Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, March 23, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 10

காரின் ஆடியோவில் வேத மந்திரம் ஒலிக்க.. இரண்டு பக்கமும் இயற்கை விரிந்தோங்கி இருக்க...140 கிலோமீட்டர் வேகத்தில் எங்கள் கார் பயணித்துக் கொண்டிருந்தது.

துவாபர யுகம் துவங்கி ஞானிகளே சாரதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். மலைகளில் நடந்து பயணித்த களைப்பில் ராம தாஸியும் சுப்பாண்டியும் உறங்கிவிட்டார்கள்.

ஜிபிஸ் காட்டும் திசையில் நான் வேத மந்திரங்களை கேட்டபடியே ஓட்டிவந்தேன். ஒரு 70 கிலோமீட்டர் பாலைவனத்தில் ஓட்டி இருப்பேன். 

சுற்றிலும் வெளி...என்றால் கட்டிடங்களோ, மலைகளோ, கற்களோ இல்லை.. மைதானம் போல பரந்து விரிந்த சமவெளி போன்ற இடத்தில் சிறு செடிகள் மட்டும்... பறவைகளோ, விலங்குகளோ, பூச்சிகளோ எதுவும் இல்லை...வேற்று கிரகம் போன்ற உணர்வு...இப்படி ரசித்தபடியே வந்த எனக்கு திடீரென தார் சாலை முடிந்து வெறும் மண் சாலை மட்டுமே தொடர்ந்து வந்தது  நெருடலாக இருந்தது. 

வழிகாட்டும் ஜிபிஸ் கருவியை பார்த்தேன். நேராக போக வேண்டும் என சொல்லியது. இன்னும் விரைவாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினேன். மண் தளத்தில் சமவெளியில் கார் தூசியை கிளப்பிய வண்ணம் பறந்தது. மேலும் 10 கிலோமீட்டர் சென்று இருப்பேன். கார் ஒரு அடி கூட நகரவில்லை. அப்படியே நின்றுவிட்டது. மண் தரையில் நாலு சக்கரங்களும் புதைந்து பெரும் தூசி மண்டலத்தை கிளப்பிவிட்டு உறுமிக்கொண்டே கார் நின்றது.

சப்தம் கேட்டு விழித்த ராம தாசியும் சுப்பாண்டியும் என்னை மேலும் கீழும் பார்த்தனர்.

வண்டியை விட்டு இறங்கி நானும் சுப்பாண்டியும் தள்ள ராம தாசி வண்டியை எடுக்க முயற்சி செய்தார். ரெண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மெல்ல பின்னோக்கி வந்து சம தளத்தில் ஏறி நின்றது.

காரை மண் குழியிலிருந்து மீட்க போராடியதில் பெட்ரோல் முழுவதும் தீர்ந்து பெட்ரோல் காட்டும் கருவியின் முள் E என்ற பகுதியை காட்டி எங்கள் விதியுடன் சேர்ந்து ஈ என இளித்தது.

ஜிபிஎஸ் கருவி தவறான வழிகாட்டி விட்டது என்பதை உணரும் பொழுது இருள் சூழ துவங்கியது. அத்தனை நேரம் கொழுத்திய 30 டிகிரி வெயில் சடாரென குறைந்தது. குளிர் அடிக்கத் துவங்கியது. இரவில் குளிர் -5 டிகிரிக்கு செல்லும் என ராமதாஸி சொல்லி பீதியை கிளப்பினார்.

குளிருக்கான உடை கைவசம் இல்லை. அது சுப்பாண்டி புறப்படும் பொழுதே தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டான். காரில் இருக்கும் ஹீட்டரை போட வழியில்லை காரணம் எரிபொருள் தீர்ந்துவிட்டது.

திரும்ப 80 கிலோமீட்டர் நடந்து சென்றால் தான் உண்டு. அதற்குள் குளிரிலோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ சுருண்டு விழுந்து இறந்து விட வாய்ப்பு உண்டு. கைவசம் உணவும் தண்ணீரும் இல்லை.

இப்படி யோசனையில் இருக்கும் பொழுது  சுப்பாண்டி டென்ஷனுடன் ,“ இதுக்கு தான் சாமி ஜீபிஸ் எல்லாம் நம்பி வரக்கூடாதுனு சொல்றது. பாருங்க எப்படி வந்து மாட்டீட்டோம்...நாம் செத்தா கூட யாருக்கும் எங்க இருக்கோம்னு தெரியாது” என புலம்ப துவங்கினான்.

புறப்படும் பொழுது, “கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என சுப்பாண்டி சொன்னதன் அர்த்தம் தெளிவாக புரிந்தது. 

காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கலக்கத்துடன் யோசனையில் ஆழ்ந்தேன்.

ஐந்து நிமிடம் கூட கடந்து இருக்காது...

“என்ன சாமி இப்படி உட்கார்ந்தா போதுமா? என்ன செய்ய போறோம்னு சொல்லுங்க.. எனக்கு வேற பசிக்குது... எப்பவும் ஆண்டவன் காப்பாத்துவான்னு சொல்லுவீங்களே...காப்பாத்த சொல்லுங்க சாமி” என சுப்பாண்டி கலவரத்திலும் கிண்டல் செய்தான்.

பசி......இயலாமை....சோர்வு.....மற்றும் குழப்பத்துடன் மூன்று பேரும் காருடன் நிற்க...சூரியன் தன் பணி முடிந்து மறைய...எங்கும் இருள் சூழ்ந்தது....!


(அன்பு பெருகும்)