Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label பழைய பஞ்சாங்கம். Show all posts
Showing posts with label பழைய பஞ்சாங்கம். Show all posts

Sunday, April 7, 2013

பழைய பஞ்சாங்கம் 7-4-2013


சுப்பாண்டியார் - சுப்பாண்டி யார் ?

நமது வலைபக்கத்தை வாசிக்கும் பலருக்கு சுப்பாண்டியை நன்றாக அறிமுகம் உண்டு. நான் பல ஊர்களுக்கு பயணிக்கும் பொழுது சுப்பாண்டி கூட வந்திருக்காரா? என கேட்பதுண்டு. தொலைபேசியில் என்னுடன் பேசுபவர்கள் கூட பேச்சின்முடிவில் சுப்பாண்டியை கேட்டதாக சொல்லுங்க என்பார்கள். அவனுக்கு தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எழுதி அதற்கு ஆலோசனை வேண்டி பலர் கடிதம் எழுதுகிறார்கள். நான் ஒருவன் இங்கே இருப்பதையே சுப்பாண்டி மறைத்துவிடுகிறான். ஒரு சில வேளைகளில் இவன் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து எனக்கு பொறாமை கூட ஏற்படுவதுண்டு. இந்த சுப்பாண்டியை பலருக்கு அறிமுகம் செய்துவைத்ததே நான் தான். அவன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனான் தெரியுமா?


ஒரு நாள் பல்பொருள் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பணம் செலுத்தும் இடத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. நமக்குத்தான் பிறர் பிரச்சனையில் ஆர்வம் அதிகம் வருமே? உடனே சென்று கூட்டத்தை விலக்கிப்பார்த்தேன்.

அங்கே குழந்தை தனமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சுப்பாண்டி. இப்படி ஒரு அப்பாவியை அடித்திருக்கிறார்களே என நினைத்து, என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டேன்.

கடையில் ஒருவர் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பணம் வாங்குபவரிடம் சுப்பாண்டி கேட்டானாம்.., 

“ஏன் சார் காசு கொடுத்து தானே சிகரெட் வாங்கரீங்க? நல்ல சிகரெட் கொடுக்காம, கடைக்காரர் எப்படி உங்களை ஏமாத்தரார் பாருங்க” 

என அவன் சிகரெட் பெட்டியை காண்பிக்க, அதில் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என எழுதி இருந்தது. முகத்தை பெருமையாக வைத்துக்கொண்டு கடைக்காரரை பார்த்து, “உடம்பை கெடுக்காத சிகரெட்டா கொடுங்க” என கூறவும், நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

இத்தனை அறிவு கொண்ட ஆள் நம்முடன் இருக்கட்டும் என அவனை அழைத்துவந்தேன். அன்று பிடித்தது...!

-------------------------------

மனைவி எப்படி நிற்கனும்?

என்னிடம் ஆசிவாங்கும் தம்பதியினர் பெரும்பாலும் என் முன் கபடி ஆடுவதை பார்த்திருக்கிறேன். கணவனுக்கு எந்த பக்கம் மனைவி நின்று கொண்டு ஆசிவாங்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆசிவாங்க குனியும் பொழுதே சந்தேகம் வரும். பிறகு வலது இடது என கணவனும் மனைவியும் மாறி கபடிக்கு ஒப்பாக பாவனை செய்வார்கள். நம் சம்பரதாயத்தில் இறைவனின் ஆண் தன்மை வலது புறமும், பெண் தன்மை இடது புறமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது சிவன் சக்தியோ, பெருமாளும் தாயாருமோ என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் பல்வேறு கலாச்சரத்திலும் ஆண் பெண் தன்மை வலது இடதாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்மீக நிலை கொண்ட ஒரு இடத்தில் தம்பதிகளாக ஆசி வாங்கும் பொழுது ஆணின் வலது பக்கம் பெண் இருக்க வேண்டும். அதனால் தம்பதிகளின் பெண், ஆன்மீகவாதியின் பெண் தன்மைக்கும், தம்பதிகளின் ஆண் ஆன்மீகவாதியின் ஆண் தன்மைக்கும் வணக்கம் செய்வதை போல ஆகும்.

எனக்கு இத்தகைய வெளிச்சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஒருவன் பக்தியுடன் வணங்கினால் எப்படி இருந்தாலும் தவறில்லை என நினைப்பவன். ஆனால் தற்கால குடும்பங்களில் பெரியவர்கள் வழிகாட்டுவதற்கு இல்லை என்பதால் அனேக தம்பதியினர் என்னிடம் கேட்பார்கள். நானும் பொறுமையாக கூறுவேன். இருந்தாலும் அடுத்த முறை ஆசிவாங்க வரும் பொழுது அவர்களுக்கு குழப்பம் வந்துவிடும். மீண்டும் என்னிடம் கேட்ப்பார்கள். இப்படி குழப்பத்துடன் இருந்த தம்பதிகள் என்னிடம் அடிக்கடி கேட்க, நான் பொறுமை இழந்து சுப்புவை கைகாட்டி இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.

அடுத்த முறையிலிருந்து அவர்களிடம் குழப்பம் இல்லை...! நானும் ஆச்சரியத்துடன் எப்படி சுப்பு இவங்க குழப்பத்தை தீர்த்த? நானே தீர்க்க முடியாம இருந்தேனே என கேட்டேன். 

“வேற ஒன்னும் இல்லை சுவாமிஜி, கீப்  லெப்டு - மனைவி தான் எப்பவும் ரைட்டுனு சொன்னேன்” என்றான். எனக்கு இதில் ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு புரிஞ்சுதா?

-------------------------------

அரேபிய விமானம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாட்டிற்கு உண்டான விமான சேவையையே பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் விமான சேவை மிக குறைந்த கட்டணமாக இருக்கும். அல்லது அந்த நாட்டின் பிரத்யோகமாக குறைந்த கட்டண சேவையை தேர்ந்தெடுப்பதும் உண்டு. பெரும்பாலும் எனக்கான விமான சீட்டு வேறு ஒருவர் தான் எடுப்பார்கள். 

எனக்கு விருப்ப தேர்வு என இருக்காது. சமீபத்தில் எனது ஐரோப்பிய பயணத்திற்கு இதே போல மற்றொருவர் விமான சேவையை தேர்வு செய்தார். எதிஹாட் ஏர்வேஸ் என்ற விமான சேவை அது. துபாய் நகரை மையம் கொண்டு செயல்படும் நிறுவனம். முதன் முதலாக அரேபிய விமானத்தில் பயணம். 

நான் பயணம் செய்ய துவங்கும் முன் ப்ரார்த்தனையில் ஈடுபடுவது உண்டு. அதே போல இந்த விமானத்தில் அமர்ந்ததும் பெல்ட் அணிந்து கண்களை மூடி ப்ரார்த்தனை செய்ய துவங்கும் சமயம், ஸ்பீகரில் குரல் ஒலித்தது....! திருக்குரானிலிருந்து அற்புதமான வரிகள்..என் ப்ரார்த்தனைக்கு மிகவும் நெருக்கமான வரிகள் மெய்சிலிர்த்து போனேன்.

பெரும்பாலான விமான சேவைகள் ப்ரார்த்தனை செய்வதில்லை. இஸ்லாமிய விமான சேவை அனைத்திலும் இது போன்ற ப்ரார்த்தனைகள் இருப்பதாக அறிந்து மகிழ்ந்தேன். அனைத்து விமானங்களிலும் இச்சேவையை துவங்கலாம். சமயசார்பற்ற நாடுகள் அனைத்து சமய ப்ரார்த்தனையையும் செய்யலாம். இது ஒரு வேண்டுகோள்.

அது சரி அந்த திருக்குரான் ப்ரார்த்தனை என்ன என்று தானே கேட்க்கிறீர்கள்? எனக்கு தெரிந்த முறையில் மொழி பெயர்த்துள்ளேன்.

முழுமுதற்கடவுளின் பெயரால் அவரை வணங்குகிறேன். இறையருள் நம் அனைத்து பயணங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே இறையருள் திரும்பி வருவதற்கும் துணை நிற்கட்டும். 

இப்படி அனைத்து விமானங்களிலும் ப்ரார்த்தனை செய்ய துவங்கினால்., மத நம்பிக்கையும் ப்ரார்த்தனையில் நம்பிக்கையும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் ஒரு வழி உண்டு. அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே பஞ்சு வாங்கி காதில் வைத்துக்கொள்ளலாம்..!

---------------------------------------
ஜென்னிசம்

வானிலிருந்து இறங்கிய 
பனித்துளியால் புல் நிறம் மாறவில்லை 
மாறாக தலைசாய்த்து பணிந்தது...!

Wednesday, October 24, 2012

பழைய பஞ்சாங்கம் 24-10-2012


பஞ்சாங்கம் ஏன் வரலை? 

பல மாதங்களாக பழைய பஞ்சாங்கம் என்ற தலைப்பில் நான் எழுதவே இல்லை. சிலர் தனி மின்னஞ்சல் அனுப்பி உங்களின் நேரத்தை இப்படி துணுக்கு எழுதி வீணாக்க வேண்டுமா? உங்கள் அறிவுக்கு (?!?!) பல விஷயங்களை எழுதுங்கள் என தூண்டினார்கள்.

வேறு சிலரோ பழைய பஞ்சாங்கம் எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறார்கள். நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஒன்றும் புரியவில்லை. படிப்பதற்கு எளிமையாகவும் நகைச்சுவையாகவும் (?) இருப்பது பழையபஞ்சாங்கம் தான் எழுதுங்கள் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

எழுத சொன்னதற்காகவோ அல்லது எழுததீர்கள் என சொன்னதற்காகவோ நான் நிறுத்தவில்லை. [சரக்கு இருந்தால் தானே எழுத முடியும் என்பது வேறு விஷயம்] பல முக்கிய தலைப்புகளை எழுதிக்கொண்டிருந்ததால் தற்காலிக விடுமுறை விட்டுவிட்டேன். 

எந்த தலைப்பில் எழுதினாலும் அது பல பகுதிகளாக திரவுபதிக்கு கிருஷ்ணன் அளித்த சேலையை போல நீண்டு விடுகிறது. மீண்டும் சுருக்கமாக எழுத காட்டில் சென்று தவம் இயற்றி வரம் வாங்கலாம் என நினைக்கிறேன். மீண்டும் எழுத துவங்கி விட்டேன் இதோ...!

--------------------------------------

புதிய பஞ்சாங்கம்

ஒவ்வொரு வருடமும் ப்ரணவ பீடம் சார்ப்பில் பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். இது 8ஆம் வருடம் பஞ்சாங்க வெளியீடு விஜய தசமி அன்று நடந்தது. இந்த பஞ்சாங்கம் ஜோதி
டர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். ஜோதிடம் தெரியாதவர்கள் பார்த்தால் ஒன்றும் புரியாது.

சென்ற வாரம் 2013ஆம் ஆண்டு பஞ்சாங்கம் தயார் செய்து அதில் பிழை திருத்தம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ வேலையற்று பொழுது போக்க பேப்பர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டு என் அருகே உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி.

“என்ன சுப்பாண்டி ஒரு மாதிரி இருக்க?” என கேட்டேன். 

“2012 உலக அழியும்னு சொன்னாங்க. நீங்க ஏன் சாமி வெட்டியா 2013க்கு பஞ்சாங்கம் போடறீங்க?” என்றான் சுப்பாண்டி.

பிழை திருத்த வேண்டிய இடம் பஞ்சாங்கம் அல்ல என்பது புரிந்தது.

---------------------------------

தீபாவளி திருநாள்

தீபாவளிக்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாடை முதல் பட்டாசு வரை கொண்டாட்டம் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என பலருக்கு உண்மையான காரணம் தெரியாவிட்டாலும் கொண்டாடாமல் இருப்பதில்லை. தீபாவளி என பின்பற்றாதவர்களும் கூட விடுமுறை நாள் கொண்டாட்டம் என அறிவிக்கிறார்கள்.

தீபாவளியை பல வருடங்களாக நீங்கள் பல்வேறு நிலையில் கொண்டாடி இருப்பீர்கள். இந்த வருடம் வித்தியாசமாக கொண்டாட முயற்சி செய்யலாமா?

அதற்கு முன் ஒரு கதை..!

அசுரர்களுக்கு தங்களை இறைவன் வெறுப்பதாகவும், அசுரர்கள் என ஒதுக்குவதாகவும் மனக்குறை இருந்தது. அதனால் இறைவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அசுரர்களை வெறுப்பதில்லை, அவர்களே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என அவர்களுக்கு புரியவைக்க ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

ஒரு அறையில் அமிர்தத்தை கலசங்களில் வைத்து அசுரர்களை சாப்பிட சொன்னார். ஆனால் அவர்களின் கை மூட்டு மடங்காமல் இருக்கும்படி செய்துவிட்டார். அதனால் அமிர்த கலசத்தை கையில் ஏந்தி குடிக்க முடியவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு அமிர்தத்தை கீழே கொட்டிவிட்டனர்.

அதே அறையில் அமிர்தத்தை வைத்துவிட்டு தேவர்களை அனுப்பினார். தேவர்கள் முதலில் கைகள் மடங்காமல் இருப்பதனால் சிரமப்பட்டனர். பிறகு உணர்ந்து கலசத்திலிருந்து அமிர்தத்தை கையில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டனர். நோக்கம் அமிர்தத்தை குடிப்பது தானே? சுயநலமற்ற நிலையில் அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர் தேவர்கள்.

நீங்கள் இனிப்பு சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட முடியும்?
நீங்கள் உடை உடுத்தினால் ஒரு நேரத்தில் ஒர் உடை தானே அணிய முடியும்?

இதே போல பிறருக்கு இவற்றை அளித்தால் பலர் ஆனந்தம் அடைவார்கள். உங்களுக்கு மட்டும் என்றால் அந்த ஆனந்தத்தில் எல்லை உண்டு. பலருக்கு பகிர்ந்து அளித்தால் ஆனந்தம் எல்லை கடந்து பன்மடங்காகும்.

இப்பொழுது சொல்லுங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடலாம்? அசுரனாகவா? தேவனாகவா?

-------------------------------------------

ஜென்னிசம்

பரந்த அகண்ட 
பெருவிளியில்
அனைத்திலும் என் 
சுவாசமே நிரம்பி இருக்க
சுவாசிக்க மறந்து அதிலேயே
மூழ்கி இறக்கிறேன்

Friday, November 11, 2011

பழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11

நல்உள்ளங்களுக்கு நன்றி

ஆன்மீக கல்வியை சிறந்த முறையிலும் பொருளாதார சுமை இல்லாமலும் கொடுக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என கேட்டிருந்தேன். சின்ன அளவில் கோரிக்கை வைத்ததற்கே பலர் உதவ முன் வந்தார்கள். அதன் சுட்டி இங்கே : உதவி

வெளிநாட்டிலிருந்து உதவி செய்த சிவப்பிரகாசம், ஞானவேல், வித்யா, கீதா, ஆனந்த் ஆகியோருக்கு என் பேரன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதார ரீதியாக உதவி செய்தவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் ஐரோப்பா, அமெரிக்காவில் பயிற்சி நடத்த வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்தியாவில் யாரும் பயிற்சி நடப்பதற்கோ அல்லது வேறு உதவிகளையோ இன்னும் செய்யவில்லை. மேலோட்டமாக விசாரித்ததுடன் சரி...!

உள்நாட்டில் இருப்பவர்களிடம் உதவி பெறும் யோகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன். இதற்காக நான் வெளிநாட்டில் வசித்து பிறகு இங்கே இருப்பவர்களிடம் உதவி பெறலாம் என நினைக்கிறேன்...!

பயிற்சி கொடுத்தால் கட்டணம் என்கிறார்கள். இலவசமாக கொடுத்தால் யாரும் அதற்கு உதவவில்லை... என்ன செய்ய? வள்ளலார் கடை விரித்தே கொள்வாரில்லை.. நான் எல்லாம் எம்மாத்திரம்..?
--------------------

பிணத்தீட்டு

திருவண்ணாமலைக்கு தென் திசை முழுவதும் சுடுகாடாக இருந்தது. இப்பொழுதும் அப்படித்தான். சுடுகாட்டிற்கு மத்தியில் தான் ரமணாஸிரமம் அமைந்திருந்தது. ஊரில் யாராவது இறந்துவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்பகுதிக்கு எடுத்து வந்து அவர் அவர் குல வழக்கப்படி எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள்.

அந்தகாலத்தில் வாகன வசதியில்லாததால் பிணத்தை சுமக்க சிலர் இருப்பார்கள். இவர்கள் ஈமக்கிரியை முடிந்ததும் ரமணாஸ்ரமம் வந்து இளைப்பாரிவிட்டு செல்வார்கள். ஒரு நாள் ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் இரண்டு வெளிநபர்களுடன் வாக்குவாதம் செய்வதை ரமணர் கண்டார். அவர்களுக்கு அருகே சென்று வெளிநபர்களிடம் என்ன என விசாரித்தார்.

தாங்கள் பிணம் சுமந்து வந்தோம், உச்சி வேளை என்பதால் மிகவும் களைப்பாக இருக்கிறது, உணவுக்கு ஆசிரமத்தில் மணி அடித்தார்கள். சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால் இவர் தீட்டு என எங்களை உள்ளே விடவில்லை என்றனர். ரமணர் அவர்களை சாப்பிட உடனே உணவு கூடத்திற்கு போகச் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசியிடம், “தினமும் நாம நம்ம உடம்புங்கிற பிணத்தை தூக்கிட்டு இருக்கோம். அதுவே தீட்டு தானே? நானும் நீயும் தீட்டான ஆட்கள் தான்” என்றார்.

-----------------------------------------------------------
அழகிய தமிழ் மகன்

சில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் ஒரு நிறுத்தம் வந்ததும், வெளியே சென்று சில நிமிடம் நிற்பதற்காக இறங்கினேன். மீண்டும் ரயில் கிளம்பும் பொழுது வண்டியில் ஏறுவதற்கு வாசல் படிக்கு அருகே சென்றால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

“எக்ஸ்க்கியூஸ்மீ...” என சொல்லிவிட்டு வழிவிடுவார் என நினைத்தால் அவ்வழியே அடைத்துக் கொண்டு கண்களை உருட்டி என்னை பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க தமிழில் பேசமாட்டீங்களோ?” என்றவரை கவனித்தால்... கலைந்த தலை, பலநாள் தாடி, நீல நிற ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட்டில் சேக்குவாரோ படம் என அவர் இருந்த நிலையை பார்த்ததும் இன்னைக்கு இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது.

“தமிழன் கிட்ட தமிழ்ல பேசுங்க.. அமெரிக்காவிலா இருக்கீங்க? தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கறதே உங்கள மாதிரி எக்ஸ்க்கியூஸ்மீ ஆட்கள் தான்..” என்றார்.

அதற்குள் ரயில் நகரத்துவங்கியது அதனுள் ஏறியபடியே அவருடன் பேசத்துவங்கினேன், “ஐயா, தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்களே... எந்த தமிழன் டீ-சர்ட்டும், ஜீன்ஸும் போட்டிருந்தான்? கிராப்பு வெட்டி இருந்தான்? என்னை பாருங்க மேல ஒரு வேட்டி கீழ ஒரு வேட்டி, தலை மழிச்சிருக்கேன். காதில் கடுக்கன் போட்டிருக்கேன். நாக்கில் மட்டும் தமிழ் இருந்தா பத்தாது தம்பி, கலாச்சாரம் நம்மளோட எல்லா செயலிலும் இருக்கனும். நீங்க ஜீன்ஸ், டீசர்ட் போடலைனா நான் ஏன் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசப் போறேன்? தமிழ் கலாச்சாரத்தை மொழியில் மட்டும் கடைபிடிக்கனும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி தந்திருக்காங்க. கலாச்சாரம் மொழியில் மட்டும் அல்ல, உடை, உணவு அப்புறம் நம்ம செயல் இதில் எல்லாம் இருக்கு” என என் பிரசங்கத்தை முடித்தேன்.

“சாமி நீங்க சொல்லும் போது தான் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி” என சொல்லி திரும்பி நடக்கத் துவங்கினார். அப்பொழுது என் மொபைல் போன் ”பிரம்மம் ஒக்கட்டே...” என்று சுந்திர தெலுங்கு ஒலிக்கத் துவங்கியது. அவர் திரும்பி முறைக்கும் முன் மாயமானேன், :)
------------------------------

எல்லாம் உங்க புண்ணியம்

என்னிடம் சிலர் நலமா என கேட்டால், “எல்லாம் உங்க புண்ணியத்தில நலமா இருக்கேன்” என்பேன். உடனே “எனக்கு எங்க புண்ணியம்..” என அலுத்துக்கொள்வார்கள். தங்களின் புண்ணியத்தை கூட பிறருக்காக கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் மேலும் புண்ணியம் தானே ஏற்படும்? ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை என்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும்? ஆனால் என்னிடம் நலமா என கேட்பவர்கள் இறைவனின் வடிவமாக நினைத்து எல்லாம் உங்க புண்ணியம் என்கிறேன். ஆனால் அவர்கள் புண்ணியத்தை தர மறுக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க இது பாவமா புண்ணியமா?

--------------------------------------

ஜென்

கண்களின் கண்கவர் காட்சியும்
நாசியின் நல்நறுமணமும்
காதில் விழும் இன்னிசையும்
உண்ட உணவின் அற்புத ருசியும்
மனையாளின் ஸ்பரிசமும்
அனுபவிக்கும் ஷணத்தில்
அனுபவம் வெளியில் இருந்து கிடைப்பதில்லை
அனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என
உணர்ந்து என்னையே காணவும்,
முகரவும், கேட்கவும், சுவைக்கவும்
துவங்கி ஸ்பரிசித்து வருகிறேன்.

Friday, August 5, 2011

பழைய பஞ்சாங்கம் 5/08/2011

உங்க சம்பளம் எவ்வளவு?

திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் கம்பத்து இளையனார் சன்னிதியில் எப்பொழுதும் சேஷாத்திரி ஸ்வாமிகள் அமர்ந்திருப்பார். அவரின் செயல்களும் பேச்சும் நமக்கு சரியாக புரியாது. ஒருவித ஞான பைத்தியமாக திருவண்ணாமலையை வலம் வந்தவர்.

அவரிடம் ஒருவர் வந்து ஐயா உங்களை மாதிரி ஒரு உயர்ந்த ஞானியை பார்த்ததில்லைனு சொன்னாரு..

அவரு சொன்னாரு நான் எல்லாம் ஆயிரம் ரூபா சம்பளத்தில இருக்கேன். மலை மேல ஒரு குகையில ஒருத்தன் பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு இருக்கான். அவனை பார்த்தா நீ என்ன சொல்லுவே.. போயி அவனை பாரு...

அங்கே மலைமேல் விருப்பாட்சி குகையில் ரமணர் வாழ்ந்த காலம் அது..!

ஆமாம்.. நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?

--------

நான் ஒரு பிச்சைக்காரன்

என்னை ஒரு கம்பெனியின் நிர்வாகி பார்க்க வந்தார். அவருக்கு என்னை முன் அறிமுகம் இல்லை. அந்த கம்பெனியின் முதலாளி எனக்கு நெருக்கமானவர். அவர் நேரடியாக வர முடியாத சூழலில் தன் நிர்வாகியை என்னிடம் அவர் சார்பாக பேசுவதற்கு அனுப்பி இருந்தார்.

ஏதோ எதிர்பார்த்து வந்தவர் முன் நான் அமர்ந்திருந்தேன். ஒரு அலட்சிய பார்வையுடன் நேராக என்னிடம் வந்தார், நான் _____ கம்பெனியின் ஆட்மின் மேனேஜர். இருபது வருட சர்வீஸ். உங்களை ____ பார்க்க சொன்னார் என்றார்.

“வணக்கம், நான் பெயரில்லாத ஒரு ஜடம். பிச்சைக்காரனாக இருக்கிறேன். பிறந்தது முதல் இது தான் நம்ம சர்வீஸ். என்னை பார்க்க வந்ததுக்கு நன்றி.” என்றேன்.

ஒரு நிமிடம் குழப்பி பிறகு சகஜ நிலைக்கு வந்தார். அவர் வந்த காரியத்திற்கு ஆலோசனை கூறியதும் நம்ப முடியாத குழப்பத்துடனே சென்றார். வரும் பொழுதும் போகும் பொழுதும் குழப்பம் மட்டுமே எஞ்சி இருந்தது அவருக்கு...

இறைவனின் சன்னிதியான இந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரு பிச்சைக்காரகள் தானே? இதில் என்ன பதவி பெயரும் இருக்கிறது?

நமக்குள்..
ஆணவம் இருக்கும் வரை பிரணவம் தெரியாது..!
ஆங்காரம் இருக்கும் வரை ஓங்காரம் ஓங்காது..!

--------

ஆர்கெஸ்ட்ரா பாடகி

பாராட்டு என்பது சிலருக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியது.சிலருக்கு உற்சாகத்தை அழிக்கக்கூடியதும் ஆகும். சிலர் செய்யும் அபாரமான விஷயங்களை பாராட்டாமல் விட்டோம் என்றால் அதுவே பெரிய தவறு என்பேன். அதேபோல ஒருவர் தான் திறமையானவர் என நம்பி முயற்சி செய்யும் பொழுது அவர்களை கேலி செய்யாமல் அதே நேரம் நாசூக்காக சொல்லி புரியவைத்து வளர்ப்பது மிக முக்கியம். அப்புறம் எப்படித்தான் சொல்லி புரியவைப்பது என்கிறீர்களா? இதோ ஒரு உதாரணம்.

என்னை சந்திக்க வந்திருந்த நபர் அவரின் பெண் நன்றாக பாடுவாள் என என் முன்னே நிறுத்தினார். கல்லூரி செல்லும் பருவம் கொண்ட பெண் கண்களை மூடி சாஸ்திரிய சங்கீதத்தில் தனக்கு தெரிந்த பாடலை பாடினாள். நல்ல முயற்சியாக இருந்தாலும், நல்ல பாடலை வாய்ப்பாடு போல பாடினாள். மேலும் அப்பாடல் எனக்கு தெரிந்திருந்ததால் அதற்கும் இதற்கும் ஏணி அல்ல எதை வைத்தாலும் எட்டாது என புரிந்தது.

அப்பெண்ணிடம், “ இசையில நீ நல்லா வளர்ந்து வரம்மா...அம்மா பிரபல ஆர்கெஸ்ட்ரா லக்‌ஷமண் ஸ்ருதி கேள்விப்பட்டிருக்கியா? அவங்க அளவுக்கு இல்லைனாலும் அவங்க திறமைக்கு 50 சதவிகிதம் வந்துட்ட, அதாவது லக்‌ஷ்மண் உனக்கு கைகூடிவந்திருச்சுமா, இனி நீ அடுத்த 50 சதவிகிதத்திற்கு முயற்சி செஞ்சா போதும்..” என்றேன்.

உங்களுக்கு புரிஞ்சுதா?

--------

குருவின் குரல்

சென்ற மாதம் குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது. அன்று நிகழ்த்திய செற்பொழிவு பற்றி பலர் கருத்துக்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் வரும் வாரத்தில் இங்கே ஒலிவடிவில் அளிக்கிறேன். எழுத்தில் அப்பேச்சை கொண்டுவருவது சிரமம். குரு பூர்ணிமா அன்று பேச்சை கேட்க முடியவில்லை, அதனால் சில நாட்களுக்கு பிறகு அந்த ஒலிநாடாவை கேட்டேன் பல உதாரண கதைகளுடன் மிகவும் நன்றாக இருந்தது. குரு பூர்ணிமா அன்று கேட்கவில்லையா நீங்க எங்க போனீங்கனு கேட்கறீங்களா? அன்று நான் பிஸி..!

--------

கோத்ரா சம்பவம்

சமூக வலைதளங்களான Facebook, Twitter போன்று google Buzz என்ற வலைதளத்திலும் இயங்கி வருகிறேன். அதில் திரு.கேசவன் பாஷ்யம் என்ற நண்பர் கோத்ரம் என்பது ரிஷி வழி வரும் வம்சாவழிகள் என கூறி இருந்தார். கோத்திரம் என்பதன் உட்கருத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கே கொடுக்கிறேன்.

உண்மையில் கோத்திரம் என்பது வம்சாவழி அல்ல. குலம் என்பதே வம்சாவழி. கோத்ரம் என்றால் யாரிடம் குருகுலம் கற்ற குடும்பத்தார் என்பதை காட்டும்.

மாதா, பிதா குரு தெய்வம் என்பது போல அபிவாத மந்திரம் சொல்லும் பொழுது மூன்றாவதாக கோத்திரம் சொல்லப்படும்.

ஒரே கோத்திரம் என்றால் ஒரே குருவின் கீழே ஸ்கூலில் படிப்பது போன்றது. முன்பு ஒருவருக்கு ஒருவர் கற்ற கல்வியை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அதனால் ஒரே குருவிடம் கற்றால் புதிய கருத்துக்கள் தெரிந்துகொள்ள முடியாது. (சந்ததியினர் தெரிந்து கொள்ள முடியாது).

அதனால் ஒரே கோத்திரம் தவிர்க்கப்பட்டு வந்தது.தற்சமயம் பிரிட்டீஷ் கல்வியும் முறையற்ற கல்வியும் படித்துவிட்டு கோத்திரம் சொல்லுவது மிகவும் வேடிக்கையானது.

--------
சிவலிங்கம்

சென்ற பழைய பஞ்சாங்கத்தில் நீங்கள் பார்த்த லிங்கம் சிங்கப்பூரில் பார்க் மற்றும் நடைபாதையில் வைக்கும் ஒரு தடுப்பு கல். சிங்கப்பூரை சேர்ந்த பழனி சரியாக பதில் சொல்லி இருந்தார். அவருக்கு என் பாராட்டுக்கள். அடுத்த முறை சிங்கை வரும் பொழுது பரிசு அளிக்கிறேன்.

சென்ற முறை சிங்கை சென்ற பொழுது, பார்க்க சிவலிங்கம் போல இருந்ததால் படம் எடுத்தேன். நமக்கு தான் எங்க போனாலும் அதுவே கண்ணுல தெரியுதே..!

Monday, July 4, 2011

பழைய பஞ்சாங்கம் 04/07/2011

பிரசாத ஸித்தி ரஸ்து..!

இறைவனுக்கு உணவை படைத்துவிட்டு சாப்பிடுவதால் ஆற்றலுடன் அவ்வுணவு நம்முள் எவ்வாறு இயங்கும் என்பதை செய்முறையுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

வகுப்புக்கு இடையே தனக்கு சந்தேகம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக சுப்பாண்டி கைகளை உயர்த்தினான். “சாமி எங்க குலதெய்வம் கருப்புராயன். வருடத்திற்கு ஒரு முறை குல தெய்வ வழிபாடு செய்வோம். அப்ப கிடா வெட்டி பொங்க வைப்போம். முன்னாடி நீங்க சொன்னதால நான் அசைவம் சாப்பிடாம இருந்தேன். இப்ப நீங்க சொல்றதை பார்த்தா சாமிக்கு படைச்சா அசைவமும் சாப்பிடலாம் போல இருக்கே” என்றான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி, கருப்புராயனுக்கு கிடா மட்டுமா படையல் செய்வாங்க ? பட்டை சாராயம் சுருட்டு இது எல்லாம் படையல் செய்வாங்க இல்லையா? கிடா மட்டும் பிரசாதம் கிடையாது. அதனால சாராயம் சுருட்டு இதையும் சாப்பிடுங்க. நீங்க மட்டும் பிரசாதம் எடுத்துக்காம உங்க மனைவி குழந்தைகளுக்கும் பிரசாதம் கொடுங்க. கருப்புராயனோட கிருபை முழுசா உங்களுக்கு கிடைக்கும். சரியா? கிடா சாப்பிட விரும்பம் இருந்தால் கருப்புராயன் மேல் பழி போடாமல் நீங்களே சாப்பிடுங்கள். சும்மா பிரசாதம் என்ற சால்ஜாப்பு வேண்டாம்” என்றேன்

சுப்பாண்டி இப்பொழுது குடியும் குடித்தனமுமாக இருப்பதாக கேள்வி..!
-----------------------
மூடர்களின் நம்பிக்கை

ஆட்சி மாற்றத்தால் பலருக்கு பல வகை பயம். எனக்கோ மூடநம்பிக்கையை பார்த்து பயம். நாத்திகம் பேசுபவர் இருக்கும் பொழுது ஆன்மீகம் தன் சுயத்தை இழக்காமல் மக்கள் அதை நோக்கி செலுத்தப்படுகிறார்கள். ஆனால் ஆத்திகம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கும் என எண்ணுகிறேன்.

ஏழு வருடங்கள் முன்பு பிரத்தியங்கரா தேவியை மிளகாய் வத்தல் கொண்டு பூஜை செய்தால் வெற்றி தேடி வரும் என நம் கலாச்சாரத்தில் இல்லாத மிளகாய் வத்தலை வைத்து பூஜை செய்தார்கள். இதை பார்த்து மக்களும் பல்வேறு இடங்களில் அப்பூஜையை செய்தார்கள். பிறகு பச்சை புடவை வாங்கி கொடுத்தால் தோஷம் விலகும் என்ற புரளி. தற்சமயம் ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டால் இழந்த தொழில் மீண்டும் பொலிவு பெறும் என ஒரு தோற்றம் இருக்கிறது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு நிலையில் மூடப்பழக்கம் தான் ஆட்சி செய்யும். நான் என்னைச் சொன்னேன்..! :))
-------------------
ஆ....ராசா.... புதையல்..!

தொலைக்காட்சியில் ஒருலட்சம் கோடி ரூபாய் கண்டெடுப்பு என்றதும் ஏதோ ராசா விஷயம் என நினைத்தால்...இது திருவனந்தபுரம் ராஜா விஷயம் என பிறகு தான் புரிந்தது. திரு அனந்த புரம் என்று ஆழைக்கப்படும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் நிலவரையில் ராஜா கால ஆபரணங்கள் மற்றும் கோவில் பொருட்கள் கண்டறியப்பட்டது. பல வருடங்களாக யாரும் கவனிக்கப்படாமல் தங்க ஆபரணங்களும், பாத்திரங்களும் கிடந்திருக்கிறது. இச்செய்தி எனக்கு வியப்பாக இல்லை. காரணம் ரூபாய் மதிப்புக்கு அப்பாற்பட்ட அற்புத புதையலாய் பத்மநாப சுவாமி அங்கே இருக்க அதன் அடியில் இருக்கும் சிறு தங்கங்ளை மக்கள் அளவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இரண்டு விஷயம். சுயநலமற்ற நிலையில் மன்னர்கள் கோவிலுக்கு எப்படி தானம் செய்தார்கள் என்பதும், நம் கோவில்கள் எத்தனை சிறப்பான நிலையில் இயங்கி வந்தது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். தன் கையில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் இறைவனுக்கு ராஜா கொடுத்தார் என்றால் செல்வத்தைவிட மிக உன்னதமானது ஒன்று அவருக்கு அங்கே கிடைத்திருக்க வேண்டுமல்லவா?

நாமும் அந்த தலைசிறந்த அற்புதத்தை தேடுவோம்.
----------------------
சிவ லிங்கம்

சிவ லிங்க தரிசனம் என்பது மிக உன்னதமானது என சைவ ஆகமங்கள் கூறுகின்றன. நான் சைவ சித்தாந்தி இல்லை என்றாலும் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது சிவலிங்க வடிவங்களை நான் கண்டு இன்புற்றதுண்டு. தக்‌ஷிண மேரு என்ற தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகமே லிங்க வடிவில் இருக்கிறது என முன்பு நான் எழுதி இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இவ்வாறு ஒரு இடத்தில் நான் கண்ட சிவலிங்கமே உங்களுக்காக கீழே படத்தில் கொடுத்துள்ளேன். இத்தலத்தை பற்றியும் இந்த சிவ லிங்கத்தின் பின்புலத்தையும் சரியாக கூறுபவர்களுக்கு எனது தினம் தினம் திருமந்திரம் புத்தகம் பரிசு..! முயற்சி செய்கிறீர்களா? விடை தனிப்பதிவாக...விரைவில் வரும்..

Thursday, March 24, 2011

பழைய பஞ்சாங்கம் 24-03-2011

குர்குரே சுப்பிணி

சுப்பாண்டி தன் மகன் சுப்பிணியுடன் வந்திருந்தான். அன்று உணவு பழக்கத்தை பற்றி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். உணவு நம் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது. உணவு நம் மனம் மற்றும் செயல்களுக்கு காரணமாகிறது என விளக்கிக் கொண்டிருந்தேன். வேதத்தில் உள்ள வாசகமான “எதை உண்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பதை உதாரணங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

பேச்சுக்கு நடுவே அழுகையுடன் கூடிய விசும்பல் சப்தம் கேட்டது. சுப்பாண்டியின் மடியில் உட்கார்ந்திருந்த சுப்பிணி அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என கேட்க, சுப்பிணியோ என்னை பார்த்து கேட்டான்....

“ஸ்வாமிஜீ நான் குர்குரே ஆயிருவேனா?”

------------

தோட்டகார சாமி

புகழ் பெற்ற டீவி நிலையத்திலிருந்து அழைத்து பேட்டி எடுக்க வருவதாக சொன்னார்கள். முன்பு வேறு ஒரு தொலைக்காட்சியில் சில வினாடிகள் வந்ததால் இவர்களும் தங்களின் தொலைகாட்சிக்கு என்னை அழைத்தார்கள் என நினைத்து சரி என்றேன்.

சொன்ன நேரத்தை விட சில மணி நேரம் ஆகியும் யாரும் வந்தபாடில்லை. இவர்களுக்காக காத்திருந்த நான் நேரத்தை விரயமாக்க விரும்பாமல் தோட்டத்தை ஒழுங்குபடுத்த துவங்கினேன். சிறிது நேரம் கழித்து இரு நபர்கள் வந்து “ஸ்வாமி இருக்காரா?” என்ற வழக்கமான நாத்திக கேள்வி கேட்டனர். “நாந்தேன்” என்றேன். கையில் துடைப்பத்துடன் நான் தோட்டத்தில் இருப்பதை கண்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கேமராவை வைத்து விட்டு வந்துவிட்டோம் இதோ வருகிறோம் என சென்றவர்கள் தான் இன்னும் வரவில்லை.

டீவி நிலையத்தில் எனக்கு தெரிந்தவர் தொலைபேசியில் இதன் காரணத்தை கூறினார். உங்கள் தோரணை சரியில்லை என வந்துவிட்டார்கள் என்றார். இவரின் காரணம் சரி என்றே பட்டது. தோட்ட வேலை செய்யும் சாமியை யார் விரும்புவார்கள்? இனி நானும் ஏஸி ரூமில் அமர்ந்து வருபவர்களுக்கு ஆசி வழங்கி என் தோரணையை மாற்றலாம் என இருக்கிறேன்...!
----------------
திருவண்ணாமலை பித்தர்

ஐந்து வருடத்திற்கு முன்பு திருவண்ணாமல் கிரிவலம் வரும் சமயம் அங்கே பைத்தியக்கார தோரணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். உடை எல்லாம் அழுக்கு, தலை முடி சடைசடையாக இருக்க குளித்தே பல நாள் ஆன தேகத்துடன் அமர்ந்திருந்தார். வாய் ஓயாமல் ஏதோ உளரிக்கொண்டே இருந்தார். நடு நடுவே பல வசுவுகள் என அவரின் உளரலே பயங்கரமாக இருந்தது. மக்கள் அவரை கடக்கும் பொழுது காசை அவர் முன் போட்டு விட்டு சென்றார்கள். அவர் காசை பற்றி கவலைப்படாமல் எங்கோ பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.

நான் இளைப்பாற அங்கே அமர்ந்திருந்தேன். “பிச்சக்காரப்பயலுக பிச்சக்கார பயலுக எனக்கு ஒரு ரூவா போட்டுட்டு போறானுங்க..இவனுகளே அரிசியை ஒரு ரூவாய்க்கு வாங்கி திங்கப்போறாங்க.. XXXXX” என பல வசவுகளுடன் கூறினார். அப்பொழுது புரியவில்லை. அப்புறம் புரிந்தது...!

இந்த முறை சென்ற பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா? குழந்தைகள் பருப்பு கடைஞ்சு விளையாடுறது போல கையில சைகை காட்டிட்டு... அஸ்கு புஸ்கு அஞ்சு வருசம் கழிச்சு தெரிஞ்சுக்க என்றார் :)

சித்தர்களோ பித்தர்களோ இவர்களை புரிஞ்சுக்கவே முடியல..!
----------------------

சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன்
----------------------------------------------------------

நேற்றும் இன்றும் நாளையும்
மாறும் இவ்வுலகம் இந்த ஷணத்தில் மட்டும்
உறைந்து விடுகிறது

Monday, January 17, 2011

பழைய பஞ்சாங்கம் 17-ஜனவரி-2011

உண்மையாகவே இது பழைய பஞ்சாங்கம் தான். காரணம் கடந்த மூன்று மாதமாக எழுதாமல் அனைத்தையும் சேர்த்து இன்று எழுத போகிறேன். உங்கள் நேரம் அப்படி..!

மீனாச்சிபுரம்

வாகனத்தில் அந்த ஊருக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் ஊர் வந்து விட்டதாக சொன்னார். எனக்கு வந்ததே கோபம்,

“டிரைவர் என்னய்யா என்னை பார்த்தா காதில கடுக்கன் போட்ட ஆளா தெரியுதா? ஒரு போஸ்டரும் இல்லை பேனரும் இல்லை, இங்க என்னை இறக்கிவிட்டு மதுரைய்னு ஏமாத்த பார்க்கிரையா?” என்றேன். “நாங்க எல்லாம் மாறிட்டோமப்பு” என்றார் டிரைவர்.

மதுரையில் ஜோதிட வகுப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் சென்றிருந்தேன். மதுரை மக்களுக்கு ஜோதிட ஆர்வம் அதிகம் என்பது அவரிகளின் தொலைபேசி விசாரிப்பு மூலம் தெரிந்தது. 30 நபர்களுக்கான வகுப்பில் முன்பதிவு செய்தவர்கள் எழுபது நபர்களுக்கும் அதிகம். பிறகு அதில் தேர்ந்தெடுத்து முப்பது நபர்களுக்கு அனுமதித்தோம். இது தவிர வகுப்பு அன்று முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பலர் என மதுரை அதகளமான வரவேற்பை ஜோதிடத்திற்கு அளித்தது.

மதுரை வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்

மதுரையில் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்கியமாக சீனா ஐயாவின் வரவேற்பும், தருமி ஐயாவுடனான கலந்துரையாடலும், ஸ்ரீயுடனான பேச்சும் மிக சுவாரசியம். என்ன பேசினோம் என தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குங்கள்.
-----

ஸ்ரீசக்ர புரி

புனித பயணமாக ஸ்ரீசக்ரபுரிக்கு சென்றோம். எளிய குழு மற்றும் ஆர்வமிகு மக்கள் என பயணம் மிக சுவாரசியமாக இருந்தது. ஆன்மீக ஆற்றல் மிக்க இடங்களையும், குகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். மூன்று நாள் பயணமாக சென்ற எங்களுக்கு நான்காம் நாளாக பருவத மலைக்கு செல்லும் ஆசி கிடைத்தது. மூன்று நாள் பயணத்தை நான்கு நாட்களாக்கி அற்புத மலையான பருவத மலைக்கு சென்றோம். அனைவரும் தரிசிக்க வேண்டிய இடம் பருவதமலை. பயப்படாதீர்கள் கண்டிப்பாக இது பற்றி தொடர் எழுத மாட்டேன் :)
ஸ்ரீசக்ரபுரி பயணத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர்
--------

சபரிமலை

சபரிமலை தொடர் பலரை சென்று அடைந்தது மகிழ்ச்சி. பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்னை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அரசியல் மற்றும் தொலைக்காட்சி துறையில் பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டது அதிச்சியான விஷயம் கூட. விஜய் தொலைகாட்சியில் கடுகளவு பேட்டி, சில பத்திரிகையில் அழைப்பு என சபரிமலை அதிர்வுகளை உண்டாக்கியது என்பதை உணர்ந்தேன்.

அதே போல சிலர் “ஸ்வாமி நீங்க ஓவரா கண்டிஷன் சொல்றீங்க. இந்த வழி பின்பற்றினால் தான் சபரிமலை போகனும்னா, ஒரு பயலும் போக முடியாது” என்றனர். நீங்கள் விண்வெளி வீரராக இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் செல்லுவதை போன்றது நியதியை கடைபிடிக்க முடியாமல் விரதம் இருப்பதும் என விளக்கினேன்.

இவர்கள் இப்படி செல்வதால் அங்கே விபத்துக்கள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 நபர்கள் சபரிமலை பயணத்தில் இறந்து விடுகிறார்கள் என அங்கே இருக்கும் மருத்துவ அதிகாரி கூறுகிறார். இந்தவருடம் கொஞ்சம் அதிகம். இவர்களை எல்லாம் ஐயப்பன் காப்பாற்றமாட்டாரா என நாத்திகம் கேட்கிறார்கள் சிலர். குடித்து விட்டு ப்ரேக் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீஸ் காப்பாற்ற மாட்டார்களா என்பதை போன்றதேஇக்கேள்வி...!

இங்கே துறவியாக ‘இறந்து’ உண்டால் அங்கே மீண்டும் இறக்க தேவையில்லையே..!

----------

புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு இலக்கியவாதியாக ஃபார்ம் ஆயிட்டாலே இது போன்ற நிகழ்வுக்கு செல்ல வேண்டி இருக்கிறது :). புத்தக கண்காட்சி பற்றி தனி பதிவே போடலாம். அங்கே நண்பர்களையும் பல பதிவர்களையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. பிரபல இலக்கிய செம்மல்களையும் சந்தித்தேன்.

அங்கே அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்ட வண்ணம் செல்லும் பொழுது மாணவர்களுக்கான அறிவியல் கருவிகள் விற்கும் கடையை கண்டேன். ஒரு திசைக்காட்டியை வாங்கினேன். என் அருகே இருந்த பதிவர், “சாமி இது எதுக்கு வாங்கறீங்க ?” என கேட்டார். “அப்பத்தானே கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு என கண்டுபிடிக்க முடியும்” என்றேன். அதுவரை என்னுடன் வந்தவர் அவசர வேலை என சென்றுவிட்டார். :)

கோவை திரும்பியதும் தான் நான் நன்றாக ஏமாற்றப்பட்டது தெரிந்தது. திசைக்காட்டியில் முள் வடக்கு திசையை மட்டுமே காட்டுகிறது, மற்ற ஏழு திசைக்கு முள் நகர்வதே இல்லை..!

Friday, October 1, 2010

பழைய பஞ்சாங்கம் 01-10-2010

ஐயோ-தீ....

என் தாத்தா அவரின் சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டார். அது மூழ்கிப்போனது. என் தாத்தாவுக்கு அவரின் சொத்தை தக்கவைத்துக்கொள்ளும் யோக்கியதை இல்லை. அந்த சொத்தை இன்னொருவர் அனுபவிப்பதை பார்த்த பேரனாகிய நான் வழக்கு தொடுத்தேன். நீதிபதிகள் என்னையும், சொத்துக்கு உரியவரையும் பங்கிட்டு அனுபவிக்க சொல்லி இருக்கிறார்கள்.

கதையின் நீதி : நீங்கள் கோழை தாத்தாவுக்கு பிறந்தாலும் தவறில்லை புத்திசாலி நீதிமான்களிடம் சரண் புகுங்கள்...! உருப்படுவீர்கள்..!

டெல்லியில் மீண்டும் கில்லி

மீண்டும் டெல்லி பயணம். இந்த முறை ஒரு விஷேஷம் காமன் வெல்த் கேம்ஸ். நித்தியமும் ஆனந்தமாக இல்லாததால் எனக்கு எதற்கு ‘காமன்’ வெல்த் என ஒதுங்கிவிட்டேன். ஆனால் நம் பாரத தேசத்து லட்சணத்தை படம் போட்டு காட்டி விட்டார்கள்.

பாலம், ஸ்டேடியம் என பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்து சுகாதார குறையுடன் காணப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் கடினமாக உழைத்து கட்டுமான பணிகளை எல்லாம் முடித்துவிட்டார்களாம். அருமையாக இருக்கு பாருங்கள் என படங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறார்கள். முடிவில் ஜெய் ஹிந்து என வாசகம் வேறு.

திருமணத்திற்கு ஒருவாரம் முன்னால் மணப்பெண் ரெண்டு நாள் காணாமல் போகிறாள். மீண்டும் வந்து சும்மா கொஞ்சம் போயிட்டு வந்தேன். இப்ப கல்யாணம் அரேஞ்சுமெண்ட் எல்லாம் பக்காவா போகுது வாங்க கல்யாணம் கட்டிக்கலாம் என்றால் அப்பெண்ணை போற்றி புகழ்ந்துவிட்டு கல்யாணம் செய்வீர்களா என கேட்க தோன்றியது. நாம எங்க நினைச்சதை எல்லாம் கேட்டுருக்கோம்?

டிவிட்டர் இஸ் பெட்டர்

டிவிட்டரில் நான் உளருவதை எல்லாம் பெரிசாக பலர் படிக்கிறார்கள் என பின்பு தான் தெரியவந்தது. இங்கே ஆன்மீகம் மட்டும் பேசும் நான் டிவிட்டரில் அரசியல் சார்ந்த கருத்துக்களை சில நேரம் வெளியிடுகிறேன். அது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்திருக்கிறதாம் நண்பர்கள் சொன்னார்கள். இப்படியே போனால் நான் இலக்கியவாதி ஆயிடுவேனோனு பயமா இருக்கு :)

அந்த டிவிட் என்ன என கேட்கிறீர்களா? நமக்கு ஏதுக்குங்க அரசியல்...

தாய் மரம்

ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் தாய் மரம் சேவை மிகவும் உன்னதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இச்சேவைக்காக இடமும், நன்கொடையும் கொடுத்து உதவிய உள்ளங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

தாய்மரம் பற்றிய விரிவான கட்டுரை விரைவில் எழுதுகிறேன். இந்த எளியோனுடன் நீங்கள் காட்டும் அன்பு கலங்க வைக்கிறது. உங்களின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும் என வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
----------------------------------------------
கட(வுள்)ல்

சிலர் கடற்கரையில் நின்று ரசிக்கிறார்கள்
சிலர் மீன் பிடிக்க செல்லுகிறார்கள்.
சிலர் மீன் பிடிக்க பிற எல்லை பக்கம் சென்று மாண்டு போகிறார்கள்.
சிலர் மூழ்கி முத்தெடுக்கிறார்கள்.
சிலர் கப்பில் சொகுசு பயணம் போகிறார்கள்.
சிலர் கடலை கண்டதே இல்லை, அதனால் கடலே இல்லை என்கிறனர்.
சிலர் பாத்திரத்தில் கடல் நீரை பிடித்து வைத்து இதுவே கடல் என்கிறார்கள்.
சிலர் கடல் நீரை குடிநீர் ஆக்குகிறேன் என புறப்படுகிறார்கள்.
ஆனாலும் இங்கே கடலை முழுமையாக உணர்ந்தவரில்லை....!

Wednesday, July 28, 2010

பழைய பஞ்சாங்கம் 28-ஜூலை - 2010

சன்யாசியானவர்

எனது நீண்ட நாள் மாணவர் ஒருவர் மிக சோகத்துடன் வந்து, “சாமி எனக்கு சன்யாசம் ஆயிடுச்சு” என்றார். தற்கால நவீன ஆஸரமங்களில் தான் ரூபாய்க்கு இரண்டு சன்யாசம் தருகிறார்களே அப்படி ஏதும் வாங்கிவிட்டாரோ என புரியாமல் விழித்தேன்.

அவரே தொடர்ந்தார், “ என் பையன், என் பேச்சை மீறி வேறு ஜாதி பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டான். என் சன்-நாசம் ஆயிடுச்சு சாமி..!” என்றார். புத்தர சோகத்திலும் அவரின் குறும்பு மட்டும் குறையவில்லை.
--------------------------------------
படிக்காதவள்...!

தன் மகள் கல்லூரியில் படிப்பதில்லை நீங்க தான் அவளுக்கு அறிவுரை சொல்லி படிக்கவைக்கனும் என ஒரு நடுத்தர வயது தந்தை என்னிடம் வந்தார். ஐயா நானோ அஞ்சாப்பு ஆ பிரிவு கூட தாண்டாதவன் நான் எப்படி அறிவுரை சொல்ல என கேட்டேன். அறிவுரை சொல்லுவது என்பதே எனக்கு பிடிக்காது, இதில் நான் கடைபிடிக்காத விஷயத்தை பற்றி வேறு அறிவுரையா என தவிர்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை

தன் மகளை அழைத்து வந்தார். வந்ததிலிருந்து அந்த பெண் தன் கையில் இருந்த செல்போனை விரலால் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார். அவ்வளவு அழுக்காகும் அளவுக்கு அந்த பெண்ணின் செல் போனில் அழுக்கு இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். அது ஐ-போன்..!

இனி வரும் பரிணாமத்தில் மனிதனின் ஆள்காட்டி விரல் தட்டையாகவும் விரல் ரேகை இன்றியும் பிறப்பார்கள் என நினைக்கிறேன். முடிவில் அந்த பெண் படித்தாளா என கேட்கிறீர்களா? அவர் தந்தையிடம் ஐ-போனில் பாடங்களை இணைக்கும் படி கூறினேன்.

-----------------------------------------

உயிர் போகும் ‘மணி’தர்கள்

சென்னையில் ஒரு நண்பரை தொடர்பு கொள்ள அவரின் கைபேசிக்கு அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்... திடீரென “உயிரே போகுதே உயிரே போகுதே” என சப்தம் வரவே...தொடர்பை துண்டித்து 108க்கு தொடர்பு கொண்டு அவரை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்கு முன் அவரே என்னை அழைத்து சாவகாசமாக, “என்ன சாமி மிஸ்டு கால் குடுக்கறீங்க” என்றார். விசாரித்ததில் அது ரிங்டோனாம். என் உயிர் சில வினாடிகளில் போயிவந்தது தான் மிச்சம்..! நல்லாவைக்கறாங்கப்பா ரிங் டோனை...

-------------------------------------------
பதில் சொல்ல முடியாத கேள்வி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ராண வித்யா பயிற்சிகள் மிகச்சிறப்பாக அமைந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களின் ஈடுபாடும் வளர்ச்சியான பாதையில் இருந்தது. அதில் அனேகர் இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் என்பது தெரிந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியவில்லை. அந்த கேள்வி கட்டுரையின் கடைசியில்....

ப்ராண வித்யா மூலம் ஏராளமான ஹீலர்களை உருவாக்கி அவர்கள் மூலம் ஓர் விழிப்புணர்வு சமுதாயத்தை காணும் நோக்கம் என்னுள் உண்டு. அதை படிப்படியாக அறக்கட்டளை நோக்கில் செயல்படுத்தும் எண்ணம் உண்டு. உங்களில் பலரும் என்னுடன் கைக்கோர்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.
--------------------------------------------
கோவிந்தா....கோ....விந்தா..

வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சனி அன்று கோவையில் இருக்கும் ஒரு மலைக்கோவிலுக்கு செல்லும் திட்டம் உண்டு. விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். பால மலை ரங்க நாதர் கோவில் என்ற மலைக்கோவில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு அருகே உண்டு. எதில் இருக்கும் மலைப்பாதை எல்லோரும் ஏறி வருவதற்கு வசதியான அமைப்பில் இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஆன்மீக வளர்ச்சியும் பெற எவ்வயதினரும் கலந்து கொள்ளலாம். காலை 6 மணிக்கு ஆர்.எஸ் புரத்தில் இருந்து மலை புறத்திற்கு பயணம் துவங்கும்.

இதில் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் ஒரு கண்டீஷன் மட்டும் உண்டு..!

1) சரியான நேரத்திற்கு வர வேண்டும்...(இது உங்களுக்கு நல்லது)
2)சிறிய அளவு உணவு பதார்த்தங்களை கொண்டு வர வேண்டும்.(இது எனக்கு நல்லது).

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
---------------------------------------------------
அந்த பதில் சொல்ல முடியாத கேள்வி

சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?

Tuesday, May 25, 2010

பழைய பஞ்சாங்கம் 25 - மே - 2010

வெள்ளிங்கிரி பயணம்

வெள்ளிங்கிரி என கூறப்படும் தென்கைலாய மலைக்கு பயணம் சென்றேன். வருடா வருடம் செல்லும் இடம் தான் என்றாலும் இந்த முறை பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல உடல் சற்று திடமாக இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இருதய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதன் மூலம் பயணத்தின் சிக்கலை உணர்ந்து கொள்ளலாம்.

1800 மீட்டர் உயரத்தில் மலையின் உச்சியில் ஒரு குகை உண்டு. அங்கே சுயம்புவாக தோன்றிய பஞ்ச லிங்கங்கள் உண்டு. இந்த வருடம் செல்லும் பொழுது புதிய சில குகைகளை கண்டேன். அங்கும் பரவசமான உணர்வுகள்.

என்னுடன் மலை ஏற ஒரு வலைப் பதிவரும் வந்திருந்தார். கட்டதுரை மாதிரி ஏறிய அவர் இறங்கும் பொழுது கைப்புள்ள போல நடந்து வந்தார் என்பது சிறப்பு செய்தி...!

-------------
மஹா பெரியவர்

காஞ்சி பரமாச்சாரியார் அவர்களை பலருக்கும் தெரியும். ஆன்மீகம், சமூகம் மற்றும் மொழியியல் ஆழ்ந்த அனுபவம் பெற்று சதமடித்து சமாதியானவர். ஒரு முறை வெளி ஊரில் பயணம் மேற்கொண்டிருந்த சமயம் ஒரு இடத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் தங்கி இருந்தார்.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு தன்னை துயில் எழுப்புமாறு ஆசிரம சேவகர் ஒருவரிடம் கூறினார். கடிகாரம் பரவலாக புழக்கத்தில் இல்லாத காலம் அது. முதல் நாள் காலை சரியாக எழுப்பிய சேவகர் அடுத்தநாள் வேலை பழுவால் தூங்கிவிட்டார். அதனால் மஹாபெரியவர் தாமதமாக எழ வேண்டி அமைந்தது.

மறு நாளில் காலை 4.20 க்கு மஹாபெரியவரே அறையிலிருந்து வெளியே வந்து சேவகரை எழுப்பினார். இந்த செய்கை அடுத்த சில நாட்களும் தொடர்ந்து. எப்படி இவர் கடிகாரமும் அலாரமும் இல்லாமல் சரியாக எழுந்திருக்கிறார் என சேவகருக்கோ ஒரே ஆச்சரியம். தனது வியப்பை பற்றி பெரியவரிடம் கேட்டார்.

மஹாபெரியவர் கூறினார் “4.20க்கு ஒரு ரயில் நாம் தங்கி இருக்கும் இடத்தை கடந்து செல்லுகிறது. அதை ஒரு நாள் கவனித்தேன். ரயில் சப்தம் கேட்டவுடன் எழுந்துவிடுவேன். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை” என்றார்.

தற்சமயம் வெளிவரும் சில ஆன்மீக பத்திரிகைகள் இவரை சுற்றி சில அதிசய பிம்பங்களை கொண்ட கதைகளை ஏற்படுத்துகிறது. விளம்பரங்களை தவிர்த்து மிகவும் எளிமையாக வாழ்ந்த ஒரு மஹானை பற்றி தவறான தகவல் எதிர்கால தலைமுறைக்கு செல்லுகிறது. அவரின் ஆன்மீக பெயர் மறந்து அனைவரும் மஹாபெரியவர் என அழைக்கிறார்கள் என்பதை விட அதிசயம் தேவையா?
----------

சென்னையில் திருமந்திரம்

பல அன்பர்கள் சென்னையில் திருமந்திர புத்தகம் எங்கே கிடைக்கும் என கேட்டு மின்னஞ்சல் செய்கிறார்கள். நம் பதிவுலக நண்பர்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.

புத்தக நிலையத்தின் முகவரி கீழே :

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கேகே.நகர் சென்னை 78.
தொலைபேசி : 9940446650

இப்பணிக்கு உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

----------------

ஜென் கவிதை

இதுவமது
--------------

பூவின் நடுவில்
மகரந்தம்

மகரந்தத்தின் உள்ளே
பூக்கள்

Tuesday, April 27, 2010

பழைய பஞ்சாங்கம் 27- ஏப்ரல் -2010

ரைட்டர்ஸ் ப்ளாக்

ஒரு வலையுலக நண்பர் என்னை சந்திக்க வந்தார். சிங்கை சென்று வந்ததிலிருந்து நீங்க அதிகமா எழுதறது இல்லையே என்றார். ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று, ”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.

என் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு?” என்றான். இந்த ரைட்டரே ப்ளாக்கு தான்யா என சொல்ல நினைத்தேன்... :)

ஒத்துக்க மாட்டீங்களே... சரி விடுங்க...

----------------------------

சொகுசு சாமி

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். இணையம் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்துவிட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்த்தேன். சென்னை பதிவர் ஒருவர் நான் இரவு நேரத்தில் ஆன் லைனில் இருப்பதை பார்த்து விசாரித்தார். வகுப்புகள் இப்பொழுது தான் முடிவடைந்தது என்றேன்.

“என்ன சாமி நீங்க விவரம் தெரியாதவரா இருக்கீங்க, மிச்சவங்க மாதிரி சொகுசா இருக்கிறதை விட்டுட்டு இப்படி கஷ்டப்படறீங்களே... ” என்றார்.

அவரிடம் சொன்னேன், “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு? என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா?” என்றேன்.

அவர் நினைத்திருப்பார், “இது கிட்ட வந்து ராத்திரி வாயக்கொடுத்தோமே”

----------------------

அமானுஷம் அதிசயம்

தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றி ஏதாவது தொடர் வந்தாலும், அமானுஷம் என அடித்தொண்டையில் அலறும் நிகழ்ச்சிகள் வந்தாலும் விடாமல் பார்க்கும் மாணவர் ஒருவர் இருக்கிறார்.

இவற்றை பார்ப்பதுடன் நிறுத்தாமல் என்னை சந்திக்கும் பொழுது அதை பற்றி கூறி சோதிப்பார். அவர் கூறுவதை எல்லாம் இவ்வளவு காலம் பொறுமையாக கேட்ட நான் கொதித்தெழுந்தேன்.

அவரிடம் கூறினேன். மனித உடலை விட அமானுஷமானது எதுவும் இல்லை. இருக்கும் பொழுது லேசாக இருக்கும் உடல், இறந்த பிறகு நான்கு பேருக்கு மேல் தூக்கும் அளவுக்கு பளுவாக தெரிகிறதே... அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார்? அமானுஷமாக இல்லையா? என்றேன்.

என்னை அமானுஷமாக பார்த்துவிட்டு சென்றார் :)

----------------------
த்யானம் செய்தால் என்ன கிடைக்கும்..?

சில மாதம் வெளியூர் பயணத்தால் இணைய உலக நண்பர்களின் எழுத்தை படிக்க முடியாமல் பல நல்ல விஷயங்கள் விடுபட்டு போனது. பல எதிர்வினைகளும் மிச்சம் :)

துக்ளக் மகேஷ் எனும் நம் வலையுலக நண்பர் எழுதிய இந்த கட்டுரை அனைவரும் படித்து ரசிக்க வேண்டியது. அந்த பதிவில் அப்துல்லாவின் குசும்பும் ரசித்தேன்.

இங்கே க்ளிக் செய்யவும் : த்யானமும் வியாக்யானமும்

என் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)

------------------------

விரைவில் தொடர் ஆரம்பம்

எத்தனையோ விஷயங்கள் எழுதும் எண்ணம் இருந்தும் பணியின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தொடர் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். பலூன்காரனிடம் இருக்கும் அத்தனை பலூனையும் பார்த்த குழந்தை போல ஏகப்பட்ட தலைப்புகள் என் முன்னே இருக்கிறது. (க்ஹூம்..) எதை எழுத என புரியவில்லை.

சில தலைப்புகள் தருகிறேன். அனேகர் கூறும் தலைப்பை எழுதுகிறேன்.
கள்ள ஓட்டுக்கள் வரவேற்கப்படுகிறது... :)

  • பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?

  • மஹா கும்பமேளா என்பது என்ன?

  • தியானமும் ஞானமும்

  • வேதகால மருத்துவம்

  • கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கூறவும்...
-------------------