Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label வேளண்மை. Show all posts
Showing posts with label வேளண்மை. Show all posts

Thursday, December 14, 2017

வேளாண்மை பஞ்சாங்கம்- 2018

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (ஹேவிளம்பி -விளம்பி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

வேளாண்மை பஞ்சாங்கம் 2018


இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 
வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.
 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Wednesday, November 19, 2014

வேதகால வேளாண்மை - பகுதி 1

ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஜோதிட சாஸ்திரத்தை தொகுத்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக விவசாய விஷயங்களை எளிமையாக கொடுத்துள்ளேன். வேதகால வேளாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.அதில் மேலும் ஆழமாகவும் விவசாய குறிப்புகளுடனும் தகவல்கள் இருக்கும். 

பழங்காலம் தொட்டு ஜோதிடமும் முஹுர்த்த சாஸ்திரமும் விவசாயத்திற்காகவே கண்டறியப்பட்டது. நம் ப்ரணவ பீடத்தில் 2007ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு என தனியே பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். வேளாண்மை பல்கலைகழகத்தில் இது பாடமாகவும் இருக்கிறது. 

இந்த வருடம் பகுத்தறிவு கொண்டவர்கள் என கூறும் பலர் வேளாண்மை பல்கலைகழகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் என கேள்விபட்டேன். நம் கலாச்சாரத்தை  இழிவுபடுத்த மேலை நாட்டின் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் பகுத்தறிவாளிகள், மேலை நாட்டில் பல வருடமாக BIO Dynamics என பஞ்சாங்கம் கொண்டு விவசாயம் செய்கிறார்களே? அதற்கு மாநாடு வேறு உலகாளாவிய அளவில் நடக்கிறதே? அதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்கள்? இச்செயலை பார்த்தால் இவைகள் எல்லாம் வேறும் வெறுப்பறிவு பகுத்தறிவல்ல என்பது தெளிகிறது. இதனால் உண்மையை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை தொடர். 
----------

ஜோதிட சாஸ்த்திரத்தை பல துறைகளில் பயன்படுத்தினாலும், தற்சமயம் வேளாண் துறையில் பயன்படுத்துவது குறைவே. இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை உபயோகித்து விவசாயம் செய்யும் முறையில் கிரக ஆற்றலை கொண்டும் விவசாயம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உண்டு.

இயற்கை விவசாயம் என்பது இயற்கையில் உள்ள சக்தியை , உயர் நிலையில் பயன்படுத்தி விளைச்சல் காண்பது என்கிறார்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லியைக் காட்டிலும் இயற்கையான பஞ்சகவ்வியம் மற்றும் தசகவ்வியத்தைக் கொண்டு வளப்படுத்துகிறார்கள். இந்த சிறப்பான முறையுடன், வேதத்தின் கண் எனக் கூறப்படும் ஜோதிட சாஸ்த்திரத்தையும் இணைத்து பயன்படுத்தினால் புதிய பரிமாணத்திற்கு வேளாண்துறை செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிட சாஸ்த்திரத்தை இயற்கை விவசாயத்துடன் இணைத்து பயன்படும் இந்த முறை "வேதகால வேளாண்மை"  எனலாம்.

ஜோதிடத்தை பயன்படுத்துவது என்றவுடன் கிரக ஆற்றலை மட்டும் பயன்படுத்துவது என நினைக்க வேண்டாம். ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் மற்றும் இதர ஜோதிட குறியீடுகளான திதி, யோகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பிரபஞ்ச ஆற்றலை முழுமையான முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் சூட்சுமங்களை பின்வரும் பகுதிகளில் காண்போம்.

மேல்நாட்டில் சிலர், கிரக ஆற்றலை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்கு "Bio-Dynamic" முறை என அழைக்கிறார்கள். இது முழுமையான முறை இல்லை. காரணம் , இந்திய ஜோதிட முறையைத் தவிர வேறு எந்த ஜோதிடமுறையிலும் நட்சத்திரங்கள்  எனும் கோட்பாடு இல்லை . நட்சத்திரங்கள் இல்லை என்றாலே திதி மற்றும் ஏனைய பஞ்சாங்க நுணுக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் மேல்நாட்டினர் திதியை முழுமையாக பயன்படுத்தாமல் அமாவாசை, பௌர்ணமியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சனி, ராகு/கேதுவுடன் சந்திரனின் இணைவை ஆராய்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வேளாண் செயல்களைச் செய்ய முடியும்.


பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம். கிமு 5000  வருடத்திற்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் முறை இருந்ததற்கு சாட்சிகள் உண்டு.  வேத சாஸ்திரத்தின் தோற்றத்தை காலம் எனும் பரிமாணத்தில் அடக்க முடியாது. அத்தகைய  தோற்றமும் முடிவும் இல்லாதது என  கூறப்படும் வேத சாஸ்திரத்தில் அதர்வண வேத பிரிவின் கீழ் "கணிதா" (Ghanitha) எனும் பகுதி  உள்ளது. இதில் கோள்களின் நிலையை துல்லியமாக கணிக்கும் பஞ்சாங்க கணிதம் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு பல கோடி செலவழித்து நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோள்களின் நிலையை , வெள்ளைதாளும் - எழுதுகோலும் கொடுத்தால் நமது நாட்டு பஞ்சாங்க கணிதர்கள் சில மணி நேரத்தில் கணித்து விடுவார்கள்.

பஞ்சாங்கம் எனும் வடமொழி சொல்லை , ஐந்து அங்கங்களை பற்றி கூறும் நூல் என மொழிபெயர்க்கலாம். வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவையே இதன் பஞ்ச அங்கங்கள் அகும். நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி வேளாண்மை 
செய்து வந்தார்கள். இந்த முறையை எளிமைப்படுத்தி  நவீன கால வேளாண்மைக்கு ஏற்றவாறு அளித்துள்ளேன். ஜோதிடத்தில் கூறப்படும் கிரகம், நட்சத்திரம், திதி, யோகம் இவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து வருடங்களாக பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். 

கிரகம் :

சூரிய மண்டலத்தில் நவகிரகங்கள் சுற்றிவருவது நமது பள்ளி நாட்களில் அறிந்தது தான். இதில் சூரியன் முதல் சனி வரை 7 கிரகங்கள் உருவமாகவும் , ராகு - கேது அருவமாகவும் (உருவமில்லாமல்) சூரிய மண்டலத்தில் உலா வருகிறது. இதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே கணித்த  நம் முன்னோர்கள் , நவகிரகத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 கிரகங்கள் சூரியன் முதல் சனி வரை ஆட்சிசெய்கிறது. ராகு - கேதுக்கள் தனி ஒரு நாளை ஆட்சி செய்யாமல் ஏழு நாட்களிலும் சக்தியை வழங்குகிறது. சமஸ்கிருதத்தில் கிழமைகளை "வாரம்" என அழைப்பார்கள். வாரநாட்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் கிரகப்பெயரால் சோம வாரம், மங்கள் வாரம் (திங்கள் கிழமை - செவ்வாய் கிழமை) என அழைக்கிறார்கள். ஒரு கிரகம் குறிக்கும் கிழமையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக திங்கள் கிழமை அன்று சந்திரனின் அலைவரிசை அதிகமாக இருக்கும்.   

வடமொழி காலண்டர், ஆங்கில காலண்டர் மற்றும் தமிழ் காலண்டர் அனைத்திலும் வார நாட்கள் அனைத்தும் ஒன்று போல  இருப்பதைக் கொண்டு கிரகத் தாக்கத்தின் முக்கியதுவத்தை அறியலாம். இதனை அறிந்த முன்னோர்கள் , அந்த கிரகம் குறிக்கும் வேலையை அதன் ஆற்றல் உள்ள கிழமையில் செய்து வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என நிருபித்தனர். சனி - நீர் தன்மை கொண்ட கிரகம். அதனால் சனிக்கிழமை உடலில் நீர் சத்து அதிகரித்துக் காணப்படும். எனவே சனிக்கிழமைகளில் ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றார்கள். இதனால் நீர் தன்மையும் - எண்ணெய் தன்மையும் கலக்காமல் , தோல் பகுதி கழிவுகளை எண்ணெய் வெளியேற்றிவிடும். ஆனால் சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று இதைச் செய்தால் சூரியன் உஷ்ணத்தை குறிப்பதால் எண்ணெய் தோல்பகுதியில் இணைந்து கழிவாக மாறி நோய் உண்டாக்கும். 

கிரகங்கள் உடலில் இது போன்ற விளைவை ஏற்படுத்துவது போல தாவரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிழமையின் அடிப்படையில் தாவரங்களை பராமரிப்பது அவசியம். கிரகங்கள் குறிக்கும் கிழமைகளும் அன்று செய்ய வேண்டிய வேளாண் பணிகளும்  பின்வருமாறு,


வேளாண் செயல்களுக்கு மட்டுமல்லாமல் பயிரிடப்படும் தாவர வகைகளும் கிரகம் சார்ந்து இருந்தால் நல்ல விளைச்சலைத் தரும்.

கிரகங்கள்  பயிர்வகைகள்

சூரியன் தானியம், கோதுமை
சந்திரன் அரிசி வகைகள்
செவ்வாய் மூலிகைச் செடிகள்
புதன் அவரை- துவரை, பருப்பு வகைகள்
குரு பழங்கள் , சதைபற்றுள்ள காய்கறிகள்
சுக்கிரன் பூக்கள், பழங்கள்
சனி கிழங்கு வகைகள் , தென்னை , எண்ணெய் வித்துக்கள்

கிரகத் தன்மைக் கொண்டு செய்யப்படும் செயல் வீணாகாது. மேலும் சில கிரகங்கள் மற்ற கிரகத்தின் தன்மைக்கு எதிர் தன்மை வாய்ந்தது. எனவே ஒரு கிரகம் ஆட்சி செய்யும் நாளில் அதற்கு எதிரான தன்மை உள்ள பணிகளையோ , பயிர்வகைகளையோ செய்தால் வேளாண்மை பாதிக்கும். உதாரணமாக செவ்வாய் அன்று செய்ய வேண்டிய பணிகளை வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ செய்தால் பயிர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புண்டு.  ஒரு கிரகத்திற்கு எதிர் தன்மை உள்ள கிரகம் எது என தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. அதற்கு பதிலாக அந்த கிரகம் குறிக்கும் செயலை மட்டும் செய்தாலே மேன்மை கிடைக்கும்.

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் 27 நட்சத்திர கூட்டங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டே கிரகங்கள் இயங்குகின்றன. எனவே கிரகங்களை காட்டிலும் நட்சத்திரங்களின் ஆற்றல் மிக முக்கியமானது. மின்சார பல்புகள் மின்னாற்றலில் இயங்குவதைப் போல கிரகம் , நட்சத்திர ஆற்றலில் இயங்குகிறது. எனவே நட்சத்திர ஆற்றலைக் கொண்டு வேளாண் செயல்களை செய்தால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். 

நட்சத்திரங்கள் 27 நட்சத்திர கூட்டங்களாக பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் ( 9X3=27 நட்சத்திரங்கள்) ஆட்சி செய்கின்றன.  கிரகங்களின் செயல்பாடுகளை  கொண்டு வேளாண் பணிகளை செய்ததைப் போல , நவகிரகங்கள் அதன் தாக்கத்தை இந்த நட்சத்திரங்களுக்கு அளிப்பதால் , விவசாய பணிகளை மேலும் சிறப்பாக செய்யலாம். நட்சத்திரங்களின் மூலம் கிரகங்கள் 

செயல்படுத்தும் வேளாண்மை பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


       வார நாட்களைக் கொண்டு வேளாண்மையை செய்யும் பொழுது ராகு - கேதுவின் செயல்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால் நட்சத்திரங்களைக் கொண்டு வேளாண் பணிகளை செய்தால் ராகு - கேதுவை பயன்படுத்த முடியும். கிழமைகளை பயன்படுத்தும் பொழுது ஏழு தன்மைகள் மட்டுமே கிடைக்கும். கிழமையுடன் நட்சத்திரத்தை யும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிக கிரக அமைப்புகள் ( 27 நட்சத்திரம் X 7 வார நாட்கள் = 189) கிடைக்கும்.  

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் வந்தால் சூரியன் சம்மந்தப்பட்ட வேளாண் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நட்சத்திரங்களுக்கும் கிழமைகளின் அதிபதிகளுக்கும் எதிர் - எதிர் தன்மை கிடையாது. உதாரணமாக செவ்வாய் கிழமையில் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம் - பூரட்டாதி அமைந்தால் செவ்வாய்க்கு உண்டான உழுதல், செடியை செதுக்குதல் போன்ற பணிகளையும் குருவுக்கு உண்டான விதைத்தல் , விதையை ஊர வைத்தல் , பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற இரு கிரகத்தின் வேலையையும் செய்யலாம். ஆகவே நட்சத்திரங்களையும் கிழமைகளையும் பயன்படுத்தும் பொழுது அதிகமான நற்பயன்களைப் பெற முடியும்.

(தொடரும்)

Saturday, October 11, 2008

வேதகால வேளாண்மை

வேதகால வேளாண்மை
- உரமாகும் கிரக சக்தி

ப்ரணவ பீடம் வேதகாலவாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆனால் இதை நவீன விஞ்ஞான கொள்கை உடையவர்கள் ஏற்பதில்லை. மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கலந்திருக்கும் அனைவரும் இதில் முரண்படுவார்கள். உண்மையில் நமது வாழ்க்கை வேதகாலத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை முன்பே கூறி வழிநடத்துவது தான் ப்ரணவ பீடத்தின் நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வேதகால வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும். மக்கள் அதன் படி வாழ முற்படும் சமயம் அவர்களை வழிநடத்த ஆட்கள் குறைவாக இருப்பார்கள். இந்த குறைபாட்டை போக்கவே ப்ரணவ பீடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வேதகால வாழ்க்கை :

வேதகால வாழ்க்கை என்பது விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் என்றவுடன் நவீன கால விஞ்ஞானத்தை கருதவேண்டாம். ஓர் விஞ்ஞான கண்டுபிடிப்பானது பிற உயிர்களுக்கும், எதிர்கால வாழ்க்கை முறைக்கும் பாதிக்காத வகையில் இருந்தால், அது வேதகால விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் சுயநலமானது , அவர்களின் கண்டுபிடிப்பு ஒரு விஷயத்திற்கு தீர்வாகவும் பல விஷயத்திற்கு பாதிப்பையும் தரும். உதாரணமாக உணவு பொருட்கள் பதப்படுத்த கண்டுபிடிக்க பட்ட பொருள் ஓஸோன் மண்டலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் பதப்படுத்திய உணவை உட்கொள்வதால் உடல்நல குறைகளும் ஏற்படும் என்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

உங்கள் சிறுவயதில் சமையல் அறை வாயிலில் இருக்கும் தானியத்தை கொத்தும் குருவியை பார்த்திருக்கிறீர்கள் தானே? தற்சமயம் அதை காண முடியாது. உங்கள் சந்ததியினரும் இனி காணமாட்டார்கள். அதற்கு காரணம் செல்போனில் வரும் கதிர்வீச்சால் குருவி இனம் சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது.

நவீன ஆராய்ச்சியாளர்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். எதிர்கால பிர்ச்சனையை உள்ளடக்கி ஆராய்ச்சியை தொடர்ந்தால் இது போன்ற விளைவுகளை தவிர்க்கலாம். வேதகாலத்தில் கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் எவரையும் பாதிக்காதவாறு உள்ளது. இதை தெய்வீக கண்டுபிடிப்புகள்(divine invention) எனலாம். உதாரணமாக உலோக பயன்பாடுகள் இருந்தாலும், மண் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என கண்டறிந்து பயன்படுத்தினார்கள்.

இந்த மண்பாண்டங்கள் பயனற்று போகும் சமயம் மண்ணுடன் கலந்து விடும். மேலும் மின் கடத்தா பொருளுக்காக இயற்கையான தர்பை புல்லை பயன்படுத்தினார்கள். தர்பை புல்லை பயன்பாட்டிற்க்கு பிறகு குப்பையுடன் கலந்தாலும் ,இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பதில்லை. நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான செயற்கை ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்படுத்தி ஏற்படும் விளைவை விளக்க தேவை இல்லை.நவீன விஞ்ஞானம் அனைத்தும் தவறு என கொள்ள வேண்டாம். பொது நல நோக்கமற்ற கண்டுபிடிப்பை மட்டுமே நாம் தவிர்க்க சொல்கிறோம்.


வேதகால விஞ்ஞானத்தை உள்ளடக்கிய வாழ்க்கை முறைதான் வேதகால வாழ்க்கை. ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்ற வேதகால விஞ்ஞானத்தை அனைத்து வாழ்வியல் கோட்பாடுகளிலும் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையாகும். இந்த முழுமையான வாழ்க்கையால் தனக்கோ பிறர்க்கோ எந்த ஒரு தீங்கும் இன்றி வாழலாம். மேலும் இதை நடைமுறை படுத்துவதால் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பால் பூமிக்கு ஏற்பட்ட குறைபாடுகளை போக்கலாம்.

வேத கால வாழ்க்கை முறையின் ஓர் அங்கமே வேதகால வேளாண்மை.


நவீன வேளாண்மை பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 வருடங்களில் ரசாயனங்களை புகுத்தி அழிவை ஏற்படுத்தியது. இயற்கைக்கு முரண்பாடான அதிக மகசூலை பெறும் சமயம் இதன் விளைவை அவர்கள் உணரவில்லை. விளைலம் சக்தி அற்றும். அதில் விளையும் பொருட்கள் சத்துக்கள் இல்லாமல் ரசாயனமாக இருக்கிறது. தற்சமயம் இந்த விளை நிலங்கள் எலும்புக்கூடாக நிற்கும் பொழுது ,நிதர்சனமும் முகத்தில் அரைகிறது. இதன் காரணமாக மனித குலத்தின் உடலில் இரத்தத்திற்கு பதில் ரசாயன கலவையே உள்ளது எனலாம். இதை தாமதமாகவே உணர்ந்தனர் நவீன விஞ்ஞானிகள். மேலும் 1980க்கு பிற்கு பிறந்தவர்களுக்கு மலட்டுதன்மை அதிகரிக்க ரசாயனம் கலந்த உணவு பொருளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


20 வருடங்களுக்கு முன்னால் பொது இடங்களிலும் , வீடுகளிலும் மூட்டை பூச்சி கொசு ஆகிய பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். இதற்கு தனியாக ரசாயன மருந்து மூலம் அழிப்பார்கள். இவை இக்காலத்தில் மருந்து அடிக்காமலே வெகுவாக குறைந்துவிட்டது. தற்காலத்தில் மனிதனை கடிக்கும் பூச்சிகள் தாமாகவே இறந்து விடுவதால், ரசாயன மருந்து தேவையில்லை. மனிதன் அவ்வளவு ரசாயனமாகிவிட்டான். இவ்வாறு மனித இரத்தம் ரசாயனமாக மாறியதை பற்றி வேடிக்கையாக கூறுவார்கள்.

ஜெர்மானிய மக்கள், வேடிக்கையான ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளும் உண்டு என்பார்கள். அதைபோல இதில் சில உண்மையும் உண்டு. உபஷத்துகளில் ஒன்றான கடோ பஷத்து கூறும் மந்திரம் " எதை உண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்". இயற்கையான உணவை உண்டால் இயற்கையாகவும், ரசாயன கலவையை உண்டால் ரசாயனமாகவும் மாறுவது இயல்புதானே?

ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது? இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள்? இதை தெரிந்து கொண்டால் நமது வேளாண்மை வேதகால வேளாண்மை ஆகிவிடும்.

நம் முன்னேர் கண்டறிந்த "பஞ்சகவ்வியம்" ஒரு வரப்பிரசாதம். இதை உரமாக கொண்டால் மண்ணுக்கும், விளைச்சலுக்கும் எந்த கெடுதலும் கிடையாது. பஞ்சகவ்வியம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை நமக்கு அளிப்பவை. இதைகொண்டு வேளாண்மை செய்வதால் நல்ல விளைச்சலையும், விளைபொருட்கள் நல்ல உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதுடன், அனைவரையும் இதை செய்ய சொல்லுகிறது. ஆயுர்வேதம் பஞ்சகவியத்தை மருந்தாக உட்கொள்ள சொல்கிறது.

பஞ்சகவ்வியம் என்பது பசு மாடு நமக்கு வழங்கும் பால்,தயிர்,நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சில விகிதாச்சாரத்தில் கலந்த கலவையாகும். ஓர் மனிதன் பஞ்சகவ்வியத்தை நிலத்தில் இடும்பொழுது அதை சாப்பிட்டால் அவனிக்கு ஒன்றும் ஆகாது. இதே அவன் ரசாயன உரத்தை உண்டால் அவனின் நிலையை நினைத்து பாருங்கள். தன் உடல் போன்றது தானே அந்த பயிறும் என உணரும் நிலை விவசாயிக்கு இல்லை.முற்காலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒவ்வொருவரும் மாடுகளை வைத்திருந்தனர். தற்சமயம் நவீன கருவிகளான டிராக்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாடுக்கும் விவசாயிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

உலோகத்தை பயன்படுத்திய நம் முன்னோர் , நிலத்தை உழும் கலப்பை மற்றும் விதை வைக்கும் கலன் ஆகியவற்றை மரத்தில் வைத்திருந்தார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இரும்பில் இருக்கும் அயனிகள் காந்த மின்னூட்டம் அடைந்து விளைலங்களையும், விதையையும் உயிரற்றதாக்கிவிடும். விவசாயத்திற்கு பயன்படும் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதை அறிந்து கொண்ட வெளிநாட்டுகாரர்கள் மரத்தை கலப்பையாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியன் என்றும் முன்னோர்களை உதாரணமாக எடுப்பதை காட்டிலும் வெளிநாட்டுகாரர்களையே உதாரணமாக்க விரும்புவான். இதனால் கூடிய சீக்கிரம் நாமும் மண்கலப்பையை பயன்படுத்துவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இது போன்ற இயற்கை வேளாண்மையை மேலும் தரம் உயர்த்தும் வண்ணம் ஜோதிடத்தையும் இணைத்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வேளாண்மை காரியங்களை செய்வதால் பல வகையில் முன்னேற்றம் உண்டு. உதாரணமாக சில கிரகங்கள் சார்ந்து செய்ய தகுந்த விவசாய கடமைகள்.

கிரகம்------------------------ தன்மை ----------------------- செயல்
குரு ------------------------ புதிய வளர்ச்சி------------------- விதைத்தல்
சனி ------------------------ மறைவு பொருட்கள் ------------- கிழங்கு பயிரிடல்
சுக்கிரன்-------------------- கவர்ச்சியான பொருள் -------------பூக்கள்/ தோட்டம்
சூரியன்---------------------நிர்வகித்தல்------------------------ களை / உரமிடல்
செவ்வாய்---------------- திடீர்செயல்கள்----------------------பயிர் சீர்செய்தல்
சந்திரன் -------------------- திரவலை------------------------ நீர்விடுதல்
புதன் ------------------------ திட்டமிடல் ----------------------- உழுதல்/விதைத்தல்

இதே போல திதி மற்றும் நட்சத்திரத்திற்கு சில தன்மைகள் உண்டு. இதை கொண்டு வேளாண்மை செய்யும் பொழுது பயிரில் உயிரோட்டம் இருக்கும். சாதாரண ரசாயண உரத்தில் ஒரு கனி 5 நாட்கள் கெடாமல் இருந்தால் , இயற்கைவிவசாயம் செய்யும் பொழுது 8 முதல் 9 நாட்கள் கெடாமல் இருக்கும். இத்துடன் வேதகால வேளாண்மை இணையும் பொழுது கனியின் ஆயுட்காலம் நிச்சயமாக உயரும். இதற்காக தனியாக "வேளாண்மை பஞ்சாங்கம்" ப்ரணவ பீடத்தில் விவசாயத்திற்கு என்றே வெளியிடப்படுகிறது.


பஞ்சகவ்வியம் மற்றும் இதர இயற்கை முறை களைப் பயன்படுத்துவது போக , மந்திர ஜபம் மூலம் பயிர்களை வளர்த்துவது எனும் முறை ஒன்று இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் காயத்திரி மந்திரம் அல்லது மஹா மிருத்தியஜெய் மந்திரத்தை ஒலிக்கவிடுவதால் பயிர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படிகிறது என நிரூபணம் செய்துள்ளோம். செடிகளுக்கு வேதமந்திரத்தால் உயிரோட்டம் பெருகிறது என்றால், மனிதர்களான நாம் அதை உண்டால் எவ்வளவு உயிரோட்டம் அடைவோம் என சிந்திக்க வேண்டும். வேதகால வேளாண்மை என்பது விவசாய விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்ட ஒன்று என கூற விரும்புகிறோம்.

மேலும் ப்ரணவபீடம் இயற்கை முறையிலோ அல்லது வேத கால வேளாண்மை முறையிலோ விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கிறது. உலகை வேதகால வேளாண்மையால் பசுமையாக்குவோம், கடவுளின் இருப்பை உணர்த்துவோம்.