Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 29, 2009

பழைய பஞ்சாங்கம் 29 - மே - 2009

இவர்களா நாளைய உலகம்?

பதிவு தபால் அனுப்ப தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.( தபால் நிலையம் போனாலும் நாங்க பதிவு போடுவோம்..!) சிறப்பு தபால் அனுப்பும் பிரிவில் நீண்ட வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். அனைவரும் பொறியியல் கல்விக்கான விண்ணப்பம் அனுப்ப வந்தவர்கள். இன்னும் பொறியியல் படிப்புக்கு மோகம் இருப்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. சிலர் தனியாகவும்,சிலர் பெற்றோருடனும் வந்திருந்தனர்.

என்பது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் ஒரு சிறிய தபால் உறையுடன் வரிசையில் நிற்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்தார். கால் பலம் இல்லாமல் அருகில் இருக்கும் நாட்காலியில் உற்கார்ந்தார். அவரின் நிலையை பார்த்து நான், முன்னால் இருப்பவர்களிடம் (15 பேர் நின்றிருந்தனர்) பெரியவரை அனுமதிக்குமாறு கேட்டேன். என்னை வேற்றுகிரக வாசியாகவும், அந்த முதியவரை ஒரு வைரஸ் கிருமி போலவும் பார்த்தார்கள். பின்னர் முகத்தை திருப்பிக்கொண்டனர்.

நேராக அழைத்து சென்று தபால் அலுவலரிடம் சொன்னேன். அவரின் தயாள குணத்தையும் கருணையும் அளவிடமுடியாததாக இருந்தது. ஒரு மணி நேரம் செலவிட்டு, எனது முறை வந்ததும் அவரின் தபாலை அனுப்ப சொல்லிவிட்டு பின்பு நான் அனுப்பினேன். எனது பின்னால் இருந்தவர்கள் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் வாங்கி கட்டிக்கொண்டார்கள்.

தெரியாமல் தான் கேட்கிறேன்... இவர்கள் பொறியியல் படித்து என்ன கிழிக்க போகிறார்கள்? மனித நேயம் தெரியாமல் அமெரிக்கா சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்யவா? எல்லாம்...நமது கல்வி முறையை சொல்லவேண்டும்.. பார்ப்போம் தர்மம் மறுபடி வெல்லும்..!

-------------------------------------------------------------------------------

காரைக்குடியில் ஒர் ஆலயம்


நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமான கோவில்களை நிர்மாணித்துள்ளனர். ஒன்பது கோவில்கள் காரைக்குடி சுற்றி இருப்பதாக கேள்வி. அனைத்து கோவிலுக்கும் செல்ல முடியாவிட்டாலும் சில கோவிலுக்கு செல்ல முடிந்தது. அதில் குறிப்பிடத்தக்க கோவில் இரணியூர் சிவன் கோவில். பாரம்பரிய கட்டட கலையின் சிறப்பில் ஒளிரும் கோவில். நரசிம்ம அவதாரம் காலத்தில் ஏற்பட்ட சூழலை தலபுராணமாக கொண்டது.

கோவிலில் நுழைந்ததும் முன்னால் இருந்த தலைமை பூஜாரியை பார்த்து எனது மாணவர்
கோவிலைபற்றி சொல்லுங்கள் என்றார். கோவிலின் தன்மையை அற்புதமாக விளக்கினார். கோவிலில் பிரகாரத்தில் வலது பக்கம் ஒரு சிற்பம் இருந்தது, சிவன் ஒரு அசுரனை வதம் செய்ய செல்வது போல அமைந்திருந்தது. சிவனின் தேரின் சக்கரமாக சூரியனும் சந்திரனும் இருக்க, தேவர்கள் குதிரையாக இருப்பதாக வடிவமைக்க பட்டிருந்தது.

தேரில் ஒரு பக்கம் கடையாணி இருக்க மறுபக்கம் இல்லாமல் இருந்தது. சந்திரன் இருக்கும் பகுதியில் கடையாணியும், சூரியன் இருக்கும் பகுதியில் கடையாணி இல்லாமலும் இருந்தது. விநாயகரை வழிபடாமல் சென்றதால் ஒருபக்கம் கடையாணி உடைந்ததாக புராணம் சொன்னார் பூஜாரி.

சூரியனுக்கு அச்சுகிடையாது, சந்திரனுக்கு மட்டுமே சுழலும் அச்சு இருக்கிறது என்ற வானவியல் கோட்பாட்டை தெரிந்துகொண்டு உருவாக்கிய சிற்பியை நினைத்து வியப்படைந்தேன். இதை உணராமல் இருக்கும் பூஜாரியை நினைத்து வருந்தினேன்...

-------------------------------------------------------------------------------


கணக்கம்பட்டி கடும்சொல்


பழனிக்கு நான்கு கிலோமீட்டர் அருகில் திண்டுக்கல் போகும் சாலையில் இருக்கும் சிறிய கிராமம் கணக்கம் பட்டி. விவசாயம் தவிர வேறு பணிகள் இல்லை. அங்கே ஒரு மஹான் இருக்கிறார்...கணக்கம்பட்டி ஸ்வாமிகள்..

நிற்க.. மஹான் என்றதும் தூய வெளாடையில் கையில் ஒரு ஜபமணியுடன் இருப்பார். அனைவருக்கும் ஆசிவழங்குவார் என நினைத்து சென்றீர்கள் என்றால் மனமுடைந்து மருத்துவ மனையில் சேரவேண்டிவரும்.

அவர் சித்தர் அல்ல பித்தர். முழுமையான பரபிரம்ம நிலையில் இருப்பவர். யார் அவர்முன் வந்தாலும் மூன்று பரம்பரைக்கு கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். சிலரை குச்சியால் அடித்தும், சிலரை ஓட சொல்லியும் துரத்துவார். ( ஒரு சிரிப்பு நடிகரின் காட்சி மனதில் ஓடுகிறதா? )

அழுக்கான உடையில் குளிக்காத தேகமும் அவரின் லட்சணங்கள். யாரோ ஒருவரின் தென்னந்தோப்பில் இருக்கும் பம்ப்செட்டுதான் அவரின் ஆசனம். கர்மா மிகுந்த நிலையில் ஒருவர் வந்தால் கேவலமாக அவரை அசிங்கபடுத்தி அவரின் ஆணவம் எனும் இரும்பு திரையை தகர்த்துவிடுவார்.

ஆன்மீகமானவர்கள் சென்றால் அவர்களை உட்காரவைத்துவிட்டு அவரும் அமைதியாக இருப்பார்.

இவரின் செயல்கள் சாமானியர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும். இவரை பற்றி சொல்லாமல் சுப்பாண்டியை இவரிடம் கூட்டி சென்றேன். சுப்பாண்டிக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம் இருக்கும் மாணவர்கள் சிலரையும் இவரிடம் அனுப்பியதுண்டு. அவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

ஆன்மீகம் என்றால் இது தான் என நீங்கள் முடிவுசெய்தால் நான் என்ன செய்ய முடியும்?

-------------------------------------------------------------------------

ஆணவன்


எதை புதைத்தாலும் உரமாக்கி தருகிறது மண்.
எவ்வளவு மாசுற்றாலும் தென்றலாகிறது காற்று.
தனது நிலைதவறாமல் ஒளி தருகிறது நெருப்பு.
அசுத்தத்தை ஏற்படுத்தினாலும் அசுத்தமடையாத ஆகாயம்.

சாக்கடை நீரானாலும், கடல் நீரானாலும்,

தூய்மையான நீரையே வழங்குகிறது மழை.

கொடியவிஷத்தை அளித்தாலும்,
அழுகிய பொருளை வீசினாலும்,
உனக்கு அற்புதத்தையே தருகிறது தாவரம்.

இத்தனையும் உன்னை சுற்றி இருந்தும் மனிதா
நீ பஞ்சபூதத்தால் ஆனவன் என ஏற்கமறுக்கிறேன்.
நீ ஆனவன் அல்ல ஆணவன்.

Wednesday, May 27, 2009

சுப்பாண்டி கண்ட ஞானக்குழந்தை கிச்சுமணி

பலவருடங்களுக்கு முன் எனக்கு சுப்பாண்டிக்கும் நடந்த சுவாரஸியமான விஷயம் இது.
இதே போல ஒரு கோடைவிடுமுறை சமயம் சுப்பாண்டியின் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களை என்னிடத்தில் அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். அவனை முன்னால் கொண்டுவந்து என்னிடத்தில் நிற்கவைத்தார்கள். சுமார் ஏழு வயது இருக்கும், குறுகுறு பார்வையும், சுட்டிதனமும் நிறைந்த அவனது முகம் என பார்க்க அழகாக இருந்தான். “ ஸ்வாமி இவன் கிச்சுமணி ஓவர் குறும்பு, நீங்கதான் இவனை சரியாக்கணும்” என்றார்கள்.

நான் என்ன செய்ய? குழந்தைக்கு இது தானே இயல்பு என்றேன்.

உறவினர்கள் அனைவரும்.. “ஸ்வாமி இவனை உங்களுக்கு தெரியாது. பத்து நிமிஷம் இவன் கூட இருந்தா போதும் தலை சுத்திடும்” என்றார்கள்.

எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அப்படி என்ன குறும்பு பண்ணறான் என கேட்டேன் ?.

“சொன்ன பேச்சை கேட்க மாட்டான், எப்ப பார்த்தாலும் கார்டூன் பார்க்கறது. சினிமா பைத்தியம். விஷமம்னா அப்படி ஒரு விஷமம். படிக்கிறது. சாமி கும்பிடறது, சுலோகம் சொல்லறது எல்லாம் இவனுக்கு வேப்பங்காய் சாப்பிடறது மாதிரி.” என்றனர்.

வேப்பங்காய் உடம்புக்கு நல்லது தானே? என எனது மருத்துவ அறிவை எடுத்து விட.. குடும்பமே என்னை முறைத்தார்கள்.

நான் நிலைமையை சுதாரித்து கொண்டு, “ நீங்க சொல்லறது எல்லாம் சரிதான். குழந்தையை குழந்தையாவே இருக்கவிடுங்க. அவங்க மனசில் எதையும் திணிக்காதீங்க. எனக்கு இவனை மாத்தும் அளவுக்கு அறிவெல்லாம் கிடையாது” என்றேன்.

உடனே சுப்பாண்டி, “உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி ஸ்வாமி. எத்தனையோ விஷயங்களை என் கண்ணுமுன்னாடியே பண்ணிருக்கீங்க. இது எல்லாம் பண்ண மாட்டீங்களா?” என்றான்.

எனக்கே ஆச்சரியம் இவன் முன்னாடி நான் என்ன பண்ணினேன் என. சுப்பாண்டியின் முகத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது உண்மை.

சுப்பாண்டி பயல் என்னை பற்றி ஏதேதோ சொல்லி அவர்களை அழைத்துவந்திருக்கிறான்.


“டேய்..கிச்சுமணி. ஸ்வாமியை நமஸ்காரம் பண்ணிக்கோடா. நல்ல புத்திக்கொடு என வேண்டிக்கோ..!” என்றான் சுப்பாண்டி.

என்னை வணங்க வந்த கிச்சுமணியை அரவணைத்து அவனுக்கு இனிப்புகள் வழங்கினேன். சந்தோஷமான கிச்சுமணி ஒரு சினிமா நடிகர் செய்வது போல எனக்கு வணக்கம் வைத்தான்.

“ஸ்வாமி ஆசிர்வாதம் பண்ணீட்டார். வாங்க எல்லாரும் போலாம்.” என சுப்பாண்டியும் குடும்பமும் விடைபெற்றனர்.

உண்மையில் எனக்கு குழந்தைகள் மேல் பிரியத்தை காட்டிலும் மரியாதை உண்டு. ஆணவம் மிகுந்து வளர்ந்த மனிதர்களிடம் அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவத்தில் இது தான் சரி என பெரியவர்கள் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீண்டு வளர்கிறார்கள் என்பதால் அவர்களிடம் எனக்கு மரியாதை உண்டு.

குழந்தை வளர்ப்பை பற்றி இவர்கள் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. பிறந்து தவழ துவங்கியதும் சூழலை கவனிக்க துவங்கும் குழந்தையை பராமரிக்க தெரியாமல் அவர்களை டீவியின் முன் போட்டுவிடுவார்கள். சில வருடத்தில் அந்த குழந்தை இதை நன்கு பழகிவிடும். பிறகு பள்ளிக்கு செல்லும் பொழுது உடனே இந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும் என நினைப்பார்கள் பெற்றோர்கள். என்னிடம் வந்து.. “ஸ்வாமி என்னேரமும் கார்ட்டூன் சானல் பார்க்கிறான். நீங்கதான் வழி சொல்லனும்” என்பார்கள்.

குழந்தை தங்களை தொல்லை செய்ய கூடாது என நினைத்து டீவி முன் உட்கார வைத்தார்கள். இப்பொழுது டீவியே அவர்களுக்கு தொல்லையாகிவிட்டது. குழந்தைக்கு தானே உணவு சாப்பிட கற்றுக்கொடுக்கிறேன் என துரித உணவுகளை (ஜங்க் புட்) கையில் கொடுத்து டீவி முன்னாலோ , வீடியோ கேம் முன்னாலோ அனுப்புவிடுவார்கள். இதை சாப்பிட்டு அந்த சிறுவனோ சிறுமியோ கார்ட்டூனில் வரும் பூதத்தை காட்டிலும் வீங்கிவிடுவார்கள். அப்புறம் என்னிடம் வந்து யோகா செய்து இவன் உடம்பை குறைக்கனும் ஸ்வாமிஜீ என்பார்கள்.உங்களை சுற்றி உள்ள பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கவனித்து பாருங்கள். பழம் மற்றும் தானிய வகைகளை அதிகம் சாப்பிட மாட்டார்கள். ஜங்க் புட் பழக்கம் அதிகமாக இருக்கும்.

குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை யோகபயிற்சி செய்ய தேவை இல்லை. நன்றாக உடல் அசைந்து விளையாடினாலே போது. என்னிடம் உடல் பருமனால் யோக பயிற்சிக்கு வரும் சிறுவர்களுடன் நான் விளையாட துவங்கினால் அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம் இருக்கிறதே... அவர்களின் உடல் வேர்வையை தாண்டி வழியும்.

அறிவியலை பற்றி எழுதினால் நீ என்ன அறிவியல் படித்தவனா என்கிறார்கள் பலர். குழந்தையை பற்றி எழுதினால் நீ என்ன குழந்தை பெற்றவனா உனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்பை பற்றி என்பார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டுகிறேன். நான் குழந்தையை பெற்றவன் அல்ல. எப்பொழுதும் குழந்தையாக இருப்பவன். எனக்கு என்னை எப்படி வைத்துக்கொண்டால் சுகந்திரமாக உணர்வேனோ, அதைத்தான் குழந்தைகளுக்கு செய்ய சொல்லுவேன்.

அடுத்த நாள் காலை 6 மணி.... நான் இருக்கும் அறையின் கதவு தட்டப்பட்டது.. திறந்தால் சுப்பாண்டியும் கிச்சுமணியுன் நின்று கொண்டிருந்தார்கள்.

சுப்பாண்டி கண்கள் கலங்கி ஒரு தெய்வீக பாவனையில் இருந்தான்.

சுப்பாண்டி என்னாச்சு என்றேன்.

“ஸ்வாமி.. எனக்கு ஒன்றும் தெரியாது தெரியாதுனு சொல்லி கடைசியில் இந்த பையனை தெய்வீகமாக்கீட்டீங்களே...!” என்றான்.

என்ன சுப்பு புரியற மாதிரி சொல்லு என்றேன். “ஸ்வாமி உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிகிட்டு போனோம் இல்லையா? அது வர்கவுட் ஆயிடுச்சு. காலையில் தூங்கிகிட்டு இருந்தான் அவனை எழுப்பினேன். எழுத்தவுடனே சுப்ரபாதம் பாடரான் ஸ்வாமி..”

எனக்கே அதிர்ச்சி தாங்கவில்லை. எங்க பாட சொல்லு கேட்போம்...

“டேய் கிச்சு பாடுடா...”

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா” என துவங்கினான் கிச்சு மணி.
இடைமறித்த சுப்பாண்டி பார்த்தீங்களா ஸ்வாமி என்றான்.

எனக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“கிச்சு கண்ணா.. உனக்கு முழுபாட்டும் தெரியுமா? யாரு கத்துகொடுத்தா? ” என கேட்டேன்.

“முழுசும் தெரியும். தானா கத்துக்கிட்டேன்”

”எங்க பாடு பார்க்கலாம்” இது நான்.

“நேத்து கொடுத்த ஸ்வீட் கொடுங்க அப்பத்தான் பாடுவேன்” இது கிச்சு.

அவன் கைநிறைய இனிப்பும் கொடுத்து கால் சட்டை பையிலும் நிரப்பினேன்.

தொண்டையை செருமிகொண்டே..இடுப்பை லேசாக ஆட்டியவாரே கிச்சு பாடினான்...

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா சமர்பத்தே....
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பார்த்துகிட்டேதான் இருப்பேன். நான் பார்ததுகிட்டேதான் இருப்பேன்.....”

Monday, May 25, 2009

நாடி ஜோதிடம் - பகுதி 2

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி.

நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது.

நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.


நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.


1. சப்த ரிஷி நாடி 6. நந்தி நாடி 11. அங்கார நாடி
2. சந்திரகலா நாடி 7. கால சக்கர நாடி 12. புதன் நாடி
3. மீனா நாடி 8. கணேச நாடி 13. குரு நாடி
4. பிருகு நாடி 9. சூரிய நாடி 14. சுக்கிர நாடி
5. சிவ நாடி 10. சந்திர நாடி 15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும்.
சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது.

ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும்.


ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.


நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும்.

நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே

- திருமந்திரம் 657.

Saturday, May 23, 2009

நாடி ஜோதிடம்

நாடி ஜோதிடம்
- எதிகாலத்தின் மற்றொரு முகம்

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை மனிதனுக்கு எதிகாலம் பற்றி அறியும் எண்ணம் இருந்து வருகிறது. இந்த எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க ஜோதிடத்தின் தேவையும் அதிகரிக்கிறது. துய்மையற்ற எண்ணத்துடனும், சுயநலத்துடனும் தனது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படும் ஒருவனுக்கு, அதைபோன்ற ஏமாற்று பேர்வழிகளே வழிகாட்டியாக அமைகிறார்கள். இந்த செயல்கள் தனிமனித குணத்தை பாழ்படுத்துவதுடன், ஜோதிட சாஸ்திரத்தையே பாழ்படுத்துகிறது.

ஜோதிடத்தின் கண்டுபிடிப்பாளர் என யாரும் இல்லை. ஜோதிடம் வேத சாஸ்திரதின் அங்கம் என்பதால் வேதம் போன்று ஜோதிடமும் அனாதி [தோற்றமும் முடிவும் அற்றது]. வேடிக்கையான கதை ஒன்று ஞாபகம் வருகிறது. பள்ளியில் ஆசிரியர் விஞ்ஞான பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது "ப்ராண வாயுவான ஆக்ஸிஜனை கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பவர் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்" எனக் கூறினார்.அப்பொழுது எழுந்த ஒரு மாணவன் 1773 க்கு முன் ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்படாத பொழுது மனிதர்கள் எவ்வாறு சுவாசித்தார்கள் என கேட்டான். அது போன்றே ஜோதிடம் எப்பொழுது? யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கேள்வியும் குழந்தைத் தனமானது.


ப்ரபஞ்ச ஆற்றல் காலத்திற்கு ஏற்ப மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு ஜோதிட ஒளியை உலகுக்கு பரப்பும் பணியை செய்கிறது.


ஆதிகாலத்தில் சப்த ரிஷகள், பாஸ்கரர், வராகமிகிரர் என வளர்ந்த ஜோதிட பரம்பரை 300 வருடங்களுக்கு முன்பே ஆங்கில மோகத்தாலும், கலாச்சார மாற்றத்தாலும் துண்டிக்கப்பட்டது. 1920 வரை இருந்த ஜோதிட நூல்களின் ஆசிரியர்கள், முன்பு இருந்த ஜோதிட விஷயங்களை வெவ்வேறு வடிவில் வெளியிட்டனர். அதற்கு பிறகு நவீன ஜோதிட முறையின் தந்தைகள் என அழைக்கப்பட்ட B.V. ராமன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தங்களின் முயற்சியால் ஜோதிடத்திற்கு புது பிறப்பை கொடுத்தனர்.

திரு. B.V. ராமன் ஜோதிட சாஸ்திரத்தில் செழித்த பகுதிகளான ப்ரசன்னம் மற்றும் சமிதா எனும் பகுதிகளை இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று சேகரித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் புதையுண்ட நூல்களை சேகரித்த இவரது பணி பல கோடி வருடத்திற்கு முன் புதையுண்ட பொருட்களினால் ஏற்பட்ட வைரத்தை வெட்டி எடுப்பதற்கு சமம் என கூறலாம்.


மண்ணுக்குள் சென்ற புதையலை திரு.B.V. ராமன் அவர்கள் எடுத்தார் என்றால் ஜோதிடத்தை விண்ணுக்கு செலுத்தினார் திரு. K.S. கிருஷ்ணமூர்த்தி என கூறமுடியும். தனது புதிய அணுகுமுறையால் ஜோதிடத்தை தனது வசமாக்கினார். மேலும் அனைவருக்கும் ஜோதிடத்தை வசப்படுத்தினார் என கூறலாம்.


இந்தியாவில் இத்தகைய மாமேதைகள் தோன்ற காரணம் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஜோதிட அறிஞர்கள் நிரம்பிய நாடாக பாரத தேசம் இருந்தது. ஜோதிட யுக்திகளும் அதைச் சார்ந்த ஜோதிட விதிகளும் பாமரன் கூட உருவாக்கும் நாடாக பாரதம் இருந்திருக்க வேண்டும். இத்தகைய ஜோதிட யுக்திகளே [Astrological Techniques] நாடிகள் என அழைக்கப்பட்டது.


நடைமுறையில் நாடி ஜோதிடம் என்றது அனைவரின் மனதிலும் கட்டைவிரல் ரேகையை கொண்டு ஓலை சுவடி மூலம் கூறும் ஜோதிடம் என நினைக்கிறார்கள். மக்கள் ஜோதிடரை நாடி வந்து கேட்பதால் நாடி ஜோதிடம் என வேடிக்கையாக சொல்வதும் உண்டு. உண்மையில் நாடி ஜோதிடம் என்பது வேத சாஸ்திரத்தை உணர்ந்தவர்கள் தங்களின் அறிவாற்றலால் ஏற்படுத்திய நவீன யுக்தி என கூறலாம்.


இதை தவிர்த்து அகஸ்தியரும், பிருகு முனிவரும் உங்கள் வாழ்கை வரலாற்றை எழுதி ஓலையில் வைத்திருக்கிறார்கள் என கூறுவது முட்டள்தனம். வழக்கத்தில் நாடி ஜோதிடர்கள் இதை கூறியே ஏமாற்றி வருகிறார்கள். இவ்வறு கூறுபவர்களிடம் நீங்கள் சில கேள்விகளை கேட்க வேண்டும். அந்த கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதில் கூறும் பட்சத்தில் தற்கால நாடி ஜோதிடத்தை பயன்படுத்தலாம்.


1. ரிஷிகள் கண்டுபிடித்த நாடி ஜோதிடம் மதம், மொழி கடந்ததா? அல்லது இந்தியர்களுக்கும். இந்துக்களுக்கு மட்டுமே பயன்படுமா? இன்னும் எளிமையாக சொன்னால் அன்பழகனுக்கும், ஆறுமுகனுக்கும் ஓலை இருப்பது போல ஆப்ரஹாமுக்கும், அப்துல்லாவுக்கும் ஓலை இருக்கிறதா என கேட்க வேண்டும். ஏன் என்றால் நவ கிரகங்கள் ஜாதி , மத அடிப்படையில் இயங்குவதில்லை.

2. முன் ஜென்ம பலன்களை நாடி ஜோதிடம் மூலம் கூறுபவர்கள், புண்ணிய பலன்களை கூறாமல் கெடுபலன்களை மட்டும் கூற காரணம் என்ன ?

3. தங்களது பெயர் குடும்பத்தார் பெயர் என அனைத்தையும் ஞான நிலையில் எழுதிய ரிஷிகள் தங்களின் குறிப்பில் ஜோதிட அமைப்புகள் ராசி, நவாம்சத்தை பற்றி குறிப்பிட காரணம் என்ன? ராசி கட்டத்தை வைத்தா நமது பெயரை கூறினார்கள்?

இந்த குழப்பத்திலிருந்து விடுபட நாடி ஜோதிடம் மற்றும் ஜோதிட முறைக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் 'பத்ததி' என பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை என பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தது. அதிகமாக மக்களிடையே பிரபலமான சில பத்ததி என்றால்ஸ்ரீ பதி பத்ததி மற்றும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என கூறலாம்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்தியாசம்?
தொடரும்...

ஜனவரி 2008

Friday, May 22, 2009

உங்களுக்காக காத்திருக்கிறேன்

எனது ஆன்மாவில் வசிப்பவர்களே... வணக்கம்.

நமது கலாச்சாரமும் சமூகமும் எத்தனையோ விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறது. சில காரணங்களால் அதன் மேல் நமக்கு புரிதல் ஏற்படுவதில்லை. இளமை, வாழ்க்கை தேடுதல் இல்லாமை என பல விஷயங்கள் இதற்கு தடையாக இருக்கிறது.

முதுமை வரும் பொழுது தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தால் அதற்கு உரிய ஆட்கள் வெகு தொலைவில் இருப்பார்கள். நம்மால் அனுகமுடியுமா எனும் நிராசையே மிஞ்சும்.

எனது வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ வழிமுறையில் பலருக்கு என்னறிவின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். மூடப்பழக்கங்கள் என தள்ளி வைக்கப்பட்டச் சாஸ்திரங்கள் இறையருளால் பலருக்கு கொண்டு சேர்த்திருக்கிறேன்.

எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ சத்சங்கம் என கடந்தாகிவிட்டது. அத்தனையும் தொகுத்து ஒரு புத்தகமாக வர இருக்கிறது.

எத்தனையோ கேள்விகள் எதிர் கொண்டாலும் , நான் எதற்கும் பதில் சொல்லவில்லை.

ஒலி பெருக்கி எங்கே பேசியது?

மைக்கில் யாரோ பேசியதை தானே ஒலிபரப்பியது?


புத்தகத்தை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. வலையுலக மேன்மக்கள் உங்களின் கைகள் அதில் இல்லாமல் புத்தகம் பூர்த்தி அடையுமா?

உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகிறது.

கேள்விகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

கேள்விகள் ஜோதிடம், யோக சாஸ்திரம் மற்றும் வேத கலாச்சாரம் பற்றியதாக இருக்க வேண்டும்.

உங்கள் கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு பயன்படும் என்பதை நினைவில் கொண்டு கேள்வியை கேளுங்கள்.

தனி நபர் வாழ்க்கை சார்ந்த கேள்விகள் கேட்க கூடாது.

(உதாரணம் : எனக்கு ஏழரை சனி நடக்கிறது. எப்படி இருக்கும்? எனக்கு இரண்டில் செவ்வாய் எனது மணவாழ்க்கை நன்றாக இருக்குமா? ------- யோக பயிற்சியை செய்து வருகிறேன் அது நன்மை கொடுக்குமா? எனது பிராணாயம பயிற்சி சரியா? போன்றவை தவிர்க்கலாம்)

ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

கேள்வி பதில் முதலில் வலையில் வெளியிடப்பட்டு பின்பே புத்தகமாக வெளிவரும்.

கேள்வியை பின்னூட்டமாகவோ அல்லது எனது மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி : swamiomkar@gmail.com
(சப்ஜக்டில் கேள்வி-பதில் என குறிப்பிடவும்).

எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்....

Thursday, May 21, 2009

விசேஷ கால தாத்பர்யம்

நமது கலாச்சாரம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது. சனாதன தர்மம் என்பது அனைத்து செயலிலும் பரமாத்ம சொரூபத்தை காண்டு அதில் ஆழ்வது என எளிமையாக கூறலாம். உலகில் எந்த கலாச்சாரத்திலும் இல்லாத எளிமையும் கட்டுபாடற்ற தன்மையும் தான் நமது தர்மத்தை காக்கிறது என சொல்லலாம்.

இயற்கை நம்மை இரு துருவங்களில் பயணம் செய்ய சொல்லுகிறது. பிறப்பு இறப்பு, இரவு பகல், நன்மை தீமை, ஏற்ற தாழ்வு என எதிலும் இருமை இருப்பதை நாம் காண முடியும். ஆனால் இந்த இரு துருவங்களில் பயணிக்காமல் மைய்யத்தில் இருப்பது ஆன்மீகம். பிறப்பு இறப்பு இல்லாமல் முக்தி எனும் நிலை அடைவது ஆன்மீக வாழ்க்கை என சொல்லலாம். இந்த இரு துருவ நிலையில் வாழாமல் இறைவனுடன் ஒருமித்த நிலையில் வாழ கற்றுக் கொடுப்பது தான் நமது விசேஷ காலங்களின் நோக்கம்.

விரதம் இருந்து பட்டினி கிடப்பதும், அன்னாதானம் செய்து உண்பதும் என இரு தன்மைகளையும் நமது விசேஷ தினங்கள் கொண்டிருக்கின்றன. நீண்ட முடி வளர்ப்பதும் கடவுளுக்காக அதை காணிக்கை ஆக்குவதும் என இருதன்மைகள் கொண்டு நம்மை இறைவனுடன் ஒருமிக்க செய்கிறது இந்த நாட்கள். விசேஷ தினங்கள் என நமது முன்னோர்களால் முடிவு செய்யப்பட்ட நாட்களுக்கு பின்னால் பல்வேறான தத்துவங்கள் உண்டு.

விரதகாலங்களில் உண்ணும் உணவு, செய்யும் செயல் மற்றும் கால நிலை என அனைத்திலும் ஒரு வாழ்வியல் தத்துவங்களை வடிவமைத்த கலாச்சாரம் நம்முடையது.

நமது உடல் என்பது “பிண்டம்” இந்த பிரபஞ்சம் என்பது “அண்டம்” இதை இணைப்பதால் ஏற்படுவது ஆன்மீக ஞானம். இணைக்காமல் வாழும் நிலையின் பெயர் அஞ்ஞானம். அண்டத்தில் உள்ளது இந்த பிண்டத்திலும் உள்ளது எனும் கூற்றுக்கு நிகராக, பிரபஞ்ச ஆற்றலின் அதிர்வை நமது உடலில் நிலைபெறும் வகையில் அமைக்கப்பட்டது தான் நமது விஷேட தினங்கள்.

விசேஷ காலத்தை உற்று நோக்கினால் அதனுள் ஆன்மீகம், அறிவியல் மற்றும் மெய்ஞானம் என அனைத்தும் புதைந்திருக்கிறது.

திருவிழாக்களில் யானை, குதிரை, ஆடு என பல மிருகங்கள் மனிதனுடன் உலாவரும். ஆனால் அவற்றிக்கு தெரியாது இங்கே என்ன கொண்டட்டம் நடக்கிறது என்று. அது போல நாகரீகம் என்ற பெயரில் மனிதன் தனது சுயத்தன்மையை இழந்து சான்றோர்களில் தன்மை புரியாமல் இயங்க
துவங்கிவிட்டான். இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் நாம் கொண்டாடப்படும் தினங்கள் எப்படி நம்மை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொடுக்கும்?

விசேஷ காலமும் சூரிய சந்திரர்களும் :

வேத சாஸ்திரம் நமது பிரபஞ்சத்தில் பல சூரியன் இருக்கிறது என சொல்லுகிறது. துவாதச ஆதித்யர் எனும் பதம் பன்னிரு சூரியன் கொண்டது இந்த பிரபஞ்சம் என்கிறது. சூரியனின் ஆற்றல் அக்னி சொரூபமானது என்பதால் தான் சன்மதங்களை ஸ்தாபிதம் செய்த ஆதிசங்கரர் அதனுள் சூரிய வழிபாட்டை அமைத்தார்.

சைவம், வைணவம், கெளமாரம் (முருகன் வழிபாடு), கணபதியம் ( விநாயகர் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) என பிரித்த பிறகு சூரிய வழிபாடு என்றும் ஆறாவதாக சங்கரர் அமைத்தார். ஆனாலும் நாளடைவில் அனைத்து வழிபாட்டு முறையிலும் சூரிய வழிபாடு ஒன்று இணைந்து விட்டது.

வேதத்தில் சூரியன் நமது ஆன்மாவை குறிப்பதாகவும், சந்திரன் நமது மனதை குறிப்பதாக சொல்லபடுகிறது. சூரியன் சந்திர நிலைகள் பஞ்சாங்கத்தில் திதியாகவோ , வாரமாகவோ நட்சத்திரமாகவோ அமைகிறது. அதனால் நமது ஆன்மாவும் மனதும் தூய்மை பெற்று மேன்மை அடையும் நாட்களில் திருநாட்களை நமது முன்னோர்கள் தொகுத்தார்கள்.

ஸ்ரீக்ருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என சொன்னாலும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம். காரணம் அந்த குறிப்பிட்ட நாளில் இருக்கும் பிரபஞ்சத்தின் கிரக நிலைகள் நம்மை ஸ்ரீகிருஷணரின் பாதகமலத்தை அடையச்செய்யும் வல்லமை வாய்ந்தது.

ஸ்ரீ ராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கு ஏது பிறப்பு? அவர்கள் நித்தியமானவர்கள் அல்லவா? இருந்தாலும் அந்த புண்ணிய தினம் கொண்டாட காரணம் நமது ஆன்மீக முன்னேற்றம் அடையத்தான்.

சூரியன் சந்திரன் இடையே இருக்கும் இடைவெளி திதி என அழைக்கப்படுகிறது. அமாவாசை, பெளர்ணமி எனும் திதிகள் அம்மனை வழிபடவும், சிவனை வழிபடவும் இருக்கிறது. மேலும் சதுர்த்தி விநாயகருக்கும், ஷஷ்டி ஸ்ப்ரமணியருக்கும், ஏகாதசி மாஹாவிஷ்ணுக்கும் ஏற்ற திதிகள் என கூறப்படிகிறது.

ஒரு குறிப்பிட்ட திதிகள் அன்று நாம் வழிபடும்பொழுது சூரியனாகிய ஆன்மாவும், சந்திரனாகிய மனதும் ஒன்றினைந்து நமது உடலில் ஆன்மீக மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. திதிகள் போல நட்சத்திரங்களுக்கும் சிறப்பு உண்டு.

திருவாதிரை, மகம், உத்திரம் மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நமது வழிபாட்டு நட்சத்திரங்களாக கொண்டாடுகிறோம். மேற்கண்ட நட்சத்திரங்கள் வரிசையாக படித்தால் இதில் என்ன விசேஷம் இருக்கு என உங்களுக்கு தோன்றலாம்.

ஆருத்திரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் என அடைமொழியுடன் சொன்னால் அன்றைய தினத்தின் சிறப்பை உங்களால் உணர முடியும்.

பெளர்ணமியும் உள்நிலையும் :

முழு நிலவு எப்பொழுதும் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பெளர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் சூரிய மண்டலத்தில் நேர்கோட்டில் அமைவதால் நமது உடலிலும் சூரிய சந்திர கலைகள் நேர்கோட்டில் இயங்குகிறது. சந்திரமாம்ச மாத நாள்காட்டிகளில் பெளர்ணமியை மாதத்தின் முதல் நாள் என சொல்லுகிறார்கள்.

ஒரு வருடத்திற்கு மொத்தம் பன்னிரெண்டு பெளர்ணமி வருகிறது. சில பெளர்ணமி மட்டும் அல்லாமல் அனைத்து பெளர்ணமியையும் விசேட தினங்களாக நாம் கொண்டாடி வருகிறோம், சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் நமக்கு ஆன்மீக வழிகாட்டுதலை செய்கிறது.

பெளர்ணமி தேவியின் சொரூபமாக வணங்கிய அபிராமிபட்டருக்கு , அம்பாள் பூரண சந்திரனாக காட்சி அளித்த நிகழ்ச்சியை நினைத்துபாருங்கள். உள்ளார்ந்த பக்தியில் இந்த பிண்டத்திலிருந்து வணங்கினால் தேவி அந்த அண்டத்தையே மாற்றுவாள்.

அமாவாசை ஆளவற்ற ஆற்றலும் :

முழுநிலவு என்பது பூரணத்துவம் என்பதை காட்டுவதால் அதற்கு பூர்ணிமா என பெயர். நிலவு அற்ற நிலை அமாவாசை அல்லது சூன்ய நிலை என கூறலாம். சந்திரன் அண்டத்தில் மனதை குறிப்பதாக கூறினேன். அமாவாசை அன்று சந்திரன் இல்லாத நிலை, ஆன்மீகத்தின் உயர்நிலையான மனமற்ற நிலையை காட்டுகிறது.

அமாவாசை எப்படி ஏற்படுகிறது என்பதை உணர்த்த மஹாபாரத கதை ஒன்றை கேட்டிருப்பீர்கள். அமாவாசை அன்று ஒரு செயலை செய்யவேண்டும் என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பஞ்சபாண்டவர்கள் அமாவாசைக்கு நிறைய நாள் இருக்கிறதே என வருத்தப்படுகிறார்கள். உடனே ஸ்ரீகிருஷ்ணர் ஆற்றங்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க துவங்குகிறார். இதை கண்ட சூரியனும்- சந்திரனும் குழப்பம் அடைகிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் கொடுக்கிறார் என்றால் தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம் என எண்ணி இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை பார்க்க வருகிறார்கள்.

சூரிய சந்திரர்கள் ஸ்ரீக்ருஷ்ணரை பார்த்து கேட்கிறார்கள் ஐயா இன்று அமாவாசை இல்லையே ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் ? பரமாத்மா புன்னகையுடன் கூறினார், “சூரியனும் சந்திரனும் எப்பொழுது ஒன்றாக இருக்கிறார்களோ அன்று அமாவாசை, இன்று என் முன்னால் இருவரும் இணைந்திருக்கிறீர்களே,ஆகையால் அமாவாசை தானே?” என்றார்

பரமாத்மாவின் அருகாமையில் இருந்தால் அவரின் ஆற்றலால் தினம் தினம் முழுமையான நாளாக மாற்றம் அடையும்.

ஆன்மா மற்றும் மனம் எனும் தாத்பரியத்தில் சூரியன் சந்திரன் செயல்படும் பொழுது அண்டத்தில் சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து இருக்கும் நாள் தான் அமாவாசை. அதாவது ஆன்மாவில் மனம் ஒடுங்கிய நாள் இது என புரிந்துகொள்ளுங்கள். மனமற்ற நிலையில் நமது முன்னோர்களின் ஆன்மாவிற்கும் நமது ஆன்மாவிற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யும் நாள் அமாவாசை.

உத்திராயணம் மற்றும் தட்சிணாயனம் துவங்கும் மாதமாகிய தை மற்றும் ஆடிமாதம் அமாவாசைக்கு சிறப்பு உண்டு. அதே போல் புரட்டாசி மற்றும் ஐப்பசி அமாவாசைகளுக்கும் சிறப்பை கூற காரணம் உண்டு. வானியல் ரீதியாக புரட்டாசி மற்றும் ஐப்பசி காலத்தில் சூரியனிடமிருந்து பூமி அதிக தொலைவில் இருக்கும். ஆன்மாவாகிய சூரியனின் பலத்தை பெற அமாவாசை அன்று ப்ரார்த்தனை செய்கிறோம். ஐப்பசி அமாவாசைக்கு முன் தினம் நாம் திபாவளி கொண்டாடி உடலை மேம்படுத்திகொள்வது அதனால் தான்.

விசேட கால உணவும், உடையும் :

நமது பாரத தேசத்தில் சீதோஷண நிலை இடத்திற்கு இடம் மாறுமடும். கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப உடை மற்றும் உணவை உற்கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியம் என்பது ஆன்மீகத்திற்கு மிக அவசியமானது அல்லவா ?

கோடைகாலத்தில் அதற்கு ஏற்ப எளிய உணவும், குளிர்காலத்தில் திண்ம உணவும் உற்கொள்ளுவதற்கு ஏற்ப நமது விசேட நாட்கள் அமைந்துள்ளது. எத்தகைய உணவாக இருந்தாலும் அவற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்பதால் நமக்கு ஆன்ம பலம் கூடுகிறது.

தெற்கில் கோவிலில் பூஜை செய்பவர் மேல்சட்டை அணிந்திருக்க மாட்டார், வடக்கில் தனது உடல் முழுவதும் உடை அணிந்திருப்பார். கலாச்சாரம் ஒன்றானாலும் நமக்கு கால நிலைக்கு ஏற்ப உடை சம்பிரதாயம் உண்டு.

தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு அன்று புத்தாடை உடுத்தியும் அந்த கால நிலைக்கு ஏற்ற உணவை உண்டும் நம்மை மேம்மடுத்திகொள்வது இதன் நோக்கமாகும்.

உள்ளம் பெருங்கோவில் ஊண் உடம்பே ஆலையம் என்கிறார் திருமூலர், இறைவனை நாம் வணங்கி வழிபடுவது நமது உடலில் இருந்து துவங்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் தாத்பரியம்.

நமது பாரத தேசத்தில் மஹான்களும், யோகிகளும் குறிப்பிட்ட நாளில் அவதரித்து , குறிப்பிட்ட நாளில் ச்மாதி கொள்கிறார்கள். அன்றைய நாளில் அவர்களை பூஜித்து தியானித்தால் அவர்களின் ஆசியும் ஆற்றலும் நம்மில் உறையும்.

தற்சமயம் மக்கள் விசேஷ நாட்களை நல்ல நாட்கள் என எண்ணி அதில் சுபகாரியங்களை துவக்குகிறார்கள். உண்மையில் விசேஷ நாட்கள் விரத நாட்களை சுபகாரியம் துவக்க பயன்படுத்த கூடாது. அன்று இறைவழிபாடு செய்து விரதம் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களாகும்.

இனிவரும் காலங்களில் விஷேடங்களை ஒரு விடுமுறைநாளாக கருதி தொலைக்காட்சியில் தொலைத்துவிடாமல், அதன் உள்ளார்ந்த கருத்தை உணர்ந்து பிறருக்கும் எழுத்துரையுங்கள். அண்டத்தில் இருக்கும் பரமாத்மா சொரூபத்தை இந்த பிண்டத்தில் ஜீவாத்ம நிலையில் வழிபடுங்கள்.

டிஸ்கி : இந்த கட்டுரை மே மாத “சுப வரம்” எனும் ஆன்மீக மாத இதழில் வெளிவந்தது.

Wednesday, May 20, 2009

'கிராப்'பாலஜி


[தொலைக்காட்சியில் அந்த தொகுப்பாளினியின் முகத்தை நெருக்கமாக காட்டி பின்னோக்கி நகர்த்துகிறார்கள்]

அன்பர்களே வணக்கம்...

நமது தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு மேல் பல மாமேதைகளை கொண்டு மண்டை காயவைக்கும் நிகழ்ச்சியை செய்து வருகிறோம். உலக மக்களை உய்விக்க எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த ஆலஜிகளின் அலறல்கள் அதிகம். பெயரை மாற்றியும், வீட்டை மாற்றியும் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியவர்கள் பலர். தனது பெயரின் கடைசியில் ஒரு A சேர்த்திக்கொண்டு தொடர் 'வெற்றி' பெரும் அரசியல்வாதிகள் கொண்டது நமது தமிழ்நாடு.

அந்த வரிசையில் நம்மிடையே வந்திருக்கும் மாமேதை, மகாபுருஷர் உலகிலேயே முதல் கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி.

[இப்பொழுது திரையில் இருவரும் தெரியும் வண்ணம் காட்சி நகருகிறது. தலையை நூடுல்ஸ் போல வைத்துக்கொண்டு கோட் சூட்டுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார் ]

அவரின் பிஸி நேரத்திலும் நம்மிடையே உரையாட வந்திருக்கிறார். அவரிடம் நாம் பேசலாம்...

கிராப்பாலஜிஸ்ட் : வணக்கம் எனது புத்திசாலி மக்களே...உங்கள் வாழ்க்கை வளமாக்கவும், வாழ்க்கையில் எளிமையாக வாழைக்காய் வாங்கவும் கிராப்லாஜியை பயன்படுத்துங்கள்.

தொகுப்பாளினி : என்ன சார் நீங்க வாழைக்காய்-னு ஏதோ சொல்லறீங்களே?

கிராப்பாலஜிஸ்ட் : ஒரு ரைமிங்க இருக்கட்டுனு சொன்னேன். கேள்வியை கேளுமா..

தொகுப்பாளினி : கிராப்பாஜினா என்ன சார் சொல்லுங்க..

கிராப்பலஜிட் : முதலில் என்னை சாருனு கூப்பிடாதீங்க. என்னை ஜீ-னு கூப்பிடலாம். உங்க அழகுக்கு பக்கிரினு என் பேரை சொல்லி கூட கூப்பிடலாம்.. ஹி ஹி..

தொகுப்பாளினி : சரிங்க சார் ஜி. சொல்லுங்க...

கிராப்பலஜிட் : [இரண்டு கைகளையும் சினிமா டைரக்டர் போல வைத்துக்கொண்டு தொடர்கிறார் ] கிராப்பாலஜி-னா எல்லாரும் ஏதோ கையெழுத்து வைச்சு சொல்லும் விஷயம்னு நினைச்சுக்கராங்க. இது அப்படி இல்லை... என்னோட பல வருஷ ஆய்வுகளில் சோறு தண்ணி இல்லாமால் கண்டுபிடிச்ச முறைதான் இந்த கிராப்பாலஜி.. ஒருத்தரோட தலைமுடி எப்படி இருக்கோ அதை பொருத்துதான் அவரோட வாழ்க்கை அமையும். இது தான் கிராப்பாலஜி...

தொகுப்பாளினி : ஜீ நீங்க உங்க அளவுக்கு அறிவு பூர்வமா பேசரீங்க.. எங்க அளவுக்கு கொஞ்சம் எளிமையா சொல்லுங்களேன்...

கிராப்பலஜிட் : ஒருத்தர் அவர் தலை எழுத்து சரியில்லைனு சொன்னா அவர் தலை எழுத்த மாத்துர மாதிரி அவர் தலைமுடியின் ஸ்டைலை மாத்திட்டா அவர் வாழ்க்கையே மாறிடும். நீங்க கேட்ட மாதிரி எளிமையா சொல்லனும்னா கிராப்பை மாத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் மாபெரும் அறிவியல் தான் கிராப்பாலஜி.

தொகுப்பாளினி : அருமை ஜி, உங்க விளக்கத்தை கேட்டவுடனே எனக்கு புல்லரிக்கிது.. கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்னு நம்ம நேயர்களுக்கு சொல்லுங்க..

கிராப்பலஜிட் : பிரபஞ்சத்திலிருந்து வர கதிர்வீச்சு மனுஷனுக்கு தலைபகுதியில் நுழையுது. அதனால அந்த கதிவீச்சை நம்ம தலைக்குள் லாவகமா போகிறமாதிரி ஹார் ஸ்டிலை மாத்திட்டா நம்ம் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிதான்... உதாரணமா நமக்கு பிறக்கும் போது ஒரு ஹார் ஸ்டைல் இருக்கும். ஸ்கூலுக்கு போகும்போது அம்மா வழிச்சு சீவி விடும்பொழுது சட்டியை கவித்திய மாதிரி இருக்கும்... காலேஜ்க்கு போகும்போது நாய் சிலிப்பிக்கிட்ட மாதிரி மாறும்... இதிலிருந்து என்ன தெரியுது? [பெருமை பொங்க தொகுப்பாளினியை பார்க்கிறார்..]

தொகுப்பாளினி : தெரியலை ஜி. நீங்களே சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : தலை முடியோட அமைப்பு மாற மாற மனித வாழ்க்கையும் மாறுது...

தொகுப்பாளினி : வாவ்... உலத்துக்கு மாபெரும் தகவலை கொடுத்திருக்கீங்க... கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி எல்லோருக்கும் உதவும். எல்லோருக்கும் மண்டை இருக்கு இல்லையா..?

தொகுப்பாளினி : ஒருத்தர் தனது வாழ்க்கையை எப்படி எல்லாம் கிராப்பாலஜி மூலமா மாத்திக்க முடியும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி ரொம்ப எளிமையானது... [தலை கோதியபடியே] உங்களுக்கு சினிமா நடிகராகனுமா... அதுக்கு ஒரு ஹார்ஸ்டைல் இருக்கு..[இருபக்க முடியை சுழித்துவிட்டபடி] விஞ்ஞானி ஆகனுமா அதுக்கொரு ஹார்ஸ்டைல் இருக்கு அதுக்கேத்தமாதிரி மாத்திகனும்...கிரிக்கெட் வீரர் தோணியை எடுத்துக்குங்க... அவர் எதுனால பேமஸ் ஆனார்? அவங்க நோக்கத்திற்கு ஏற்ப அவங்க தலை முடியை மாத்தி கிரகங்களோட கதிர் வீச்சை மாத்திடுவேன்...

தொகுப்பாளினி:கிரக கதிவீச்சை கூட பொருத்துக்கலாம் போல இருக்கு.. ஆனா... ஸ்ப்பபா.... அடுத்த ஷோவிற்கு வரும்போது கோட்டை டிரைக்கிளீனிங் பன்னுங்க.. கிராப்பாலஜி பிரகாரம் அதிக முடி இருந்தா நல்லதா இல்லை குறைவா இருந்தா நல்லதா ?

கிராப்பாலஜிஸ்ட் : அதிக முடி இருந்தா கதிர்வீச்சை நம்ம தலைக்குள் போகவிடாம தடுக்கலாம்... இதை எப்படி சொல்லறீங்கனு கேட்பீங்க கரக்டா?

தொகுப்பாளினி : இல்லை நான் கேட்கவே இல்லையே...

கிராப்பாலஜிஸ்ட் : இல்லை எனக்கு தெரியும் அது தான் கேட்கரீங்க... ஒரு பிரபல நடிகர் என்கிட்ட வந்தார் அவருக்கு தலைமுடியே இல்லை. அவருக்கு விக்கு வைச்சு கிராப்பாலஜி செஞ்சேன். இப்போ அவருக்கு விக்கு தலையில இருக்கு அத்னால அவர் படமெல்லாம் நல்லா விக்குதாம்.

தொகுப்பாளினி : தமிழ் நாட்டு பெண்கள் தங்களோட ஹார்ஸ்டைலை அவ்வளாவா மாத்திகறது இல்லை. அவங்களுக்கு கிராப்பாலஜி வர்க் ஆகுமா?

கிராப்பாலஜிஸ்ட் : தமிழ்நாட்டு பெண்கள் பெரிய அளவில் வராம இருக்கிறதுக்கு காரணமே அவங்க தலை தான்.

தொகுப்பாளினி : ஜி என்ன சொல்லறீங்க?

கிராப்பாலஜிஸ்ட் :
(சுதாரித்து..) தலைமுடியோட அமைப்புதான். கிரன்பேடி எடுத்துக்குங்க. அவங்க பின்பாதி பெயர் பயப்படுவது போல இருந்தாலும்,
அவங்க ஹார்ஸ்டைல் தான் அவங்களை ஒரு புதுமை பெண்ணா காமிச்சுது.

தொகுப்பாளினி : முடியல ஜீ. எப்படி எல்லா கேள்விக்கும் இப்படி ஒரு பதில் சொல்லறீஙக?

கிராப்பாலஜிஸ்ட் : என் தலையை பார்த்தீங்களா? முதலில் என் தலையை நான் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி வைச்சுக்கிட்டேன். அதனால உலக புகழ்
அடைஞ்சேன்...

தொகுப்பாளினி : உலகப்புகழ்..? (மனதுக்குள்...எனக்கே இவரை தெரியாதே) ஜீ மைக்கேல் ஜாக்சன் மாதிரி உங்க தலையை வைச்சுக்கிட்டா நீங்க
மியூஸிக்ல பெரியாளா வராம ஏன் கிராப்பாலஜிஸ் ஆனிங்க...

கிராப்பாலஜிஸ்ட் : (மனதுக்குள் : குடுத்த காசுக்கு ஓவரா கேள்வி கேட்கறது தப்பாச்சே...) நான் மியூஸிக்ல உலக புகழ் பெற்ற ஆளா வரனும்னு தான் இப்படி என்னோட ஹார்ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.. நான் பெரிய பாப் சிங்கர் ஆனப்பிறகு இந்த மாபெரும் அறிவியல் உண்மையை மக்களுக்கு சொல்ல முடியாது இல்லையா? அத்தான் கிராப்பாலஜிஸ்ட் ஆயிட்டேன்.(அப்பாடா மூச்சுவிடாம பேசியாச்சு)

தொகுப்பாளினி : ஜீ கடைசி கேள்வி நான் சில சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன்.பலவருஷம் தினமும் எல்லாரு விட்டிலும் நடு ஹாலிலும் ஒப்பாரி வைச்சுருக்கேன். அப்புறம் சான்ஸ் கிடைக்கலை.. என் வாழ்க்கை மீண்டும் முன்னேற என் ஹார்ஸ்டைலை கிராப்பாலஜி பிரகாரம் எப்படி மாத்திகனும் சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : ( மனதுக்குள்.... நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்ன கேள்விங்கிற பேர்ல உனக்கு பலனை கேட்கறியா... இரு உனக்கு இருக்கு). நிச்சயமா சொல்லறேன். உங்க ஹார்ஸ்டைல் தான் உங்க பின்னடைவுக்கு காரணம். வலைபதிவு எழுதும் ஒரு ஸ்வாமி இருக்கார். அவர் பதிவை நான் படிக்கறது உண்டு. நீங்களும் படிக்கறீங்கனு நினைக்கிறேன். அவரோட ஹார்ஸ்டைல் உங்களுக்கு நல்ல இருக்கும். அந்த ஹார்ஸ்டைல் வைச்சுகுங்க அப்பறம் பாருங்க...

திரை மெல்ல இருளுகிறது...

[இது ஒரு பாபா ஹார்லைன்ஸ் பிரசண்டேஷன்]

Wednesday, May 13, 2009

பழைய பஞ்சாங்கம் 13- 05-2009

அண்டா ரமணர்

ரமண மகரிஷியை பார்க்க சிலர் அவரின் ஆசரமத்திற்கு வந்தனர். ஆசிரம முன் வாசல் வழியாக வராமல் மலை மேலிருந்து அவர்கள் வந்ததால் சமையல் அறைக்கு வெளிப்பகுதிக்கு வந்து அடைந்தனர். அப்பொழுது ஒருவர் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்.
அவரை பார்த்து " ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருப்பார் ? என கேட்டனர்.

பாத்திரம் கழுவிக்கொண்ருந்தவர் தனது கையில் இருக்கும் அண்டாவை காட்டி இதுதான் ரமணர் என்றார். வந்தவர்களுக்கு அவரின் செயல் புரியவில்லை. மீண்டும் கேட்க. அவர் அண்டவின் மேல் ”ரமண மகரிஷி” என எழுதி இருந்ததை காட்டி இது மேல் தான் அப்படி எழுதி இருக்கிறது வேறு எங்கும் இது போல் பார்த்ததில்லை என்றார். சரியான ஆளிடம் மாட்டிக்கொண்டோம் என நினைத்து அங்கிருந்து ஆசிரத்திற்குள் நுழைந்தனர்.

பகவான் ரமணர் அமரும் ஹாலில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு எல்லோரும் பகவான் வருவதாக சொல்ல, அங்கே...

அந்த பாத்திரம் தேய்த்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
--------------------------------------------------------------------------

ஜோதிட பாடம் என்ன ஆச்சு?

பலர் என்னிடம் ஜோதிட பாடம் என்ன ஆச்சு ? எழுதுவதில்லை என்கிறார்கள். மேலும் சிலர் உரிமையுடன் துணுக்குகள் எழுத நேரம் இருக்கிறது,
நகைச்சுவை எழுத நேரம் இருக்கிறது ஆனால் ஜோதிட பாடம் எழுத நேரம் இல்லையா என கேட்கிறார்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் பயிற்றுவித்து இருக்கிறேன். ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது. ஒரு நாளில் முழு ஜோதிடத்தையும் கற்றுகொடுத்துவிடுவேன். ஆனால் இணைய வழியில் பயிற்றுவிப்பத்தில் சில அசெளகரியங்கள் உண்டு. நிறைய விளக்கங்கள் தேவைப்படும். அதை சில தொழில்நுட்ப ரீதியாக தீர்த்து வருகிறேன். விரைவில் ஜோதிட பாடம் வரும்.
----------------------------------------------------------------------

எச்சிக்கலை சித்தர்


காரைக்குடிக்கு சென்று இருக்கும் பொழுது அங்கே சில ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொரு கோவிலும் பிரம்மாண்டம், அழகு, தெய்வீகம். வரும் வழியில் ஒரு சித்தரின் சமாதிக்கு அழைத்து சென்றார் எனது மாணவர். வாசலில் இருந்த பெயர்பலகையில் “எச்சிக்கலை சித்தர்” என இருந்தது. என்னுடன் வந்த சுப்பாண்டி இதை பார்த்தவுடன் நமட்டு சிரிப்புடன், “சுவாமி போற போக்கை பார்த்தா நானும் சித்தராயிரலாம் போல இருக்கே..!” என்றார். உன் நல்ல புத்தியை கோவிலுக்கு வெளியே வை. உள்ளே சென்று விசாரிக்கலாம் என கூறி உள்ளே சென்றேன்.

அப்புறம் தான் தெரிந்தது, “ எசசிக்கலையும் (எந்த சிக்கலையும்) போக்கும் சித்தர்” என்பது. தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி என நினைத்துக்கொண்டேன். :) குப்பை மேடுகளிலும் பேருந்து நிலையத்திலும் வாழ்ந்த ஆன்மீக மஹான் அந்த சித்தர். சில நிமிடம் தியானித்தேன்.

அற்புதமான ஆற்றல் பெற்ற இடம்.

------------------------------------------------------------------------------------------------------
சென்னை விஜய பேரறிக்கை

கோடைவிடுமுறைக்கு வருவதாக உறவினர் அனுப்பிய கடிதம் பார்த்தவுடன் நம் ஆட்கள் வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். உறவினர் வரும் பொழுது பெரிய பூட்டு தொங்கும். இதை நான் சொல்ல காரணம் நான் சென்னை வருகிறேன் என்றவுடன் முக்கியமாக நான் சந்திக்க நினைத்த அனைவரும் “ஜூட்”.

அப்படி இருந்த போதும் புரூனோ, உமாசங்கர், பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது. அப்துல்லா மற்றும் டோண்டு ராகவன் ஆகியோருடன் தொலைபேசவும் முடிந்தது. அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது...

இருங்கப்பா அடுத்தமுறை சொல்லாம வரேன்...
----------------------------------------------------------------------------

தேர்தல் சமயத்தில் போதை வஸ்துக்களை கொடுக்ககூடாது என்றாலும் அதையும் மீறி எனது கவிதையை வெளியிடுகிறேன் :)

குரு நிலை

உங்களை போல குருவாக வேண்டும்
என கேட்கும் சிஷ்யா...
நீ குருவாக
"நான்"
இருக்கக்
கூடாது.

Sunday, May 10, 2009

கிபி 5503

தனது கதிரியக்க உடையை அணிந்துகொண்டான் இண்டூ என செல்லமாக அழைக்கப்படும் இண்டெலன். தலையில் பறக்கும் கவசத்துடன் தயாராகி வீட்டின் வெளியே வந்தான்.

பேராசிரியரின் வீட்டிற்கு செல்ல முன்பே மனோ தள தகவலை சினேகிதி பார்ப்பிக்கு அனுப்பி இருந்தான். தூரத்தில் சிவப்பு உடையில் தலைபகுதியில் விசிறி பறக்க என்னருகில் வந்தாள் பார்பி.

அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள், “ஏன் தாமதம் என கேட்கிறாயா? என்னை பிரதி எடுத்து கொள்ள சென்றேன். இதோ என் பிரதி” என அவளை போலவே மற்றொரு உயிரை காட்டினாள். இவள் எதற்கு என்றேன்.

"வீட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை பட்டது அதனால் பிரதி எடுத்தேன்,அது இருக்கட்டும் இண்டூ,பேராசிரியர் கிழத்திற்கு என்ன வந்தது எதற்காக வ்ரச்சொன்னார்?”

"எதோ ரகசிய ஆய்வு செய்திருக்கிறாராம், நம்மிடம் காட்ட விரும்புகிறார். வா செல்லலாம். நேரம் 45 அணுக்களை தாண்டிவிட்டது. இன்னும் தாமதம் வேண்டாம்.”தனது பிரதியை அனுப்பி விட்டு தயாரானாள் பார்ப்பி. தங்கள் தலை பகுதி விசிறியை இயக்கி இருவரும் பறந்தனர். பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமவெளியாக இருந்தது. வீடுகள் ஈர்ப்பு விசையில்லாமல் அந்தரத்தில் மிதங்கி கொண்டிருந்தது. அதன் குறுக்கே பறந்த பார்பியும், இண்டூவும் பேராசிரியர் வீட்டை அடைந்தனர்.

தங்களை வீட்டின் வாயிலில் இணைத்து கொண்டதும் கதிரியக்க ஆய்வுக்கு பிறகு இருவரையும் வீடு தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. பேராசிரியர் இருவரையும் வரவேற்று, அரசின் கண்காணிப்பு கருவியை தற்காலிகமாக நிறுத்தினார்.

அவர் உபசரிப்புக்காக வழங்கிய ஆக்சிஜனை முகர்ந்த படியே கேட்டனர், “எங்களை வர சொன்னதன் நோக்கம் என்ன பேராசிரியரே?”

தனது தாடியை சொறிந்தபடியே கூறத்துவங்கினார்.

“பல நூற்றாண்டுக்கு முன்பு மனித இனம் சிலவிதமான கதிரியக்க போரால் அழிந்துவிட்டது. இந்த கிரகம் முழுவதும் அழிக்கப்பட்டு சில எஞ்சிய மனிதர்கள் மூலமே மனித இனம் தழைத்து வருகிறது.இந்த கிரகத்தின் நிலப்பரப்பு தனது முழு சக்தியை இழந்து வெறும் நிலமாக காட்டி அளிக்கிறது. ஈர்ப்புவிசைக்கு எதிராக பழகிய நாம், நிலத்தை தோண்டி பார்க்க அரசு அனுமதிப்பதில்லை. அதையும் மீறி ஒரு நாள் நிலத்தை தோண்டி பல நூற்றாண்டுக்கு முன் மனித இனம் பயன்படுத்திய ஒரு கருவியை எடுத்துவந்தேன். அதில் ஆச்சிரியப்படும் சில செய்திகள் பார்த்தேன். இதோ பாருங்கள்”

அங்கே சதுர வடிவில் ஒரு கருப்பு நிற பொருள் இருந்தது. இரு மடிப்பாக இருந்த அந்த பொருளை திறந்து விசையை அழுத்தினார் பேராசிரியர்.

"windows Xp" என ஒளியை உமிழ்ந்தது...

சில அனுத்துகள் நேரத்திற்கு பிறகு தன் ஒளி பகுதியில் காட்சி மாறியது.

“பார்த்தீர்களா எப்படி வேலைசெய்கிறது- இன்னும் இதற்கு உயிர் இருக்கிறது” என்றார் பேராசிரியர்.

"ஐயா அது என்ன மூலையில் ஏதோ எண்வடிவில் தெரிகிறதே?” என்றான் இண்டூ.


“நமது முன்னோர்களின் கடிகாரம். அதில் 1980 முதல் 2999 வரை எண்கள் இருக்கிறது. ”


"அதற்கு பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது?”


"தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் வேறுகிரகத்திற்கு பயணித்திருக்கலாம்”


"இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்” என்றாள் பார்ப்பி.


“இதில் பல தகவல்கள் உண்டு. அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இதில் அறிந்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தியவர்
தனது நண்பருக்கு சில தகவலை பரிமாறி இருக்கிறார். அதில் வரும் சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் காண முடியவில்லை ஆனால் அகராதியில் தேடிவருகிறேன்.”

"அது என்ன வார்த்தைகள் பேராசிரியரே?”

"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என
நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”

“இதற்கும் எங்களை வர சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?”

“இண்டூ, இந்த கருவியின் ஓரத்தை கவனித்தாயா? உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன் இது ஆலயத்தில் வழிபட்ட
கருவியாக இருக்கலாம். இல்லையென்றால் நம் கடவுள் இண்டல் பெயர் இதில் இருக்குமா? மேலும் இந்த கருவியின் தகவல் களஞ்சியத்தில் பார்ப்பி என்று தேடினால் ஒரு பெண் உருவின் தகவல் வருகிறது. நிச்சயம் அது ஒரு வகுப்பினரால் வணங்கப்பட்ட பெண் தெய்வமாக இருக்கலாம்”

”பேராசிரியரே, தயவு செய்து உங்கள் ஆய்வுகளை நிறுத்துங்கள். நமது மின்னனுக்கடவுள் இண்டல் பல நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது”

“உங்களுக்கு எனது ஆய்வு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் அவரிகளிடம் ஒரு சிறிய தகடு இருந்திருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டால் அஷ்டமா சித்தி கிடைக்குமாம்”

“அஷ்டமா சித்தி என்றால்?” என்றனர் கோரசாக.

”தொலைதூரத்தில் இருக்கும் நபரிடம் பேசுதல், அவரின் பிரதியை காணுதல், ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்துதல், தகவல்களை பரிமாறுதல், அசைவு படம் எடுத்தல் என பல சித்திகள்.”

“பேராசிரியரே, இது சாத்தியமா? ஏன் வீண் காலவிரயம்? “

”நீங்கள் நம்பவில்லை என்றால் போங்கள் இந்த தகடை வைத்து நான் அஷ்டமா சித்தியை பெருகிறேன்.”

பேராசிரியர் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மொபைல் சிம் கார்ட்டை பிளாஸ்டிக் பூக்களையும், டார்ச்சு லைட்டையும் வைத்து பூஜிக்க துவங்கினார்.

டிஸ்கி : தற்காலத்தில் மந்திர, யந்திரங்களை பயன்படுத்தும் முறையையும் - மாயன் கலாச்சாரம் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் காட்டுரையையும் படித்ததால் உருவான சிறுகதை.

Friday, May 8, 2009

ஜோதிடம் விஞ்ஞானமா? மூடநம்பிக்கையா?

பல காலமாக இருக்கும் விவாதம் இது. ஒவ்வொரு காலத்திலும் ஜோதிடம் நிரூபித்தால் மட்டுமே மக்களால் நம்பிக்கை பெறும். அவ்வாறு நம்பிக்கை பெற்றாலும் அது விஞ்ஞானம் என்றோ மூடநம்பிக்கை என்றோ யாரும் முடிவுக்கு வருவதில்லை. ”ஜோதிஷம் ப்ரக்திக்‌ஷ நிரூபணம்” என்கிறார்கள் சான்றோர்கள்.


ஜோதிடத்தை மூடநம்பிக்கை ஆக்குவது எளிது. தங்களுக்கு ஏற்படும் ஆசையின் அடிப்படியில் அல்லது பிரச்சனையின் அடிப்படையில் ஜோதிடரை அனுகும் மக்கள் ஜோதிடத்தை மூடநம்பிக்கைக்கு எடுத்து செல்லும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.

திருமணம் தள்ளிப்போகிறது என ஜோதிடரிடத்தில் கேட்டவுடன், அவர் உண்மையான ஜோதிடராக இருந்து ஜாதகத்தை கணித்து இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்றால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள்? அதே நேரத்தில் திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வந்தால் 90 நாளில் திருமணம் நடக்கும் என்றவுடன் தன்னுடைய சுய தேவைக்காக கண்களை மூடிகொண்டு செல்லுகிறார்கள்.

அதற்கு பிறகு கல்யாணம் நடக்காது போனால் ஜோதிடர்(ன்)(ம்) போலி சரியில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்? திருமணஞ்சேரிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்பது சட்டமா? திருக்கடையூர் சென்றால் அனைவருக்கும் இறப்பு இல்லாத பெருவாழ்வு வருமா?

என்ன ஸ்வாமி நாத்திகம் பேசுகிறீர்கள் என கேட்ட தோன்றுகிறதா? ஏதோ ஒருவர் சொன்னார் என்பதற்காக இயந்திரமாக கோவிலில் நுழைந்து தனது சுயலாபத்திற்காக பூஜை செய்பவனுக்கு எந்த தெய்வம் வரம் கொடுக்கும்? திருமணஞ்சேரி செல்லுவதாக இருந்தால் சிவபெருமானாக செல்லுங்கள் மலைமகள் மனைவியாவாள், திருக்கடையூர் செல்லுவதாக இருந்தால் மார்க்கண்டேயனாக செல்லுங்கள். அதைவிடுத்து சுயநலத்தோடு சென்றால் அங்கே அருள் பாலிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஜோதிடத்தை மூட நம்பிக்கை ஆக்குபவர்களாவது சகித்துக்கொள்ளலாம். சனி பெயர்ச்சி அன்று இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லை. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலில் கூட்டம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அரசன் முதல் ஆண்டி வரை அங்கே தெருவில் படுத்து காலையில் சனிப்பெயர்ச்சியை கொண்டாடுவார்கள்.

அங்கே இருக்கும் தீர்த்த குளத்தில் தங்களின் துணிமணியை கழற்றி எறிந்து சனியிடமிருந்து விடுதலை பெருவார்கள். சென்ற சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் தீர்த்த குளத்திலிருந்து 10 டன் துணிகளை மாநகராட்சி அகற்றி இருக்கிறது. எந்த ஆகமத்தில் கோவில் தீர்த்த குளத்தில் உடைகளை கழற்றி எறிய சொன்னது? பக்தர்களின் நலனுக்காக தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் “உண்டியல்” என பலகை வைக்கும் கோவில் நிர்வாகம் இதை தடுக்க ஏதாவது பல-கை வைத்தார்களா?

வீட்டில் ஏழரை சனி பிடித்தால் அதை திருநள்ளாற்றில் தொலைப்பான் ஏன்? வீட்டிலேயே தொலைக்க கூடாதா? தீர்த்தகுளத்தில் இருக்கும் ஈரத்துணிகள் மூலம் எப்படியெல்லாம் நோய்வரும் என்று யாராவது சிந்தித்தது உண்டா?

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் நவக்கிரத சன்னிதியில் சனியின் விக்கிரகம் இருக்கிறதே அதில் சனியின் ஆற்றல் இல்லையா? அல்லது சனி அங்கே மட்டும் தான் இருக்கிறாரா?

உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?

நிதர்சனத்தில் மக்களுக்கு அங்கே சென்றால்தான் சனி பிடிக்கும்.


திருநள்ளாரு நள மகாராஜவுக்கு சனி விமோசனம் கிடைத்தது. நள மஹாராஜா சாதாரணமானவர் கிடையாது. MR.Perfect..! தான் செய்யும் எந்த செயலிலும் நேர்த்தியுடன் இருப்பார். அவரிடம் தவறு என்பதே கிடையாது. சனி நேர்த்தி இல்லாத, சத்தியமற்ற , தர்மம் தவறியவர்களை தான் பிடிப்பானாம். அப்படி இருக்க சனி அவரை பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. காரணம் அவர் அவ்வளவு கச்சிதமானவர். நள பாகம் என கேட்டிருப்பீர்கள், சமையலில் கூட நளன் கச்சிதமாக சமைப்பான் என்பதை அதில் இருக்கும் அர்த்தம். ஒரு நாள் கால்களை கழுவும் பொழுது ஒரு இடத்தில் நீர் படாமல் கால்களை கழுவினான் நளன். இவ்வளவு நாள் மிஸ்டர்.கச்சிதமாக இருந்தவர் செய்த தவறை சாதகமாக்கி சனி அவரின் கால்களை பிடித்தான் என்றது தலவரலாறு.

இப்பொழுது நளனை ஒப்பிட்டு சொல்லுங்கள், ஈரத்துணியை கழற்றி வீசும் பக்தர்களை சனி பிடிப்பாரா மாட்டாரா? இதனால் தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என கூறுவது எளிது என்கிறேன்.

அப்படியானால் ஜோதிடம் விஞ்ஞானமா?

விஞ்ஞானம் என்பது மனித அறிவுக்கு எட்டிய ஒரு சித்தாந்தம். ஒருவர் கண்டறிந்ததை ஒரு குழு ஏற்றுக்கொண்டால் அவர் விஞ்ஞானி. அந்த குழுவினர்கள் விஞ்ஞானிகளின் சபை. மனித அறிவுக்கு ஏற்ப சான்றுகள் கொடுத்தால் போதுமானது.

150 வருடத்திற்கு முன் டார்வின் சொன்ன கருத்தை மதவாதிகள் எதிர்த்தார்கள். கடவுள் மனிதனை படைத்தார் என்ற மதவாதிகளுக்கு, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்க முடியவில்லை. பிறகு விஞ்ஞானிகளும் மக்களும் ஏற்றார்கள். இந்த நூற்றாண்டில் திரும்பவும் டார்வின் கொள்கை முரண்பாடானது என்கிறார்கள். குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

விஞ்ஞானிகளின் கூத்தை நினைக்கும் பொழுது ஒரு வேடிக்கை ஞாபகம் வருகிறது..

அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் மாநாட்டுக்கு பல நாட்டு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர்,ரஷ்யர் மற்றும் இந்திய விஞ்ஞானி குறிப்பிடத்தக்கவர்கள்.

நாங்கள் தான் தொலைத்தொடர்பில் உலகின் முன்னோடிகள் என ஒவ்வொரு வரும் தர்க்கம் செய்தார்கள். இதை நிரூபிக்க சொன்னார்கள் பிறர். அமெரிகக் விஞ்ஞானி உடனே அங்கே இருந்த நிலத்தை தோண்டினார். பத்தடி ஆழத்தில் சில டெலிபோன் கம்பங்கள் இருந்தது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானியிடம் கூறினார், ”ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும், ஐம்பது வருடத்திற்கு முன்னறே நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

ரஷ்யர் இருவரையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றார், அவரும் நிலத்தை தோண்டினார். பதினைந்து அடி ஆழத்தில் சில தந்தி கம்பங்கள் கிடைத்தது. அமெரிக்கர் சொன்னது போலவே ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் எழுபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே நாங்கள் தந்தி வழிசேவையை பயன்படுத்தி இருக்கிறோம் நாங்கள் தான் தொலைத்தொடர்பில் முன்னோடி என்றார்.

நம்ம ஆள் சும்மா இருப்பாரா? இருவரையும் இந்தியா அழைத்து வந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தார். பத்து , இருபது என ஆழம் கூடியதே தவிர விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை.

ரஷ்யரும், அமெரிக்கரும் என்னப்பா உன் முடிவு என கேட்க, இந்தியர் சொன்னார், ஒரு அடிக்கு ஐந்து வருடம்
என்றாலும் கூட நூறு வருஷத்திற்கு முன்னாடியே நாங்க வயர்லெஸ் டெக்னாலஜி யூஸ்பண்ணிருக்கோம்...! என்றார்.

விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.

உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று. ஜோதிடத்தை மெய்ஞான நோக்கோடு கண்டால் அதில் இருக்கும் உண்மை புலப்படும்.

ஆதலால் சொல்லுகிறேன் ஜோதிடம் ஒரு மெய்ஞானம்.

டிஸ்கி : பரிசல் மற்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜோதிட உற்சவத்தில் எனது பேச்சின் உரை வடிவம் இது. எழுத தூண்டிய அவர்களுக்கு எனது நன்றிகள்.

Friday, May 1, 2009

சென்னையில் சந்திப்போமா?

சென்னை பதிவர் சந்திப்புனு எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஏன்னா என்னை எல்லாம் பதிவர்னு சொல்லிக்க முடியுமா? நான் சென்னையை சேர்ந்தவனும் அல்ல,

வேணும்னா சென்னை புதியவர் சந்திப்புனு போட்டுக்கலாம். நாம புதுசா தானே சந்திச்சுக்க இருக்கோம்?


வரும் 3 ஆம் தேதி (ஞாயிறு) அன்று நான் சென்னையில் இருக்கிறேன். வலையுலகில் இருப்பவர்களுடனும், இந்த வலைபதிவை படித்துவருபவர்களையும் சந்திக்கும் ஆவல் உண்டு.

ஞாயிறு மாலை கொஞ்சம் காப்பியுடன் கலந்துரையாடுவோம்.
சந்திக்கும் இடம் பற்றி அறிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
போன் : 99 44 2 333 55.