Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 18, 2013

கும்பமேளா அனுபவங்கள் - பகுதி 2


கும்பமேளா தொடர் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. உண்மையை சொன்னால் எனக்கும் தான். கும்பமேளா தொடர் எழுத துவங்கும் முன் பிற தொடர் போல எழுதாமல் சற்று வித்தியாசமாக எழுத நினைத்தேன். 

வித்தியாசமாக என்றால் என்ன என விளக்குகிறேன். கும்பமேளாவை பற்றி ஆழ்ந்து யோசனை செய்துவிட்டு சங்கல்பத்துடன் தியானம் செய்வேன். ஆழ்நிலை தியானத்தில் இருந்து  வெளிவரும் பொழுது விரியும் காட்சியை எழுத்தாக பதிவு செய்வது.இதற்கு தியான முறை எழுத்து (Meditative Writings)  என பெயர்.

தியான முறையில் எழுதுவதால் என் கற்பனைக்கோ அல்லது எனது அறிவை அதில் செலுத்துவதோ கிடையாது. தியான காட்சியை பதிவு செய்வதால் சில நேரம் நான் கற்பனை செய்து எழுதுவதைவிட கும்ப மேளா தொடர் அருமையாக இருந்தது.கும்பமேளா தொடரில் வந்த காட்சிகள் உண்மையா? அதில் இருக்கும் சோமநாத், ஆதிநாத் எல்லோரும் நிஜமா? என கேட்டால் எனக்கு தெரியாது என்றே சொல்லுவேன். நான் கண்டதை உங்களுக்கு எழுதவில்லை, நான் தியானத்தில் கண்டதையே எழுதினேன்.

பலர் என்னுடன் கும்பமேளாவில் பங்குபெற வந்தவர்கள் சோமநாதரையும், ஆதிநாதரையும் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னிடமும் அவர்களின் முகவரியை விசாரித்தார்கள். நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என சிவவாக்கியர் என்பவர் சொன்னதை இவர்கள் மறந்துவிட்டனர். நமக்குள்ளே இருக்கும் நாதரை தானே தேடவேண்டும்? 

கும்பமேளா தொடரில் முக்கியமாக ஒரு விஷயம் விட்டுப்போனது. அது கும்பமேளா என்றால் என்ன என்ற கருத்துத்தான். இது ஒரு முரண்பாடான வேடிக்கை.

இத்தருணத்தை பயன்படுத்தி கும்பமேளா என்பதை விளக்கிவிடுகிறேன். கும்பமேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறும். அலஹாபாத், நாசிக், உஜ்ஜயனி, ஹரித்வார் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுவதால், ஒவ்வொரு நகரிலும் பன்னிரு வருடத்திற்கு ஒருமுறையே கும்பமேளா நடக்கும். அலஹாபாத் என்ற நகரில் நடக்கும் கும்பமேளா மஹாகும்பமேளா என அழைக்கப்படுகிறது. இந்த நகரில் கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகளின் இணைவு ஏற்படுவதால் முக்கியமான ஆன்மீக நகரமாகவும், கும்பமேளாவின் ஆரம்ப நகரமாகவும் கருதப்படுகிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா பூர்ண கும்பமேளா என அழைக்கப்படுகிறது. கிரக நிலையிலும், அன்மீக நிலையிலும் இத்தகைய கும்பமேளா 367 வருடங்களுக்கு ஒரு முறையே வரும் என கூறப்படுகிறது. என்ன தவம் செய்தேனோ பூர்ண கும்பமேளாவில் திளைத்திட என இன்றும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். 

முக்கியமாக பல விஷயங்களை அங்கே கண்டோம். ஒரு நாள் இடைவிடாத மழையால் நாங்கள் தங்கிய குடிலுக்குள் நீர் சூழ்ந்துவிட்டது. முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்க இருக்க இடம் இல்லாமல் பரிதவித்து கோபமும், ஆற்றமையுடன் வெளியே வந்து நின்றோம். ஆனால் எங்கள் அருகே இருந்த பிற குடிலில் வசிப்பவர்கள், சாப்பாடு தட்டில் கரண்டியை வைத்து தாளமிட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் புரியாமல் பார்க்க, “தினமும் கங்கைக்கு நாம் குளிக்க செல்லுவோம். ஆனால் இன்று கங்கையே எங்களை தேடி வந்துவிட்டாள்” என அவர்கள் சொல்லி கொண்டாடினார்கள். வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் கொண்டாட்டம் செய்யலாம் என்பதை அவர்களிடத்தில் கற்றுக்கொண்டோம். மேலும் எங்களின் கோப உணர்ச்சிக்காக வெட்கி தலைகுனிந்தோம்.

மேலும் பூர்ண கும்பமேளாவில் நடைபெற்ற சக்தி தரிசனம் மற்றும் பூர்ண யாகம் ஆகியவை மிக உன்னதமாக இருந்தது. அதில் பங்குபெற்ற சிலருக்கு நல்ல அனுபவம் கிடைக்கப்பெற்றது.இப்படி அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவிதத்தில் என் கும்பமேளா அனுபவங்களின் வாயிலாக ஏற்பட்ட திருப்தி அடுத்த 366 வருடங்களுக்கு தாங்கும். பிறகு அடுத்த பூர்ண கும்பமேளாவில் எனது அனுபவங்களை பகிரும் வரை காத்திருங்கள். ஜஸ்ட் 366 வருடங்கள் தானே?

-ஓம் தத் சத்-

Thursday, March 14, 2013

கும்பமேளா அனுபவங்கள்


மஹாஉன்னதமான தருணங்களை இறையருள் என்றும் அளிக்கிறது. அதில் மிகவும் சில தருணங்களை இறையருள் மிக நெருக்கமாக உணரும்படி அமைக்கிறது. அத்தகைய தருணங்கள் பாறையில் செதுக்கிய சிற்பங்களை போல நம்மில் ஆழ்ந்து பதியும். சென்ற வருடம் ஒரு நன்னாளில் கும்பமேளா சென்றுவிட மனம் ஏங்கியது. 

 நீல அம்பு குறி இருக்கும் இடத்தில் எங்கள் குடில் இருந்தது.எதற்காகவும் ஆசைப்படாமல் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து செல்லும் பணியாளாக இருந்த எனக்கு இவ்வாறு ஆசை உருவானது தவறுதான். பணியாளனின் வேலையை பாராட்டி கொடுக்குக்கப்படும் ஊதியத்துடன் கொடுக்கும் விடுப்பை போல இறையாற்றல் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது.

55 நாட்கள் நடைபெறும் மஹாகும்பமேளாவில் ஒரு மாதம் தங்கும் திட்டத்துடன் பயணமானேன்.கிருஷ்ண ஏகாதசி, மெளனி அமாவாசை, வஸந்தபஞ்சமி, ரத சப்தமி, பெளர்ணமி என முக்கியமான நீராடவேண்டிய நாட்களை மனதில் வைத்து கும்பமேளா சென்றோம்.

எங்களுக்கு அமைந்த குடிலும் அதன் சூழலும் உனதமாக இருந்தது. ஏகாந்த சூழலில் இடையறாது பஜனை கோஷங்கள் நிறைந்த பக்திமிகு சூழல் அமைந்தது. மெளனி அமாவாசை (தை அமாவாசை) தினத்தில் புனித நீராட பல மாணவர்கள் தமிழகத்திலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர். 


மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. 6 கோடிக்கு மேல் அன்று மட்டும் நீராடி சென்றார்கள் என அரசு கணக்கீடு சொல்லுகிறது. கலாச்சாரம் துவங்கி எப்படி வாழ்க்கையை பக்தி மயமாக செலுத்துவது வரை பல விஷயங்களை இப்பயணம் எனக்கும் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தது.

என்னுடன் அதிக நாட்கள் தங்கி இருக்க விருப்பம் கொண்டு பலர் வந்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புடன் என்னுடன் இருக்க வந்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்ததா என தெரியவில்லை. முக்கியமாக எனது வெளிநாட்டு மாணவர் வருவதற்கு முன்பே, “ சுவாமி உங்களுடன் இருபது நாள் தங்கி இருக்க வருகிறேன். இந்த நாட்களில் என்ன பாடங்கள் கற்றுத்தருவீர்கள்? தினமும் எத்தனை மணிக்கு பாடம் நடக்கும்?” என கேட்டார். நான் சிரித்துக்கொண்டே வாருங்கள் பின்பு திட்டமிடலாம் என சொன்னேன்.

அவர் வந்ததிலிருந்து பயிற்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் மிகவும் நோக்கமாக இருந்தார். நானோ காலை எழுந்து கங்கையில் குளித்து ப்ரார்த்தனை செய்துவிட்டு, அனைவருக்கும் சமைக்க துவங்கிவிடுவேன். உணவு சாப்பிட்டவுடன் உரையாடலும், ஓய்வுமாக இருக்கும். பிறகு மதியம் மீண்டும் குளியல், ப்ரார்த்தனை சமையல் பிறகு தூக்கம்.இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதை இவர்கள் ஏன் கும்பமேளாவில் வந்து செய்ய வேண்டும், இவர்கள் ஊரிலேயே செய்யலாமே என கேள்வி எழ ஆரம்பித்தது.அவரின் குழப்பமான முகத்தை நான் புன்னகையுடன் கடந்தேன்.

கும்பமேளாவில் இருந்து கிளம்பும் நாளில் அவர் பின்வருமாறு கூறினார், “ஸ்வாமி நான் பயிற்சிகளில் கற்பதை விட நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எந்த சூழலிலும்,எந்த காலநிலையிலும் எப்படி உள்நிலை சலனம் இல்லாமல் இருப்பது என்பதையும், உள்நிலைஆனந்தம் கெடாமல் அந்த ஆனந்தத்தை எப்படி அனைவருக்கும் அளிப்பது என்பதை கற்றேன்.” என கூறி சென்றார்.

அதற்காகத்தானே கும்பமேளா வந்தோம்?

(அனுபவம் தொடரும்)