Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சுப்பாண்டி. Show all posts
Showing posts with label சுப்பாண்டி. Show all posts

Thursday, September 24, 2015

முரண்பட்ட குரு

காலையில் பகவத் கீதை வகுப்பு முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்த குருவிடம் வந்தான் சுப்பாண்டி.

குருஜி ஒரு சந்தேகம் என்றான்...

சொல்லுப்பா என்பது போல பார்த்தார் குருஜி.

“....சில தினத்திற்கு முன் பகவத் கீதை வகுப்பில் அவர் அவர் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒரு பிறப்பிலே பல பிறப்பிலோ இறைவனை அடைகிறார்கள், உதாரணமாக ஒரு ஊரை அடைய சிலர் நடந்து செல்லுகிறார்கள் சிலர் வாகனத்திற் செல்லுகிறார்கள் என சொன்னீர்கள். ஆனால் இன்று பதினாறாம் அத்தியாயத்தில் இதே பிறப்பில் இறைவனை அடைய முடியும் என சொல்லுகிறீர்களே ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் தான் சில நேரம் முரண்பாட்டுடன் பேசுவீர்கள் என நினைத்தேன். பகவான் கிருஷ்ணரும் இப்படி முரண்படுகிறாரே?” என கேட்டான் சுப்பாண்டி.



சுப்பு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு வழிப்போக்கர் தெருவில் இருப்பவரிடம் கேட்டார், ஐயா இந்த பக்கத்து ஊருக்கு செல்ல எத்தனை நேரம் ஆகும்? தெருவாசி ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார். மீண்டும் எத்தனை நேரம் ஆகும்? என கேட்டார். தெருவாசி ஒன்னும் சொல்லவில்லை. வெறுப்படைந்த வழிப்போக்கர் நடக்க துவங்கினார். உடனே அவரை துரத்திக்கொண்டு வந்த தெருவாசி..இன்னும் 30 நிமிடத்தில் சென்று விடலாம் என சொன்னார். வழிப்போக்கர் அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே என கேட்க, தெருவாசியோ நீங்கள் எத்தனை வேகமாக நடப்பீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் நடந்து சென்ற வேகத்தை வைத்து சொன்னேன் என்றார்.

மெல்லிய புன்னகையுடன் குருஜி விளக்க துவங்கினார், “சுப்பு,  ஒருவர் தெருவில் காருடன் நிற்கிறார். அவரிடம் ஐயா இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்கள் என கேட்டு அதன் படி உனது வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லுகிறாய் என்றால் அது உன் பொறுப்பு.

இதே ஐயா என்னை உங்கள் காரில் கொண்டு சென்று விடுங்கள் என கேட்டால் அது உன் பொறுப்பல்ல கார் வைத்திருப்பவர் பொறுப்பு. அது போல இறைவனை அடைய நானே முயற்சிக்கிறேன் என்றால் ஒரு பிறப்போ பல பிறப்போ ஆகும். அது உன் முயற்சியும் அதனால் ஏற்படும் அனுபவத்தை பொருத்தது. இதுவே இறைவா நான் உன்னை சரணடைகிறேன் என்னை முக்தி அடைய வை என கேட்டால் அது இறைவன் பொறுப்பு உடனே அவர் இப்பிறவியிலேயே அதை செய்துவிடுவார்..! ”

 குருவும் இறைவனும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள். அதை அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா இல்லை உன் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா என நீ பார்க்காத வரை குரு முரண்பாடாக பேசுவதை போலவே இருக்கும்.

சுப்பாண்டிக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது...

Friday, April 17, 2015

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க....

அன்று சுப்பாண்டியுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தது.  சொன்ன நேரத்தை விட வழக்கம் போல அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.

"என்ன சுப்பு லேட்? நம்மளை சந்திக்க காத்திருக்கறவங்க என்ன நினைப்பாங்க? " என கேட்க..எதையும் காதில் வாங்கதது போல...வண்டியை கிளப்பினான்.

சில நிமிட பயணத்தில் ஏதே யோசனையுடன் வண்டி ஓட்டியவன் என்னை சீரியஸாக பார்த்து திரும்பி..."சாமி.. இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு சாமி ?"

"இப்ப லேட்ட போனா அங்க பேசுவாங்க பாரு அவங்க தான் அது" என சொல்லி நிறுத்திக் கொண்டேன்.


இருந்தாலும் மனசு கேட்கவில்லை, அவன் ஏதோ தெரிந்த கொள்ள கேட்டிருப்பானோ என நினைத்து விவரிக்க தொடங்கினேன்...


"சுப்பு... அந்த நாலு பேரு யாருனு பலர் பல வித விளக்கம் கொடுத்திருக்காங்க....சிலர் மாதா, பிதா, குரு,தெய்வம் இவங்க தான் அந்த நாலு பேருனு சொல்றது உண்டு.

தாய், தந்தையை  இப்ப யாரு மதிக்கறா? முதியோர் இல்லம் பெருகிட்டு வரும் இந்த காலத்தில அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கேட்க யார் இருக்கா? தாய் தந்தைக்கே இந்த நிலைனா...குருவையும் தெய்வத்தையும் பத்தி சொல்ல வேண்டியது இல்லை. தாய் தந்தைக்கு முதியோர் இல்லம் போல, குருவுக்கு ஆஸ்ரமம், தெய்வத்திற்கு கோவில்னு இவன் ஒதுக்கிவச்சு வாழும் மனிதன் இவங்க நாலு பேர் பேசும் பேச்சை முக்கியமானதாக எடுத்துக்குவாங்கலானு தெரியலை. இதைவிட இவங்க நாலு பேரும் நாலு விதமா பேச மாட்டாங்க. நம்ம முன்னேற்றத்தை பத்தி மட்டும் பேசுவாங்க. அதனால அந்த நாலு பேரு இவங்களா இருக்க சாத்தியம் இல்லை.

அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ க்ரிஷ்ணர் கீதையில் சொல்றார். அதை வேணா உனக்கு சொல்றேன்.



பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர்.

இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க

அர்த்தார்தி சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க.  இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும்.

ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு...ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை.....இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் அவங்களோடது.

கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு ..கடவுளுக்கே வரம்  கொடுப்பாங்கலாம்.

எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் ஸ்ரீக்ருஷ்ணர். அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனு சொல்றார்.

இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட.... அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம். ..."


சாதாரணமா  சுப்பாண்டி  கேட்ட கேள்விக்கு பகவத் கீதையிலிருந்து தகவல் எடுத்து சொன்ன திருப்தியில் அவனை பார்த்தேன்.

"நீங்க இந்த நாலுல எது சாமி? "என்றான் சுப்பாண்டி.

வேற யாரு.......ஆர்த்தன் தான் - சாமி இந்த சுப்பாண்டி இப்படி இருக்கானே இவனை சரியாக்கி என்னை காப்பத்துனு உன்னால பிரச்சனை வரும் போது எல்லாம் கடவுளை வேண்டிக்கறனே...அதனால ஆர்த்தன், என சொல்லிவிட்டு அவனை பார்த்தேன்.

கொஞ்சம் லேட்டான பதட்டத்தில இருப்பீங்களேனு ஒரு கேள்வியை கேட்டா, என்ன என்னமோ மொக்க போடறீங்க்களே சாமி..என சொல்லி வண்டியை 'ஓட்டுவதையும்' தொடர்ந்தான் சுப்பாண்டி.

Thursday, February 5, 2015

உத்தவ சுப்பாண்டி


பாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.

ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில   நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், " உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்". 

உத்தவர் புன்னகையுடன், "ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது  முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட..! உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு  நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும்? எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...!" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, "அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்?" எனக் கேட்டார்.

உத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....

"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்" என நீண்ட விளக்கம் அளித்தான்.

இதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..

இப்படித்தான் எனக்கும்......! 

நான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில்  சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

நீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...

இனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........

-தட் உத்தவ கீதை மொமேண்ட்..!

Wednesday, May 29, 2013

சுப்பாண்டி சின்ரோம்

அன்று வழக்கம் போல ஒரு தினமாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதில் ஒரு மாற்றம் வந்தது. காலையில் பணிகளை முடித்துவிட்டு வெளியே செல்ல கிளம்பும் நேரத்தில் பெரிய வாகனம் இரண்டு வாசலில் வந்து நின்றது. அஜானுபாகுவாக பல வெள்ளைக்காரர்களும் சில நம்மூர் ஆட்களும் இறங்கி வந்தனர்.

கருப்பு கோட்டு, கருப்பு கண்ணாடி அணிந்த இருவர் காதில் ஒரு கருவியையும், கோட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள மைக்கிலும் என் அடையாளங்களை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருக்கும் தெருவின் முனைகளை சிவப்பு-வெள்ளை பட்டைகளை கொண்டு அடைத்து போக்குவரத்தை மூடிவிட்டனர். சில நிமிடத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஒரு சில வெள்ளைக்காரர்கள்,  “என்னை நெருங்கி நாங்கள் உங்களுடன் பேச வேண்டும். சில மணிநேரம் ஒதுக்க முடியுமா?” எனக் கேட்டனர். என்னையும் மதித்து சிலர் கேட்கும் பொழுது தவிர்க்கவா முடியும்? சரி என்றேன்.

அவர்கள் சொன்ன விஷயங்களை டப்பிங் செய்து உங்களுக்காக தமிழில் இங்கே தருகிறேன்.நாங்கள் அமெரிக்காவின் மனோவியல் ஆய்வாளர்கள். கடந்த 2009ஆம் ஆண்டு நாங்கள் அனுப்பிய சாட்டிலைட்டில் எங்கள் ஆய்வுக்கான நபர் நீங்கள் என அது GPSல் சுட்டிக்காட்டுகிறது. எங்களின் ஆய்வுக்கு ஒத்துழையுங்கள், இது உலக மனோவியல் ஆராய்ச்சியில் மிகவும் புதிய தெளிவை உண்டு செய்யும். 

நம்மால் உலகுக்கு நன்மை நடக்கிறது என்றால் இல்லை என்று சொல்வோமா? உடனே சரி என்றேன். இதில் ஒரு அற்ப சந்தோஷமும் இருந்தது. போலியாக ஆன்மீகவாதிகள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், தங்களை இப்படி ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தி கருவிகளை கொண்டு ஞானம் அடைந்ததாக சொல்லி கல்லாக்கட்டுவார்கள். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என நினைத்து ஆய்வுக்கு சம்மதித்தேன்.

கையில் இருக்கும், பெட்டியை திறந்து அதில் உள்ள வயர்களை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டனர். என் தலை, மார்பு, கைகள் கழுத்து என பல இடங்களில் சிறிய க்ரீம் தடவி அதில் வயர்களை ஒட்டவைத்தனர்.

சில நிமிடங்கள் கரைந்தது. கருவிகளில் வரைபடங்கள் மேலும் கீழும் துள்ளிக்கொண்டே இருந்தது. வயதான டாக்டர் ஒருவர் என்னிடம் நெருங்கி வந்து தன் கண்ணாடியை கழற்றினார். சினிமாவில் வருவதை போல இனி 24 மணிநேரம் கழித்துதான் சொல்ல முடியும் என வசனம் பேசிவிடுவாரோ என யோசனையுடன் அவரை பார்த்தேன்.

நாங்க தேடி வந்த ஆள் நீங்க இல்லை. உங்களுக்கு எல்லாம் நார்மலா இருக்கு...என்றார். அப்பாடா இலவசமா செக் செஞ்சு நாம நார்மல்லு தெரிஞ்சுக்கிட்டமே என நிம்மதி அடைந்தேன்.

டாக்டர் என்னிடம் தொடர்ந்து பேச துவங்கினார். “நாங்க தேடி வந்தது ஒரு ஸ்பெஷல் பர்சன். அவர் ஐன்ஸ்டின், எடிசனுக்கு பிறகு அவங்களை விட ஐக்,.யூவில பெரிய நிலையில் இருப்பவர். எடிசன் ஐன்ஸ்டின் எல்லாம் எழுதும் பொழுது ஒரு வார்த்தையையோ அல்லது வரியையோ முண்ரன்பாடா எழுதுவாங்க. உதாரணமா , I am here - அப்படீங்கிறதை ereh ma I. அவங்க இப்படி திருப்பி எழுதறது கண்ணாடியில் காட்டி கூட படிக்க முடியாது. ஆனா நாங்க தேடி வந்த ஆள் யோசிக்கும் போதும், பேசும் போதும் இப்படி செய்வாருனு எங்க சாட்டிலைட் சொல்லுது. ஒரு வார்த்தையை நீங்க சொல்லும் போது அதற்கு சமமா ஒலிக்கும் வேறு ஒரு வார்த்தை அவரோட மனசுல வரும் அதையே அவர் ஞாபகம் வச்சுக்குவார்.  இவங்களோட ஐக்,யூல இருக்கிற குழந்தைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். இயல்பு குழந்தை போல இல்லையேனு  வருத்தப்படாமல் வளர்த்தா அவங்க பெரிய விஞ்ஞானியா வருவாங்க.”  

இவ்வாறு டாக்டர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே “அப்ப அந்த குழந்தைகளுக்கு ஹோம்ப்ளான் சாப்பிட கொடுக்கலாமா?” என கையில் ஒரு வீட்டின் வரைபடத்துடன் நின்று கொண்டிருந்தான் சுப்பாண்டி...!

இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. டாக்டர்கள் தேடிவந்தது என்னை இல்லை..! சுப்..சுப்..சுப்பாண்டியை..!

ஒரு நாள் நான் ஆங்கிலத்தில் ஆன்மீக கட்டுரை ஒன்றை டிக்டேட் செய்துகொண்டிருந்தேன். GOD என வரும் இடத்தில் எல்லாம் DOG என எழுதி இருந்தான். ஏன் இப்படி என கேட்க, பைரவரும் சாமி தானே என என்னை லாஜிக்கால் மடக்கினான். பல வேலைகளை எக்குத்தப்பாக செய்யும் பொழுது சரி அவன் முட்டாளாக இருப்பான் என நினைத்தால், அவனை ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு ஆய்வு செய்ய இவர்கள் வேறு கிளம்பி வந்து இருக்கிறார்கள். இவனை போய் ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து வந்திருக்காங்களே என பொறாமையும் ஒரு புறம் அதிகரித்தது.

“சாமி உடம்பு செரியில்லையா? ட்ராக்டர்கள் எல்லாம் வந்திருக்காங்களே?” என கேட்டுவிட்டு கையில் இருந்த பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து, “சாமி இதை சாப்பிடுங்க சரி ஆயிடும்” என்றான். என்ன என்பதை போல பார்த்தேன்.

“இது போப்பாண்டவர் கோவில் பஞ்சாமிர்தம்” என கொடுத்தான். டப்பாவில் பழனியாண்டவர் பஞ்சாமிர்தம் என எழுதி இருந்தது...!

ஓ இவன் டாக்டர்கள் சொல்லுவதை மறைந்திருந்து கேட்டுவிட்டு வேண்டுமென்றே இவர்களிடம் பெயர் வாங்கப்பார்க்கிறான் என யோசித்தேன். இருந்தாலும் இவன் ஐக்யூ மேல் ஒரு நம்பிக்கை வந்தது.

க்க்கும்...தொண்டையை கணைத்து, டாக்டர்கள் வந்த விஷயத்தை சொன்னேன்..சுப்பாண்டி உடனே சுறு சுறுப்பாகிவிட்டான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி போல தலையை ஒரு பக்கம் சாய்த்து புருவம் உயர்த்தி, இடுப்பில் கை வைத்து அமெரிக்கர்களை பார்த்து கேட்டான்...

“யாரை செய்கிறார் டெக்ஸ்டு, எதற்காக செய்ய வேண்டும் டெக்ஸ்டு. செயலுக்கு வந்தாயா வாத்து நட்டாயா...” என சுப்பாண்டி பேச பேச அவனுக்குள் இருந்த சந்திரமுகி வெளியே வந்தாள். இவன் தான் அந்த ஆராய்ச்சி பீஸு என எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

இவனின் இந்த மன பிரள்வை சுப்பாண்டி சின்ரோம் என பெயரிட்டிருக்கிறார்கள். சுப்பாண்டியை அமெரிக்காவிக்கு ஆய்வுக்காக கூட்டி செல்லப்போகிறார்கள். உங்களுக்கும் இப்படி ஏதேனும் இருந்தால் கூறவும். நீங்களும் இலவசமாக அமெரிக்கா செல்லலாம்.

அமெரிக்கா செல்லும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, “சாமி என்னை அமெரிக்க கூட்டிக்கிட்டு போறது ராணி முகர்ஜிக்கு தெரியுமா?” என கேட்டான். நான் குழப்பத்துடன் அந்த நடிகைக்கு எதுக்குடா நீ போறது தெரியனும்னு கேட்டேன்.

நடியையா? அவங்க தானே நம்ம நாட்டு ஜனாதிபதி என்றான் சுப்பாண்டி..!


-----------------------------------

வேதகால மனோவியலை (Vedic psychology) ஒரு தொடராக எழுதலாம் என இருக்கிறேன். கடினமான இந்த சரக்கை நகைச்சுவையால் எளிமையாக்கலாம் என எண்ணம். அதன் முன்னோட்டமே இந்த கட்டுரை.

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

Tuesday, January 11, 2011

சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்வாமி ஓம்கார்..!

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 12ஆம் தேதி புதன் கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி க்குள் வரலாம் என இருக்கிறேன். சென்னையை சேர்ந்த நண்பர்கள் சந்திக்க நினைத்தால் புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம்.

புத்தக கண்காட்சி பற்றி சுப்பாண்டியுடன் நடந்த பேட்டி..

எந்த ஸ்டாலில் இருப்பீர்கள்? ஸ்டால் எண் என்ன?

அங்கே போண்டா ஸ்டால் இருப்பதாக கேள்வி. அதில் அனேகமாக இருப்பேன்.
சொந்தமாக ஸ்டால் இல்லாதவருக்கு கேண்டீனே சொந்த ஸ்டால்

உங்கள் புத்தகம் இங்கே கிடைக்குமா?

புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடக்கும்பொழுதே நீங்கள் ஒரு உண்மையை அறிய வேண்டும். என் ஒரு புத்தகமும் அங்கே கிடைக்காது..!

அப்படியானால் புத்தகத்தில் கையெழுத்து இட்டு தரமாட்டீர்களா?

தாராளமாக, நீங்கள் எந்த புத்தகம் வாங்கி வந்து என்னிடம் கொடுத்தாலும் கையெழுத்து போட்டு தருகிறேன். உங்களின் கோரிக்கையை என்றும் மறுக்கமாட்டேன்

மிக்க மகிழ்ச்சி. சிலர் புத்தக கண்காட்சியில் கையெழுத்து போட ஆயிரம் ரூபாய் பேனா வைத்திருக்கிறார்கள். நீங்களும் வைத்திருக்கிறீர்களா?

நான் பேனாவின் மதிப்பை விட என் கையெழுத்து மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புபவன். அதனால் பேனா 2 ரூபாயாக இருந்தாலும் என் கையெழுத்து மதிப்பு மிக்கது.

டிஸ்கி : இந்த பேட்டியில் கேள்வி கேட்டவன் நான். பதில் சொன்னவர் சுப்பாண்டி என்பது தனியாக சொல்ல வேண்டியது இல்லை :))

Wednesday, August 11, 2010

வேதாந்த வகுப்பில் சுப்பாண்டி

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒருவர் வந்து வேதாந்த கருத்துக்களை கொண்டு தர்க்கம் செய்தார். நான் இயல்பாகவே தர்க்கங்களில் ஆர்வம் செலுத்தாததால் மெளனமாக இருந்தேன். இதை கண்ட சுப்பாண்டி மிகவும் மன வருத்தம் கொண்டான். நான் வேதாந்தம் தெரியாமல் தோற்றுவிட்டதாகவும், என்னை பின்பற்றும் அவனுக்கு அது மிகப்பெரிய அவமானமாகவும் கருதி வருந்தினான். இந்த வரலாற்று அவமானத்தை சரி செய்ய தானே வேதாந்தம் கற்பது என முடிவுக்கு வந்துவிட்டான்.

பிறகு ஒரு நாள் வந்து “குருஜீ நான் வேதாந்தம் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்றான். போகிறேன் என எங்கோ இருக்கும் இடத்தை குறிப்பிடுகிறான் என்பதால், “நான் வேண்டுமானால் கற்றுக்கொடுக்கவா?” என கேட்டேன். என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தவாறே, “உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏன் கத்துக்கப்போறேன்” என்றான். இதற்கு நான் ஒன்றும் கூறவில்லை. சரி சென்று வா என வாழ்த்தி அனுப்பினேன்.

ஓவர் டூ வேதாந்த வகுப்பு .......

வேதாந்த ஆசிரியர் ராஜூ சாஸ்திரியின் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி இன்று நாம் ஆன்மா என்பதை பற்றி பேசுவோம். ஆன்மா என்பதே உன் சொரூபம், நீ உடல் அல்ல, நீ மனம் அல்ல. ஆன்மாவே உண்மை”

“ஆன்மா-னா என்ன? அது எப்படிப்பட்டது?”

“எது தீயால் சுட முடியாதோ, எது நீரால் மூழ்கடிக்க முடியாதோ, எது காற்றை விட லேசானதோ, எது ஆகாயத்தை போல தூய்மையானதோ அதுவே ஆன்மா”

“அப்படிப்பாத்தா சூப்பர் ஸ்டார் தான் ஆன்மாவா? அவரைத்தான் வில்லன்களால எதுவுமே செய்ய முடியாது”

“ஸ்ப்ப்பா... அது இல்லை சுப்பாண்டி. சினிமா என்பது மாயை, பொய் பிம்பம். ஆன்மா என்பது உண்மையான வஸ்து”

”ஆன்மானே ஒரு சினிமா வந்துச்சே...அப்போ அது பொய்யா? கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க”

”சுப்பு.... கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ....
கண் எதனால் பார்க்கப்படுகிறதோ, கண் எதை பார்க்காதோ அது ஆன்மா.
காது எதனால் கேட்கிறதோ, காது எதை கேட்காதோ அது ஆன்மா.
வாய் எதனால் வேலை செய்கிறதோ வாயால் எதை உணர முடியாதோ அது ஆன்மா.”

“நம்ம கண்ணு காதுல உணர முடியாத குப்ப சமாச்சாரத்தை பத்தி நாம ஏன் பேசனும்? வேற எதாவது உருப்படியா சொல்லித்தாங்க சாஸ்திரி”

“என்னது குப்ப சமாச்சாரமா? ஆன்மா என்பதை புரிந்து கொண்டால் தான் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியும். உதாராணமா உன் உடல் நீ இல்லைனு சொன்னேன் இல்லையா? நீ போட்டிருக்கும் உடை மாதிரி இந்த உடலை ஆன்மா போட்டுருக்கு. இந்த உடலை நீ என சொல்லிக்க கூடாது. இந்த பேண்ட் டீ சர்ட் உன் உடலோட உறுப்பு இல்லை இல்லையா? அது போல உன் உடல் நீ அல்ல, பேண்ட் சர்ட் அழுக்காச்சுன்னா மாத்திக்கிற மாதிரி இந்த ஆன்மா உடல் வேலை செய்யலைனா மாத்திக்கும்.”

“ஓஹோ, அப்ப வேற வேற உடல் நமக்கு கிடைக்கும்? உடல் நிரந்திரம் இல்லை அப்படித்தானே”

“சபாஷ், இப்பத்தான் நீ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்க..”

“நீங்க எப்பவும் வெள்ளை வேஷ்டி மேல் துண்டு போட்டுருக்கீங்க. என் குருஜீ எப்பவும் காவி கலர் போட்டிருக்காரு, அப்ப உங்க உடை மாறாதே? அப்ப உங்க உடல் தான் நீங்களா?”

“அ...அத்..து..அ...அப்படி இல்லை..தம்பி...உடை நிறம் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரே வேஷ்டியவா நான் கட்டிப்பேன்? அதுபோலத்தான் உடை நிரந்திரமல்ல. ஆன்மாவே நிஜம்”

“அப்ப உடை இல்லாம இருக்கிறவங்கதான் நிஜமா இருக்கறவங்களா? நீங்க சொல்லித்தர்ரது ஒரே அசிங்கமா இருக்கே”

"அது இல்லடா... ஆன்மா அஹங்காரம்னு உடை போட்டிருக்கு. அதனால மாயை அதில் சேர்ந்திருக்கும். அஹங்காரமும் மாயையும் இணைஞ்சுருக்கரதால ஆன்மாவை பார்க்க முடியாது. அஹங்காரமும் மாயையும் அழிஞ்சாத்தான் ஆன்மாவை முழுமையா உணர முடியும். “

“நம்ம வீட்டில கொசு கரப்பான் அழிச்சா வீடு சுத்தமாகிற மாதிரி சரியா?”

“சரியாச்சொன்னடா”

”அப்ப அஹங்காரம் மாயை அழிக்கும் பூச்சி மருந்து எங்க கிடைக்கும்?”

“டேய் அறிவு கெட்டவனே.. விளங்காமாறி...உன்னையெல்லாம் எவண்டா இங்க அனுப்பினது..

நீ வேதாந்தம் படிக்கலைனு யாரு அழுதா? வேனும்னே என்னை கலாய்க்கிறியா? போடாங் ?!?!!@!@!@*@!@*&*””

“சாஸ்திரி....முதல்ல சுப்பாண்டின்னீங்க, அப்பறம் சுப்பு, அப்பறம் தம்பி.. கடைசியா டேய்..இப்ப கெட்டவார்த்தையில திட்டீட்டீங்க... அப்படி என்ன நான் தப்பா கேள்வி கேட்டேன்? புரியலைனு தானே கேட்டேன்.. சரி சரி கோபப்படாதீங்க. ஏதோ ஆன்மா ஆன்மானு சொன்னீங்களே அப்படினா என்னானு சொல்லுங்க”

“என்னது திருப்பியும் முதல்ல இருந்தா........”

Tuesday, May 4, 2010

மரம் வெட்டி மாநாடு கொண்டாடுவோம்..!


சுப்பாண்டியும் நானும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்காக பயணம், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் சுப்பாண்டி வாகனம் செலுத்த துவங்கினான்.எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்று இருப்போம் மிகப்பெரிய வாகன நெரிசல். நீண்ட தூரத்திற்கு வாகனம் நெருக்கடியில் நின்று இருந்தது. கோவையில் சில சாலைகள் தவிர பிற இடங்களில் வாகன நெரிசல் காண முடியாது.

நாங்கள் சென்று கொண்டிருந்தது கோவை நகரிலிருந்து வெளிப்புறம் இருக்கும் சாலை. இடையர்பாளையம் மற்றும் வடவள்ளி என்ற இரு ஊர்கள் சந்திக்கும் நான்கு முனை சாலைகள். இந்த சாலையில் என்றுமே இவ்வாறு நெரிசல் இருந்தது இல்லை. இது போன்ற வாகன நெரிசல் எதற்கு என தெரியவில்லை.

பொருமை இழந்த சுப்பாண்டி விஷயம் என்ன என விசாரிக்க சென்றான். அங்கே இருந்த ஒரு முதியவரிடம் என்ன விஷயம் என நான் கேட்டேன்.

முதியவர் கலங்கிய குரலுடன், “சாமீ...இடையர்பாளையம் வடவள்ளி சந்திப்பில் இருக்கிற நூறு வருஷ அரசமரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. செம்மொழி மாநாட்டுக்கு ரோடு அகலப்படுத்தி கோபுர லைட் போடராங்களாம். வீணா போனவங்க.” என்றார்.

எனக்கு ஏதோ நெருக்கமானவர்கள் இறந்தால் ஏற்படும் துக்கத்தை போல தொண்டையை அடைத்தது. அதுக்குள் சுப்பாண்டி வந்து சேர்ந்தான்.

“சாமீ செம்மொழி மாநாட்டுக்கு ரோடு போடறாங்களாம். அது தான் டிராபிக் ஜாம்” என்றான்.

சரியாக விசாரிக்காமல் வந்த சுப்பாண்டி மேல் கோபம் வந்தது. இருக்கும் துக்கத்தில் இவன் தொல்லை வேறு என்று.. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சாலையின் சந்திப்புக்கு சென்றோம்.அங்கே நூறுவருட மரம் படுகொலைச் செய்யப்பட்டிருந்தது.

கோபமும் துக்கமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னக்கு தடுமாற்றத்தை உண்டு செய்தது.

சினிமாவில் காட்டும் பஞ்சாயத்து காட்சியில் வருவது போல திண்ணை கட்டப்பட்ட அரசமரம். பலர் ஓய்வாக அமரவும், நான்கு வழிச்சாலையின் ஒதுக்கு புறமாகவும் இருந்த இம்மரம் இப்பொழுதுஇல்லை.

நூறு வருட அரசமரத்தை வெட்டி, ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்று இருக்கிறார்கள். மரம் இருப்பதால் வேகத்தடை போல செயல்பட்டது பலர் மெதுவாக வந்து சென்ற சாலை எதிர்காலத்தில் விபத்துபகுதியாக மாறும்.

மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு உயரத்தை குறைத்து பிறகு இவர்களின் மேம்பாட்டு பணியை செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வேருடன் சாய்த்திருக்கிறார்கள். நூறுவருட மரத்தை ஒரு மணி நேரத்தில் வெட்டி விடலாம். ஆனால் நூறு வருடம் முயற்சித்தாலும் அதே மரத்தை வளர்க்க முடியுமா?

சுப்பாண்டியிடம் இப்படி புலம்புக்கொண்டே வந்தேன். வேறு வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். நிகழ்சி முடித்து வரும் வழியில் மீண்டும் அதே இடத்தை கடக்க வேண்டி இருந்தது.

வெட்ட பட்ட மரம் மற்றும் அந்த சாலை அனைத்தும் வெறுமையாக காட்சி அளித்தது.

“மரம் தாவரம்னு எப்பவுமே பேசறீங்களே சாமி, மரம் அப்படி என்ன கொடுக்குது?” என்றான் சுப்பாண்டி.

“சுப்பு. விருக்‌ஷ ஆயுர்வேதம் என்ற சாஸ்திர நூல் மரம் 150 பலன்கள் மனிதனுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்லுது. நம்ம சும்மா விரல் விட்டு எண்ணினாலே பல பலன்கள் வரிசைப்படுத்தலாம். காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகளுக்கு வீடு, அதன் மூலம் இயற்கை சுழற்சி, மரச்சாமான்கள், சுத்தமான காற்று, மருத்துவ குணம் கொண்ட சூழல், மன அமைதி, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு செய்தல், பல நுண்ணுயிர்கள் பெருக்குதல், சூழலில் வெப்பத்தை குறைத்தல், ப்ராணனை மேம்படுத்துதல். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். தாவரம் தாய் மாதிரி சுப்பு என்றேன்” என்றேன்.

எங்கள் அறக்கட்டளையின் வாசலை வந்து அடைந்ததும் நான் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே செல்ல நடக்கையில் பின்னாலிருந்து சுப்பாண்டியின் குரல்...

“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”

என்ன என்பதை போல பார்த்தேன்.

“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.


Tuesday, April 6, 2010

வெய்யிலை சமாளிக்க சுப்பாண்டியின் டிப்ஸ்...!


கோடை வெயில் மிகவும் கொடுமையாக இருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிக வெயில். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது சுப்பாண்டி தான் சொல்லுவதாக கூறினான்.

ஏதோ சஹாரா பாலைவனத்தில் பட்டாணி வித்தவன் போல பல பாயிண்டுகளை கூறினான். எனக்கே அவனின் அறிவு முதிர்ச்சிகண்டு மிகவும் புல்லரித்தது. அதன் காரணம் கடைசியில்...!

சுப்பு சொன்ன பாயிண்டுக்கள் இதோ :

  • கோடை முடியும் வரை தளர்வான ஆடைகளே உபயோகியுங்கள். ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ சர்ட்டுக்கள் தவிர்க்கவும்.

  • முடிந்தவரை அதிக காரம் மற்றும் மசால உணவுகளை தவிர்க்கவும்.

  • நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி பழங்களை சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

  • தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறை குளிக்கவும்.

  • குளிர்ச்சியான பானங்களைவிட குளிர்விக்கபடாத பானங்கள் உடலுக்கு நல்லது.

  • பகல் நேரத்தில் வெளியே பயணிக்கும் பொழுது தலையில் தொப்பி அல்லது துணியை தலைப்பாகை போன்று அணிந்து கொண்டு செல்லலாம். அதற்காக காவி துணி எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு தெருவில் நடந்தால் விபரீதம் சம்பவிக்கும். இதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

  • நீச்சல் குளம் அல்லது ஆறுகள் அருகே இருந்தால் வாரம் ஒருமுறை நீராடவும்.

  • பெரிய அண்டா போன்ற பாத்திரம் வீட்டில் இருந்தால் அதில் தண்ணீர் நிரப்பி அதில் அரைமணி நேரம் அமரலாம்.

  • கோடை கால பானம் : நாக்கு வரண்டு இருக்கும் சமயம் வேதிப்பொருட்கள் நிறைந்த குளிர்பானம் குடித்து உடலை கெடுத்துக்க கூடாது. ஒரு மண் பானை வாங்கி மண் வாசனை போக அதை நன்றாக கழுவி எடுக்கனும். காலை ஆறு மணிக்கு அதில் 2 டம்ளர் மோர் , 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கணும். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு கொஞ்சம், எலுமிச்சை தோல் சிறிது, சுக்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து மூடி வைக்கவும். பகல் 10 மணிக்கு மேல் அதை எடுத்து ஒரு வாய் குடிச்சா உங்களுக்கு அண்டார்டிக்காவில் இருப்பது போல இருக்கும். தில் மாங்கே மோர் என சொல்லத்தோன்றும்...!

  • குளிர்சாதன அறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள். வெப்பம் தாங்கும் சக்தியை உங்கள் உடல் இழந்து, கோடை தாக்குதலால் உடனடியாக உடல் பாதிக்கப்படும். முடிந்த அளவு மின்விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகள் இல்லாமல் இயல்பு வெப்பத்தில் இருங்கள்.

  • சில எளிய சுவாச பயிற்சியால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை நம் உடல் உணராமல் குறைக்கலாம்.

சீத்தலி என்ற கோடைக்கால சுவாச பயிற்சி ஒன்று உங்களுக்காக விளக்குகிறேன். முயன்று பாருங்கள்.

  • உணவு சாப்பிடாமல் காலை நேரத்தில் செய்ய வேண்டிய பயிற்சி இது.

  • உடலை நேராக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

  • கைகளை தளர்வாக தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் நாக்கை குழாய் போல குவித்துக்கொள்ளுங்கள்.

  • சுவாசத்தை வாய் வழியே நாக்கின் குழாய் வழியே முழுமையாக இழுக்கவும்.
    வாய் மூடி சுவாசத்தை மூக்கின் வழியே வெளிவிடவும்.

  • கண்களை மூடிக்கொண்டுக் கொண்டு இதே போல சுவாசத்தை வாய் வழியே எடுத்து நாசிவழியே வெளிவிடவும்.

  • தொடர்ந்து 10 நிமிடம் செய்யவும்.

இந்த பத்து நிமிட பயிற்சியால் நாள் முழுவதும் உடல் மிகவும் குளிச்சியாகவும், சூழலில் இருக்கும் வெப்பம் உணரமுடியாத அளவுக்கு குறைவாகவும் தெரியும்.


இவற்றில் குறைந்தது இரண்டு விஷயங்களையோ அல்லது அனைத்தையும் பின்பற்றினால் எளிமையாக கோடைகாலத்தை சமாளிக்கலாம்.

இவ்வாறு விளக்கினான் சுப்பாண்டி.


சுப்பாண்டியின் அறிவுத்திறனுக்கு காரணம் என்ன தெரியுமா?

கோடை உச்சத்திற்கு போனால் சிலருக்கு மனநிலை பிசகிவிடுமாம். அதுபோல சுப்பாண்டி பாதிக்கப்பட்டு மனம்நிலை தவறிவிட்டான்..!


குறிப்பு : ஏப்ரல் மாதம் 20 முதல் மே 5 ஆம் தேதி வரை வெய்யிலின் அளவு அனைத்து இடங்களிலும் அதிகபட்சத்தை எட்டும் அளவுக்கு இருக்கும் என்பதால் தகுந்த முன் ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.

Saturday, January 9, 2010

சர்வரோக நிவாரணம் = சர்வலோக பாஷாணம்..!


அன்பு சாமிக்கு,

உங்களுடன் இருக்கும் சுப்பாண்டி எழுதிக்கொள்வது.
சிலவிஷயங்களை உங்களுடன் நேரில் பேச முடியாது என்பதால் இந்த மின்னஞ்சல்.

முதலில் இந்த லிங்கைப் படிக்கவும்.

சர்வரோக நிவாரணம் லிங்க் - [ உலக நலன் கருதி லிக் சென்சார் செய்யப்பட்டுள்ளது ]
படிச்சாச்சா???

ஒ.கே இப்ப டீலிங் ஸ்டார்ட்.

நீங்க என்னைய பெரிய எழுத்தாளர் ஆக்கிட்டீங்கனா, நானும் இதுமாதிரி உங்களைப்பற்றி எழுதுவேன்ல?? ...
யோசிங்க சாமி!!

நீங்களும் என் வாழ்க்கையில் அதிசயம் செஞ்சீங்கனு பலர் கிட்ட போயி சொன்னா நாலு காசி சம்பாதிக்கலாம்.

ஸ்வாமி ஓம்கார் ஆசிர்வதிச்சதால குருடனுக்கு காது கேட்கிறது, ஊமைக்கு கண் தெரிகிறது, முடவனுக்கு பாடும் ஆற்றல் கிடைத்தது என
கட்டுரை எழுதலாம்.

குருடனுக்கு காது கேட்கும் என்றும்,ஊமைக்கு கண் தெரியும் - இதில் அதிசய வெங்காயம் ஒன்னும் இல்லைங்கிறது படிக்கிற சுவாரசியத்தில் தெரியாது. ஹாப்பாயில் ஆசாமிங்க நம்பிடுவாங்க.

லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது ஓல்டு பேசன் ஸ்வாமி. நாமும் இது போல புதிதாக முயற்சி செய்வோம்.
என்னைப் பெரிய எழுத்தாளராக்க நீங்க வரம் தந்து ஆசிர்வதமெல்லாம் பண்ண வேண்டாம்.

அப்பப்ப எனக்கு சம்திங் வெட்டினாலே போதும் :)


அளவில்லா எதிர்பார்ப்புடன்,

சுப்பாண்டி

---------------------------------------------------------------------------------------------

அளவில்லா எதிர்பார்ப்பு கொண்ட சுப்பாண்டிக்கு,

ஒரு கதை... :)

வங்காள இளவரசி ஒருவர் விவேகானந்தரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டாளாம்.
அதற்கு விவேகானந்தர், எதற்கம்மா இப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு என கேட்டார்.

உங்களை போன்ற அழகும் அறிவும் கொண்ட குழந்தை வேண்டும் அதனால் தான் விருப்பப்படுகிறேன் என்றாளாம் இளவரசி.


நானும் நீங்களும் திருமணம் செய்துகொண்டால் அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் என நிச்சயம் கிடையாது. சில நேரங்களில் குழந்தை வேறு மாதிரியும் பிறக்கலாம்.

குழந்தை கருவுற்று பெற்று எடுப்பதற்கு கால தாமதமும் ஆகும். அதனால் என்னையே உங்கள்
மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா என கூறிய விவேகானந்தர் இளவரசியில் காலில் விழுந்தார்.

இப்போ கருத்து... :)

உங்களை பெரிய எழுத்தாளர் ஆக்கி அப்புறம் என்னை பற்றிய அதிசங்களை நீங்கள் எழுதி சம்பாதிப்பதை விட... அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக சர்வரோக நிவாரணியானந்தாவை பற்றி நீங்கள் எழுத துவங்கினாலேயே உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

உடனே இலக்கியத்தில் பழுத்தப் பழத்தின் ’ஜூஸ்’ என்ற புனைபெயரில் எழுதி சம்திங் பார்க்கவும்.


அதிசயத்தை மக்கள் எதிர்பார்க்கும் வரை இவர்கள் போன்றவர்கள் இருந்தே தீருவார்கள். ப்ரதிபக்‌ஷ பாவனையில் கூறவேண்டுமானால்
இவர்கள் இருப்பதாலேயே பிறர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும்.

என் சார்ப்பாக அவரிடம் சென்று ஒரு வரம் கேளுங்கள்... அது என்னவென்றால்..

“கடவுளே... வரம் கொடுப்பதை நிறுத்தி வாழக் கற்றுக்கொடு..!”


தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.

Wednesday, May 27, 2009

சுப்பாண்டி கண்ட ஞானக்குழந்தை கிச்சுமணி

பலவருடங்களுக்கு முன் எனக்கு சுப்பாண்டிக்கும் நடந்த சுவாரஸியமான விஷயம் இது.
இதே போல ஒரு கோடைவிடுமுறை சமயம் சுப்பாண்டியின் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களை என்னிடத்தில் அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். அவனை முன்னால் கொண்டுவந்து என்னிடத்தில் நிற்கவைத்தார்கள். சுமார் ஏழு வயது இருக்கும், குறுகுறு பார்வையும், சுட்டிதனமும் நிறைந்த அவனது முகம் என பார்க்க அழகாக இருந்தான். “ ஸ்வாமி இவன் கிச்சுமணி ஓவர் குறும்பு, நீங்கதான் இவனை சரியாக்கணும்” என்றார்கள்.

நான் என்ன செய்ய? குழந்தைக்கு இது தானே இயல்பு என்றேன்.

உறவினர்கள் அனைவரும்.. “ஸ்வாமி இவனை உங்களுக்கு தெரியாது. பத்து நிமிஷம் இவன் கூட இருந்தா போதும் தலை சுத்திடும்” என்றார்கள்.

எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அப்படி என்ன குறும்பு பண்ணறான் என கேட்டேன் ?.

“சொன்ன பேச்சை கேட்க மாட்டான், எப்ப பார்த்தாலும் கார்டூன் பார்க்கறது. சினிமா பைத்தியம். விஷமம்னா அப்படி ஒரு விஷமம். படிக்கிறது. சாமி கும்பிடறது, சுலோகம் சொல்லறது எல்லாம் இவனுக்கு வேப்பங்காய் சாப்பிடறது மாதிரி.” என்றனர்.

வேப்பங்காய் உடம்புக்கு நல்லது தானே? என எனது மருத்துவ அறிவை எடுத்து விட.. குடும்பமே என்னை முறைத்தார்கள்.

நான் நிலைமையை சுதாரித்து கொண்டு, “ நீங்க சொல்லறது எல்லாம் சரிதான். குழந்தையை குழந்தையாவே இருக்கவிடுங்க. அவங்க மனசில் எதையும் திணிக்காதீங்க. எனக்கு இவனை மாத்தும் அளவுக்கு அறிவெல்லாம் கிடையாது” என்றேன்.

உடனே சுப்பாண்டி, “உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி ஸ்வாமி. எத்தனையோ விஷயங்களை என் கண்ணுமுன்னாடியே பண்ணிருக்கீங்க. இது எல்லாம் பண்ண மாட்டீங்களா?” என்றான்.

எனக்கே ஆச்சரியம் இவன் முன்னாடி நான் என்ன பண்ணினேன் என. சுப்பாண்டியின் முகத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது உண்மை.

சுப்பாண்டி பயல் என்னை பற்றி ஏதேதோ சொல்லி அவர்களை அழைத்துவந்திருக்கிறான்.


“டேய்..கிச்சுமணி. ஸ்வாமியை நமஸ்காரம் பண்ணிக்கோடா. நல்ல புத்திக்கொடு என வேண்டிக்கோ..!” என்றான் சுப்பாண்டி.

என்னை வணங்க வந்த கிச்சுமணியை அரவணைத்து அவனுக்கு இனிப்புகள் வழங்கினேன். சந்தோஷமான கிச்சுமணி ஒரு சினிமா நடிகர் செய்வது போல எனக்கு வணக்கம் வைத்தான்.

“ஸ்வாமி ஆசிர்வாதம் பண்ணீட்டார். வாங்க எல்லாரும் போலாம்.” என சுப்பாண்டியும் குடும்பமும் விடைபெற்றனர்.

உண்மையில் எனக்கு குழந்தைகள் மேல் பிரியத்தை காட்டிலும் மரியாதை உண்டு. ஆணவம் மிகுந்து வளர்ந்த மனிதர்களிடம் அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவத்தில் இது தான் சரி என பெரியவர்கள் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீண்டு வளர்கிறார்கள் என்பதால் அவர்களிடம் எனக்கு மரியாதை உண்டு.

குழந்தை வளர்ப்பை பற்றி இவர்கள் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. பிறந்து தவழ துவங்கியதும் சூழலை கவனிக்க துவங்கும் குழந்தையை பராமரிக்க தெரியாமல் அவர்களை டீவியின் முன் போட்டுவிடுவார்கள். சில வருடத்தில் அந்த குழந்தை இதை நன்கு பழகிவிடும். பிறகு பள்ளிக்கு செல்லும் பொழுது உடனே இந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும் என நினைப்பார்கள் பெற்றோர்கள். என்னிடம் வந்து.. “ஸ்வாமி என்னேரமும் கார்ட்டூன் சானல் பார்க்கிறான். நீங்கதான் வழி சொல்லனும்” என்பார்கள்.

குழந்தை தங்களை தொல்லை செய்ய கூடாது என நினைத்து டீவி முன் உட்கார வைத்தார்கள். இப்பொழுது டீவியே அவர்களுக்கு தொல்லையாகிவிட்டது. குழந்தைக்கு தானே உணவு சாப்பிட கற்றுக்கொடுக்கிறேன் என துரித உணவுகளை (ஜங்க் புட்) கையில் கொடுத்து டீவி முன்னாலோ , வீடியோ கேம் முன்னாலோ அனுப்புவிடுவார்கள். இதை சாப்பிட்டு அந்த சிறுவனோ சிறுமியோ கார்ட்டூனில் வரும் பூதத்தை காட்டிலும் வீங்கிவிடுவார்கள். அப்புறம் என்னிடம் வந்து யோகா செய்து இவன் உடம்பை குறைக்கனும் ஸ்வாமிஜீ என்பார்கள்.உங்களை சுற்றி உள்ள பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கவனித்து பாருங்கள். பழம் மற்றும் தானிய வகைகளை அதிகம் சாப்பிட மாட்டார்கள். ஜங்க் புட் பழக்கம் அதிகமாக இருக்கும்.

குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை யோகபயிற்சி செய்ய தேவை இல்லை. நன்றாக உடல் அசைந்து விளையாடினாலே போது. என்னிடம் உடல் பருமனால் யோக பயிற்சிக்கு வரும் சிறுவர்களுடன் நான் விளையாட துவங்கினால் அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம் இருக்கிறதே... அவர்களின் உடல் வேர்வையை தாண்டி வழியும்.

அறிவியலை பற்றி எழுதினால் நீ என்ன அறிவியல் படித்தவனா என்கிறார்கள் பலர். குழந்தையை பற்றி எழுதினால் நீ என்ன குழந்தை பெற்றவனா உனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்பை பற்றி என்பார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டுகிறேன். நான் குழந்தையை பெற்றவன் அல்ல. எப்பொழுதும் குழந்தையாக இருப்பவன். எனக்கு என்னை எப்படி வைத்துக்கொண்டால் சுகந்திரமாக உணர்வேனோ, அதைத்தான் குழந்தைகளுக்கு செய்ய சொல்லுவேன்.

அடுத்த நாள் காலை 6 மணி.... நான் இருக்கும் அறையின் கதவு தட்டப்பட்டது.. திறந்தால் சுப்பாண்டியும் கிச்சுமணியுன் நின்று கொண்டிருந்தார்கள்.

சுப்பாண்டி கண்கள் கலங்கி ஒரு தெய்வீக பாவனையில் இருந்தான்.

சுப்பாண்டி என்னாச்சு என்றேன்.

“ஸ்வாமி.. எனக்கு ஒன்றும் தெரியாது தெரியாதுனு சொல்லி கடைசியில் இந்த பையனை தெய்வீகமாக்கீட்டீங்களே...!” என்றான்.

என்ன சுப்பு புரியற மாதிரி சொல்லு என்றேன். “ஸ்வாமி உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிகிட்டு போனோம் இல்லையா? அது வர்கவுட் ஆயிடுச்சு. காலையில் தூங்கிகிட்டு இருந்தான் அவனை எழுப்பினேன். எழுத்தவுடனே சுப்ரபாதம் பாடரான் ஸ்வாமி..”

எனக்கே அதிர்ச்சி தாங்கவில்லை. எங்க பாட சொல்லு கேட்போம்...

“டேய் கிச்சு பாடுடா...”

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா” என துவங்கினான் கிச்சு மணி.
இடைமறித்த சுப்பாண்டி பார்த்தீங்களா ஸ்வாமி என்றான்.

எனக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“கிச்சு கண்ணா.. உனக்கு முழுபாட்டும் தெரியுமா? யாரு கத்துகொடுத்தா? ” என கேட்டேன்.

“முழுசும் தெரியும். தானா கத்துக்கிட்டேன்”

”எங்க பாடு பார்க்கலாம்” இது நான்.

“நேத்து கொடுத்த ஸ்வீட் கொடுங்க அப்பத்தான் பாடுவேன்” இது கிச்சு.

அவன் கைநிறைய இனிப்பும் கொடுத்து கால் சட்டை பையிலும் நிரப்பினேன்.

தொண்டையை செருமிகொண்டே..இடுப்பை லேசாக ஆட்டியவாரே கிச்சு பாடினான்...

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா சமர்பத்தே....
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பார்த்துகிட்டேதான் இருப்பேன். நான் பார்ததுகிட்டேதான் இருப்பேன்.....”