அன்று சுப்பாண்டியுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தது. சொன்ன நேரத்தை விட வழக்கம் போல அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.
"என்ன சுப்பு லேட்? நம்மளை சந்திக்க காத்திருக்கறவங்க என்ன நினைப்பாங்க? " என கேட்க..எதையும் காதில் வாங்கதது போல...வண்டியை கிளப்பினான்.
சில நிமிட பயணத்தில் ஏதே யோசனையுடன் வண்டி ஓட்டியவன் என்னை சீரியஸாக பார்த்து திரும்பி..."சாமி.. இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு சாமி ?"
"இப்ப லேட்ட போனா அங்க பேசுவாங்க பாரு அவங்க தான் அது" என சொல்லி நிறுத்திக் கொண்டேன்.
இருந்தாலும் மனசு கேட்கவில்லை, அவன் ஏதோ தெரிந்த கொள்ள கேட்டிருப்பானோ என நினைத்து விவரிக்க தொடங்கினேன்...
"சுப்பு... அந்த நாலு பேரு யாருனு பலர் பல வித விளக்கம் கொடுத்திருக்காங்க....சிலர் மாதா, பிதா, குரு,தெய்வம் இவங்க தான் அந்த நாலு பேருனு சொல்றது உண்டு.
தாய், தந்தையை இப்ப யாரு மதிக்கறா? முதியோர் இல்லம் பெருகிட்டு வரும் இந்த காலத்தில அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கேட்க யார் இருக்கா? தாய் தந்தைக்கே இந்த நிலைனா...குருவையும் தெய்வத்தையும் பத்தி சொல்ல வேண்டியது இல்லை. தாய் தந்தைக்கு முதியோர் இல்லம் போல, குருவுக்கு ஆஸ்ரமம், தெய்வத்திற்கு கோவில்னு இவன் ஒதுக்கிவச்சு வாழும் மனிதன் இவங்க நாலு பேர் பேசும் பேச்சை முக்கியமானதாக எடுத்துக்குவாங்கலானு தெரியலை. இதைவிட இவங்க நாலு பேரும் நாலு விதமா பேச மாட்டாங்க. நம்ம முன்னேற்றத்தை பத்தி மட்டும் பேசுவாங்க. அதனால அந்த நாலு பேரு இவங்களா இருக்க சாத்தியம் இல்லை.
பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர்.
இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க
அர்த்தார்தி சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும்.
ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு...ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை.....இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் அவங்களோடது.
கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு ..கடவுளுக்கே வரம் கொடுப்பாங்கலாம்.
எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் ஸ்ரீக்ருஷ்ணர். அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனு சொல்றார்.
இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட.... அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம். ..."
சாதாரணமா சுப்பாண்டி கேட்ட கேள்விக்கு பகவத் கீதையிலிருந்து தகவல் எடுத்து சொன்ன திருப்தியில் அவனை பார்த்தேன்.
"நீங்க இந்த நாலுல எது சாமி? "என்றான் சுப்பாண்டி.
வேற யாரு.......ஆர்த்தன் தான் - சாமி இந்த சுப்பாண்டி இப்படி இருக்கானே இவனை சரியாக்கி என்னை காப்பத்துனு உன்னால பிரச்சனை வரும் போது எல்லாம் கடவுளை வேண்டிக்கறனே...அதனால ஆர்த்தன், என சொல்லிவிட்டு அவனை பார்த்தேன்.
கொஞ்சம் லேட்டான பதட்டத்தில இருப்பீங்களேனு ஒரு கேள்வியை கேட்டா, என்ன என்னமோ மொக்க போடறீங்க்களே சாமி..என சொல்லி வண்டியை 'ஓட்டுவதையும்' தொடர்ந்தான் சுப்பாண்டி.