இளங்குளிருடன் பெர்லின் நகர காலை விடிந்தது. நான் தங்கி இருந்த அறையின் ஜன்னல் திரையை திறந்து காலை நேரத்தை ரசிக்க துவங்கிய எனக்கு அதிர்ச்சி. என் அறையிலிருந்து பார்க்கும் தூரத்தில் ஒரு ராஜ கோபுரம் கம்பீரமாக தெரிந்தது. இது பெர்லினா அல்லது கும்பகோணமா என ஒரு முறை என்னை சரி பார்த்துக் கொண்டேன்.
ஐரோப்பிய வரலாற்றில் ஜெர்மனியின் பங்கு மிக அதிகம். உலக அரசியல் மாற்றத்திற்கும் ஜெர்மனியர்கள் பல்வேறு வினைகளை செய்து இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக கிருஸ்துவ மத பிடியில் இயங்கி வந்த ஜெர்மனி உலகப்போர் சமயத்தில் விடுபட்டு இப்பொழுது பின்புலத்தில் மட்டும் மத அரசியலை வைத்துக்கொண்டு இருக்கிறது. புரட்டஸ்டண்ட் கிருஸ்துவம் தோன்றியது இங்கே என்பதால் பெரும்பான்மையானவர்கள் இந்த பிரிவில் இருக்கிறார்கள். உலகப்போருக்கு பின்பும், 1960க்கு பிறகும் பலர் எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் சுப்பாண்டியின் பாணியில் சொல்வதேன்றால் ‘விலையில்லா யோசிப்பவர்களாக’ (Free Thinker) இருக்கிறார்கள்.
யூத கோவில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் என பல மதவழிபாட்டுக்கூடங்கள் இருந்தாலும் இன்று வரை நம் கலாச்சாரத்தின் அடிப்படையில் கோவில்கள் இல்லை. அதற்கும் இந்தியர்கள், இந்துக்கள் குறைவு என சொல்லிவிட முடியாது. தனியாக பல இந்து ஆசிரமங்கள் வழிபாட்டுக்கூடங்களை வைத்துள்ளன. அவைகளை ஆகம சாஸ்திர கோவில்கள் என கூற முடியாது. இலங்கை தமிழர்களால் சில தனிக்கோவில்கள் உள்ளன. தனியாரால் கட்டப்பட்டு நம் ஆட்களால் வணங்கப்படும் முருகன் கோவில் ஜெர்மனியில் உண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் ஜெர்மனிய அரசு எந்த உதவியும் செய்தது இல்லை. வழிபடவும், வழிபாட்டு மையம் துவங்கவும் ஜெர்மன் அரசு அனுமதி மட்டும் அளித்துள்ளது.
சில வருடங்கள் முன்னால் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்தது. வேறு என்ன எல்லாம் தேர்தல் கால அறிவிப்புதான். ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் ஒரு பூங்காவின் அருகே இடம் ஒதுக்கினார்கள். இலங்கை தமிழர்கள் அதிகம் கொண்ட பகுதி என்பதால் அவர்களின் ஆதரவுடன் ஓர் சங்கம் உருவாக்கி தமிழ் கலாச்சார அடிப்படையில் கோவில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்லின் நகரின் மிக அதிக மக்கள் கூடும் இடத்தில் கோவில் அமைவது மகிழ்ச்சியை அளித்தது.
யானை முகன் விநாயகருக்கு திருக்கோவில், ராஜ கோபுரத்துடன் மிக அற்புதமாக உருவாகி வருகிறது. மாமல்லபுரத்திலிருந்து ஸ்தபதி குழு பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்தேன். விரைவில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிந்து மகிழ்ந்தேன்..
இனி வரும் நாட்களில் ஜெர்மனியில் காலை நேரத்தில் ஸ்பீக்கர் அலறலுடன்...விநாயகனே வினை தீர்ப்பவனே...என சீர்காழி கோவிந்தராஜன் பாடுவார்...