Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, October 31, 2010

ஸ்ரீசக்ர புரி - புனித பயணம்

எனதருமை சகோதர சகோதரிகளுக்கு,

இன்று ஒரு நற்செய்தியுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலை பற்றிய தொடர் படித்துவிட்டு பலர் என்னுடன் திருவண்ணாமலை வருவதற்கு விருப்பம் கொண்டு மின்னஞ்சல் அனுப்பினீர்கள்.

இறையருள் அதற்கு சில நாட்கள் முன்னரே அனுமதி அளித்தது. வரும் டிசம்பர் மாதம் 27,28,29 (திங்கள்,செவ்வாய் மற்றும் புதன்) அன்று மூன்று நாட்கள் திருவண்ணாமலையில் என்னுடன் பயணிக்கலாம்.

இது சுற்றுலா அல்ல. முழுமையான ஆன்மீக பயணம் என்பதால் அதற்கு தக்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

மூன்று நாட்களில் ஆன்மீக ஆற்றல் நிறைந்த திருவண்ணாமலை மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களுக்கு தரிசிப்பது முக்கிய நிகழ்வாகும்.

மேலும் தியானம் மற்றும் எளிய யோக பயிற்சியை எங்களிடம் இருந்து நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.

சில முக்கிய குறிப்புகள்

  • பத்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி

  • உணவு, தங்கும் இடம் அனைத்தும் எங்கள் பொறுப்பு

  • உங்கள் இருப்பிடத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து திரும்பும் செலவு உங்களுடையது.

  • ஆன்மீக அனுபவம் பெறவும், எங்களின் அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் செயல்படும் எண்ணம் இருந்தால் மட்டும் பயணத்தில் கலந்து கொள்ளவும்

  • மூன்று நாட்கள் மற்றும் தியான பயிற்சி உள்பட கட்டணம் 3000/-

  • தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை நீங்களாகவே பார்த்துக்கொள்வதாக இருந்தால் எங்களுடன் பயணிக்க எந்த கட்டணமும் இல்லை.

  • டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முன்பதிவு செய்ய இறுதி நாள்.

  • முன்பதிவு என்பது முழு கட்டணத்துடன் உங்கள் பெயரை பதிவு செய்வதாகும். பயணம் பற்றிய பிற நடைமுறைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் முன்பதிவு செய்பவர்களுக்கு தனியே மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

ஆன்மீக கொண்டாட்டங்களும் ஆனந்தமும் நிறைந்த ஸ்ரீசக்ர புரிக்கு என்னுடன் பயணிக்க தயாரா?

-ஸ்வாமி ஓம்கார்

Friday, October 29, 2010

சத்சங்கத்துவே நிர்சங்கத்துவம்


கேள்வி : பசித்திரு, தனித்திரு விழித்திரு என்ற வள்ளலாரின் கூற்றை பின்பற்றியதன் விளைவு, உடல் உபாதைகளுடன், உறவுகள் பிரிவுற்று, மனம் சமனிலை தவறி இருக்கிறேன். இந்த போதனையில் ஏதேனும் தவறு உண்டா?

பசித்திருக்க சொன்னதும் சாப்பிடாமல் இருந்து உடலையும், தனித்திருக்க சொன்னதால் அனைத்து உறவுகளிடம் இருந்தும் பிரிந்தும், விழித்திருக்க சொன்னதால் தூங்காமல் இருந்தும் உங்களை நீங்களே கேடு பாதைக்கு கூட்டி சென்றிருக்கிறீர்கள்.

இக்கருத்தை சொன்ன வள்ளலாரின் மேல் குற்றமல்ல, அதை நாம் பயன்படுத்தும் விதமே தவறு.

மனித உடல் என்பது ஐந்து நிலையாக உள்ளது. அதாவது மனித உடல் ஒன்றல்ல. மனிதனுக்கு ஐந்து உடல்கள். இதையே உபநிஷத் கோஷங்கள் என்கிறது. உணவால் உருவாகும் உடல், மனம் என்கிற உடல், ப்ராண சக்திகள் செயல்படும் உடல், நம் ஞாபக அடுக்குகளால் உருவான அறிவு உடல், ஆன்மா என்ற உடல் என ஐந்து உடல்கள் விவரிக்கப்படுகிறது. இதில் மனிதன் பிற நான்கு உடல்களை பற்றிய அறிவு இல்லாமல் தான் உணவால் உருவாகும் உடல் என்றே நினைக்கிறான்.

இங்கே தான் நீங்களும் வள்ளலாரின் கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள்.

அவர் ரத்தமும், சதையும் கொண்ட உடலுக்கு அதை சொல்ல வில்லை. உங்கள் அறிவுடலுக்கே அந்த கருத்தை போதித்தார்.

அறிவுக்காக பசித்திருங்கள், என்றும் ஞானத்தை அடைய பசியுடன் இருங்கள்.
அறிவுக்காக தனித்திருங்கள், என்றும் அனைவரும் செல்லும் பாதையிலேயே பயணிக்காமல் தனிப்பாதையில் முயலுங்கள்.
அறிவு பெற விழித்திருங்கள், ஞானம் எத்திசையிலிருந்து யார் மூலம் வருகிறது என தெரியாது எனவே விழிப்புணர்வுடன் இருங்கள்.

வள்ளல் சொன்னதை துள்ளலுடன் மீண்டும் நினைவு கூறுங்கள்
பசித்திரு, தனித்திரு விழித்திரு..!
--------------------------------------

கேள்வி : தூக்கத்திற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

தூக்கம் என்பது உடல் மட்டும் இளைப்பாறுவது. தியானம் என்பது ஆன்மா இளைப்பாறுவது.

-------------------------------------
கேள்வி : நாள் என் செய்யும், வினை தான் என்செய்யும் என சான்றோர் கூறியது போல நாம் ஏன் ஜோதிடம், கிரகங்கள் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டும்?

உங்களின் கேள்வி உலக நகைச்சுவையில் ஒன்றாக வரிசைப்படுத்தலாம். ஐயாயிரம் ரூபாய் பொருள் வாங்கினால் முவ்வாயிரம் ரூபாய் பொருள் முற்றிலும் இலவசம்* என்பது போன்ற விளம்பரங்களை தற்கால பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதில் நட்சத்திர குறிக்கு அருகே condition apply என எழுதி இருப்பார்கள். நீங்கள் கூறிய வரிகளும் இத்தகைய விளம்பரங்களுக்கு சமமானவையே.

முழு வரிகளை கூறுகிறேன் கேளுங்கள்.

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
!

கடைசி வரியை புரிந்துகொண்டீர்களா? இது தான் அந்த *Condition apply...!

உங்கள் முன் சிலம்பும் சதங்கையும், சண்முகமும் தோன்றினால் உங்களுக்கு நாளும் கோளும் வேலை செய்யாது..!

-------------
முந்தைய சத்சங்க பதிவுக்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும் : ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்

Sunday, October 24, 2010

கைரேகை சாஸ்திரம்

எதிர்கால பலன் கூறுதல் என்பதற்கு பல்வேறு வழிகளை நம் கலாச்சாரம் கண்டுணர்ந்து இருக்கிறது. மனிதனின் எதிர்காலம் மற்றும் அவனை பற்றிய தகவல்களை உள்ளங்கையின் அமைப்பு மற்றும் அதன் வரிகளை கொண்டு கணிக்க முடியும் என்பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூபணம்.

கைகளில் உள்ள ரேகைகள் மட்டுமல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ்திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறாமல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பது விஞ்ஞானம் அல்ல.

ரேகை சாஸ்திரம் ஒரு கலை வடிவம். இங்கே நாம் கலைக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது கட்டமைக்கப்பட்ட விதிகளும், அதனை நிரூபணம் செய்யும் சோதனைகளும் கொண்டது. கலை என்பது அடிப்படை அம்சங்களை கொண்டது ஆனால் அதை பயன்படுத்துவோர் பொருட்டு மாறுபடும். உதாரணமாக சோடியம் குளோரைடு என்ற உப்பை நீரில் அமிழ்த்தினால் கரையும் என்பது விஞ்ஞானம் கூறும் விதி. இதை உலகின் எந்த மூலையில் யார் செய்து பார்த்தாலும் நடைபெறும். காரணம் விஞ்ஞானம் மாறாதது.

ஓவியம் என்பது கலை அடிப்படையில் இப்படி ஓவியம் வரையலாம் என்றாலும் உலகில் ஒரே போல ஓவியங்கள் இல்லை. கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ப அது பெரும் கலைவடிவமாக திகழுகிறது.

ரேகை சாஸ்திரம் என்பதும் ஒரு கலைவடிவம் தான். அடிப்படை விதிகளை உணர்ந்துகொண்டு பயன்படுத்த துவங்கினால் ஓவியம் போல பல வண்ணக் கலவையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் வெளிப்படுத்தும்.

மனித இனத்தின் தனித்துவமான அடையாளம் உடலில் உள்ள ரேகைகள். கைரேகைகள் ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு அச்சு வார்த்தால் போல இருக்காது..! இதனால் தான் மனித அடையாள குறியாக ரேகைகள் எடுத்தாளப்படுக்கிறது. வாகனம் தயாரிக்கும் நிறுவனம் எப்படி ஓவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான என்ஜின் எண் தருகிறார்களோ அதுபோல இயற்க்கை ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமான அடையாளம் தருகிறது. அவ்வகையில் மனிதனின் தனித்துவமான அடையாளம் ரேகைகள்.

ஒவ்வொரு மனிதனின் மனோநிலை, செயல் நிலைக்கு ஏற்ப ரேகைகள் மாறுபடுகிறது. இதை உணர்ந்து ரேகை சாஸ்திரம் உருவாகியது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரேகை சாஸ்திரத்தை உண்டாக்கியவர்களும் அதன் மூல வேராக இருந்தவர்களும் தமிழர்கள்.

குறிஞ்சி நில மக்களின் ஆதார தொழிலாக ரேகை சாஸ்திரம் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. முருகப்பெருமானிடம் வள்ளியும், வள்ளியிடம் இருந்து பிற மனிதர்களும் கற்றார்கள் என்கிறது தமிழ் செவிவழி கதைகள்.

தமிழ் பாரம்பரியமாகவும், எதிர்காலம் கூறும் கருவியாகவும் இருந்த ரேகை சாஸ்திரம் தற்சமயம் நலிவடைந்து தனது முடிவு நிலையில் இருக்கிறது. சரியான வழிகாட்டிகளோ அல்லது கற்றுக்கொடுக்கும் சூழலோ நம்மிடையே இல்லை. இதை களையும் பொருட்டு ப்ரணவபீடத்தில் கைரேகை சாஸ்திர பயிற்சியை விடியோ வடிவில் வெளியிட்டு உள்ளோம்.

இரண்டு DVD கொண்ட இந்த தொகுப்பில் அடிப்படையில் துவங்கி முழுமையாக கைரேகை பற்றி அறிந்துகொள்ளலாம். விடியோவில் படித்த பிறகு கைரேகை சம்பந்தமான புத்தகத்தை படித்தால் மேலும் உங்கள் கைரேகை அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

கைரேகை டிவிடியின் முன்னோட்டம் உங்களுக்காகஇரண்டு டிவிடிக்கள் மற்றும் சில கைரேகை பிரதிகளுடன்
விலை 400/- மட்டும். தபால் செலவு தனி.
மேலும் தகவலுக்கு : 99 44 2 333 55

Thursday, October 21, 2010

என் ஒலி உன் ஒளி


என்னை என்னுள் காண்பிக்கும்
ஒற்றை தேடல் இது

எல்லைக்கு அப்பாலும்
அப்பாலுக்கு அப்பாலும்
அதன் இருப்பு சாஸ்வதமாய்
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது

உடலாய், விலங்காய், பூதமாய்
தேடி முற்று பெறா முடிவிலியானேன்.

எங்கு தேடியும் கிடைக்காத உருபொருளை
உள்ளத்தில் காண் என்றான் உருவில்லாதவன்

என் உள்ளத்தில் எண்ணம்.
நான் எண்ணமா?

என் இருப்பில் உடல்
நான் உடலா?

என் அசைவில் ப்ராணன்
நான் ப்ராணனா?

முடிவில்லாத தேடலின் முடிவில்
ஒரொலி.......

என் ஒளி காண
அதன் ஒலி பற்றி
ஒலியை ஒலியால் நீக்கமற நிறைந்து

எல்லையாகவும் எல்லைக்கு அப்பாலும்
எங்கும் எதிலும் ஆனேன் ஓங்காரமாய்..!


Thursday, October 14, 2010

சக்தி பொங்கும் நவராத்திரி

உலகின் எந்த கலாச்சாரத்திற்கும் இல்லாத சிறப்பு தன்மை பாரத கலாச்சாரத்திற்கு உண்டு. பாரதத்தில் கொண்டாடப்படும் விழாக்களும் பண்டிகைகளும் பொழுது போக்குக்காக கொண்டாடப்படுவதில்லை. அனைத்து விஷேஷ நாட்களும் பின்புலத்தில் ஆழமான காரணத்தாலேயே கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டின் உணவு முறை, சீதோஷணம், ஆன்மீகம் இவை அனைத்தும் நம் கொண்டாட்டத்தின் காரணிகளாக இருக்கிறது. மேற்கண்ட மூன்று விஷயங்களும் பாரத தேசம் முழுவதும் ஒரே போல இருப்பதில்லை. நாம் சாப்பிடும் உணவும், வடநாட்டினர் சாப்பிடும் உணவும் வேறுபடுகிறது.


ராஜஸ்தானில் பாலைவனம், கல்கத்தாவில் அதிகப்படியான நீர், காஷ்மீரில் குளிர், தென்னகத்தில் சமமான வானிலை என சீதோஷணம் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் ஆன்மீகத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.


வடக்கிலிருந்து தெற்கு வரை வழிபாட்டுமுறை மாறினாலும் வழிபடும் தெய்வங்கள் மாறுவதில்லை. நம் கலாச்சாரத்தின் மேன்மைகள் இவ்வாறு இருந்தாலும், நாகரீக முன்னேற்றம் என்ற மயக்கத்தால் பலர் நம் கொண்டாடும் விஷேஷங்களின் ஆழ்ந்த கருத்தை அறிவதில்லை. அப்படி மறக்கப்பட விஷேஷங்களில் நவராத்திரியும் ஒன்று.


வசந்த காலத்தை வரவேற்கும் நோக்கில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி.


அது ஏன் ஒன்பது இரவுகள் மட்டும் கொண்டாடவேண்டும்?


இறைநிலை சூன்யமாக இருந்து அதிலிருந்து வெடித்து சக்தி ரூபமாக வெளிப்படும் பொழுது பத்துவித சக்தியாக வெளிப்படுகிறது. ஆற்றல் மிகுந்த ஒரு கோளம் வெடித்து சிதறுவதாக கொண்டால் எட்டு திசைகளிலும், மேல் மற்றும் கீழ் பகுதிகள் ஆகியவற்றை கணக்கிட்டால் மொத்தம் பத்து பகுதிகள் கிடைக்கும்.


இப்படியாக தோன்றிய நம் பேரண்டத்தில் ஒவ்வொரு நிகழ்வும் இதே போன்ற சக்தி ரூபமாகவே இருக்கிறது. இவ்வாறாக எந்த ஒரு சக்தியின் வெளிப்பாடும் பத்து நிலையில் இருக்கிறது. அண்டத்தில் இருப்பது இந்த பிண்டத்திலும் இருக்கிறது என்பதற்கு ஏற்ப பத்து விதமான சக்தி ரூபம் நமக்குள்ளும் இருக்க வேண்டுமே? இந்த பத்து நிலையில் இருக்கும் சக்தி ரூபத்திற்கு தசமஹா வித்யா என்று பெயர்.தசம் என்றால் பத்து என்பது நமக்கு தெரியும். பத்து நிலையில் இருக்கும் மஹா சக்தியை பற்றிய அறிவு தசமஹா வித்யா என அழைக்கப்படுகிறது. செளந்தர்யலகரி,தேவி பாகவதம், ஸ்ரீவித்யா உபாசகம் ஆகிய ஆன்மீக அமுதங்களில் தசமஹா வித்யா முழுமையாம விவரிக்கப்பட்டுள்ளது.தசமஹா வித்யாவின் ரூபமே ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரமாக உருவாகி அதர்மத்தை அழித்தது. நம் கர்மவினையை செயல்படுத்தும் நவக்கிரகமாக சுழலுகிறது. தசமஹா வித்யா ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய பெரும் கருத்து, இதை பற்றி வேறு ஒரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்.


நவராத்திரி என்றாலே ஒன்பது இரவு எனும் பொழுது பத்து நிலையில் இருக்கும் சக்திக்கு ஏன் ஒன்பது இரவுகள் கொண்டாட வேண்டும்? பத்தாக அல்லவா இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.


வெளிநாடு சுற்றுலா விளம்பரங்களில் பார்த்தால் மூன்று இரவுகள் மற்றும் நான்கு நாட்கள் என கூறுவார்கள். அது போல பத்து சக்தி ரூபத்திற்கு பத்து நாட்கள் அதனால் ஒன்பது இரவுகள்...!


“அஷத்தோமா சத் க்ரமய” - இருளில் இருந்து ஒளிக்கு செல்லுவது என வேதாந்தம் அறியாமையில் இருப்பதை இருள் நிறைந்த தன்மைக்கு ஒப்பாக் கூறுகிறது. இரவு இன்பது அறியாமையில் குறியீடு. அதிலிருந்து வெளிப்பட மாலை நேரத்தில் தசமஹா சக்திகளை வழிபட்டு ஒளி மிகுந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை நவராத்திரி சுட்டிக்காட்டுகிறது.


வசந்தகாலத்தின் துவக்கமான அமாவாசை துவங்கி தசமி திதி வரை பத்து தினங்கள் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும். இதில் நவ என்பது ஒன்பது என்ற என்னை மட்டும் குறிப்பதில்லை. நவ என்பது புதிய, நவீன என்றும் பொருள்படும். நவயுகம் என கூறுகிறோம் அல்லவா? அது போல நவ-ராத்திரி என நம் முன்னோர்கள் நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்ல அமைந்த நவீன யுக்தியே நவராத்திரி.


அம்பாளை வழிபடுபவர்கள் மட்டும் நவராத்திரி கொண்டாடுவார்கள் என்ற தப்பான கருத்து தற்காலத்தில் நிலவுகிறது. திருப்பதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்வதும், சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் இருப்பதும் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வைபவம் என்பதை குறிக்கிறது.


நவராத்திரி எப்படி கொண்டாட வேண்டும்?


வடநாட்டில் ராமாயணத்துடன் தொடர்பு கொண்டு கொண்டாடுகிறார்கள். ஸ்ரீராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடைபெற்ற பத்து நாள் போரை இதற்கு இணையாக கூறுவார்கள். ஸ்ரீராமன் அதர்மத்தை வென்ற நாளாக விஜயதசமியை [தசரா] கொண்டாடுவார்கள். ராவணனின் உருவ பொம்மை செய்து அதை தீயிடுவது மிகவும் பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். அறியாமை அழிந்து தெய்வீகம் குடிபுகும் நாளாக நவராத்திரி கருதுகிறார்கள்.


தென்னகத்தில் ஒன்பது இரவுகளும் ஒவ்வொரு சக்தியின் ரூபமாக கொண்டாடுகிறோம். சக்தி நிலை நம்மை அறியாமையிலிருந்து மேம்படுத்தும் என்பது நோக்கமாக இருக்கிறது. வடநாடோ தென்னாடோ வழிபாட்டின் அடிப்படை நோக்கம் ஒன்றாக இருப்பதை கவனியுங்கள்.


மூன்று முதல் பதினொன்று படிகள் அமைத்து அதில் பொம்மைகளை வந்து அழகுபடுத்துவதன் பின்னால் ஆழ்ந்த கருத்துக்கள் உண்டு. கீழ் படியில் தாவரங்கள் பூச்சிகள் துவங்கி கடைசி படியில் இறைவனை வைத்து, உயிர்கள் படிப்படியாக பரிணாமம் அடைந்து இறைவனுடன் கலப்பதை நவராத்திரி கொலு பொம்மைகள் குறிப்பிடுகிறது.


பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை அம்மனாக கருதி ஒரு நாளுக்கு ஒரு குழந்தை என அலங்கரித்து வணங்கி வருவது நம் மரபு. இதனால் குழந்தைகளுக்கும் ஆன்மீக முக்கியத்துவமும், பெரியவர்களுக்கு சமமான ஈடுபாடும் உண்டாகும்.


நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் செய்வதும் அந்த தானியங்களில் இருக்கும் தசமஹா சக்திகள் நம் உடலில் மேம்படுவதற்காகத்தான். மாலை நேரத்தில் அனைவரையும் அழைத்து பிரசாதம் வழங்கி இசை மற்றும் நாட்டியத்துடன் நவராத்திரியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதனால் மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை மகிழ்கிறது.


நடைமுறையில் நவராத்திரி எப்படி இருக்கிறது?


பாரம்பரியம் மிக்கவர்கள் நவராத்திரியின் மகத்துவத்தை உணர்தே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நவராத்திரியை தவிர்ப்பதில்லை. நவராத்திரி பெண்களுக்கான விழா. பெண்கள் மட்டும் கொண்டாடும் விழா என கூறவில்லை. நம் குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கும் சக்தி நிலையில் இருப்பவர்கள் பெண்கள். சக்தியின் விழாவாக நவராத்திரி கொண்டாடவேண்டும்.


முன்பு பெண்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தவும், பிறருடன் நட்பும் உறவு முறையை கொண்டாடவும் நவராத்திரி பயன்பட்டது. தற்காலத்தில் பெண்கள் நவநாகரீகம் என்ற பெயரில் இழந்தவைகளில் நவராத்திரியும் உண்டு. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


முன்பு ஆட்டுக்கல்லில் மாவாட்டும் பொழுது கீழ்பாகம் நிலையாக இருக்கும் மேல் பாகம் அசையும். கிரைண்டர் கண்டுபிடித்த பிறகு மேல் பாகம் நிலையாக இருக்கும் கீழ் பாகம் அசையும். விஞ்ஞானம் நம் குடும்பத்திற்குள் நுழையும் பொழுது இந்த தலைகீழ் மாற்றம் நிகழுகிறது. இந்த விஷயம் நவராத்திரி கொண்டாட்டத்திலும் நடந்துவிட்டது...!முன்பு வீட்டின் முன் அறையில் கொலு பொம்மைகள் வைத்து அதன் முன் ஆடிப்பாடுவார்கள். தற்சமயம் டிவி ஆடிப்பாடுகிறது, மக்கள் அதன் முன் கொலு பொம்மையாக அமர்ந்திருக்கிறார்கள்.


சிறுக சிறுக பெண்களிடையே ஏற்படும் அவசர யுக தாக்கமும், சோம்பேறித்தனமும் நவராத்திரிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பக்கத்துவீட்டில் இருப்பவர் யார் என தெரியாமல் வாழும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் பிறர்களுடன் உறவாடும் நவராத்திரியை இவர்கள் சிந்திப்பார்களா? மெகாசீரியல் பார்க்க நேரம் இருக்கிறது, பொருளை விரையம் செய்ய ஷாப்பிங் போக நேரம் இருக்கிறது. வருடத்தில் ஒன்பது மாலை நேரத்தை மட்டும் செலவு செய்ய முடியவில்லை என்பது எப்படிப்பட்ட தவறு என்பதை எப்பொழுது புரிந்துகொள்வார்கள்?


வருமானத்தை சுட்டிக்காட்டி சிலர் நவராத்திரி கொண்டாட இயலவில்லை என்கிறார்கள். நவராத்திரி பிரம்மாண்டமாகத்தான் கொண்டாட வேண்டும் என்பது அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் சிறிய மேஜையில் சில பொம்மைகளை வைத்து எளிய பிரசாதங்களை இறைவனுக்கு படைத்து செய்யலாம்.


சிலர் பாரம்பரியமாக தாய் வீட்டிலிருந்து கொலு வைக்கும் தன்மை வர வேண்டும். எங்கள் பாரம்பரியத்தில் கொலுவைப்பதில்லை என சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் இரு தலைமுறைக்கு முன் அனைவரும் கொலு வைத்து பரஸ்பரம் உறவையும் ஆன்மீகத்தையும் வளர்த்துக் கொண்டார்கள். அந்த தொடர்ச்சி விட்டுப்போனது. மீண்டும் நாம் துவங்கி நம் குழந்தைகளை தொடரச்செய்வோமே என்ற எண்ணம் நமக்கு இல்லை.


நீங்கள் உங்களின் பரம்பரையில் நவராத்திரியை துவக்கிய பெருமையை கொண்டவர்களாக இருங்களேன், இன்றே நவராத்திரியை எளிய முறையில் கொண்டாட திட்டமிடுங்கள்.


நவராத்திரி கொண்டாடாமல் இருக்க வருமானம், தாய் வழியில் நவராத்திரி இல்லை என ஆயிரம் காரணம் கூறலாம். கொண்டாடி நம் வாழ்க்கையை வளப்படுத்தும் எண்ணம் இருந்தால் காரணங்கள் எதுவும் இருக்காது. நவராத்திரி கொண்டாடும் குடும்பங்கள் சிறப்பாகவும் செழித்தும் இருப்பது கண்கூடாக பார்க்கலாம். நம் குடும்பங்கள் அப்படி இருக்க வேண்டாம என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..!


நவராத்திரி தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றம் மற்றும் இன்றி ஆன்மீக அன்பர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும் பயன்பட்டது. உங்கள் வீட்டில் நவராத்திரி கொலு வைக்க முயலுங்கள், இதனால் பலர் உங்களுடன் நட்புறவு கொள்வார்கள். சமுதாய நல்லிணக்கம் ஏற்படும். இதை குடும்ப விழாவாக இல்லாமல் சமுதாய விழாவாகவும் கொண்டாடலாம்.


நம் வசிக்கும் குடியிருப்பு அல்லது அடுக்குமாடி பகுதியில் ஒரு பொதுவான இடம் தேர்ந்தெடுத்து அதில் அனைத்துக் குடும்பமும் இணைந்து நவராத்திரி கொலு வைக்கலாம். அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படும் பொழுது அதில் ஏற்படும் அன்பும், மேம்பாடும் மிக உயர்ந்ததாக இருக்கும்.


நவராத்திரி கொண்டாட நீங்கள் முடிவு செய்தால் அருகில் இருக்கும் பெரியோர்களையோ, ஆன்மீக அன்பர்களையோ கலந்து எளிமையாக துவங்குங்கள். இந்த வருடத்திலிருந்து சிறப்பாக நவராத்திரியை கொண்டாட உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். நவராத்திரி கொலு வைத்து கொண்டாட துவங்கியதும் உங்களின் வாழ்க்கை மேம்படுவதை பாருங்கள்.


எங்கும் பரிபூரணமாக இயங்கும் தசமஹா சக்தி நவராத்திரி அன்று உங்கள் வாழ்க்கையில் பரிபூரணத்தை உண்டாக்கட்டும்.


சுபவரம் (அக்டோபர் 2010) ஆன்மீக பத்திரிகையில் வெளியான கட்டுரை

Friday, October 1, 2010

பழைய பஞ்சாங்கம் 01-10-2010

ஐயோ-தீ....

என் தாத்தா அவரின் சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டார். அது மூழ்கிப்போனது. என் தாத்தாவுக்கு அவரின் சொத்தை தக்கவைத்துக்கொள்ளும் யோக்கியதை இல்லை. அந்த சொத்தை இன்னொருவர் அனுபவிப்பதை பார்த்த பேரனாகிய நான் வழக்கு தொடுத்தேன். நீதிபதிகள் என்னையும், சொத்துக்கு உரியவரையும் பங்கிட்டு அனுபவிக்க சொல்லி இருக்கிறார்கள்.

கதையின் நீதி : நீங்கள் கோழை தாத்தாவுக்கு பிறந்தாலும் தவறில்லை புத்திசாலி நீதிமான்களிடம் சரண் புகுங்கள்...! உருப்படுவீர்கள்..!

டெல்லியில் மீண்டும் கில்லி

மீண்டும் டெல்லி பயணம். இந்த முறை ஒரு விஷேஷம் காமன் வெல்த் கேம்ஸ். நித்தியமும் ஆனந்தமாக இல்லாததால் எனக்கு எதற்கு ‘காமன்’ வெல்த் என ஒதுங்கிவிட்டேன். ஆனால் நம் பாரத தேசத்து லட்சணத்தை படம் போட்டு காட்டி விட்டார்கள்.

பாலம், ஸ்டேடியம் என பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்து சுகாதார குறையுடன் காணப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் கடினமாக உழைத்து கட்டுமான பணிகளை எல்லாம் முடித்துவிட்டார்களாம். அருமையாக இருக்கு பாருங்கள் என படங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறார்கள். முடிவில் ஜெய் ஹிந்து என வாசகம் வேறு.

திருமணத்திற்கு ஒருவாரம் முன்னால் மணப்பெண் ரெண்டு நாள் காணாமல் போகிறாள். மீண்டும் வந்து சும்மா கொஞ்சம் போயிட்டு வந்தேன். இப்ப கல்யாணம் அரேஞ்சுமெண்ட் எல்லாம் பக்காவா போகுது வாங்க கல்யாணம் கட்டிக்கலாம் என்றால் அப்பெண்ணை போற்றி புகழ்ந்துவிட்டு கல்யாணம் செய்வீர்களா என கேட்க தோன்றியது. நாம எங்க நினைச்சதை எல்லாம் கேட்டுருக்கோம்?

டிவிட்டர் இஸ் பெட்டர்

டிவிட்டரில் நான் உளருவதை எல்லாம் பெரிசாக பலர் படிக்கிறார்கள் என பின்பு தான் தெரியவந்தது. இங்கே ஆன்மீகம் மட்டும் பேசும் நான் டிவிட்டரில் அரசியல் சார்ந்த கருத்துக்களை சில நேரம் வெளியிடுகிறேன். அது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்திருக்கிறதாம் நண்பர்கள் சொன்னார்கள். இப்படியே போனால் நான் இலக்கியவாதி ஆயிடுவேனோனு பயமா இருக்கு :)

அந்த டிவிட் என்ன என கேட்கிறீர்களா? நமக்கு ஏதுக்குங்க அரசியல்...

தாய் மரம்

ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் தாய் மரம் சேவை மிகவும் உன்னதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இச்சேவைக்காக இடமும், நன்கொடையும் கொடுத்து உதவிய உள்ளங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

தாய்மரம் பற்றிய விரிவான கட்டுரை விரைவில் எழுதுகிறேன். இந்த எளியோனுடன் நீங்கள் காட்டும் அன்பு கலங்க வைக்கிறது. உங்களின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும் என வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
----------------------------------------------
கட(வுள்)ல்

சிலர் கடற்கரையில் நின்று ரசிக்கிறார்கள்
சிலர் மீன் பிடிக்க செல்லுகிறார்கள்.
சிலர் மீன் பிடிக்க பிற எல்லை பக்கம் சென்று மாண்டு போகிறார்கள்.
சிலர் மூழ்கி முத்தெடுக்கிறார்கள்.
சிலர் கப்பில் சொகுசு பயணம் போகிறார்கள்.
சிலர் கடலை கண்டதே இல்லை, அதனால் கடலே இல்லை என்கிறனர்.
சிலர் பாத்திரத்தில் கடல் நீரை பிடித்து வைத்து இதுவே கடல் என்கிறார்கள்.
சிலர் கடல் நீரை குடிநீர் ஆக்குகிறேன் என புறப்படுகிறார்கள்.
ஆனாலும் இங்கே கடலை முழுமையாக உணர்ந்தவரில்லை....!