொல்லுவதுண்டு, “நீங்கள் நாஸ்திகரோ, ஆஸ்திகரோ எப்படி வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் இருவரையும் அந்த கடவுள் கொள்கையிலிருந்து மாறாமல் காக்கட்டும்”. அதுபோல தமிழ் இலக்கியத்தில் இரு பிரிவுகளில் அறிஞர்கள் இருந்தாலும் தமிழ் எனும் ஓர் மொழி இவர்கள் அனைவரையும் இணைத்துவிடுகிறது.

பாரதியை போல நான் கண்ட மொழிகளில் தமிழ் மொழியை போல என நான் கூறவிரும்பவில்லை. அனைத்து மொழிக்கும் ஓர் சிறப்புண்டு. எத்தனையோ உணவு வகை இருந்தாலும் , நமக்கு பிடித்த உணவு என ஒன்று இருக்கிறதே அதை மறக்க மாட்டோம் அல்லவா? அது போலதான் பாரதியின் நிலை. அதற்காக பிற உணவில் சுவையில்லை என சொல்லிவிட முடியாது. உணவை பற்றி சொல்லும் பொழுது அம்மாவின் கையால் சாப்பிட்ட உணவு என்பது பலருக்கும் மறக்க முடியாத சுவையாக இருக்கும். அம்மாவின் கைமணத்தை மனைவியின் சமையல் ருசியிடன் ஒப்பிடும் பொழுது பலருக்கு திருமண வாழ்வில் ஏழரை துவங்குவது அனைவருக்கும் தெரிந்தது. மொழியும் உணவும் இங்கு ஒப்பிடபட காரணம் அதுவே. உங்கள் தாய் மொழியும் அம்மாவின் கைப்பக்குவம் போன்றது

தான்.தாய் மொழியும்-அம்மாவின் கைமணமும் ருசியாக இருக்க காரணம் உங்கள் சிந்தனை ஆற்றல் செயல்படும் முன்னறே உங்களுக்கு ஊட்டப்படுவதால் தான். சிந்தனை வளர வளர பிற மொழிகளை தாய் மொழியுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தாய் மொழி சிறந்ததாக இருக்கிறது. ஒப்பீடு இல்லாமல் பாத்தால் பல மொழிகள் சிறப்பாக இருப்பதை உணர முடியும்.

தாய் மொழியை வளர்க்கிறோம் பேர்வழி என கடையின் பெயர்பலகையில் மொழியை எழுத சொல்லுவது, கட்டாய கல்வி புகட்டுவது என பல முட்டாள்த்தனங்கள் செய்கிறார்கள். கர்நாடகாவிலும், ஒரிசாவிலும் பத்து நாட்க்கள் பயணித்து பாருங்கள் மொழி வெறியர்களால் அனைத்து இடங்களிலும் மொழி தினிக்கப்பட்டிருக்கும். பேருந்துகள், ஊரின் பெயர்பலகை என அனைத்திலும் அவர்களின் தாய் மொழி இருக்கும். யாரிடமாவது வழி கேட்டால் அவர்களின் தாய் மொழியிலேயே பதில் சொல்லுவார்கள். அப்பொழுது புரியும் தாய் மொழி வளர்ச்சி எனும் பெயரில் இந்த முட்டாள்தனம் தேவையா என்று.

உங்கள் தாயை நீங்கள் வளர்த்த தேவையில்லை, உங்கள் தாய் தான் உங்களை வளர்த்த வேண்டும். நீங்கள் வளர்ந்த பிறகும் தாய்யை நீங்கள் பாதுகாக்க மட்டுமே முடியும். அப்பொழுதும் அவளை வளர்த்த முடியாது. மொழியை நாம் பாதுகாக்க செய்ய வேண்டிய ஒரே வேலை அந்த மொழியை சிறப்பாக பயன்படுத்துவது தான். வேற்று மொழி கலக்காமலும், அதிகமான செய்தி

ஊடகங்களில் மொழியை பயன்படுத்துவதன் மூலம் அம்மொழியானது தனது சிறப்பை இழக்காமல் மெருகுடன் இருக்கும். நவீன நாகரீகம் எனும் பெயரில் மொழியை ஊடங்களில் பரிமாற்றம் செய்யும் தன்மை குறைந்து வருகிறது. இதற்கு என்ன சான்று என நீங்கள் கேட்கலாம்.

முன்பு எல்லாம் வார மாத பத்திரிகைகள் அதிகமாக விற்றுவந்தன. தற்சமயம் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, குளியல் சோப் என அனைத்தும் கொடுத்தால் தான் வார பத்திரிகையை வாங்குகிறார்கள்.தினமும் காலையில் ஆங்கில நாளிதழை விட்டுக்கு வெளியே அனைவரும் பார்க்குமாறு படிப்பவர் ”அறிவாளி” என மதிக்கப்படுகிறார். எத்தனையோ அலுவலகங்களின் வரவேற்பு அறையில் அச்சுமனம் மாறாத, கசங்காத ஆங்கில நாளிதழை நீங்கள் பார்த்திருக்கலாம். தற்சமயம் செய்தி ஊடகம் என்பது மக்களுக்கு செய்தியை கொடுப்பதை தவிர்த்து மேலும் பல தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்து செல்லுகிறது.

சென்னையில் பயணிக்கும் பொழுது ஓர் சாலையில் போக்குவரத்து சமிக்சைக்காக காத்திருந்தேன். எனக்கு அருகில் ஆடம்பரமான நான்கு சக்கர வாகனத்தில் ஒருவர் காத்திருந்தார். வாகன ஓட்டி வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் உற்கார்ந்து பயணித்தவாறே நாளிதழில் இருக்கும் எண் விளையாட்டை (sudoku) தீர்வு செய்தவண்ணம் இருந்தார். அப்பொழுது அவரிடம் பிச்சை கேட்ட சிறுவனையும், முதியவரையும் அவர் கவனிக்கவில்லை. வாழ்க்கை பிரச்சனை தீர்ப்பதால் ஏற்படும் சந்தோஷத்தை அறியாமல் எண் விளையாட்டில் மூழ்கும் தன்மையை தான் தற்கால செய்தி ஊடகங்கள் ஏற்படுத்துகிறது.

தபால்காரர் வந்து விட்டாரா? அல்லது தபால்காரர் தெருவில் போனால் எனக்கு எதாவது தபால் இருக்கிறதா என கேட்ட காலம் இப்பொழுது இல்லை. மாதா மாதம் சொந்தங்களிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்களை படித்து சேமித்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. தங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி மட்டும் எழுதாமல் பருவ மழை பெய்ததா என்பது முதல் அரசியல் வரை அதில் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பழக்கத்தால் வாசிக்கும் ஆர்வமும், சுவைபட எழுதும் ஆர்வமும் மனிதர்களிடையே மிகுந்து காணப்பட்டது.

தகவல் புரட்சி என்று கூறி இத்தகைய விஷயங்கள் அனைத்தையும் நாசமாக்கும் நவீனயுகத்தில் வாழ்கிறோம். அஞ்சல் மற்றும் எழுதும் தன்மை குறைந்து, ஓர் நெருங்கிய உறவினர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிகிறார்... "'I'il com 2mrow". செய்தி மட்டுமல்ல மனதும்,அறிவும் அனைத்தும் குறுகித்தான் போனது. இது போல பயணித்தால் அறிஞர்கள் சொன்னது போல ”தமிழ் மெல்லச் சாகும்”.


நமக்கு எதற்கு அரசியல்? ஜோதிடத்திற்கு வருவோம். 5ஆம் பாவகம் மொழியறிவைகாட்டுகிறது. 3ஆம் பாவகம் மொழியறிவின் பயன்பாட்டை காட்டுகிறது. 2ஆம் பாவகம் மொழியின் சுவைபட பயன்படுத்துவதை காட்டுகிறது. இந்த பாவகங்களை தனிதனியாக ஆய்வு செய்வோம்.

5ஆம் பாவகம் : ஒருவரின் மொழி அறிவை நிர்ணையம் செய்யும் பகுதி. சிலருக்கு ஒரு மொழி தெரிந்திருக்கலாம். சிலருக்கு பலவகையான மொழி தெரிந்திருக்கலாம். தெரிந்திருப்பது ஓர் மொழியானாலும் அதில் அதீத புலமை வாய்ந்தவராகவும் இருக்கலாம். இவை அனைத்தும் 5ஆம் பாவகம் முடிவு செய்கிறது. 5ஆம் பாவகம் பலகால் ராசியில் தொடர்பு கொண்டால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவராக இருப்பார். 5ஆம் பாவகத்தில் இருக்கும் சூரியன் அல்லது குரு பல மொழிகளில் ஆழ்ந்த அறிவை காட்டும். சந்திரன் மற்றும் செவ்வாய் தாய் மொழியை தவிர பிற மொழி தெரிந்திருந்தாலும், ஆழ்ந்த அறிவி இல்லாமல்- சமாளிக்க தெரிந்தவர் எனலாம்.

சுக்கிரன் சம்மந்தபட்டால் நகைச்சுவையாகவும், பிறரை கவரும் வண்ணமும் மொழியை பயன்படுத்துவார்கள். 5ஆம் பாவகம் சினிமா, நாடகம் போன்றவற்றையும் குறிக்கும் என்பதால் சுக்கிரன் 5ல் சம்பந்தபட்டு கவர்ச்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருந்து முதல்வர் ஆசை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

புதன் சம்பந்தப்பட்டால் ஓர் மொழியின் வார்த்தையை பல மொழிக்கு சம்பந்தபடுத்தி புனைவை ஏற்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாக தமிழ்
தாத்தா உவேசா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை சொல்லலாம். ஓர் விருந்தில் கலந்துகொண்டதிற்கு பிறகு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார் தமிழ் தாத்தா. விருந்து கொடுத்தவர் தமிழ் தாத்தாவிடம் வந்து “பீடா சாப்பிடுகிறீர்களா?” என கேட்டார். அதற்கு “நான் பீடாவும் சரி அதன் பெண் பாலும் சரி பயன்படுத்துவதில்லை” என்றார் தமிழ் தாத்தா. ஆக புதன் இவ்வாறு மொழிவிளையாட்டு செய்து நகைச்சுவை செய்பவர்களின் 5ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும். ராகு, கேது மிகவும் அபூர்வமான மொழியை கற்றுகொள்ள தூண்டும். சனி பழமை வாய்ந்த சமஸ்கிருதம், கிரீக், லத்தின் போன்ற மொழி புலமையை காட்டும்.

5ஆம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். முன் ஜென்ம விஷயங்கள் இதில் இருப்பதாக சொல்லுவதுண்டு.பூர்வஜென்மத்திற்கும் நமது மொழி அறிவுக்கும் தொடர்பு உண்டு என கூறுபவர்கள் உண்டு. தனிப்பட்ட வகையில் முன்பிறவி போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எனது நண்பரின் வீட்டில் நடந்த சுவையான ஓர் நிகழ்ச்சியை கூற விரும்புகிறேன்.

ஐரோப்பாவை சேர்ந்த எனது நண்பர் பத்துவயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. அவருக்கு அப்பொழுது ஒரு வயதில் தங்கை ஒருவர் இருந்தார். இவர் கையில் ஓர் ஒலி பதிவு செய்யும் கருவியை வைத்து கொண்டு தனது ஒரு வயது தங்கை தன்னை மறந்து விளையாடும் தருணத்தில் உளறுவதை பதிவு செய்தார். காலங்கள் சென்றது. தங்கை திருமண வயதை அடைந்தார். திருமணத்திற்கு அண்ணனின் பரிசாக வித்தியாசமாக கொடுக்க எண்ணி அந்த பதிவு செய்த ஒலி நாடாவையும், தங்கையின் சிறுவயது ஒளி காட்சிகளையும் பரிசாக அளித்தார் எனது நண்பர்.

அவர் தங்கையின் கணவர் ஓர் அரேபியர், இந்த ஒலி நாடாவை கேட்டதும் மிகவும் குழப்பம் அடைந்தார். காரணம் அவரது மனைவி தெளிவான அரேபிய மொழியில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த பாடல் வரிகளை பாடி இருக்கிறார். தனக்கும் தனது மனைவிக்கும் ஏதோ ஓர் முன் ஜென்ம தொடர்பு இருப்பதாக எண்ணுகிறார்.

5ஆம் பாவகம் இது போன்ற கருத்துக்களை உள்கொண்டதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதிற்குள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழி பேசுவதை நான் பார்த்ததுண்டு. இதனால் தான் 5ல் (5ஆம் பாவகத்தில்) விளையாதது ஐம்பதில் விளையுமா என கேட்டார்களோ?

3ஆம் பாவகம் : ஒருவரின் பேச்சாற்றலை 3ஆம் பாவகம் முடிவு செய்யும். 3ஆம் பாவகத்தில் சூரியன், குரு, சந்திரன்அனைத்தும் திறம்பட பேசும் நபர்களை உருவாக்கும். உலக புரட்சியாளர்கள் அதிகமானவர்கள் 3ஆம்பாவகத்தில் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள். பிடரல் காஸ்ட்ரோவின் ஜாதகத்தில் செவ்வாய் 3ஆம் பாவத்தில் சிறப்பக செயல்படுவதை உதாரணமாக சொல்லலாம். அதனால் புரட்சிகரமான செயல் மட்டுமல்ல புரட்சிகரமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

செவ்வாய் தைரியத்தை காட்டுவதால் 638 முறை அமெரிக்க உளவாளிகளால் கொல்ல முயற்சி செய்தும் தனிமனிதனாக
தைரியமாக எதிர் கொண்டார். அவரின் அரசியல் வாழ்க்கை ஓய்வுக்கு பிறகும் அவரின் உடன் பிறந்த சகோதரர் ஆட்சி செய்வது, செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் என தெரிகிறது. சில புரட்சியாளர்கள் பேச்சு எனும் கருவியை மூலதனமாக வைக்காமல் ஆயுதம் ஏந்துவார்கள். அவர்களுக்கு செவ்வாய் தொடர்பு 3ஆம் பாவத்தில் இருக்காது. புதன், சுக்கிரன் தொடர்பு மூன்றாம் பாவகம் பெற்றால் அவர்களின் கருத்துக்கள் பல ஊடகங்கள் மூலம் பலருக்கு சென்றடையும்.

மேலும் சாதாரணமாக ஒன்றும் பிறரை கவருவதற்காக ஒன்றும் என இருவகையான பேசும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். சனி 3ஆம் பாவகத்தில் இருந்தால் சிறந்த அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உண்டு எனலாம். பேசவேண்டிய விஷயத்தை ரகசியாமாக மாற்றி, மக்களை திசை திருப்பும் பேச்சு இவர்களுக்கு இருக்கும். சனி ராகு தொடர்பு இருப்பவர்கள் சரிவர பேச முடியாதவராக மாறுவார்கள். கேது குரு சம்பந்தம் உடையவர்கள் ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பர்கள்.


2ஆம் பாவகம் : குரல் வளத்தை நிர்ணயம் செய்வது இந்த பாவகம். புரட்சிகரமான கருத்துகளை மெல்லிய குரலில் சொன்னால் எடுபடுமா? அதனால் தான் 2ஆம் பாவகம் இந்த செய்தி பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் பெருகிறது. குரு மற்றும் செவ்வாய் 2ஆம் பாவகத்தில் ஆதிக்கமானவர்கள் கணீர்குரலுக்கு சொந்தக்காரர்கள்.2ஆம் பாவகத்தில் புதன் பலகுரல் பேசி மகிழ்விப்பவர்களுக்கு இருக்கும். சுக்கிரன், சந்திரன் பாடகர்களுக்கும், சூரியன் உற்சாகமூட்டும் குரல்வளம் கொண்டவர்களுக்கும் இருக்கும். சனி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் குரல்வளத்தை காட்டாமல் இருந்தால் நல்லது.

ராகு பிறர் போல குரலை மாற்றி
பேசுவர்களுக்கும், கேது தனது குரலை மறைத்து இடத்திற்கு ஏற்றாற்போல குரல் மாற்றி பேசுபவர்களையும் காட்டுகிறது.


இந்த இனிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொழி,தொடர்பு கொள்ளும் முறை மற்றும் குரல்வளம் என அனைத்தும் ஜோதிட ரீதியில் அலசினோம். மொழியை பற்றி இவ்வளவு நான் கூற காரணம் என்ன என யோசிக்கலாம். மொழிகலப்பாலும் , மொழிச்சிதைவாலும் ஏற்படும் விபரீதத்தை விளக்கினால் உங்களுக்கு புரியும்.

”வட விருக்‌ஷா” என்றால் சமஸ்கிருதத்தில் ஆலமரம் என்று பெயர். ஆலமரத்திலிருந்து இலை எடுத்து அதை மாலையாக ஆஞ்சனேயருக்கு அணிவுக்கும் முறை முற்காலத்தில் இருந்தது. இதை தமிழ்ப்படுத்தும் பொழுது வட என்பது ”வடையாக” மாறி இப்பொழுது மோசமான எண்ணெயில் செய்த வடை மாலையுடன் ஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார்.நான் சொல்லுவது மிகையாகவோ அல்லது உண்மைக்கு புறம்பாகவோ ஆஞ்சனேய பக்தர்களுக்கு தெரியலாம்.

ஆஞ்சனேயரை தவிர வேறு யாருக்கும் உணவு பொருளை மாலையாக படைப்பதில்லை என்பதையும், இதை செய்வதற்கான புராண சம்பவங்களோ அல்லது காரணமோ இல்லை என்பதை உணருங்கள். தமிழகத்தை தவிர வேறு ஊரில் (முக்கியமாக அதிகம் வழிபடும் வட இந்தியாவில்) ஆஞ்சனேயருக்கு வடையை மாலையாக போடுவதில்லை.மொழிச்சிதைவால் ஏற்பட்ட நிலைப் பார்த்திர்களா? 108 வடைகளை மாலையாக போடும் மூடநம்பிக்கை வரை வந்திருக்கிறது.

தமிழ் எனும் சொல் மொழியின் பெயரை மட்டும் குறிப்பதில்லை. அழகு, பாலகன் என பல அர்த்தம் இருந்தாலும், நான் தமிழை விரும்ப காரணம் ஞானசுரங்கம் திருமூலர். அவரது மந்திரத்தில் கூறினார்,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே-.”

இதைவிட தமிழ் எனும் வார்த்தைக்கு யார் சிறப்பு சேர்க்க முடியும்?


Monday, November 10, 2008

வார்த்தையற்ற வெளி


யோகம்
-----------------


ஒன்றிணைந்து இருத்தல் என்பது
அனந்தமான நிகழ்வு.
இரு ஆன்மாக்கள் ஒன்றினையும் பொழுது
நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றுகிறது.


வானில் பார் எங்கும் நாம்
பல முறை சந்தித்த சுவடுகள்.
பகலில் தெரிவதில்லை நட்சத்திரம் -
என்றும் அவை வானில் இருக்கத்தான் செய்கிறது.


வெளியே ஒளி, உள்ளே இருள்.
இருள் விலகி- இருமை விலகாவிடில்
- பகலில் தெரிவதில்லை நட்சத்திரம்.

தெய்வீக சந்திப்புக்கள் ஒவ்வொரு
ஷணமும் நிகழ காத்திருக்கிறது.
முடிவற்ற ஆற்றல் உன் உள் உணர்ந்து
என்னில் இணைவாயாக.

வா....
இருமை விலகி நட்சத்திரமாவோம்.


Monday, November 3, 2008

சிசரியன் பிறப்பும் - ஜோதிடமும்

கேள்வி : இன்றைய விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்த உலகில் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிகமாகி விட்டார்கள். சில ஜோதிடர்கள் கூட அறுவை சிகிச்சைக்கு நல்ல கிரகநிலை பார்த்து கொடுக்கிறார்கள். அனைவரையும் அறுவை சிகிச்சை மூலம் நல்ல கிரகநிலையில் பிறக்கச் செய்வதால் இந்த உலகில் அனைத்து பிறப்புகளையும் மேம்பட்டவர்கள் ஆக்கலாம் அல்லவா?

உங்கள் பார்வையில் அறுவை சிகிச்சை மட்டும் தான் தெரிகிறது. செயற்கை கருதரித்தல் கூட நல்ல நேரம் பார்த்தே செய்யப்படுகிறது. அதற்கு பிறகு அறுவை சிகிச்சையும் ஜோதிடர் குறித்த நேரத்தில் செய்வதால் அக்குழந்தை சிறந்த வாழ்க்கை வாழும் என நம்புகிறார்கள்.

எனக்கு தெரிந்த ஓர் நபர் தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்டார். குழந்தை மகம் நட்சத்திரத்தில் பிறப்பு கொடுக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து பல ஆயிரம் ரூபாய் செலவளித்து மருந்துகள் இறக்குமதி செய்து தாய்க்கு செலுத்தினார்கள். அந்த மருந்துகள் எதற்கு தெரியுமா?

மருத்துவர்கள் எதிர்பார்த்த பிரசவ நாளுக்கு 2 நாள் கழித்தே மகம் நட்சத்திரம் வருகிறது. அதுவரை தாய் வலி உணராத வண்ணமும், சேய்க்கு பாதிப்பு வழங்காத வண்ணமும் இருக்கத்தான் விலை உயர்ந்த மாத்திரை. மக நட்சத்திரத்தில் என்ன அப்படி மோகம் என கேட்டேன். அதற்கு பெண் மக நட்சத்திரத்தில் பிறந்தால் எதிர்காலத்தில் முதலமைச்சராக வர வாய்ப்பு உண்டு என ஓர் அறிவுப்பூர்வமான தகவல்களை கொடுத்தார்.

அவ்வாறு அந்த குழந்தை முதலமைச்சர் ஆனால் தவறல்ல, அதற்கு முன் நடிகை ஆகுமே? தாயும் நடிகை ஆக வேண்டுமே? தந்தையான உனது பெயர் வெளிவராமல் இருட்டடிக்கப்படுமே? உன் சந்ததி தழைக்காதவண்ணம் அந்த குழந்தை “செல்வி” யாக மட்டுமே இருக்குமே? என நான் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க அவர் கலங்கிதான் போனார். அவரை எனது கேள்வியால் துன்புறுத்துவது எனது நோக்கம் அல்ல ஆனால் உண்மை கூட சில நேரம் கசக்கும்.

சரி. இவ்வாறு நல்ல கிரகநிலை பார்த்து குழந்தையை பிறக்க செய்வதால் அதன் தலைவிதியை நாம் முடிவு செய்கிறோமா - சரியாக வருமா என்றால் அதற்கு ஓர் புராணத்தில் உள்ள உதாரணம் பார்ப்போம். நவீன காலத்தில் மட்டும் தான் இத்தகைய செயல் இருப்பதாக நினைக்க வேண்டாம். அந்த காலத்திலும் இத்தகைய செயல் உண்டு. பெரிய புராணத்தில் செங்கண்ண நாயனார் வரலாறு இதற்கு சரியான உதாரணம்.

ஓர் மஹாராணிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது, அரண்மனை ஜோதிடர்கள் பிரசவம் ஆகும் நாளின் கிரக நிலையை கணித்தார்கள். பிறகு இந்த குறிப்பிட்ட நாளிகையில் குழந்தை பிறந்தால் அவன் சன்யாச யோகம் அடைவான். இதுவே அடுத்த நாளிகையில் பிறந்தால் சக்கரவர்த்தி ஆவான் என பலன் கூறினார்கள். உடனே ராணி தன்னை ஒரு நாழிகைக்கு ( 24நிமிடம்) தலைகீழாக கட்டி தொங்க விட சொன்னார். சரியாக ஒரு நாழிகை முடிந்ததும் தன்னை கீழே இறக்க செய்து குழந்தையை பிரசவித்தாள். அதிக நேரம் அக்குழந்தை கருவறையில் இருந்ததால் அக்குழந்தைக்கு கண் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிறம் கொண்டதாக இருந்தது. ராணியும் உடல் நிலை மோசமடைந்து இறந்தாள். இறந்து போவதற்கு முன் தனது குழந்தை சிவப்பு நிற கண்கள் கொண்டதாக இருந்ததால் அதற்கு செங்கண்ணன் என பெயர் வைத்தாள்.


ஜோதிடர்களின் கருத்துகேற்ப தனது உயிரை கொடுத்து தனது மகனை பெற்றடுத்தாலும் , உண்மையில் மன்னன் செங்கண்ணன் சக்ரவர்த்தி என வரலாற்றில் இடம் பெறவில்லை. அதிக சிவன் கோவிலை கட்டிய மன்னன் என ஆன்மீக புகழ் அடைந்து நாயன்மார் வரிசையில் அனைத்து சிவன்கோவிலிலும் நிற்கிறார். ஜோதிடர் சொன்னது பலித்ததா? அல்லது ஊர் ஜோதிடர்களை பழித்ததா? நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இது செங்கண்ன நாயனாருக்கு மட்டுமல்ல கெளதம புத்தருக்கு கூட இதே தான் நடந்தது. உனது மகன் துறவி ஆவான் என சொன்னதும் அவனை சகல சுக போகத்தில் வெளி உலகம் தெரியாமல் வளர்த்தினார்கள். கடைசியில் என்ன நடந்தது துன்பத்தை ஒரு கணம் பார்த்தான் துறவியானான் சித்தார்த்தன். புத்தருக்கு மட்டுமல்ல யேசுநாதர் என பல உலக ஞானிகள் பிறக்கும் பொழுதெல்லாம் ஜோதிடர்கள் விளையாடி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

உண்மையில் பிறப்பும் இறப்பும் நிர்ணயம் செய்யபட்ட ஒன்று. இதை எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தாங்கள் அறுவை சிகிச்சை செய்தோம் என்பது அறிவில்லாதவர்களின் வாதம். உண்மையில் இயற்கையாக அக்குழந்தை பிறக்கும் தருணத்தையே ஜோதிடர் கொடுக்க முடியும். இதை கணிக்கும் பொழுது ஜோதிடருக்கு அந்த நேரம் சரியானதாக தெரியும். உண்மையில் அந்த குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டுமோ அதில் தான் பிறக்கிறது. ஆணவம் கொண்ட இவர்கள் தான் , நான் குறித்த நேரத்தில் பிறக்கிறது என்கிறார்கள். இவர்கள் நேரம் குறித்தாலும் குறிக்காவிட்டாலும் அதே நேரத்தில் தான் பிரசவம் நடக்கும். இது இவர்களின் கற்பிதமே.

எனது ஆராய்ச்சிக்காக ஓர் பிரசவ மருத்துவமனையை அனுகி இதை ஆய்வு செய்த பிறகே இந்த கருத்துக்களை கூறுகிறேன். ஓர் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜோதிடர் இடத்தில் கணிக்க சொன்னேன். அதை மருத்துவருக்கும் அதன் பெற்றோருக்கும் கூறவில்லை. மருத்துவர் தாயிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் பார்க்கும் பொழுது இரண்டு நேரமும் சரியாக வந்தது.


சில நேரம் ஜோதிடர் நேரம் குறித்தாலும், தாயின் உடல்நிலை மாற்றத்தாலும் - மருத்துவரின் செயல்பாட்டாலும் அறுவை சிகிச்சை நேரம் மாற்றி அமைத்த சம்பவம் உண்டு. அதற்கு காரணம் நேரம் நாம் குறித்தாலும் அந்த குழந்தை பிறக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதே இதற்கு காரணம். ஆக "நாம் செய்கிறோம்" என்பதே முட்டாள்தனத்தின் உச்சம்.

அப்படியானால் சிறந்த குழந்தைகளை பெற்று எடுக்க முடியாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. பிறப்பு நிகழ்தல் என்பது ஓர் குழதைக்கு அதன் வாழ்க்கையில் முதல் செயலாக இருக்கலாமே தவிர, அக்குழந்தையின் உருவாக்கத்திற்கு அது முதல் செயல் அல்ல.


பெற்றோர்கள் நல்ல மன நிலையில் இருப்பது, சாத்வீக உணவுகளை உண்பது மற்றும் ஆன்மீக சிந்தனை ஆகியவற்றுடன் வாழ்ந்தால் சிறந்த குழந்தையை பெற்று எடுக்க முடியும். மேலும் தாய் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நல்ல சூழ்நிலையில் வாழ வேண்டியது அவசியம். பக்த பிரஹல்லாதன் கதை இதற்கு சிறந்த உதாரணம். தினசரியில் வரும் கொலை, கொள்ளை மற்றும் தவறான உறவு முறை பற்றிய செய்திகளை படித்தும், மோசமான மெகா சீரியல்களை பார்த்தும் வளரும் குழந்தை ஜோதிடர் குறித்த நேரத்தில் பிறந்தவுடன் மஹாத்மாவாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா?

கோலத்தை முதல் புள்ளியிலிருந்து துவங்குங்கள், கடைசி புள்ளியிலிருந்து அல்ல..