Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Featured Posts

Friday, November 22, 2024

மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு

 

மஹா கும்பமேளாவிற்கு வருகை தருவதற்கு பலர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். முன்பு முன்பதிவு செய்த ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பமேளா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் திருயாத்திரை குழுவினர் முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். 

மஹா கும்பமேளா யாத்திரைக்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல் புத்தகத்தை படித்து உங்களின் விருப்பமான நாட்களை தேர்வு செய்யவும். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடக்க உள்ளதால் அதன்படி உங்களின் பயணத்தை தேர்வு செய்யவும். 

மேலும் தகவல் வேண்டும் என்றால் கையேட்டில் கொடுக்கப்பட்ட 

தத்த நாத் 98401 87486 | தாரா நாத் 98407 48890 ஆகியோரை தொடர்புகொள்ளவும்.


கும்பமேளா 2025 கையேடு 

 மஹா கும்பமேளா உங்களை ஆன்மீகத்துடன் வரவேற்கிறது.

Thursday, October 31, 2024

மஹா கும்பமேளா 2025 - வருக வருக என வரவேற்கிறோம்

ஆன்மீகப் பெருநிகழ்வான மஹா கும்பமேளாவிற்கு அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம். பல பகுதிகளாக கும்பமேளா என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தைப்  பற்றித் தெரிந்துகொண்டோம். 

ஆதிநாதரின் அருளுடன் கும்பமேளாவில் உங்களை இணைத்துக்கொண்டு வாழ்வின் பெரும் உன்னதமான அனுபவங்களைப் பெறுவதற்கு தயாராகி விட்டீர்களா?

நடக்க உள்ள மஹா கும்பமேளாவைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். 

உத்ராயண கால ஆரம்பம் என்று கூறப்படும் ஜனவரி 13ஆம் தேதி 2025ஆம் ஆண்டில் மஹா கும்பமேளா தொடங்குகிறது. 26 பிப்ரவரி 2025ல் நிறைவு பெறுகிறது. 

மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இவற்றில் முக்கியமான புனித ஸ்நான நாட்கள் எது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மஹா கும்பமேளா காலகட்டத்தில் வரும் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியமான ஸ்நான நாட்களாகும். இது தவிர பஞ்சமி, சப்தமி, ஏகாதசி ஆகிய நாட்கள் மிக முக்கியமானவை.

ஜனவரி 13 - தை பெளர்ணமி

ஜனவரி 14 - மகர சங்கராந்தி - தை 1 

ஜனவரி 29 - அமாவாசை (தை அமாவாசை)

பிப்ரவரி 3 - வசந்த பஞ்சமி

பிப்ரவரி 4 - சப்தமி

பிப்ரவரி 12 - மாசி பெளர்ணமி

புனித ஸ்நான நாட்கள் எப்பொழுதும் கூட்டம் மிகுந்த நாட்கள். 2013ஆம் ஆண்டு அமாவாசை ஸ்நானத்திற்கு ஆறு கோடி மக்கள் ஒரே நேரத்தில் குழுமி இருந்தார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. புனித ஸ்நான காலத்தையும் பிற நாட்களையும் நமது வசதிக்கு ஏற்பத் திட்டமிடுவது நல்லது.

கும்பமேளா காலத்தில் கங்கை-யமுனை -சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் சங்கமத்தில் கூடாரம் அமைத்து அனைவரும் தங்குவார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் என்பதால் நதிகளில் நீர் ஓட்டம் குறைவாக இருக்கும். நீர் குறைந்த ஆற்று மணலில் தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கும் வசதிகள் செய்யப்படும்.

இந்திய ராணுவத்தின் உதவியுடன் தற்காலிக சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்படும். இத்தகைய தற்காலிக வசதிகள் குறைந்த பட்சம் பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செய்யப்படும். தற்சமயம் உத்தரபிரதேச அரசு பல்வேறு நவீன வசதிகளைச் செய்துவருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அர்த்த கும்பமேளாவில் அதிநவீன கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதனால் 2025 மஹா கும்பமேளாவிலும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ப்ரணவ பீடம், வரும் மஹா கும்பமேளா நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கிறது. 

புறச்சூழலில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் அக உலகில் ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தும் நோக்கிலும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மஹா கும்பமேளா பயணத்தை ஒருங்கிணைக்க இருக்கிறது. முக்கிய ஸ்நான தினங்களில் சிறப்பாக நீராட வழிகாட்டுகிறது. மேலும் ஜபம், தியானம் மற்றும் ஆன்மீக வாழ்வியல் முறையில் தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற பூர்ண கும்பமேளாவிலும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவிலும் சிறப்பாக ஒருங்கிணைத்த அனுபவம் கொண்ட ப்ரணவ பீடம் 2025ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்களில் தயாராக உள்ளது.

மஹா கும்பமேளாவில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் கூடாரத்தில் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். யாகங்கள், பஜன், தியானம் மற்றும் சத்சங்கம் ஆகியவை நடைபெறும். அந்த சூழலில் ஸ்வாமி ஓம்கார் அவர்களுடன் கலந்து கொண்டு நீங்கள் நாத பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ள ஆன்மீக வாழ்வியல் முறையை உணரலாம். 

மஹா வித்யா என்கிற பத்து சக்திகளின் உபாசனையை ஆன்மீக உச்சம் கொண்ட சூழலில் தீக்‌ஷையாக பெறலாம். ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் மந்திர தீக்‌ஷை பெற்று உயர் ஆற்றல் கொண்ட மஹா கும்பமேளாவில் இருந்து தங்களது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கலாம். 

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு தீக்‌ஷைகள் மற்றும் ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறையாற்றலை உணரும் நோக்கில் மஹா கும்பமேளா 2025 செயல்பட இருக்கிறது.

ஆன்மீக குருவின் அனுக்கம், மஹா கும்பமேளா சூழல் போன்ற பல்வேறு விஷயங்கள் மீண்டும் இது போன்று  நடக்க வாய்ப்பு உண்டா? இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். 

மஹா கும்பமேளாவில் என்ன வசதிகள் உண்டு?

அந்தச் சூழலில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் தங்கி மஹா கும்பமேளாவை உணரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அடிப்படை தங்கும் வசதிகள், உணவு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கான சூழல் அமைக்கப்பட உள்ளது. எளிமையான கட்டணத்தில் தங்கும் வசதிகளும் உணவும் அளிக்கப்படுகிறது. 

ஆயிரக்காணக்கான ஆன்மீக நபர்கள் கூடும் இடம் என்பதால் அங்கே பல தர்ம காரியங்கள் செய்வதற்கும் அன்னதானம் செய்வதற்கும் நமது ஆன்மீகக் குழு தயராக உள்ளன.

நீங்களும் நம்மில் ஒருவராக இணைந்து தன்னார்வத் தொண்டு செய்யலாம். 

மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

முன்பதிவு செய்து தேர்ந்து எடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ப்ரணவ பீடம் ஒருங்கிணைக்கும் சூழலில் செயல்பட முடியும். இத்தகைய ஏற்பாடுகள் அதிக கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும் சுற்றுலா நோக்கில் வருபவர்களுக்கான இடம் இது அல்ல என்பதாலும் அவசியமாகிறது. 

கீழ்கண்ட கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நவம்பர் மாத இறுதிக்குள் உங்களுக்கு தனித்தகவலில் நீங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களா என்பதை தெரியப்படுத்துவோம்.

விண்ணப்ப படிவம் - https://forms.gle/enjC2KPQTXpgvp1h6

மேலும் 2025 மஹா கும்பமேளாவில் இணைவது தொடர்பான கேள்விகள் உங்களுக்கு இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கத் தயாராக உள்ளோம். கும்பமேளாவில் பங்கு பெறுவது பற்றிய தொலைபேசி தொடர்புக்கு

9944 1 333 55, 98401 87486 , 94435 38751, 98408 00704

ஆதி நாதரின் அருள் கடலில் சிறு மீனாக நீந்திக் களிக்க அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.


Tuesday, July 30, 2024

கும்பமேளா 2025

சரஸ்வதி நதியின் கலாச்சாரத்தில் இயல்பான மனிதர்களைவிட உயர் சக்தி கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றில் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இருந்தது. அவர்களிக்கு மெய்ஞானம் சார்ந்த அறிவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஆதிநாத் என்பதே பதிலாக இருக்கும்.

உலகம் உருபெற்ற காலம் தொட்டு மனித இனத்தின் மேம்பட்ட பரிமாணத்திற்காக இறையாற்றல் உருபெற்று வந்து வழி நடத்துகிறது. அடிப்படை மனித நிலையில் இருந்து உயர்மனித நிலைக்கு முன்னேற்றம் செய்ய குருவாக இருந்து பல்வேறு தூண்டுதல்களை செய்கிறது.

வேத காலத்தில் சரஸ்வதி நதியின் கரையில் வாழ்ந்து வந்தவர்களை ஆன்மீகத்தில் செலுத்தி மனித நிலையிலிருந்து உயர் மனித நிலைக்கு உயர்த்தினார் ஆதிநாத்.

இவர் யார் இவரின் பின்புலம் என்ன என்பது தெரியாது. முதலில் தோன்றியவர் என்பதால் ஆதிநாத் என அழைக்கப்பட்டார். இவருடன் இருந்த பிரதான சீடராக இருந்தவர் உமாநாத். எப்பொழுதும் உடன் இருப்பவர் என்பதால் உமா என அழைக்கப்பட்டார். இருவரும் இணைந்து பலர் ஆன்மீக விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தனர்.

இருவரும் உருவாக்கிய பாரம்பரியம் நாத பாரம்பரியம் எனப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றிணைந்து இவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக உயர்நிலையை அடைந்தார்கள். சன்யாசிகள், துறவிகள் என்ற கருத்தியல்கள் அப்பொழுது இல்லை. குடும்ப அங்கத்தினர்கள் என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

குழந்தை முதல் முதியவர் வரை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஆன்மீக நிலையில் இருந்தனர். விழிப்புணர்வுடன் வாழ்ந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையான விழிப்புணர்வுடனேயே பிறந்தன. சிறப்பான குடும்பங்கள் ஒன்றிணைந்து வேதகால வாழ்க்கையை வாழ்ந்தனர். குல வாழ்வியல் முறை என இதற்கு பெயர்.

உமாநாத் வழிகாட்டுதலில் ஒளி பொருந்திய பரிமாணத்திற்கு பலர் சென்றார்கள். உலகில் வாழ்ந்தாலும் உடல் கடந்து ஆற்றல் நிலையில் வாழும் பரிமாணத்தை பலருக்கு உமாநாத் அளித்தார்.

குலாதிபதி என குலத்திற்கு அதிபதியான ஆதிநாத் வேத அறிவை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய பைரவ நிலையை பெற்று உமாநாதரை பைரவியாக்கி அனைவரையும் உச்சம் பெற்ற விழிப்புணர்வில் வைத்திருந்தார்கள்.

மனித குலம் ஆணவத்தால் உரைந்து போகும் தருணத்தில் அவர்கள் உண்மையை உணரச்செய்ய ஓவ்வொரு காலத்திலும் ஆதிநாத் மனித உருவில் வருகிறார். உமாநாத் உடன் இருக்கிறார் என்பது நாத பாரம்பரியத்தின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப ஆதிநாத் என்ற அடையாளமும் பெயரும் மாறுமே தவிர அவரின் இறை நோக்கம் மாற்றம் அடையாது.

இமய மலையில் துவங்கி தற்காலத்தில் இமாச்சல பிரதேசம் என அழைக்கப்படும் இடத்தில் அதிகரித்து, ராஜஸ்தானின் கிழக்கில் பிரவாகமாகி விரிவடைந்து குஜராத்தில் கடலில் கலந்தது சரஸ்வதி நதி.

குல மார்க்கம் என்ற தன்மையில் அனைவரும் சரஸ்வதி நதி நாகரீகத்தில் இணைந்து செயல்பட்டு சரஸ்வதி நதியை ஆன்மீக கருவியாக்கினார்கள். ஆன்மீக உச்ச நிலையில் அங்கே வாழ்ந்த அனைவரும் வேறு ஒரு பரிமாணத்திற்கு பைரவி தன்மையில் இருந்த உமாநாத் மூலம் மாற்றம் அடையும் தருணம் ஏற்பட்டது.

அப்பொழுது சரஸ்வதி நதி நாகரீகத்தில் வசித்த அனைவரும் உயர் பரிமாணத்திற்கு மாறும் பொழுது சரஸ்வதி நதியும் அந்த பரிமாணத்திற்கு சென்றது. நமது உலகில் இருந்து சரஸ்வதி நதி காணாமல் போனது. அதன் அருகே இருந்த சரஸ்வதி நதி நாகரீகத்தின் எஞ்சிய தன்மைகள் இடப்பெயர்ச்சி அடைந்து காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்ட்ரம் வரை விரிவடைந்து கன்யாகுமாரி வரை புகழ் பெற்றது. அத்தகைய நாகரீகம் நாத பாரம்பரியம் என அழைக்கப்பட்டது.

உலக கால சக்கரத்திற்கும் உயர் பரிமாண சக்கரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய வேண்டும்.  பைரவர் மற்றும் பைரவி இருக்கும் உயர் பரிமாணத்தில் ஒரு நாள் என்பது உலகில் நமக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு சமம் என கணக்கிடலாம்.



ஆதிநாதரும் உமாநாதரும் தங்களின் இருப்பை தினமும் நமக்கு உணர்த்தினாலும் நம்மால் அதை பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணர முடியும். அத்தகைய காலத்தையே மஹா கும்பமேளா என்கிறோம்.

மஹா கும்பமேளா நடக்கும் தருணத்தில் உயர் பரிமாண நிலையில் இருந்து சரஸ்வதி நதி நமது பரிமாணத்தில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரீகத்தை பிரதிபலிக்கும் குல வாழ்வியல் முறை மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை மஹா கும்பமேளாவில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி அப்பரிமாணத்தின் ஆன்மீக ஊற்றாக பெருகி நம் பரிமாணத்தில் நீராக காட்சி அளிக்கிறது. குரு, ஆன்மீக சதனா, சாஸ்திரங்கள் என பல மெய்யறிவை நதியாக கும்பமேளாவில் பெருகச்செய்கிறது.

ஆதிநாதரும் உமா நாதரும் தங்களின் ஆன்மீக ஆற்றல் வடிவமாக ஒவ்வொரு நாளும் இணைகிறார்கள். நமக்கு மஹா கும்பமேளா பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. உயர் பரிமாணத்தில் தினமும் நடக்கும் நிகழ்வாக மஹா கும்பமேளா இருக்கிறது.

ஆதிநாதரின் பரிமாணத்தில் தினமும் அதிகாலை நடைபெறும் முதல் நிகழ்வு மஹா கும்பமேளாவாகும். அப்பரிமாணத்தின் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வே பிற கும்பமேளாவாகும்.

இரு பரிமாணங்கள் எனப்படும் ஆற்றல் உலகுக்கும் பூமி எனும் நம் உலகுக்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே கும்பமேளாவை புரிந்துகொள்ள முடியும். இல்லை எனில் மேற்கத்திய கல்வியை படித்தவர்கள் அழுக்கானவர்கள் கூட்டமாக கூடும் நிகழ்வாக மட்டுமே பார்ப்பார்கள்.


 

உயர்பரிமாணம் அருவி போல இறங்கி பிரவாகமாக செயல்படும் மஹா கும்பமேளா என்ற நிகழ்வுக்கு ஞானிகளும், முனிவர்களும், யோகிகளும் ஏன் ஓடோடி வருகிறார்கள் என புரிகிறதா? இது சாதாரண திருவிழாவிற்கு கூடும் கூட்டமல்ல என்பதையும் உணர வேண்டும்.

பேராற்றல் இணையும் இத்தகைய இடத்திற்கு கோவில் அவசியமா? சடங்குகள் அவசியமா என கேள்வியை நாமே கேட்டு பதில் அளிக்கலாம்.


ஆதிநாத ஆற்றலும் நாத பாரம்பரியத்தின் விழிப்புணர்வும் பொங்கி பெருகும் மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?

ஆம் என்றால் அதற்கான தகவல்களை அளிக்கிறேன்.

(தொடரும்)

Tuesday, July 23, 2024

கும்பமேளா 2025

உலகில் நடக்கும் பெரும் ஆன்மீக கொண்டாட்டம் பற்றி பல்வேறு பரிமாணங்களில் பார்த்து வருகிறோம். புராணங்கள், ஜோதிடம் மற்றும் யோக சாஸ்திரத்தின் வாயிலாக ஓரளவு புரிந்துகொள்ள முடியும். கும்பமேளாவின் வரலாறு பற்றி நாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

மஹா கும்பமேளாவின் விதை யார் போட்டது? அதன் துவக்கம் என்ன ? அதன் பின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் மேலோட்டமான வரலாறு போதாது.

வரலாறு தெரிந்துகொண்டாலும் அது நமக்கு முற்றிலும் புரியாது…!

ஒரு கிராமத்தில் அல்லது நதிக்கரை ஓரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்றால் அங்கே ஒரு கோவிலோ அல்லது கலாச்சாரமோ இருக்க வேண்டும். உதாரணமாக ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரம் சென்றால் மக்கள் கூட்டமாக நீராடுகிறார்கள். அங்கே கோவிலும், சனாதன தர்மத்தின் கலாச்சாரமான நீர்த்தார் கடன் செலுத்துவதையும் காணலாம். ஆடி அமாவாசைக்கு இராமேஸ்வரத்தில் ஏன் கூட்டம் எனக்கேட்டால் எளிமையாக பதில் அளித்துவிடலாம்

பெளர்ணமிக்கு ஏன் திருவண்ணாமலையில் கூட்டம் வருகிறது? சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாருக்கு ஏன் கூட்டம் வருகிறது என கேட்டு வரலாறு புரிந்துகொள்ள முயற்சித்தால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்

கோவில் இல்லாத இடத்தில், தங்கும் வசதிகளோ, கலாச்சார பின்னனிகளோ இல்லாத நதிகள் மட்டும் இருக்கும் மணல் வெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்காணோர் கூடுகிறார்கள் என்றால் எது அவர்களை ஒருங்கிணைத்தது?  

குறிப்பிட்ட மதம் அல்லது இறைவழிபாடு செய்பவர்கள் தான் செல்வார்களா எனப்பார்த்தால் சைவம் மற்றும் வைணவம் துவங்கி அனைத்து கலாச்சாரத்தினரும் பாகுபாடு இன்றி கூடுகிறார்கள். இது என்ன வகையான கூட்டம்? எதற்காக கூடுகிறது? இந்த இடம் சைவர்களுக்கு சிவன் கோவிலோ, வைணவர்களுக்கு திவ்ய தேசமோ இல்லை. சாக்தர்களுக்கு அங்கே சக்திபீடமும் கிடையாது. ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் குருமார்களுக்கும் திரிவேணிக்கும் சம்பந்தம் இல்லை

பல வெளிநாட்டு வரலாறு மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குழப்பத்தில் கொண்டு சேர்த்தது இத்தகைய கேள்வி. ஏன் இவர்கள் கூடுகிறார்கள். வேற்றுமை கொண்ட கொள்கை உடையவர்கள் எப்படி ஒன்றாக நீராடி இரண்டு மாதங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாட முடிகிறது? பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவதற்கு கூட கிரகங்களின் அமைப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் திரிவேணி சங்கமத்திற்கு எது இவர்களை ஈர்க்கிறது? முடிவில்லா விடையின் முடிவு தெரிந்துகொள்ள நாம் நமது உண்மையான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.

கும்பமேளாவின் துவக்கப்புள்ளி உத்திரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனும் இடத்தில் துவங்கவில்லை. இந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

 சரஸ்வதி நதி நாகரீகம்

இந்தியாவின் அகழ்வாராய்ச்சி வரலாறுகள் இந்திய பாரம்பரியத்தை பற்றி உணராத வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டது. மேலும் சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய குறிப்புகள் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்டது. இத்தகைய அகழ்வாராய்ச்சி வரலாற்றுக்கிடையே நம்மிடம் இருந்து விட்டுபோன வரலாறு சரஸ்வதி நாகரீகம் என்பதாகும்.

சரஸ்வதி நதி பள்ளத்தாக்கில் முதன் முதலில் வேதகால வாழ்க்கை முறை துவங்கியது. தற்சமயம் ராஜஸ்தான் என்ற மாநிலத்தில் இருக்கும் பெரும் பாலைவனம் ஒருகாலத்தில் நீர் மிகுந்த ஆற்று படுகையாக இருந்தது. அங்கே ஆன்மீக ஆற்றலுடன் ஓடிக்கொண்டிருந்தாள் சரஸ்வதி.

ரிக் மற்றும் யஜூர் வேதங்களில் சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. சரஸ்வதி நதியின் கரையோரத்தில் மனித குலத்தில் மேன்மை பொருந்திய குழுவினர் வாழ்ந்து வந்தனர்.

அக்குழுவினரின் வேளாண்மை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை உலகில் வாழ்ந்த மற்றும் தற்சமயம் வாழ்கின்ற மனிதர்களை விட மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது.

சரஸ்வதி பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை. பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் இடப்பெயர்ச்சி அடைந்து அங்கே குழுவாக வாழ்ந்தார்கள்.

இக்குழுவினர்களாலேயே வேதம் மற்றும் சாஸ்திரங்கள் வலிமை பெற்று அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

வேதம் என்பது ஒரு சொல் வார்த்தையான ஓம் என்ற சப்தத்தில் இருந்து வந்தது என்பதை போல இவர்கள் பல்வேறு பின்புலம் கொண்டவர்களானாலும் ஒரே வார்த்தையால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

நாதர்கள்….!

சரஸ்வதி நதியின் நாகரீகத்தில் செழிப்புடன் வாழ்ந்த நாதப் பாரம்பரிய மனித குழுவே நாதர்கள் என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் மேன்மையாக வாழ்ந்த இடம் இப்பொழுது பாலைவனமாக இருக்கிறது. அந்த சரஸ்வதி நதிக்கு என்ன ஆயிற்று? நாதர்கள் இப்பொழுது எங்கே?

 

 (தொடரும்)