உடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.
உடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.
எப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.
தினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.
சோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.
கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.
செருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா?
புகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.
ஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா?”
போதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”
மற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்பிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா?”
போதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”
இப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.
விரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...!
இப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது? இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.
இந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.
நாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா?
அதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.
அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.
பலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.
68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.
சபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.
தற்சமயம் நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன். கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள். என்னவென்று சொல்ல?
கட்டுகட்டுவது என்றால் என்ன?
சிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. :))
சபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்?
(சரணம் தொடரும்)