Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, February 11, 2022

குருவின் அருள்

ஒரு உயிர் தனக்கு குரு கிருபை கிடைப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறது. உண்மையில் குருவின் அனுக்கம் உடனடியாக அனைவருக்கும் கிடைப்பதில்லை.

ஓர் உயிர் குருவை அடைய குறைந்தபட்டம் ஐந்து பிறவிகளை எடுக்கிறது. முதல் பிறப்பில் குருவின் சிறப்புகளை செவியின் மூலம் பிறர் சொல்லுவதை கேட்கிறது.  அதன் காரணமாக இரண்டாம் பிறப்பில் குருவை கண்களால் பார்த்து தரிசனம் பெறுகிறது. தரிசனத்தின் காரணமாக மூன்றாம் பிறப்பில் குருவுடன் ஏதோ ஒரு உயிரினமாக பிறந்து உணவை பகிர்ந்து ருசிக்கும் பிறப்பு அமைகிறது. 

 ருசி உணர்ந்ததன் காரணமாக நான்காம் பிறப்பில் மேலும் அருகாமையில் பிறந்து குருவின் தொடுதலும் ஆசீர்வாத ஸ்பரிசங்களையும் பெறுகிறது. இவற்றின் காரணமாக ஐந்தாம் பிறப்பில் குருவின் அருள் பெற்று தனது சுவாசத்தை மேம்படுத்தி அந்த உயிர் உயர்நிலையை அடைகிறது. 

ஆன்மாவில் குருவை உணர அந்த உயிர் தனது ஐந்து புலன்களின் வழியே சிறிது சிறிதாக உள்வாங்கி நிலைபெறுகிறது. இதற்கு ஐந்து பிறவிகளோ அல்லது ஆயிரம் பிறவிகளோ தேவைப்படலாம். குருவின் அனுக்கம் கிடைக்கபெறுவது அரிது. பலர் குருவின் கிருபை என்பது எளிதில் கிடைக்கும் விஷயமாக கருதுகிறார்கள். குருவின் அருகாமை கிடைக்க பல்வேறு பிறப்பை கடந்து வந்திருக்கும் கடும் பயணம் அவர்களுக்கு நினைவில் இருப்பதில்லை. குரு ஒரு சிஷ்யனை உணரும் பொழுது அவனின் பயண காலத்தையும் சிஷ்யனின் உயிர் கடந்த வடிவங்களுடனேயே அவனை உணர்கிறார். இப்பிறப்பில் ஆன்மாவின் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை சுய சிந்தனையில் உணர்ந்து நம் குருவின் ஆசிகளை பெறுவோம்.


கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே

-திருமந்திரம் 2051

ரசவாதியின் கையில் கிடைக்கபெற்ற இரும்பானது தங்கமாக மாறும். ஒருகாலத்திலும் அந்த தங்கம் மீண்டும் இரும்பாகாது. அது போல குருவின் அருள் முழுமையாக பெற்றவனுக்கு அடுத்த பிறப்பு என ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை.