Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 30, 2010

நச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...!

கவிதை எழுதி இலக்கியவாதி ஆகிவிட்டாலே பல எதிர்வினை வரும் என்பது தாமதமாகவே புரிந்தது.நானும் எதிர்வினையாக வந்த கடிதங்களை பதிவேற்றம் செய்து எனக்கு இலக்கிய அடையாளம் கொடுத்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கவிதையை
பதிவேற்றம் செய்து சில மணி நேரத்தில் பல தனி மடல்கள், மைனஸ் ஓட்டுக்கள் மற்றும் பின்னூட்டங்கள். சிலர் மிகவும் கடுமையாக எழுதி இதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடுத்துவிட்டு என கூறினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைனஸ் ஓட்டு போட்டதில் நானும் ஒருவன் என்பதை சுட்டிகாட்டி எனது பின்னவீனத்துவ பாணியை இங்கே பதிவு செய்கிறேன். :)

மேல் எழுந்த வாரியாக எனது வரிகளை படித்துவிட்டு கூச்சலிடுவதும், நானும் நற்குடி பதிவரும் ஒன்று என்பது போலவும் சிலர் குறிப்பிட்டார்கள்.


முதலில் என் கவிதையின் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் அனைத்து மதத்தையும் சுட்டி காட்டியே எழுதி இருக்கிறேன். ஆனால் படித்து அதற்கு கருத்து சொன்னவர்கள், தங்கள் மத அடையாளத்தை மறைந்துக்கொண்டு பிற மதத்திற்கு பரிந்து பேசியது வேடிக்கை. முதலில் உங்களிடம் இருந்து பரிவுக்காட்ட துவங்குங்கள்..!

மதம் என்பது ஒருவித பள்ளிக்கூடம். கல்வி பெற்று சமூகத்தில் வாழ பழகும் ஒருவருக்கு பள்ளியில் படித்த அடிப்படை கல்வி உதவும். அப்படிபட்ட பள்ளிக்கல்வியே மதம். அதனால் மதம் என்பது தேவை இல்லை என்றோ, தவறு என்றோ கூறமாட்டேன்.

நான் ஒருவன் பள்ளிபடிப்பை படித்துவிட்டேன் என்பதற்காக அனைத்து பள்ளிகளையும் தகர்த்து விடுங்கள் என கூறுவது முட்டாள் தனம்.

பள்ளிக்கல்வியில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையாக மதங்களும் வேறுபட்டு இருக்கிறது. அடிப்படை போதித்தவுடன் அதைவிடுத்து மேலே வரவேண்டுமே தவிர அதிலேயே தங்கே பள்ளி கல்வி மட்டுமே பயிலுவேன் கல்லுரிக்கு செல்ல மாட்டேன் என கூறுவது வளர்ச்சிக்கு அழகு அல்ல.

பிறந்தவுடன் குழந்தையாக சுய சிந்தனை இல்லாத நிலையில் நமக்கு மதம் திணிக்கபட்டது. நமக்கு பள்ளி கல்வி எப்படி திணிக்கபட்டதோ அதுபோலவே. குழந்தையிடம் சென்று மதங்களை கடந்துவா என விளக்க முடியாது, ஆனால் வளர்ந்தபிறகு மதங்களை பிடித்திருக்கும் குழந்தைகளுக்காகவே நான் அவ்வாறு எழுதி அதில் இருக்கும் நிலையை பற்றி மேலே வா என கூறினேன்.


பிரபல பதிவர் எனக்கு எழுதிய மடலின் பகுதி...

////இன்றைய உங்களின் கடைசி கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் என்றாலே ஒரு சராசரியைப் போல சுன்னத் மட்டுமே உங்களுக்கு நினைவுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது. அவன் குல்லா அணிவித்துக் கொண்டிருந்தான் என்பதாக எழுதியிருந்தால் நாகரிகமாக

இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.////

இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.

யாசகம் எடுப்பது ஒரு மனிதனுக்கு உளவியலில் பெரிய மாற்றத்தை உண்டு
செய்யும். ஒரு மனிதன் தன் அடையாளம், அகந்தை மற்றும் சுயகவுரவத்தை விட்டு ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை எடுத்தால் 90 சதவீதம் அவனுள் ஒரு தூய்மை வந்துவிடும். ஆனால் நடைமுறையில் உபநயணம் செய்யும் பொழுது தங்க வெள்ளி பூணலை போட்டு, மாமா-சித்தப்பாவிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.அதனால் யாசகம் கேட்பதால் ஏற்படும் தன்மை இல்லாமல் போகிறது. மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது. உண்மையாக பிச்சை எடுத்திருந்தால் தேவநாதன் உண்மையாக ’தேவ’நாதனாகி இருக்ககூடும்.

மதங்கள் மனிதனின் உடலில் புற அடையாளங்களை விதைக்கிறது. அதன் பயன்பாடு முடிந்தவுடன் அவன் அதை விடுக்க மறுக்கிறான். அதுவே எனது கவிதையின் கருத்து. அந்த கவிதையில் ’கார்’ என்ற வாகனத்துக்கு பதில் ’ஓம்கார்’ என நிரப்பி ஒரு மனிதனாக பாருங்கள். மதங்கள் சிலவற்றை திணிக்கிறது என கூறி இருக்கிறேன்.சுன்னத் என்பது இஸ்லாமிய அடைப்படை மத கோட்பாட்டில் ஒரு பகுதி, அது அவர்களுக்கு அடையாளமாகவும், புனிதமாகவும், மருத்துவ நோக்கத்துடனும் செய்யப்படுகிறது. அவற்றை நம் கண்ணோட்டத்தில் நாகரீகம் என தரம்தாழ்த்தி பார்க்க கூடாது.

கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு நடைவண்டி கொடுத்து நடக்க பழக்கினார்கள். அதில் பழகிய பிறகு திருமணம் செய்யும் காலம் வந்தபிறகும் மணவரையில் மணப்பெண்ணுக்கு அருகே நடைவண்டி இருந்தால்தான் திருமணம் செய்வேன் என கூறுவது வேடிக்கையானது அல்லவா? அதுபோன்றதே இது. முடிவில் மணமகனின் புத்திசுவாதினத்தில் சந்தேகம் ஏற்படலாம்.

மதங்களை பற்றி கூறும் பொழுது நமக்கு கொதிப்பு வருகிறதே காரணம் அதில் நம் அஹங்காரத்துடன் ஐக்கியமாக்கிக்கொண்டோம். உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்.

கடைசியில் ஒரு கவிதை சின்ன விளக்கத்துடன்....என் மார்க்கம்
------------------

உணர்ந்துகொள்ள ஜெய மார்க்கதை தேர்ந்தெடுத்தேன்
ராஜ மார்க்கத்தால் கவரப்பட்டேன்.
சன்-மார்க்கத்தில் நுழையும் முன் மின்சாரம் தடைபட்டது...!

விளக்கம் : மார்க்கம் என்றால் சானல் என்று அர்த்தம்.

Thursday, January 28, 2010

’நச்’(சு) கவிதைகள்


வார விடுமுறை

ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது.
சண்டே ஹாலிடே..!


போலிகள்

உன்னை விட்டு விலகுவதும் இல்லை;
உன்னை கைவிடுவதும் இல்லை -
அப்படி இருக்க நான் ஏன்
மீண்டும் உயிர்த்தெழ வேண்டும்?விளம்பரம்

பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே
இவர்களை மன்னியும்-
சும்மா இருந்த என்னை சிலுவையில்
பேனர் போல தொங்கவிட்டு
உலகறியச் செய்தார்கள்..


பலி


ஆடுகளின் வேதத்தில் பலி
அனுமதிக்கப்பட்டு இருந்தால்?
ஆட்டின் அருகே தொழுகை செய்ய
தலை தாழ்த்த பயமாகத்
தான் இருக்கிறது.


இணைவைத்தல்


கனியை நினை
மரத்தை விடு...

தேனை ருசி
தேனியை விடு...

ஒலியை கேளு
காதுகளை விடு...தசாவதாரம்


குழந்தையின் விரல் பிடித்து
ஓவ்வொரு அவதாரத்தையும்
விளக்க முற்பட்ட பொழுது
அவனுக்கு இடக்கையில்
ஆறாம் விரல் இருந்தது..!உபநயனம்

பிச்சை எடுக்க கிளம்பினான்...
தங்கம் வெள்ளி பூணுல்கள்
அணிந்த சிறுவன்..கருவறைக் காமம்


தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..
புதிய மதம்

வர்த்தமானனும் சித்தார்த்தனும்
இனி தோன்ற மாட்டார்கள்...!
அவர்களுக்கு துணை முதல்வர் பதவி
காத்திருக்கிறது...!மதமாற்றம்


புதிய கார்கள்
மதிவாதிகளிடம் சிக்கியது...

புதிய காரின் மேல்
பூவைத்து சந்தனம் தெளித்து
தன் மதத்தில் சேர்த்தான் இந்து.

ஜபமாலையை தொங்கவிட்டு
புனிதநீர் தெளித்து
காரை ஞான ஸ்தானம் செய்தான்
கிருஸ்துவன்.

கிரிச்..கிரிச் என சப்தம் கேட்டு
இருவரும் திரும்பினார்கள்.
இவர்களுக்கு போட்டியாக
சைலன்சரை கொஞ்சமாக
அறுத்துக்கொண்டிருந்தான்
இஸ்லாமியன்.

இவைகள் புரியாமல்
கார் உணர்வற்றிருந்தது...


------------------------------

Monday, January 25, 2010

காசி சுவாசி - பகுதி 8

நீர் என்பது பஞ்சபூதத்தில் ஒரு முக்கிய அம்சம் என சென்ற பகுதியில் பார்த்தோம். அது போல கங்கை நதியும் இமாலய மலையில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவாரில் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கையின் துவக்கப்புள்ளி முதல் இறுதி வரை பல தெய்வீக இடங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையிலும் அகண்டும் பயணிக்கிறது.

காசி நகருக்கு மேற்கே அலகாபாத் என்ற ஊரில் காங்கையும் யமுனையும் சங்கமித்து பிறகு கங்கை என்ற ஒரே பெயரில் காசியை வந்தடைகிறது. அதனால் யமுனையின் ஆற்றலும், கங்கையின் ஆற்றலும் இணைந்து ஸ்பரிசிக்கும் இடம் காசி மாநகரம்.

கங்கை நதியை பல முறை பார்த்து அதில் இருந்து வெவ்வேறு பருவகாலத்திலும், சூழலிலும் நீர் சேகரித்து வந்துள்ளேன். நம் ஊரில் இருக்கும் குழாய் நீர் மேலும் சுத்திகரிக்கபட்ட நீர் என பாட்டிலில் விற்கும் நீர் என எந்த நீரையும் ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. சுத்திகரிக்கபடாத நீரில் புழுக்களும், சுத்திகரிக்கபட்ட நீரில் பாக்டீரியா உருவாக்கத்தால் ஒருவித வழுவழுப்பு இருக்கும்.

ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.

ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.

சிவனை உருவமாக வழிபடுபவர்கள், இந்திய வரைபடத்தில் சிவபெருமான் நின்ற கோலத்துடன் இருப்பதாக உருவகப்படுத்தி புண்ணிய தலங்களை பெருமைப்படுத்துவார்கள். சிவனின் முன்றாம் கண் கைலாய மலையாகவும், இருதயம் காசியாகவும், கால்கள் இராமேஸ்வரமாகவும் கூறுவார்கள்.

உண்மையில் காசி நகரம் அனைத்து சமயங்களையும் உள்கட்டமைப்பாக கொண்டது. யார் அந்த நகரில் இருக்கிறார்களோ அவர்கள் சமயம் அங்கே மேலோங்கி இருப்பதாக உணர்வார்கள். கங்கை நதி தன்னிடம் சரணடைபவர்களை ஜாதிமதங்கள் கொண்டு பார்ப்பதில்லை. இறைவனும் காசியில் அவ்வாறே செயல்படுகிறான்.

காசி நகரில் வீசும் காற்றில் ஒருவித மந்திர நிலை உண்டு. கங்கை கரையில் இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கங்கை நீரை கண் இமைக்காமல் பார்ப்பது ஒருவித தியானம். விஞ்ஞான பைரவ தந்திரா என்ற நூலில் கூறப்படும் உயர் தியான வகையின் ஒன்று. கண் திறந்து தியானிப்பது என்பது மிகவும் உன்னதமானது. அதிலும் கங்கையை பார்த்தவண்ணம் தியானிப்பது அலாதியானது.

சிவம் என்றால் நிலையானது என்ற ஒரு பொருள் உண்டு. சக்தி என்றால் நிலையற்று நகர்வது என பொருள். காசியில் நாம் சிவமாகி, கங்கை என்ற சக்தியை காணும் பொழுது அங்கே சிவசக்தி நிலையில் ஆழ்ந்த அனுபவம் பெற முடியும். காசியில் ஒருவர் அவ்வாறு ஆழ்ந்து தியானிக்கிறார் என்றால் அவருக்குள் வெடித்து சிதறும் அற்புதங்கள் அளவிட முடியாது.

காசி நகரம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது என்றாலும், இறப்பு என்பதற்கும் காசி நகரம் பிரசித்தமானது. ஒரு நாளுக்கு சுமார் 700 முதல் 1000 பிணங்கள் எரிக்கப்படுகிறது. காசியில் அகோரிகள் பிணம் திண்பதாக சிலர் சொல்லுகிறார்கள்.

மரணம் என்பதற்கும் காசிக்கும் என்ன தொடர்பு? காசி ஏன் மஹா மயானம் என அழைக்கப்படுகிறது?

இவற்றை தெரிந்துகொள்ள நாம் இறக்க வேண்டும். செத்தால் தானே சுடுகாடு தெரியும்?

வாருங்கள் செத்து செத்து விளையாடுவோம்....:)

[...சுவாசிப்பேன்]

---------------அறிவிப்பு---------

பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நான் காசியில் இருப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் காசியில் பயணிக்கலாம். காசியில் தங்கும் இடம், பயணம் எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது. அதற்கு நான் சரியான இடத்தை காட்டி உதவுகிறேன். உங்களை அழைத்து செல்ல நான் சுற்றுலா கம்பெனி அல்ல. என்னுடன் காசியை அனுபவிக்க விரும்பினால் தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். காசி சுவாசி நிறைவு பகுதிகள் காசியிலிருந்தே வெளிவரும்..!

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன்...!

சில பக்தி பாடல்களில் பிறவி எடுத்தலை பற்றி இவ்வாறு கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் உலகில் பிறந்து இறக்கின்றன. ஆனால் இறைவா இத்தகைய மனிதப்பிறவி எனக்கு கொடுத்து எந்த நேரமும் என்னை பக்தி செய்ய தூண்டிய உன்னை வணங்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் என பக்தி தோய்ந்து பாடுவார்கள்.

எல்லா உயிரும் மனிதப்பிறவி எடுப்பதில்லையாம்.. அப்படி மனிதனாக பிறந்த அனைவரும் இறைவனை நினைப்பதில்லையாம். ஆயிரத்தில் ஒருவருக்கே பிரதிபலன் நோக்காத பக்தி ஏற்படுகிறது. லட்சத்தில் ஒருவருக்கே அதனால் ஆன்மீக உயர்நிலை ஏற்பட்டு, இறைவனில் கலந்து இன்புறுகிறார்கள்.

சென்னையில் இணைய எழுத்தாளர்களை சந்தித்த பொழுது இந்த கருத்துக்கள் தான் தோன்றியது.

[இணைய எழுத்தாளர்னு சொல்லிட்டேன் ஓகேவா தங்கங்களே? :)) ]

எத்தனையோ நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் எத்தனை பேர் பதிவு எழுதுகிறார்கள், மேலும் பதிவு எழுதினாலும் பரஸ்பரம் எத்தனைபேர் சந்தித்துக் கொள்கிறார்கள் என பார்க்கும் பொழுது நான் ”ஆயிரத்தில் ஒருவன்” என்பதை உணர்ந்தேன்.

அப்துல்லா, கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால், ஜெட்லி சங்கர், துளசி டீச்சர் என பல இணைய எழுத்தாளர்களை சந்தித்தேன். பல கருத்துக்களில் கலந்துரையாடல் இருந்தது. ஆன்மீக பணியாக சென்னை வந்தாலும், இவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி சந்தித்தது எனக்கும் நிறைவை அளித்தது.

பதஞ்சலி யோகசூத்திரம் பற்றி எழுத சொன்னார்கள் திரு ராஜகோபாலும், சகோதரி துளசி கோபாலும் :)...! ஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்குவதால் சிலர் வந்து செல்லும் தளமாக இருக்கும் இந்த வலைப்பக்கத்தை முற்றிலும் முடக்க அவர்கள் தீட்டிய திட்டத்தை ரசித்தேன். :)

நான் இணைய தளத்தில் எழுதுவது மற்றும் நகைச்சுவையாக செயல்படுவது எல்லாம் எங்கள் அறக்கட்டளை சார்ந்த நபர்களுக்கும், பல மாணவர்களுக்கும் அவ்வளவாக தெரியாது. எனது உதவியாளருக்கு கூட அன்றுதான் பதிவு, வலையுலகம் என்ற விஷயம் தெரியவந்தது.
அவர்களுக்கெல்லாம் இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் தான். :)

இந்த வலைதளத்தை வாசிக்கும் ரங்கன், முனுசாமி மற்றும் உமாசங்கர் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். நான் எழுதும் வரிகளும் உருப்படியானது என உணர்த்திய இவர்களுக்கு என் நன்றிகள்.

சென்னையை சேர்ந்த எனது மாணவர் தினகரன் சந்திப்பில் கலந்துகொண்டார். ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்புடன் இணைய எழுத்து மூலமே இணைந்த அந்த சந்திப்பு மிகவும் உன்னதமானது என நினைக்கத் தோன்றியது.

இரண்டரை மணிநேர சந்திப்புக்கு பிறகும் சந்திப்பை தவறவிட்டவர்களிடம் எத்தனையோ அழைப்புகளும் மின்னஞ்சல்களுக் எனக்கு வந்தது. நண்பர்களே விரைவில் சந்திப்போம்..

நான் காத்திருக்கிறேன்..”ஆயிரத்தில் ஒருவனாக...”

சந்திப்பை பற்றி இணைய சுட்டிகள் எழுதிய பதிவின் சுட்டிகள் :-
சுட்டி1
சுட்டி 2எனது புகைப்பட கருவி அரபு நாட்டில் வாங்கப்பட்டதால் அதில் எடுத்த அனைத்து புகைப்படமும் ‘ஷேக்’ ஆகிவிட்டது. பலாபட்டறை எடுத்த அனைத்து புகைப்படமும் நன்றாக இருந்தது. அவர் பதிவில் கண்டுகளியுங்கள்.

Sunday, January 17, 2010

சென்னையில் ஸ்வாமி ஓம்கார்...!

வேதத்தின் கண்மணிகளுக்கு... ஒரு தனிப்பயணமாக சென்னை வருகிறேன்.

சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் புதன் (20 - ஜனவரி ) மாலை மெரினா கடற்கரையில் சந்திக்கலாம்.

இடம் : காந்தி சிலை அருகில், கலங்கரைவிளக்கத்திற்கு பின்புறம்.

நேரம் : மாலை 5:30.

அங்கே வந்து வரம் கொடுப்பீர்களா என கேட்பவர்களுக்கு தனி கவனிப்பும், மரியாதையை செய்யப்படும். :)

தினம் தினம் திருமந்திரம் புத்தகத்தின் சில பிரதிகள் என்னுடன் வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்களில் ஒருவனாக, நண்பனாக சந்திக்க வருகிறேன்.


தொடர்பு கொள்ள 99441 333 55.


Thursday, January 14, 2010

காசி சுவாசி - பகுதி 7

நம் காலாச்சாரத்தில் இருந்த ரிஷிகள் தங்களின் ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலால் நீர் என்ற இயற்கை பொருளின் அளவற்ற ஆற்றலை உணர்ந்து கொண்டார்கள். அதனால் ஆன்மீகத்துடன் நீரின் பயன்பாட்டை ஆழமாக இணைத்தார்கள்.

கிராமத்தில் இருக்கும் மந்திரிக்கும் முதியவர்கள் மந்திரங்களை தண்ணீரில் கூறி நோய் விரட்டுவது உண்டு. அபிஷேகம் மற்றும் ஆராதனைகளில் நீர் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மேலும் புனித பயணமாக கோவிலுக்கு செல்லும் பொழுது அதை தீர்த்தாடனம் என்ற சொல்லுடன் நாம் வழங்கி வருகிறோம்.

ஆகம விதியின் அடிப்படையில் இருக்கும் கோவில்களில் தீர்த்த குளம் ஒன்று இருக்கும். கருவறை ஒட்டி அதன் கீழே அகழி போல நீர் நிறைத்து வடிவமைக்கபட்ட கோவில்கள் ஏராளம். கோவில் பூஜை செய்யப்படும் பொழுது கருவறையில் மந்திர ஆற்றல் முழுவதும் உள் வாங்கிய நீரைத்தான் தீர்த்தமாக கொடுக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் நீர் பயன்பாடு ஒரு வித மத சடங்காக பின்பற்றப்படுகிறது.
திருவண்ணாமலை சிங்க தீர்த்தம்

பஞ்சபூதங்கள் ஆற்றலுடன் ஓவ்வொரு தன்மையில் இயங்குகிறது. நீர் வெளியில் இருக்கும் ஆற்றலை கிரகிக்கக்கூடிய ஒரு பொருளாக பஞ்சபூதத்தில் செயல்படுகிறது. நம் உடல் ஒரு விதமான நாதவடிவில் இருக்கிறது. அதாவது நமக்குள் ஒருவித ஓலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த ஒலி தன் ஸ்வரத்தை இழந்து வேறு ஒலிவடிவில் இசைத்தால் நமக்கு உடல்,மனம் மற்றும் வாழ்வியல் பிரச்சனைகள் வரும். இது மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கம்.

ஒரு மனிதனின் நாத வடிவம் தடுமாற்றம் அடையும் பொழுது முழுமையான மந்திர சக்தி பெற்ற ஒருவர் தனது ஒலி ஆற்றலை அவருக்குள் செலுத்தி அவரின் ஒலி உடலை சரி செய்ய முடியும். இந்த விஷயத்தை மிகக்குறைந்த அளவு இசை,பாடல்கள் செய்கிறது. இம்முறையை இசை சிகிச்சை (music therapy) என சிலர் கூறுவார்கள்.

நீரில் ஒலி அதிர்வுகளை கடத்தி, அந்த நீரை ஒருவர் பயன்படுத்துவதால் எளிதில் அந்த அதிர்வுகளை உள்வாங்க முடியும். காரணம் மனித உடல் 60 சதவிகிதம் நீர்ம தன்மை கொண்டது.

சில வருடங்களுக்கு முன் நீர் சுத்திகரிப்பு பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பிரஞ்சு விஞ்ஞானியை சந்தித்தேன். அவர் தான் எனக்கு இமோட்டோவை அறிமுகம் செய்தார். அவர் நீரை மின்சாரம் கொண்டு ஆற்றலை கடத்தி அதில் ஏற்படும் வேதிவினையை ஆய்வு செய்பவர்.

டையனமைசேசன் என்ற முறையில் நீரில் மின்சாரம் செலுத்தி அதை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த 'வாழும் நீர்' (Living Water) என்ற நிலைக்கு மேம்படுத்துகிறார். சாதாரண நீரில் மூலக்கூறுகள் ஆற்றலாக இருப்பதில்லை. அதனால் அவை நமக்கு தாகத்தை தீர்க்க மட்டுமே பயன்படும். ஆனால் டையனமஸ்டு நீர் உடலின் இழந்த சக்தியை மீட்டு, உடல் திசுக்களுக்கு புதிய வளர்ச்சியை கொடுக்கிறது. சாதாரண ஒரு நீரை டையனமைஸ்டு நீராக மாற்றம் செய்ய மின்சாரம் மற்றும் பொருட்செலவும் உண்டு. இந்த ஆய்வுகள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக இமோட்டோவின் சித்தந்தத்தை பின்பற்றி செய்கிறார்கள்.

அவருடன் உரையாடும் பொழுது இறைவனால் அருளப்பட்ட வேத சாஸ்திர யுக்திகளை அவரிடம் விவரித்தேன். யந்திர, மந்திர யுக்திகளை விளக்கினேன். அவரால் நம்ப முடியவில்லை. தனது நாற்பது ஆண்டுகால ஆய்வை ஒருவர் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் தன் முன்னால் விவரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...!

சாதாரண நீரை சில மந்திர ஜபத்தால் அவர் எதிர்ப்பார்க்கும் லிவிங் வாட்டர் ஆக்கி காண்பித்தேன். சோதனை சாலையில் பரிசோதித்து விட்டு என்னை மந்திரவாதியை பார்ப்பது போல பார்த்தார். நான் கூறினேன் இது அனைவருக்கும் சாத்தியம். நீங்கள் வெளியே இருக்கும் கருவிகளை நம்புகிறீர்கள். நான் உள்ளே இருக்கும் ஒரு ஆற்றலை நம்புகிறேன் என்றேன்.

மின்சாரம் கொண்டு நீரை டைனமஸ்டு செய்வதற்கும், நீர் டைனமஸ்டு ஆகிவிட்டதா என அறியவும் பல மணிநேரம் ஆய்வுகள் செய்கிறார்கள். ருத்திராட்சத்தின் பயன் கொண்டு ஒரு நீர் ஆற்றல் வாய்ந்ததா என கண்டறியும் முறையை கற்றுக்கொடுத்தேன்.

நீர் தூய்மையை ருத்திராட்சம் கொண்டு ஆய்வு செய்கிறார்.
பின்னால் மஞ்சள் நிறத்தில் தெரிவது, இமோட்டோ நீர் படிக மாதிரி வடிவம்.

அனைத்தையும் கற்ற விஞ்ஞானி கூறியது, “விஞ்ஞானமும் மெய்ஞானமும் வட்டமான ஒரு பாதையில்
எதிர் எதிரே பயணிக்கிறது. என்றாவது ஒரு நாள் சந்தித்தே தீரும். அது இன்று நடந்திருக்கிறது” என்றார்.

துருக்கி நாட்டில் ஒரு ஏரி மாசடைந்து பல வருடங்களாக இருந்திருக்கிறது. எங்கிருந்தோ வந்த சூஃபி ஞானிகள் எழு பேர், அந்த ஏரியை சுற்றி உட்கார்ந்து ஒரு வித ஓசை எழுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை செய்திருக்கிறார்கள். ஒருவார காலத்தில் அந்த ஏரி முழுமையான சுத்தமான நீர் நிறைந்துள்ளது. பிறகு அந்த ஞானியர்களை காணவில்லை. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள இந்த 6 கி.மீ சுற்றளவு கொண்ட ஏரியை சுத்தம் செய்ய அரசாங்கம் என்ன செலவு செய்யும் என நினைத்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. சூஃபிகள் ஒலியால் செய்ததை எதற்கும் ஈடாக காண முடியாது.

கங்கை,யமுனை, கோதாவரி, சரஸ்வதி,நர்மதை, சிந்து, காவேரி,என்ற தீர்த்தங்கள் இந்த பாத்திரத்தில் நிறையட்டும் என ஹோமம் செய்யும் பொழுது புரோகிதர் நீர் நிரைந்த கலசத்தை பார்த்து ஒரு மந்திரம் கூறுவார். இப்பொழுது சொல்லுங்கள் இது மூடநம்பிக்கையா?

[...சுவாசிப்பேன்]

Monday, January 11, 2010

காசி சுவாசி - பகுதி 6

'நீர் இன்றி அமையாது உலகு' என்பது முதுமொழி. சராசரி மனிதன் இதை மொழி பெயர்த்தால் தண்ணீர் இல்லாமல் உலகம் இயங்காது என கூறுவார்கள். இதே வாசகத்தை விழிப்புணர்வு கொண்டவர்கள் வேறு மாதிரி அனுகுவார்கள். இக்கருத்தை கடவுளை நோக்கி கூறுவதாக கொண்டால்? எவ்வளவு உண்ணதமான வாசகமாக மாறிவிடுகிறது பார்த்தீர்களா?

பஞ்சபூதத்தில் நீர் என்ற வஸ்துவுக்கு மட்டும் மிகவும் சூட்சுமமான தன்மை உண்டு. பஞ்சபூத தோற்றத்தில் முதலில் ஆகாயம், காற்று, நெருப்பு, மண் இவை தோன்றி முடிவாகவும் இறுதியாகவும் தோன்றியது நீர்.

நீர் என்ற தன்மையால் உலக உருவாக்கங்களும் உயிர்களும் நிகழ்ந்ததாக வேத சாஸ்திரம் கூறுகிறது. அதனாலேயே வருணன் வேதத்தின் உறுப்பாக வணங்கப்படுகிறான். கடைசியாக உருவான பூதம் என்பதாலும், நாம் உருவாக ஒத்துழைத்த முதல் பூதம் என்பதாலும் நீர் உயிர்த் தன்மையுடன் மிகவும் நெருங்கியது.

நீர் பற்றி மனிதன் அறிந்தது மிகவும் குறைவான அளவுதான். வேதகால வாழ்க்கையில் தாவரங்களில் உயிர் இருந்து நம்முடன் உறவாட தயாராக இருக்கிறது என்று கூறுகிறேன் அல்லவா? அதுபோல நீர் தன்னிடம் இருக்கும் இயற்கை சக்தியால் நாம் கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற வினையை நிகழ்த்துகிறது.

தண்ணீரின் முன் மனிதன் கூறும் வாசகங்கள் தண்ணீரில் பதிவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு குவளையில் நீர் எடுத்து உங்கள் முன் வைத்துக்கொண்டு அந்த நீரை வாழ்த்தினீர்கள் என்றால் அந்த நீர் மிகவும் மலர்ச்சி அடைகிறது. கோபமாக வசை வார்த்தைகளா திட்டினீர்கள் என்றால் அதனல் நீர் மாசுபடுகிறது....!

நீர் மூலக்கூறுகள் மனிதனின் செய்லகளை தன்னகத்தே பதிவாக ஏற்படுத்துகிறது. நீர் முன் நாம் சப்தமாக பேசவேண்டும் என்பது எல்லாம் இல்லை. மனதில் நினைத்தாலே அது நீரில் பதிவாகிவிடும்...!

சரி.. இனி நீங்கள் அர்ச்சனையை ஆரம்பிக்கலாம். எப்படி ஸ்வாமி இதை கூறுகிறீகள். இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா ?:) இதற்கு மேல் வாசகங்களை கூறும் முன் கீழ்கண்ட சுட்டியை பார்த்து விடுவது உத்தமம்.

படிகமாக்குதல் (crystal experiment) என்ற விஞ்ஞான வினை மூலம் நிரூபணம் செய்திருக்கிறார்கள். ஜப்பானை சார்ந்த மாசரு இமோட்டோ என்ற விஞ்ஞானி தண்ணீரில் எண்ண அலைகள், ஒலி அலைகள் பதிகிறது என கூறுகிறார். சுட்டி

உண்மையில் அவர் மாசறு இமோட்டோ என்று தானே கூப்பிட வேண்டும். :)!


அவர் செய்த விஞ்ஞான ஆய்வை எளிமையாக கூறுகிறேன். ஒரு நீரின் முன் சில ஓலிகளை எழுப்பி, அந்த நீரை உறைபனியாக மாற்றினால், அதன் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரின் முன் வேறு ஓலிகள் எழுப்பி, அதே போல உறை பனியாக்கினால் அவை அதே வடிவில் இருப்பதில்லை, மாறாக வேறு புதிய வடிவ மூலக்கூறாக காட்சி அளிக்கிறது.

நீர் இருக்கும் பாத்திரத்தை பார்த்து நட்புடன் பேசி அதை உறை படிகங்களாக்கி நுண்ணோக்கியில் பார்த்தால் அழகிய நகையை போன்ற நட்சத்திர வடிவம் பெறுகிறது. இதே அந்த நீரை பார்த்து மோசமாக வசைபாடினால் அதன் வடிவம் சிதைந்து காணப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தையே மிகவும் வேறு திசைக்கு செலுத்தும் வல்லமை வாய்ந்தது. தண்ணீர் கூறும் செய்திகள் (Messages from Water) என்ற தனது புத்தகத்தில் இமோட்டோ பல ஆய்வுகளை செய்ததை பற்றி குறிப்பிடுகிறார். மேலும் நீரின் அருகில் இசை கேட்டால் நீர் மூலக்கூறுகள் மிக அழகாக இருக்கிறது என ஆய்வில் தெரியவருகிறது.
நம்புங்கள் இது கம்மல் அல்ல..!
இசை ஒலிக்க செய்து படிகம் ஆக்கிய நீரின் அமைப்பு


எதிர் மறை ஒலிகளை எழுப்பி உருவாக்கிய நீரின் படிகம்

இனி வரும் காலத்தில் தகவல்களை பதிவு செய்யும் ஊடகமாக நீர் இருக்கும் என தெரிகிறது. ஒரு லிட்டர் நீரில் எத்தனை ஜீபி தகவல் சேமிக்கலாம் என ஆய்வுகள் நடக்கிறது..! நீருக்கும் ஆற்றல் பதிவுகள் நடைபெறுவதையும் கூர்ந்து அவதானித்தால் நீங்களும் இந்த ஆய்வை செயல்படுத்தலாம்.

ஸ்வாமி மரம் சீடி படிக்கிது என்றார். இப்போ தண்ணீரில் தகவல் சேமிக்கலாம் என்கிறார் என நீங்கள் நினைக்கலாம் :) ஸ்வாமி விக்கிபிடியாவில் இருக்கும் விஷயத்தை வைச்சு கதைவிடறீங்களேனு கேட்கும் பொதுஜனங்களுக்கு...இதை நான் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். அதன் விபரம் இனி வரும் பகுதிகளில் விவரிக்கிறேன்.

அதற்கு முன் நாம் இங்கே தெரிந்து கொள்ளவேண்டியது......நீர் என்பது மனதில் இருக்கும் எண்ண அலைகள் மற்றும் ஒலி அலைகளை சேமிக்கும் ஒரு ஊடகமாக இருக்கிறது. கங்கை என்ற நீரின் முன் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சில நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஒலியை எழுப்புகிறார்களே அவையெல்லாம் கங்கையில் பதியும் அல்லவா? அதனால் கங்கை நதியில் படிகம் எப்படி பட்ட வடிவத்தில் இருக்கும் என நினைத்து பாருங்கள். கங்கை நதியே மகிழ்ச்சியில் திளைக்கும்.

முனிவர் சாபம் கொடுக்கும் பொழுது கமண்டல நீரை எடுத்து தெளித்து சாபம் விடுவார் - புராண கதைகள் கொண்ட சினிமாவில் காட்டுவார்கள் நினைவிருக்கிறதா? கமண்டல நீர் இல்லாமல் சாபம் விட்டால் பலிக்காதா? நம் முன்னோர்கள் மாசறு இமோட்டோவை மிஞ்சுபவர்கள்.

நீரில் எண்ண அலைகள் பதியட்டும் ஆனால் அது எப்படி நம்முள் வினை செய்யும்? மனிதனின் வாழ்க்கையை நீரால் மாற்ற முடியுமா? நீரின் அதிசயங்களை மேலும் தெரிந்துகொள்ளுவோம். அதற்கு முன் ஒரு கோப்பை நீரில் தளர்வாக்கும் எண்ணங்களை பதிய செய்து... அந்த நீரைஅருந்தி உங்களை தளர்வாக்கிக் கொள்ளுங்கள்..!

[...சுவாசிப்பேன்]

Sunday, January 10, 2010

அஷ்டமா சித்தியில் ஒரு சித்து வேண்டுமா?

தமிழ் நாட்டில் சித்தர்கள் வழி ஆன்மீக பாதை மிகவும் பிரபலமானது. அதிலும் பதினெட்டு சித்தர்கள் மற்றும் அவர்களின் பாடல்கள் இவை பலருக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்.

சித்தர்கள் என்பவர்கள் சித்துக்களை கைவரப்பெற்றவர்கள் என பரவலாக கூறுகிறார்கள். அஷ்டமா சித்தி என்றால் எட்டுவகையான அற்புதங்கள் கைவரப்பெற்றவர்கள்.

ஒருவர் அஷ்டமா சித்தி பெற மிகவும் அதிகமான பயிற்சிகள் செய்தார். பலநாட்கள் முயன்று ஒன்றும் நடக்கவில்லை.மகனின் கஷ்டத்தை உணர்ந்த அவரின் தந்தை எட்டு பெண்களை மணந்தார். நம் நண்பருக்கு அஷ்டமா சித்தி கிடைத்தது. இது போல அஷ்டமா சித்தி பெற அனேக எளியவழிகள் உண்டு..!

அஷ்டமா சித்து என விளக்கியவைகளை மனிதன் விஞ்ஞான கருவிகளால் ஓரளவு நெருங்கிவிட்டான் என கூறலாம்.

நினைத்த நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லுவது ஒரு வகையான அஷ்டமா சித்து. அப்படி பட்ட அஷ்டமா சித்து உங்களுக்கு தரப்போகிறேன். ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் உள்ள சில இடங்களுக்கு மட்டும் சென்று பயிற்சி செய்யுங்கள்.


தமிழக சுற்றுலாத்துறையின் அற்புத வேலையில் அனைத்து தமிழக இடங்களும் மிக உன்னதமாக கணினி மயமாக்கபட்டுள்ளது. தமிழக கோவில்களை அற்புதமாக 360 டிகிரி பார்வையில் காணலாம். நாமே அங்கு நேரில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்.

கோவில் மற்றும் இதர இடங்களுக்கு கணினிவழியே பயணப்படலாம். வானத்தில் மேகங்களும், நிலத்தில் மண் மற்றும் கற்களும் கண்ணால் காண்பது போல தெளிவாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.

காட்சியின் துல்லியம் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. பின்னனியில் சாக்ஸாபோன் இசை ஆஹா....

இந்த வலைதளத்தில் காட்டப்படும் அனைத்து இடமும் எனக்கு பிடித்தது என்றாலும், திருவண்ணாமலை, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை கோவில் ஆகியவை என் கணினியின் சுட்டியை கட்டிப்போட்டது.

நீங்களும் பார்த்துவிட்டு நீங்கள் பெற்ற சித்தின் அற்புதங்களை கூறுங்கள்.

Saturday, January 9, 2010

சர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..!


அன்பு சாமிக்கு,

உங்களுடன் இருக்கும் சுப்பாண்டி எழுதிக்கொள்வது.
சிலவிஷயங்களை உங்களுடன் நேரில் பேச முடியாது என்பதால் இந்த மின்னஞ்சல்.

முதலில் இந்த லிங்கைப் படிக்கவும்.

சர்வரோக நிவாரணம் லிங்க் - [ உலக நலன் கருதி லிக் சென்சார் செய்யப்பட்டுள்ளது ]
படிச்சாச்சா???

ஒ.கே இப்ப டீலிங் ஸ்டார்ட்.

நீங்க என்னைய பெரிய எழுத்தாளர் ஆக்கிட்டீங்கனா, நானும் இதுமாதிரி உங்களைப்பற்றி எழுதுவேன்ல?? ...
யோசிங்க சாமி!!

நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம்.

ஸ்வாமி ஓம்கார் ஆசிர்வதிச்சதால குருடனுக்கு காது கேட்கிறது, ஊமைக்கு கண் தெரிகிறது, முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என
கட்டுரை எழுதலாம்.

குருடனுக்கு காது கேட்கும் என்றும்,ஊமைக்கு கண் தெரியும் - இதில் அதிசய வெங்காயம் ஒன்னும் இல்லைங்கிறது படிக்கிற சுவாரசியத்தில் தெரியாது. ஹாப்பாயில் ஆசாமிங்க நம்பிடுவாங்க.

லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது ஓல்டு பேசன் ஸ்வாமி. நாமும் இது போல புதிதாக முயற்சி செய்வோம்.
என்னைப் பெரிய எழுத்தாளராக்க நீங்க வரம் தந்து ஆசிர்வதமெல்லாம் பண்ண வேண்டாம்.

அப்பப்ப எனக்கு சம்திங் வெட்டினாலே போதும் :)


அளவில்லா எதிர்பார்ப்புடன்,

சுப்பாண்டி

---------------------------------------------------------------------------------------------

அளவில்லா எதிர்பார்ப்பு கொண்ட சுப்பாண்டிக்கு,

ஒரு கதை... :)

வங்காள இளவரசி ஒருவர் விவேகானந்தரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டாளாம்.
அதற்கு விவேகானந்தர், எதற்கம்மா இப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு என கேட்டார்.

உங்களை போன்ற அழகும் அறிவும் கொண்ட குழந்தை வேண்டும் அதனால் தான் விருப்பப்படுகிறேன் என்றாளாம் இளவரசி.


நானும் நீங்களும் திருமணம் செய்துகொண்டால் அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் என நிச்சயம் கிடையாது. சில நேரங்களில் குழந்தை வேறு மாதிரியும் பிறக்கலாம்.

குழந்தை கருவுற்று பெற்று எடுப்பதற்கு கால தாமதமும் ஆகும். அதனால் என்னையே உங்கள்
மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா என கூறிய விவேகானந்தர் இளவரசியில் காலில் விழுந்தார்.

இப்போ கருத்து... :)

உங்களை பெரிய எழுத்தாளர் ஆக்கி அப்புறம் என்னை பற்றிய அதிசங்களை நீங்கள் எழுதி சம்பாதிப்பதை விட... அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக சர்வரோக நிவாரணியானந்தாவை பற்றி நீங்கள் எழுத துவங்கினாலேயே உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.


அதிசயத்தை மக்கள் எதிர்பார்க்கும் வரை இவர்கள் போன்றவர்கள் இருந்தே தீருவார்கள். ப்ரதிபக்‌ஷ பாவனையில் கூறவேண்டுமானால்
இவர்கள் இருப்பதாலேயே பிறர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும்.

என் சார்ப்பாக அவரிடம் சென்று ஒரு வரம் கேளுங்கள்... அது என்னவென்றால்..

“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”


தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Thursday, January 7, 2010

காசி சுவாசி - பகுதி 5

குருதே கங்காஸாகர கமநம்
வ்ரதபரிபாலன மதவா தானம் மி
ஜ்ஞானவிஹீந:ஸர்வமதே ந
முக்திம் ந பஜதி ஜன்மசதேந

கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல விரதங்கள் மற்றும் தான தர்மங்கள் செய்தாலும் தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை.

-பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்
---------------------------------------------------------

பாரத தேசத்தை பாரத மாதாவாக நினைத்தால் அவளின் தனங்களில் வரும் வற்றாத பால் போன்றது கங்கை நதி. கங்கைக்கு பலர் பலவாறு புனிதம் கொண்டதாக கருதுகிறார்கள். நாராயணரின் கால்களில் இருந்து வருகிறது. பிரம்மனின் கைகளில் உள்ள கலசத்திலிருந்து வருகிறது. இன்னும் சிலரோ சிவனின் தலையிலிருந்து வருகிறது என்கிறார்கள்.


கங்கை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல கங்கை என்ற நதியில் என்ன வருகிறது என்பதே முக்கியம். நீர் என்பது உற்பத்திக்கான ஒரு வஸ்து. அதனால் நீர் பெண்ணாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் இருக்கும் நீராதாரங்களுக்கு பெண் பெயர்கள் வைக்கப்படுகிறது. நிலையான இயற்கை தன்மைக்கு ஆண் பெயரும், இயற்கையை வளப்படுத்தும் தன்மைக்கு பெண் பெயரும் வைப்பது பாரத கலாச்சாரமாகும்.

கங்கை என்பது பெண்ணாக உருவகப்படுத்தியதன் விளைவு, சிலர் சிவனுக்கு கங்கை இரண்டாவது மனைவி என துவங்கிவிட்டார்கள். விநாயகர், முருகன் சிவனின் புதல்வர்கள், பார்வதி முதல் மனைவி என தனக்கு என்ன உண்டோ அதை கடவுளிடமும் காண்கிறார்கள். நம் ஆட்கள் விட்டால் சிவனின் குடுப்பத்திற்கு ரேஷன் கார்டு கூட கைலாய முகவரியில் கொடுப்பார்கள்.

கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் என்பது பலரின் நம்பிக்கை. இக்கருத்தை பலர் தவறாகவே புரிந்துகொள்வார்கள். நம் ஆட்கள் தம்பதிகளாக கங்கையில் குளித்துவிட்டு அவசர அவசரமாக தங்கள் துணையை பார்ப்பார்கள். பாவம் தொலைந்ததா என பார்க்கிறார்களாம். :) நம் ஆட்களின் கிண்டலுக்கு அளவே இல்லையே..

பல காலமாக கூறப்படும் கிராமத்து கதைகள் கங்கையில் குளிப்பதன் உண்மையான தத்துவங்களை போதிக்கிறது. ஒரு முறை சிவனும் பார்வதியும் தனிமையில் இருக்கும் பொழுது பார்வதி சிவனிடம், “கங்கையில் குளிப்பதால் முக்தி என கூறுகிறீர்களே ஸ்வாமி, தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் அதில் நீராடினாலும் சிலர் மட்டுமே முக்தி அடைகிறார்களே? இது முரண்பாடாக இருக்கிறதே?” என கேட்டார்.

“சக்தியே இதை விளக்குவதை விட நேரடியாகவே காண்பிக்கிறேன் என்னுடன் வா” என கங்கைக்கரைக்கு அழைத்துச் சென்றார் சிவன்.

இருவரும் மிகவும் வயது முதிர்ந்த முதியவர்கள் போல உருமற்றம் அடைந்தார்கள். பார்வதிக்கு தன் நாடகத்தின் திரைக்கதையை கூறினார் சிவன்.

நடக்க இயலாத முதியவர்கள் போல கங்கை கரையில் அமர்ந்து கொண்டார்கள். கங்கையில் குளித்துவிட்டு
வருபவர்களிடம், “ஐயா, புண்ணியவான்களே... எங்களால் நடக்க முடியாது, அதனால் கங்கையில் குளிக்க முடியவில்லை. தயவு செய்து நீங்கள் பெற்ற புண்ணியங்களை எங்களுக்கு கொடுத்திவிட்டு செல்லுங்கள். ஐயா உதவுங்கள் ஐயா...” என கேட்கத் துவங்கினார்கள்.

யாரும் முதிய தம்பதிகளுக்கு உதவ முன்வரவில்லை. நேரம் கூடிக்கொண்டே சென்றது யாரும் உதவவில்லை. ஒரு இளைஞன் குளித்துவிட்டு வந்து தனது கையில் இருந்த குடம் மூலம் இருவர் கையிலும் கங்கையை ஊற்றினான். பின் அந்த இளைஞன் கூறினான், “முதியவர்களே இதோ என் புண்ணியங்கள் எல்லாம் உங்களுக்கு தருகிறேன்.”

முதியவர் வேடத்தில் இருந்த சிவன் கேட்டார்,” இளைஞனே உனக்கு புண்ணியம் வேண்டாமா?”

“ஐயா கங்கை என்ற புனிதம் இங்கே பிரவாகமாக ஓடுகிறது. என் புண்ணியம் தீர்ந்தால் என்ன? மீண்டும் இதில் குளித்தால் புண்ணியம்
கிடைத்துவிடும்” என்றான் இளைஞன்.

முதிய வேடத்தில் இருந்த சிவனும் பார்வதியும் தங்களின் சுய உருவை காட்டி அவனுக்கு முக்தியை அளித்தார்கள்.

கங்கையில் குளித்தால் புண்ணியம் பெருகும்
என்ற சித்தாந்தத்தை காட்டிலும்,

கண்டிப்பாக புண்ணியம் பெருகும் என்ற நம்பிக்கை அதைவிட பெரியது.


கங்கை மாசுமடுகிறது. அதை தூய்மையாக்குகிறோம் என்று பல கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்கிறார்கள்.அரசியல்வாதிகளோ ஐயாயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். கங்கைக்கா இல்லை இவர்களுக்கா யாருக்கு ஒதுக்க சொல்லுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. சில பகுத்த-அறிவு-வாதிகள் கங்கை அசுத்தமானது என்கிறார்கள்.

கங்கை அசுத்தம் எனும் மேன்மக்களே, காசி நகரம் தோன்றி ஐயாயிரம் வருடம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஓடும் கங்கை,
இன்றும் கங்கையாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் வசிக்கும் சிங்கார சென்னை என்ற பெருநகரம் தோன்றி முன்னூறு வருடங்களே நிறைவடைந்து இருக்கிறது. படகு போக்குவரத்து இருந்த கூவம் என்ற ஆற்றில் தற்சமயம் உங்களால் குளிக்க முடியுமா?

தமிழகத்தின் தலைநகரில் ஓடும் புண்ணிய நதி

கூவத்தில் அறுபது வருடத்திற்கு முன் தினமும் குளித்து அதில் பூஜைக்கு நீர் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. முதலில்
உங்கள் காலடியில் இருக்கும் ஆற்றின் லட்சணத்தை பாருங்கள். அதை சுத்திகரிக்க முயலுங்கள்.

கூவத்தை சுத்திகரிக்க பல கோடி ரூபாயை ’வாழும் கடவுளிடம்’ கேட்கிறார்கள். உண்மையில் கூவத்தை சீரமைப்பது என்பது ஆறு மாதத்தில் சில லட்சங்களில் செய்து முடிக்க வேண்டிய விஷயம்.

கேரளா போன்ற மேற்கில் இருக்கும் நில அமைப்பின்படி கடல் நீர், நகரத்தில் உள் புகுந்து கடல் நீரின் அடர்த்தியால் கழிவுகள் தேங்காத நீர் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. அதுபோல கூவ நதியை ஒட்டி உள்ள கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடல் நீர் கூவ நீருடன் கலந்து அடர்த்தியின் காரணமாக கழிவுகள் கடலில் கலந்துவிடும். கடல் நீர் கூவம் நதியின் உள்ளே கலப்பதால் படகு போக்குவரத்து செய்ய ஏதுவாக இருக்கும்.

கொச்சின் நகரம் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் இந்த எளிய முயற்சி யாரும் செய்ய மாட்டார்கள். செய்தால் பல கோடி கிடைக்காதே? கூவம் உண்மையாக எங்கே ஓடுகிறது என புரிகிறதா?


கைலாஷ் மானசரோவர் என்பது பலர் புனிதமாக மதிக்கும் இடம். சிவனின் உறைவிடம் என கூறப்படுகிறது. உலகின் உயரமான இடத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரி மானசரோவர். ஆனால் இந்த ஏரியை புனிதமாக கருதினாலும் யாரும் வீட்டுக்கு தீர்த்தமாக எடுத்து வருவதில்லை....!

காசிக்கு செல்லுபவர்கள் கங்கையை தங்களுடன் எடுத்து வருகிறார்கள். பல காலம் தங்களுடன் வைத்து பூஜிக்கிறார்கள்.

உரக்க
சொல்லுகிறேன் கேளுங்கள். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் கங்கை மாசுபடுவது என்பது சாத்தியம் இல்லை. இன்னும் பல நூற்றாண்டுகள், பலகோடி தொழில்சாலைகள் வந்துவிட்டாலும், பல கழிவுகள் மிதந்தாலும், பிணங்கள் அழுகினாலும் காங்கை மாசுபடாது. இது நிச்சயம்...!

இக்கருத்தை பக்தியால் உணர முற்படுவதை விட, நம் பகுத்தறிவுக்கு புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் அறிவியலின் உதவியை நாட வேண்டும்.

நான் அறிவியல் என்றவுடனேயே, “அறிவியலை எல்லாம் நீ எப்படி பேசலாம்?” எனக் கேட்கும் நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...!

[...சுவாசிப்பேன்]

Monday, January 4, 2010

காசி சுவாசி - பகுதி 4

கோசேஷு பஞ்சஸ்வதிராஜமானா
புத்திர்பவானீ ப்ரதிதேஹ கேஹம் மி
ஸாக்ஷூ சிவ:ஸர்வகதோந்தராத்மா
ஸா காசிகாஹம் நிஜ போத ரூபா மிமி

ஐந்து விதமான உடல்களில் ஒளியாக வீசுவதும், மனித உடல் என்ற கோவிலில் வீற்றிருக்கும் அறிவு வடிவமானவள் பார்வதி தேவி. அந்த மனித உடலில் ஆன்மாவாக வீற்றிருப்பவரே சிவன். அந்த ஆன்மாவின் உண்மையான புறத்தோற்றமே காசி நகரம்...!

-ஆதிசங்கரர் - காசி பஞ்சகம்
-------------------------------------------------------------------------------------

ஆதி சங்கரர் - இந்த பெயர் பாரத தேசத்தில் மிகவும் அதிகமாக ஒலித்த இடம் ஒரு நகரம் மட்டுமே. அந்த நகரம் காசி. ஆதி சங்கரர் எப்பொழுது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என பல கதைகள் கூறப்பட்டிருக்கிறது. அவை நமக்கு தேவையில்லை. எப்பொழுதும் ஞானிகள், மகான்களின் கதைகள் மனதுக்கு சில உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் இவை நம் ஞானவழிக்கு இட்டு செல்லாது. ஒரு கல்லூரி மாணவனுக்கும் பேராசிரியனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை மட்டும் கேட்டு நாம் பட்டம் வாங்கிவிட முடியுமா? சில நேரங்களில் மட்டுமே ஞானியர் சரிதங்கள் படிப்பினையாக இருக்கக்கூடும்.

ஆதிசங்கரரின் சரிதம் என கூறப்படும் சங்கர விஜயம் பல அற்புதங்களை இணைத்து எழுதப்பட்டது. ஆதிசங்கரரின் நிதர்சனமான வாழ்க்கை வரலாறு தொகுக்கபட்டதா என்பது கேள்விக்குறியே. ஆனால் காசி மாநகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்கலைகழகங்களை கொண்ட கல்வி நகரமாக இருந்தது. அதனால் ஆதிசங்கரின் வாழ்க்கை சம்பவங்கள் அங்கே பதியப்பட்டு தெளிவாக இருக்கிறது.

பாரத தேசத்தின் ஆன்மீகவாதிகளில் தவிர்க்க முடியாதவர் ஆதிசங்கரர். ஆன்மீகவாதிகள், சன்யாசிகள் என பாரதத்தில் 60% ஆன்மீக மையங்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆதிசங்கரின் பின்பற்றுதலை செய்கிறது. பிற 40% ஆதிசங்கரரின் கருத்தை மேம்படுத்து செய்கிறோம் என செயல்படுகிறது. இதை கொண்டு பார்க்கும் பொழுது ஆதிசங்கரரை தவிர்த்துவிட்டு ஆன்மீக பாதை பாரத தேசத்தில் இல்லை என்ற நிலையை உணர முடியும்.

கவிஞர், சீர்திருத்தவாதி, ஆன்மீக தலைவர், மத ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி, தத்துவ ஞானி என பல வடிவங்களில் ஆதிசங்கரரை பார்க்க முடியும். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் என பல நூல்களுக்கு விளக்க உரை கொடுத்துள்ளார். அது போக பல நூல்கள், கடவுளை பற்றிய பாடல்கள் என எழுதி இருக்கிறார். இறைவனின் முக்கிய ஆறு வடிவங்களான சிவன், விஷ்ணும், சக்தி, ஸுப்ரமணியர், விநாயகர் மற்றும் சூரியன் என அனைத்துக்கும் பாடல் இயற்றி உள்ளார். உருவ வடிவம் கடந்த அருவ இறைநிலைக்கும் இவரின் பாடல்கள் உண்டு.

ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் ஐந்து முறை வலம் வந்திருக்கிறார். நான்கு திசையிலும் ஆச்சாரிய மடங்கள் நிறுவினார் என்று ஆதிசங்கர விஜயம் என்ற சரிதத்தில் கூறப்படுகிறது. பல நகரை கண்டவராக இருந்தாலும் காசி என்ற நகரை பற்றி மட்டுமே பாடல் இயற்றி உள்ளார் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் காசி நகரை தன் உடலாக கருதி தானே இறைவனுடன் ஒன்றாக கலந்து வாழ்ந்த இடம் காசி. காசியே சிவன், நானே காசி என அவர் கூறும் பாடல்களில் அவரின் ஆன்மீக நிலை பளிச்சிடுகிறது. காசி நகரை மட்டுமல்ல, காசிக்கு அழகு சேர்க்கும் கங்கையை பற்றியும், மணிகர்ணிக்கா என்ற படித்துறையை பற்றியும் அவர் பாடல் இயற்றி உள்ளார் என்றால் அவருக்கு காசி எவ்வளவு பிடித்த நகரமாக இருந்திருக்கும்?

காசியில் சர்வயங்ஞ பீடம் என்ற உயர் கல்வி பதவி இருந்தது. அதில் அமர தங்களில் அறிவாற்றலை நிரூபணம் செய்ய வேண்டும். 64 கலைகளிலும் தாங்கள் மிகவும் உண்ணத நிலையில் இருக்கவேண்டும். பல்வேறு அறிஞர்களின் சிக்கலான கேள்விக்கு பதில் கூற வேண்டும். இவற்றை செய்து நிரந்தர சர்வயங்ஞபீடாதிபதியாக இருந்தார் ஆதிசங்கரர்.

இந்த பீடத்தில் ஒருவர்
இருந்தால் உலகின் ஞானம் சார்ந்த விஷயங்களின் ஒரே தலைவர் என அர்த்தம். அத்வைத்தம் என்ற ஆதிசங்கரரின் கொள்கை பாரத தேசத்தில் புகழ்பெற்ற நேரம் அது. தனது தர்க்க திறமையாலும், இறையருளாலும் அத்வைத்த கொள்கையை நிறுவி வந்தார் ஆதிசங்கரர். ஆனாலும் அத்வைத்தம் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கபட்டது அல்ல. ஆதிசங்கரர் அத்வைத்தகொள்கையை பரப்பும் ஓர் கருவியாக இருந்தார்.

ஒருவர் பிரபலம் அடைந்தாலே அவரை பின்பற்ற பலர் கூடிவிடுவதும், பிரபலத்தின் மேல் இருக்கும் அன்பால் அவருக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என அவரின் பெயரை கெடுப்பதும் இயல்பு. அப்படித்தான் ஆதிசங்கரருக்கும் நடந்தது. ஆதிசங்கரரின் வளர்ச்சியால் பலர் அவருக்கு சிஷ்யர்களாக அமைந்தனர். புகழ் பரவ பரவ சாமான்யர்கள் சந்திக்கும் நிலையில் ஆதிசங்கரரின் நிலைமாற்றம் ஏற்பட்டு அறிஞர்கள் மற்றும் சான்றோர்களை மட்டுமே பார்க்கும் நிலை அடைந்தது.

ஆதிசங்கரரின் கருத்துக்கள் சாமனிய மனிதனை சென்றடையாமல் போகக்கூடும் என்பதாலும், ஜாதி,மதம் போன்ற வகுப்புவாத பிரிவுகளில் அவரின் கருத்துக்கள் சிக்கிவிடக்கூடாது என நினைத்தார் ஒரு ஞானி.

ஆதிசங்கரர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நித்திய அனுஷ்டானங்கள் மற்றும் அறிவுசார்ந்த கூட்டமாக இருந்தார்கள். காசியில் இருந்த ஞானியோ தன்னிலை மறந்து குளிக்க, உடுக்க என தூய்மையற்றவராக இருந்தார். ஒருவிதத்தில் அகோரி போன்ற வாழ்க்கைச் சூழல்.

ஆதி சங்கரர் குளிக்க சென்ற படித்துறை வீதி.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கை படித்துறைக்கு குளிக்க செல்லும் பொழுது வழியில் இவர் படுத்திருந்தார். அவரை சுற்றி நாய்கள் இருந்தன. நாய்களுக்கு கொஞ்சம் உணவையும், அதே கைகளில் மறு பாதியில் தானும் உண்டு மகிழ்ந்தார் அந்த ஞானி.

ஆதிசங்கரர் வி.ஐ.பி அல்லவா? அவர் வரும் முன் அவரின் சீடன் வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என எல்லோரையும் விலக்கிவிட்ட வண்ணம் வந்துகொண்டிருந்தான். அங்கே நாய்களுடன் இருந்த ஞானியை பார்த்தான். அவனுக்கு ஞானி என தெரியவில்லை. விலகு விலகு கூறினான்.


அந்த ஞானி கேட்டார் எதை விலக சொல்லுகிறாய்? என் உடலையா? என் ஆன்மாவையா என ஆழ்ந்த ஞான கருத்துக்களை கேட்டு சிஷ்யனை நிலைகுலைய செய்தார். தன் குரு கூறும் கருத்துக்களை நாயுடன் உலாவும் இவர் எப்படி கூறுகிறார் என அதிர்ந்தான். அந்த ஞானியுடன் உறையாடியதை மனீஷபஞ்சகம் என்ற நூலாக தொகுத்தார் ஆதிசங்கரர்.

சிலர் இந்த ஞானியை பன்றி மேய்க்கும் புலையன் என கூறுவார்கள். ஆதிசங்கரர் மேல்ஜாதிக்கரர் என்றும் புலையன் கீழ்ஜாதி என்றும் பாகுபடுத்தி பார்க்கும் நிலை அவர்கள் கூறும் கதைகளில் தெரியும். உண்மையில் காசியில் பன்றி, நாய் மேய்க்கும் புலையர்கள் என்ற ஒரு இனமே கிடையாது. சிலர் சிவனே அவ்வுருவில் வந்தார் என கூறுவார்கள். இவையாவும் ஆதிசங்கரரின் கதைகளில் மிகைப்படுத்தபட்ட விஷயங்களே ஆகும்.

காலபைரவர் பற்றி சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா? அவரை தவிர வேறு யார் நாய்களுடன் காசியில் உலாவர முடியும்? ஆணவம் மிகும் இடங்களில் எல்லாம் இடி போல வந்து இறங்கும் ஆற்றல் காலபைரவனுக்கு தானே உண்டு...!

இந்த நிகழ்வுக்கு பிறகு காலபைரவனின் ஆற்றல் ஆதிசங்கரருக்கு கடத்தப்பட்டது. அவரும் மனிதனின் அறியாமை மற்றும் ஆணவங்கள் கண்டபொழுது எல்லாம் கொதித்தார்.

ஒரு நாள் காசி நகர வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்
ஆதிசங்கரர். அங்கே வேத சாஸ்திரத்தில் வரும் ஒரு வார்த்தையான “டுக்ருஞ்கரணே” என்ற சொல்லை ஒருவன் மனப்பாடம் செய்ய திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். சில குழந்தைகள் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? மஹாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு..... மஹாத்மா காந்தி.. மஹாத்மா காந்தி...என ஒரு வார்த்தையையே உடைந்த ரெக்கார்டு போல கூறுவார்கள். அது போல காசிவீதியில் ஒருவன் “டுக்ருஞ்கரணே” என மனப்பாடம் செய்துவந்தான்.

வேதத்தை பிறர் முன் கூறி பெருமை கொள்ளுவதற்கு மட்டுமே அவன் படித்துவந்தான் என்பதை உணர்ந்து அவனை நோக்கி ஆதிசங்கரர் பாடிய பாடல் தான் பஜகோவிந்தம் என்ற மோஹமுத்கரம்.

இறைவனை பாடு, இறைவனை பாடு..முட்டாளே..! இறைவனை பாடு.
எமன் உன் உயிரை எடுக்க வரும் பொழுது “டுக்ருஞ்கரணே”
என கூறினால் உன்னை விட்டுவிடமாட்டான்.
இறைவனின் நாமமே உன்னை இறப்பற்ற முக்தி நிலைக்கு கொண்டு செல்லும்.

-என பொருள்பட பாடினார் ஆதிசங்கரர். மோஹமுத்கரம் என்றால் மோகத்தை தகர்க்கும் அயுதம்(சுத்தியல்) என்று பெயர். அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகள் மிகவும் அற்புதமானது. எனக்கு தெரிந்தவரை ஆதிசங்கரரும், சிவவாக்கியரும் தான் அறியாமையில் இருப்பவர்களை காண்டு கொதித்து முட்டாளே என திட்டி பாடி இருக்கிறார்கள்.

சரி உங்களிடம் ஒரு கேள்வி...


மிகவும் பழுத்து தானே வெடித்த பலாபழத்தின் தங்க நிற பலாச்சுளைகளை, மலைத்தேனில் ஊறவைத்து , அருவியின் அழகை ரசித்தவண்ணம் அருகில் அமர்ந்து சாப்பிட்டது உண்டா?

அவ்வாறு ரசிக்க வேண்டுமானால் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை, தெய்வீக பாடகி எம்.எஸ் சுப்புலக்‌ஷிமியின் குரலில் கேட்கவேண்டும்..!

சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை எழுந்துகொள்ளுங்கள். கண்களை மூடி உங்கள் சுவாசத்தை சில நிமிடம் ஒரு சாட்சியாக கவனியுங்கள். பிறகு ஒரு கப் தேனிருடன் இந்த வீடியோவை ரசியுங்கள்.பாடலின் பொருளே தேவையில்லை... எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அந்த பக்தி ரசத்தை பாருங்கள். புனரபி ஜனனம் என்ற வரிவரும் பொழுது தன்னை மறந்து ஆன்மாவில் உறைகிறார். நான் சொன்ன மலைத்தேனும் பலாபழமும் ஞாபகம் வரும்.

காசி, இசை என்ற இருவார்த்தைகளை கேட்டாலே எனக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஞாபகம் வருவார். விஸ்வநாதர் கோவிலில் இளம் வயது முதல் சிவனையே செனாய் மூலம் உருகவைத்தவர். சரஸ்வதி மற்றும் சிவனை பற்றி பேசுகிறார் என்பதற்காக காசியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பு இவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தது. இசைக்கு மதம் இடையாது. நான் இசைக்கும் பொழுது என் முன்னால் சில உருவங்கள் தெரிகிறது அதைபற்றியே நான் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார்.

இசை வெள்ளத்தில் மூழ்கி திளைத்தால் ஒழிய இத்தனை ஞானம் கிடைக்காது. ஆனால் சிலர் கங்கையில் குளித்தால் ஞானம் கிடைக்கும் என்கிறார்கள். என்னது... கங்கையா..?

அது மாசுபட்டு இருக்கிறதே அதில் பல கழிவுகள் மிதக்கிறதே அதில் குளித்தால் புண்ணியமோ ஞானமோ கிடைக்குமா? என நீங்கள் கேட்பது புரிகிறது.


சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்கும் மாமனிதர்களே... கங்கையில் குளித்துவிட்டல்ல.....சிறிது குடித்துவிட்டே உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறேன். பொருத்திருங்கள்...!

(சுவாசிப்பேன்)

Sunday, January 3, 2010

தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

ஜனவரி ஒன்றாம் தேதி இறைவனின் செயல் நிலையும் சமாதி நிலையும் இணந்த ஆருத்ர தரிசனம் அன்று தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


புத்தகத்தின் அச்சுப்பணியை சிறப்பாக செய்த வடகரை வேலன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். வடகரைவேலன் அவர்கள் புத்தகம் அச்சிடும் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

திரு நிகழ்காலம் சிவா, சஞ்சய் காந்தி ஆகிய பதிவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மெருகூட்டினார்கள்.

குறிப்பு : புத்தகம் விலை 80/- ரூபாய். 366 பக்கம் கொண்ட கையடக்க புத்தகம். புத்தகம் வேண்டுவோர் தபாலில் பெறலாம். தபால் செலவு தனி. குறைந்த பட்சம் 2 புத்தகத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் ஒரு புத்தகத்திற்கு அனுப்பினால் போதுமானது. நீங்கள் படிக்க மட்டுமல்ல பிறருக்கு பரிசாக கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம். அறக்கட்டளை சார்ப்பில் பெரிய புத்தகத்தின் விலையே 80 என நன்கொடையாகவே அமைக்கபட்டுள்ளது. புத்தகம் வேண்டுவோர் அதற்கான வழிமுறைகளை தொலை பேசிவாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி : +91 99 44 2 333 55.


|| ஓம் தத் சத் ||