Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label யோகம். Show all posts
Showing posts with label யோகம். Show all posts

Sunday, July 27, 2025

நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை

ஜெர்மனியில் நடைபெற்ற யோக மாநாட்டில் தான் முதன்முதலில் ‘ஐயங்கார் யோகா’ என்ற பெயர் கேட்டேன். திராவிட பூமியில் வாழும் எனக்கு உடனடியாக ஒரு புரட்சி மோடில் சிந்தனை உருவானது. ‘ஐயங்கார் யோகா’ என்றால் பிற ஜாதியினருக்கும் தனித்தனி யோகா இருக்கிறதா? எங்கே சமத்துவம்? எங்கே சமூக நீதி? என்று கார்ல் மார்க்ஸ் பிறந்த பூமியில் நின்று கேள்விகள் எழுப்பினேன்.

பின்னர் தான் தெரிந்தது, யோக முறையில் பி. கே.எஸ். ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகை யோகா தான் ‘ஐயங்கார் யோகா’.

ஐயங்கார் யோகாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, யோக மரபின் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். யோக மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் நிலவி வரும் ஓர் ஆன்மீக மரபு. இதில் பல்வேறு யோக முறைகள் அடங்கும். இராஜ யோக மரபில் அஷ்டாங்க யோகத்தில் உள்ள ஆசனங்கள், ப்ராணாயாமம் போன்றவை நாத பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்டவை. மச்சீந்தர நாதர் மற்றும் கோரக்க நாதர் பல நூல்களை எழுதி ஹத யோக மரபை உருவாக்கினார்கள். ஹத யோக ப்ரதீபிகா என்ற நூலை ஸ்வாத ராமா (ராமநாத்) என்ற நாத வழி அறிஞர் எழுதியவர். இன்று வரை கோரக்கர் மற்றும் ஸ்வாதராமரின் நூல்களே ஹத யோகத்திற்கு ஆதாரமாக உள்ளன. தமிழில் ‘திருமந்திரம்’ ஹத யோகத்தைப் பற்றிச் சொல்லும் முக்கிய நூலாகும். இதில் மூன்றாம் தந்திரம் யோக மரபுகளுக்கான ஆதார நூலாக இருக்கிறது. அதில் ஹத யோக முறைகளும் விளக்கப்படுகின்றன.

முந்தைய யோக நூல்களில் எதிலும் ‘யோகம் இவ்வகை நோயை தீர்க்கும்’ என கூறப்படவில்லை. ஹத யோகம் ஆன்மீக உயர்வுக்கான கருவியாகவே விளக்கப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் யோக முறை பல நவீன பாய்ச்சல்களை சந்தித்தது. ‘மாடர்ன் யோகா’ என்ற பெயரில் தனது மரபை மாற்றிக்கொண்டு, ஹத யோகத்தின் முக்கிய உறுப்புகளான ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா மற்றும் பந்தா ஆகியவற்றில், ஆசனம் மற்றும் ப்ராணாயாமத்தையே முன்னிறுத்தி பயிற்சிகள் அளிக்கபட்டன. இவ்வாறான நவீன யோக மரபுகள் முக்கியமாக எதை மறைத்தது என்றால் கோரக்கர் மற்றும் நாத பாரம்பரியத்தால் ஹத யோகம் தோன்றியது என்ற வரலாற்றை தான்.

இன்று ஹத யோகத்தை பயிலும் பெரும்பாலானவர்களுக்கு கோரக்க நாதர் மற்றும் அவர் எழுதிய முதல் யோக நூல் பற்றிய தகவலே தெரியாது.

நவீன யோக மரபினர் யோகத்தின் தந்தையாக பதஞ்சலியை குறிப்பது வழக்கம். யோக சூத்திரம் போன்ற நூல் மூலம் அவர் தன் பங்களிப்பை செய்திருக்கலாம். ஆனால் அவர் கூறும் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்ற வரிகளில் ஆசனம் ஸ்திரமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் ஆசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை ஆசனங்கள் உள்ளன என்பதற்கான வழிகாட்டுதல் யோக சூத்திரத்தில் இல்லை. ஏற்கனவே ஹத யோக ப்ரதீபிகா போன்ற நூல்கள் இருந்ததால், பதஞ்சலி அவற்றைப் பற்றிக் கூற தேவையில்லை என்று எண்ணியிருக்கலாம்.

பகவத் கீதையிலும் யோக சூத்திரத்திலும் ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. ஆனால் ஹத யோகத்தை முறையாக விளக்கியவர் கோரக்க நாதர். எனவே ஹத யோகத்திற்கு தந்தை கோரக்கர் தான் எனலாம்.

நாத சம்பிரதாயத்தில் இயங்கும் எனக்கு நவீன யோக மரபில் ஏற்க இயலாத அம்சங்கள் பல உள்ளன. குறிப்பாக கோரக்கர், திருமூலர் போன்றவர்களை முற்றிலுமாக மறந்துவிட்டு, யோகத்தை சிகிச்சை பொருளாக மாற்றிவிட்டது முக்கிய குறைபாடாக உள்ளது.

“பச்சிமுகத்தாசனம் செய்தால் முதுகெலும்பு வலி போகும்”, “ப்ராணாயாமம் செய்தால் மன உளைச்சல் குறையும்” போன்ற சிகிச்சை நோக்குடன் யோக முறை விளக்கப்படுவது எனக்கு ஒத்துவராதது. சிகிச்சை நோக்கில் ஆசனம் செய்யப்படுவதால், ஆசனத்தின் உண்மை தன்மை குறைந்து விடுகிறது. இது காயகல்ப மூலிகையை பசிக்கு உணவாக கொடுப்பதைப் போன்றது.

இப்போது கூட ‘முத்திரை செய்தால் நோய் குணமாகும்’ என்ற வகையில் யோக முறைகள் பரப்பப்படுகின்றன. ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாழ்வியல் முறையாக செயல்படுத்தினால், அது அறியாமையால் ஏற்படும் துன்பங்களை போக்கும். அறியாமையை களைந்தால் ஆனந்தம் உருவாகும் — இவ்வளவுதான் யோகத்தின் கருத்து.

“கடன் தீர ஆசனம்”, “காதல் கைகூட ஆசனம்”  என யாராவது சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறதோ, அதே போலவே “வியாதி தீர ஆசனம்” என்பதும் அத்தகைய விஷயமே என்பது என் கருத்து.

நாள்பட்ட நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு யோக பயிற்சியாளர் ஒருவர் தீர்வு கூறிக்கொண்டே இருந்தாலும், அதே நபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது - யோகம் என்பது நோய் தீர்க்கும் கருவி அல்ல, அது அறியாமையை போக்கும் ஒரு உள்பார்வைக் கருவி.

இத்துடன் விட்டார்களா ? மேலைநாடுகள் “பீச் யோகா”, “பீர் யோகா” என பல வியத்தகு பெயர்களில் யோகத்தைத் தங்களுக்கே உரியதுபோல் மாற்றுகின்றனர். நம் நாட்டிலும் பலர் “வாட்ஸ்அப் யோகா”, “இன்ஸ்டாகிராம் யோகா” என மரபை சீர்குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எனினும், நவீன யோக மரபிலும் சில முக்கியமான வைரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள கைவல்ய தாம் என்ற நிறுவனம் மற்றும் ஐயங்கார் யோகா ஆகியவை ஹத யோக மரபை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி வரும் சிறந்த நிறுவனங்களாகும். முக்கியமாக ஹத யோக பயிற்சியை உலகளவில் பரப்பியவர் பி. கே.எஸ். ஐயங்கார்.

சமீபத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் பி. கே.எஸ். ஐயங்கார் எழுதிய நூலை தமிழில் ‘நலம் தரும் யோகம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த நூலை வாசித்து கருத்து சொல்ல கேட்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் பட்டு நெசவாளியிடம் பிகினி உடையைப் பற்றி கருத்து கேட்பது போல தான் - நான் இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதும்..! இருந்தாலும் ஹத யோக குடும்பத்தின் கீழ் வருவதால், என் கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

ஆங்கில நூலை பல வருடங்களுக்கு முன்பே வாசித்தேன். முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த தமிழ் நூல் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசனங்கள் செய்வது எப்படி என்பதையும், ப்ராணாயாமம் முறையையும் தெளிவாகக் கூறியுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹத யோக ஆசிரியர் ஒருவரிடம் ஆசனங்கள், ப்ராணாயாமம் கற்றுக்கொண்ட பிறகு, இந்நூல் பயிற்சியாளராக ஆசனங்களை மேலும் துல்லியமாக செய்ய உதவும். தமிழ் ஹத யோக வாசகர்களுக்கான அரிய நூல் இது.


புத்தகம்: நலம் தரும் யோகம்

வெளியீடு: காலச்சுவடு
விலை: — 295 ரூபாய்

Sunday, February 26, 2017

சிவனின் கண்ணீர்..!


சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்கும் நோக்கத்தில் ஒருத்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்.

புதிய இளைஞர் வந்திருந்தார். முதல் சந்திப்பிற்கு உண்டான பணிவுடன் வணக்கம் சொல்லி அமர்ந்தார். என்ன விஷயமாக சந்திக்க வந்தார் எனக்கேட்டேன்.

இனி எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் இங்கே...

 “ஸ்வாமிஜி, எனக்கு ருத்ராக்‌ஷ மாலை வேண்டும். இங்கே கிடைக்கும் என என் நண்பர் சொன்னார்.”

“ஓ அப்படியா? கண்டிப்பாக வாங்கிக்கலாம். அதுக்கு முன்னாடி ஏன் ருத்ராக்‌ஷ மாலை வாங்கறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சிவ பக்தன் ஸ்வாமி, சிவராத்திரி அன்னைக்கு பூஜை செஞ்சு போட்டுக்கலாம்னு வாங்க வந்தேன்”

”ரொம்ப நல்லது. கையில என்ன வச்சிருக்கீங்க?”

“இதுவா? ஐபோன் ஸ்வாமிஜி”

“நீங்க ஸ்டீவ்ஜாப் பக்தரா?...இதை எதுக்கு வச்சிருக்கீங்க?”

“என்ன ஸ்வாமி இப்படி கேக்கறீங்க?.. இது பேசரதுக்கு”

“நீங்க புரிஞ்சுக்க்கணும்னு தான் இப்படி கேட்டேன். சிவ பக்தரா மட்டும் இருந்தா போதுமா? ருத்ராக்‌ஷம் எதுக்கு பயன்படுது?”

சிறிது யோசனைக்கு பிறகு....

“அதுவா சாமி ......நல்ல எண்ணம் வரும், நம்மை சுத்தி தீட்டு இருக்காது. கெட்டவங்க வைப்ரேஷன் நம்ம கிட்ட வராது. ஒரு விதத்தில் நம்மை காப்பாத்தும்”...

ஓ......நல்ல எண்ணம், கெட்டவங்க வைப்ரேஷன்....தீட்டு...... அப்ப இவரு ஏன் அதை போட்டுருக்காரு?  இவருக்கும் நல்ல எண்ணம் வரணும்னு போட்ருக்காரா? என நான் இந்த படத்தை காட்டினேன்...

”?!?!”

மிகக்குழப்பத்துடன்...என்னை பார்த்தார் அந்த இளைஞர்.

தம்பி ருத்ராக்‌ஷம் எதுக்கு அதன் பயன்பாடு என்ன என தெரிஞ்சு பயன்படுத்தனும்.  சிவ பக்தர் சொல்லிட்டு பயன்படுத்தறது, சினிமாவில் ஹீரோ போட்ட ட்ரஸ்னு வாங்கி போட்டிருக்கற மாதிரி ஒரு செயல். அது சிவனையும் பக்தியையும் அசிங்கப்படுத்தும்.

ஒரு உயிர்த்தன்மை இல்லாத ஐ போன் வாங்கும் போதே இது என்ன என்ன வசதிகள் , செயல்பாடுகள் இருக்குனு பல மணி நேரம் செலவிட்டு , எந்த செல்போன் நல்லா வேலை செய்யும்னு யோசிச்சு வாங்கும் நீங்க, ஆன்மீக விஷயம் மட்டும் ‘நல்ல வைப்ரேஷன்’ சொன்னா கண்ணை மூடிட்டு வாங்கறீங்களே.. இது நியாயமா?

ஆனா ஒன்னு தம்பி....உங்களை மாதிரி சிவனை நோகடிக்கிறவங்கங்க ஊருக்குள்ள பலர் இருக்காங்க...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!

எப்படி ஸ்வாமி? புரியலையே...

ருத்ரனின் ஆக்‌ஷம் - சிவனின் கண்ணீர் தான் ருத்ராக்‌ஷம்னு சொல்லுவாங்க. உங்களை மாதிரி ஆட்களை பார்த்து அவருக்கு நிறைய கண்ணீர் வரும்...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!
ஸ்வாமி என்னை வெச்சு விளையாடறீங்கனு நினைக்கிறேன். ருத்ராக்‌ஷத்தை பத்தி நல்லா தெரிஞ்சுட்டு வந்தே நான் வாங்கிக்கிறேன் எனொல்லி விடெற்றார்.
 
ஆன்மீகத்ற்றி ெரிய இளர்கைவிட.. ஆன்மீகத்ை அறைகுறையாக ற்றத்ைய இளர்கால் நம் காச்சாரத்ின் ‘வைப்ரன்’ கெட்டுப்போகிறு...!

 இப்படியாக அன்று ஆதிசிவன் திருவிளையாடல் நிகழ்த்தினார்... 

Saturday, February 18, 2017

சிவனுக்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம்?

 
யோக சாஸ்திரத்தின் மூலமாக சிவன் இங்கே நிறுவப்படுகிறார். இன்னும் சில தினங்களில் வரலாறு உருவாக்கப்பட உள்ளது. ஆதி யோகி சிவன் அவர் தான் அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்தவர் என கதை சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகள் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தை உலகிற்கு சொன்னார்கள் என கதை விரிவடைகிறது. 

எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் கதையை மெருகேற்றுங்கள். உங்கள் செயல் எத்தகையதாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் யோக பாரம்பரியத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க முயன்றாலோ களங்கப்படுத்த நினைத்தாலோ என்னால் கடந்து போக முடியாது...!

இங்கே சில கேள்விகள் எழுப்புகிறேன். அது மக்களின் விழிப்புணர்வை தூண்டட்டும். இந்த கேள்விகளுக்கு ’நீங்கள்’ தயவு செய்து பதில் சொல்ல வேண்டாம். உண்மையான யோக சாஸ்திரத்தின் விதையான முதல் குரு பதில் சொல்வார்... பொறுத்திருப்போம்!


1) சிவன் தான் ஆதி குருவாக யோக சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார் என்றால், இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களில் ஏன் யோகா சொல்லித்தரப்படுவதில்லை?

2) 108 வகையான நாட்டிய முத்திரைகளை காண்பிக்கும் வடிவம், நடராஜ ரூபமாக இருக்கும் சிவனை காண்கிறோம். ஆனால் எங்கும் யோகாசனம், ப்ராணாயாமம் செய்யும் சிவனை கண்டதில்லை.  இவர் வேறு யோக சிவன் வேறா?

3) நீங்கள் வடிவமைத்திருக்கும் ஆதி யோகி உண்மையான யோக பாரம்பரியம் என்றால் இந்தியாவில் உள்ள பாரம்பரியம் மிக்க யோக ஆசிரமங்களில் ஏன் ஆதி யோகி வடிவம் சிறிய அளவில் கூட இல்லை?

4) விஞ்ஞான பைரவ தந்த்ரா என்ற முதல் யோக நூல் தியானத்தை 112 வகையாக  கற்றுக்கொடுக்கிறது. அதன் அடிப்படையில் 112 ஆதார சக்கரங்களாக வைத்துக் கொண்டு பெரிய முகத்தை செய்திருக்கிறார்கள். அதில் உள்ள பைரவர் தான் ஆதி குருவா? பைரவர் தான் சிவனா? இல்லை வேறு வேறா?

5) அஷ்டாங்க யோகத்தில் முக்கியமாக சத்யா (உண்மை), ஆஸ்தேயா(ஆடம்பரம் இல்லாத எளிமை) ஆகிய யாம நியமங்களை அனுசரித்துதான் இந்த யோகத்தின் ஆதி குருவின் முகம் அமைக்கப்படுகிறதா?

யோக வரலாற்றை மறைத்து திருத்தி எழுத முயற்சி செய்பவர்களுக்கு என் கண்டனங்கள்.
மக்களுக்கு யோக பாரம்பரியத்தை பற்றிய தவறான விழிப்புணர்வு அளிப்பதற்கும் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

Tuesday, June 21, 2016

Ebook - Yoga @ 35000 Feet

Today International Yoga day.

To celebrate our Yoga Tradition,  here i give a ebook 'Yoga at 35000Ft"

Yoga @ 35000 Ft-Ebook about Astanga Yoga




Friday, March 6, 2015

ஓம்கார யோகம்

இறையருள் ஒளிரட்டும், குரு அருள் பெருகட்டும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நமது இயல்பு வாழ்க்கையின் சூழலால் ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டாலும் அதை தொடர்வதிலும் ஆழ்ந்து செயல்படுவதிலும் சில தடைகள் ஏற்படுகிறது.

அத்தகைய சூழலை சரி செய்யும் நோக்கில் ப்ரணவ பீடத்தில் நடைபெறும் நிகழ்வு - ஓம்கார யோகம்.

ஓம்கார யோகம் என்பது 90 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாளை முற்றிலும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கும் வகையில் உங்களை தூண்டி ஆன்மீக வேள்வியில் ஈடுபடுத்தும் நிகழ்வாகும்.

காலை ஹத யோக பயிற்சியில் துவங்கி  பல்வேறு தியான பயிற்சிகள் மற்றும் மனவள பயிற்சி நடைபெறும். மாலை வேளையில் நம் கலாச்சார நூல்களான பாகவதம், திருமந்திரம் மற்றும் உபநிஷத்துகளுடன் சத்சங்கம் மற்றும் பஜன் நடைபெறும்.

ஆங்கில வருடத்தின் ஒற்றைப்படை மாதங்களின் மூன்றாம் ஞாயிறு அன்று ஓம்கார யோகம் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 15ஆம் தேதி கோவை ப்ரணவ பீடத்தில் நடைபெறுகிறது.

ஓம்கார யோகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஓம்கார யோகத்தில் கலந்து கொள்ள நன்கொடை 500/- ரூபாய். இந்த நன்கொடையில் மதிய உணவு  தேனீர் வழங்கப்படும். ஓம்கார யோகம் என்ற இந்த அந்தர் யோக நாளில் உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்கள் என யாரேனும் ஒருவரை உங்கள் சார்பாக அழைத்து வரலாம். அவர்களுக்கு இப்பயிற்சி இலவசம்.

உங்களின் ஆன்மீக நெருப்பை அணையாமல் ஒளிர செய்ய ஓம்கார யோகத்தில் இணைவோம்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்வாமி ஓம்கார்

தொலைபேசி எண் : 9944 2 333 55

Monday, October 13, 2014

பக்தி யோகம் - நீங்கள் எப்படிப்பட்ட பக்திமான்? - ( யோகம் - 1)

யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 


நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம். ஆனால் இதெல்லாம் வரலாறு, தற்சமயம் நம் நிலை..?

இறைவனை தியானிக்கும் பொழுது தேவையற்ற சிந்தனை வருகிறது என நினைக்கிறோம். உதாரணமாக உங்கள் குழந்தை பற்றியோ சிலருக்கு.. காதலி நினைவு, சிலருக்கு நண்பர்களின் நினைவு, தொழில் என மனது அலைபாயும். இவ்வாறு ஆன்மீகத்தில் ஈடுபடும் பலருக்கு தங்கள் அலைபாயும் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது என தெரிவதில்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடுவது உண்டு. இவ்வுணர்ச்சி அதிகமாகி அவர்களை ஆன்மீகத்தை விட்டே வெளியேற வைக்கும், இவற்றை தவிர்க்க நல்ல மருந்தாக அமைவது பக்தியோகம்.

பெற்றோர், காதலன்/ காதலி , குழந்தை, நண்பர் என உங்கள் மனம் உறவால் வசப்பட்டு அதனால் எழும் உணர்வால் நிரப்பப்பட்டு இருக்கலாம். உங்களின் உணர்வுகளை விட்டுவிட்டு வாருங்கள் அப்பொழுது தான் இறைவனை காணலாம் என சொன்னால் அது எப்பொழுதும் முடியாது. மீனை தண்ணீரை தாண்டி வா உனக்கு வாழ கற்று தருகிறேன் என சொல்லுவதை போன்றதே இச்செயல்.  பல மதங்கள் இச்செயலை தான் செய்கின்றன. ஆனால் ஆன்மீகம் உங்களின் அடிப்படை உணர்வு மிகுதியை வைத்தே உங்களை மேம்படுத்தும்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.

இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் பக்தியில் பலராலும் கொண்டாடப்படும் தெய்வாம்சம். இதன் காரணம் ஸ்ரீக்ருஷ்ணர் வாழும் காலத்திலேயே இந்த ஐவகையான முறையில் பக்தி செய்யப்பட்டவர், யசோதையால் வாத்சல்யம் (குழந்தையாக), கோகுலத்தில் கோபியரிடம் தாசியம் (அடிமை தன்மை), பாண்டவர்கள் மற்றும் பிருந்தாவனத்தில் இருப்பவர்களின் பிரச்சனைக்கு சாந்தம் (பெற்றோராக), அர்ஜுனனுக்கு சகியம் ( நண்பன்), ராதைக்கு மதுரம் ( காதலன்) என பக்தி செய்யப்பட்டதால் கண்ணன் அனைவராலும் வணங்கப்படுகிறார்.  

இந்த ஐவகை பக்தியும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் உருவானது.

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.

இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.  

இந்த ஐவகைகளில் எப்படிப்பட்ட பக்தியை தேர்வு  செய்வது? எது சிறந்தது? என கேள்வி எழும். 

நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம்.  

உங்களால் பக்தி தன்மையை உங்களின் பஞ்ச பூத தன்மையை கொண்டு அறிய முடியவில்லை என்றால் உங்கள் குருவிடம் சரணடையுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். குரு என்றவுடன் உங்களுக்கு மற்றொரு கேள்வியும் தோன்றி இருக்கக் கூடும். ஐவகை பக்தியில் குரு பக்தி என சொல்லப்படுவது எந்த வகை சார்ந்தது? இதன் பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதற்கான விடையை நீங்களே கூற முயலுங்கள்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.



1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.  

இனி பக்தி கதைகளையோ நூல்களையோ படிக்கும் பொழுது இது ஐவகை பக்தியில் எந்தவகை சார்ந்தது என சிந்தியுங்கள். அப்படி செய்வதால் நீங்கள் ஸ்மரணம் என்ற வழியில் பக்தியை பயன்படுத்துகிறீகள் அல்லவா...? 

பக்தி யோகத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்கள் : புராணங்கள் - பாகவதம், தேவி பாகவதம். பிற நுல்கள் - நாரத பக்தி சூத்திரம். 

நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

Tuesday, September 20, 2011

வாழ்வியலில் திருமந்திரம்

நம் அன்றாட வாழ்க்கையில் திருமந்திரம் என்ற தலைப்பில் சென்ற சனிக்கிழமை (17-09-2011) அன்று சிங்கப்பூர் குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயத்தில் சொற்பொழிவு நடைபெற்றது.

நம் வேதத்தின் கண்மணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே ஒலி வடிவில் அளிக்கிறேன்.

மற்றும் ஒரு லிங்க்

Thursday, May 13, 2010

அகந்தை செய்யும் விந்தை

ஆணவம் என்பது ஒருவித வித்தியாசமான வஸ்து. இறைவனின் படைப்பில் மிக விசித்திரமானது எது என்றால் ஆணவம் என்பேன்.

வடநாட்டு இனிப்பு கடைகளில் இனிப்பு அனைத்தும் பால்கோவாவின் அடிப்படையாக இருக்கும். ஒன்றில் பாதம் போட்டிருப்பார்கள், மற்றதில் ஜீராவில் போட்டிருப்பார்கள். ஆனால் அடிப்படையில் எல்லாம் பாலல் செய்யப்பட்ட பொருட்கள்தான். அது போல இறைவன்அனைத்து உயிர்களையும் ஒன்றாக படைத்துவிட்டு உயிர்களின் தேவைக்கு ஏற்ப ஆணவம் என்பதை இணைக்கிறார். ஆணவத்தின் அளவை பொருத்து உயிரின் வாழ்க்கை நிலை மாற்றம் அடைகிறது.

பள்ளி காலத்தில் நாம் பயின்ற கணக்கு சமன்பாடுகளை வைத்து இதை எளிமையாக விளக்கலாம்.


உயிர் + ஆணவம் = மனிதன்
உயிர் - ஆணவம் = தெய்வம்
உயிர் X ஆணவம் = அசுரன்
உயிர் / ஆணவம் = தேவர்கள்


மனிதனின் ஆணவத்தை நிர்மூலமாக்கி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துவது ஆன்மீகம் என்ற கருவி மட்டும்தான். ஆன்மீகம் என்பது ஆணவத்தை ஒழித்தால் மட்டுமே உயர்நிலையை அடைய முடியும் என்பது தெளிவு. அனைத்து உயிர்களையும் நாம் நேசிக்க வேண்டுமானால் நம் ஆணவமில்லாத நிலையில் இருக்க வேண்டும். இறைவனின் அனுபூதி என்பது மிகவும் மெல்லிய தென்றல் போன்றது, அத்தகைய அனுபூதியை உணர வேண்டுமானால் ஆணவம் என்ற தடித்த தோல் நம்மை மூடி இருக்க கூடாது.


ஆன்மீகத்தில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒருவன் ஆணவத்தை ஒழிக்க ஆன்மீகத்தை பின்பற்றினால் ஆரம்ப நிலையில் ஆன்மீகமே ஆணவத்தை வளர்த்துவிடும்.
ஆன்மீகம் என்ற மருந்து ஆணவம் என்ற நோயை வளர்த்து முற்றிய பிறகே ஒழிக்கும். ஆன்மீக சாதகர்கள் தங்களை பிறரைவிட மேம்பட்டவர்கள் என ஆரம்பத்தில் நினைக்க வைக்கும். நம்மை விட பிறர் அறியாமையில் இருக்கிறார்களே என புலம்பத்தோன்றும்.

இறைவா இவர்களுக்கு எப்பொழுது நல்வழிகாட்டுவாய் என கேட்கத்தோன்றும். இவையெல்லாம் ஆணவத்தின் அடையாளங்களே. ஆனால் இதே ஆணவம் விரைவில் அடுத்த நிலைக்கு கடந்துவிடும். குரு என்ற ஒருவரின் மூலம் இறைவன் ஆணவம் என்ற பெரும் மலைக்கு வெடி வைத்துவிடுவார்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, அயமத்ம பிரம்மா போன்ற மஹாவாக்கியங்கள் ஒருவன் ஆணவத்தை ஒழித்திவிட்டு கூறினால் இறைவனாக தெரியும். வெறும் வாய்வார்த்தையாக கூறினால் ஆணவத்தின் உச்சமாக தெரியும் அஹம் பிரம்மாஸ்மி என்பதை ஒரு திரைப்படத்தில் ஹீரோ பிறரைவிட உயர்ந்தவன் என காண்பிக்கவே பயன்படுத்தினார்கள்.


ஒரு ஜென் குருவிடம் அவரின் பிரதான சிஷ்யன் கேட்டான், “ குருவே நான் அனைத்தும் கற்றுவிட்டேன். வேறு என்ன நான் செய்ய வேண்டும்?” என்றான்.

ஜென் குரு கூறினார், “முதலில் கழிவறையை சுத்தம் செய். மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்”.


இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து செயல்படமாட்டார்கள். [சிலர் விதிவிலக்கு]. காரணம் தங்கள் சித்தாந்தம் தான் சரி, தங்கள் குருவே மேன்மையானவர் என்ற எண்ணம் இதற்கு காரணம். ஆணவத்தை ஒழிக்க சென்ற இடத்தில் அவர்களுக்கு கிடைத்தது என்ன என்று பார்த்தீர்களா?

பத்திரிகை டீவி செய்திகளை பார்த்துவிட்டு பலர் ஒரு செய்தியை பற்றி பலவாறு கூறினார்கள். அந்த நபரின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் காரணம், நடிகை காரணம், மண் ஆசை காரணம், பெண் ஆசை காரணம் என பல்வேறு கருத்துக்கள் கூறினார்கள். உண்மையில் தான் அனைத்தையும் அடைந்துவிட்டேன், எல்லோரும் எனக்கு கீழேதான் என நினைத்த ஆணவமே காரணம் என பலர் மறந்துவிட்டார்கள்.

ஒரு அற்புதமான அனிமேஷன் குறும்படத்தை பாருங்கள். ஜான் என்ற அமெரிக்கர் உருவாக்கிய அருமையான படம். அதன் தொழில்நுட்ப யுக்திகள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த 'குரு'ம்படத்தின் அடிப்படை கருத்து ஆணவம் அனைத்தையும் அழிக்கும்.



எளிமையாக சொல்லவேண்டுமானால்
ஆங்காரம் இருந்தால் ஓங்காரம் இல்லை
ஆங்காரம் இல்லயேல் ஓங்காரம் மட்டுமே உண்டு....!


Thursday, April 22, 2010

வேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!

ஆணவம் என்ற ஒரு விஷயம் மனிதனை மிகவும் கீழ் நிலைக்கும் இழுத்துச்செல்லும் மேல் நிலைக்கும் இழுத்துச்செல்லும். ஆணவம் என்ற விசையை மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அந்த திசையை நோக்கி அவன் வாழ்க்கை பயணம் அமைந்துவிடுகிறது.

மனிதனின் புற உலக வளர்ச்சிக்கே ‘நான்’ என்ற அஹம்பாவமே ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது ஆன்மீகம். ஒரு இளையவது பாலகன், தான் அப்பாவை போல இருக்க வேண்டும் என நினைக்கிறான். காரணம் அப்பொழுது அவன் ஆணவம் தடையில்லாமல் செயல்படும் என நினைக்கிறான். அந்த எண்ணமே அவனை இளைஞனாக வளர காரணமாகிறது. இப்படி ஆணவமே வாழ்க்கை லட்சியம் என்று முலாம் பூசி கூறப்படும் விஷயமாகிறது.

நான் அது ஆகவேண்டும், நான் இது ஆகவேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். நான் என்ற அந்த வார்த்தையே ஒருவித அடையாளமாக பலர் பயன்படுத்திவருகிறார்கள். நான் என அவர்கள் குறிப்பது எதை? உடலையா? அவர்களின் வாழ்க்கையையா என தேடினால், அவர்கள் ‘நான்’ என சுட்டிக்காட்டுவது ஆணவத்தை மட்டுமே.

ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் போலிகள் கூட “நான் கடவுள்” என்கிறார்கள். இதுவே அவர்களின் போலித்தனத்திற்கு அடையாளமாகிறது.

அதனால் தான் சில இடங்களில் கையெப்பம் இடும்பொழுது இவ்வாறு எழுதுவேன்...

“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”.

இப்படி எழுதியவுடன் என்னை விட்டு விலகியவர்கள் பலர் உண்டு.

ஒரு ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஞானி தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது வசிப்பிடத்திற்கு அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வணங்குவார். பல வருடங்களாக செய்து வந்தார்.

ஒரு நாள் தன் சிஷ்யனை பார்த்து நாளை முதல் நீயும் என்னுடன் கோவிலுக்கு வா என்றார் ஞானி. ஒருவார காலம் சென்றது. ஒரு நாள் சிஷ்யன் ஞானியுடன் கோவிலுக்கு செல்லும் பொழுது கூறினான், “குருவே...! பார்த்தீர்களா அறியாமை கொண்ட மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுது விழித்தெழுந்து நம்மை போல கோவிலுக்கு வருவார்கள்?” என்றான்.

உடனே குரு அவனை பளார் என அறைந்து, “இனி என்னுடன் காலையில் வராதே. நீ ஆணவத்துடன் இருக்கிறாய். நீ ஆன்மீகத்திற்கு லாயக்கு அல்ல” என்றார். சிஷ்யன் தன்னை உணர்ந்தான்.

சிங்கப்பூரில் நான் பயணிக்கும் பொழுது என் யோகப் பயிற்சியில் பயின்ற மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார், “ஸ்வாமி நீங்க சொல்லிக்கொடுக்கும் யோக பயிற்சி அற்புதமா இருக்கு, தினமும் பயிற்சி செஞ்சா மிகவும் அருமையா இருக்கு. ஆனா இதை மக்கள் பயன்படுத்திக்காம இருக்காங்களே” என்றார். அவர் அப்படி சொல்லும் பொழுது முன்பு சொன்ன ஞானியின் கதை ஞாபகம் வந்தது.

எனக்கும் பல நேரங்களில் ஆணவம் ஏற்பட்டதுண்டு. என் கட்டுரைகளில் பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளேன். ஆணவம் இல்லாமல் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் கொசு மருந்தை தாண்டி வந்து கடிக்கும் கொசுவைப்போல ஆணவம் வந்துவிடுகிறது. அதை சொறிய ஆரம்பித்தால் ரணம் தான் மிஞ்சும். ஆணவம் இல்லாதவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆணவம் முற்றிலும் இல்லாதவர்கள் கடவுள் என்பதை உணருங்கள். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஆணவம் அற்ற சொரூப நிலை குழந்தை மனம் போன்றது.

அப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை சூழல் சமூகத்தில் தற்சமயம் மிகவும் பின் தங்கி உள்ளதாக நினைக்கிறேன். குப்பை உணவுகள் (junk food), உடல் அசைக்காமல் விளையாடும் வீடியோ கேம்ஸ்,
வயதிற்கு மீறிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, தற்கால கல்வி முறை என பல முனைகளில் குழந்தைகளின் உள் நிலை தூய்மை தாக்கப்படுகிறது.

சரியான வயதில் வழிகாட்டுதல் இல்லாத சூழலில் அவர்கள் பருவமடையும் பொழுது மிகவும் சஞ்சலமான வாழ்க்கை சூழலில் தனிமனித ஒழுக்கம் கெட்டு வளர்கிறார்கள்.

ஒரு குழந்தை சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் பாதிக்கபடுவது சமூகம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால் சமூக நல்வழிகாட்டுவது குழந்தைகளிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இக்கருத்தை எப்படி செயல்படுத்துவது?

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான யோக பயிற்சி நடைபெற உள்ளது. கோடைவிடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்கவும், குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமும் விளையாட்டு தன்மையில் ஆன்மீகம் கற்கவும் இப்பயிற்சி பயன்படும்.



மே மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சிகள் நடைபெறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கு பெறலாம்.

ஆசனம், ப்ராணாயாமம், தனிமனித செயல்பாடு, இறை உணர்வு மற்றும் இறைவழிபாட்டு முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.

குழந்தைகளை 14 வயதுக்கு முன் நல்ல விஷயங்களை புகுத்துவதன் மூலம் சமூகத்தில் நல்ல விதைகளை விதைத்த பலன் கிடைக்கும்.

உங்கள் குழந்தைகள், நண்பர்கள்- உறவினர்கள் குழந்தைகள் பயன்பெறச்செய்யுங்கள்.
தொடர்புக்கு : 99 44 2 333 55

ஆணவம் இல்லாத குழந்தைகளுக்கு யோகத்தை வழங்குவதன் மூலம் இறை நிலையில் இருப்பவர்களை இறைநிலையிலேயே இருக்க செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.


அதனால் தான் ஆணவத்துடன் கூறுகிறேன்.... :) மே மாதம் முதல் வாரத்தில்,

இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!

Thursday, December 17, 2009

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் நான் வினை ஆற்றுவதில் கவனமாக இருப்பேன். கர்மாக்களை களைந்து இறை நிலையில் இருக்க முயற்சி செய்வது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு அங்கம். வினையற்று இருப்பதுவே தியானமும் சமாதியும் என என் ரகசிய எதிரி திருமூலரின் கருத்து.

அப்படி இருந்தாலும் இந்த தலைப்பில் எதிர்வினையாற்றலாமா என யோசித்தேன். என் சுய நலத்திற்காக ஒரு வினையோ, பிறருக்கு செய்வினையோ வைத்தால் தானே தப்பு :) . ஒரு சிந்தாந்தத்தை பற்றி மக்களுக்கு குழப்பம் வரும் பொழுது, அக்குழப்பத்தின் பதில் என்னிடம் இருந்தும் குழப்பங்களை கண்டு சும்மா இருந்தால் அதுவே தீவினையாக மாறுமல்லவா? என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? மேற்கொண்டு படியுங்கள். :)

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது

“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம்
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும்.

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

யோக சிகிச்சையில் எப்படி நோய் குணமாகும் என என்னிடம் கேட்காதீர்கள் அதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும்.

என்னிடம் யோக பயிற்சி செய்ய வருபவர்களிடம், நோய் குணமாக்குதல், சிகிச்சை என்பது நான் செய்வதில்லை என திட்டவட்டமாக கூறிவிடுவேன். யோக பயிற்சி பற்றிய விளம்பரங்களிலும் அத்தகைய சொற்கள் இடம்பெறாது. அதனால் தான் நான் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் வசிக்கும் ஊரில் கூட ஒரு யோக பயிற்சி கழகம் செய்யும் விளம்பரம் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

எழுதும் முன் நமக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்தால் மட்டும் எழுதுவது நல்லது. இல்லை என்றால் மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம், தெரியாத பெரியாரிசத்தை நாத்தீகம் என்ற பெயரில் பதிவு ஏதோ ஒன்றை போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடுவது சால சிறந்தது.

Tuesday, December 8, 2009

விசுவல் போஸ்ட்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
-திருமந்திரம் 129


வேதத்தின் கண்மணிகள் : ஸ்வாமி நீங்க பதிவு எழுத முடியாத அளவுக்கு பிஸியா இருக்கீங்க ஒத்துக்கறோம். அதுக்காக இப்படியா.....

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.

Friday, July 31, 2009

ஹதயோகம் - பகுதி இரண்டு

நவநாகரீகம் என்ற பெயரில் உடலை நாம் மிகவும் கடினமாக நடத்துகிறோம். உடல் தனது வளைவு தன்மையை சிறுவயதில் இழந்து விடுகிறது. குழந்தைகள் தற்காலத்தில் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. படி என சொல்லியும் வீட்டிலேயே விளையாடு என்றும் அவர்களுக்கு பதின்ம வயதில் உடல் பருமன் அதிகரித்து இள வயதில் அதிக வியாதியின் இருப்பிடமாகிறார்கள்.

பெண்களும் தங்களுக்கு உண்டான உடல் வேலைகளை அசைவு பெற செய்வதில்லை. இதனால் 50% சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறார்கள். 50% அவர்களின் பிறப்பு தன்மை காரணம். சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.

தற்காலத்தில் எத்தனை பேர் தரையில் நீண்ட நேரம் உட்கார முடியும்? உணவருந்த டைனிங் டேபிள் உடல் அசையா வாகனம், தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சொகுசு சோபா என எதற்கும் உடலை வளைவு தன்மைக்கு கொண்டு செல்லுவதில்லை. வீட்டில் இருக்கும் மர சாமான்களுக்கு இணையாக நம்மிடமும் வளைவு தன்மை இல்லாமல் மரசட்டம் போல் இருக்கிறது. உடல் வளைவு தன்மை இல்லாத காரணத்தால் நோய் வருவதும், அந்த நோயை குணமாக முயற்சிக்கையில் உடல் மருத்துவத்தை ஏற்றுகொள்ளாத நிலையும் ஏற்படும்.

சரி........ நாகரீகம் என்றால் ஐந்திலும் வளைவதில்லை ஐம்பதிலும் வளைவதில்லை என்பது தானே?

ஹதயோகத்தின் உற்பிரிவுகளை கூறுகிறேன் என்றேன் அல்லவா அதை பார்ப்போம்.

ஆசனம்
: உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். நமது உடலின் அனைத்து பகுதியையும் நாம் இயக்குவது இல்லை. அதனால் நமக்கு மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். பூனை, நாய் போன்ற விலங்குகள் தூக்கத்திலிருந்து எழுந்ததும் தங்களின் உடலை முறுக்கேற்றி உற்சாகம் ஆக்கிக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். அது போல விலங்குகள், இயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.

பிராணாயாமம் : பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்தி நமது உயிர்சக்தியையும் மேம்படுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என பெயர்.

முத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட சைகை முறையில் வைப்பது முத்திரை எனலாம். இறைவனின் விக்ரஹங்களில் அவர்கைகளில் ஒரு வித சைகை இருப்பதை பார்த்திருப்போம். உதாரணமாக அம்மன் விக்ரஹத்தில் உள்ளங்கள் நம்மை பார்த்துகாட்டி ஆசிர்வதிப்பதை போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை என பெயர்.

[முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...! ]

பந்தங்கள் : நமது சுவாசம் மற்றும் உடலில் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தி அல்லது கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்த சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலுசேர்க்கும்
. வட மொழியில் பந்தா என இதற்கு பெயர். யோகிகள் காட்டும் ஒரே 'பந்தா' இது தான்.

கிரியா : கிரியா என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியா என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் என பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை, அதை தக்க முறையில் தூய்மையாக்க ஆறு வழிகள் ஹடயோகம் கூறுகிறது. இவை ஷட்கிரியா என வழங்கப்படுகிறது.

ஹதயோகம் என்றவுடன் தலைகீழாக நிற்பது கடினமாக உடலை வளைப்பது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். இயல்பான வாழ்க்கை நிலையில் ஒருவர் ஹதயோகத்தை செய்ய முடியும். மேலும் ஹதயோகம் மொழி, மதம், ஜாதி என எதற்கும் சார்ந்தது இல்லை. உடல் இருப்பவர்கள் யார் செய்தாலும் வேலை செய்யும். அதனால் தான் ஹதயோகம் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவ முறைக்காக மட்டுமே உபயோகப்படும் ஹதயோகத்தை யோகசிகிச்சை என பெயர். ஹதயோகம் மருத்துவ முறைக்கானது மட்டுமல்ல அதனால் எண்ணிலடங்கா பலன்கள் உண்டு.


ஹதயோகத்தை பயன்படுத்தும் அவசியத்தை பற்றி ஏனைய நூல்கள் கூறினாலும், ஹதயோக பரதீப்பிகா எனும் நூல் ஹதயோகம் செய்யும் முறையை விரிவாக அலசுகிறது. இந்த நூல் ஐயாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதிலிருந்து நமது நாட்டின் தொன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் பதஞ்சலி முனிவர் ஆசனம் செய்வதின் அவசியமும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஒற்றை வரியில் சொல்லிகிறார்.
“ஸ்திரம் சுகம் ஆசனம்”

உங்களை தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உங்கள் உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் உங்களை வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.

தற்கால நவநாகரீக உலகில் உணவு முறை என்பது துரித உணவின் தாக்கத்தால் சீரிழிந்து வருகிறது. உடலையும், மனதையும் பேணிக்காப்பதால் மட்டுமே சிறந்த ஆன்மீக வளர்ச்சி அடைய முடியும்.
சிறிது நேரம் தியானத்தில் உற்காருவதற்குள் கால்கள் மரத்து போவது, உடல் பிடிப்பு ஏற்படுவது, கீழே உற்கார உடல் ஒத்துழைக்காதது என பல பிரச்சனைகளுக்கு ஹதயோகம் தீர்வாகும். இதனால் தான் எனது யோக பயிற்சி முறையில் ஹதயோகத்துடன் அனைத்து யோக முறையும் இணைத்துள்ளேன்.


சிறந்த யோக ஆசிரியரை நாடி, உங்கள் வயது வாழ்க்கை சூழலுக்கு தக்க ஹதயோக பயிற்சியை தினமும் செய்யுங்கள். ஹதயோக ஆசனங்களை செய்து உங்கள் உடலை இறைவன் இருக்கும் அரியாசனமாக்குங்கள். ஹரி அந்த ஆசனத்தில் நிரந்தரமாக வீற்றிருப்பான்.

Thursday, July 30, 2009

ஹதயோகம்

நமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.

யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.

ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.


உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.

ஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(.........யோகம் தொடரும்)