Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 22, 2011

காலில் விழும் கலாச்சாரம்

நம்ம ஊரில் காலில் விழும் கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. சென்ற மே மாதம் முதல் நாட்டில் காலில் விழுந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

உலகில் இருக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்று காலில் விழுவது. மிக காட்டுமிராண்டித்தனமான செயல் காலில் விழுவது என்பதை மறுக்க முடியாது. ஏன் என இந்த கட்டுரை முடிவில் தெரிந்து கொள்வீர்கள்...!

எந்த விலங்கும் மற்றொரு விலங்கின் காலில் விழுவதில்லை. பூச்சிகள் கூட மற்றொரு பூச்சியின் காலில் விழுவதில்லை. சிலந்திக்கு எட்டு கால்கள் இருந்தும் அதன் காலில் எந்த ஒரு பூச்சியும் விழுவதில்லை என்பதன் மூலம் பூச்சிகள் எப்படிபட்ட விழிப்புணர்வு நிலையில் இருக்கிறது என்பது உணர முடியும். சரி சரி... நீங்கள் பொறுமை இழக்கும் முன் விஷயத்திற்கு வருகிறேன் :)

அனைத்து மனிதர்களும் சமமாக பாவிக்க வேண்டும் எனும் பொழுது எதற்கு மற்றொருவன் காலில் விழ வேண்டும்? விலங்குகளும் பிற உயிரினமும் ஆணவம் மிகுந்து திரிவதில்லை. நானே உலகை காக்கிறேன் என சொல்லி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. அதனால் விலங்குகளுக்கு காலில் விழும் அவசியம் இல்லை..!

வணங்குதல் என்ற செயல் ஒரு மனிதனை இறைவனாக்குகிறது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் வணங்கப்படுபவன் இறைவனாவதில்லை. வணங்குபவனே இறைவனாகிறான்..!

எப்பொழுது நாம் பிற விஷயத்தை வணங்குகிறோமோ அப்பொழுது நாம் நம் அகந்தை நீங்கி நான் வணங்கப்படும் பொருளை விட எளியவன் என்ற எண்ணம் வருகிறது. நான் முற்றிலும் சரணாகதி அடைகிறேன் என்பதே வணங்குதலின் அடிப்படை செயல். ஒருவர் தன் அகந்தையை சரணாகதி செய்துவிட்டால் மீதம் இருப்பது இறைநிலை என்ற சுத்த ஆன்ம உணர்வு தானே? அதனால் தான் கூறினேன் வணங்குபவன் இறைவனாகிறான் என்று.. இப்பொழுது புரிந்ததா?

மஹாபாரதத்தில் ஒரு காட்சி. மிகவும் சோகமான தருணம் அது. திரெளபதியை மானபங்கம் செய்ய துச்சாதனன் தூக்கிவந்து அவளின் துகிலை உரிக்க துவங்குகிறான். பலர் முன் அவமானப்படாமல் இருக்க தன் கையை உடல் மேல் வைத்து தன் மானத்தை காக்கிறாள் திரெளபதி. கணவர்கள் கூடி இருக்க, பெரியோர்கள் முன்னிலையில் இந்த அவச்செயல் நடைபெறுகிறது, தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து முடியாத நிலையில் திரெளபதி பரமாத்மாவை அழைக்கிறாள். இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ‘க்ருஷ்ணா...!” என்ற ஒரு குரல் எழுப்புகிறாள். நடந்த மற்றவை உங்களுக்கே தெரியுமே?

தான் என்ற அகந்தை இருக்கும் வரை அவளை யாரும் காக்க முடியவில்லை. தன் கையை உயர்த்தி சரணடைந்ததும் அவள் காக்கப்பட்டாள். அதுபோல உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுகிறேன் என நீங்கள் நினைக்கும் வரை உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தையும் இறைநிலை பார்த்துக்கொள்ளும்.

ஆனால் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் என நினைத்துவிடாதீர்கள். உலகில் மிகக்கடினமான காரியம் சரணாகதி அடைதல். ஆன்மீக பயிற்சிகளும் தியானமும் முடிவில் இந்த நிலைக்கே நம்மை இட்டுச்செல்லுகிறது. சரணாகதி அடைய நம்மை படிப்படியாக தயார் செய்வதே அனைத்து ஆன்மீக பயிற்சிக்கும் அடிப்படை என்பது உங்களுக்கு தெரியுமா?

சரணாகதி கடினம் என்கிறேன் அல்லவா? அதை பயிற்சி செய்து பார்ப்போம். இறைவன் நம் அனைவருக்கும் உணவு அளிக்கிறான். நம் உணவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் பிச்சை என்பதை நீங்கள் நம்பினால் இப்பயிற்சிக்கு நீங்கள் சரியானவர். வாருங்கள் முயற்சிப்போம். நீங்கள் முன் பின் போகாத ஊருக்கு செல்லுங்கள். அவ்வூர் பாஷை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் உத்தமம். அங்கே சென்று ஓர் இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சென்ற இடம் வழிபாட்டு ஸ்தலமாக இருக்க வேண்டும் என்பதில்லை. யாரிடமும் நீங்கள் பேசவேண்டாம். அமைதியாக உங்களை கவனித்துக்கொண்டு இருங்கள். தினமும் படியளக்கும் இறைவன் நமக்கு ஏதேனும் செய்வாரா என பார்ப்போம்...! முழு சரணாகதி நிலையில் இருந்தாலே இதை உங்களால் பயிற்சி செய்ய முடியும். இது சவால்..

புராண கதை கொண்ட சினிமாவில் இறைவன் அனைவருக்கும் படியளப்பவன் என கூறி ஒரு பெட்டியில் எறும்பை அடைத்து வைத்திருப்பார்கள். முடிவில் அப்பெட்டியை திறந்தால் அதன் வாயில் ஒரு சிறு பருக்கு இருப்பதை காட்டுவார்கள். பார்த்ததுண்டா? எறும்புக்கு பதில் நம்மை அவ்விடத்தில் வைத்துப்பாருங்கள். உங்களின் ஆணவ அளவு என்ன சரணாகதிக்கு நீங்கள் எவ்வளவு தயார் என புரியும். ஒரு பைத்தியக்காரன் இச்செயலை செய்ததை ஸ்ரீசக்ர புரி தொடரில் முன்பு படித்திருப்பீர்கள்.

இறைவனை உணர வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தால் தான் ஒருவனால் சரணாகதி அடைய முடியும். சரணாகதி அடையாமல் ஆன்மீகத்தில் எதையும் சாதிக்க முடியாது.

புகழ்பெற்ற ஜென் கதை ஒன்று கேள்விபட்டிருப்பீர்கள். ஒருவர் ஜென் குருவிடம் வந்து நான் இதை கற்றேன், இதில் புலமை பெற்றேன் என கூறிக் கொண்டு தனக்கு ஜென் தன்மையை போதிக்கும் படி கேட்பார். அவருக்கு தேனீர் வழங்கும் ஜென் குரு அந்த கோப்பை நிறைந்து வழிய வழிய தேனீர் ஊற்றுவார். முதலில் உன் கோப்பையை காலி செய்தாலேயே நான் புதிதாக நிரப்ப முடியும் என்பது அதன் அர்த்தம். அதுபோல இறை அனுபூதி உணர ஆணவத்தை காலி செய்தால் போதுமானது.


கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலை 1800 அடி உயரத்தில் இருக்கும் ஏழு மலைகளின் தொகுப்பு. சாதாரணமாக இம்மலைக்கு சென்று வர முடியாது. உடல் நன்றாக இருப்பவர்களே தடுமாறி விடுவார்கள். அதனால் மலைக்கு மேல் செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த மலைக்கு வந்து வழிபடுபவர்களுக்கு ஓர் விசித்திர பழக்கம் உண்டு.

மலைக்கு மேல் சென்று திரும்பி வரும் ஆண்களின் கால்களில் அடிவாரத்தில் இருக்கும் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். அதுவும் முன் பின் தெரியாத ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். தங்கள் காலில் விழுந்தால் தான் கஷ்டப்பட்டு மலை ஏறிய புண்ணியம் அவர்களுக்கு போய்விடும் என ஆண்கள் ஓடுவார்கள். இது வெள்ளிங்கிரியில் பங்குனி முதல் வைகாசி வரை இயல்பாக நடக்கும் காட்சி.

ஒரு முறை நான் வெள்ளிங்கிரி சென்று திரும்பும் பொழுது என்னுடன் வந்தவர் இந்த செயலை கண்டு மிகவும் கோபம் கொண்டார். பெண்களுக்கு சம உரிமை இல்லையா? அவர்கள் ஏன் மலை ஏறக்கூடாது? பெண்கள் விமானமே ஓட்டும் காலம் இது என தன் பெண் உரிமை பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்பொழுது நான் கூறினேன், “ ஆண்களுக்கு ஆணவம் அதிகமையா... அதனால் தான் அதை அடித்து நொறுக்க ஏழுமலைக்கு மேல் சென்று திரும்ப வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் நின்ற இடத்தில் வணங்குவதாலேயே தங்களின் ஆணவத்தை தொலைத்துவிடுகிறார்கள். இப்பொழுது சொல் யாருக்கு அதிக உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்று” என கேட்டேன்.

வெள்ளிங்கிரி மலை ஏறி உடல் நொந்து போயிருக்கும் பொழுதும் தன் ஆணவம் கரையாமல் பெண் உரிமை பேசியவரின் ஆணவம் என் விளக்கத்தால் நொந்து போனது.

ஆன்மீக சூழலில் இருப்பதால் பலர் என் கால்களில் விழுவதுண்டு. அவர்களை நான் தடுப்பதில்லை. ஒரு மனிதன் தான் சரணாகதி அடைய முயற்சி செய்யும் பொழுது அதை நாம் தடுக்கலாமா? தூண்டத்தானே வேண்டும்?

ஒருவர் என்னை வணங்குகிறார் என்றால் என் உடலையோ என் தோற்றத்தையோ வணங்குவதில்லை. மாறாக இறையாற்றல் கொண்ட ஆன்மாவை வணங்குகிறார். ஆன்மா என்பது ஆளுக்கு ஆள் வேறுபடாது. உங்களுக்குள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது. அதனால் என்னை வணங்குபவர்களை தன்னையே வணங்குகிறார்கள்.

சில ஆன்மீகவாதிகள் பிறர் காலில் விழுந்து வணங்க அனுமதிப்பதில்லை. இதற்கு பல காரணம் இருந்தாலும் அடிப்படையாக இருக்கும் காரணம் விசித்திரமானது. வணங்கும் பொழுது அனைத்தையும் உன்னிடம் கொடுத்து சரணாகதி அடைகிறேன் என் ஒருவர் சொல்லும் பொழுது அவரின் கர்மவினையும் அதனுள் அடக்கம் அல்லவா? அதனால் ஆன்மீகவாதிகள் பிறரின் கர்மா தனக்கு வந்துவிடும் என நினைத்துகாலில் விழ அனுமதிப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் காலில் விழுந்து வணங்கினால் தன் கர்ம வினைகளை அதிகரித்து தான் கர்மவால் பாதிக்கப்படுவோம் என்பதே அவர்களின் சோசியலிஷத்திற்கு காரணம் என்பதை அவர்களுடன் பழகும் பொழுது புரிந்து கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கானவர் கர்மவினை முதல்கொண்டு அனைத்தையும் கொடுத்து சரணாகதி அடைகிறார்கள் என்றால் அவர்கள் அனைவரையும் இறைநிலை பெறச்செய்யும் இச்செயலால் எனக்கு பல்லாயிரக்கணக்கான பாவங்களும் கர்மவினைகளும் வந்தால் அதைபற்றி எனக்கு கவலை இல்லை..!

இறைவன் தன்னை பிறர் அடைய என்னை படிக்கட்டாக படைத்திருக்கிறான் என நினைத்து பெருமை கொள்வேன். அதைவிடுத்து என் காலில் விழுந்து வணங்காதீர்கள் என என்னை காத்துக்கொள்ள மாட்டேன்.

அதேபோல என்னை சிலர் வணங்கினாலும் , அவர்கள் அருகில் இருப்பவர்கள் வணங்கமாட்டார்கள். அவர்களை நான் நிர்பந்திப்பதில்லை. சரணாகதி என்பது அனைவருக்கும் ஒரே இடத்தில் நடப்பதில்லை..!

கிருஷ்ணனை காண சென்ற அர்ஜுனனும் துரியோதனனும் என்ன செய்தார்கள்? அர்ஜுனன் காலின் அருகே அமர்ந்தான், துரியோதனனன் தலைக்கு அருகே அமர்ந்தான். காலின் அருகே இருந்தவனுக்கு உபதேசம் கொடுக்கப்பட்டது.

நான் யாருக்கும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் என களம் இறங்குவதில்லை. ஒருவர் என்னை வணங்கினால் அவர் சரணாகதி அடைய நான் கருவியாக இருக்கிறேன். அவ்வளவே..!

மற்றபடி நான் வரம் தருவதோ அல்லது அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைப்பதோ இல்லை.
தன் அகந்தையை என் காலில் இட்டு சென்றவனுக்கு என்ன வரம் தருவது? அவனே இறைவனாகிவிட்டானே...! இறைவனுக்கே யாரேனும் வரம் தருவார்களா?

பாருங்கள் காலில் விழும் கலாச்சாரம் என்ற காட்டுமிராண்டித்தனத்தை பேசத்துவங்கி என்ன என்னவோ உளறிக் கொண்டிருக்கிறேன்.

நாகரீகம் என்ற பெயரில் இயற்கை வளங்களையும் சக மனித நேயத்தையும் அழித்த நம்மைவிட காட்டை நேசித்து வாழ்ந்த் காட்டுமிராண்டிகள் மேலானவர்கள் தானே?

நான் உயர்ந்தவன் பிறர் காட்டுமிராண்டிகள் என கூற உங்களை தூண்டுவது எது என பாருங்கள் அதை யாரிடமாவது கொடுத்து உங்களை காலியான கோப்பை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இத்தனை சொல்லியும் நான் யார் காலிலாவது விழுவேன் என நீங்கள் அடம் பிடித்தால் , ஒருவர் காலில் விழும் முன் சிந்தியுங்கள். உங்களை தாழ்ந்தவர் என்றோ அல்லது உங்களை தன்மானமற்ற அடிமையாக எண்ணுபவர்கள் காலில் விழாதீர்கள். அது வணங்குதல் என்ற சரணாகதி தத்துவத்தை நீங்கள் அசிங்கப்படுத்தும் செயல்.
உங்களை தாழ்வாக நினைக்காதவர்கள் காலில் விழலாம் என கூறினேன் அல்லவா? யார் அவர்கள்? நம் பெற்றோர்கள் தம் குழந்தையை குறைவாக எண்ண மாட்டார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? நம் ஆசிரியர்கள் நம்மை என்றும் தாழ்வாக எண்ண மாட்டார்கள். ஆன்மீக உயர்வு கொண்டவர்கள். அனைத்தையும் ஆன்மாவாக பார்க்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களையும் நாம் வணங்கலாம்

சுருங்கச்சொன்னால் மாதா,பிதா, குரு தெய்வம் இவற்றை வணங்குகள். இவர்களை வணங்காமல் எதை வணங்கினாலும் நீங்கள் ஆன்மீக உயர்வு பெறப்போவதில்லை.

வேறு ஒருவரை நீங்கள் வணங்கினால் ஆன்மீகத்தில் உயர்வு பெற முடியாது. வேண்டுமானால் நீங்கள் அமைச்சர் ஆகலாம்...! என் வாழ்த்துக்கள்.

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

Wednesday, October 12, 2011

தேவ பிரசன்னம் - பகுதி 8

கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.

தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.

இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.

சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.

அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!

இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?

நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.

-பிரசன்னாகியது-

Monday, October 3, 2011

தேவப்பிரசன்னம் - 7

கோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.

தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?” என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.

தன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், “அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை” என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.

“சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா?”என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....

“பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள்.? 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா? என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா? மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்” என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.

அனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.

தங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.

விதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.

ஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...

தேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

சாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா?

ஹீ..ஹி...ஹீ...

(பிரசன்னமாகும்)