யோகிகளும் மஹான்களும் கிரிவலம் செல்லும் பொழுது இடப்பக்கமாக செல்லுகிறார்கள். காரணம் உலகவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வலப்பக்கம் சுற்றி பரமனுடன் தங்களை பிணைத்துக்கொள்ளுகிறார்கள். முக்திஅடைதல் என்ற மஹாத்தத்துவதில் இயங்கும் யோகிகள் இடபக்கம் சுற்றுவது கூட நன்மைக்குதான். காரணம் அப்பொழுது தானே நாம் வலப்பக்கம் சுற்றும் பொழுது நேருக்கு நேர் சந்திக்க முடியும்?
எனது பரதேசி பயணத்தில் சில உறுதிமொழியை எனக்குள் எடுத்திருந்தேன். எங்கும் யாசகம் கேட்க கூடாது. யாரிடமும் உதவி பெறக்கூடாது என்பது போன்ற வைராக்கிய கணக்குகள் என்னுள் இருந்தது. பணம் இல்லாமல் திருவண்ணாமலை வந்து செல்லுவது சிரமம் இல்லை என பலர் நினைக்கலாம்.
உணவுக்காக கையேந்தி நின்றால் என்ன கவலை? யாராவது ஒருவராவது உதவ மாட்டார்களா? இல்லை ஒரு ஆசிரமத்தில் தங்கினால் அவர்கள் உணவு இடமாட்டார்களா? வேலை எளிதாக முடியும் அல்லவா? எனது பயணத்தில் காசில்லாமல் சென்று திரும்ப வேண்டும் என்று மட்டுமே என நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அத்துடன் எங்கும் தங்கக் கூடாது. உணவுக்காக யாரிடமும் கேட்க கூடாது என்ற வைராக்கியம் வளர்த்துக்கொண்டேன்.
என் மனதுக்குள் இருந்த வைராக்கியம் என்னவென்றால், “இறைவன் அனைவருக்கும் உணவு வழங்குவான் என்றால் நான் இருக்கும் இடத்திற்கு கேட்காமலே உணவை வழங்க வேண்டும் அல்லவா?”. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வைராக்கியத்தை காட்டிலும் ஆணவமே அதிகமாக எனக்குள் இருந்தது.
பிரம்மனின் ஆணவமே காணாமல் போன இடம் இது. நான் எல்லாம் ஒரு காசுக்கு ஆவேனா.? சக்தி வாய்ந்த இடங்களில் நமக்கு ஆணவம் தோன்ற காரணம் அந்த தலத்தின் சக்தியை நாம் உணரத்தான்..! இல்லையென்றால் மரக்கட்டை போல அங்கு சென்று வந்தால் என்ன உணர்வு இருக்க முடியும்?
திருவண்ணாமலையில் ஆற்றல் வாய்ந்த இடம் எது என கேட்பது மல்லிகையில் எந்த பகுதி மணக்கும் என கேட்பதை போன்றது. திருவண்ணாமலையே ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் பொழுது அதன் அருகில் எது நிற்க முடியும்? திருவண்ணாமலையின் மையத்தில் இருந்து மூன்று யோஜனை தொலைவில் இருக்கும் அனைவருக்கும் திருவண்ணாமலை அருளாற்றலை வழங்குகிறது என அருணாச்சல புராணம் திடமாக கூறுகிறது.
அது என்ன மூன்று யோஜனை என உங்களுக்கு யோசனையா? ஒரு மாட்டுவண்டியில் பிணைக்கப்பட்ட மாடு தளர்வடையாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த தொலைவு ஒரு யோஜனை. இது சராசரியாக 8 கிலோமீட்டர் என கூறலாம். ஆக திருவண்ணாமலையை சுற்றி 25 கிலோமீட்டருக்கு அருணாச்சல கிரி தனது ஆற்றலை வெளிப்படுத்திவருகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய திருவண்ணாமலையில் முக்கியமாக அனுபவிக்க வேண்டிய இடங்கள் சில உண்டு.
கவனிக்கவும் பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல. அனுபவிக்க வேண்டிய இடங்கள்..!
நான் விவரிக்க போகும் இடங்கள் எல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துவருகிறார்கள். அவர்கள் பார்க்கும் இடத்தை நான் கூறப்போவதில்லை. நாம் என்ன இன்பச் சுற்றுலாவுக்காகவா இடம் தேடுகிறோம்? அதனால் எனது பட்டியலை ஆன்மீக தலைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
தெற்கு பகுதியில் நான் நடக்க துவங்கிய கிரிவலப்பாதையில் இருக்கும் அடுத்த முக்கிய இடம் பச்சையம்மன் கோவில் மற்றும் கெளதமர் ஆசிரமம். இங்கே பார்வதி தேவி கெளதம முனிவரின் ஆசிரமத்தில் தவம் இருந்ததாக கூறுகிறார்கள். தற்சமயம் இந்த இடம் சிதிலம் அடைந்து வருகிறது. நேர் அண்ணாமலை என திருவண்ணாமலை கோவிலுக்கு நேராக மலைக்கு பின்புறம் இருக்கும் இடம் இந்த நேர் அண்ணாமலை கோவில்.
அதிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டரில் வருவது திருவண்ணாமலையில் எனக்கு மிகவும் பிடித்த இடம். முக்கிய நகரங்களின் மையப்பகுதியை ஹார்ட் ஆப்த சிட்டி என்பார்கள். திருவண்ணாமலையின் ஹார்ட் அதாவது ஆன்மீக இதயமாக செயல்படு இடம் அடி அண்ணாமலை.
இந்த கோவிலுக்கு பெளர்ணமி தவிர பிற நாட்களில் சென்றீர்கள் என்றால் நீங்களும் இறைவனும் மட்டும் தான் இருப்பீர்கள். அத்தனை (அத்துணை..!) அமைதி இருக்கும் கோவில். அடி அண்ணாமலை கோவில்தான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கட்டபட்ட கோவில்.
இக்கோவிலின் உண்மையான பெயர் “ஆதி அண்ணாமலை”.
அடி அண்ணாமலை கோவிலின் வடக்கு சுவர் முழுவதிலும் கிளிகள் மற்றும் புறாக்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் இருக்கும். நினைத்து பாருங்கள் பச்சையும்,சாம்பலும் மற்றும் வெள்ளையுமாக கோவிலின் சுவரில் பறவைகள் அமர்ந்திருக்கும் இயற்கையின் வண்ண விளையாட்டு எப்படி இருக்கும் என்று..... மாணிக்கவாசகர் இந்த கோவிலில்தான் முதன் முதலில் திருவாசகம் பாடினார். அடி அண்ணாமலைக்கு அருகில் மாணிக்க வாசகருக்கு ஒரு தனிக்கோவில் இங்கே மட்டுமே காண முடியும். அடி அண்ணாமலை கோவிலும் அதன் சுற்றுபுறமும் கண்டால் நமக்கே நமச்சிவாய வாழ்க..நாதன் தாழ் வாழ்க என பாடத்தோன்றும்.!
அடிஅண்ணாமலைக்கோவிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி அம்சம் மிகவும் வித்தியாசமானது. அதைவிவரிக்க தமிழில் வார்த்தையை தேடிவருகிறேன். ஒருநாள் கண்டிப்பாக விவரிக்க முயற்சி செய்கிறேன்.... மெளன ரூபனை வார்த்தைகளால் விவரிக்கும் நாள் என்னாளோ?
எனக்கு தெரிந்தவரையில் ஆற்றல் மிகுந்த கோவில்களில் மூல ஆற்றலை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த மூல ஆற்றல் கோவிலின் கருவரைக்கு சென்று விக்ரஹத்தை சக்தியூட்டும். மூல ஆற்றல் இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்படும். கோவில் சிதைக்கபட்டாலும் மூல ஆற்றல் இடங்கள் மூலம் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்கலாம். ஆன்மீக ஆற்றல் உள்ளவர்களால் மூல ஆற்றல் கேந்திரங்களை கண்டறிய முடியும்.
திருவண்ணாமலை சக்திவாய்ந்த இடத்தின் மூல சக்தி இரு இடங்களில் மட்டும் அதீதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஒன்று அடி அண்ணாமலை மற்றொன்று முடி அண்ணாமலை.
அடி அண்ணாமலை இந்த இடம் என்றால் முடி அண்ணாமலை என்பது மலையின் சிகரம். திருவண்ணாமலையின் உச்சி பகுதி மிகவும் சக்தி வாய்ந்தது. சிறு வயதிலிருந்து பல மலைகளை ஏறிய அனுபவம் உண்டு. மலையேறுபவர்களே சிரமம் கொள்ளும் வெள்ளிங்கிரி மலைக்கு கூட எளிமையாக ஏறிவிடுவேன். ஆனால் முடி அண்ணாமலையானை காண ஏறினால் மட்டும் என்னால் முடியாது..!
மிகவும் செங்குத்தான பாதை. ஸ்ரீ சக்ர புரி என்பதற்கு இணையாக சிறிது ஏற்றம் பிறகு சமமான பாதை என படிபடியாக உச்சியில் குறுகிய முனையாக இருக்கும். உச்சியில் 20 அடி சுற்றளவு மட்டுமே இருக்கும். ஏறும் பாதையில் அனேக குகைகள் உண்டு. அதில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடினால் ஓம்கார மந்திரம் கேட்கும்.
வருடத்தில் பல முறை திருவண்ணாமலை சென்றாலும், குறைந்தபட்சம் இருமுறையாவது முடி காணாமல் வரமாட்டேன். நான் என்னுடன் வந்த வெளிநாட்டு மாணவியுடன் சில வருடம் முன் மலையேறும் பொழுது நடந்த சம்பவம் நீங்கள் மலையேறும் பொழுதும் நடக்கலாம்.
அது .......
(தொடரும்)