காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!
- மஹாகவி சுப்ரமணிய பாரதி
மேற்கண்ட பாடலுக்கு தமிழ் இலக்கியத்தில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டாலும், பக்தி ரீதியாக உணர வேண்டுமாயின் இவ்வாறு விளக்கலாம்.
கிருஷ்ணரின் கருமை நிறம் தன்னுள் நிறைந்திருப்பதால் காக்கையை பார்க்கும் பொழுது எல்லாம் கிருஷ்ணரின் கருமை நிறம் உணர்ந்திருக்கிறார் பாரதியார். மரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ராமனின் பச்சை திருமேனி அவருக்கு தெரிகிறது. கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணரின் குழலிசையாகவும், சூரிய வம்சத்தில் தோன்றிய ராமன் அக்னி ரூபமாக இருப்பதால் தீயை தீண்டும்பொழுது எல்லாம் ஸ்ரீராமனை தீண்டியது போல இருக்கிறது என்கிறார்.
கிருஷ்ண பக்தியும் ராம பக்தியும் மேலோங்கும் பொழுது பார்க்கும் கேட்கும் விஷயங்கள் எல்லாம் இறை ரூபமாகவே பாரதியாருக்கு இருந்ததை போல சபரிமலை விரதம் இருந்து பக்திமயத்தில் இருப்பவர்கள் தம்மையும் தம்மை சுற்றி உள்ள உயிரையும் இறைவனாக பாவிக்க துவங்குவார்கள். கவனியுங்கள் பாவிக்க துவங்குவார்கள், பாவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இந்த பாவனை இயற்கையாக வரவேண்டுமே தவிர கட்டாயத்தில் வரக்கூடாது.
சபரிமலை விரதம் இருப்பவரகள் தம்மையும், பிறரையும் ‘ஸ்வாமி’ என அழைக்கவேண்டும். பிறர் தன்னை ஸ்வாமி என அழைப்பதை எதிர்பார்க்க கூடாது. அனைத்திலும் இறைநிலை உணர அனைத்தையும் இறைவனாக அழைக்கும் பொழுது நம்முள் பக்தியும், ஆன்மீக உயர்வும் ஏற்படும். சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை ஸ்வாமி என அழைப்பதால் நாளடைவில் பிறரும் அவர்களை ஸ்வாமி என அழைக்கிறார்கள்.
உண்மையில் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவரை நீங்கள் ஸ்வாமி என அழைக்க வேண்டும் என்பதில்லை. விரதம் இருப்பவர் தான் அனைவரையும் ஸ்வாமி என அழைக்க வேண்டும்..!
தற்சமயத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டவுன் தன் சகோதரர்களே தன்னை ஸ்வாமி என அழைக்கவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். துறவு நிலையில் இருப்பவர்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க செய்யும் முக்கிய யுக்தி தன் பெயரையும் உடல் அடையாளத்தையும் மறைப்பது. அதில் ஒன்றுதான் துறவு பெற்றவர்கள் பெயரை மாற்றம் செய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே சபரிமலை செல்பவர்கள் தங்களை ஸ்வாமி என அழைத்துக்கொள்வதும் பிறரை அவ்வாறு அழைப்பதும் என்பதை உணர வேண்டும்.
மேற்கண்ட வரிகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று புரிந்திருப்பீர்கள். சாமி என்று அழைப்பார்கள் என கூறவில்லை. ஸ்வாமி என்பார்கள் என்கிறேன். ஸ்வாமி என உச்சரிக்கும் பொழுது உங்களின் சுவாசத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் உணரலாம். உங்களின் வாயின் அடிப்பகுதியில் இருந்து இந்த சப்தம் எழும். ஆனால் சாமி என்றீர்கள் ஆனால் உங்கள் உதட்டளவில் மட்டுமே இந்த சப்தம் வரும்.
சபரிமலை செல்லும் சிலர் பிறரை கூப்பிடும் செயலில் கொடுமையை பார்த்தீர்களானால் புரியும்.. “சாமீ...சாமீ...சமே..” என அவர்கள் கூப்பிடும் பொழுது நம் பாக்கெட்டில் சில்லரை தேட தோன்றும்..!
சபரிமலை விரதம் என்பது துறவின் ஒரு துளி என்பதால் துறவு என்பதை ஏற்க குரு என்பவர் அவசியம். சுயமாக துறவு என்பதை ஏற்றால் வெகுநாளுக்கு தாக்கு பிடிக்காது. மனம் கூறும் வழிகளை எல்லாம் பின்பற்ற தோன்றும். குரு இருந்தால் அவர் வகுத்த பாதையில் அடையாளங்களை தொலைத்து உயிருடன் பிணமாக வாழ்வதே துறவு. அத்தகைய துறவை சபரிமலை விரதம் என்ற பெயரில் குறைந்த காலத்திற்கு கடைப்பிடிக்கும் பொழுது குரு அவசியம்.
அதனாலேயே குரு ஸ்வாமி ஒருவர் நமக்கு மாலை அணிவித்து - அவரே விரதகாலத்தில் வழி நடத்தி - இருமுடியும் கட்ட வைத்து - சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நியதி வகுத்தார்கள். இன்று பலர் குரு ஸ்வாமியின் உதவியின்றியே தானாக செல்லுகிறார்கள். இங்கே சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பை நதியிலிருந்து கையை பிடித்து கூட்டி செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் வழி நடத்த என சொல்லவில்லை. ஆன்மீக விஷயங்களை பற்றி கூறியும், சபரி சாஸ்தாவின் மேன்மையை பற்றி கூறியும் நம் சபரிமலை பயணத்தை ஆன்மீகமாக மாற்றும் குருஸ்வாமி அவசியம்.
சித்தர்கள் எத்தனை பேர் என்றால் பதினெட்டு என்பார்கள். உண்மையில் பதினென் சித்தர்கள் என்பது 18 நபர்களை குறிப்பதில்லை. சித்தர்கள் எண்ணிக்கையில்லாமல் அனேகர் இருக்கிறார்கள். பதினெட்டு என்பது சித்தர்களின் சித்த நிலையை குறிக்கும். நம் ஐம்பொறிகளையும், அதன் செயல்களையும் இணைத்தால் பத்து. அவற்றை கடந்தால் அஷ்டமா சித்தி கிடைக்கும் என்பதையே 18 என்ற எண்ணிக்கை காண்பிக்கிறது.
யோக சித்திகள் என்பதே சபரிமலையில் 18 படிகளாக இருக்கிறது. இத்தொடரில் முன்பு குறிப்பிட்டது போல பதினெட்டாம் படியை கடக்க விரதம் இருந்து இருமுடியுடன் செல்ல வேண்டும். ஆனால் இறைவனை காண இருமுடி தேவை இல்லை. இக்கருத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு யோக சித்தி வேண்டுமானால் அதற்கு கடுமையான விரதம் மற்றும் பயிற்சிகள் அவசியம்.
ஆனால் இறைவனை அடைய பக்தி மட்டுமே போதுமானது. யோகசித்தியுடன் இறைவனை அடைவது மிகவும் உன்னதமானது. இந்த அற்புத கருத்தை கூறிப்பிடுவது தான் சபரிபீடம் என்னும் ஆன்மீக ஸ்தலத்தின் நோக்கம்.
எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் என்ற சிகரம் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை அடைய மனிதன் தன் அறியாமையால் வேறு பாதைகளுக்கு செல்வதால் சிகரத்தை அடைய முடியாமல் வீணாகிறார்கள். சபரிமலையும் தன்னகத்தே ஆற்றலை கொண்டிருந்தாலும், தங்களின் அறியாமையாலும், சோம்பேறித்தனத்தாலும் மற்றும் ஒழுக்கமின்மையாலும் ஆற்றலை பெறமுடியாமல் எத்தனையோ பேர் வீணாகிறார்கள்.
இத்தனை நாள் உங்களிடம் சில உண்மைகளை பகிர்ந்து கொண்டேன். இக்கருத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்து உண்மையை அறியுங்கள். பிறகு நீங்கள் சபரிமலை செல்லும் பொழுதும் உங்களின் நண்பர்கள் செல்லும் பொழுதும் இக்கருத்தை விளக்கி பயன்பெறுங்கள்.
சபரிமலையில் எத்தனையோ விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருந்தாலும் முக்கியமாக சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யோக சாஸ்தாவின் அருள்மழை அனைவரின் மேலும் பொழியட்டும்.
ஸ்வாமியே சரணம்