க்ரோக்....க்ரோக்...
மனுசங்களா வணக்கம். நான் தான் ஞானம் பெற்ற தவளை பேசறேன்.
தவளைக்கு எப்படி ஞானம் கிடைக்கும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
ஆன்மீகத்தில மேல வர தியானம், யோகா எல்லாம் செஞ்சு கோவிலுக்கு எல்லாம் போயி கஷ்டப்பட்டும் எங்களுக்கு ஞானம் வரலை. ஆப்ட்ரால் நீ ஒரு தவள உனக்கு எப்படி ஞானம் வந்துச்சுனு நீங்க பொறாமையில் கேட்பீங்க.
மனுசனுங்க மட்டும் தான் ஞானம் அடையனும், மிச்ச உயிர்கள் எல்லாம் ஞானம் அடையாதுனு நினைக்கறது உங்க ஆணவம் தானே? அந்த ஆணவம் இருந்தா நீங்க எப்படி ஞானம் அடையமுடியும்?
வேதகாலத்தில் எத்தனையோ மிருகங்கள் ஞானம் அடைந்து ஞானிகளாகி வேதகருத்துக்களையும், ஞானக்கருத்துக்களையும் சொல்லி இருக்காங்க.
ஞானியான மிருகம் சொன்ன விஷயத்தை அறியாமையில் இருக்கிற மனுசனால ஏத்துக்க முடியாதுனு ஞான மிருகங்களுக்கும் மனுச உருவம் கொடுத்துட்டாங்க.
புலி ஆன்மீகமா இருந்துச்சு அதற்கு வியாக்ரபாதர் என பெயர் கொடுத்துட்டாங்க, பாம்பு ஞானம் அடைஞ்சுது அதற்கு பதஞ்சலினு பேரு கொடுத்து மனுச உருவம் கொடுத்துட்டாங்க. மீன் ஞானியா வாழ்ந்துச்சு அதுக்கு மச்ச முனினு பேரு.
இதுமாதிரி மனுசங்க மிருகம் ஞானம் அடைஞ்சாலும் தங்களை மாதிரி உருவம் கொடுத்ததால எங்களுக்கு மதிப்பில்லாம போச்சு. நம்புங்க விலங்குகளுக்கும் ஆன்மீகம் இருக்கு, எல்லா உயிரும் ஞானம் அடையலாம்.
பாருங்க தவளையா இருக்கும் எனக்கு ஞானம் வந்து வேத கருத்துக்கள் எனக்குள்ள வர ஆரம்பிச்சுடுச்சு. இதை வெளியே சொன்னா என்னை தவளை முனி என கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. வட மொழியில் மாண்டுக்யம்-னா தவளை. என்னை மாண்டுக்கிய மகரிஷினு இப்பவே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
இப்ப இன்னாதுக்கு என் சுய விளம்பரம்னு கேட்கறீங்களா?
பிரபஞ்ச ஒலியில் கிடைச்ச வேத கருத்துக்களை உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.
இந்த பிரபஞ்சத்தில எல்லா விஷயம் உருவாகிறதுக்கும் ஒலி காரணமா இருக்கு. “ஓம்” அப்படினு சொல்லுவோம்ல? அந்த சப்தம் தான் அனைத்துக்கும் காரணம்.
ஓம் சப்தம் பிரபஞ்சத்தில் கிளம்பினவுடனே அதிலிருந்து எல்லாம் விஷயமும் வெளிப்பட ஆரம்பிச்சுடுச்சு.
ஓம்-னா அது ப்ரணவ மந்திரம் சொல்லுவாங்க. ஓம் என்ற சப்தம் ஒரே சப்தம் கிடையாது. அ - உ - ம அப்படிங்கற மூனு ஒலியோட கூட்டணிதான் ஓம்.
அ அப்படினு ஆரம்பிச்சு உ-னு நீண்டு ம்-னு முடிச்சா அதுக்கு ஓம்னு முழுசா கேட்கும்.
அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்.
அதனாலத்தான் அ- பிரம்மா, உ-னா விஷ்ணு, ம்-னா சிவன்னு சொல்லுவாங்க.
உண்மையில் இறைவனுக்கு உருவம் கிடையாது. அ-உ-ம வை குறிக்க உருவம் கொடுத்து வழிபடுறாங்க. ஓம்- ஒலிதான் இறைவன். அதன் உற்பகுதிகள் இறைவனின் செயலாக இருக்கு.
பிரபஞ்சம் பஞ்சபூதத்தால ஆனதுனு சொல்லுவாங்க. பஞ்ச பூதம் எதனால ஆனது தெரியுமா?
அ-உ-ம மூலம் மூன்று பூதமும், மூனு சப்தத்திற்கு இடையே சின்னதா கோடு போட்டிருக்கேனே அதிலிருந்து அடுத்த ரெண்டு பூதம்னு மொத்தம் பஞ்ச பூதம் உருவாச்சு.
வேதங்களும் அப்படித்தான் உருவாச்சு, அ சப்தத்தில் ரிக்வேதமும், உ சப்தத்தில் யஹூர் வேதமும், ம் என்பது சாம வேதமாகவும் இருக்கு. இதன் தொடர்ச்சிய அனைத்து சப்தங்களின் இணைப்பா இருக்கிறது தான் அதர்வணம்.
நீங்க மூச்சு எடுக்கிறீங்களே அதுக்கும் ஓம் தான் காரணம். அ என்ற நிலையில் உள்மூச்சும், உ என்ற நிலையில் மூச்சை உள்ளே நிறுத்தி, ம் என்ற நிலையில் மூச்சை வெளியிடுவீங்க.
அ-உ-மவில் சிந்திச்சா எல்லா விஷயமும் இதில் உருவாகி இருக்கு என புரியும்.
சமஸ்கிருதத்தை தேவ பாஷை என சொல்லுவாங்க. இதை கேட்டு நம்ம மக்கள் அப்ப நாங்க பேசறது கேவலமான பாஷையா என வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு வருவாங்க.
சமஸ்கிருதம் மட்டும் அல்ல தமிழும் தேவ பாஷைதான். அதனாலதான் ஞானிகள் பாட இரண்டு மொழியை மட்டுமே பயன்படுத்துறாங்க.
கல்தோன்றி மண் தோன்றா காலம் கொண்ட மூத்த மொழி தமிழ்னு ஸ்கூல் பாடத்தில் படிச்சிருப்பீங்க. கல்தோன்றா காலம்னா பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்து மொழி இருக்குனு அர்த்தம். பிரபஞ்சம் ஒருவாக ஓம் என்ற சப்தம் காரணம் என்பதால ஓம் என்பதே தமிழ் என புரிஞ்சுக்குங்க.
உங்க மொழி தெய்வீக மொழியான தெரிஞ்சுக்க ஒரு ஆராய்ச்சி செய்வோம்.
அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்னு முன்னாடி சொன்னேன். இதை நினைவில் வச்சுக்குங்க.
நம்ம மொழியில் இருக்கும் உருவாக்ககூடிய பெயர் சொல்லை பார்த்தால் அ சப்தம் வருவது போல இருக்கும். உதாரணம் குழந்தையை உருவாக்குபவர்கள், அம்மா, அப்பா. முடிவும் ஆரம்பமும் அ சப்தம் வருதா?
அதனால தமிழில் பிரம்மாவுக்கு அயன் அப்படினு பேரு. உங்களுக்கு சினிமா ஞாபகம் வந்தா அது என் தப்பில்லை.
நிர்வகிக்கும் விஷயத்திற்கும் வளர்ச்சிக்கும் உ சப்தம் வரும். மக்கள் வாழும் இடம்- ஊர், நிரந்திரமாக இருப்பது ஊறுகாய். ஊரணி, உட்காருவது. உணவு என வளர்ச்சி சம்பந்தபட்ட விஷயங்கள் உ சப்தம் கேட்குது.
ம சப்தம் முடிவு நிலையை குறிக்கும். மரணம், மகிழ்ச்சி, மன்னிப்பு, மறத்தல் என ம சப்தம் தற்காலிக முடிவு-இறுதி நிலையை குறிக்கும்.
எந்த மொழி அ-உ-மவின் அடிப்படையில் இருக்கோ அந்த மொழி தேவ மொழி அல்லது தெய்வீக மொழினு புரிஞ்சுக்கோங்க.
வடமொழியில் மாத்ரு, பிதா என அ-சப்தமும், குரூ - என்ற உ சப்தமும், தேவம் - என இறுதி நிலையையும் குறிக்கும்.
அதனாலத்தான் தமிழும் தெய்வீக மொழினு சொல்லறோம். ஓங்காரத்தின் சப்தம் வந்தா எந்த மொழியிம் தெய்வீகம் தானே?
உங்க மொழியை தெய்வீகமாக்கனும்னா அ-உ-ம சப்தம் வர மாதிரி பயன்படுத்துங்க.
அ சப்தம் பிரம்மாவை முதல் உருவாக்கும் இறைவனோட அம்சம் இல்லையா? அதனால அனைத்து மதத்திலும் இறைவனை அழைக்கும் சப்தம் அ-வில் துவங்கும். கவனிச்சு பாருங்க.
அம்மாவை வாய் நிறைய அம்மானு கூப்பிடுங்க. மம்மினு கூப்பிட்ட முடிவு நிலை வந்துடும். மம்மினு எகிப்துல இருக்கிற பொணத்துக்கு பேரு இருக்கு. ம-னு ஆரம்பிச்சதால அது இறுதி நிலையில் இருக்கு.
நம்ம வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அ-உ-ம காரணமா இருக்கு. அதை விழிப்புணர்வோட கவனிச்சா நீங்க பூச்சியா இருந்தா கூட ஞானம் அடையலாம். மனுசனா இருக்கனும்னு அவசியம் இல்லை. ஓங்காரத்தை கவனிக்கலைனா நீங்க மனுசனா இருந்தும் பிரயோஜனம் இல்லை..
திருமூலர் என்கிட்ட கத்துக்கிட்டுதான் திருமந்திரத்தில இந்த விஷயத்தை பிட் அடிச்சுருக்காரு.
நீங்களே கேளுங்க..
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628
-------------------------
குறிப்பு :
மாண்டூக்ய உபநிஷத் என்னும் பேரறிவை எளிமையான நடையில் விளக்கும் முயற்சி இது. உபநிஷத்தை எப்படி இவ்வாறு கூறலாம் என சில வேத வித்துக்கள் பொங்க வாய்ப்புண்டு. அவர்களிடம் நான் வேண்டுவது எல்லாம் ஒன்றுதான். நீங்க கோபத்தில் சாபம் கொடுக்க எண்ணினால்,
“கோடான கோடி பிறவிகள் ஈனமான பிறவியாகிய ஓம்காராகவே பிறந்து இறக்க கடவது” என சபிக்கவும். தன்யனாவேன்..!