Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கிரகம். Show all posts
Showing posts with label கிரகம். Show all posts

Wednesday, January 31, 2018

கிரகணம் சில கேள்விகள்

கிரகணம் என்றால் என்ன?
சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழுது கிரகண நேரத்தில் சூரியனின் ஒளி மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் மறைக்கப்பட்டால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறார்கள்.

கிரகணத்தின் முக்கியத்துவம் என்ன?
பூமியினால் ஆனது நம் உடல். சந்திரனால் ஆனது நம் மனது. சூரியனால் ஆனது ஆன்மா. இவை மூன்றும் வான மண்டலத்தில் ஒருங்கிணையும் பொழுது, நம் உள்ளேயும் ஒன்றிணைகிறது. யோகிகள் பல பயிற்சிகள் செய்து அடைய வேண்டிய உடல்,மனம், ஆன்ம ஒருங்கிணைப்பை கிரகண சூழல் தாமாகவே நிகழ்த்துகிறது. இயல்பு வாழ்க்கை நிலையிலேயே கிரகண காலத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உயர் ஆன்மீக நிலையை அடைய கிரகண காலம் பயன்படுகிறது.

கிரகண காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
இயல்பாக நாம் செய்யும் செயல்கள் ஒரு பங்கு விளைவை ஏற்படுத்தும் என்றால் கிரகண காலத்தில் செய்யும் செயல் ஆயிரம் மடங்கு பலன் தரும்.

நம் ஐந்து உணர்வு உறுப்புகளாலும் வெளிமுகமாக செய்யும் செயலை தவிர்த்து உள் முகமாக முயற்சி செய்ய வேண்டும். உணர்வுகள் உள் குவிக்கப்பட்டால் அவை ஆயிரம் மடங்கு குவிந்து தியானம் உருவாகும். இதுவே ஐந்து உணர்வுகளும் சிதறி வெளி முகமாக இருந்தால் அயிரம் மடங்கு சிதறி பாதிப்பை உண்டாக்கும்.

கிரகண காலத்தில் இறை நாமம் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மந்திர தீக்‌ஷை பெற்றவர்கள் மந்திர ஜபம் செய்யலாம். ப்ராணாயமம் மற்றும் தியானம் செய்யலாம். இதனால் மனம் குவிந்து பெரும் தியானம் நிகழும்.

கிரகண காலத்தில் கோவில்கள் மூடி விடுகிறார்களே? கடவுளே கிரகண காலத்தில் சக்தி இழப்பார் என்பதாலா?

கிரகண காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாக பார்ப்பதால் ஏற்படும் விளைவு இது. இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் கலாச்சாரம் வளர்க்கும் இடமாகவும் இருந்தது. ஆடல் பாடல் மற்றும் மொழி வளர்ச்சிக்கு அடையாளமாக இருந்தது. அதனால் கிரகண கால கட்டத்தில் நம் ஐம்புலனுக்கு ஓய்வு கொடுத்து உள் முகமாக திருப்ப வேண்டும் என்பதால் கோவில்களை அடைத்தனர். இதுவே வட நாட்டில் கிரகண காலத்தில் கோவில்கள் அடைக்கப்படுவதில்லை. காரணம் அங்கே கோவில்கள் வழிபாட்டிற்கு மட்டுமே இருந்தது.  மேலும் பல்வேறு ஜீவ நதிகள் இருப்பதால் அதன் அருகே நீராடி ஜபம் செய்ய அவர்களுக்கு வசதி இருப்பதும் ஒரு காரணமாகும்.

உங்கள் நண்பரை அவரின் அலுவலகத்தில் சென்று சந்திக்க செல்கிறீர்கள். அலுவலகம் பூட்டி இருக்கிறது... அந்த நண்பர் உங்கள் வீட்டிலேயே உங்களுக்காக காத்திருக்கிறார் அவர் தன் சக்தியை இழந்துவிட்டார் என அர்த்தமா? கிரகண காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் இறையாற்றல் தன் தனித்தன்மையை இழப்பதில்லை. இறையாற்றல் நமக்குள் இருக்கிறது என உணரும் காலமே அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண நாட்கள் என புரிந்துகொள்ளுங்கள்.

கிரகண காலத்தில் உணவுகள் நஞ்சாக மாறுகிறதா?
கிரகண காலத்தில் கதிர்வீச்சு வருகிறது. உணவில் கதிர்வீச்சு ஏற்பட்டு அது கெட்டுப் போகிறது. கர்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பது போன்ற விஷயங்களின் பின்புலத்தை ஆராயாமல் பலர் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.  மேல் சொன்ன காரணத்தை ஆராய்ந்தால் இதன் பின்புலம் புரியும். கிரணகாலத்தில் ப்ராணாயமம், ஜபம், தியானம் செய்ய வேண்டி இருப்பதால் அந்த நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது. சாப்பாடு உடலில் இருக்கும் சமயம் நம் சக்தி ஜீரணத்திற்கு செல்லுமே தவிர ஆன்மீக பயிற்சிக்கு செல்லாது. 

தினமும் கூட மூன்று வேளை உணவு சாப்பிடும் நேரத்தை கவனியுங்கள். பகலும் இரவும் இணையும் நேரமான சந்தியா(இணைவு) காலத்தில் உணவு சாப்பிடக் கூடாது என்கிறது நம் கலாச்சாரம். சந்தியா காலம் போலவே இதுவும் இணைவு காலம் தான். அதனால் அந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சி செய்து உணவை தவிர்க்க வேண்டும். இதை தவிர உணவு கெட்டு நஞ்சாகும் , கதிர்வீச்சு என்பது எல்லாம் நம்மை ஆன்மீக பயிற்சிக்கு திருப்ப சொல்லும் பயமுறுத்தும் கருத்துக்கள். பூச்சாண்டிக்கு பயந்து உணவு சாப்பிட்டு வளர்ந்த நாம் , இப்பொழுது கிரணகத்திற்கு பயந்து சாப்பிடுவதில்லை..!

உணவு சாப்பிடும் பொழுது நம் ஐந்து புலன்களும் வெளிமுகமாக இருப்பதால் கிரகண காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். உடல் உறவு, உணவு , சினிமா பார்த்தல் மற்றும் விளையாட்டு இவை நம் புலன்களை வெளிமுகமாக திருப்பிவிடும். அதனால் ஐந்து புலன்களும் சிதறி நம் கட்டுப்பாடுகளை இழக்க நேரிடும்.

முன்பு காலத்தில் சூரிய கிரகண காலத்தில் இயற்கை ஒளி இழந்து இரவு போல அனைத்தும் இருளாக இருக்கும்.

வெளிநாடுகளில் கிரணத்திற்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே?
பல நூறு வருடங்களுக்கு முன்பே பாஸ்கரர், ஆரியபட்டர் போன்றவர்களும் அதற்கு முன்பும் கிரகண கால ஏற்படும் காலத்தை துல்லியமாக கணித்து அதன் அடிப்படையில் பஞ்சாங்கம் உண்டாக்கியவர்கள். அதன் பின் வந்த அறிஞர்கள் கிரணத்தை மேலும் ஆய்வு செய்து அதன் பயன்களை வெளிப்படுத்தினார்கள். மேல்நாட்டினர் இன்னும் கிரகண கணக்கையே முழுமையாக அறியவில்லை. அதனால் நாம் பின்தங்கியவர்கள் அல்ல. அவர்களே மிகவும் பின் தன்ங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

விஷேஷ நாளான பெளர்ணமி, தைபூசம் (31-01-2018) அன்று கிரகணமும் வருகிறதே இதில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா?
மேலை நாட்டினர்கள் பற்றி உயர்வாக சொன்னீர்கள் அல்லவா? அவர்களின் கல்வி கலாச்சாரத்தை பின்பற்றியதால் வந்த வினையே இது. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சூரிய கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று அமாவாசையாகவும், சந்திர கிரகணம் எப்பொழுது எல்லாம் வருகிறதோ அன்று பெளர்ணமியாகவும் இருக்கும். இதுவே வானிலை நியதி. நாம் மேலைநாட்டு வானிலை படித்ததன் விளைவு நம் சிந்தனைகளை தொலைத்துவிட்டோம். அதனால் சந்திரகிரகணம் வர வேண்டுமானால் அன்று பெளர்ணமியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

கிரகணம் இன்று கடகம்-  மகரம் போன்ற ராசிகளுக்கும் சில நட்சத்திரத்திற்கும் பிடிக்கும் அதனால் அர்ச்சனை செய்து நிவிர்த்தி பூஜை செய்ய வேண்டும் என ஆலயத்தில் எழுதி இருப்பதை பார்த்தேன். அதன் அடிப்படையில் கிரகணம் முடிந்து சென்று அர்ச்சனை செய்யலாமா?

ஜோதிடம் இவ்வாறு சொல்லுவதில்லை. சிலர் வழிபாட்டு நம்பிக்கையாக இதை செய்கிறார்கள். அந்தணர்கள் முன்னோர்களை வழிபடுவார்கள். தாந்த்ரீகர்கள் வேறு வகையாக வழிபடுவார்கள். உங்களின் நம்பிக்கை மற்றும்  குருவின் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படுங்கள்.

இன்று தெரியும் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய நிலவாகவும் நீல நிறமாகவும் தெரியும் என சொன்னார்களே?
நம் நாட்டில் ஆறு வகையான பருவ நிலை இருக்கிறது. ஒரு பருவ நிலை முடிந்து அடுத்த பருவ நிலை துவங்கும் காலத்தில் ஏற்படும் பெளர்ணமி நிலவு பெரிதாக இருக்கும். இதற்கு பூமியின் சுற்றுப்பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் ஒரு காரணமாகும்.
மற்றபடி பெரிய நிலவு , நீல நிறம் என்பதெல்லாம் கற்பனையே. நாம் வசிக்கும் இடத்திறின் தட்பவெட்பம், பருவ நிலை மாறுபாடுகளை பள்ளிக்கல்வியில் சேர்க்காமல் விண்டர், சம்மர் என படிப்பதால் வரும் குழப்பமே இது.

கிரகணம் பற்றிய பிற கட்டுரைகள் : http://vediceye.blogspot.in/2009/07/blog-post_11.html

Saturday, November 1, 2014

சனிப்பெயர்ச்சி பலன் 2014

சனி  நவம்பர் 2 ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் இன்னும் இரண்டரை வருடம் அந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தில் ஒரு கிரகம் மட்டும் வைத்து பலன் சொல்வது முட்டாள் தனமான விஷயம். ஆனால் கோச்சார பலன்களில் ஒரு சதவிகிதமாவது இது வேலை செய்யும். சனி தசா அல்லது சனி புக்தி ஏதேனும் ஒன்று நடப்பவர்களாக இருந்தால் சனி அதிக வேலைகளை செய்வார்.

தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் எங்கும் சனிப்பெயர்ச்சி பலங்கள் தான். சரி நாமும் சுருக்கமாக சனிப்பெயர்ச்சி பலன் சொல்லுவோமே என கிளம்பிவிட்டேன். சனிப்பெயர்ச்சி பலன்கள் ஒரு வரியில் உங்களுக்காக....

மேஷம் - தொழில் சுனக்கம், சிறு விபத்தால் காலில் காயம்

ரிஷபம் - வழக்கு, சட்ட சிக்கல், மண வாழ்க்கையில் சஞ்சலம்

மிதுனம் - உடல் நலமின்மை, நாள்பட்ட வியாதி, சிறப்பான வேலையாட்கள்

கடகம் - குழந்தைகளால் சங்கடம், ஆன்மீக நாட்டம், வேலை இழத்தல்

சிம்மம் - சொத்து சார்ந்த விவகாரங்கள் , வாகன பழுது

கன்னி - உடன் பிறந்தவர்களுடன் பிணக்கு, பூர்வீக சொத்தில் மேன்மை

துலாம் - வரவு செலவு தாமதம், புதிய கடன், உறவினர்கள் சேர்க்கை

விருச்சிகம் - வாழ்க்கை துணைவர் வழி உறவினர்களால் சிக்கல், மன
உளைச்சல்

தனுசு - வசிப்பிடம் மாற்றம், வருமானத்திற்கு அதிகமான செலவு

மகரம் - மன மகிழ்ச்சி, எதிர்ப்பார்ப்புகள் தாமதத்துடன் பூர்த்தி ஆகும்

கும்பம் - நல்ல பெயர், பதவி உயர்வு, பொருளாதார மேன்மை

மீனம் - தந்தை உடல் நலம் குறைதல், ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம்


இவை சனிக்கிரகத்தால் ஏற்படுவது....

குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.

Wednesday, November 12, 2008

உங்களுக்கு பேச்சாற்றல்,மொழி அறிவு உண்டா? -ஓர் ஜோதிட ஆய்வு

(கொஞ்சம் நிண்ட பதிவு)

மனித இனம் ஜாதி, மதம் மற்றும் மொழி என அனைத்திலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் செயல் நிலை ஒன்றாக இருக்கிறது என்பதை உணரலாம்.
இதில் ஜாதி, மத வேறுபாடு தோன்றலுக்கு முன்பாகவே மொழி என்பது உண்டானது. மொழி என்பதை பற்றி கூற வேண்டுமானால் பல கருத்துகளை கூறிகொண்டே போகலாம். அரசியல் மற்றும் இலக்கியம் என பேசுபவர்கள் மொழி மேல் பற்றுடனும் , இன்னும் சிலர் வெறி உடனும் இருப்பதை பார்க்கிறோம்.

மொழி என்பது செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் ஓர் ஒலி வடிவம் என்பதை தவிர்த்து அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒருவரிடம் நேரடியாக கருத்துக்களை பரிமாற்றம் செய்ய மொழியானது ஒலி வடிவிலும், நேரடியாக இல்லாத பொழுது வரிவடிவிலும் பயன்படுகிறது. வரி வடிவம் பெரும் மொழி இலக்கணம் இலக்கியம் எனும் கட்டுப்பாட்டில் அமைந்துவிடுகிறது.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணியின் அசைவுகளையும், தேவைகளையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் அல்லவா? அதே போல தனது நன்றியையோ மகிழ்ச்சியையோ அந்த பிராணிகளும் உங்களுக்கு உடல் அசைவால் புரியவைக்கும். இதுவும் ஓர் மொழிதான். மொழி என்பது இயற்கையானது.

காரணம் மொழி என்பதை உருவாக்கியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தமிழை எடுத்து கொண்டால் கல்தோன்றி மண் தோன்றா காலம் என்போம். இதே போல அனைத்து மொழிக்கும் உருவாக்கியவர்கள் இல்லை என்பது ஓர் பொதுவான ஒற்றுமை. இதற்கான காரணத்தை முண்டக உபநிஷத் சொல்லுகிறது. பிரபஞ்சம் அனைத்தும் உருவக்கபட்டதும், அந்த பிரபஞ்ச இயக்கத்திற்கும் ஒலி வடிவமான இறைவன் “நாத பிரம்மம்” காரணமாக இருக்கிறது. இதை ப்ரணவம் அல்லது ஓங்காரம் என்கிறோம்.

இறைவன் எனும் சித்தாந்ததில் இருவேறு கருத்துகளுடன் மனிதர்கள் இருப்பார்கள். ஆத்தீகம் மற்றும் நாத்தீகம் எனும் இந்த பிரிவுகள் உலகில் பல காலகட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. நான் சில நேரங்களில் இப்படி வேடிக்கையாக சொல்லுவதுண்டு, “நீங்கள் நாஸ்திகரோ, ஆஸ்திகரோ எப்படி வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் இருவரையும் அந்த கடவுள் கொள்கையிலிருந்து மாறாமல் காக்கட்டும்”. அதுபோல தமிழ் இலக்கியத்தில் இரு பிரிவுகளில் அறிஞர்கள் இருந்தாலும் தமிழ் எனும் ஓர் மொழி இவர்கள் அனைவரையும் இணைத்துவிடுகிறது.

பாரதியை போல நான் கண்ட மொழிகளில் தமிழ் மொழியை போல என நான் கூறவிரும்பவில்லை. அனைத்து மொழிக்கும் ஓர் சிறப்புண்டு. எத்தனையோ உணவு வகை இருந்தாலும் , நமக்கு பிடித்த உணவு என ஒன்று இருக்கிறதே அதை மறக்க மாட்டோம் அல்லவா? அது போலதான் பாரதியின் நிலை. அதற்காக பிற உணவில் சுவையில்லை என சொல்லிவிட முடியாது. உணவை பற்றி சொல்லும் பொழுது அம்மாவின் கையால் சாப்பிட்ட உணவு என்பது பலருக்கும் மறக்க முடியாத சுவையாக இருக்கும். அம்மாவின் கைமணத்தை மனைவியின் சமையல் ருசியிடன் ஒப்பிடும் பொழுது பலருக்கு திருமண வாழ்வில் ஏழரை துவங்குவது அனைவருக்கும் தெரிந்தது. மொழியும் உணவும் இங்கு ஒப்பிடபட காரணம் அதுவே. உங்கள் தாய் மொழியும் அம்மாவின் கைப்பக்குவம் போன்றது

தான்.தாய் மொழியும்-அம்மாவின் கைமணமும் ருசியாக இருக்க காரணம் உங்கள் சிந்தனை ஆற்றல் செயல்படும் முன்னறே உங்களுக்கு ஊட்டப்படுவதால் தான். சிந்தனை வளர வளர பிற மொழிகளை தாய் மொழியுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தாய் மொழி சிறந்ததாக இருக்கிறது. ஒப்பீடு இல்லாமல் பாத்தால் பல மொழிகள் சிறப்பாக இருப்பதை உணர முடியும்.

தாய் மொழியை வளர்க்கிறோம் பேர்வழி என கடையின் பெயர்பலகையில் மொழியை எழுத சொல்லுவது, கட்டாய கல்வி புகட்டுவது என பல முட்டாள்த்தனங்கள் செய்கிறார்கள். கர்நாடகாவிலும், ஒரிசாவிலும் பத்து நாட்க்கள் பயணித்து பாருங்கள் மொழி வெறியர்களால் அனைத்து இடங்களிலும் மொழி தினிக்கப்பட்டிருக்கும். பேருந்துகள், ஊரின் பெயர்பலகை என அனைத்திலும் அவர்களின் தாய் மொழி இருக்கும். யாரிடமாவது வழி கேட்டால் அவர்களின் தாய் மொழியிலேயே பதில் சொல்லுவார்கள். அப்பொழுது புரியும் தாய் மொழி வளர்ச்சி எனும் பெயரில் இந்த முட்டாள்தனம் தேவையா என்று.

உங்கள் தாயை நீங்கள் வளர்த்த தேவையில்லை, உங்கள் தாய் தான் உங்களை வளர்த்த வேண்டும். நீங்கள் வளர்ந்த பிறகும் தாய்யை நீங்கள் பாதுகாக்க மட்டுமே முடியும். அப்பொழுதும் அவளை வளர்த்த முடியாது. மொழியை நாம் பாதுகாக்க செய்ய வேண்டிய ஒரே வேலை அந்த மொழியை சிறப்பாக பயன்படுத்துவது தான். வேற்று மொழி கலக்காமலும், அதிகமான செய்தி

ஊடகங்களில் மொழியை பயன்படுத்துவதன் மூலம் அம்மொழியானது தனது சிறப்பை இழக்காமல் மெருகுடன் இருக்கும். நவீன நாகரீகம் எனும் பெயரில் மொழியை ஊடங்களில் பரிமாற்றம் செய்யும் தன்மை குறைந்து வருகிறது. இதற்கு என்ன சான்று என நீங்கள் கேட்கலாம்.

முன்பு எல்லாம் வார மாத பத்திரிகைகள் அதிகமாக விற்றுவந்தன. தற்சமயம் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, குளியல் சோப் என அனைத்தும் கொடுத்தால் தான் வார பத்திரிகையை வாங்குகிறார்கள்.தினமும் காலையில் ஆங்கில நாளிதழை விட்டுக்கு வெளியே அனைவரும் பார்க்குமாறு படிப்பவர் ”அறிவாளி” என மதிக்கப்படுகிறார். எத்தனையோ அலுவலகங்களின் வரவேற்பு அறையில் அச்சுமனம் மாறாத, கசங்காத ஆங்கில நாளிதழை நீங்கள் பார்த்திருக்கலாம். தற்சமயம் செய்தி ஊடகம் என்பது மக்களுக்கு செய்தியை கொடுப்பதை தவிர்த்து மேலும் பல தவறான வழிகாட்டுதலுக்கு எடுத்து செல்லுகிறது.

சென்னையில் பயணிக்கும் பொழுது ஓர் சாலையில் போக்குவரத்து சமிக்சைக்காக காத்திருந்தேன். எனக்கு அருகில் ஆடம்பரமான நான்கு சக்கர வாகனத்தில் ஒருவர் காத்திருந்தார். வாகன ஓட்டி வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் உற்கார்ந்து பயணித்தவாறே நாளிதழில் இருக்கும் எண் விளையாட்டை (sudoku) தீர்வு செய்தவண்ணம் இருந்தார். அப்பொழுது அவரிடம் பிச்சை கேட்ட சிறுவனையும், முதியவரையும் அவர் கவனிக்கவில்லை. வாழ்க்கை பிரச்சனை தீர்ப்பதால் ஏற்படும் சந்தோஷத்தை அறியாமல் எண் விளையாட்டில் மூழ்கும் தன்மையை தான் தற்கால செய்தி ஊடகங்கள் ஏற்படுத்துகிறது.

தபால்காரர் வந்து விட்டாரா? அல்லது தபால்காரர் தெருவில் போனால் எனக்கு எதாவது தபால் இருக்கிறதா என கேட்ட காலம் இப்பொழுது இல்லை. மாதா மாதம் சொந்தங்களிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்களை படித்து சேமித்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. தங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி மட்டும் எழுதாமல் பருவ மழை பெய்ததா என்பது முதல் அரசியல் வரை அதில் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பழக்கத்தால் வாசிக்கும் ஆர்வமும், சுவைபட எழுதும் ஆர்வமும் மனிதர்களிடையே மிகுந்து காணப்பட்டது.

தகவல் புரட்சி என்று கூறி இத்தகைய விஷயங்கள் அனைத்தையும் நாசமாக்கும் நவீனயுகத்தில் வாழ்கிறோம். அஞ்சல் மற்றும் எழுதும் தன்மை குறைந்து, ஓர் நெருங்கிய உறவினர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிகிறார்... "'I'il com 2mrow". செய்தி மட்டுமல்ல மனதும்,அறிவும் அனைத்தும் குறுகித்தான் போனது. இது போல பயணித்தால் அறிஞர்கள் சொன்னது போல ”தமிழ் மெல்லச் சாகும்”.


நமக்கு எதற்கு அரசியல்? ஜோதிடத்திற்கு வருவோம். 5ஆம் பாவகம் மொழியறிவைகாட்டுகிறது. 3ஆம் பாவகம் மொழியறிவின் பயன்பாட்டை காட்டுகிறது. 2ஆம் பாவகம் மொழியின் சுவைபட பயன்படுத்துவதை காட்டுகிறது. இந்த பாவகங்களை தனிதனியாக ஆய்வு செய்வோம்.

5ஆம் பாவகம் : ஒருவரின் மொழி அறிவை நிர்ணையம் செய்யும் பகுதி. சிலருக்கு ஒரு மொழி தெரிந்திருக்கலாம். சிலருக்கு பலவகையான மொழி தெரிந்திருக்கலாம். தெரிந்திருப்பது ஓர் மொழியானாலும் அதில் அதீத புலமை வாய்ந்தவராகவும் இருக்கலாம். இவை அனைத்தும் 5ஆம் பாவகம் முடிவு செய்கிறது. 5ஆம் பாவகம் பலகால் ராசியில் தொடர்பு கொண்டால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவராக இருப்பார். 5ஆம் பாவகத்தில் இருக்கும் சூரியன் அல்லது குரு பல மொழிகளில் ஆழ்ந்த அறிவை காட்டும். சந்திரன் மற்றும் செவ்வாய் தாய் மொழியை தவிர பிற மொழி தெரிந்திருந்தாலும், ஆழ்ந்த அறிவி இல்லாமல்- சமாளிக்க தெரிந்தவர் எனலாம்.

சுக்கிரன் சம்மந்தபட்டால் நகைச்சுவையாகவும், பிறரை கவரும் வண்ணமும் மொழியை பயன்படுத்துவார்கள். 5ஆம் பாவகம் சினிமா, நாடகம் போன்றவற்றையும் குறிக்கும் என்பதால் சுக்கிரன் 5ல் சம்பந்தபட்டு கவர்ச்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருந்து முதல்வர் ஆசை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

புதன் சம்பந்தப்பட்டால் ஓர் மொழியின் வார்த்தையை பல மொழிக்கு சம்பந்தபடுத்தி புனைவை ஏற்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாக தமிழ்
தாத்தா உவேசா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை சொல்லலாம். ஓர் விருந்தில் கலந்துகொண்டதிற்கு பிறகு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார் தமிழ் தாத்தா. விருந்து கொடுத்தவர் தமிழ் தாத்தாவிடம் வந்து “பீடா சாப்பிடுகிறீர்களா?” என கேட்டார். அதற்கு “நான் பீடாவும் சரி அதன் பெண் பாலும் சரி பயன்படுத்துவதில்லை” என்றார் தமிழ் தாத்தா. ஆக புதன் இவ்வாறு மொழிவிளையாட்டு செய்து நகைச்சுவை செய்பவர்களின் 5ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும். ராகு, கேது மிகவும் அபூர்வமான மொழியை கற்றுகொள்ள தூண்டும். சனி பழமை வாய்ந்த சமஸ்கிருதம், கிரீக், லத்தின் போன்ற மொழி புலமையை காட்டும்.

5ஆம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். முன் ஜென்ம விஷயங்கள் இதில் இருப்பதாக சொல்லுவதுண்டு.பூர்வஜென்மத்திற்கும் நமது மொழி அறிவுக்கும் தொடர்பு உண்டு என கூறுபவர்கள் உண்டு. தனிப்பட்ட வகையில் முன்பிறவி போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எனது நண்பரின் வீட்டில் நடந்த சுவையான ஓர் நிகழ்ச்சியை கூற விரும்புகிறேன்.

ஐரோப்பாவை சேர்ந்த எனது நண்பர் பத்துவயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. அவருக்கு அப்பொழுது ஒரு வயதில் தங்கை ஒருவர் இருந்தார். இவர் கையில் ஓர் ஒலி பதிவு செய்யும் கருவியை வைத்து கொண்டு தனது ஒரு வயது தங்கை தன்னை மறந்து விளையாடும் தருணத்தில் உளறுவதை பதிவு செய்தார். காலங்கள் சென்றது. தங்கை திருமண வயதை அடைந்தார். திருமணத்திற்கு அண்ணனின் பரிசாக வித்தியாசமாக கொடுக்க எண்ணி அந்த பதிவு செய்த ஒலி நாடாவையும், தங்கையின் சிறுவயது ஒளி காட்சிகளையும் பரிசாக அளித்தார் எனது நண்பர்.

அவர் தங்கையின் கணவர் ஓர் அரேபியர், இந்த ஒலி நாடாவை கேட்டதும் மிகவும் குழப்பம் அடைந்தார். காரணம் அவரது மனைவி தெளிவான அரேபிய மொழியில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த பாடல் வரிகளை பாடி இருக்கிறார். தனக்கும் தனது மனைவிக்கும் ஏதோ ஓர் முன் ஜென்ம தொடர்பு இருப்பதாக எண்ணுகிறார்.

5ஆம் பாவகம் இது போன்ற கருத்துக்களை உள்கொண்டதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதிற்குள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழி பேசுவதை நான் பார்த்ததுண்டு. இதனால் தான் 5ல் (5ஆம் பாவகத்தில்) விளையாதது ஐம்பதில் விளையுமா என கேட்டார்களோ?

3ஆம் பாவகம் : ஒருவரின் பேச்சாற்றலை 3ஆம் பாவகம் முடிவு செய்யும். 3ஆம் பாவகத்தில் சூரியன், குரு, சந்திரன்அனைத்தும் திறம்பட பேசும் நபர்களை உருவாக்கும். உலக புரட்சியாளர்கள் அதிகமானவர்கள் 3ஆம்பாவகத்தில் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவராக இருப்பார்கள். பிடரல் காஸ்ட்ரோவின் ஜாதகத்தில் செவ்வாய் 3ஆம் பாவத்தில் சிறப்பக செயல்படுவதை உதாரணமாக சொல்லலாம். அதனால் புரட்சிகரமான செயல் மட்டுமல்ல புரட்சிகரமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

செவ்வாய் தைரியத்தை காட்டுவதால் 638 முறை அமெரிக்க உளவாளிகளால் கொல்ல முயற்சி செய்தும் தனிமனிதனாக
தைரியமாக எதிர் கொண்டார். அவரின் அரசியல் வாழ்க்கை ஓய்வுக்கு பிறகும் அவரின் உடன் பிறந்த சகோதரர் ஆட்சி செய்வது, செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் என தெரிகிறது. சில புரட்சியாளர்கள் பேச்சு எனும் கருவியை மூலதனமாக வைக்காமல் ஆயுதம் ஏந்துவார்கள். அவர்களுக்கு செவ்வாய் தொடர்பு 3ஆம் பாவத்தில் இருக்காது. புதன், சுக்கிரன் தொடர்பு மூன்றாம் பாவகம் பெற்றால் அவர்களின் கருத்துக்கள் பல ஊடகங்கள் மூலம் பலருக்கு சென்றடையும்.

மேலும் சாதாரணமாக ஒன்றும் பிறரை கவருவதற்காக ஒன்றும் என இருவகையான பேசும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். சனி 3ஆம் பாவகத்தில் இருந்தால் சிறந்த அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உண்டு எனலாம். பேசவேண்டிய விஷயத்தை ரகசியாமாக மாற்றி, மக்களை திசை திருப்பும் பேச்சு இவர்களுக்கு இருக்கும். சனி ராகு தொடர்பு இருப்பவர்கள் சரிவர பேச முடியாதவராக மாறுவார்கள். கேது குரு சம்பந்தம் உடையவர்கள் ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பர்கள்.


2ஆம் பாவகம் : குரல் வளத்தை நிர்ணயம் செய்வது இந்த பாவகம். புரட்சிகரமான கருத்துகளை மெல்லிய குரலில் சொன்னால் எடுபடுமா? அதனால் தான் 2ஆம் பாவகம் இந்த செய்தி பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் பெருகிறது. குரு மற்றும் செவ்வாய் 2ஆம் பாவகத்தில் ஆதிக்கமானவர்கள் கணீர்குரலுக்கு சொந்தக்காரர்கள்.2ஆம் பாவகத்தில் புதன் பலகுரல் பேசி மகிழ்விப்பவர்களுக்கு இருக்கும். சுக்கிரன், சந்திரன் பாடகர்களுக்கும், சூரியன் உற்சாகமூட்டும் குரல்வளம் கொண்டவர்களுக்கும் இருக்கும். சனி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் குரல்வளத்தை காட்டாமல் இருந்தால் நல்லது.

ராகு பிறர் போல குரலை மாற்றி
பேசுவர்களுக்கும், கேது தனது குரலை மறைத்து இடத்திற்கு ஏற்றாற்போல குரல் மாற்றி பேசுபவர்களையும் காட்டுகிறது.


இந்த இனிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொழி,தொடர்பு கொள்ளும் முறை மற்றும் குரல்வளம் என அனைத்தும் ஜோதிட ரீதியில் அலசினோம். மொழியை பற்றி இவ்வளவு நான் கூற காரணம் என்ன என யோசிக்கலாம். மொழிகலப்பாலும் , மொழிச்சிதைவாலும் ஏற்படும் விபரீதத்தை விளக்கினால் உங்களுக்கு புரியும்.

”வட விருக்‌ஷா” என்றால் சமஸ்கிருதத்தில் ஆலமரம் என்று பெயர். ஆலமரத்திலிருந்து இலை எடுத்து அதை மாலையாக ஆஞ்சனேயருக்கு அணிவுக்கும் முறை முற்காலத்தில் இருந்தது. இதை தமிழ்ப்படுத்தும் பொழுது வட என்பது ”வடையாக” மாறி இப்பொழுது மோசமான எண்ணெயில் செய்த வடை மாலையுடன் ஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார்.நான் சொல்லுவது மிகையாகவோ அல்லது உண்மைக்கு புறம்பாகவோ ஆஞ்சனேய பக்தர்களுக்கு தெரியலாம்.

ஆஞ்சனேயரை தவிர வேறு யாருக்கும் உணவு பொருளை மாலையாக படைப்பதில்லை என்பதையும், இதை செய்வதற்கான புராண சம்பவங்களோ அல்லது காரணமோ இல்லை என்பதை உணருங்கள். தமிழகத்தை தவிர வேறு ஊரில் (முக்கியமாக அதிகம் வழிபடும் வட இந்தியாவில்) ஆஞ்சனேயருக்கு வடையை மாலையாக போடுவதில்லை.மொழிச்சிதைவால் ஏற்பட்ட நிலைப் பார்த்திர்களா? 108 வடைகளை மாலையாக போடும் மூடநம்பிக்கை வரை வந்திருக்கிறது.

தமிழ் எனும் சொல் மொழியின் பெயரை மட்டும் குறிப்பதில்லை. அழகு, பாலகன் என பல அர்த்தம் இருந்தாலும், நான் தமிழை விரும்ப காரணம் ஞானசுரங்கம் திருமூலர். அவரது மந்திரத்தில் கூறினார்,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே-.”

இதைவிட தமிழ் எனும் வார்த்தைக்கு யார் சிறப்பு சேர்க்க முடியும்?


Saturday, September 13, 2008

ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா ?

கேள்வி பதில் பகுதி இரண்டு
  • ஆமா, ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா??? -குரங்கு

முதலில் ஒன்று கூற விரும்புகிறேன்...உங்கள் பெயர் அருமை.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னறே பிரபஞ்சமும் அதன் ஆற்றலும் இயங்கி வருகிறது. நமது தோற்றம் பிரபஞ்ச ஆற்றலில் இருந்து நடந்ததால் , நமக்கும் அவ்வாற்றலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கடல் என்பது உயிர் தோற்றத்தின் மூலம் என விஞ்ஞானம் சொல்கிறது. சந்திரனின் அமைப்புக்கு ஏற்ப கடலில் எற்ற தாழ்வு அடைவதை காண்கிறோம். அது போல நமது உடலும் அதில் உள்ள கடல் தன்மையும் கிரக ஆற்றலுக்கு ஏற்றது போல வேலை செய்கிறது.

நவீன யுகத்தில் அனைவரும் பயன் படுத்தும் செல்போன் கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். இரு செல்போன்கள் தொடர்பு கொள்ளவேண்டுமானால் அருகில் உள்ள கோபுரத்தில் (tower) இணைப்பு ஏற்பட்டு பின்பு தொலைபேசி நிலையத்திற்கு(Tele Exchange) கடத்தப்படும். மீண்டும் தொலைபேசி நிலையத்திலிருந்து மற்றொரு கோபுரம் மூலம் எதிர் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு செல்கிறது. அது போல உயிரினங்கள் கண்களுக்கு புலப்படாத சக்தி மூலம் கிரகம் என்ற கோபுரமும் , நட்சத்திரங்கள் என்ற தொலைபேசி நிலையம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

அவ்வாறு இயக்கத்தை கண்டறிதலை ஜோதிடம் என்றும் , அதற்கான வரைபடத்தை ஜாதகம் என்றும் கூறுகிறோம். செல்போனின் கதிர்கள் கண்களுக்கு தெரிவதில்லை அதனால் செல்போன் தொழில் நுட்பம் என்பது மோசடியானது என சொல்லமுடியுமா? தகுந்த விஞ்ஞானியை கொண்டு ஆய்வுசெய்தால் அதை உணர முடியும். அது போலத்தான் ஜோதிடமும். மனிதன் கண்டறிந்த விஞ்ஞானத்தில் எவ்வாறு ஒரே எண்ணில் இரு செல் போன் இருக்காதோ அது போல இரட்டை குழந்தைகளுக்கும் ஜாதகம் ஒன்று அல்ல. தனிதனியே செயல்படுகிறது.

உங்களுக்காக இங்கு ஒரு வீடியோ காட்சியை இணைத்திருக்கிறேன். அதில் இவ்விளக்கம் மேலும் பல கருத்துக்களை உஙகளுக்கு சொல்லும்.





நிரூபிக்கபட்டால் ஒழிய ஜோதிடத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.அதனால் எனது அமைப்பு மூலம் பங்கு சந்தை மற்றும் இதர விஷயங்களில் ஜோதிடத்தை நிரூபித்து இருக்கிறேன். எனது மாணவர்கள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்வார்கள். அதுபோல நாங்கள் ஜோதிடத்தை அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

தற்காலத்தில் வெறும் ராசிகட்டதை மட்டும் வைத்து பார்ப்பது ஜோதிடம் என சொல்லப்படுகிறது. ராசி - நவாம்சத்தை பார்ப்பதில்லை. கிருஷ்ண மூர்த்தி முறை , அஷ்டகவர்கம் மற்றும் மிக துல்லிய சந்திர கலா நாடி முறைகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் என்றும் தவறாவதில்லை.

பரிகாரம் மற்றும் ஏமாற்று வித்தையால் ஜோதிடம் தனது உண்மை தன்மையை இழந்து விட்டது. மீண்டும் அதன் எழுச்சி காலம் கூடிய விரைவில் அமையும்.



  • இந்துக்கள் நல்ல நேரம், அஷ்டமி, திதி மற்றும் இன்ன பிற நேரங்கள் பார்ப்பது போல பிற மதத்தவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர்கள் பார்க்காமல் செய்வதனால் ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமா? நாம் நேரம், காலம் பார்த்து செய்வதனால் நமக்கு நற்பலன்கள் ஏற்படுகிறதா? -AMIRDHAVARSHINI AMMA

உயிரினங்கள் அனைத்தும் காலத்திற்கு உற்பட்டு இயங்குகிறது. எறும்பு மழைகாலம் வருவதை முன்பே அறிந்து அதற்கு ஏற்ப உணவை சேமிக்கிறது. பறவைகள் குளிர்காலம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெப்ப பகுதிக்கு பறந்து செல்கின்றன. அனைத்து விலங்குகளும் கிரகணம் ஏற்படும் போது தனது இருப்பிடத்தில் அடைந்து கொள்கிறது. ஆக சிறு உயிரினம் இவ்வாறு செயல்படும் பொழுது மனிதன் ஏன் நேரம் பார்த்து செயல்பட கூடாது?

நீங்கள் கூறியது போல அஷ்டமி நவமி என்பது கெட்ட திதி அல்ல. சில மூடபழக்கவாதிகளின் கூற்றே அது. அவ்வாறு கெட்ட திதியாக இருந்தால் ஸ்ரீ ராமரும் ஸ்ரீக்ருஷ்ணரும் தோன்றுவார்களா?

ராகுகாலம், எமகண்டம் என்பது பொதுவான கற்பிதம். ஒரு குறிப்பிட்ட திதியோ, நட்சத்திரமோ மற்றும் நாளோ நல்லது என்றோ -கெட்டது என்றோ சொல்ல முடியாது. உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மூலம் உங்களுக்கான சுப நேரம் தேர்ந்தெடுத்து அதன் மூலம் செயல்பட வேண்டும். அதே போல அசுப காலத்தில் தன்மையாக நடந்துகொள்வது அவசியம்.

வெளிநாட்டினர் இதன் அவசியத்தை தற்பொழுது உணர்ந்து வருகிறார்கள். தங்கள் அறியாமையில் இருப்பதை உணர்ந்து விவசாயத்தை கூட கிரகத்தின் அடிப்படியில் செய்கிறார்கள். Bio-Dynamic Agriculture என அதற்கு பெயர். நமது நாட்டில் பகுத்தறிவாளர்கள் என சொல்லுபவர்கள் மேலை நாட்டை சுட்டிகாட்டுகிறார்கள். இனி வரும் காலத்தில் மேலை நாட்டவரை சுட்டிகாட்டி ஜோதிடம் மூலம் நல்ல நேரம் பார்க்க துவங்குவார்கள். எல்லாம் நமது அறியாமையே..

உலக பொதுமறையில் கூடசொல்லப்பட்டதை இங்கு நினைவு கூறுகிறேன்... ஞாலம் கருதினும் கைகூடும்...என கூறினார்கள். காலம் கருதி செயல்பட முயற்சிப்போம்.

Friday, September 12, 2008

ஜோதிட கேள்வி பதில்

  • ஜோதிடத்தின் மூலம் மனிதன் மன பலம், தன்னம்பிக்கை பெற முடியுமா?

இதற்கு பதில் கூறும் முன், இந்த கேள்வி உங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன என பார்ப்போம். சிறு விதையை வைத்து மரத்தை முடிவு செய்யலாம் அல்லவா? தற்சமயத்தில் ஆன்மீகத்தை போதிப்பவர்கள் பலர் ஜோதிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். வேத உபஷத்துக்களை மேற்கோள்காட்டி பேசும் இவர்கள் வேதத்தின் கண்ணை மூடி தியானிக்க சொல்கிறார்களோ என நினைக்கிறேன். இவர்களின் பிரச்சாரத்தால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு பற்று அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. ஜோதிடம் வேண்டாம் என சொல்லும் இவர்கள் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தபட்ட பஞ்சாங்கம் மூலம் அமாவாசை , பௌர்ணமியை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டுமே.

ஜோதிடம் மூலம் தெளிவான உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு ஆற்றும் சேவையை தொடர்ந்து செய்வீர்களா என்பது சந்தேகம். இதை உணர்ந்த அவர்கள் ஜோதிடத்தை நம்பி உங்களின் வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என பிரசாரம் செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை பேச்சாளர் என வைத்துக்கொள்வோம். உங்களை 5 வருடத்தில் 5 கோடி சம்பாதிக்கும் ஆற்றலை தருகிறேன் என உற்சாகமாக பேசும் சமயம் உங்களின் கற்பனை எல்லை விரிந்து இருக்கும். ஐந்து வருடம் முடிந்ததும் , கையில் 5 ரூபாயுடன் திண்டாடும் சமயம் தன்னம்பிக்கை பேச்சாளரை
நினைத்தீர்கள் என்றால் உலகிலேயே அதிக மன அழுத்தத்தை கொண்ட மனிதனாக மாறுவீர்கள்.

ஏன் என்றால் தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சாளரோ, ஆன்மீக வழிகாட்டியோ அனைவரையும் அந்த நிலைக்கு உயர்த்த முடியுமா? சிந்திக்க வேண்டும். உயராத மற்றவர்களின் நிலை வருத்ததிற்குரியதாகிவிடும். அதற்கு பதில் ஜோதிடரீதியாக உங்களின் எதிர்காலத்தை சிறந்த ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்டால், நடைபெறாத காரியங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பை வைக்க தேவையில்லை . உங்கள் மனம் நீர்வீழ்ச்சியை போல கீழ்நோக்கி போகாமல் , காட்டாறு போல தானமாக போகலாம்.

  • செய்வினை கோளாறுகள் என்பது உண்மையா?
கடவுள் எனும் அளவிடமுடியாத சக்தி எல்லா நேரமும் உங்களை ஆட்டுவிக்கிறது என உணருங்கள். அவரை மீறி எதுவும் நடக்காது. இந்த நம்பிக்கை இருந்தால் எந்த கவலையும் இல்லை. கம்யூட்டரில் வைரஸ் வருவதால் ,அதை தடுக்க ஓர் ஏற்பாடு செய்கிறோம். வியாதி வரும் முன் தடுப்பூசி அளிப்பது போல. என்றும் கடவுளிடன் பக்தி கொண்டால் இதை போன்ற சின்ன விஷயத்திற்கு கவலை படவேண்டாமே. ஜோதிட சாஸ்திரத்தில் இதை ஆராயும் முறை உண்டு. தற்காலத்தில் மந்திர சாஸ்திரத்தை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் குறைவு. அதிலும் பிறர் வாழ்கைக்காக பயன் படுத்துபவர்கள் மிக குறைவு. ஆன்மீக ரீதியான தொடர்பு இல்லாதவருக்கே இந்த பயம்வரும். மாயை எனும் அறியாமையே இதற்கு காரணம்.

  • ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை எவ்வாறு முடிவு செய்வது?

உண்மையைச் சொன்னால் இதற்கு அளவுகளே கிடையாது. உங்கள் வாழ்க்கையை துல்லியமாக சொல்லும் ஒருவருக்கு குறைந்தளவு பணம் குடுத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்களே சிறுமையாக்கினீர்கள் என அர்த்தம். பழங்காலத்தில் ஜோதிடரிடத்தில் வருபவர்கள் ஜாதகம் பார்ப்பதற்கு முன்னரே வேஷ்டி,பழங்கள் மற்றும் காக்கை கொடுத்துவிடுவார்கள். காரணம் குரு, மருத்துவர் மற்றும் ஜோதிடர் மூவரும் வாழ்க்கையை ஆராய்பவர்கள். இவர்களுக்கு முன்னரே மரியாதை செலுத்துவது முறை. என்று ஜோதிடரின் மேல் உள்ள அவநம்பிக்கையால் ஜாதகம் பார்த்து முடித்ததும் பணம் கொடுக்க துவங்கினார்களோ அன்று முதல் ஜோதிடரும் பல தவறான வழிகாட்டுதலை செய்கிறார்கள். முன்னரே கொடுப்பதால் மனரீதியாக ஜோதிடர் திருப்தி அடைந்ததும் அவரிடம் ஜோதிட பலன் கேட்பது எளிது. இல்லை என்றால் நாம் அளிக்கும் பணத்தில் அவருக்கு கவனம் இருக்கும் ஜாதகத்தை கவனிக்க தவறலாம்.

  • சூரிய குடும்பத்தில் 10வது கோள் கண்டுபிடிக்கப்படுள்ளதாகவும் இது ஜோதிட ரீதியான பலன் கொடுக்கும் என்கிறார்களே உங்கள் கருத்து என்ன?

ரிஷிகளும், மாமுனிவர்களும் கண்டுபிடித்தது இந்த ஜோதிட சாஸ்திரம். அவர்களின் ஞானத்திற்கு முன் இந்த விஞ்ஞானம் எல்லம் பூஜ்ஜியமே. விஞ்ஞானிகள் சூரியமண்டலத்தை ஆராயும் முன்னரே இவர் இதை பகுத்தாராய்ந்தவர்கள். சூரியமண்டலத்தையும் தாண்டி 27 நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரித்தவர்கள். சூரிய மண்டலத்தை தாண்டி செல்லும் சமயம் பத்தாவது என்ன பதினைந்தாவது கிரகத்தையே அவர்கள் உணர்ந்திருக்க கூடும். ஆனால் இவை ஜோதிடத்திற்கு பயன்படுமானால் முன்பே இணைத்திருப்பார்கள். இந்த மெய்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஒப்பு நோக்கினால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒன்றுமே இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் வானில் எப்பொழுது வானவில் தெரியும் , எவ்வளவு நேரம் தெரியும் என கணக்கிட முடியும். ஆனால் விஞ்ஞானத்தில் அந்த வளர்ச்சி இல்லை. அதனால் விஞ்ஞானிகள் கண்டறிந்தது மெஞ்ஞானிகளுக்கு தெரிந்ததில் கால் பங்கு கூட இல்லை என்பதை உணருங்கள்.

  • கர்ம வினையை மாற்ற முடியுமா?

கர்ம வினையை ஏன் மாற்றவேண்டும்? உங்களுக்கு நல்ல கர்மவினை அமைந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதால் இந்த கேள்வி உதிக்கிறது. கடவுள் அமைத்த பாதையை மாற்ற துடிப்பது நமது அஹங்காரமே. கடவுளை சரணடைந்து உங்கள் தேவையை பூர்த்திசெய்யுங்கள். கடவுளுக்கு நிகரானவர்களின் சன்னிதானத்தில் மட்டுமே அது சாத்தியம். சிலர் கர்மத்தை கழிக்கிறோம் என கூறி வியாபாரம் செய்கிறார்கள். மனம் முழுவதும் அவனை நினைத்து உருகினால் அனைத்தும் சாத்தியம். சரணடைந்தவர்களுக்கு கர்மவினையை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

நீங்கள் உலக பிரபலமடைய்பவராக ஆவதாக உங்கள் கர்மவினை இருக்கிறது என கொள்வோம் , அது தெரிந்து கொள்ளாமல் கர்மவினையை மாற்றுகிறேன் பேர்வழி எனஒரு சாதாரண மனிதராக மாற வாய்ப்புள்ளது அல்லவா? முதலில் உங்கள் கர்மவினையை அறிய முற்படுங்கள் , அறிந்தால் மற்ற முயல மாட்டீர்கள். உங்கள் அறியாமையே மாற்ற வேண்டும் என போரடுகிறது - நிங்கள் அல்ல...!