Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 30, 2009

பழைய பஞ்சாங்கம் 30 - 04 -2009

சைக்கிள் ரிப்பேர் ஷாப்

சமீபமாக தொலைக்காட்சியில் ஒரு பிரச்சார விளம்பரம் பார்த்திருப்பீர்கள். ஒரு சிறுவன் தந்தையுடன் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசலில் தான் சைக்கிள் ரிப்பேர் கடை வைக்கபோவதாக சொல்லுவான். பெட்ரோல் சேமிப்புக்கான உயர்ரக முட்டாள் விளம்பரம் அது. மக்களை பெட்ரோல் சேமிக்க சொல்லும் விளம்பரத்திற்கு செலவு செய்வதை காட்டிலும், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கவோ பயன்படுத்தவோ ஊக்குவிக்கலாம்.

டெல்லியில் அசந்தர்ப்பமாக ஒரு அரசியல்வாதியை சந்திக்க நேர்ந்தது. தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயம் ஆனவர். நீதியைகாக்கும் இருவர்கள் அடித்துக்கொண்டதும் இவரால் தான்.

நீண்ட நேரம் பேசிகொண்டு இருந்துவிட்டு, டெல்லியில் அனைத்து அரசு பேருந்தும் மீத்தேன் வாயுவில் ஓடுகிறது.விஞ்ஞானத்தில் பல யுக்திகள் மாற்று எரிபொருளுக்கு இருக்கிறது. மேலும் சாஸ்திரத்தில் பல விஷயங்கள் பெட்ரோல் போன்ற நீர்ம எரிபொருள் உள்ளன. இதை மக்களிடையே கொண்டு சேர்க்க கூடாதா என எனது ஆதங்கத்தை கேட்டேன். பெட்ரோலியம் வியாபாரிகள் என்பவர்கள் உலக அளவில் மாஃபியா போன்றவர்கள். யாராவது மாற்று எரிபொருளை கண்டறிந்தால் அழித்துவிடுவார்கள் என பீதியை கிளப்பினார்.

பின்னர் என்னிடம் கேட்டார் சாஸ்திரத்தில் ஏதோ இருக்கு என்றீர்களே என்ன அது என்றார். நான் கூற முற்படும் முன் சுப்பாண்டி என்னிடம் குனிந்து காதருகே கிசு கிசுத்தான்..

“ஸ்வாமி இவர் கிட்ட எதுவும் சொல்லாதீங்க. உங்களையும் லவ-குசா ஆக்கிடுவாங்க” என்றார்.
அவன் சொன்னது புரிந்து அமைதியானேன். உங்களுக்கு புரிஞ்சுதா?

--------------------------------------------------------------------------------
சீடி - காம்பேக்ட் டிஸ்க் அல்ல

தமிழ் மொழிக்கு சில சிறப்புகள் உண்டு. வேறு எந்த மொழியிலும் இல்லாத வகையில் சிலேடை அதிகமாக பயன்படுத்த முடியும். சரி தமிழறிஞ்சரே இன்னா மேட்டர் என கேட்பது புரிகிறது.

பொது விழாக்களில் எனது மாணவர் சாஸ்திர ரீதியான சீருடை அணிவார்கள். சிலர் எனது மாணவர்களை பார்த்து இவர்கள் உங்கள் சீடர்களா என கேட்பதுண்டு. எனக்கு சீடர்கள் என யாரும் இல்லை. மாணவர்கள் தான் அனேகம் பேர். இது என்ன புதுக்குழப்பம் என்கிறவர்களுக்கு ஒரு விளக்கம்.

சீடர்கள் என்பவர்கள் குருவை பின்பற்றுபவர்கள். மாணவர்கள் ஆசிரியரை பின்பற்றுபவர்கள். இன்னும நான் யாருக்கும் வெளிப்படையாக குருவாகவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. எனது மாணவர்கள் மத்தியில் சில பெண்களும் இருக்கிறார்கள். அதில் நீண்டகாலம் என்னுடன் இருக்கும் மாணவி தனது கேசத்தை ஆண்கள் போல வைத்திருப்பார். மாணவர்களின் சீருடையில் திடிரென பார்த்தால் அவரை வித்தியாசம் காண முடியாது. எலக்ட்ரானிக் உபரகணத்தை பயன்படுத்துவது என்றால் அவருக்கு அலர்ஜி. அதன் பொத்தான்களை இயக்குவதை கண்டால் ஆயாசம் ஆகிவிடுவார்.

சமீபத்திய விழாவில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார். உண்மையை சொன்னால் நேரத்தை தின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகில் எனது மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது எனது மாணவியை காட்டி, இவர் உங்கள் சீடரா என கேட்டார். நான் இல்லை இல்லை இவர் எனது சீடி. கம்ப்யூட்டரில் மட்டும் இவர் வேலைசெய்யமாட்டார் என்றேன்.

ஒன்னும் புரியாத நிலையில், இந்த கூட்டம் விளங்கினாப்புலதான் என அந்த பெரியவர் நடையைக்கட்டினார்.
----------------------------------------------------------------------------------

பாராட்டு பலவிதம்

என்னை சந்திக்கும் சிலர் எனது கட்டுரைகளை புத்தகமாகவோ, மாத இதழ்களிலோ படித்துவிட்டு சொல்லுவார்கள். ஸ்வாமி நீங்க எழுதின அந்த வரி “நச்சுனு இருந்துச்சு” என்பார்கள். இதை எப்படி எடுத்துகொள்வது என்றே எனக்கு தெரியாது. தூய தமிழிலா அல்லது பேச்சுவழக்கிலா என்று.

எனது வலைதள பதிவை படித்துவிட்டு ஒருவர் விடாமல் மின்னஞ்சல் அனுப்புவார்.ஏனோ தெரியவில்லை அவர் பின்னூட்டம் இடுவதில்லை. ஒவ்வொரு முறையும் நிறை குறைகளை சுட்டிகாட்டிவிட்டு, கடைசியில் ”என்னமா எழுதறீங்க” என்பார்.

அவர் எத்தனை திட்டினாலும் அவரின் கடைசி வரி படித்ததும் எனக்கு புல்லரிக்கும்.

ஒரு முறை அவர் தொலைபேசியில் பேசும் பொழுது தான் விஷயம் தெரிந்தது.
நீங்கள் “NHM”-லயா எழுதரீங்க என கேட்பதை என்பதை அவர் அப்படி டைப்பி இருக்கிறார், NHM என்பது தமிழ் எழுத பயன்படும் மென்பொருள்.

உரையாடியில் வரும் கோவியார் கூட கேட்பார், வேடிகையில் ஒன்றும் எழுதவில்லையா என்று.
அப்புறம் தான் தெரிந்தது அது Vedic eye என்று. என்ன ஒரு வேடிக்கை ?
--------------------------------------------------------------------------------------------

எதோ நவீனகவிதையாம் நானும் இன்னைக்கு ட்ரை பண்ணலாம்னு முடிவு பண்ணீட்டேன்.

(உங்க கிரக நிலை அப்படி)

பிரபஞ்சம் எங்கே ?

மண்ணை உண்ட கண்ணன் வாயில் பிரபஞ்சம்
பிரபஞ்சம் காட்டிய கண்ணன் முன்பு தேவகி வயிற்றில்

தேவகிவயிற்றில் இருக்கும் கண்ணன் வாயில்

தேவகியும் இருந்தாளா?

கண்ணன் வாயில் உள்ள பிரபஞ்சத்தில்
தேவகியும் இருந்தாளா?


பிரபஞ்சம் வெளியிலா கண்ணானுக்கு உள்ளேயா?
தேவகி வெளியிலா இல்லை கண்ணனுக்கு உள்ளேயா?

ஆதலால் சொல்லுகிறேன்
தேவகிக்கு கண்ணன் பிறக்கவில்லை.
தோன்றினான்.

Wednesday, April 29, 2009

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்
- ஆயுள் தரும் வேதம்.

மனித குலம் தோன்றியதிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஒரு விஷயம் நோய்தடுப்பு. உடல் ஆரோக்கியம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். புதிய வியாதிகளுக்கு மருந்து கண்டறிந்ததும் , மேலும் பல புதிய வியாதிகள் தோன்றி சவாலாக இருப்பதையும், கண்கூடாக காண்கிறோம். மனிதன் ஆயுளை வளர்க்கும் எண்ணத்தில் களைப்படையாமல் தொடர்ந்து போராடி வருகிறான் என்பது உண்மை.

நவீன மருத்துவத்துறை தற்சமயத்தில் அறிவியல் சார்ந்து பல வளர்ச்சியை கண்டிருக்கிறது. மேலும் பல புதிய ஆராய்சிகள் நடை பெற்றுவருகிறது. நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளை காட்டிலும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அதிகம் எனலாம். மருத்துவதுறையின் சேவைகள் முடிவற்றது, வளர்ச்சி அடையக்கூடிய ஓர் துறை. மனிதனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மருத்துவத்தால் குணமாக்கும் மருத்துவர் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறார். மனித உடம்பை இயந்திரமாக பாவித்து வாகனத்தை பழுது பார்ப்பதைப் போல உதிரிபாகங்களை பழுது பார்க்கும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், எனினும் நல்லவர் ஒருவர் இருந்தாலும் உலகில் மழை பொழியும் எனும் சான்றோர் வாக்கினைப்போல பல மனித நேய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


நமது பாரத கலாச்சாரம் அனைத்து துறையிலும் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நிலையை அடைந்த பொற்காலம் உண்டு. இந்திய தேசத்தை காண வந்த வெளிநாட்டினர்களின் பயணக்குறிப்பை கண்டால் இந்தியாவின் உயர்வை உணர முடியும். 750 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பயணித்த பயணியின் குறிப்பேட்டில் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயம் இருந்தது. இந்தியாவில் சிலருக்கு நெற்றிப்பகுதியில் முக்கோணமாக தழும்பு இருப்பதைக் கண்டார்கள். அந்த காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மூக்கு பகுதியை துண்டிக்கச் செய்தார்கள். இதனால் மருத்துவர் புருவ மத்தியிலிருந்து தலைகீழாக முக்கோண வடிவில் தோலை எடுத்து மூக்கு பகுதியை உருவாகினார்கள்.

வெளிநாட்டினரின் பயணகுறிப்பில் எழுதப்பட்ட இந்த தகவல் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வித்தாக அமைந்தது. நமது வேதங்களின் பிற சேர்க்கையாக இருப்பது உப வேதங்கள் என்கிறோம். இதில் தர்ம சாஸ்திரம், தனுர் வேதம் [போர்கலை ] மற்றும் ஆயுர்வேதம் என பல உப பகுதிகள் உண்டு.


ஆயுர்வேதம் எனும் இந்த மருத்துவ பிரிவு, 100 பிரிவுகளையும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் கொண்டது. ஆயுளை கூட்டும் வேத மந்திரம் என்பதால் இதை ஆயுர்வேதம் என்கிறோம். சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.


இவர் பயன்படுத்திய கருவிகளை கண்டு தற்கால அறுவைசிகிச்சை மருத்துவர்கள் வியப்படைந்தார்கள், இவர் வழியில் வந்த மாணவர்கள் தான் வெளிநாட்டினர் கண்ட மூக்கு அறுவை சிகிச்சையை செய்தவர்கள். மேற்கண்ட ரிஷியிகளின் குறிப்பிலிருந்து நவீன மருத்துவர்கள் பல விஷயங்களை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். மருந்து தயாரித்தல், அறுவை சிகிச்சை வியாதியை ஆராய்தல் என ஆயுர்வேதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.


மனித உடல் மூன்று அம்சங்கள் கொண்டது என ஆயுர்வேதம் வரையறுக்கிறது. 'தோஷ தாது மல மூலம் ஹி சரீரம் ' என்பது ஆயுர்வேத கூற்று. மூன்று தோஷம், எழு தாதுக்கள், மும்மலங்கள் உடலை உருப்பெற செய்கிறது என்பதே இதன் விளக்கம்.


வாதம் - பித்தம் - கபம் என்பது மூன்று தோஷங்கள். இவை சம நிலை தவறும் பொழுது உடல் நோய் ஏற்படும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.


ரசா, இரத்தம், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்லம், சதை [மாமிசம்] என்பவை சப்த தாதுக்கள் எனவும், வியர்வை, மலம், சிறுநீர் என்பவை மும்மலம் எனவும் பிரிக்கப்படுகிறது. மூன்று தோஷத்தின் பாதிப்பு சப்த தாதுக்களிலும் ' மும்மலத்திலும் எதிரொலிக்கும் என்பது ஆயுர்வேத விளக்கம்.


இந்த தெய்வீக மருத்துவ முறை உப வேதத்தில் இருப்பதற்கு காரணம், மனித உடல் நோயினால் பாதிப்பு அடைவதற்கு கர்ம வினை காரணம் என உறுதியாக கூறுகிறது. வேதத்தின் சாரம் என அழைக்கப்படும் வேதாந்தங்களின் உண்மை இதில் பளிச்சிடுவதை நாம் உணர வேண்டும்.


சாத்வ, தமோ, ரஜோ குணங்கள் கொண்டு ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்கள் பிரிக்கப்படுகிறது. சாத்வ குணம் கொண்டது பித்தம், தமோ குணம் கொண்டது கபம், ரஜோ குணம் கொண்டது வாதம் என கூறலாம். இவை சம நிலையில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமும்,

சமநிலை தவறி எந்த தோசம் ஆளுமை செலுத்துகிறதோ அதன் அடிப்படையில் உடல் செயல் அமையும். உதாரணமாக கபம் அதிகரித்தவர்கள் தமோ குணத்திற்கு ஏற்ப மந்த தன்மையையும் செயலில் பின்னடைவும் ஏற்படுவதை உணரலாம்.

உடலின் விஞ்ஞானம் மட்டுமல்லாமல், சூழ்நிலையின் விஞ்ஞான உண்மைகளையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும், என்ன பொருளை உணவாக உட்கொண்டால் பருவ காலங்களில் உடல் ஆரோக்கியம் பெறலாம் என ஆயுர்வேதம் நீண்ட பட்டியலை தருகிறது.


வேதத்தின் அங்கம் ' வேதாங்கம்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேத பிரிவுகளும் [அங்கங்களும்] பிற அங்கங்களுடன் தொடர்புடையது. ஆயுர்வேதம் எனும் இந்த தெய்வீக மருத்துவ முறை, ஜோதிடம் எனும் மற்றொரு வேத அங்கத்துடன் இணைந்து சக்தி மிக்கதாக செயல்பட்டு வந்தது. தற்சமயத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஜோதிட அறிவுடன் செயல்படுவது குறைவே. கர்ம வினையை கருவாக கொண்ட இரு பரிமாணங்கள் தான் ஜோதிடமும், ஆயுர்வேதமும். ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவரின் நோய் தன்மையை ஆராய்ந்து மருத்துவம் செய்வதில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் ஒருவருக்கு குணமாகாது என ஜோதிடத்தில் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைபாடுடன் வந்தால், முதலில் அவர்களின் ஜாதகத்தை கொண்டு குழந்தை பாக்கியம் உண்டா என ஆராய்ந்த பின் மருந்து கொடுக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் செயல்முறை.


இந்த முறையில் செயல்படாத பட்சத்தில் மருத்துவருக்கும், ஆயுர்வேதத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதே இதற்கு பின்னால் உள்ள உண்மை.


ஜோதிடம், வேத கால மருத்துவ முறையில் சோதனை களமாக இருந்தது. தற்கால இரத்த பரிசோதனை, எக்ஸ் - ரே என்பதற்கு பதிலாக செலவில்லாத சோதனை களமாக பயன்பட்டது.

மும்மலங்கள், தோசங்கள் மற்றும் தாதுக்கள் இவை நவகிரகங்களின் தொடர்புடன் இயங்குகிறது. இதன் பட்டியல் பின்வருமாறு:


மூன்று தோசங்கள் மூலம் பிரிக்கப்படும் 27 நட்சத்திரங்கள்.


வாதம் : அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
பித்தம் : பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
கபம் : கிருத்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.

சப்த தாதுக்கள் குறிக்கும் கிரகங்கள்

ரசம் [உணவிலிருந்து ஜீரணிக்கப்பட்ட சத்து] : சூரியன்
இரத்தம் : செவ்வாய்
மாமிசம் [சதை] : குரு
கொழுப்பு : சந்திரன்
எலும்பு : சனி
எலும்பு மஜ்ஜை : சனி / புதன்
சுக்லம் : சுக்கிரன்

மும்மலங்கள் குறிக்கும் கிரகங்கள்

வியர்வை : சனி
சிறுநீர் : சந்திரன்
மலம் : செவ்வாய்

நோய் கொடுக்கும் 6 ஆம் பாவம் மேற்கண்ட நட்சத்திரங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது உடலில் நோய் உண்டாகிறது. இதை வைத்து நீங்களும் எளிதாக நோயை ஆராயலாம்.

ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் இணைத்து மருத்துவம் செய்பவர்கள் மிகவும் குறைவு. தற்காலத்தில் சிலர் ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் சாஸ்திரத்திற்கு புறம்பாகவே செயல்படுகிறார்கள். ஆயுர்வேதத்தை பொறுத்த வரை மருந்து தயாரிக்கும் கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்தும் சாதகமாக இருந்தால் தான் மருந்து தயாரிக்க வேண்டும். நோயாளியின் ஜென்ம நட்சத்திரத்திற்கு வேதை நட்சத்திரத்திலோ, வேதை திதியிலோ மருந்து உட்கொள்ள துவங்கக் கூடாதுஎன ஆயுர்வேதம் விளக்குகிறது.

ஆனால் தற்சமயம் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் போன்று மருந்தை தயாரித்து சேமித்து வைக்கிறார்கள். மேலும் நோயளியின் நட்சத்திரத்தை பார்த்து மருந்து உட்கொள்ள சொல்லுவதில்லை. இதனால் ஆயுர்வேத மருத்துவத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவருகிறது. ப்ரணவ பீடம் சார்பில் ஜோதிடமும், ஆயுர்வேதம் இணைந்த பயிற்சியும் கொடுக்கும் எண்ணம் உள்ளது. பரப்பிரம்மத்தின் கருணையால் அது நடைபெறும் என நம்புவோமாக.


மார்ச் 2007

Saturday, April 25, 2009

காரைக்குடி போகலாமா?

எனது சத்சங்கம் காரைக்குடியில் அக்‌ஷய திரிதியை அன்று நடைபெறுகிறது.

அன்று அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன்,

பரமாத்மா எங்கே இருக்கிறார் ?

எனும் தலைப்பில் எனது ஆன்மீக உரை நிகழ இருக்கிறது.

இடம் : நகரத்தார் செளந்தரராஜ பெருமாள் கோவில் - பள்ளத்தூர்

நாள் : 27 ஏப்ரல் 2009 மாலை 6:30 மணி.


ஓர் நற்செய்தி : வரும் புதன் கிழமை வரை பதிவுகள் இருக்காது.

Friday, April 24, 2009

சுப்பாண்டியும் விமான பயணமும்

எனது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுப்பாண்டி. அவரை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் இவ்வளவு நாள் என்னுடன் இருக்கிறார், நானே அவரை புரிந்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அவரை முட்டாள் என நினைத்து கேள்வியை கேட்டால் புத்திசாலித்தனமான பதில் கூறுவார். சரி அறிவாளி என நினைத்து கேள்வியை கேட்டால் முட்டாள் தனமாக பதில்வரும். தன்னையும் குழப்பி பிறரையும் குழப்புவதில் மாபெரும் வித்தகர் சுப்பாண்டி. என்னுடன் இருந்து எனக்கு உதவிகள் செய்வதில் அவருக்கு பிரியம். அதனால் என்னுடன் எப்பொழுதும் ஒட்டிகொண்டே இருப்பார்.

அவருடன் சென்ற வாரம் டில்லிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். சுப்பாண்டிக்கு இது முதல் விமான பயணம். நாங்கள் விமானத்தில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டுக்காக பாய்ந்தார் சுப்பு. ஆனால் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதால் ஒருவர் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தார். நான் நடுவிலும், நடக்கும் பாதைக்கு அருகில் சுப்பாண்டியும் உட்கார நேர்ந்தது.

எனக்கு அருகில் இருந்தவர் அரசியல் புள்ளியை போல தோற்றத்தில் இருந்தார்.. ஆம் நான் நினைத்தது சரிதான் கையில் கட்சியின் மோதிரம் பெரியாதாக அணிந்திருந்தார்.

வந்து அமர்ந்ததும் சுப்பாண்டி அலைபேசியை எடுத்து தனது வீட்டில் இருப்பவர்களுக்கு விமானத்தின் உள் பகுதியை நேரடி வர்ணனை செய்ய துவங்கினார். நான் அவரை சமாதனப்படுத்தி பிறகு பேசு என சொல்லிவிட்டு, கேட்டேன் “ விமானம் மேலே பறக்கும் பொழுது மொபைல் போனில் பேச முடியாது ஏன் தெரியுமா?”. உடனே சுப்பாண்டி, “ எப்படி ஸ்வாமி பேச முடியும்? அங்கே தான் டவர் இருக்காதே..!” என்றான்.

இதை கவனித்துக்கொண்டிருந்த அரசியல்வாதி, “ அப்போ எப்படிங்க பைலட்க்கு சிக்னல் கிடைக்கும்? ” என்றார். நான் சொல்ல முற்படும் முன் சுப்பாண்டி “ டவர்தான் இருக்காது சாட்டிலைட் இருக்கும் சார். நாம சாட்டிலைட் போன் வச்சிருந்தா நாமும் பேசலாம்”. எனக்கே ஆச்சரியம் இவனுக்குள்ள இப்படி ஒரு அறிவானு.. அதை அரசியல்வாதியின் பார்வையும் உறுதி செஞ்சுது.

சில நிமிடம் கரைஞ்சுது...அந்த அரசியல்வாதிகிட்ட, “ சார்...... ஏன் சார் நீங்க ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கீங்க, காத்தாட பயண செய்யறதுக்கா?” என்றான் சுப்பாண்டி. இவ்வளவு அறிவானு பார்த்த அதே அரசியல்வாதி இவனையெல்லாம் கூட வைச்சுருகியேனு என்னை பார்த்தார்.

பிறகு என்னை பார்த்து கேட்டார். ஒரு ஆசிரம பெயரை குறிப்பிட்டு “சாமி ..............-ல இருந்து வரீங்களா?” என்றார்.

“இல்லை நாங்கள் வேறு ஒரு அமைப்பை சேர்ந்தவங்க.”

“ நீங்க என்ன சாமி செய்யறீங்க?” என்றார். இவ்வாறு கேட்பவர்களுக்கு விளக்கி மார்கெட்டிங் செய்வதில் எனக்கு விருப்பம்
இல்லை. எனவே அவரிடம், “ஆன்மீக வாழ்க்கையில் இருக்கோம்” என சொல்லி அமைதியாக முயற்சித்தேன்.

“ஆன்மீகம்னா என்ன சாமி” என திடீரென கேட்க, சுப்பாண்டி குறுக்கே பாய்ந்து "அரசியல்ன என்ன? அப்படீனா சொல்ல முடியுமா சார் அதுமாதிரி தான் இது” என்றான். கண்களால் அவனை அடக்கிவிட்டு, “எல்லா இடத்திலும் இறைவனை காண்பது ஆன்மீகம்” என ஓரளவு எளிமையாக கூறினேன்.

“புரியலையே சாமி. எல்லா இடத்திலும்-னா?” என்றார். அதே நேரத்தில் விமான பணிப்பெண் விமான பாதுகாப்பு பற்றிய செய்திகளை கூற தயாரானார்.

நான் தொடர்ந்தேன், “அங்க பாருங்க அந்த பொண்ணு சொல்லும் விஷயத்தை, விமானத்தில் எப்படி விபத்து , பாதுகாப்பு பத்தி சொல்லுது. இதே ஆன்மீகவாதி இதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பான். அந்த பொண்ணுக்கு பதிலா அங்கே கடவுளை வைச்சு பார்க்கனும். அவங்க சொல்லுறதுக்கு நான் வாய்ஸ் கொடுக்கறேன் பாருங்க”.

அரசியல்வாதியும், சுப்பாண்டியும் கவனிக்க துவங்கினார்கள்.

[விமான பணிப்பெண் சொன்னதும் - நான் சொன்னதும் கீழே]


“லேடிஸ் அண்டு ஜெண்டில்மேன்”

“எனது பிரிய ஆன்மாக்களே...”

“ இந்த பெல்ட்டை இவ்வாறு அணிய வேண்டும். இந்த பகுதியை மேலே எடுத்தால் திறந்துவிடும்”

“ஆன்மாக்கள் ஆகிய உங்களை பிறப்புடன் இணைப்பதும், பிறப்பற்ற நிலைக்கு மேம்படுத்துவதும் நான் தான்”

“விமானத்தில் சூழ்நிலைகாரணமாக ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் மேலே இந்த பட்டனை அழுதினால் ஒரு முகமூடி வரும் அதை அணிந்து சுவாசம் செய்யலாம்”

“உங்கள் உடலின் சுவாசமாகவும், ப்ராணனாகவும் நானே இருக்கிறேன். அதன் இணைப்பு மேலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது”

“விபத்து காலத்தில் விமானம் நீரில் விழுந்தால் , உங்கள் சீட்டின் அடியுல் உள்ள இந்த கவசத்தை அணிந்து காற்றை அதில் நிறைத்தால் நீரில் மிதக்கலாம்”

“உங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னை உணர்ந்து, என்னை கவசமாக அணிந்தால், ஸ்ம்சாரம் எனும் சாகரத்தில் விழுத்தாலும் மூழ்காமல் மிதக்கலாம்”

“விமானத்தின் வாசல் நான்கு புறமும் உண்டு. கீழே இருக்கும் ஒளிப்பட்டை அதற்கான வழியை உங்களுக்கு காட்டும்”

“நான்கு திசையிலும், ஒவ்வொரு அடியிலும் உன்னுடன் நான் இருந்து காப்பேன்”

”நன்றி”

“எனது ஆசிகள்”

ஆச்சரியமாக பார்த்தார் அரசியல்வாதி. “சாமி விமானத்துல வர அம்மணிகளை நான் வேறமாதிரி பார்ப்பேன். உங்க நால நான் இன்னிக்கு வித்தியாசமா பார்க்க கத்துகிட்டேன். நானும் ஆன்மீகமா இருக்க முயற்சி செய்யறேன் சாமி”.

இதற்கு மேல் பேசினால் பகவத்கீதையோ புராணமோ பேசி கழுத்தறுப்பான் என நினைத்தாரோ என்னவோ அவர் கண்களை மூடி தூங்கிவிட்டார். விமானம் பறக்க ஆரம்பித்ததும் நானும் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு...

“எக்ஸ்க்யூஸ்மீ சார்” என்ற வார்த்தையை கேட்டு கண்திறந்தால் விமான பணிப்பெண் என் முன்னால் நிற்கிறார். என்ன என்பது போல நான் பார்க்க, “வெஜ் சாண்ட்விச் 80 ரூபாய் கொடுங்கள்” என்றார்.

நான் வாங்கவில்லையே என்றவாரே திரும்ப, சுப்பாண்டி வெஜ்சாண்ட்விச்-ஐ ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விமான பணிப்பெண்ணுக்கு காசை கொடுத்துவிட்டு, சுப்பாண்டியிடம் கேட்டேன், “இங்க விலை ஜாஸ்தி இருக்கும்னு தெரியாதா? அதை ஏன் தம்பி வாங்கினே?” என்றேன்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,
“கடவுளே சாண்டுவிச் கொடுக்கும்போது வேண்டாம்னு எப்படி ஸ்வாமி சொல்லறது?”

டிஸ்கி : எனக்கும் சுப்பாண்டிக்கும் இது போல ஏகப்பட்ட விஷயம் நடந்திருக்கு, சுப்பாண்டியை பத்தி நிறைய எழுதவா? பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Tuesday, April 21, 2009

அக்‌ஷய திரிதியையும் அலுமினிய பாத்திரமும்

நமது பண்டிகை கொண்டாட்டங்களில் அனைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் தன்மையை சார்ந்த திதிகள் எனும் அமைப்பில் இருக்கிறது. அமாவாசை, பெளர்ணமி போக பிற திதிகளும் நாம் விரத நாட்களாகவோ, வழிபாட்டு தினமாகவோ கடைபிடிக்கிறோம். உதாரணமாக சஷ்டி, சதுர்த்தி மற்றும் ஏகாதசி ஆகியவை திதிகளில் அதிகம் கொண்டாடப்படுகிறது. விரத தினங்கள் என்றும் சொல்லலாம். திரியோதசி திதி 13ஆம் திதியாக வருகிறது. அன்று ப்ரதோஷம் கொண்டாடப்படுகிறது.

சூரியன் நமது ஆன்மாவையும், சந்திரன் மனதையும் குறிக்கும். திதிகள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வால் ஏற்படுவதால் குறிப்பிட்ட திதிகளில் அன்று நமது ஆன்மாவும், மனமும் எளிதாக ஒருமுகப்படுகிறது.

வருடம் முழுவதும் சதுர்த்தி, ஷஷ்டி,திரேயோதசி திதிகள் கொண்டாடப்பட்டாலும் “திரிதியை” திதி மட்டும் கொண்டாடப்படுவதில்லை. திதிகளில் மூன்றாம் திதியான திரிதியை ஆன்மீக ரீதியான சிறப்பை பெறுவது சித்திரை மாதம் மட்டும் தான். காரணம் சூரியன் மேஷ ராசியிலும் சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் இந்த நிலை வேறு காலத்தில் ஏற்படாது.

சுக்ல பக்‌ஷம் எனும் வளர்பிறை காலகட்டத்தில் மட்டுமே சித்திரை மாதம் திரிதியை
இவ்வகையில் அமையும். தேய்பிறை காலத்தில் முதல் இரு ராசிகளில் சூரிய சந்திரர்கள் அமையமாட்டார்கள்.

இதனால் என்ன சிறப்பு?

சூரியன் தனது சுய ராசியான சிம்மத்திலிருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில் அமர்வார். சந்திரன் தனது சுயராசியான கடகத்திலிருந்து 11ஆம் இடத்தில் அமைவார். 9 மற்றும் 11 ஆம் இடங்கள் தர்ம, லாப ஸ்தானங்கள் என ஜோதிடத்தில் சிறப்பாக கூறப்படும் இடம்.

தர்ம, லாப ஸ்தானங்களில் நமது ஆன்மாவான சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் சேருவதால் அன்று செய்யும் தர்ம காரியங்கள் மேன்மை பெரும்.

சூரியன் மற்றும் சந்திர கிரகங்கள் குறிக்கும் தானியமான கோதுமை அல்லது அரிசியை தானம் செய்யும் பொழுது நமது கர்மவினையில் மேம்பாடு எற்பட்டு தீயவினைகள் குறையும் என்பது நம்பிக்கை. தீவினை குறைகிறதோ இல்லையோ பிறர் வாழ்க்கைக்கு சிறிது உதவுவதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.

நிற்க.


ஆனால் தற்சமயம் அக்‌ஷய திரிதியை வியாபார ரீதியாக பயன்படுவது மிகவும் வருத்தப்பட செய்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மக்களை தங்க நகை வாங்கச் செய்ய சில வியாபாரிகள் செய்யும் யுக்தி அருவருக்க தக்கதாக இருக்கிறது.

நமது சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்கம் வெள்ளி நீங்கலாக வேறு உலோகங்களை உடலில் அணியக்கூடாது. மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. உடலின் சக்தி நிலையை மேம்படுத்த உடலில் ஆபரணத்தை பயன்படுத்திய கலாச்சாரம் இது. வேதியியல் மூலக்கூறு அட்டவணையில் உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி முதல் இடத்தை பிடிப்பதை கொண்டு இதன் முக்கியத்துவம் அறியலாம். ஆனால் பிளாட்டினம், டைடானியம் என பல உலோகங்கள் உடலின் சக்தி நிலையை தடுமாறச்செய்யும்.

வியாபாரிகள் வியாபாரத்திற்காக செய்கிறார்கள் அது அவர்கள் தர்மம். மக்கள் அவர்கள் பின்னால் செல்கிறார்கள் அது அவர்களின் ஆசை. அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்கு துணைபோகிறார்கள் என்பது தெரியவில்லை. சாஸ்திரத்தை சந்தைக்கடையில் விற்கும் இவர்களின் தன்மை காசுக்காக எதையும் விற்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு ஜோதிடர் நான்கு வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்க விளம்பர மாடலாக பயன்பட்டார். தற்சமயம் சுக்ல பக்‌ஷம் திரிதியை என்பதால் வெள்ளை பொருட்களை வாங்க வேண்டும் என விளம்பரம் செய்கிறார். வியாபாரிகளின் தூண்டுதலால் சாஸ்திரத்தை விற்றுவிட்டார் என தெரிகிறது.

வெள்ளை உலோகம் வாங்க வேண்டும் என்றால் வெள்ளி வாங்க சொல்லலாம். பிளாட்டினம் வாங்குங்கள் என குறிப்பிட்டு சொல்லும் தன்மை அவரின் சாஸ்திர அறிவை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

இவர்கள் மத்தியில் இருந்து ஜோதிடம் சாஸ்திரம் என பேசவே கூசுகிறது. காரணம் இவர்களை வைத்துதான் மக்கள் ஜோதிடர்களை அளக்கிறார்கள். இவர்கள் தான் ஜோதிடர்கள் என கூறி ஜோதிடம் உண்மையா எனும் கருத்தாய்வில் தொலைக்காட்சியில் அழைக்கிறார்கள்.

"ஸ்வாமி ஜாதகம் பார்த்த பின் பரிகாரமே சொல்லவில்லையே.. நீங்கள் சொன்ன பலன் பலிக்குமா? " என மக்கள் கேட்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இவர்களை போல வேஷம் போட்டல் மட்டுமே நல்ல ஜோதிடர்கள் என மக்கள் நம்புவார்கள் போல.

ஆதலால் சொல்கிறேன்...

அக்‌ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.

அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்

அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.

-விளம்பர உதவி கமலா பாத்திர கடை.

Monday, April 20, 2009

பழைய பஞ்சாங்கம் 20-ஏப்ரல்-2009

பயப்படுத்தும் பரிசல்காரன்

சென்ற வாரம் ஜோதிட உற்சவம் நிகழ்ச்சி அருமையாக நடந்தது என அறிவீர்கள். அதன் ஒரு நிகழ்ச்சியாக ஜோதிடம் மூடநம்பிக்கையா ? விஞ்ஞானமா? எனும் தலைப்பில் கருத்தாய்வு நடந்தது.

மூடநம்பிக்கை என்ற தலைப்பில் பரிசல்காரன் மற்றும் சஞ்சய் இருவரும் பேசினார்கள். விஞ்ஞானமே என எனது மாணவர்கள் பேசினார்கள். காரசாரமான விவாதம் என்று சொல்ல எனக்கு மனது வரவில்லை :) நீங்கள் இரு பகுதிக்கு நடுவில் இருந்தால் தெரியும் அந்த கஷ்டம் :)

விவாதத்தினிடையே எனது மாணவர்கள் சிலர் தொடர்ந்து குறிக்கிட்டவண்ணமே இருந்தார்கள். பரிசலால் தொடர்ந்து பேச முடியவில்லை...

எனக்கோ உள்ளூர பயம். ஏன் தெரியுமா?

பதிவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள அந்த வாசகத்தை பரிசலோ, சஞ்சயோ சொல்லிவிடுவார்களோ என ஒரு பயம்.


அது என்ன வாசகம் என தெரியாதா ? (கிழே பாருங்கள்)“சைலண்ஸ்... பேசிக்கிடிருக்கேன்ல..”

------------------------------------------------------
ஆரஞ்சு கலர்

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் காவி உடை அணிவது எனது வழக்கம். ஏன் இந்த உடை என ஒரு முழ பதிவை பின்னர் இடுகிறேன். இப்பொழுது விஷயம் அதுவல்ல.

எனது நண்பர்களும், மாணவர்களும் எனக்கு ஏதாவது பரிசு பொருள் கொடுத்தாலும் காவி நிறத்தில் இருக்குமாறு பார்த்துகொள்ளுவார்கள். ஏன் என தெரியவில்லை அவர்களே அதை முடிவு செய்துவிடுவார்கள். காவி நிறம் என்பது வேறு நாளடைவில் அவர்களுக்கு காவி நிறம் கிடைக்காத தால், முடிவில் ஆரஞ்சு நிறத்தை காவியாக முடிவு செய்தார்கள். ஆரஞ்சு நிற பொருட்கள் எண்ணிடம் சேர ஆரம்பித்தது. கடைசியில் சிலர் கொடுத்த உடைகளும் ஆரஞ்சு வண்ணத்தில் வர ஆரம்பிக்க ஆரஞ்சு எனது நிறமானது.

எனது மாணவர் ஒருவர் என்னிடம் வந்து “ஏன் ஸ்வாமி நீங்க ஆரஞ்சு கலர்ல டிரஸ் போடறீங்க” என்றார் வெகுளியாக, நானோ (கார் அல்ல :) ) ஆரஞ்சு கடுப்பில் இருந்தேன். அவரை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சொன்னேன்...

“நீங்க அஞ்சாறு கலர்ல டிரஸ் போடும்போது நான் ஆரஞ்சு கலர்ல டிரஸ் போடக்கூடாதா?”
------------------------------------------------------


ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயம் :)

மே மாதம் முதல் வாரத்தில் நான் சென்னை வருகிறேன். சென்னையை சேர்ந்த பதிவர்களை சந்திக்க விருப்பம். எப்படி சந்திப்பது என எனக்கு சில யோசனைகள் சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.

மே 3ஆம் தேதி ஞாயிறு அன்று சந்திக்கலாம், விடுமுறை நாள் என்பதால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

சென்னையில் பொதுஇடம் ஏதாவது ஒன்றில் சாதாரண சந்திப்பாக இருந்தால் நல்லது. என்னை கேட்காமல் காமராஜர் அரங்கத்தை புக் செய்ய வேண்டாம் :)

எங்கே சந்திக்கலாம் எப்பொழுது சந்திக்கலாம் என்பதை எனது தனிமடலில் கூறுங்கள்.

அலைகடலன உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

------------------------------------------------------
கவிதை இல்லாமல் முடிக்க கூடாது என சம்பிரதாயம். :)


என்னை வணங்கும் ஊர்

கைவண்டி இழுப்பவர்
ஸ்கூட்டரில் செல்பவர்
பஸ்டிரைவரும் கண்டக்டரும்
அலுவலகம் போகும் பெண்மணியும்
பைக்கில் போகும் இளைஞனும்
நடந்து செல்லும் முதியவரும்

என்னை பார்த்து பயபக்தியுடன்
வணங்கினார்கள். கைதொழுதார்கள்.

நான் ஞானம் அடைந்துவிட்டேனா?
என் தலையில் ஒளி வட்டம் தெரிகிறதா?
எனக்கு ஏன் இந்த மாற்றம்?
பூரிப்படைந்து பின்னால் பார்த்தேன்.

முச்சந்தி வினாயகர் கோவில்.

------------------------------------------------------------------
சூடுவைக்காத மீட்டர்

இந்த வலைப்பதிவில் பின் தொடர்பவர்கள் 102 பேர் என காட்டுகிறது மீட்டர். எழுத துவங்கிய குறுகிய காலகட்டத்தில் இப்படி அமைந்தது கண்டு மகிழ்ச்சி.

பின் தொடர்பவர்களுக்கு சர்வ மங்களம் கிடைக்கட்டும்.
பின் தொடாராதவர்கள் சர்வ மங்களம் கிடைக்க முயற்சி செய்யட்டும் :)

Friday, April 17, 2009

உலகின் ”யோக”மான வியாபாரம்

தொழில் செய்ய தனம் தேவை. உலகில் தொழில் செய்ய இருவகையான தனம் தேவை. சிலருக்கு தொழில் செய்ய மூலதனம் தேவை, சிலருக்கு மூளைத்தனம் தேவை. இந்த இரு நிலைகள் தாண்டி பிறரை ஏமாற்றும் நிலை எனும் நயவஞ்சகத்தனம் என்பதும் உண்டு. நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.

ஏதோ தொழில் புரட்சி பற்றி சொல்ல போகிறேன் என நினைக்கவேண்டாம். பொருளாதரம் எனும் தலைப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியேல்லம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.

யோகா (yoga) எனும் வார்த்தை தற்சமயம் மிகவும் குழப்பமாகவே பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் இந்த வார்த்தையை தேடிப்பாருங்கள். 90,900,000 எண்ணிக்கையில் தளங்களை காட்டுகிறது.“யோகா செய்யப் போகிறேன்”, “யோக பயிற்சி கற்றுத் தருகிறார்கள்” என நாம் கூறும் ”யோகா” எனும் வாசகம் கூறும் பொருளும் , நாம் மனதில் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என அர்த்தம். யோக சாஸ்திரம் மதம், கலாச்சாரம் கடந்த ஒரு மெய்ஞானம். ஒன்றிணைதல் என்றால் இரு விஷயங்கள் ஒன்று சேருதல் என கொண்டால் பரமாத்மாவுடன், ஜீவாத்மாவா என ஆத்திகர் நினைக்கலாம். மனமும் உடலும் என நாத்திகர் நினைக்கலாம். யோக சாஸ்திரம் முழுவதும் கடவுள் என்ற கோட்பாடு இல்லை. நீ, உனது, உன் உள்நிலை என மூன்று தன்மையை பற்றியே யோகசாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் யோக நூல் கடவுள் கொள்கையை கொண்டிருந்தாலும், இன்ன கடவுள் இன்ன உருவ நிலை என சொல்லாமல். இறைவன் எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறது.

யாமம்,நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. என யோக சாஸ்திரத்தில் எட்டு நிலைகள் இருக்கிறது. இதில் எட்டாவது நிலையை நீ அடைந்தால் இறைவனை காணலாம் என்றே பதஞ்சலி கூறுகிறார்.

உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது. சில யோக பயிற்சி பள்ளிகள் வெறும் ப்ராணாயமத்தையோ, ஆசனத்தையோ சொல்லி கொடுத்துவிட்டு அதை யோகா என பிரச்சாரம் செய்கிறார்கள்.

யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.

பாரத தேசத்தில் யோகாவின் பரிதாப நிலை :

நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)ஒரு சினிமா நடிகையையோ அல்லது நடிகரையோ ”திடீர்” யோக பயிற்சி ஆசிரியர் ஆக்கி அவர்களை கொண்டு பிறருக்கு யோகம் போதிக்கிறார்கள். யோக பயிற்சி ஆசிரியர் ஆவது என்பது சாதாரண காரியம் அல்ல. பள்ளி ஆசிரியர் என்றால் அவர் மாணவனின் அறிவு எனும் தளத்தில் செயல்படுபவர். இவர் இல்லை என்றால் இன்னொருவரிடம் அறிவு பெறலாம். யோக ஆசிரியர் என்பவர் மாணவனின் ஆன்மா எனும் தளத்தில் வேலைசெய்பவர். ஒரு முறை தவறு நிகழ்தால் அந்த ஆன்மாவை பிறகு விழிக்க செய்வது சிரமம்.

சினிமாக்காரர்கள் யோகா சொல்லி கொடுக்க கூடாதா? அதை எதிர்க்கவேண்டும் என் சொல்லவில்லை. எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் குறைந்த பட்சம் 5 முதல் 6 வருட பயிற்சி மூலமே யோகாவை ஆசிரியர் பயிற்சியாக கற்று ஆசிரியர் ஆக முடியும். கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?

சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வந்த துணுக்கு, ஒரு நடிகையின் பெயர் ஒரு யோக பயிற்சி பள்ளியின் பெயரை போல இருக்கிறது என்பதால் அவரை யோக ஆசிரியர் ஆக்கிவிட்டார்களாம். இது எவ்வளவு கீழ்தரமான செயல் ? அந்த நடிகையின் பெயர் எனது மனைவியின் பெயரை போல இருந்தால் அவரை மணந்து கொள்ளலாமா? இது எப்படி கீழ்தரமான யோசனையோ அது போலவே அவரை யோக ஆசிரியர் ஆக்குவதும்.

கவர்ச்சியான உடையை உடுத்தி நடத்த அந்த நடிகை ஒரு வாலிபன் முன் வந்து நின்று யோக பயிற்சியை துவங்கினால், அந்த வாலிபனுக்கு மனதில் என்ன தோன்றும் ? யோகபயிற்சி செய்ய எதற்கு இத்தகைய கீழ்தரமான விளம்பர யுக்தி?

எனக்கு தெரிந்த ஒரு மாபெரும் மார்டன் “குரு” தனது ஆசிரமத்தை துவக்கும் பொழுது ஆசனம் செய்வது ஒரு வீண் வேலை. எனது தியான பயிற்சியே போதும் என பிரசாரம் செய்தார். நாளடைவில் அதில் இருக்கும் வியாபர நோக்கம் தெரிந்ததும் தனது பெயரில் ஆசனங்களை அமைத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை சந்திக்கும் பொழுது இதைக் கேட்டேன். உடனே அவர் சொன்னார் “மக்கள் கேட்கிறார்களே”.

இதை கூட பொருத்துக்கொள்ளலாம், சிலர் யோக ஆசனங்களையும் யோக முறைகளையும் தாங்களே கண்டுபிடித்ததாக சொல்லுகிறார்கள். ஸ்வாத ராம என்பவர் கொடுத்த ஹதயோக பரதீபிக்கா எனும் நூல் யோக ஆசனங்களின் என்சைக்ளோபிடியா. இதற்கு மேல் புதிதாக எழுத ஸ்வாத ராம ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. இவர்கள் இந்த நூல்களை வாசித்தார்களா என்றே சந்தேகம், இல்லையென்றால் நான் கண்டுபிடித்தேன் என சொல்லுவார்களா?

குண்டலினியும் குருட்டுவித்தையும் :

எந்த யோக பயிற்சிக்கு சென்றாலும் அங்கே ஏழு புள்ளி கோலம் வரைந்திருப்பார்கள். அது என்ன ஏழு புள்ளி கோலம் என்றால் அதன் பெயர் குண்டலினி.ஏழு ஆதாரசக்கரங்கள் உண்டு அதில் ஒரு பாம்பு இருக்கிறது என சொல்லி ஒரு மனிதனை இப்படித்தான் குழப்பவேண்டும் என்பதில்லை அளவு கடந்து குழப்பி விடுகிறார்கள். குண்டலினி உண்டா இல்லையா என்ற தலைப்புக்கு நான் வரவில்லை. (அதை தனிபதிவாக இடுகிறேன்)

மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.

குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.

இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.

எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை.

அவர்களுக்கு நேரும் சுகதுக்கங்களை குரு எப்படி மேம்படுத்த முடியும்?

மேலை நாடுகளில் யோக சாஸ்திரம் :

விவேகானந்தர் காலத்திற்கு பிறகு மேலை நாட்டில் நமது யோக சாஸ்திரம் மிகவும் பிரபலமானது. விவேகானந்தர் யோகபயிற்சி செய்பவர் அல்ல, அவர் காலத்திற்கு பிறகு பலர் இந்தியாவிற்கு வந்தும், சில இந்திய குருமார்கள் மேலைநாட்டிற்கு சென்றும் யோக பயிற்சியை மேம்படுத்தினர்.

நாளடைவில் யோகபயிற்சி என்பது ஒருவித பேஷனாக மாறிவிட்டது. தற்காலத்தில் யோகபயிற்சியை இப்படித்தான் அசிங்கபடுத்த முடியும் என இல்லாமல் அவர்கள் அசிங்கபடுத்தி வருகிறார்கள்.யோகா எடுக்கும் இடம் பெயர் ஸ்டுடியோ, உடையின் பெயர் யோகா சூட் என அங்கே யோகா தடம் பாமாறி சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு படி மேலே சென்று யோக முறைக்கு காப்பிரைட் வாங்கிவிட்டார்கள். இனி நானோ நீங்களோ பயிற்சி செய்தால் அமெரிக்க யோகத்தைதான் செய்தோம் என சொல்ல வேண்டும்.

Power Yoga, Simple Yoga, Brain Yoga, Dynamic Yoga, Wellness Yoga, Beach Yoga என புது புது பெயரிகளில் மக்களை ஏமாற்ற துவங்கிவிட்டார்கள். இதன் உச்ச கட்டம் nude yoga, நிர்வாணமாக யோகா செய்தால் மஹாநிர்வாணம் கிடைக்குமாம். இந்த யோகா ஸ்டுடியோவில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. இரு ஆண்கள் இணைந்து தான் யோகா செய்ய வேண்டுமாம். என்ன கொடுமை இது?

இவர்கள் பாலியல் இச்சைக்கான வடிகாலாக ஏன் யோக பயிற்சியை கொண்டு வரவேண்டும்?

நம்மை காட்டிலும் இவர்களுக்கு குண்டலினி என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது நீங்கள் இந்த சக்கரத்திற்காக இன்ன ஆசனம் செய்கிறீர்கள் என சொல்ல அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஒரு அமெரிக்கர் என்னுடம் ஆசனம் கற்க வந்தார். கற்று முடித்ததும் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? “In your yoga teaching there is no spicy things"

குண்டலினி, தந்த்ரா என சொல்லியிருந்தால் அவருக்கு தேவையான மசாலா கிடைத்திருக்கும், அதை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு நூறு டாலர் என அவரும் ஒரு ஸ்டுடியோ திறந்திருக்கலாம். என்ன செய்ய? அவர் அனுகிய யோகப்பயிற்சியாளர் அப்படி.

அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.

வாருங்கள்.....நாமும் கேப்பையில் நெய் வடியச் செய்வோம்...!

Thursday, April 16, 2009

விழா ...விளா ...விலா

சித்திரை ஒன்றாம் தேதி ஜோதிட உற்சவம் என்னும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பஜன், கூட்டு தியானம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி அனைவரையும் இணைத்தது.இறையருள் நிறைந்த சன்மார்க்க சங்கம் - கோவையில் நடைபெற்ற இவ்விழாவில் ஜோதிடம் மூடநம்பிக்கையா - விஞ்ஞானமா எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் நமது வலையுலகை சார்ந்த திரு பரிசல்காரன் மற்றும் சஞ்சய் இருவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

[இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி அல்ல :)]
[படத்தில் : பரிசல் , ஸ்வாமி ஓம்கார் , “பொடி” என் சஞ்சய் :) ]


பின்னர் சத்சங்கம் நடைபெற்றது, மக்கள் கேள்விகளுக்கு எனது பதில்கள் இடம்பெற்றன. பின்வரும் காலத்தில் சத்சங்கத்தை இங்கே தொகுப்பாகவோ, வீடியோ காட்சியாகவோ வெளியிடுகிறேன்.

ஜோதிட உற்சவம் எனும் விழா சிறப்பாக இருந்ததன் காரணம் என்ன ? என கேட்டவர்களுக்கு நான் சொன்ன பதில்..

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து விளாமல் நிகழ்ச்சியை சிறப்பிக்கவேண்டும் என விலா நோக செயல்பட்டதால் விழா சிறப்பாக இருந்தது.

இன்னிகழ்ச்சியை சிறப்பாக்கிய பரிசல்காரன், சஞ்சய் மற்றும் எனது மாணவ மணிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.Thursday, April 9, 2009

சித்திரை ஒன்று - தமிழ் புத்தாண்டு என சொல்லலாமா?


உலக மக்களின் கலாச்சாரம் எப்பொழுதும் அவர்களின் நாகரீகத்துடன் இணைந்த ஒருவிஷயம். ஒரு சமூகம் எது போல செயல்படுகிறதோ அதை சார்ந்து அவர்களின் காலாச்சாரமும் கொண்டாட்டங்களும் அமைந்துவிடுகிறது. இந்த கருத்துக்கு முரண்பாடான சமூகம் ஒன்று உண்டு என்றால் அது பாரத கலாச்சாரம் மட்டும் தான்.

தங்களின் சந்தோஷத்திற்காகவோ அல்லது சமூகத்திற்காகவோ விழாக்களை கொண்டாடாமல் ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், பிரபஞ்ச நலனுக்காகவும் கொண்டாடினார்கள்.

நமது வாழ்வியல் அடிப்படை மிகவும் மெய்ஞானப்பூர்வமானது. கவனிக்க விஞ்ஞானப்பூர்வமானது அல்ல. காரணம் விஞ்ஞானம் என்பது ஒரு விடையை ஆய்வு செய்ய அறிவு மூலம் முயற்சி செய்வது. விஞ்ஞானியின் அறிவு திறனை மட்டுமே அது சார்ந்தது. நாளை வேறு ஒரு விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பால் முன்னர் கண்டுபிடித்ததை நிராகரிக்கலாம். வானவியலில் விஞ்ஞானம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுதும் ஒரு கற்பனை சாந்த சமாச்சாரமாகவே இருக்கும். காரணம் சமன்பாடுகள் மூலமும் கொள்கைகள் மூலமே வானவியல் நிரூபணம் செய்கிறது. யார் சென்று பார்த்தார்கள் புதன் சூரியனை சுற்றி வர 88 நாட்கள் ஆகிறது என்று?

வடமொழி சொல் கிரஹா என்றால் ”ஒர் வசிப்பிடம்” அல்லது “ நிலை” (Base) என பொருள்படும். நீங்கள் வசிக்கும் இடம் என்பதால் வீடு என்பது கிரஹம் என அழைக்கப்பட்டது. அதனால் தான் கிரஹ ப்ரவேசம் எனும் சொல் வழக்கத்தில் இருந்தது. வானமண்டலத்தில் நட்சத்திர ஆற்றல் எங்கே கிரகிக்கப்படுகிறதோ அந்த பகுதிக்கு பெயர் கிரஹம்.

பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்பவர்கள், சூரியன் ஒரு நட்சத்திரம் அதை கிரகம் என கூறுகிறார்கள் ஜோதிடத்தில் என சொல்லுவதுண்டு. விஞ்ஞான ரீதியாக ஜோதிடத்தை அனுகும் இந்த பகுத்தறிவாளர்களிடம் ப்ளூட்டோ எனும் கிரகத்தை பற்றி கேட்டால் விஷயம் தெரியும்.

ஐந்து வருடத்திற்கு முன்பு வரை ப்ளூட்டோ ஒரு கிரகம். ஆனால் தற்சமயம் இதை கிரகம் இல்லை என விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள்.
பகுத்தறிவாளர்கள் இதற்கு என்ன சொல்லுவார்கள்? மெய்ஞான ரீதியான ஜோதிடம் ப்ளூட்டோவை என்றும் பயன்படுத்தியதே இல்லையே?

இதனால் விஞ்ஞானம் கூட பகுத்தறிவின் கீழ் வருமா என சந்தேகம் கொள்ளவேண்டி இருக்கிறது.


மெய்ஞானம், விஞ்ஞானம் போல அல்ல, அது அறிவு நிலையை கடந்தது. நமது கலாச்சாரமும் அதன் கட்டமைப்பும் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல மெய்ஞானம் சார்ந்தது. நமது நாள்காட்டியை இதற்கு சரியான உதாரணமாக கொள்ளலாம்.

சூரியனை பூமி சுற்றிவருவதால் சூரியனை மையமாக கொண்டு செயல்படும் நாள்காட்டி நம்முடையது. பூமி வட்டபாதையில் சுற்றுவதால் வட்டத்தை பன்னிரண்டாக பிரித்து பயன்படுத்திய முதல் நாள்காட்டி என இதை சொல்லலாம்.

மனிதன் வளர்ச்சி அடையாத காலத்தில் எண்ணிக்கை பத்துடன் நிறுத்திக்கொண்டான். காரணம் அவனது விரல்களில் பத்து விரல்தான் இருந்தது. அப்படிபட்ட மனிதன் கணித்த நாள்காட்டிகளில் பத்து மாதமே இருந்தது. ஜூலியர் சீசர் காலத்தில் இந்திய வானவியல் நிபுணர்களை கொண்டு மேலைநாட்டு நாள்காட்டி மறுசீரமைக்கப்படது. இதற்கு ஜீலியன் காலண்டர் என பெயர். அதைதான் நாம் ஆங்கில நாள்காட்டியாக பயன்படுத்துகிறோம்.


லத்தீன் - கிரேகக மொழியில் எண் வரிசையில் 7,8,9,10 என்பது செப்டா,அக்டா, நவா, டெக்கா என சொல்லுவார்கள். இதையே அவர்கள் மாதத்தின் பெயராக இருந்தது. ஜீலியர் சீசர் காலத்திற்கு பிறகு 7ஆம் மாததிற்கு முன் அவரின் பேரன் அகஸ்டியஸ் பெயரையும் தனது பெயரையும் கொண்ட மாதத்தை இணைந்த்தார்.

அதனால் தான் உலகின் நாள்காட்டிகளில் மிகவும் துல்லியமானதும் சூரிய மண்டலத்தை கொண்டும் கணக்கிடப்படுவதால் நாள்காட்டிகளின் முன்னோடி என நம்மை அழைக்கலாம்.

நம் மக்கள் சூரியன் மேஷ ராசியின் முதல் பாகைக்கு வரும் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். (மேலும் ஜோதிட ரீதியான தகவலுக்கு இந்த சுட்டியை பயன்படுத்தவும்). ஆனால் அரசியல் காரணங்களால் புத்தாண்டை தை மாதத்தில் மாற்றி அமைத்தது வேதனைக்குரியது.

தமிழ் இனப்பற்றால் திருவள்ளுவர் ஆண்டு என வழக்கத்திற்கு கொண்டு வந்தனர். ஏன் திருவள்ளுவர் என கேட்டால் விடையில்லை. அவரை விட மூத்த தமிழ் இலக்கியவாதிகள் உண்டு. மேலும் திருவள்ளுவர் ஆண்டை திருவள்ளுவர் தினத்தில் துவங்கவேண்டுமா இல்லை சித்திரை ஒன்றாம் தேதியா என குழப்பம் வந்தது. அதனால் புத்தாண்டு தினம் அரசால் மாற்றப்பட்டது. திருவள்ளுவர் தினத்திற்கு பிறகு ஆண்டு துவங்குவதால் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட குழப்பம் ஏற்படுவதால் மாற்றம் கொண்டுவந்தார்கள். காரணம் அரசு ஆவணங்கள் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதால் இந்த மாற்றம் அவசியமானது. கிருஸ்து பிறந்த தினம் கூட ஜீலியன் நாள்காட்டியால் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.

அதனால் தான் இந்த ”ஆண்டு மாற்றம்” புரட்சியை எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை.மதம் சார்ந்த கட்சிகள் கூட இதை எதிர்க்கவில்லை. எதிர்த்தார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே திருகுவலி வரும்.

திருவள்ளுவர்க்காக வருடத்தின் முதல் நாளை மாற்றம் செய்யலாம் ஆனால் சூரியனின் பயணத்தை ராசிமண்டலத்தில் மாற்றம் செய்ய முடியுமா? அரசு ஆவணத்திற்காக மாற்றினோம் என சொன்னால் கூட தப்பில்லை, 60 வருடம் என்பதே நகைப்புக்குரியது என அந்த புரட்சியாளர் கூறும் கருத்து சற்றே வருத்ததிற்குரியது.

அவருக்கு பாராட்டு கூட்டம் நடக்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும் அசந்தர்ப்பம் ஏற்பட்டது. புதிய உடை என நிர்வாணமாக செல்லும் ராஜாவின் கதை ஞாபகம் வந்தது. அவரை பாராட்ட இரு சொற்பொழிவாளர்கள், ஒரு கவிஞர் மற்றும் இலக்கியவாதி. ஒவ்வொருவரும் இதற்காக தான் அவர் புத்தாண்டை மாற்றினார் என சொல்லும் காரணம் புரட்சியாளருக்கே தெரியாமா என சந்தேகம்தான்.

தை மாதம் என்றும் , சித்திரை மாதம் எனவும் கூறும் மாதத்தின் பெயர்கள் எப்படி வந்தது? இவை அனைத்தும் தமிழ் பெயரா? என சிந்திக்க வேண்டும்.

நமது மாதங்கள் அனைத்தும் சந்திரனை சார்ந்து நிர்ணயிக்கபட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி அந்த மாதத்தின் தொடக்க நாளாக சந்திராம்ச மாதத்தில் பின்பற்றப்படுகிறது. பெளர்ணமி முதல் அமாவாசை வரை மீண்டும் பெளர்ணமி வரை ஒரு மாதம் என வழங்கப்பட்டது.

பெளர்ணமி என்பது என்ன என தெரிந்து கொள்வது நல்லது. சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் பாகை திதி என்னும் தன்மையில் அழைக்கப்படுகிறது. இதில் குறைந்த பாகை வித்தியாசத்தில் இருக்கும் நிலை அமாவாசை. எதிர் திசையில் இருந்தால் பெளர்ணமி.முதல் மாதம் பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் அமைவதால் அம்மாததிற்கு சித்திரை என பெயர். அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் அமைவதால் வைகாசி மாதம் என வழங்குகிறோம்.
நட்சத்திர பெயர்கள் அனைத்தும் வடமொழி பெயர்கள் தான்.

தமிழ் வருடத்தில் வடமொழி மாதங்கள் இருக்கலாமா? யாராவது சொற்பொழிவாளரோ இலக்கியவாதியோ சொல்லுங்கள். புரட்சியாளர் மாதங்களின் பெயரை மாற்றட்டும். இவர் ஜீலியர் சீசர் போல ஒரு பேர குழந்தையை வைத்து சிரமப்பட வேண்டியது இல்லை. அவர் குடும்ப சூழலில் 12 பெயர் தாராளமாக தேரும்.

சித்திரை ஒன்றாம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடில்லை. சூரியன் சந்திரன் மூலம் அமையும் நாள்காட்டி தனியொரு மதத்திற்கோ, இனத்திற்கோ அல்லது மொழிக்கோ சொந்தமானது அல்ல. மெய்ஞான ரீதியான விஷயம் அனைவருக்கும் பொதுவானது. உலகில் எங்கே யார் சொன்னாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆகவே இந்த நாளை மெய்ஞானத்தின் புத்தாண்டாக கொண்டாடுவோம்.

இன மொழி மதம் கடந்த மெய்ஞானவெளியின் துகள்களாய் சஞ்சரிப்போம்.

மெய்ஞான புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

ஸ்வாமி ஓம்கார்
சர்வதாரி
பங்குனி 27


Wednesday, April 8, 2009

ஆசை அறுமின்

ஆசை அறுமின்
- புத்தனாக ஆசைப்படு.

ஆசைப்படுதல் என்பது தனி மனிதனின் உரிமை. பிறந்து சுவாசம் துவங்கியது முதல் சுவாசம் நின்று இறக்கும் வரை ஆசை மற்றும் எதிர்பார்ப்பு மட்டுமே மனிதனை வளர்ச்சி அடையச்செய்கிறது. ஆசைப்படுவது குற்றம் என சிலரும், அத்தனைக்கும் ஆசைப்படு என சிலரும் மனிதனை மனக்குழப்பத்திற்கு தள்ளுகின்றனர்.

தற்சமயம் நமது சமுதாயம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பணம் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தை யும் அடையலாம் எனும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. பணத்தால் புதிய உயிரை வாங்க முடியுமா என்று, பல வருடங்களாக குழந்தை இல்லாத செல்வந்தரை கேட்டுப்பாருங்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் பல லட்ச ரூபாய் கொண்டு செல்லும்பொழுது விபத்தில் சிக்கி உயிர் இழந்தவரின் குடும்பத்தை கேழுங்கள், பணம் உயுர்காக்குமா? என்று. பணத்தால் ஆசையை பூர்த்தி செய்ய ஓர் எல்லை உண்டு. பணத்தை மட்டுமே நம்பினால் பல தொல்லை உண்டு. உங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புகளாய் மாறி அதை அடைய திட வைராக்கியத்துடன் செயல்பட்டால் அந்த ஆசையே லட்சியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விதை மரமாக வளரவும் , மொட்டு மலராக மலரவும் அதன் கருவில் இருக்கும் ஆசையே காரணம்.

ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை இருந்தாலும் ஆசையை பற்றி முழுமையாக தெரிந்தபின் ஆசப்படுவது சிறந்தது. ஆசை என்பதை இருவகையாக பிரிக்கலாம். புத்திசாலித்தனமான ஆசை மற்றும் முட்டாள் தனமான ஆசை என கூறலாம்.


இரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு செல்வ கடவுளான மஹாலஷ்மியை சந்தித்து தமது வறுமையை போக்கிக்கொள்ளவேண்டும் என்பது ஆசை. முதல் நபர் ஓர் ஆன்மீக குருவின் இடத்தில் மஹாலஷ்மி மந்திரம் பெற்று நெடுங்காலம் தவம் செய்தார். மஹாலஷ்மி வரவே இல்லை. இரண்டாமவரோ அதே ஆன்மீக குருவினிடத்தில் மூதேவியை காண மந்திரம் பெற்று தவம் செய்தார்.


தன்னை யாரும் அழைக்காத பொழுது வைராக்கியத்துடன் தன்னை அழைக்கும் பக்தனிடத்தில் மூதேவி ஓடிவந்தாள். ' என்ன வரம் வேண்டும் பக்தா! ' எனக் கேட்டாள். ' என்னை விட்டு எப்பொழுதும் விலகியே இரு. இதுவே எனது வரம் ' என்றான் மூதேவியை தவம் செய்தவன். மூதேவி இல்லாத இடத்தில் லஷ்மி முழுவதும் நிறைந்தாள். புத்திசாலிகள் ஆசையை தனது காலடியில் விழ வைப்பார்கள். முட்டாள்கள் ஆசையின் காலடியில் விழுந்துகிடப்பார்கள்.


முட்டாள் தனமான ஆசைகூட விபரீதமானதன்று. இது போன்ற ஆசை மன விரக்தியைத்தான் கொடுக்கும். ஆனால் மனதை சமநிலையில் வைக்காமல் ஆசைப்படும் பொழுது விபரீதத்தைக் கொடுக்கும். அனைவருக்கும் தெரிந்த நாடோ டி கதையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு வழிப்போக்கன் அடர்ந்த காட்டின் ஓர் மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தான். கேட்டதை கொடுக்கும் கல்பக விருஷம் அந்த மரம் என்பது அவனுக்கு தெரியாது. இளைப்பாறும் பொழுது சிறந்த நீரும் , உணவும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணினான். உடனே அறுசுவை உணவும், குளிர்ந்த நீரும் அவன் முன் இருந்தது. உணவை சாப்பிட்டதும் உறக்கம் அவனை தாலாட்டியது. படுத்து உறங்க பஞ்சுமெத்தையும், காலகளைப்பிடித்துவிட சேவகர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.

உடனே அவன் பஞ்சுமெத்தையில் படுத்திருந்தான். இருவர் அவன் கால்களை பிடித்த வண்ணம் இருந்தனர். இதை உணர்ந்த வழிப்போக்கன் நகை, ஆடம்பர ஆடைகள் என பல விஷயங்களை பெற்றான். இந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் திடீரென புலியோ, சிங்கமோ தன்னை கொண்றுவிட்டால் என்னவாகும் என எண்ணினான். உடனே பல திசைகளில் பாய்ந்துவந்த வனவிலங்குகள் அவனை கொன்றுதின்றன.


சமநிலையற்ற மனதுடன் ஆசைபடும் பொழுது ஏற்படும் விபரீதத்திற்கு இந்த கதை சிறந்த உதாரணம். சமநிலையில் உள்ள யோகிகள் ஆசைப்படுவதை விட்டு விலகியிருப்பார்கள். மனம் இருந்தால் மட்டுமே ஆசை உண்டு. மனமற்ற யோகிக்கு ஆசை என்பதே இல்லை. அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கமாக நமது எண்ணத்தை குவித்தால் விரைவில் அதை அடையலாம். ஆனால் அவர்களிடத்தில் அமரும் பொழுது மனம் லயமடைந்து எண்ணங்கள் எழாது. யோகியானவன் தன்னை மட்டுமின்றி தன்னை நாடி வருபவர்களின் மனதையும் தூய்மையாக்குகிறான்.

நான் பயிற்சி அளிக்கும் யோக முறை இது போன்ற மனமற்ற நிலையை அடைய வழிவகுக்கும். சில மாணவர்கள் மனமில்லாமல் எப்படி வாழ்வது என குழப்பம் அடைவார்கள். முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் பொழுது மனம் செயல்படாது. நிர்விகல்ப சமாதி எனும் உணர்வு ஆன்மநிலை அடையவும் மன சிதறல்கள் இன்றி விழிப்புணர்வில் பிரகாசிக்கவும் இந்த யோகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறிது நேரம் மனமற்ற நிலையில் இருந்து பார்த்தால் அதன் ஆனந்தம் புரியும். மன எண்ணங்களே ஆசையாக மாறுகிறது என கூறினேன். இவை மனதில் 'சம்ஸ்காரங்கள்' எனும் எண்ண படிவங்களாக பதிந்துவிடுகிறது.

ஆன்மாவில் பதிந்த இந்த சம்ஸ்காரங்கள், ஆன்மாவை பல பிறவிகள் எடுக்கத் தூண்டுகின்றன. இதை கர்போபனிஷத் , பிரசன்ன உபநிஷத் எனும் வேத பகுதிகள் உறுதி செய்கிறது. இதையே கீதை ' எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' எனும் வாசகத்தால் உணர்த்துகிறது.


பல பிறவிகள் ஏற்படும் தத்துவத்தை 'யோக வாஸிஷ்டம்' எனும் நூல் சிறிய கதை மூலம் சிறப்பாக விளக்கும். ஈஸ்வரன் தவ நிஷ்டையில் இருக்கும் சமயம் ஓர் தேனீ அவரை சுற்றி ரீங்காரம் செய்தது. ஈஸ்வரன் சமாதி நிலையிலிருந்து வெளிவந்து தான் தேனீயாக இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணினார். உடனே அவர் தேனீயானார். தேனீ பூக்களுக்கு சென்று தேன் சேகரித்தது. அப்பொழுது தேன் கொண்ட பூவானால் எப்படி இருக்கும் என நினைத்தது. தேனி பூவாக பிறந்தது. பூவைப்பறித்து அந்தனர்கள் பூஜை செய்தனர். கடவுளின் விக்ரகத்தில் பட்டவுடன் கடவுளாக மாற ஆசைப்பட்டது. பூ மீண்டும் ஈஸ்வரனாக நிஷ்டையில் ஆழ்ந்தது.


எவ்வாறு ஈஸ்வரன் பல வடிவங்கள் எடுத்து மீண்டும் தன்னிலைக்கு வருகிறான் என்பதை எளிமையாக உணரலாம். நமது சம்ஸ்காரமே அடுத்த பிறவிக்கும், முற்பிறவிக்கும் - ஏன் பலகோடி பிறவிகளுக்கும் காரணம் என்பதை உணரலாம். இதை படித்துக்கொண்டிருக்கும் சமயம் சிறிது கண்களை மூடி, இன்று காலை முதல் இந்த நிமிடம் வரை எத்தனை விஷயங்களுக்கு ஆசைப்பட்டோ ம் என்பதை எண்ணிப்பாருங்கள். முடிவற்ற சம்ஸ்காரத்தின் கிடங்காக வலம்வந்து கொண்டிருக்கிறோம். நாம் ஈசனாக மாறுவது எப்பொழுது ? சம்ஸ்காரத்தை விட்டொழித்தால் அடுத்த நிமிடம் நீங்களும் ஈசன் தான். முன்பு கூறிய கதையை போல ஈசனாக மாற எண்ணுங்கள். உங்கள் சம்ஸ்காரம் உங்களை விரைவில் பரமாத்ம நிலைக்கு உயரச்செய்யும்.


என்னிடதில் ஜோதிடம் கேட்க வந்தவர்களும் , ஆன்மீக பயிற்சி பெற வந்தவர்களும் ஜாதகத்துடன் வந்து பல ஆசைகளை முன் வைப்பதுண்டு. மூன்று ஆண்டுகளில் முற்பதுகோடி சம்பாதிக்க முடியுமா? சிறந்த தொழிலதிபராக முடியுமா? நான் ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? என பல ஆசைகள். ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உணர்ந்து பரமானந்தம் அடைவேனா? என கேட்டதில்லை. உடல் இச்சை, பொருளாதாரம் மட்டுமே இவர்களின் ஆசையாக இருக்கிறது. புலன்கள் கடந்து ஆசைப்பட அவர்கள் தயாராக இல்லை.


ஒருவர் எவ்வாறு ஆசைப்படுவார் என அவரின் பிறப்பு ஜாதகம் காட்டும். என்னிடத்தில் ஜோதிடஆலோசனை கேட்டு வருபவர்கள் ஆசையை கூறியவுடன், அதை அவர்களின் ஜாதகத்துடன் ஒப்பிட்டுப்பார்ப்பேன். ஆசைகள் பல விதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என கூறுவார்கள். உண்மையில் ஜாதகங்கள் பல விதமாக இருக்க அதில் ஆசைகளும் பல விதங்களாக இருப்பதை உணர்ந்தேன்.


ஆசைப்படுவது தவறா? எவ்வாறு ஆசைப்படுவது என பல விஷயங்களை ஆராய்ந்தோம். எப்படி ஆசைப்பட வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே, என சிலர் கேட்பதுண்டு. ஆசையை துறக்க வேண்டும் என புத்தர் கூறினாலும் அதை ஆசையாக மனதில் கொள்வது தவறா? எனும் எண்ணம் பலருக்கு உண்டு. இதற்கு திருமூலர் ஓர் சிறப்பான பதில் தனது திருமந்திரம் மூலம் அளிக்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

ஈசன்மேல் கொண்ட ஆசையையும் துறந்தால் ஆனந்தம் அடையலாம் என அவர் கூறுவது மனமற்று இருக்கும் மார்க்கத்தை உணர்த்தவே ஆகும். புலன் கடந்த ஆசை ஆனந்தத்தையும் , புலனுக்கு உட்பட்ட ஆசை துன்பத்தையும் அளிக்கும். ஆசைப் படுவதை ஆராய்ந்து ஆசைப்படுங்கள். புத்தரும் திருமூலர் வழியில் நானும் உங்களுக்கு கூற ஆசைப்படுவது,

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
புலனுடன் கூடிய ஆசை அறுமின்கள்

ஏப்ரல் 2007 சித்திரை

Monday, April 6, 2009

பழைய பஞ்சாங்கம் 06-04-2009

ராமநவமியும் ஐய்யங்கார் மாமியும்


இரு தினங்களுக்கு முன் ராம நவமிக்காக ஒரு அறக்கட்டளை சார்ப்பாக சொற்பொழிவுக்கு சென்றிருந்தேன். சமயம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளுவதை அனேகமாக நான் விரும்புவதில்லை. சமூக தொண்டுடன் ஆன்மீக வளர்ச்சி செய்யும் அறக்கட்டளைகள் மற்றும் குழுக்கள் அழைத்தால் மட்டும் செல்லுவதுண்டு.

சிறிய குழுவாக இருக்கும் என நினைத்து சென்ற எனக்கு பெருங்கூட்டம் காத்திருந்தது. ஸ்ரீராமரை பற்றியும், ராம நாமத்தை பற்றியும் விளக்கினேன். சிவன் பார்வதிக்கு ராம நாமத்தை உபதேசித்தார், மேலும் இறைவன் வேதத்தை உலகிற்கு அளித்தபோது மக்களின் வேண்டுதலுக்கு இணங்க இரு எழுத்தில் வேதத்தை படைத்தார் அது ரா-ம எனும் நாமம் என கூறினேன்.

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை கூறும் செயலை காட்டிலும் ராமா என
ஒரு முறை கூறினால் அதன் பலன் கிடைக்கும் என பொருள் கொண்ட விஷ்ணு சகஸ்ர நாமத்தை விளக்கினேன். கடவுளை காட்டிலும் கடவுளின் நாமமே மேன்மையானது என்பது தான் எனது சொற்பொழிவுன் சாரம்.

சொற்பொழிவு முடிந்து கூடியிருந்தவர்கள் என்னை சூழ்ந்து பேச துவங்கினார்கள். அப்பொழுது ஒரு ஐய்யங்கார் மாமி என்னிடம், “ஸ்வாமி சிவனே ராம நாமம் சொல்றதா சொன்னேளே, சிவன் வைஷ்ணவரா? தென்கலையா வடகலையா?”என்றார். நம் மக்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.

நானும் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு , “ஆமாம் மாமி, சிவன் வைஷ்ணவர்தான். இராமேஸ்வரத்தில் ராமர் சிவனை பூஜிக்கிறாரே? அப்போ ஸ்ரீராமர் சைவமா?” என கேட்டேன்.

கலவரத்தை தடுக்க அந்த மாமியை அனைவரும் தனியே அழைத்து சென்றனர். :)

இதை மனதில் அசைபோட்டுக்கொண்டே வாகனத்தில் என் இருப்பிடம் வரும் பொழுது ஹிட்லர் காலத்து ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது. அது உங்களுக்காக கீழே..
-------------------------------------------------------------------------------------

ஏசு கிருஸ்து எந்த மதம்?

ஹிட்லர்காலத்தில் அவரின் நாஜி படைகள் யூதர்களை தேடி தேடி கொன்று குவித்தார்கள். அந்த சமயத்தில் ஐந்து யூதர்களை கொல்ல நாஜி படையினர் துரத்தினார்கள்.

ஐந்து யூதர்களும் ஒரு சர்ச்சில் அடைக்கலம் புகுந்தனர். ஞாயிறு என்பதால் அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை தேடிவந்த நாஜி படையினர் சர்ச்சின் முன்பகுதிக்கு வந்து சப்தமாக கூறினார்கள், “ஐந்து பேரும் இங்கே தான் இருக்கிறீர்கள் என தெரியும். இது எங்கள் தேவாலயம் இங்கே அசுத்தம் செய்ய விரும்பவில்லை. மூன்று எண்ணுவோம்...யூதர்களே அனைவரும் சர்ச்சுக்கு வெளியே வந்துவிடுங்கள்.”

ஒன்று
இரண்டு
மூன்று...

யூதர்கள் அனைவரும் வெளியே வரிசையாக நின்றார்கள். ஆனால் மொத்தம் ஆறுபேர் இருந்தார்கள். முதலில் ஏசு கிருஸ்து நின்றிருந்தார்.

ஜாதி மத துவேஷங்கள் செய்பவர்கள் எப்படி கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வேடிக்கை கதை ஒரு உதாரணம். இந்த கருத்தை கிருஸ்துவ மதத்தை நான் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஒரு இருண்ட வரலாற்றின் அறியாமையை மீண்டும் நடக்காத வண்ணம் இருக்க கூறுகிறேன்.

தற்காலத்தில் அந்த மாமி போல சில நாஜிகள் நம்மிடையே உண்டு.

-------------------------------------------------------------------------------------
அடுத்த வாரம் வறீங்களா?

சில பதிவுகள் முன்னாடி கோவையில் நடக்கும் நிகழ்சியான “ஜோதிட உற்சவம்” பற்றி சொல்லியிருந்தேன். நமது வலைபதிவாளர்கள் கிட்ட இருந்து குறைவான அளவே பதில் வந்தது.

இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்களுக்கு கலந்துக்கர எண்ணம் இருந்தா இப்பவும் தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ உறுதிபடுத்துங்க. மக்களுக்கு பயன்படும் நிகழ்சிக்காக வலையுலகம் சார்பா ஆதரவு இருக்கும்னு நினைக்கிறேன்.

என் மாணவர்களும் நானும் இரத்ததானம் செய்யரதா இருக்கோம். அன்னைக்கு தனிப்பட்ட ரீதியா வலைபதிவாளர்கள் கூட சந்திக்கலாம்னு நினைக்கிறேன்.

ஏனுங் வரீங்களா?
-----------------------------------------------------------------------------------------
அடுத்து யார் வரப்போறா?

தேர்தல் பற்றிய எனது கணிப்பை அடுத்த பழைய பஞ்சாங்கத்தில் சொல்லுவதாக சொல்லி இருந்தேன். அதை படிச்சவுடன் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒரு கடிதம்.(நெனப்பு தான் :) ).

தேர்தல் முடிவுகளை முன்னாடியே கணிக்க கூடாதுனு சட்டம்
இருக்காம். கருத்து கணிப்பு மாதிரி ஜோதிட தகவலும் மக்களை திசை திருப்பிடுமாம். (இல்லைனா மட்டும் மக்கள் சரியான ஆளை தேர்ந்தெடுத்துடுவாங்களக்கும் :) ).

இதனால் ரொம்ப சிந்திச்சேன் (சரி சரி விஷயத்துக்கு வா..:) ).

பல நூற்றாண்டுக்கு முன்னாடி நம்ம நாட்டில் இருந்த ஜோதிட மாமேதை மித்ர ஜோதி பாவணா பாரதி எழுதிய அரிச்சுவடியை எடுத்து பார்த்தேன்.
(நம்பிட்டோம்..:) )

அதில் நம்ம தேர்தல் 2009 பத்தி கணிச்சுருக்கார்.
அவர் சொன்னதையாவது இங்கே சொல்லுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.அந்த ஏட்டில் என்ன எழுதி இருந்தது தெரியுமா?

ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத:

அப்படினு சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கு. எனக்கு ஒண்ணும் புரியலை. உங்களுக்கு?
-----------------------------------------------------------------------------------------
ஒரு கவிதை

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்

குப்பைதொட்டியில்
நாத்திகர்கள்

கவிதை (ப)சிலருக்கு புரியவில்லை என்பதால் கவிதைக்கு பரிகீழ்அழகர் எழுதிய உரையை இத்துடன் இணைக்கிறேன்.

முதல் கடவுள் தாய் தந்தைதான் என்கிறார்கள் சான்றோர். ஆனால் குப்பை தொட்டியில் குழந்தைகளை வீசும் பெற்றோர் தெய்வமாக இருப்பார்களா? அதனால் பெற்றோர் மேல் வெறுப்பு கொண்ட குழந்தைகள் அதிகமாகிறது இந்த சமூகத்தில் என சுவைபட சொல்லுகிறார் பாடல் ஆசிரியர். :)

டிஸ்கி : இதெல்லாம் ஒரு கவிதையா என பழிப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து
அவை அனைத்தும் என்னை போல கவிதை சொல்லும்.

Friday, April 3, 2009

ஞானம் அடைய இதோ எளிய வழி

ஞானம் அடைவது என்பதை பற்றி பேச
நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.

நான் ஞானம் அடைந்தவன் என நீங்கள் உணர
உங்களுக்கும் ஞானம் இருக்க வேண்டும்.

எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்
ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச வேண்டும் ?
-ஸ்வாமி ஓம்கார்
--------------------------------------------------------------------------
சென்ற பதிவில் பின்நவீனத்துவம் எனும் தலைப்பில் ஒரு இடுக்கை இருந்தது.
அந்த கட்டுரையை படித்த பலர் பின்னூட்டங்கள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் சில கருத்துகளை சொன்னார்கள். அதன் சாராம்சம் "அதில் எங்கே பின்நவீனம் இருக்கிறது? விடுகதை போல் அல்லவா இருக்கிறது.? "

உண்மையில் பின்நவீனத்துவம் எனும் கருத்தை பழிப்பவன் இல்லை நான். நான்
சொல்லவந்த கருத்தை நீங்கள் ஊன்றி படிக்க நான் தேர்ந்தேடுத்த தலைப்புதான் அது. நான் இலக்கியம் செய்வேன் என நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். எனக்கு இலக்கியம் எல்லாம் செய்யத் தெரியாது...லேக்கியம் வேண்டுமானால் செய்வேன்.

ஞானம் எனும் கருத்து மிகவும் மலிந்த விஷயமாகிவிட்டது. கடைக்கு சென்றால் எனக்கும் ஒரு கிலோ வாங்கிவா என சொல்லும் அளவுக்கு மலிந்துவிட்டது. மாத பத்திரிகையில் விளம்பரங்கள் உங்களை ஞானியாக்குகிறோம் என்று கூவி கூவி அழைக்கிறார்கள். சரி...ஞானம் அடைந்தால் என்ன ஆகும் என கேட்டால், கடன் தொல்லை தீரும், தொழில் மேன்மை நடக்கும் என பதில் வருகிறது.

தன்னை யோகி என்று அழைத்துக்கொள்ளுபவர்களோ தங்களின் சுயசரிதை புத்தகத்தில் 1980ல் இன்ன மாதம் இன்ன தேதியில் ஞானம் அடைந்தேன் என்கிறார்கள். எதிர்காலத்தில் விசிடிங் கார்டிலோ அவர்களின் யோகபயிற்சி பள்ளியிலோ இப்படி எழுதினாலும் எழுதுவார்கள்.
“ஞானி Since 1980".

ஆன்மீகம் என்பது கடைசரக்கே. அதிலும் ஞானம் என்பது வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமாகிவிட்டது.
நமது கலாச்சாரம் பலயோகமுறைகளை கொண்டது. யோகம் என்பது பிரம்ம சொரூபத்துடன் வேறுபாடு இல்லாமல் கலப்பது. ஹடயோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம், ஞான யோகம் என பல யோக முறைகள் இருக்கிறது. உடல், மனம், ஆன்மா அனைத்தையும் வருத்தி தன்னை இறைவனுடன் ஐக்கியப்படுத்திகொள்ளும் முறைகள் ஹட,கர்ம,பக்தி மற்றும் ராஜ யோக முறைகள். ஆனால் இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.

எந்த செயலும் தேவை இல்லை என சொல்லிவிட்டு, ஞானம் ”அடைவது” , “கலப்பது” என பல செயல்பற்றி சொல்லுகிறேன், உண்மையில் இவை செயல்கள் அல்ல. ஞானம் என பிரத்யோகமாக அடைய எதுவம் இல்லை. அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை உணர்வதில்லை.

கஸ்தூரிமான் தனது வால்பகுதியில் கஸ்தூரி இருப்பது தெரியாமல் அந்த வாசனை காட்டில் எங்கே இருக்கிறது என தேடி அலையுமாம். கடைசியில் சோர்வுற்று அமரும்பொழுது அதன் கஸ்தூரி இருக்கும் இடம் அதற்கு தெரியவரும். அது போல ஞான நிலையிலேயே இருக்கிறோம் என அறியாமல் செயல் செய்ய வேண்டி இருக்கிறது.

ஞான யோகிகள் தாங்கள் பிரம்ம சொரூபம் என்றும், உலகம் பொய்யானது, தனது இருப்பே மெய்யானது என எண்ணுகிறார்கள். ஞான யோகிகளின் நிலையை உணரவும். ஞான யோகத்தை பின்பற்றி ஞானத்தை உணரவும் தோன்றிய நூல் “யோகவாஸிஷ்டம்”.

ராமாயண காலத்தில் ( த்ரிதாயுகம்) நடப்பதாக வர்ணிக்கபட்டுள்ளது. பகவத் கீதை போன்ற நூல் அல்ல இது. ஸ்ரீ ராமனின் குருவான வஸிஷ்டர் தனது மாணக்கனுக்கு ஞானம் அடைய வேண்டி உபதேசிக்கிறார். உபதேசித்தவுடன் தான் பிரம்மம் என ஸ்ரீராமன் உணருகிறான்.

என்ன வேடிக்கை பார்த்தீர்களா? கடவுளாக இருந்தாலும் இங்கே வந்தால் தான் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். நம்மை பற்றி யோசியுங்கள். 32000 சுலோகம் கொண்டது இந்த நூல் பல ஞானிகளால் எளியவடிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காலம் மற்றும் தேசம் எனும் இரு கொள்கைகள் எவ்வளவு தவறானது என சுட்டிகாட்டி விளக்குகிறார் வஸிஷ்டர். நீங்கள் இரவில் தூங்குகிறீர்கள் அப்பொழுது கனவில் வரும் செயல்கள் அனைத்தும் உண்மை போலவே இருக்கிறது. உங்களை வேறு உலகில் எடுத்து செல்லுகிறது. கண் விழித்தவுடன் அந்த உலகம் மறைந்து வேறு உலகம் கண்களில் தெரிகிறது. எது உண்மை?

கண் விழித்தது என்பது கனவாக இருந்து நினைவு என்பது பொய்யாக இருந்தால்?
நமது உணர்வு நிலையை தூக்கத்திலிருந்து நாம் எட்டியவுடன் நமக்கு முதலில் மூளையில் வரும் செய்தி இரண்டு. இன்ன நேரத்தில் நான் விழித்திருக்கிறேன், இன்ன இடத்தில் இருக்கிறேன். இதில் ஏதேனும் ஒன்று சரியாக செயல்படவில்லை என்றால் உங்களால் இயல்பாக இருக்க முடியாது.

காலம் என்பது உங்களுக்குள் புகுத்தப்பட்ட மாயை. இடம் என்பதும் அது போன்றதே.


நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.

சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.

மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?

இது போல வஸிஷ்டர் ஸ்ரீராமனுக்கு சில கதைகளை சொல்லி அவரின் அறியாமையை தவிடுபொடியாக்குகிறார். ஸ்ரீராமன் உணர்வு நிலையில் இருந்து ஞானவெளியில் தூக்கிவீசப்படுகிறார்.

காலம் என்பது கற்பனையே. அந்த கற்பனைதான் ஞானம் அடைய தடையாக இருக்கிறது.

உங்களுக்கு முப்பது வயதாகிறது என சொல்லிகிறோம். அல்லவா? இது எப்படி வந்தது? பிறந்து முப்பது வருடம் ஆகியது, 365.25 நாட்கள் சேர்ந்து 24 மணி நேரம்.

24மணி நேரம் ஒரு நாள் என்பது ஏன் நாம் அமைத்துக்கொண்டோம்? ஒரு பகல் ஒரு இரவு இருப்பது ஒரு நாள் என அனைவரும் எடுத்த ஒருமித்த முடிவு. இதையே 12 மணி நேரம் ஒரு நாள் என முடிவு செய்தால் உங்களுக்கு 60 வயதாகிவிட்டது. இதே ஒரு நாள் 48 மணி நேரம் என கொண்டால் உங்களுக்கு பதினைந்து வயது தான்.

காலகணிதம் எனும் அடிப்படியில் நான் 60வயதில் இறந்து மறுபிறவி எடுக்கிறேன் என கொண்டால், மேற்கண்ட விளக்கத்தில் ஒரு நாள் 12 மணி நேரம் என்றால் இந்த நேரம் நான் அடுத்த பிறவியில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 மணி நேரம் எனக்கொண்டால் இந்த நேரம் நான் எனது முற்பிறவியில் இருப்பேன்.

ஒருவரின் அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறவி என அனைவரும் நம்புவது காலத்தை வைத்துதான். உண்மையில் நாம் இறந்துவிடவில்லை என நினைப்பதும், அடுத்த பிறவி என்பது காலத்தை பொருத்தது.

இந்த கருத்தை வஸிஷ்டர் விளக்க கூறும் கதை அபாரமானது. கடைசியில் ஸ்ரீராமர் புரிந்துகொண்டதும் வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை அறியவில்லை”

அதனால் தான் சொல்லுகிறேன் ஞானம் அடைவது எளிது. காலம் எனும் கட்டை உடைத்து வெளியேறுங்கள். அனைத்தும் காணும் “அதனுடன்” ஒன்றாகிவிடுவீர்கள்.


வலையுலக பாணியில் சொன்னால், இந்த பதிவை எழுதும் நான் உங்களின் அடுத்த பிறவியாக இருக்கலாம். இதற்கு பின்னூட்டம் இடும் நீங்கள் எனது அடுத்த பிறவியாகவோ, முந்தைய பிறவியாகவோ இருக்கலாம்.
--------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)

படித்தபின் இறுக்கமாக உணர்ந்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)

Thursday, April 2, 2009

ஆன்மீகவாதியின் பின்நவீனத்துவம்

உங்களின் நிலை புரிகிறது. என்னடா நல்லா எழுதிக்கிட்டு இருந்த (அப்படியா ?) ஸ்வாமி திடீருனு பின்நவீனத்துவம் பத்தி எழுதராறே ஏதாவது பிரச்சனையானு. கடந்த ஆறு மாதமா இணைய வலைதளத்தில் உலாவுகிறேன். அனேகருக்கு பின்நவீனத்துவ மோகமும், புதிதாக எழுத்து அமைப்பு இருக்கவேண்டும் என்றும் எழுதுகிறார்கள்.

ஒருவருக்கும் உதவாத புனைவு, கட்டுடைத்தல் எனும் பெயரில் ஆபாசமே எஞ்சி நிற்கிறது. பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என ஒரு சில வரிகள் அத்தகைய எழுத்தாளர்களிடம் கேட்டால் சரியான விளக்கம் கொடுக்க முடியுமா என தெரியவில்லை. இதில் உச்சகட்டம் நான் லீனியர் ரைட்டிங் எனும் பெயரில் கோர்வை இல்லாமல் பத்தியாக எழுதுகிறார்கள். கேட்டால் இது தான் போஸ்ட்மார்டன் ...புரியலையே என்றால்...உனக்கு பத்தாது என்கிறார்கள்.

நவீனமாக எழுதுகிறோம் என இவர்கள் நினைப்பதும், சமூகம் முற்போக்காக இல்லை என நினைத்து கட்டுடைப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் பின்நவீனத்துவ எழுத்தை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு இரண்டு நாள் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. ஒருவித பரிதவிப்பு நிலைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை என்னால் கீழே வைக்கவும் முடியவில்லை. பின்நவீனத்துவம் என்றவுடன் பாலியல் சார்ந்தும், பால் உறவு சார்ந்தும் தான் எழுத வேண்டும் என்ற நிலையையும் கட்டுடைத்து அவர் ஆன்மீகத்தில் பின்நவீனமாக்கி எழுதி உள்ளார். தற்கால புதிய தலைமுறை பின்நவீனர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.

உங்களுக்காக அந்த புத்தகத்திலிருந்து சில பத்திகள்....


கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது....

இல்லாத ஒரு நகரில் நல்ல வீரர்களாகிய மூன்று ராஜகுமாரர்கள் இருந்தனர். அந்த மூவரில் இரண்டு பேர் பிறக்கவே இல்லை; மூன்றாமவர் கர்ப்பத்திலே வாசம் செய்யவில்லை. மிகவும் சிறப்பான பொருளை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் வெளிக் கிளம்பினர். அப்போது ஆகயத்தில் பழங்கள் நிறைந்த மரங்கள் கண்டனர். சுவை மிகுந்த அக்கனிகளை புசித்து பசி ஆறிய பிறகு, கரையில் அலைகள் மோதிக்கொண்டிருந்த மூன்று நதிகளை கண்டனர். அவற்றில் இரண்டு நதிகளில் சிறதளவும் தண்ணீர் இல்லை. மற்றதோ வறண்டு கிடந்தது. அங்கு குளித்த, விளையாடி, தாகம் தீர நீரை பருகினார்கள். பிறகு அந்த நாளின் முடிவில் இனிமேல் நிறுவப்பட போகின்ற நகரத்தை அடைந்தனர்.

அங்கே மூன்று அழகிய இல்லங்களை கண்டனர். ஒரு வீடு சுவரும்,தூண்களும் இல்லாது இருந்தது; மீதி இரண்டும் கட்டப்படவே இல்லை. அவர்கள் குடிபுகுந்த வீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட மூன்று பாத்திரங்களை கண்டனர். இரண்டு துண்டு துண்டாக உடைந்து இருக்க, மூன்றவது பொடிப்பொடியாக இருந்தது.
அந்த பாத்திரத்தில் மூன்று படி குறைந்த மூன்று படி அரிசியை எடுத்து உணவு சமைத்தனர். அந்த அன்னத்தை வாய் இல்லாத அந்தணர் அனேகருக்கு அளித்து, மிகுதி இருந்ததை உண்டனர். பிறகு மூவரும் புறப்பட்டு....

இப்படியாக செல்லுகிறது கதை. கண்ணை கட்டுதா? ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட கதைகள். வெறும் மனக்கிளர்ச்சிக்காகவோ, வேடிக்கை விடுகதைக்காகவோ சொல்லப்பட்ட கதைகள் அல்ல. ஒவ்வொன்றும் ஞானம் வழங்கும் கருத்துக்கள் நிறைந்தது.

மேலும் இந்த கதை ஒரு தாய் தனது மகனுக்கு சோறு ஊட்டும் பொழுது சொன்னாளாம். இப்படியாக பின்நவீனம் சொல்லுகிறது அந்த புத்தகம். பின்நவீனத்துவம் எப்படி இருக்கிறது?

படித்துவிட்டீர்கள் அல்லவா உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

இது என்ன புத்தகம் ? யார் இயற்றியது?

என தேதி இல்லாத நாளில், மணி இல்லாத நேரத்தில் சொல்லுகிறேன்.