கும்பமேளாவிற்கு ஆன்மீகவாதிகள் ஏன் காத்துக்கிட்டு இருக்கனும்? அவர்கள் ஏற்கனவே உயர்நிலையில் இருக்காங்க இல்லையா? என கேட்டான் அப்பு.
விவரித்த வண்ணம் இருந்த தன் பேச்சின் நடுவே இடைமறித்த அப்புவிற்கு
உதட்டின் ஓரம் சிரிப்பை கொடுத்துவிட்டு தொடர்ந்தார் குருஜி...
“கும்பமேளா என்பது ஆன்மீக நிகழ்வு, ஒவ்வொரு உயிர்களுக்கு தேவையான நிகழ்வு. இதில் ஆன்மீகவாதிகள் வருவதற்கு காரணம் அவர்கள் மூலம் பல்வேறு உயிர்கள் முக்தியை நோக்கி நகர்த்தப்படும். அதுவும் மஹாகும்பமேளா அனைத்து ஆன்மீகவாதிகளும், மதவாதிகளும் சங்கமிக்கும் இடம். ஆன்மீகவாதிகளின் தனிப்பட்ட சில விஷயங்களுக்காக அவர்கள் அங்கே கூடுவார்கள். நாம் கூட அங்கே அதற்காகத்தான் செல்கிறோம்”
இவ்வரிகளை கேட்டவுடன் அப்புவின் கண்கள் மினுமினுத்தது.
குருஜி அப்புவின் கண்களை பார்த்தவண்ணம் தொடர்ந்தார்...
“ஆன்மீக ரீதியாகவும், யோக ரீதியாகவும் சில விஷயங்களை சொன்னேன்.
இனி உலக அதிசயமான கும்பமேளாவை சொல்லவா?”
”உலக அதிசயமா?” என கேட்டான் அப்பு.
“ஆமாம் பலராலும் பதிவு செய்யப்படாத உலக அதிசயம்...! உலகில் அதிகமான மக்கள் கூடும் விழா மஹா கும்பமேளா. அழைப்பிதழ்கள் இல்லாமல், விழா குழுவினர் இல்லாமல் துல்லியமாக நடைபெறும் விழா கும்பமேளா. இது போல உலகில் வேறு எங்கேயும் நடைபெறுவது இல்லை... உலகில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிய நிகழ்வு என்பது இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
மேலும் உலகில் வேறுபகுதிகளில் இவ்வளவு அதிகமான மக்கள் கூடுவது போர் சார்ந்த காரணத்திற்காக மட்டுமே இருக்கும். ஆனால் உலகில் அமைதி மற்றும் ஆன்மீக நோக்கில் இத்தனை மக்கள் கூடும் ஒரே நிகழ்வு கும்பமேளா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் அப்பு..” என கூறி இடைவெளிவிட்டார் குருஜி.
பிறகு தொடர்ந்த வண்ணம், “ அப்புறம் அலஹாபாத் என்ற ஊர் ரேகாம்ச, அட்சாம்சத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்தது...இந்திய தேச மணி 5.30னு சொல்றாங்க இல்லையா? அது கணக்கிடப்படும் ரேகாம்சம் 82.30 என்பது அலஹாபாத் புள்ளிதான். இப்பகுதி உலகின் நாடிகளாக வந்து அமைந்தது ஒருவித அற்புதம் தான். இல்லயா?” என்ற குருஜியிடம் அப்பு கேட்டான்...
“ குருவே ஒரு சின்ன கேள்வி இந்தியாவில் பல ஆன்மீக குழுக்கள் மற்றும் மதங்கள் இருந்தாலும் அவங்க எல்லாம் ஏன் ஒன்று கூடனும்? இந்த உலக அதிசயமா மக்கள் கூடுவது எப்போ ஆரம்பிச்சுது?” என கேட்டு விட்டு குருவின் பதிலுக்காக காத்திருந்தான் அப்பு.
சிறு பையனின் முன் பணிவுடன் இருக்கும் வயதானவரை யாரேனும் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இதை சோம் நாத் குருவின் இந்த பிறப்பின் தாயார் பார்த்தால் வேடிக்கையாகவா இருக்கும்?
எதிர்பாராத விதமாக அந்த அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி இருவரின் நிலையை பார்த்து அதிர்ந்தார்...
(மேளா தொடரும்)