எந்த ஒரு விஷயமும் திடீரென நமக்கு பழக்கமாகி விடுவதில்லை. பாரம்பரியமாகவோ, ரத்ததிலேயே ஊரியோ அல்லது நாகரீகம் கருதியோ தான் அப்பழக்கங்கள் நாம் கொண்டு செல்லுகிறோம்.
உதாரணமாக ரயில் பயணத்தில் பரிசோதகர் உங்கள் சீட்டை சரிபார்த்தவுடன் அவரை பார்த்து ‘நன்றி’ என கூறிப்பாருங்கள். சட்டென உங்களை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு நகர்வார். இதற்கு காரணம் அவரிடம் எவரும் நன்றி சொல்லுவதில்லை. அவர் தான் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறாரே என்ற நினைப்பு நமக்கு. இவ்வாறு பழங்கங்களில் மட்டுமல்ல சொற்களையும் மொழியையும் பயன்படுத்துவதிலும் நம் மக்களிடம் பல்வேறு நிறை குறைகள் உண்டு.
நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.
காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.
படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.
நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம்மில் பல வார்த்தைகள் இப்படி புரிதல் இல்லாமலே வெளி வந்துவிடும். பல வசவு சொல்கள் கூட சகஜமாக புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது. அதை பெருமையாகவும், நாகரீகம் மற்றும் நகைச்சுவை என்ற பெயரிலும் மனிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள் மட்டுமே தான் பயன்படுத்தும் வார்த்தையின் ஆழம் மற்றும் அர்த்தம் உணராமல் பயன்படுத்துவார்கள்.
விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு வார்த்தை ஒரு மந்திரம், விழிப்புணர்வு அற்றவர்களுக்கு எச்சில் போன்றது. இரண்டுமே வாயிலிருந்து வந்தாலும் பயன் வேறுபடுகிறது.
பலர் அப்படி பேசலாம் நான் அப்படி அல்ல, மிகத்தெளிவானவன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் அது உலகமகா பொய். நீங்கள் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அந்த தவறை செய்வீர்கள்.
முன் பின் தெரியாத ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அவரை அழைக்க, “சார்” என்போம். இது மிகவும் தவறான சொல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.
முன்னூறு வருடங்களால நம்மை அடிமை படித்தி இருந்த ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அடிமை வார்த்தையே “சார்”. ஓர் அடிமை தனது முதலாளியை பார்த்து பதில் அளிக்கும் வார்தையே இது. ஆங்கில அதிகாரிகளை சார் என்றும் பெண்களை மேடம் என்றும் பல்வேறு ஆண்டுகளாக அழைத்து பழகிய நாம் எங்கே சென்றாலும் அவ்வாறு அழைக்கிறோம். ஒவ்வொரு முறையை சார் என பிறரை அழைக்கையில் நீங்கள் ஒரு அடிமை என்பதை நீங்களே பதிவு செய்கிறீர்கள்....!
இந்தியர்கள், அப்ரிக்க மக்களை ‘நீக்ரோ’ என்ற சொல்லாடலில் பயன்படுத்துவார்கள். இது மிகவும் கொடூரமான ஒரு சொல். பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் கொண்டது இவ்வார்த்தை. இதை அப்ரிக்கர்கள் மிகவும் வெறுப்பார்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் நம் ஊரில் அவர்களை அழைத்தது போலவே அழைத்து முன் பல் இழந்து நிற்பார்கள். இனியாவது அப்ரிக்கன் என அவர்களை கூறுங்களேன்.
பிறரை அழைக்க 'Sir', 'Boss' என அழைப்பதைக்கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இது நம்மில் இருக்கும் அடிமட்ட அடிமை உணர்வே காரணம். பிறரை ‘அண்ணா’, ‘அக்கா’ அல்லது பெயர் மூலமோ அழையுங்கள். உணர்வுபூர்வமாக அழைப்பதால் அவர்களுடன் நெருக்கமும் ஏற்படும்.
நான் பல்வேறு இடங்களில் பயணிக்கும் பொழுது என்னை ‘சார்’ என அழைப்பதை பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாக உணர்வேன். எல்லோரையும் எனக்கு இணையாகவும் சமமாகவும் பார்க்கும் நிலையில் அவர்களாகவே சார் என அழைத்து அவர்களை கீழேயும் என்னை மேலையும் வைத்து தர்ம சங்கடப்படுத்துவார்கள். அமெரிக்க ஜனாதிபதியை கூட நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம். சார் என அழைக்கக் கூடாது - என்ற வெள்ளை மாளிகை குறிப்புகள் உண்டு. ஆனால் நாம் இன்னும் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம்.
என்னை பெயர் சொல்லி அழையுங்கள் அல்லது வேறு வார்த்தையில் அழையுங்கள். சார் என்று மட்டும் அழைக்காதீர்கள்.
ஏன் என்றால்...
சாருன்னா எனக்கு பிடிக்காது...!