Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, July 25, 2011

சென்னையில் தியான பயிற்சி


[பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும் ]
மேலும் விபரங்களுக்கு தொலைபேசுங்கள்.

சில கருத்துக்கள் :

ப்ரணவ பீடம் சார்ந்த ஆன்மீக பயிற்சிகள் கட்டண பயிற்சியாக இருக்கிறது சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எனக்கு பயிற்சி கட்டணம் இல்லாமல் அனைத்து பயிற்சியும் இலவசமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நீங்கள் பயிற்சியில் பங்கு பெற்று பயிற்சி அரங்கம், உணவு மற்றும் புத்தககங்களுக்கு உண்டான செலவை அனைவருக்கும் ஏற்றுக்கொண்டால், உங்களின் தயவில் பிறருக்கு இலவசமாகவே கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறோம்.

மேலும் உங்களின் பகுதியிலும் இத்தகைய இலவச பயிற்சி நடத்த உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தனி மடல் எழுதவும். குறைந்த பட்சம் பத்து நபர்கள் அவர்களுக்கு உண்டான உணவு, புத்தகம் மற்றும் அரங்கம் ஆகியவை தயார் செய்து கொண்டு தேதியை முடிவு செய்தால் உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் சென்று இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்.

நான் ரெடி... அப்ப நீங்க?

Thursday, July 21, 2011

குண்டலினி வாங்கலையோ குண்டலினி....! பகுதி 2

குண்டலினி பயிற்சியில் சில மாற்றங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் நடக்கும் என்றேன் அல்லவா?

ஜப யோகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் குரு கொடுக்கும் மந்திரங்களை தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் சரியாக ஜபம் செய்யாவிட்டால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. கால விரயம் மட்டுமே ஏற்படும். சரியாக ஜபம் செய்தால் ஆன்மீக அற்றலில் மேம்பட்டு இறைநிலையுடன் இணைவீர்கள்.

பிற யோக முறைகளை விட குண்டலினி பயிற்சி குருவின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே பயில வேண்டும் என கூறுவார்கள். காரணம் இதை சரியாக பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் பின்விளைவுகள் உண்டு..!

இவ்விளைவுகளை தீர்க்கும் ஆற்றல் குருவுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் வாழ்ந்து அவரின் முன் இருந்து பயிற்சி செய்வது அவசியம். ஆனால் நடை முறையில் இவ்வாறு இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்றே பதில் கூற முடியும்.

ராஜ யோக சதனா செய்யும் பொழுது உடலின் வலிமை முதலில் முற்றிலும் இழந்து பிறகு பெற வேண்டி இருக்கும். உடல் தன் இயல்பை தொலைத்து புது வடிவம் பெற துவங்கும் பொழுது உடலின் வெப்பம் மிக அதிக அளவில் உருவாகும். அல்லது கடுமையான குளிர் உணர நேரும்.

சராசரி மனிதன் 105 டிகிரி உடல் வெப்பம் கண்டாலே உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடுவான். அப்படி இருக்க இத்தகைய பயிற்சியில் 116 முதல் 122 வரை உடல் வெப்பம் உயருவது சாதாரணமாக நடக்கும்.

இது மனித உணர்வால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வெப்பம். அதே போல குளிரும் மிகவும் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும்.

தமிழகத்தில் சித்திரை மாதத்தில் -5 டிகிரி குளிர் என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அனேகமாக முன் தெளிவு இல்லாமல் இப்பயிற்சி செய்பவர்களுக்கு நிகழ்வது இதுதான்.

அதிக உடல் வெப்பத்தால் மூல நோய் மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டு தொடர் ரத்த இழப்பு ஏற்படும் அல்லது அதிக குளிரால் உடல் இரத்தம் உறைந்து இருதய துடிப்பு நிற்கும் அபாயம் உண்டு.

மஹா ஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து யோக முறைகளையும் முயற்சித்து அதன் உச்சியை அடைந்தவர். அவர் குண்டலினி யோகம் பயிற்சி செய்து அவரின் பற்களில் தொடர்ந்து ரத்தம் கசிய துவங்கியது. இடைவிடாமல் இரத்தம் வாய்வழியே வந்து கொண்டே இருந்தது. ராம கிருஷ்ணரின் குரு அச்சமயம் வந்து அவரை சரியாக்கி மேம்படுத்தினார். இச்சம்பவத்தை அவரின் சரிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் நிலையை யோசித்து நாமும் முயற்சி செய்வது நல்லது..!

நடைமுறையில் குண்டலினி பயிற்சி அளிப்பவர்கள் ஏழு சக்கரங்களின் படங்களை பெரிதாக காண்பித்து இன்ன சக்கரம் இது செய்யும் என விளக்கி பிறகு பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் மனித மனம் தன் நிலையிலிருந்து மேம்படாமல் கற்பனை எனும் பாழும் கிணற்றில் விழுகிறது. மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே கதையாகி விடும் அல்லவா?

அப்படியானால் இதை எவ்வாறு பயிற்சி கொடுப்பது?
எனக்கு தெரிந்த ஒரு யோகி தன் சீடனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார் குண்டலினி என்பதில் இது எல்லாம் ஏற்படும் என்கிறார். சிஷ்யன் சரி நீங்கள் பல மணி நேரம் விளக்கியதை பார்த்தால் இதற்கு பல நாட்கள் அனுபவம் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும் போல இருக்கிறது என்கிறார். அதை மறுத்த குரு தன் சிஷ்யனுக்கு முழு அனுபவத்தையும் ஆறு நிமிடத்தில் உணர்த்துகிறார்.

அனுபவம் கிடைத்ததும் சிஷ்யன் சொல்லுகிறான், குருவே நீங்கள் கூறியவிஷயம் எல்லாம் நான் அனுபவித்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் நீங்கள் கூறியது போல இல்லையே...அதில் சில விஷயங்கள் கூட இருந்தனவே என்கிறான். அதற்கு குரு கூறுகிறார், “நீ உண்மையாகவே அனுபவம் கொள்கிறாயா அல்லது கற்பனை செய்கிறாயா என காணவே அவ்வாறு முக்கிய சில கூறுகளை விட்டு விட்டேன். மேலும் நீ அதில் கண்ட காட்சி இப்படி இருந்ததா..” என நீள்கிறது அவர்களின் சம்பாஷணை. இவ்வாறு குரு சிஷ்யனும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதே ராஜயோகம்.

நம் உபயோகப்படுத்த ஒரு பொருளை கடைகளில் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு உபயோகப்படுமா? அல்லது நம் வாழ்க்கை முறைக்கு தொந்தரவு கொடுக்குமா என பார்ப்போம். இது தானே நடை முறை? ஆனால் குண்டலினி பயிற்சி பெறும் பலருக்கு இதன் அவசியம் தெரியாது. சிலர் எனக்கு முதுகு வலி உண்டு அதனால் இப்பயிற்சி செய்கிறேன் என்கிறார்கள். இது உடல் வலிக்கு யானையை அழைத்து மசாஜ் செய்வதை போன்றது.

சில யோக பயிற்சி கழகங்கள் முழுமையான அதிக சிக்கல்கள் கொண்ட பயிற்சியை சராசரி மனிதனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் ராஜயோக பயிற்சியை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் முழு பயிற்சியையும் வருபவர்களுக்கு சுண்டல் வழங்குவதை போல வழங்கிவிடுகிறார்கள். ஏழு நாட்களில், மூன்று மணிநேர பயிற்சிக்கு பிறகு பயின்றவரும் வீட்டுக்கு வந்து கடுமையாக பயிற்சி செய்வார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவருக்கு தியரி முறையில் விமானத்தை பற்றி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றதும் விமானத்தில் கயிரால் உடலை கட்டிக்கொண்டு வானில் பறக்க முயல்வதற்கு சமம்.

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூலையே குருவாக கொண்டு பயிற்சி செய்யவும் கூறுகிறார். இவ்வாறு பலர் முயற்சிக்கிறார்கள். அதில் தவறு அல்ல. காரணம் அந்த புத்தகம் ஓர் அனுபவ வடிவம். இல்லையேல் குருவினை நாடி பயிற்சி செய்யுங்கள்.

குண்டலினி பயிற்சி செய்வதாலும் தவறாக செய்வதாலும் கீழ்கண்ட உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகள் நிகழும்.
  • கடுமையான மூல நோய்
  • எதிர்பாராத நிலையில் தன் நினைவு இழத்தல்
  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • சுவாச கோளாருகள்
  • பக்க வாதம் போன்று ஒரு பக்க உடல் செயல்படாமல் இருத்தல்
  • கண்பார்வையில் ஏற்றத்தாழ்வுகள்
  • மன நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உங்களின் இயல்பு குணம் சென்று குழந்தை தன்மையோ அல்லது ஆழ்ந்த அமைதியோ ஏற்படுதல்.

மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தால் குண்டலினி யோகம் பயிலலாம்.

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படித்து ஒருவருவர் என்னிடம் தனி மடலில் பின்வருமாறு கேட்டிருந்தார்.

“நான் ஒருவரிடம் எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றேன். அதில் எனக்கு நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..இதை நீங்கள் ஏன் தவறாக காண்கிறீர்கள்” என்கிறார். இவர்களை போன்று கேட்பவர்களுக்கு என் பதில் இதோ..

“ஐயா.. குண்டலினி என்ற பெயரில் நடப்பதெல்லாம் குண்டலினி பயிற்சி அல்ல. அப்பெயரை கொண்டு சாதாரண யோக ஆசனங்களை கொண்ட பயிற்சியே பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியை கற்று எனக்கு குண்டலினி ஒரு நாள் எழும் என கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அல்லது தினமும் பயிற்சி செய்யும் பொழுது என் குண்டலினி என் ஆக்னா சக்ரத்திற்கு ஏற்றி இறக்கினேன் என நீங்களே நினைக்கலாம்.

குழந்தைகள் ஓடத்துவங்கும் காலத்தில் கால்களை தரையில் உதைத்து வாயில் சப்தம் எழுப்பி பைக் ஓட்டுவார்கள். அவர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை, ஹெல்மெட் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படாது. அவ்வாறு அவர்கள் கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவே.. நீங்கள் பெற்ற குண்டலினி பயிற்சியும் அத்தகையதே என்பதால் உங்களுக்கு எதுவும் நிகழவில்லை. பயிற்சியில் உங்கள் உடல் மற்றும் மனம் மாற்றம் ஏற்பட்டால் நம்மால் உணரமுடியாமல் இருக்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டமல் போனால் அது எவ்விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள்.”

உங்களுக்கு ஏன் இந்த வேலை? யாரோ யாருக்கோ குண்டலினி பயிற்சி கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன இழப்பு என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். கோவையில் தவறான பயிற்சியாலும், தவறாக பயின்றதாலும் பலருக்கு உடலில் மற்றும் மனதில் ஏற்படும் நோய்களை யோக முறையிலேயே சரியாக்க என்னைத்தான் அழைக்கிறார்கள். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வருத்தத்துடன் சொல்லுகிறேன்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் அதிகமாகிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களை கண்டு அவர்களுக்கு குணமளித்துவிட்டு சும்மா இருக்க என்னால் இயலவில்லை. பலருக்கு முன் தெளிவு கொடுக்கவே இந்த கட்டுரை எழுத தேவை ஏற்பட்டது.

இதையும் மீறி நான் முறையற்ற பயிற்சி செய்வேன்.. அந்தரத்தில் பறப்பேன், போன ஜென்மத்தை உணர்வேன் என நீங்கள் கிளம்பினால்.....



உங்களுக்கு என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்...!


--சக்தி சஹஸ்ராரத்தை அடைந்தது--

Tuesday, July 19, 2011

குண்டலினி வாங்கலையோ குண்டலினி....!

ஆன்மீகம் வியாபாரமாக மாறி கடைவீதிக்கு வந்ததும் முதன் முதலில் வியாபார பொருளான விஷயமும் அதிகம் விற்கும் பொருளின் பெயர் என்ன தெரியுமா? - குண்டலினி.

ஹேமாமாலினியையும், ஜெயமாலினியையும் தெரியாதவர்கள் கூட நம் ஊரில் இருப்பார்கள். ஆனால் குண்டலினியை பற்றி தெரியாதவர்கள் மிகக்குறைவு.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது.

ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.

குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது. பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது. குண்டலினியை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள். அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள். இதில் வேடிக்கையான விஷயம் பதஞ்சலி விக்ரஹத்தை பாம்பு வடிவில் சித்தரித்து இருப்பார்கள். குண்டலினி பாம்பு வடிவில் இருப்பதாக நம்புவதால் அச்சக்தியை குறிக்கும் வகையில் பதஞ்சலி பாம்பாகிவிட்டார். உண்மையில் பதஞ்சலி நேரடியாக குண்டலினியை பற்றியோ ஆதார சக்ரங்களை பற்றியோ கூறவில்லை...!

முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால் இதற்கு ராஜயோகம் என பெயர். மேலும் ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது. அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.

எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!

குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல. இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம். அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர் பல நூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக எடுப்பது வியாபாரத்தின் அடையாளம் எனலாம்.

பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள் என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும் என்பது என் கருத்து.

மேலும் கணவனோ மனைவியோ பொது இடத்தில் தங்களுக்குள் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக விளக்கினால் நாம் முகம் சுளிப்போம் அல்லவா? அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது.

தற்சமயம் ஒரு எழுத்தாளர் கூட தன் குரு தனக்கு கொடுத்த குண்டலினி அனுபவத்தை மேடைக்கு மேடை விளக்குகிறார். இவரை பார்த்து பிற ஆன்மீகவாதிகள் நெளிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை. ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.

சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?

தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும், தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள். இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம் இந்த யோக கழகங்கள்.

இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள். பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள். இது எப்படி நிகழ முடியும்?

ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம். அங்கே கடவுள் தெரிகிறார். அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார் என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ராஜ யோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவியோடு ஒப்பிட்டார்கள் என்றேன் அல்லவா? ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு கலவி பற்றி கற்றுக்கொடுத்தால் அவனால் அதற்குரிய அனுபவம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும். அவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய கற்றது பயன்படாது. அது போன்றதே ராஜ யோகம் என்பதை உணருங்கள்.

ராஜயோகம் பயிலும் பொழுது பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகள் வரும். அதை சரியான குருவின் வழிகாட்டுதலால் மட்டுமே களைய முடியும். அப்படி என்ன உபாதைகள் வரும் என கேட்கிறீர்களா?

(குண்டலினி எழும்..)

Sunday, July 10, 2011

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்


விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Monday, July 4, 2011

பழைய பஞ்சாங்கம் 04/07/2011

பிரசாத ஸித்தி ரஸ்து..!

இறைவனுக்கு உணவை படைத்துவிட்டு சாப்பிடுவதால் ஆற்றலுடன் அவ்வுணவு நம்முள் எவ்வாறு இயங்கும் என்பதை செய்முறையுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

வகுப்புக்கு இடையே தனக்கு சந்தேகம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக சுப்பாண்டி கைகளை உயர்த்தினான். “சாமி எங்க குலதெய்வம் கருப்புராயன். வருடத்திற்கு ஒரு முறை குல தெய்வ வழிபாடு செய்வோம். அப்ப கிடா வெட்டி பொங்க வைப்போம். முன்னாடி நீங்க சொன்னதால நான் அசைவம் சாப்பிடாம இருந்தேன். இப்ப நீங்க சொல்றதை பார்த்தா சாமிக்கு படைச்சா அசைவமும் சாப்பிடலாம் போல இருக்கே” என்றான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி, கருப்புராயனுக்கு கிடா மட்டுமா படையல் செய்வாங்க ? பட்டை சாராயம் சுருட்டு இது எல்லாம் படையல் செய்வாங்க இல்லையா? கிடா மட்டும் பிரசாதம் கிடையாது. அதனால சாராயம் சுருட்டு இதையும் சாப்பிடுங்க. நீங்க மட்டும் பிரசாதம் எடுத்துக்காம உங்க மனைவி குழந்தைகளுக்கும் பிரசாதம் கொடுங்க. கருப்புராயனோட கிருபை முழுசா உங்களுக்கு கிடைக்கும். சரியா? கிடா சாப்பிட விரும்பம் இருந்தால் கருப்புராயன் மேல் பழி போடாமல் நீங்களே சாப்பிடுங்கள். சும்மா பிரசாதம் என்ற சால்ஜாப்பு வேண்டாம்” என்றேன்

சுப்பாண்டி இப்பொழுது குடியும் குடித்தனமுமாக இருப்பதாக கேள்வி..!
-----------------------
மூடர்களின் நம்பிக்கை

ஆட்சி மாற்றத்தால் பலருக்கு பல வகை பயம். எனக்கோ மூடநம்பிக்கையை பார்த்து பயம். நாத்திகம் பேசுபவர் இருக்கும் பொழுது ஆன்மீகம் தன் சுயத்தை இழக்காமல் மக்கள் அதை நோக்கி செலுத்தப்படுகிறார்கள். ஆனால் ஆத்திகம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கும் என எண்ணுகிறேன்.

ஏழு வருடங்கள் முன்பு பிரத்தியங்கரா தேவியை மிளகாய் வத்தல் கொண்டு பூஜை செய்தால் வெற்றி தேடி வரும் என நம் கலாச்சாரத்தில் இல்லாத மிளகாய் வத்தலை வைத்து பூஜை செய்தார்கள். இதை பார்த்து மக்களும் பல்வேறு இடங்களில் அப்பூஜையை செய்தார்கள். பிறகு பச்சை புடவை வாங்கி கொடுத்தால் தோஷம் விலகும் என்ற புரளி. தற்சமயம் ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டால் இழந்த தொழில் மீண்டும் பொலிவு பெறும் என ஒரு தோற்றம் இருக்கிறது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு நிலையில் மூடப்பழக்கம் தான் ஆட்சி செய்யும். நான் என்னைச் சொன்னேன்..! :))
-------------------
ஆ....ராசா.... புதையல்..!

தொலைக்காட்சியில் ஒருலட்சம் கோடி ரூபாய் கண்டெடுப்பு என்றதும் ஏதோ ராசா விஷயம் என நினைத்தால்...இது திருவனந்தபுரம் ராஜா விஷயம் என பிறகு தான் புரிந்தது. திரு அனந்த புரம் என்று ஆழைக்கப்படும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் நிலவரையில் ராஜா கால ஆபரணங்கள் மற்றும் கோவில் பொருட்கள் கண்டறியப்பட்டது. பல வருடங்களாக யாரும் கவனிக்கப்படாமல் தங்க ஆபரணங்களும், பாத்திரங்களும் கிடந்திருக்கிறது. இச்செய்தி எனக்கு வியப்பாக இல்லை. காரணம் ரூபாய் மதிப்புக்கு அப்பாற்பட்ட அற்புத புதையலாய் பத்மநாப சுவாமி அங்கே இருக்க அதன் அடியில் இருக்கும் சிறு தங்கங்ளை மக்கள் அளவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இரண்டு விஷயம். சுயநலமற்ற நிலையில் மன்னர்கள் கோவிலுக்கு எப்படி தானம் செய்தார்கள் என்பதும், நம் கோவில்கள் எத்தனை சிறப்பான நிலையில் இயங்கி வந்தது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். தன் கையில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் இறைவனுக்கு ராஜா கொடுத்தார் என்றால் செல்வத்தைவிட மிக உன்னதமானது ஒன்று அவருக்கு அங்கே கிடைத்திருக்க வேண்டுமல்லவா?

நாமும் அந்த தலைசிறந்த அற்புதத்தை தேடுவோம்.
----------------------
சிவ லிங்கம்

சிவ லிங்க தரிசனம் என்பது மிக உன்னதமானது என சைவ ஆகமங்கள் கூறுகின்றன. நான் சைவ சித்தாந்தி இல்லை என்றாலும் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது சிவலிங்க வடிவங்களை நான் கண்டு இன்புற்றதுண்டு. தக்‌ஷிண மேரு என்ற தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகமே லிங்க வடிவில் இருக்கிறது என முன்பு நான் எழுதி இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இவ்வாறு ஒரு இடத்தில் நான் கண்ட சிவலிங்கமே உங்களுக்காக கீழே படத்தில் கொடுத்துள்ளேன். இத்தலத்தை பற்றியும் இந்த சிவ லிங்கத்தின் பின்புலத்தையும் சரியாக கூறுபவர்களுக்கு எனது தினம் தினம் திருமந்திரம் புத்தகம் பரிசு..! முயற்சி செய்கிறீர்களா? விடை தனிப்பதிவாக...விரைவில் வரும்..