Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 30, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 7

சங்கிய தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சென்ற பகுதியில் விளக்கினேன்.


மனிதனின் உள் நிலையின் பகுதிகளே சாங்கியம் விளக்குகிறது. உனக்குள் இருப்பது மட்டுமே உண்மை நிலை என்கிறது சாங்கியம். ராமாயணம் மற்றும் மஹாபாரதங்கள் சாங்கிய தத்துவத்தின் கட்டமைப்பை கதாப்பாத்திரங்களாக கொண்டவை என்பதே உண்மையாகும். ஏதோ சில கதாசிரியரின் கற்பனையில் தோன்றியவை அல்ல. இது சாங்கிய தத்துவத்தின் விளக்க வடிவம்.

சாங்கிய வரைபடத்தில் கூறப்படும் அறிவு என்பது என்ன? ஸாத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்றால் என்ன? என கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் சாங்கிய தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாமல் வேறு திசையில் பயணிக்க வேண்டி வரும். ஆனால் சாங்கியத்தை நாம் கதைவடிவிலும் கதாப்பத்திரத்தின் செயல் வடிவிலும் புரிந்துகொள்வது எளிது.

உதாரணமாக ராமாயணத்தில் தசரதனின் இடத்திலிருந்து ராம கதை துவங்குகிறது. தசரதனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் புத்திரன் கிடைக்க யாகம் செய்கிறார். தசரதனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் அறுபதனாயிரம் துணைவிகள்.

தசரதன் என்ற பெயரை கவனியுங்கள். பத்து ரதத்தையும் கட்டுப்படுத்த தெரிந்தவன் என அர்த்தம். ஞானேந்திரியம் மற்றும் கர்மேந்திரியத்தை சேர்த்து பத்து முக்கிய இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் தசரதன். அவனுக்கு ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் கொண்ட மூன்று மனைவிகள் முறையே கெளசல்யா, கைகேயி, சுமித்ரா. ஞானேந்திரியம், கர்மேந்திரியம், தன்மத்திரைகள் மற்றும் பஞ்சபூதம் ஆகிய இருபதும், மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.

ஸாத்வ குணம் என்பது ஆன்மீக நிலை மற்றும் மேன்மையான குணம் என்பதால் கெளசல்யாவிற்கு ராமர் என்ற ஆன்மா ரூபம் குழந்தையாக பிறக்கிறது. கைகேயி ரஜோகுணம் கொண்டவள் என்பதால் அவளுக்கு பரதன். ரஜோகுணம் பதவி மற்றும் போக நிலையில் வாழ்தலை குறிக்கும். இதனால் கைகேயி பரதனுக்கு முடிசூட்டவேண்டும் என கேட்கிறாள். சுமித்ரா என்ற தமோநிலையில் இருப்பவளுக்கு லட்சுமணன் மற்றும் சத்ருகன் பிறக்கிறார்கள். கோபம் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் என்பது தமோநிலை குணங்களாகும். அதனால் லட்சுமணன் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவனாகிறான்.

சீதா என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மனித பிறப்பு போல இல்லாமல், மண்ணுக்குள் இருந்து கிடைக்கிறாள். ராமாயணத்தின் முடிவில் சீதா மண்ணுக்குள்ளேயே சென்றுவிடுகிறாள். சீதா பிருகிரிதி ரூபமாக காட்சி அளிக்கிறாள். இயற்கையே வடிவானவள். அதனால் பொறுமையின் சிகரமாகவும், இராவணனிடம் கோபம் கொண்ட சீற்றமாகவும் காணப்படுகிறாள்.ஆன்மா என்ற புருஷார்த்த நிலையில் இருக்கும் ராமர், தன் சுய தன்மையையும் பிரகிருதி சீதையை விட்டு விலகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ப்ராண சக்தி என்ற அனுமான் (வாயு புத்ரன்) மூலம் மீண்டும் இணையும் தன்மையே ராமாயணம்.

நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.

உங்கள் சுவாசத்திற்கே தெரியாது அதற்கு எத்தனை விஷயங்கள் செய்ய முடியும் என்பது. அது போலத்தான் ஹனுமானுக்கு தன் சுயபலம் தெரியாது. வேறு ஒருவர் சொல்லுவதை கொண்டே தன் பலத்தை உணர முடியும் என்கிறது ராமாயாணம். குரு கூறும் ப்ராணாயம முறைகளை கொண்டு உங்களின் சுவாசத்தை சரி செய்தால் நீங்களும் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதே இதன் பின்னால் உள்ள கருத்து.

இவ்வாறு விளக்க துவங்கினால் ராமாயணத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நம்மால் முழுமையாக உணர முடியும். சாங்கிய கருத்தை வெவ்வேறு கதாப்பாத்திரம் வாயிலாக கூற முனைவதே இதிஹாசங்கள்.

சாங்கிய கட்டமைப்பையும் அதனால் ஏற்படும் இதிஹாச தொடர்பையும் உணர்ந்தீர்கள் அல்லவா? இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் எளிமையாக பதில் கூறமுடியும்.

இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?
இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?
விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?

இதற்கெல்லாம் உங்களால் உடனுக்குடன் பதில்கூற முடிகிறது என்றால் நீங்கள் சாங்கிய கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொண்டீர்கள் என அர்த்தம்.

இப்பொழுது சொல்லுங்கள் ராமாயணம் உண்மையா? நடந்த கதையா? இல்லை நடக்கின்ற கதையா?

(வினை தொடரும்)

Thursday, May 26, 2011

தென்கைலாய திருப்பயணம் - 2011

அருள்பொருந்திய ஆன்மாக்களுக்கு,

ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.

இறையருளால் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையில் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் ஜூன் மாதம் 10,11ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி) இரு நாட்கள் மலைப்பயணம் இருக்கும்.

தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.

இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!

இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.

எல்லோரும் கலந்து கொள்ளலாமா? - இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.

1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

10ஆம் தேதி காலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (11ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.

பதினைந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 5ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.

ஆன்மீக அற்புதங்களை உணர நீங்கள் தயாரா?

Tuesday, May 24, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 6

கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை ஏதோ தனக்கு தோன்றிய கருத்து என விளக்கவில்லை. மிகவும் அறிவியல் ரீதியாக படிப்படியாக விளக்குகிறார். இங்கே அறிவியல் என நான் குறிப்பிடுவது நவீன அறிவியலை அல்ல. மெய்ஞானத்தை அறியும் விஞ்ஞானத்தை கபிலர் கையாண்டார் என்கிறேன்.

நம் உடல் என்பது எத்தகையது. அதன் இயக்கங்கள் தோற்றங்கள் ஆகியவற்றை அவர் விளக்கும் அமைப்பு அலாதியானது. சாங்கிய தத்துவம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது அல்ல. குருபரம்பரை மூலமாக கூறப்பட்டும், தன்னகத்தே ஞானம் பெற்றவர்களால் உணரப்பட்டு விளக்கப்படுவதே சாங்கியம்.

நாம் தோற்றம் எங்கிருந்து வந்தது. நாம் எங்கே இருக்கிறோம். எங்கு செல்லப்போகிறோம் என கேள்விகள் மனிதனுக்கு தோன்றும் சமயம் சாங்கியம் அதற்கு பதில் அளிக்கிறது.

ஆன்மாவானது ப்ரகிருதி எனும் இயற்கை நிலையுடன் இணைந்து அறிவை தோற்றுவிக்கிறது. அவ்வறிவு அஹங்காரம் எனும் தன்முனைப்பை ஏற்படுத்துகிறது. எங்கே தன்முனைப்பு ஏற்படுகிறதோ அங்கே பிறப்பு நிகழுகிறது. முக்குணங்கள் பிறந்து அக்குணங்களின் தன்மைக்கு ஏற்ப நம் புலன்களும் இப்பிரபஞ்சமும் கண்முன் விரிகிறது.

இக்கருத்தை படமாக கீழே கொடுத்துள்ளேன். அதை பிரதி எடுத்து கையில் வைத்துக் கொண்டீர்களானால் இனி வரும் பகுதியில் நான் விளக்கும் பொழுது உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
படத்தின் மேல் அழுத்தி பெரிதாக பார்க்கலாம்

ஸாத்வ குணம் மூலம் தோன்றும் மனமே ஐபுலன்களை இணைக்கும் கருவியாக இருக்கிறது. மனம் என்பது நம் தோற்றம் அல்ல. மனம் என்பது நம்மில் ஒரு உறுப்பு ஆகும். எனவே இதில் நீங்கள் உணர வேண்டியது மனம் அற்ற நிலை என்பது சாத்தியம் உண்டு. மனம் இல்லையேல் அங்கே குணம் மட்டுமே உண்டு. புலன்கள் இல்லை.
இத்தகைய மனமே உங்களுக்குள் போலியான உலகை ஏற்படுத்துகிறது. ஸாத்வ குணம் மூலம் நினைவு நிலையில் ஓர் உலகையும், தமோகுணம் மூலம் கனவு நிலையில் ஒரு உலகையும், ரஜோ குணம் மூலம் பாதி விழிப்பு நிலையில் இரு தளத்திலும் பயணிக்க செய்கிறது.

மூன்று குணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது நான் என்ற அஹங்காரம். தன்முனைப்பு என்ற அஹங்காரமே நம் செயலுக்கு காரணமாக இருக்கிறது. உங்களுக்குள் நான் என்ற முனைப்பு எங்கே தோன்றுகிறது என பாருங்கள். அந்த பகுதியை பிடித்தீர்களானால் எளிமையாக அடுத்தடுத்த உயர்நிலைக்கு சென்று உங்களின் உண்மையான தோற்றமான ஆன்ம நிலையை அடைய முடியும்.

ஆன்மீகவாதிகள் தங்களின் உள் பயணிக்கும் பொழுது கர்மேந்திரியம் மற்றும் ஞானேந்திரியத்திலிருந்து படிப்படியாக மேல் நோக்கி பயணிக்கிறார்கள். அனைவரும் ஆன்மா என்ற நிலையை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் தாங்கள் கண்டவற்றை தங்களின் கலாச்சாரத்திற்கு விளக்கினார்கள். அதுவே மதமாக பரிணாமித்தது.

ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் தான் மேல் நாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியானது. சமணத்தில் ஸத்வ குணமும் அஹங்காரமுமே முடிவு நிலையானது. பல்வேறு அடிப்படை மதங்கள் ஸத்வ குணம் என்பதில் உள்ள அன்பை போதிக்கிறது. சிலர் ப்ரகிரிதியை பெண் வடிவம் கொடுத்து அம்மனாக வழிபடுகிறார்கள். சிலர் புருஷார்த்தம் என்ற நிலையை சிவனாக வழிபடுகிறார்கள். இவ்வாறு பல்வேறு இறைவழிபாட்டின் சுவடுகளுக்கு அடிப்படை காரணமாகவும் காரணியாகவும் இருப்பது சாங்கிய தத்துவமே ஆகும்.

ஆன்மாவானது ப்ரகிருதியுடன் இணைந்து அறிவு பெற்று அஹங்கார நிலை அடைந்ததும் ஆன்மா தன்னை மறந்துவிடுகிறது. ஆன்மா தன்னை உணராமல் அஹங்காரத்தாலும் முக்குணத்தாலும் தான் ஐபொறியாக எண்ணிக்கொள்கிறது. இதனால் ஆன்மாவானது தன்னை வேறொன்றாக நினைப்பதால் வரும் சிக்கலே இது.

குயவன் ஒருவன் பானையை செய்வதை பார்ப்போம். குயவன் பானையை செய்ய களிமண்ணை சக்கரத்தில் வைத்து சுத்தும் பொழுது சக்கரத்தை சுற்றி வெற்றிடம் இருக்கிறது. அவன் பானையை வடிவம் கொடுக்கும் பொழுது பானைக்குள் இருக்கும் வெற்றிடமானது பானை வடிவில் சிறைப்பட்டுள்ளது. பானை இருக்கும் வரை அதன் உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. பானை உடைந்ததும் அந்த வெற்றிடம் முன்பிருந்த வெற்றிட நிலைக்கே கலந்துவிடுகிறது. கலந்துவிட்ட பின்னும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. அந்த வெற்றிடம் எதுவாக இருந்ததோ அதுவாகவே மாறிவிட்டது. இதையே ஆன்மா உருவாவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை என்கிறது சாஸ்திரம்.

ப்ரகிரிதியின் காரணமாக சிறைபட்ட புருஷார்த்தம் என்ற ஆன்மா தன் சுய வடிவினை இழக்கிறது. மீண்டும் தன் சுயத்தை பெறும் பொழுது அது ஞானம் என்றழைக்கப்படுகிறது.

இப்பொழுது சொல்லுங்கள், மனம் என்ற ஒரு உறுப்பால் உங்களின் ஐபுலன்களும் உந்தப்பட்டு நீங்கள் வாசிக்கும் இவ்வரிகள் உண்மையானதா? ஆன்மா என்ற சூரியனின் ஒளி , மனம் என்ற தார் சாலையில் விழும்பொழுது உண்டாகும் கானல் நீர்தானே உடல் உறுப்புகள் ?

உங்களின் மெய் என்ற உடலில் உள்ளே இருப்பது தானே மெய்? இதை நீங்கள் கண்டால் உங்களின் பெயர் மெய் கண்டார்..! உங்கள் ஐபுலனும் அஹங்காரமும் கொண்ட உடலுக்கே பெயர் உண்டு. அதை கடந்தவர்களுக்கு என்றுமே ஒரே பெயர். மெய் கண்டார்...!

ஆன்மா என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்ததும் என்ன நிகழும்?

என் செல்ல எதிரி திருமூலர் எளிமையாக விளக்குகிறார் பாருங்கள்.

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே

எம்பிரான் என்னும் ஆன்மாவை சந்தித்தால் என்ன நடக்கும் என புரிகிறதா?

நான் பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இவ்வற்றை விளக்கினாலும் உங்களின் உள்ளே மாற்றம் நிகழும் பொழுதே இவற்றை உணர முடியும்.

சாங்கியத்தில் குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் உணர வேண்டுமானால் நீங்கள் புலன்களில் இயங்கக் கூடாது. இது சொல்வது எளிது நாம் கடும் முயற்சி செய்தால் மட்டுமே புலன்களை விடுத்து மேல்நிலையான அறிவு, பிரகிருதி என செல்ல முடியும். நாம் புலனில் இயங்கக்கூடாது என கூறும் பொழுதே அதை படித்துக்கொண்டிருக்கும் இந்த கண்கள் ஒரு புலன் தானே?

நாம் அஹங்கார ரூபமாக வெளி உலகை கவனிக்கையில் இயற்கையே (ப்ரகிருதி) ஒரு நாள் நம்மை ‘பளார்’ என அடித்து ஆன்மாவை நோக்கி திருப்பும். அன்று விழும் அடி என்றும் மறக்காது. அன்று விழும் அடியால் அனைத்தும் புரிந்துவிடும். அனேகமாக ஞானம் பெற்ற பலருக்கு இவ்வனுபவம் இருக்கும். இத்தகைய நிலை ஏற்பட்டு அஹங்காரம் உடைத்தெரியப்பட்டு சூன்ய நிலையில் இருப்பார்கள். விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். அப்பொழுது தான் தான்முனைப்பு ஏற்பட்டு தன்னுள்ளே கவனிக்க ஆரம்பிப்பார்கள். ஞானம் பிராசிக்கும்.

கெளதம புத்தர் உலகியல் இன்பங்களில் நாட்டத்துடன் இருக்கும் ஒரு நாள் இறப்பு, மூப்பு நோய் போன்றவற்றை கண்டதும் தன் சூன்ய நிலைக்கு சென்று தன்னுள்ளே தேடத்துவங்கினார்.

வேட்டையாடி உலகியல் இன்பத்தில் நாட்டங் கொண்ட வேடன், முனிவர்களின் கேள்வியால் தன்முனைப்பு பெற்று தன்னுள்ளே தேடத்துவங்கி வால்மிகியானான்.

வெற்றிமட்டுமே போரில் சந்தித்த ஒரு அரசன், திடிரென தோற்று போனான். தன் நாட்டை இழப்பதை விட தன் வெற்றியை இழப்பது இழுக்காகப்பட்டது. அஹங்காரத்தில் அடிவிழுந்தது.
விரக்தியின் உச்சத்தில் சூன்ய நிலைக்கு சென்றான். பகைவரிடத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள குகையில் அடைபட்டவனுக்கு தன்முனைப்பு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது. பிறகு அவன் பகைவனை மட்டுமல்ல தன்னையே வெற்றிக் கொண்டான்.

இப்படி ஞானிகளின் வாழ்க்கை எங்கே ஞானம் பெறும் இயக்கம் துவங்கியது என பார்த்தால் அவர்களின் அஹங்காரத்தில் விழுந்த அடி என உணரலாம். அதனால் ஏற்பட்ட சூன்யமே அவர்களை தன் ஆய்வுக்கு இழுத்து சென்றிருக்கிறது.

ஸ்வாமி ராமாயணம் மஹாபாரதம்னு சொல்லி இப்ப எங்கையோ கூட்டிக்கிட்டு போறிங்களேனு நினைக்கிறீர்களா? :)

வால்மீகி தன்னுள் கண்ட சாங்கியத்தை வரிவடிவில் வடித்தது தான் ராமாயணம். வியாசர் தன்னுள் கண்டதை வரிவடிவில் வடித்தது தான் மஹாபாரதம். இரண்டும் சாக்கிய வரைபடத்தின் வெவ்வேறு பரிமாணங்கள். அடிப்படையில் அனைத்தும் ஒன்றே.

சாங்கிய வரை படத்தை கையில் அச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இராமாயண கதாப்பாத்திரங்களை அதனுடன் ஒப்பிட்டு நோக்குவோம்..!

(வினைத் தொடரும்)

Friday, May 20, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 5

முழுமையான ஞானிக்கும், இறைவனை பற்றி தெரியாமல் இருக்கும் அறியாமை கொண்டவர்களுக்கு கடவுளை பற்றிய கவலை இருக்காது. முன்னவர் உணர்தவர், பின்னவருக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

அறியாமையில் இருக்கும் மக்களை விட கொஞ்சம் அறிந்தவர்களின் நிலை மிகவும் வேடிக்கையானது. எளிமையாகச் சொன்னால் நிறைகுடமும் காலி குடமும் தழும்பாது..!

பாதி நிறைந்த குடமான இவர்களின் அல்லாட்டம் இருக்கிறதே சொல்ல சொல்ல நிறைவடையாதது. இந்த பாதி நிறை குடங்களை அடையாளம் காண்பது எளிது. :)

கடவுளை பற்றி பேசினோமானால் உடனே ஒரு ரெடிமேட் டயலாக் வைத்திருப்பார்கள். “கடவுள் நமக்கு உள்ளேதான் இருக்கிறார், அவரை வெளியே தேடி என்ன பிரயோஜனம்?”

இவர்கள் இப்படி சொல்லுவதை கேட்பவர்கள் மெளனமாக இருந்தால் இவர்கள் பிழைத்தார்கள். அப்படி இல்லாமல், “நமக்குள்ள கடவுள் இருக்காருனு சொல்றீங்களே எங்க இருக்காரு? சுண்டு விரலிலையா? என் தலைக்குள்ளையா?” என கேட்டால், விதாண்டாவாதம் செய்யாதீங்னு சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள். இவர்களும் தம்முள்ளே இறைவன் எவ்வடிவில் இருக்கிறான் என ஆராயமாட்டார்கள்.

சிலர் கடவுள் மனசில் இருக்கிறார், அதனாலத்தான் “கட+உள்” என சொல்லுகிறோம் என மெய்சிலிர்க்க வைப்பார்கள். கடவுள் அன்ம வடிவில் இருக்கிறார் என தாங்கள் எங்கோ படித்ததை அவிழ்த்துவிடுவார்கள்.

“நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்” எனும் சிவவாக்கியர் என்ற மெய்ஞான சித்தரின் பாடல் இவர்களிடம் சிக்கி படும்பாடு இருக்கிறதே என்னவென்று சொல்ல? நாதன் நம்முள்ளே இருக்கார் என சொல்ல இப்பாடலை சொல்லியாகிவிட்டது. நாதன் நம்முள்ளே எங்கே எதுபோல இருக்கிறார் என ஆராய்ந்ததுண்டா? நம்மில் வியர்வையாக? இரத்தமாக? சீழாக? மலமாக நம்முள் என்னவாகத்தான் இருக்கான் அந்த நாதன்? இவ்வாறு அழுத்திக்கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் “இப்படி பேசாக்கூடாது.உம்மாச்சி கண்ணக்குத்தும்”- தானும் ஆராயாமல், பிறரையும் ஆராயவிடாமல் இருக்கும் இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலே சாங்கிய தத்துவம்.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான இறைத்தத்துவங்கள் உண்டு. அதில் முதன்மையானதும் அற்புதமான தத்துவம் சாங்கியம். கபிலர் என்ற முனிவர் இத்தத்துவத்தை தோற்றுவித்தார் என் கூறப்பட்டாலும், சாங்கிய தத்துவத்தின் வரலாறு குழப்பமாகவே உள்ளது. கபிலர் இந்தியர் எனவும், இல்லை அவர் வெளிநாட்டினர் என்றும் பல கதைகள் உண்டு. கபிலர் பிறந்த இடம் காலிபோர்னியா என சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆன்மீக தத்துவத்தை கண்டுபிடுத்தவரை விட நமக்கு தத்துவம் தானே முக்கியம்? சாங்கிய தத்துவத்தை எளிமையாக சொல்ல முயல்கிறேன்.

“நான் என்ற இருப்பே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.” இதுவே சாங்கியத்தின் ஆதார வரிகள்.

நீங்கள் பார்க்கும் உலகம், இந்த வரிகள், கம்ப்யூட்டர் என அனைத்தும் பொய். இது நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் மாய தோற்றம். உண்மையில் நீங்கள் இருப்பது மட்டுமே நிஜம்..!

இக்கருத்தை உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம். அப்பொழுது இந்த உலகமும் அதன் இருப்பும் எங்கே சென்றது?

அதே போல கனவில் பல இடங்களையும் மனிதர்களையும் காண்கிறோம். முழித்தவுடன் அவை எங்கே சென்றன?

ஆக நம் உறக்கத்திலும், விழிப்பிலும் காண்பது உண்மையல்ல. நாம் இருப்பது மட்டும் தானே நிஜம்?

இயல்பாகவே பொய்யை பற்றி தெரிந்துகொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம். மெய்யை பற்றி தெரிந்துகொள்ள கசக்கும்..!

பாருங்கள் தமிழில் கூட நம் உடலுக்கும் உண்மைக்கு ஒரே சொல், “மெய்”. ஒரு சித்தரின் பெயர் கூட மெய்கண்டார். இவர் கண்ட மெய்யை நாமும் கண்டுகொள்ளப் போகிறோம்.

இதுவரை நாம் மேலோட்டமாக பார்த்த விஷயங்கள் எளிமையாக தோன்றலாம். இனிவருவது கதை படிப்பதை போல படித்தால் புரியாது. அடுத்த பகுதியை படிக்க அமைதியான சூழலும், கவனம் தேவை...!

அதுவரை வேதமந்திரத்தின் ஒருவரியை கூறிக்கொண்டிருங்கள்.

அசத்தோமா சத்கமைய.....

பொய்மையிலிருந்து மெய்மை அடைய வேண்டும்.. பெய்மையான புறத்தைவிட்டு மெய்யான அகத்தை காண வேண்டும்...!

(வினைத்தொடரும்)

Tuesday, May 17, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 4

மண் கொண்டு செல்லும் மாட்டு வண்டி சுமந்து செல்லும் மண்ணின் சிறு பகுதியை பயணம் செய்த வழி எல்லாம் தூவிச்செல்லுவதை பார்த்திருக்கிறீர்களா? அதுபோல நம் பாரத கலாச்சாரம் ஆன்மீக நிலையில் கடவுள் என்ற தத்துவத்தை பல்வேறு வகையான விளக்கம் கொடுத்துள்ளது. அவை பல்வேறு இடங்களில் தூவப்பட்டு பல்வேறு மதங்களாக கிளைத்தெழுந்தன. அனைவரும் கடவுள் கொள்கை கொண்ட அந்த சிறு மண்கட்டியை கொண்டு தாம் அறிந்ததை பிரம்மாண்டமானது
என்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் அந்த மண் சுமந்த மாட்டு வண்டியை முழுமையாக பார்த்ததில்லை. அதில் இருந்து சிதறி விழுந்த மண் கட்டிக்கே இந்த அளவு அவர்கள் பேசுகிறார்கள் என்றால் மண் வண்டியே இவர்களிடம் கிடைத்தால்?

அதுபோல நம்மிடையே பலர் பாரத கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்பார்கள், பலர் இந்து மதத்தை காப்பேன் என்பார்கள். ஆனால் இவர்களுக்கு நம் கலாச்சாரத்தின் மூலம் எது? அது எப்படி தோன்றியது போன்ற விஷயங்கள் தெரியாமலேயே வரட்டுத்தனமாக கோவிலை காப்பாற்றுகிறேன், இறைவனையே காப்பாற்றுகிறேன் என குதிப்பார்கள்.

நம் கலாச்சாரத்தில் ஆன்மீகம் தோன்றியவுடன் சொன்ன முதல் வாசகம் என்ன தெரியுமா? “கடவுள் இல்லை..!”

நீங்கள் நினைப்பது போல நாத்தீக ரீதியான “கடவுள் இல்லை” என்பதல்ல இது. நீ நினைப்பதெல்லாம் கடவுள் இல்லை என்பதே இவ்வாசகத்தின் உள்பொருள்.

சில வரலாற்று அறிஞர்களும் இலக்கியவாதிகளும் வேத ரிஷிகள் பலர் நாத்திகர்கள் என்பார்கள். அது முற்றிலும் தவறு. என்னை பொருத்த வரை கடவுளின் இருப்பை நம் கலாச்சாரத்தில் யாரும் மறுத்ததில்லை.

அவர்கள் மறுத்தது எல்லாம் கடவுள் என நீங்களாகவே முடிவு செய்தவை தவறு என்பது மட்டுமே ஆகும்.

நம் கலாச்சாரத்தின் ஆன்மீக மூலத்தை தெரிந்துகொள்ளாவிட்டால் இதிகாசங்கள், புராணங்கள் என எதையும் தெரிந்து கொள்ள முடியாது. ஏன் நம்மை பற்றியே தெரிந்துகொள்ள முடியாது.

நம் கலாச்சாரத்தில் முதலில் ஆன்மீகம் துளிர்விடும் பொழுது சின்ன செடியாக இருக்கவில்லை. எடுத்தவுடனேயே அது விஸ்வரூப நிலையில் பிரம்மாண்ட ஆலமரமாக இருந்தது. சராசரி மக்களுக்கு இது மிகவும் அதிகமான விஷயம், இப்படிபட்ட பேருண்மையை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த ரிஷிகளும் ஞானிகளும் எளிமையாக்கி நமக்கு கொடுத்தனர். அப்படி எளிமையாக்கிய விஷயமே மதமாக நம்மிடையே இருக்கிறது.

அப்படி நம் கலாச்சரத்தில் தோன்றிய பிரம்மாண்ட விஷயத்தை தான் இனி பார்க்கப்போகிறோம்.

இந்த பிரம்மாண்ட விஷயத்திற்கு என்ன பெயர்?

கோவில், பூஜை என எதுவும் பின்பற்றாமல் விட்டேந்தியாக திரியும் நபரை வயதானவர்கள் “சடங்கு சாங்கியம்’ தெரியாம வளர்ந்துட்டான் என்பார்கள் அல்லவா?

வேதத்தின் ஆறு பகுதியை ஷட்-அங்கம் என்பார்கள். அதுவே தமிழில்
மருவி சடங்கு என ஆனது. அப்படியானால் சாங்கியம் என்றால்?

நம் கலாச்சாரத்தில் தோன்றிய முதல் ஆன்மீக சிந்தாந்தம்தான் இந்த சாங்கியம் ஆகும். இதுவே அந்த பிரம்மாண்ட விருட்சம்.

இது என்ன சொல்லுகிறது தெரியுமா?

நீ இருப்பது மட்டுமே நிஜம். மற்றவை அனைத்தும் பொய்..!

எளிமையாக சொன்னால் “அஹம் பிரம்மாஸ்மி..!”

(வினைத் தொடரும்..)

Tuesday, May 10, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 3

இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டன என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. உருவாக்காமல் பிறகு எப்படி வந்திருக்கும் என்ற கேள்விக்கு பிறகு விடை காணலாம். முதலில் உருவாக்கப்பட்டது என்ற திசையில் விவாதிப்போம்.

இதிஹாசங்கள் மனிதனை நல்வழிப்படுத்த சொல்லப்பட்ட ஒழுக்கவிதி கதைகள் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டால் ஒழுக்கத்தை மட்டுமே போதிக்கிறது என கூற முடியாது. ஸ்ரீராமர் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தார் என கூறும் பொழுது மஹா பாரதத்தில் குந்தியின் புதல்வர்களான பாண்டவர்கள் மற்றும் கர்ணனின் பிறப்பு இதற்கு முரணாக இருக்கும். மேலும் பஞ்ச பாண்டவர்கள் திரொளபதியுடன் வாழ்ந்தது ராமாயணத்திற்கு முரண் அல்லவா? அப்படியானால் ஒழுக்க விதிகள் எங்கே கூறப்பட்டுள்ளது?

பஞ்சபாண்டவர்கள் மற்றும் கெளரவர்களின் தந்தைகளாகிய திருதிராஷ்ரர், பாண்டு மற்றும் விதுரர் என்ற மூவரின் பிறப்பின் தன்மையை கேட்டீர்களானால் நம் நாட்டில் கலாச்சாரம் ஒழுக்கவிதிகள் தகர்ந்து போகும்.

நாகரீக வளர்ச்சி என்பது முதலில் ஒருவர் பல பெண்கள் என வாழ்ந்து, சமூகம் வளர்ச்சி அடைந்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தால் அது பரிணாமம் என கூறலாம். ஆனால் ராமாயணம் என்ற முதல் இதிஹாசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என வலியுறுத்தப்பட்டு அடுத்த இதிஹாசத்தில் ஸ்ரீகிருஷ்ணர் துவங்கி பலருக்கு பலதாரம் அதுவும் பலதரம்...!

மேலும் பல வேடிக்கையான முரண்கள் இதிஹாசத்தில் இருக்கிறது.

இராவணனுக்கு பத்து தலை :

நினைத்து பாருங்கள் பத்து தலையுடன் யாரையாவது பார்த்ததுண்டா? அப்படியே ஒருவருக்கு பத்து தலை இருப்பதாக வைத்துக்கொண்டால் ஒரு கழுத்தில் ஒரு தலை இருக்கும் வலபக்கம் நான்கு தலையும், இடப்பக்கம் ஐந்து தலையும் இருக்கும் அல்லவா? அப்படியானால் தலைகள் நேராக இல்லாமல் அதிக தலை கொண்ட பக்கம் சாய்ந்த வண்ணம் கோணலாகிவிடுமே? அதையெல்லாம் விடுங்க.. ராவணன் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டுமானால் எப்படிப்படுப்பான்? இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..!

கும்பகர்ணன் தூக்கம் :

ஆறு மாதம் தூக்கமும் ஆறுமாதம் விழிப்பும் கொண்டவன் கும்பகர்ணன். பிரம்மாவிடம் வரம் கேட்கும் பொழுது ‘நிர்தேவத்துவம்’ (தேவர்கள் அழிய வேண்டும்) என்பதற்கு பதில் டங் ஸ்லிப் ஆகி ‘நித்ரதேவத்துவம்’ (எப்பொழுதும் தூக்கத்தில் இருக்க வேண்டும்) என்ற வரம் பெற்றனாம். அப்புறம் பிரம்மா அவனுக்கு வரம் கொடுத்து அதை ஆறு மாதமாக குறைத்தாராம். சரி ஒரு முறை தப்பாக வரம் வாங்கியாச்சு, விழிப்புடன் இருக்கும் ஆறு மாதத்தில் தவம் இருந்து இந்த வரத்தை இல்லாமல் செய்ய மற்றொரு வரம் வாங்கலாம் அல்லவா? இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..!

ஸ்ரீராமன் :

ஸ்ரீராமர் அவதார புருஷராம். கடவுளின் அவதாரமாம். அப்படியானால் தன் மனைவியை ஒருவன் கவர்ந்து செல்ல போகிறான் என்பதை ஏன் முன்னரே தெரிந்து கொள்ள முடியவில்லை? அதுவும் எதிர்பாராமல் ராவணன் தூக்கி சென்றால் சரி எனலாம். சூர்ப்பனகைக்கு மூக்கு அறுபட்டதும் அவள் ஏதேனும் செய்வாள் என கணிக்க முடியாதா?
இது போதாது என தன் மனைவியை டீ குடிக்க சொல்லுவது போல அடிக்கடி தீக்குளிக்க சொல்லுகிறார். இவர் மனைவியும் கணவன் சொன்னதை திறம்பட செய்கிறார். நவீன பெண்கள் இதை ஆணாதிக்கமாக உருவான கதை என்பார்கள். இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..! கேட்டால் சாமி கண்ணை குத்து என்பார்கள்...!

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். இது போல பெரிய லிஸ்ட் மஹாபாரதத்திலும் உண்டு. கேள்விகளை பார்த்து என்ன ஸ்வாமி ஒருவழியா நீங்களும் ‘அப்படி’ மாறிட்டீங்களா என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.

நம் சிறு அறிவுக்கே இப்படி கேள்விகள் தோன்றும் பொழுது இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டதாக கொண்டால் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்காமல் இருப்பார்களா?
அதனால் தான் சொல்கிறேன் இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டிருந்தால் இப்பிரச்சனைகள் வந்திருக்காது. இது உருவானது என்பதை விட இது என்றும் உருவாகிய வண்ணமே இருக்கிறது.

இதிஹாச உண்மைகளை தெரிந்துகொள்ளும் முன் நம் ஆன்மீக கலாச்சாரத்தையும் கடவுள் என்ற சித்தாந்தத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகிலேயே கடவுள் குழப்பம் அதிகம் உள்ள ஊரு நம்ம ஊருதான். அதனால் இதிஹாச உண்மைகளில் தேடலை கடவுளில் இருந்து நாம் துவங்குவோம்..!

(வினைத் தொடரும்)

Friday, May 6, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா? - பகுதி 2


ஆழ்ந்த அமைதி கொண்ட அடந்த வனப்பகுதி அது. தூரத்தில் சில பறவைகளின் ஒலியும் அருகே சில வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு எதுவமற்ற ஆழ் அமைதி கொண்ட வனம். ஆழ்ந்த மெளத்தில் ஆழ்ந்திருந்து மெளனத்தின் ரூபத்தை காணும் நோக்கத்தில் ரிஷிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். தாங்கள் எதிர்பார்த்த இடம் கிடைத்த திருப்தியில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது....

வனத்தின் ஆழ்ந்த அமைதியை கலைத்தவண்ணம் எங்கிருந்தோ ஓர் அம்பு புறப்பட்டு வந்தது. அவர்களின் கால்களின் அருகில் குத்தி நின்றது. அம்பு வந்த திசையை பார்த்தனர். யாரும் இல்லை.

அமைதி...

மீண்டும் அடுத்த அடி எடுத்த வைக்க முற்பட்டனர். மீண்டும் ஓர் அம்பு அவர்களின் கால்களுக்கு பக்கம் வந்து நின்றது. ரிஷிகள் தங்களுக்குள் சலனமற்று அதே இடத்தில் நின்றனர். சில நொடிகளில் மரங்களின் கிளைகள் சலசலக்க வனத்தின் அமைதியை கலைக்கும் வண்ணம் பேரும் இரைச்சலுடன் ஒரு ஒருவம் இவர்கள் முன் குதித்து நின்றது.

உடல் முழுவதும் கரும்பச்சை வண்ணம் பூசப்பட்ட உருவம். இடையில் சிறிய தோலால் ஆன ஆடை. கற்களை கூர்மையாக்கிய கத்திகள் இரு கைகளில் தாங்கிய வண்ணம் ரிஷிகளின் கூட்டத்தை வழி மறித்தான்

அவன்.

கையில் உள்ள கல் கத்தியால் தன் செம்பட்டை முடியை கோதிய படி கறைபடிந்த பற்களை காட்டி சிரித்தான். ரிஷிகளிடம் எந்த சலனமும் இல்லை.

“ம்.......உங்களிடம் விலைமதிக்க முடியாத அனைத்தையும் எடுத்து என் முன் வைத்துவிட்டு ஓடிவிடுங்கள். இல்லை என்றால் ஒருவர் கூட உயிருடன் செல்ல முடியாது” என்றான் அவன்.

“எங்கள் உயிரை பற்றி கவலையில்லை. உனக்கு யாரை கொல்ல வேண்டுமோ சொல் அவர்கள் உன் முன் வருகிறோம். நீ எதிர்பார்க்கும் விலைமதிப்பு கொண்டவை எங்களிடம் இல்லை. ஆனால் எல்லோரிடத்திலும் இல்லாத விலைமதிப்பற்ற பொருள் எங்களிடம் உண்டு. அதை வேண்டுமானால் தருகிறோம்” என்றனர் ரிஷிகள்.

உயிருக்கு பயந்தவர்களை பார்த்த இவனுக்கு உயிரை தர முன்வருபவர்களை பார்த்ததும் சந்தேகம் எழுந்தது. இவர்களிடம் உயிர்பயத்தால் பொருள் வாங்க முடியாது என உணர்ந்து,“ஓ அப்படியானால் அந்த பொருளை உடனடியாக தாருங்கள்” என்றான் அவன்.

“அதற்கு முன் அப்பொருளை நீ சரியாக கையாள முடியுமா என நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி கையாள தெரிந்தால் தான் இப்பொருளை நீ பெற்றுக்கொள்ள முடியும். அதனால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்”

சில நிமிட மெளனத்திற்கு பிறகு மெல்ல தலைய
சைத்தான் அவன்.

“இந்த வனத்தை கடந்து செல்லும் மனிதர்களிடம் நீ கொள்ளையடிக்கிறாயே அதனால் கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் உன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறாய். உன் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் நீ கொடுக்கும் பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். இச்செயலால் உனக்கு ஏற்படும் தீவினைகளை உன் குடும்பத்தார் அது போலவே பகிர்ந்து கொள்வார்களா?” எனக் கேட்டனர் ரிஷிகள்.

“இதில் என்ன சந்தேகம். எனக்காகத் தானே அவர்கள் வாழ்கிறார்கள்” என்றான் இவன்.

“அதை நீயாக சொல்லாதே..! நாங்கள் கேட்ட கேள்வியை உன் குடும்பத்தாரிடம் கெட்டு பிறகு சொல். அதுவரை நாங்கள் இங்கேயே நிற்கிறோம். உன் அம்பு இருக்கும் இந்த இடத்தைவிட்டு விலக மாட்டோம்.” என்றார்கள் ரிஷிபுருஷர்கள்.

ரிஷிகளின் வார்த்தையில் உண்மை தெரியவே தன் இருக்கும் வனப்பகுதிக்கு விரைந்தான் அவன். தன் குடும்பத்தாரிடம் ஒவ்வொருவராக கேட்டான்.

“நான் அளிக்கும் உணவையும், பொருளையும் பகிர்ந்து கொள்ளும் நீங்கள். அதை சேகரிப்பதால் ஏற்படும் தீவினைகளையும் பகிர்ந்து கொள்வீர்களா?”

எல்லோரும் கூறிய ஒரே போல, “நீ உணவையும் பொருளையும் கொடுக்க வேண்டியது என்பது உன் கடமை. அதனால் ஏற்படும் வினைகளை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றனர்.

அதுவரை தன் வாழ்க்கையில் கண்டிராத விரக்தியும் சூன்யத்தையும் உணர்ந்தான் அவன்.

நேராக வந்து ரிஷிகள் முன் தலை குனிந்து நின்றான். “ஐயா, நீங்கள் சொன்னது போல கேட்டேன். நான் நினைத்து போல இல்லை” என்றவனின் வார்த்தையில் மரியாதை மிகுந்தும் மிரட்டல் குறைந்தும் இருந்தது.

“இப்பொழுது தான் நாங்கள் எதிர்பார்த்த சூழலில் நீ இருக்கிறாய். வா எங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற ஒன்றை தருகிறோம்” என கூறினார்கள் ரிஷிகள்.

அவன் காதின் அருகே சென்று “மரா” என மூன்று முறை உச்சரித்து. “இவ்வாக்கியத்தை தொடர்ந்து உச்சரி. உனக்குள் இருக்கும் குழப்பத்திற்கு விடிவு கிடைக்கும். மேலும் அற்புதங்களை காண்பாய்” என்றனர்.

எந்த இடத்தில் தன் காதுகளில் மரா என சப்தம் கேட்டதோ அதே இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தொடர்ந்து உச்சரிக்க துவங்கினான்.

நேரம் நாளிலும், நாள் மாதத்திலும் புகுந்து வருடங்களாக கரைந்தன. அவனை சுற்றி கரையான் புற்று கட்டத்து வங்கி முற்றிலும் அவனை மறைத்தது.

ஒரு நாள் அவனுக்குள் ஞானச்சுடர் தோன்றியது. அச்சுடரின் ஒளியில் கண்டுணர்ந்ததை தன்னுள் சேமித்தான். புற்றிலிருந்து வெளிப்பட்டான்.

புற்றிலிருந்து வெளிவந்ததால் அவனை வால்மீகி என்றனர். புற்றுவழி வந்தவன் என அர்த்தம்.

கண்ணில் கண்டவர்களை கொள்ளை கொண்டவனை. புற்றின் உள்ளே ஒருவன் கொள்ளை கொண்டான். கள்வனாய் இருந்தவன் கடவுளை கண்டவன் என மாற்றமடைந்தான்.

மரா மரா என்ற நிலையில் ராம ராம என மாற்றம் அடைந்தான். ஆனால் இன்று நாம் ராம ராம என ராமனை மறக்க முயகிறோம்.

ராமாயணத்தை இயற்றியவர் என வடமொழியில் கூறப்படுபவர் வால்மீகி. தென்மொழியில் இராமாயணத்தை கம்பர் இயற்றினார்.

தவத்தாலும் ஞானத்தாலும் வந்தது பொய் கதையாக இருக்குமா?
அதனால் தான் சொல்லுகிறேன் இதிகாசங்கள் உண்மையே.

ஆனாலும் சில முரண்கள் அதில் இருக்கவே செய்கிறது.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வினைத் தொடரும்)

Monday, May 2, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா?


சில நாட்களுக்கு முன் என்னை சந்திக்க பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வந்தார். என் எழுத்தின் மூலமே என்னை பற்றி தெரிந்து கொண்டவர். பேச்சின் இடையே ராமாயணம் பற்றி பேச்சு எழுந்தது. ராமாயணம் அற்புதமானது என்றேன். அவ்வளவு தான்.

“சாமீ, நீங்க ராமாயணம் நடந்த விஷயம்னு சொல்றீங்களா? அது கற்பனை கதையாச்சே. நீங்க இதை உண்மைனு சொல்லுவீங்கனு நான் நினைக்கவே இல்லை” என நொந்து கொண்டார். இதற்கும் அவரின் பெயர் ராமாயண கதாபாத்திரத்தின் அடிப்படையில் இருந்தது...!

இவரை போல பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த வலைப்பக்கத்தை படித்துவிட்டு நான் ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சிலைக்கு செருப்பு மாலை போட சொன்னாலும் சொல்லுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.

ராமாயணமும் மஹாபாரதமும் ஏதோ ஒரு கதாசிரியர் கற்பனையில் உதித்த கதைகள் என்றும் அதனால் கவரப்பட்ட மக்கள் அந்த கதாபாத்திரத்தையே கடவுளாக்கிவிட்டனர் என்றும் பலர் நினைக்கிறனர்.

மீண்டும் சொல்லுகிறேன் “ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”

நம் கலாச்சாரத்தில் இதிகாசம், புராணம் மற்றும் காவியம் என மூன்று விஷயங்கள் உண்டு. வட மொழியில் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தை ‘இதிஹாஸ்’ என கூறுவார்கள். அதற்கு ‘இவ்வாறு நடந்தது’ என அர்த்தம்.

புராணம் என்பது மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் விளக்க கோட்பாடுகளை எளிய கதையாக கூறும் எழுத்து வடிவம். இதில் கற்பனை பாதியும் மெய்ஞான கோட்பாடுகள் மீதியும் இருக்கும். காவியம் என்பது முழுக்க முழுக்க கற்பனையால் ஆனது.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஒரு காலத்தில் நடந்தது என்பதாலேயே இதிஹாசம் என கூறுகிறார்கள் அல்லவா? அதுவும் பகுதி அளவு உண்மைதான்.

இலக்கணத்தில் வினைத்தொடர் என ஒரு கருத்தை சொல்லுவார்கள்.

ஒரு செயல் மூன்று காலத்திலும் நடந்தால் அது வினைத்தொடர் என நினைக்கிறேன். (தமிழ் புலவர்கள் வழிகாட்டுக.) உதாரணம் ஊறுகாய் என என் தமிழாசிரியர் கூறினார். அன்று அவர், “ஊறிய காய், ஊறுகின்ற காய் மற்றும் ஊறும் காய்” என வினைத்தொடருக்கு சரியான உதாரணம் கூறியதால் இன்றும் எனக்கு ஊறுகாய் சாப்பிடும் வினை மட்டும் தொடர்கிறது.

இது போல இதிஹாசங்களும் வினைத்தொடர் தான். முன்பு நடந்தது, தற்சமயமும் நடக்கிறது.இனி மேலும் நடக்கும்..! ஆமாம் ராமாயணமும் மஹாபாரதமும் இன்றும் நடக்கிறது...!

முன்பு நடந்ததை பற்றி நமக்கு தெரியாது. இனி நடக்கப்போவதை பார்ப்போமா என உறுதி இல்லை. ஆனால் தற்சமயம் நடப்பதை காணலாம் அல்லவா?

தற்சமயம் ராமர் எங்கே? கிருஷ்ணர் எங்கே?

வாருங்கள் காண்போம்...

(வினை தொடரும்)