Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, July 27, 2025

நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை

ஜெர்மனியில் நடைபெற்ற யோக மாநாட்டில் தான் முதன்முதலில் ‘ஐயங்கார் யோகா’ என்ற பெயர் கேட்டேன். திராவிட பூமியில் வாழும் எனக்கு உடனடியாக ஒரு புரட்சி மோடில் சிந்தனை உருவானது. ‘ஐயங்கார் யோகா’ என்றால் பிற ஜாதியினருக்கும் தனித்தனி யோகா இருக்கிறதா? எங்கே சமத்துவம்? எங்கே சமூக நீதி? என்று கார்ல் மார்க்ஸ் பிறந்த பூமியில் நின்று கேள்விகள் எழுப்பினேன்.

பின்னர் தான் தெரிந்தது, யோக முறையில் பி. கே.எஸ். ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகை யோகா தான் ‘ஐயங்கார் யோகா’.

ஐயங்கார் யோகாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, யோக மரபின் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். யோக மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் நிலவி வரும் ஓர் ஆன்மீக மரபு. இதில் பல்வேறு யோக முறைகள் அடங்கும். இராஜ யோக மரபில் அஷ்டாங்க யோகத்தில் உள்ள ஆசனங்கள், ப்ராணாயாமம் போன்றவை நாத பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்டவை. மச்சீந்தர நாதர் மற்றும் கோரக்க நாதர் பல நூல்களை எழுதி ஹத யோக மரபை உருவாக்கினார்கள். ஹத யோக ப்ரதீபிகா என்ற நூலை ஸ்வாத ராமா (ராமநாத்) என்ற நாத வழி அறிஞர் எழுதியவர். இன்று வரை கோரக்கர் மற்றும் ஸ்வாதராமரின் நூல்களே ஹத யோகத்திற்கு ஆதாரமாக உள்ளன. தமிழில் ‘திருமந்திரம்’ ஹத யோகத்தைப் பற்றிச் சொல்லும் முக்கிய நூலாகும். இதில் மூன்றாம் தந்திரம் யோக மரபுகளுக்கான ஆதார நூலாக இருக்கிறது. அதில் ஹத யோக முறைகளும் விளக்கப்படுகின்றன.

முந்தைய யோக நூல்களில் எதிலும் ‘யோகம் இவ்வகை நோயை தீர்க்கும்’ என கூறப்படவில்லை. ஹத யோகம் ஆன்மீக உயர்வுக்கான கருவியாகவே விளக்கப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் யோக முறை பல நவீன பாய்ச்சல்களை சந்தித்தது. ‘மாடர்ன் யோகா’ என்ற பெயரில் தனது மரபை மாற்றிக்கொண்டு, ஹத யோகத்தின் முக்கிய உறுப்புகளான ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா மற்றும் பந்தா ஆகியவற்றில், ஆசனம் மற்றும் ப்ராணாயாமத்தையே முன்னிறுத்தி பயிற்சிகள் அளிக்கபட்டன. இவ்வாறான நவீன யோக மரபுகள் முக்கியமாக எதை மறைத்தது என்றால் கோரக்கர் மற்றும் நாத பாரம்பரியத்தால் ஹத யோகம் தோன்றியது என்ற வரலாற்றை தான்.

இன்று ஹத யோகத்தை பயிலும் பெரும்பாலானவர்களுக்கு கோரக்க நாதர் மற்றும் அவர் எழுதிய முதல் யோக நூல் பற்றிய தகவலே தெரியாது.

நவீன யோக மரபினர் யோகத்தின் தந்தையாக பதஞ்சலியை குறிப்பது வழக்கம். யோக சூத்திரம் போன்ற நூல் மூலம் அவர் தன் பங்களிப்பை செய்திருக்கலாம். ஆனால் அவர் கூறும் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்ற வரிகளில் ஆசனம் ஸ்திரமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் ஆசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை ஆசனங்கள் உள்ளன என்பதற்கான வழிகாட்டுதல் யோக சூத்திரத்தில் இல்லை. ஏற்கனவே ஹத யோக ப்ரதீபிகா போன்ற நூல்கள் இருந்ததால், பதஞ்சலி அவற்றைப் பற்றிக் கூற தேவையில்லை என்று எண்ணியிருக்கலாம்.

பகவத் கீதையிலும் யோக சூத்திரத்திலும் ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. ஆனால் ஹத யோகத்தை முறையாக விளக்கியவர் கோரக்க நாதர். எனவே ஹத யோகத்திற்கு தந்தை கோரக்கர் தான் எனலாம்.

நாத சம்பிரதாயத்தில் இயங்கும் எனக்கு நவீன யோக மரபில் ஏற்க இயலாத அம்சங்கள் பல உள்ளன. குறிப்பாக கோரக்கர், திருமூலர் போன்றவர்களை முற்றிலுமாக மறந்துவிட்டு, யோகத்தை சிகிச்சை பொருளாக மாற்றிவிட்டது முக்கிய குறைபாடாக உள்ளது.

“பச்சிமுகத்தாசனம் செய்தால் முதுகெலும்பு வலி போகும்”, “ப்ராணாயாமம் செய்தால் மன உளைச்சல் குறையும்” போன்ற சிகிச்சை நோக்குடன் யோக முறை விளக்கப்படுவது எனக்கு ஒத்துவராதது. சிகிச்சை நோக்கில் ஆசனம் செய்யப்படுவதால், ஆசனத்தின் உண்மை தன்மை குறைந்து விடுகிறது. இது காயகல்ப மூலிகையை பசிக்கு உணவாக கொடுப்பதைப் போன்றது.

இப்போது கூட ‘முத்திரை செய்தால் நோய் குணமாகும்’ என்ற வகையில் யோக முறைகள் பரப்பப்படுகின்றன. ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாழ்வியல் முறையாக செயல்படுத்தினால், அது அறியாமையால் ஏற்படும் துன்பங்களை போக்கும். அறியாமையை களைந்தால் ஆனந்தம் உருவாகும் — இவ்வளவுதான் யோகத்தின் கருத்து.

“கடன் தீர ஆசனம்”, “காதல் கைகூட ஆசனம்”  என யாராவது சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறதோ, அதே போலவே “வியாதி தீர ஆசனம்” என்பதும் அத்தகைய விஷயமே என்பது என் கருத்து.

நாள்பட்ட நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு யோக பயிற்சியாளர் ஒருவர் தீர்வு கூறிக்கொண்டே இருந்தாலும், அதே நபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது - யோகம் என்பது நோய் தீர்க்கும் கருவி அல்ல, அது அறியாமையை போக்கும் ஒரு உள்பார்வைக் கருவி.

இத்துடன் விட்டார்களா ? மேலைநாடுகள் “பீச் யோகா”, “பீர் யோகா” என பல வியத்தகு பெயர்களில் யோகத்தைத் தங்களுக்கே உரியதுபோல் மாற்றுகின்றனர். நம் நாட்டிலும் பலர் “வாட்ஸ்அப் யோகா”, “இன்ஸ்டாகிராம் யோகா” என மரபை சீர்குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எனினும், நவீன யோக மரபிலும் சில முக்கியமான வைரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள கைவல்ய தாம் என்ற நிறுவனம் மற்றும் ஐயங்கார் யோகா ஆகியவை ஹத யோக மரபை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி வரும் சிறந்த நிறுவனங்களாகும். முக்கியமாக ஹத யோக பயிற்சியை உலகளவில் பரப்பியவர் பி. கே.எஸ். ஐயங்கார்.

சமீபத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் பி. கே.எஸ். ஐயங்கார் எழுதிய நூலை தமிழில் ‘நலம் தரும் யோகம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த நூலை வாசித்து கருத்து சொல்ல கேட்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் பட்டு நெசவாளியிடம் பிகினி உடையைப் பற்றி கருத்து கேட்பது போல தான் - நான் இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதும்..! இருந்தாலும் ஹத யோக குடும்பத்தின் கீழ் வருவதால், என் கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

ஆங்கில நூலை பல வருடங்களுக்கு முன்பே வாசித்தேன். முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த தமிழ் நூல் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசனங்கள் செய்வது எப்படி என்பதையும், ப்ராணாயாமம் முறையையும் தெளிவாகக் கூறியுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹத யோக ஆசிரியர் ஒருவரிடம் ஆசனங்கள், ப்ராணாயாமம் கற்றுக்கொண்ட பிறகு, இந்நூல் பயிற்சியாளராக ஆசனங்களை மேலும் துல்லியமாக செய்ய உதவும். தமிழ் ஹத யோக வாசகர்களுக்கான அரிய நூல் இது.


புத்தகம்: நலம் தரும் யோகம்

வெளியீடு: காலச்சுவடு
விலை: — 295 ரூபாய்

0 கருத்துக்கள்: