Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, July 21, 2011

குண்டலினி வாங்கலையோ குண்டலினி....! பகுதி 2

குண்டலினி பயிற்சியில் சில மாற்றங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் நடக்கும் என்றேன் அல்லவா?

ஜப யோகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் குரு கொடுக்கும் மந்திரங்களை தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் சரியாக ஜபம் செய்யாவிட்டால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. கால விரயம் மட்டுமே ஏற்படும். சரியாக ஜபம் செய்தால் ஆன்மீக அற்றலில் மேம்பட்டு இறைநிலையுடன் இணைவீர்கள்.

பிற யோக முறைகளை விட குண்டலினி பயிற்சி குருவின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே பயில வேண்டும் என கூறுவார்கள். காரணம் இதை சரியாக பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் பின்விளைவுகள் உண்டு..!

இவ்விளைவுகளை தீர்க்கும் ஆற்றல் குருவுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் வாழ்ந்து அவரின் முன் இருந்து பயிற்சி செய்வது அவசியம். ஆனால் நடை முறையில் இவ்வாறு இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்றே பதில் கூற முடியும்.

ராஜ யோக சதனா செய்யும் பொழுது உடலின் வலிமை முதலில் முற்றிலும் இழந்து பிறகு பெற வேண்டி இருக்கும். உடல் தன் இயல்பை தொலைத்து புது வடிவம் பெற துவங்கும் பொழுது உடலின் வெப்பம் மிக அதிக அளவில் உருவாகும். அல்லது கடுமையான குளிர் உணர நேரும்.

சராசரி மனிதன் 105 டிகிரி உடல் வெப்பம் கண்டாலே உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடுவான். அப்படி இருக்க இத்தகைய பயிற்சியில் 116 முதல் 122 வரை உடல் வெப்பம் உயருவது சாதாரணமாக நடக்கும்.

இது மனித உணர்வால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வெப்பம். அதே போல குளிரும் மிகவும் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும்.

தமிழகத்தில் சித்திரை மாதத்தில் -5 டிகிரி குளிர் என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அனேகமாக முன் தெளிவு இல்லாமல் இப்பயிற்சி செய்பவர்களுக்கு நிகழ்வது இதுதான்.

அதிக உடல் வெப்பத்தால் மூல நோய் மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டு தொடர் ரத்த இழப்பு ஏற்படும் அல்லது அதிக குளிரால் உடல் இரத்தம் உறைந்து இருதய துடிப்பு நிற்கும் அபாயம் உண்டு.

மஹா ஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து யோக முறைகளையும் முயற்சித்து அதன் உச்சியை அடைந்தவர். அவர் குண்டலினி யோகம் பயிற்சி செய்து அவரின் பற்களில் தொடர்ந்து ரத்தம் கசிய துவங்கியது. இடைவிடாமல் இரத்தம் வாய்வழியே வந்து கொண்டே இருந்தது. ராம கிருஷ்ணரின் குரு அச்சமயம் வந்து அவரை சரியாக்கி மேம்படுத்தினார். இச்சம்பவத்தை அவரின் சரிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் நிலையை யோசித்து நாமும் முயற்சி செய்வது நல்லது..!

நடைமுறையில் குண்டலினி பயிற்சி அளிப்பவர்கள் ஏழு சக்கரங்களின் படங்களை பெரிதாக காண்பித்து இன்ன சக்கரம் இது செய்யும் என விளக்கி பிறகு பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் மனித மனம் தன் நிலையிலிருந்து மேம்படாமல் கற்பனை எனும் பாழும் கிணற்றில் விழுகிறது. மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே கதையாகி விடும் அல்லவா?

அப்படியானால் இதை எவ்வாறு பயிற்சி கொடுப்பது?
எனக்கு தெரிந்த ஒரு யோகி தன் சீடனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார் குண்டலினி என்பதில் இது எல்லாம் ஏற்படும் என்கிறார். சிஷ்யன் சரி நீங்கள் பல மணி நேரம் விளக்கியதை பார்த்தால் இதற்கு பல நாட்கள் அனுபவம் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும் போல இருக்கிறது என்கிறார். அதை மறுத்த குரு தன் சிஷ்யனுக்கு முழு அனுபவத்தையும் ஆறு நிமிடத்தில் உணர்த்துகிறார்.

அனுபவம் கிடைத்ததும் சிஷ்யன் சொல்லுகிறான், குருவே நீங்கள் கூறியவிஷயம் எல்லாம் நான் அனுபவித்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் நீங்கள் கூறியது போல இல்லையே...அதில் சில விஷயங்கள் கூட இருந்தனவே என்கிறான். அதற்கு குரு கூறுகிறார், “நீ உண்மையாகவே அனுபவம் கொள்கிறாயா அல்லது கற்பனை செய்கிறாயா என காணவே அவ்வாறு முக்கிய சில கூறுகளை விட்டு விட்டேன். மேலும் நீ அதில் கண்ட காட்சி இப்படி இருந்ததா..” என நீள்கிறது அவர்களின் சம்பாஷணை. இவ்வாறு குரு சிஷ்யனும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதே ராஜயோகம்.

நம் உபயோகப்படுத்த ஒரு பொருளை கடைகளில் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு உபயோகப்படுமா? அல்லது நம் வாழ்க்கை முறைக்கு தொந்தரவு கொடுக்குமா என பார்ப்போம். இது தானே நடை முறை? ஆனால் குண்டலினி பயிற்சி பெறும் பலருக்கு இதன் அவசியம் தெரியாது. சிலர் எனக்கு முதுகு வலி உண்டு அதனால் இப்பயிற்சி செய்கிறேன் என்கிறார்கள். இது உடல் வலிக்கு யானையை அழைத்து மசாஜ் செய்வதை போன்றது.

சில யோக பயிற்சி கழகங்கள் முழுமையான அதிக சிக்கல்கள் கொண்ட பயிற்சியை சராசரி மனிதனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் ராஜயோக பயிற்சியை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் முழு பயிற்சியையும் வருபவர்களுக்கு சுண்டல் வழங்குவதை போல வழங்கிவிடுகிறார்கள். ஏழு நாட்களில், மூன்று மணிநேர பயிற்சிக்கு பிறகு பயின்றவரும் வீட்டுக்கு வந்து கடுமையாக பயிற்சி செய்வார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவருக்கு தியரி முறையில் விமானத்தை பற்றி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றதும் விமானத்தில் கயிரால் உடலை கட்டிக்கொண்டு வானில் பறக்க முயல்வதற்கு சமம்.

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூலையே குருவாக கொண்டு பயிற்சி செய்யவும் கூறுகிறார். இவ்வாறு பலர் முயற்சிக்கிறார்கள். அதில் தவறு அல்ல. காரணம் அந்த புத்தகம் ஓர் அனுபவ வடிவம். இல்லையேல் குருவினை நாடி பயிற்சி செய்யுங்கள்.

குண்டலினி பயிற்சி செய்வதாலும் தவறாக செய்வதாலும் கீழ்கண்ட உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகள் நிகழும்.
  • கடுமையான மூல நோய்
  • எதிர்பாராத நிலையில் தன் நினைவு இழத்தல்
  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • சுவாச கோளாருகள்
  • பக்க வாதம் போன்று ஒரு பக்க உடல் செயல்படாமல் இருத்தல்
  • கண்பார்வையில் ஏற்றத்தாழ்வுகள்
  • மன நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உங்களின் இயல்பு குணம் சென்று குழந்தை தன்மையோ அல்லது ஆழ்ந்த அமைதியோ ஏற்படுதல்.

மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தால் குண்டலினி யோகம் பயிலலாம்.

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படித்து ஒருவருவர் என்னிடம் தனி மடலில் பின்வருமாறு கேட்டிருந்தார்.

“நான் ஒருவரிடம் எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றேன். அதில் எனக்கு நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..இதை நீங்கள் ஏன் தவறாக காண்கிறீர்கள்” என்கிறார். இவர்களை போன்று கேட்பவர்களுக்கு என் பதில் இதோ..

“ஐயா.. குண்டலினி என்ற பெயரில் நடப்பதெல்லாம் குண்டலினி பயிற்சி அல்ல. அப்பெயரை கொண்டு சாதாரண யோக ஆசனங்களை கொண்ட பயிற்சியே பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியை கற்று எனக்கு குண்டலினி ஒரு நாள் எழும் என கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அல்லது தினமும் பயிற்சி செய்யும் பொழுது என் குண்டலினி என் ஆக்னா சக்ரத்திற்கு ஏற்றி இறக்கினேன் என நீங்களே நினைக்கலாம்.

குழந்தைகள் ஓடத்துவங்கும் காலத்தில் கால்களை தரையில் உதைத்து வாயில் சப்தம் எழுப்பி பைக் ஓட்டுவார்கள். அவர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை, ஹெல்மெட் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படாது. அவ்வாறு அவர்கள் கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவே.. நீங்கள் பெற்ற குண்டலினி பயிற்சியும் அத்தகையதே என்பதால் உங்களுக்கு எதுவும் நிகழவில்லை. பயிற்சியில் உங்கள் உடல் மற்றும் மனம் மாற்றம் ஏற்பட்டால் நம்மால் உணரமுடியாமல் இருக்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டமல் போனால் அது எவ்விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள்.”

உங்களுக்கு ஏன் இந்த வேலை? யாரோ யாருக்கோ குண்டலினி பயிற்சி கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன இழப்பு என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். கோவையில் தவறான பயிற்சியாலும், தவறாக பயின்றதாலும் பலருக்கு உடலில் மற்றும் மனதில் ஏற்படும் நோய்களை யோக முறையிலேயே சரியாக்க என்னைத்தான் அழைக்கிறார்கள். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வருத்தத்துடன் சொல்லுகிறேன்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் அதிகமாகிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களை கண்டு அவர்களுக்கு குணமளித்துவிட்டு சும்மா இருக்க என்னால் இயலவில்லை. பலருக்கு முன் தெளிவு கொடுக்கவே இந்த கட்டுரை எழுத தேவை ஏற்பட்டது.

இதையும் மீறி நான் முறையற்ற பயிற்சி செய்வேன்.. அந்தரத்தில் பறப்பேன், போன ஜென்மத்தை உணர்வேன் என நீங்கள் கிளம்பினால்.....உங்களுக்கு என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்...!


--சக்தி சஹஸ்ராரத்தை அடைந்தது--

8 கருத்துக்கள்:

MANI said...

ஐயா, தங்களின் குண்டலியோகம் பற்றிய கட்டுரை அருமையாக, எளிமையாக, புரியும்படியாக இருந்தது. உண்மையில் ஒருவர் குண்டலினி யோகம் பெற விரும்பினால் சரியான குருவை நோக்கி செல்ல வேண்டும். அப்படிப்பட்ட குருநாதர் அல்லது பயிற்சி கழகம் எங்கு அமைந்துள்ளது. அதைப்பற்றி தாங்கள் ஏதேனும் விபரங்களை தந்து உதவிட முடியுமா.

guna said...

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூல


please address details. thankyou swamigi

naren said...

சுவாமி குண்டலினி யோகத்தால் வரும் நன்மைகளை சொல்லாம்ல் விட்டுவிட்டீர்கள். ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை படிக்க வேண்டும்- அதன் நன்மைகள் என்ன. ஆன்மீக மேம்பாடா??

Irai Kaathalan said...

அண்ணனுக்கு வணக்கம் ....
இன்றைய எந்திர வாழ்வில் , ஏனைய மக்கள் யோகா செய்தால் டென்ஷன் குறையும் , நிம்மதி கிடைக்கும் ,உடலில் உள்ள நோய்கள் விலகும் என்று எண்ணியும் சுயநலத்திற்காகவும் கடைகளில் ( யோகா பாட சாலைகளில் ) வாங்கிகொண்டு இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது .
நிச்சயம் உங்களது பதிவின் மூலம் ஏனைய அன்பர்கள் தெளிவு பெறுவார்கள் .
மிக்க நன்றி . ( இந்த தலைப்பில் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன் )

Savitha said...

யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் கல்லூரியில் இருந்த பொழுது படித்தேன். கிரியா யோகம் பற்றி வியந்தேன். உங்கள் ப்ளாகில் வரும் நிறைய அனுபவங்களை போல அவருக்கும் இருந்துள்ளது. ட்ரென்ஷிடென்டல் மெடிடேசன் கோர்ஸ் விரும்பியவர்களுக்கு கல்லூரியில் சில ப்ரொபசர்கள் எடுத்தார்கள். அதனால் நன்மையோ தீமையோ கிடைத்ததாக தெரியலே. வாழ்க்கை எப்போதும் போல நிறைந்த டென்சன்களோடு போகிறது. நீங்கள் ஏன் மற்ற யோகங்களை பற்றி கம்பேர் செய்து எழுதவில்லை?

வானவன் யோகி said...

தங்களை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...

மிகமிக அருமையாகப் அனைவருக்கும் புரியும்படியாக
விளக்கியுள்ளீர்கள்....

கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர் எழுதிய ஜீவபிரம்மைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூலை 25 ஆண்டுகளுக்கு முன்பே படித்து அதன் முறைகள் சிலவற்றைப் பயிற்சி செய்து பார்த்தாலும்

நமது தமிழ்ச்சித்தர்கள் என்னவோ இன்னும் சொல்லவொண்ணாத உயரத்தில்,ஆழத்தில் அதன் செயல்பாடுகளை வைத்துவிட்டுப் போயுள்ளதாகத் தெரிகிறது..

முக்கியமாக தங்களின் ரகசிய எதிரி திருமூலர்....

பெரும்பாலும் உண்மைகள் கொண்ட இவ்விடுகை பதில் சொல்ல முயன்றால் விரியும் என்றஞ்சி முடிந்த அளவில் எனது தளத்தில் கருத்துச் சொல்ல முயல்கிறேன்...

முக்கியமாகப் இந்த ருத்திராட்சப் பூனைக்கு மணி கட்டியதற்கு பாராட்டுக்களும்...

வாழ்த்துதல்களும் உரித்தாகுக.......

Sanjai said...

பதிவு அருமை, ஆனால் ஒரு கேள்வி

குண்டலினி கற்பதால் என்ன பிரயோஜனம், அப்படி கற்காமல் விட்டால் எதை இழக்கிறோம் ?

சுரேகா.. said...

மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஸ்வாமி!!

சென்னைக்கு வாங்க! சந்திப்போம்!