Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Tuesday, March 17, 2009

எனது குருவை பற்றி சில ரகசியங்கள்


நம் ஆட்களுக்கு ஒரு பழக்கம்...

ஒர் அலுவலகம் சென்றார்கள் என்றால் அங்கே இருக்கும் நபரிடம் வேலை விஷயமாக பேசி முடித்தவுடன் என்ன செய்வார்கள்?

கொஞ்ச நேரம் அங்கே இருக்க வேண்டும் என வைத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

அந்த நபர் தீர்ந்தார்...

அந்த நபரிடம் நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தையோ, புத்தி பூர்வமாகவோ பேச மாட்டோம்...

என்ன சார், நீங்க எங்கிருந்து வரீங்க?

தினமும் அந்த வழியாதான் வருவீங்களா?

எத்தன வருஷமா சார் இங்கே வேலை பார்க்கறீங்க?

இதே இருவரும் பெண்ணாக இருந்தால்..

உங்க சேலை நல்லா எடுப்பா இருக்கு. எந்த கடையில எடுத்தீங்க?


இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய போகிறார்கள்? ( இல்லை...என்ன செய்ய போகிறீர்கள் :) )

சிலரிடம் இதை நேரடியாக கேட்டதுண்டு. “சும்மா ” கேட்க கூடாதா? என்பார்கள்.

இதையெல்லாம் விடுங்கள் பொருத்துக்கொள்ளலாம். என்னை போன்ற ஆட்கள் இவர்களிடம் சிக்கினால் தொலைந்தோம்..

பின்வரும் கேள்வியை சராமாரியாக கேட்பார்கள்.

ஸ்வாமி உங்க குரு யாரு ?

தினமும் சாப்பிடுவீங்களா?

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

சினிமா பார்க்கிறது ..... உண்டுங்களா?

ஒரு குறிப்பிட்ட ஆன்மீகவாதி (வியாதி) பெயரை சொல்லி.. அவரை பத்தி என்ன நினைக்கிறீங்க?

இந்து மதம் மாதிரி வேற எங்கையுமே கிடையாது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

சமாதி-னா என்ன ஸ்வாமி?

குண்டலினி எனக்கு எந்த சக்ரத்தில இருக்குனு சொல்லுங்க..


எஃசெட்ரா..
எஃசெட்ரா..
எஃசெட்ரா.....

ஆன்மீகமாக வாழ்வதால் தேவலாம். இல்லையென்றால் மன அழுத்தத்தில் மன நல மருத்துவ மனைக்கு ஒரு நல்ல நோயாளி கிடைத்திருப்பார்.

எந்த கேள்வியை வேண்டுமானால் சகித்து கொள்ளலாம்.

உங்க குரு யாரு ? என கேட்கப்படும் கேள்விக்கு என்னால் உண்மையாக உணர்வுகளை காட்ட முடியாது.

அவ்வாறு காட்டினால் கேள்வி கேட்டவர் தாங்க மாட்டார் என்பதே உண்மை.

எனது குரு யாராக இருந்தால் என்ன? அதை தெரிந்து கொண்டு இவர் என்ன செய்ய போகிறார்?
இல்லை எனது குருவிடம் சென்று கற்று என்னை போல ஆகவேண்டும் என நினைக்கிறாரா?
அல்லது என்னை பற்றி எனது குருவிடம் புகார் சொல்ல போகிறாரா?

புகழ் பெற்றவரின் பெயரை சொல்லி இவர்தான் என் குரு என சொன்னால் என்னையும் நல்லவர் என முடிவு செய்வாரா?

“கொல்லிமலை ஒத்த வேர் சித்தர்” என ஒருவரை சொல்லி இவர் தான் எனது குரு என சொன்னால் என்ன செய்ய போகிறார்?

-என எனக்குள் பல கேள்விகள் எழும்.

எனது ஒரு கேள்வியை பற்றி சில விஷயங்களை சொன்னதற்கே இத்தனை குழப்பம் உங்களுக்கு இருக்கிறதே. என்னை சிந்தித்து பாருங்கள்..!

இளம் பெண்ணிடம் வயதையும், ஆண்களிடம் சம்பார்த்தியத்தையும் கேட்க கூடாது என்பார்கள்.

இதில் இன்னொன்றையும் சேர்த்திக்கொள்ளுங்கள், ஆன்மீகவாதிகளிடம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள்.

பரசுராமர் தனது குருவிடம் தனது குருவின் குருவை பற்றி கேட்டார். பரசுராமரின் குரு தத்தாத்ரேயர், அவர் தனக்கு 24 குருமார்கள் இருக்கிறார்கள் என்றும் எறும்பு, சிலந்தி,கடல், நரி என விளக்கி கொண்டே போனார். அது போல எனக்கும் நிறைய குருமார்கள் இருக்கிறார்கள்.

எனது குரு பிரம்மாண்டமானவர் அவர் இந்த பிரபஞ்சத்தின் எல்லையை உணர்ந்தவர். அப்படிப்பட்டவரை சிறிய மூளையால் உணர்ந்து, சின்னஞ்சிறு வாய் கொண்டு கூற முடியுமா?

இருந்தாலும் எனது ஒரு குருவை பற்றி கூறுகிறேன்.

எனது குரு பட்டாம்பூச்சி.

பட்டாம்பூச்சி தனது பிறப்பால் புழுவாக இருந்தாலும், தனது அறிய முயற்சியால் வண்ணம் கொண்ட இறகு பெற்று உலா வருகிறது.

இதன் மூலம் பிறப்பால் எப்படி பட்டவனாக இருந்தாலும், ஆன்மீக சாதனையால் உன்னை விடுதலையாக்கு என்பதை வண்ணத்துப்பூச்சி எனக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்தார்.

தினமும் ஒரு பூவில் அமராமல் பல இடங்களுக்கு சென்று வருவது எனது குருவின் இயல்பு. இதன்மூலம் உனக்கு நிரந்தரமான உடல், வீடு, பந்தம் என்பது இல்லை என்பதை கற்றுகொடுத்தார்.

பூக்களுக்கு சுயமாக மற்றொரு பூவை உருவாக்கும் தன்மை இல்லை. வண்ணத்துப்பூச்சிகளே பூக்களை எங்கும், என்றும் மலர காரணமாக இருக்கிறது.
எங்கு எல்லாம் உயிர்கள் உயிர்பற்று இருக்கிறதோ அங்கே சென்று உயிரை மலரசெய் என எனது குரு கற்றுகொடுத்தார்.

தனது தோற்றம் கூட பிறரை கவர்ந்து ஒரு ஷணம் என்னில் அனைவரும் தியானித்து இருக்க செய்ய வேண்டும் எனும் பழக்கத்தை ஊட்டியவர்தான் எனது குரு.

வண்ணத்து பூச்சி என எனைவராலும் அழைக்கப்ப்ட்டாலும்
எனது குரு வண்ணங்களால் மட்டுமல்ல
எனது வாழ்க்கையின் எண்ணங்களால் நிர(ற)ப்பபட்டவர்.

----------------------------------------------------------------------------
எதற்கு இந்த குரு புராணம் என்று தானே கேட்கிறீர்கள்?

திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் என்னை பட்டாம்பூச்சி விருது வழங்கி தொடர் பதிவு எழுத சொன்னார். நமக்கு தான் ஜனரஞ்சகமாக எழுத தெரியாதே, அதனால் எனது குருவை பற்றி சில வார்த்தைகள் எழுதினேன்.
ஆன்மீக பதிவுகள் எழுதினாலும் மக்கள் படிப்பார்கள் என எனக்கு நம்பிக்கையூட்டியவர்களில் திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும் ஒருவர்.

MLM போல இதை மூன்று பேருக்கு வழங்கி தொடர செய்ய வேண்டுமாம்.

சரி எனக்கு தெரிந்த மூவரை அழைக்கிறேன். அவர்கள் பின் தொடர்வார்களா என தெரியாது.
ஆன்மீகத்தில் கூட என்னை பின் தொடர வேண்டும் என யாரையும் நிர்பந்தித்தது கிடையாது.
இருந்தாலும் அவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

என்னை கவர்ந்த வலைபதிவாளர்களை அழைத்தால் கண்டிப்பாக உதைப்பார்கள். காரணம் அவர்கள் பெரிய தலைகள் :)

ஆனால் என்னை கவர்ந்த நல் உள்ளங்களுக்கு விருதுகளை வழங்க இருக்கிறேன்.

திரு கோவி.கண்ணன். இவரை பற்றி தனி பதிவே எழுதி விட்டேன். இருந்தாலும் சில வார்த்தைகள். மேலே சொன்ன எந்த கேள்வியும் என்னிடம் கேட்காமல் பழகும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

திரு.எம்.எம் அப்துல்லா - இவரை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் உள்ளுணர்வு இவரை பற்றி சில நற்கருத்துக்களேயே சொல்லுகிறது. இவரின் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ சமீபமாக எதையும் எழுதுவதில்லை. :)

திரு.ரவிசங்கர் - இவரின் பதிவுகள் சில கவிதையும், சிறுகதையும் “அட” போட வைக்கும். நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர் என நினைக்கிறேன்.பலதளங்களில் பதிவு செய்வது இவரின் பலம் என நினைக்கிறேன்.

எனக்கு விருது வழங்கியவரும், நான் தொடர சொன்னவர்கள் இருவரும் தமிழ்மண விருதுவாங்கியவர்கள். மோதிர கையால் குட்டு வாங்க வேண்டும் என்பார்கள். என் தலை தாங்காது சாமி :).


------------------------------------------------------------------------------------
பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)