அதுஒன்றும் பெரிய விஷேஷமான தினமல்ல. மிகவும் சாதரண தினத்தின் காலை நேரம். தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி பெரு நாட்டின் லீமா நகரம். கடற்கரை அருகே தன் மீன் வலையை சரி செய்து கொண்டிருந்தான் அவன். முழுமையாக சுற்றிய மீன்வலையை அவன் நண்பர்களுடன் இணைந்து பாய்மர படகில் ஏற்றி கடலை நோக்கி பயணித்தான்.
கடலின் அலைகள் அற்ற பகுதிக்கு சமீபமாக சென்று வலையை வீசிவிட்டு இளைப்பாறினார்கள். காலை முதல் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தலைசுற்றல் இருப்பது போல உணர்ந்தான். படகின் நுனிப்பகுதிக்கு சென்று வலைக்கயிற்றை சரி செய்ய எத்தனிக்கும் பொழுது உடல் வலு இல்லாமல் கடலில் தவறி விழுந்தான்.
பேரலையும் காற்றும் கொண்ட கடலிலும் தனி ஒருவனாக படகை செலுத்தும் அவனுக்கு இன்று உடல் வலு இல்லாமல் தவறிவிழும் நிலை. கைகால்களை அசைக்கமுடியாமல் ஒரு இலையைப் போல மெல்ல மெல்ல அசைந்து கடல் நீரில் மூழ்கத் துவங்கினான்.
தான் மூழ்கி இறக்கப்போகிறோம் என தெரிந்தும் அவன் உடல் எதிர்ப்பு காட்டவில்லை. செயலற்று மேலும் சில அடிகள் கீழே சென்றவனின் உள்ளே சில காட்சிகள் விரிந்தது....
மனிதர்கள் கூட்டமாக சாலைகளில் ஒரு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்... எங்கும் கூடாரங்களாக பெரும் மைதானம் ஒன்று இருக்கிறது. உலோகங்களை ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டே பாடும் ஒலி...
பெரிய ஜடாமுடியுடனும், கையில் வாள் மற்றும் திரிசூலத்துடனும் கூட்டமாக சிலர் சென்றுகொண்டிருக்க அவர்களின் இடையே நின்று பார்ப்பதை போல காட்சிகள் தெளிவாக பார்த்துக்கொண்டிருந்தான்....
ஜாடாமுடி ஆட்களின் கூட்டதிலிருந்து அவர்களை விலக்கியபடியே ஒருவர் வெளிப்பட்டார். அவருக்கு தலைமுடி இல்லை. பெரிய கருப்பு உடை அணிந்திருந்தார். கையில் திரிசூலம் கழுத்தில் நாகப்பாம்பு படம் எடுத்தவண்ணம் இருக்க இவனை பார்த்து ஏதோ கூறினார். ஒன்றும் புரியாத மொழி...
காதுகளை கூர்மையாக்கி என்ன? என்பதைபோல கேட்டான்....இன்னும் அங்கே என்ன செய்கிறாய், வா இங்கே என ஸ்பானீஷ் மொழியில் கேட்டார் அந்த கருப்பு உடைக்காரர்.
திடுக்கென உடலுணர்வு பெற்றவனாக கை கால்களை அசைக்கத்துவங்கி... கடலில் மேல் பகுதிக்கு வந்து பெரிய மூச்சு ஒன்றை எடுத்து தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டான்.
தூரத்தில் அவனின் படகும் நண்பர்களும் இருப்பது தெரிந்தது, அதை நோக்கி நீந்தி படகை அடைந்தான். அனைவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.
அன்றிலிருந்து அவனின் போக்கே மாறிவிட்டது. கடற்கரையில் கடலை பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருப்பது. சில நேரம் அழுவதுமாக இருந்தான். ஏதோ கடலில் உள்ள துர்தேவதை இவனை ஆட்கொண்டதாக பேசிக்கொண்டனர்.
கடலில்ன் ஆழத்தில் கண்ட காட்சி கண்களை மூடினால் அகக்காட்சியாக எப்பொழுது தெரிந்த வண்ணம் இருந்தது. தூங்குவதற்கு கண்ணை மூடினாலும் அதே காட்சி. குடும்பம் மனைவி என மனம் லயமாகவில்லை. இயல்பு வாழ்க்கையில் எதையும் அவனால் செய்ய முடியாத அளவுக்கு தடுமாறிப்போனான்.
இப்படி சில தினங்களும் மாதங்களும் கழிந்தன..
ஒரு நாள் துறைமுகத்தில் வரி செலுத்துவதற்காக போகும் பொழுது அங்கே ஒரு வேற்று நாட்டு கப்பல் நிற்பதையும் அதில் இருக்கும் ஒரு சிலர் அகக்காட்சியில் கண்டவர்களை போல இருக்க அவர்களை நோக்கி ஓடினான்.
அவர்கள் அகக்காட்சியில் கண்டவர்கள் இல்லை...ஆனால் அவர்களின் உருவம் ஓரளவு அப்படி இருந்தது. ஸ்பேனீஷ் மொழியில் அவர்களை பற்றி விசாரித்தான். அவர்களுக்கு இவனின் மொழி புரியவில்லை. சைகையால் பேசி பேசி அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கேட்டான். அவர்கள் வரைபடத்தை காட்டி திசையை சுட்டிக்காட்டி விளக்கினார்கள். தான் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் ஒரு நாட்டிலிருந்து வருகிறார்கள் என புரிந்துகொண்டான்.
அன்றே அவர்கள் புறப்படுகிறார்கள் என தெரிந்து தன்னையும் அழைத்துசெல்ல முடியுமா என கேட்டான். கப்பல் தலைவனை கேட்டுவிட்டு சொல்லுவதாக அவர்கள் சென்றார்கள்.
தன்னை பற்றி நினைக்க அவனுக்கே பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. இவர்களுடன் நான் ஏன் போக வேண்டும்? என் குடும்பத்தையும் என் மனைவியையும் யார் கவனிப்பார்கள் என பல குழப்பமான சிந்தனைகள். ஆனால் அவனின் அகக்காட்சி மிகவும் துன்புறுத்தவே அதை பற்றிய விடையறிவதை மிகவும் முக்கியமாக நினைத்து துறைமுகத்தில் காத்திருந்தான்.
அவர்கள் வந்து கப்பல் தலைவர் சம்மதித்ததாக சொல்ல மிகவும் மகிழ்ந்து சில தேவையான பொருட்களை துறைமுகத்தில் வாங்கிக்கொண்டு லீமா நகரில் யாரிடமும் சொல்லாமல் கப்பலுக்குள் சென்றான். அங்கே இவனையும் சேர்த்து பலர் அமர்திருந்தனர். இருதயம் படபடக்க அவனின் அகக்காட்சியின் தேடுதலுக்காக பயணத்தை துவங்கினான். அகக்காட்சியில் கண்ட விஷயங்களை அந்த ஊரில் இருக்கும் யாருக்காவது விளக்கினால் விடை கிடைக்கும் என நினைத்தான். ஸ்பெனீஷ் தெரிந்த கருப்பு உடைக்காரரை கண்டுபிடித்தால் அனைத்தும் தெளிவாகிவிடும் என்பது அவனின் நோக்கமாக இருந்தது.
எல்லாமே நாம் நினைத்தது போல நடப்பதில்லையே...! இந்தோனேசிய முனையை கடக்கும் பொழுது கப்பல் முழுவதும் சூராவளிக் காற்றில் சிக்கி அனைவரும் இறக்கப் போகிறார்கள் என்பது அப்பொழுது அவனுக்கு தெரியாது.
(மேளா தொடரும்)