Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, November 15, 2016

விஸ்வாமித்ர டயட்...!

இணையத்தில் டயட் என பல விஷயங்கள் பேசப்படுவதால் என் பங்குக்கு புதிய டயட் முறையை உலக மக்களுக்கு தெரிவிக்கவே ‘விஸ்வாமித்ர டயட்’ பற்றி சொல்லுகிறேன்.

மேலைநாட்டுக்காரங்கள் சொன்ன பல டயட் வகைகள் அசைவத்தை தூக்கிபிடிக்கிறது. ஆனால் டயட் என்றாலே மாமிசம் சாப்பிடாதே என சொல்லுகிறது இந்திய டயட் முறைகள். எளிய உணவு பருப்பும் கஞ்சியும் சாப்பிடுங்கள் என சொன்ன டயட் முறைகளை பின்பற்றுவதைவிட வாய்க்கு ருசியாக வெண்ணையில் வாட்டிய மாமிசத்தை சாப்பிடு என டயட் பலருக்கு பிடிக்காமல் போகுமா? ஆனால் விஸ்வாமித்ர டயட் இதில முற்றிலும் மாறுபட்டது.

உடல் எடை குறைக்க வேண்டுமா?
நோய் தீர வேண்டுமா?
2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வேண்டுமா?
பக்கத்துவீட்டுக்காரருடன் சண்டை தீர வேண்டுமா?
வருமானம் அதிகரிக்க வேண்டுமா ?

பயன்படுத்துவீர் விஸ்வாமித்ர டயட்...!

இதெல்லாம் எப்படி தீரும் என கேள்வி உங்களுக்கு உதயமாகலாம்.

முதலில் விஸ்வாமித்ர டயட் பற்றி பார்ப்போம்.

ரிஷி விஸ்வாமித்ரர் நம் புராணங்களிலும் இதிஹாசங்களிலும் நிறைந்தவர். பரசுராமரும் இவரும் ஒரே சூழலில் பிறந்தவர்கள் என இவரின் பிறப்பு முதல் விளக்கம் சொல்ல ஆசைதான்.
நமக்கு ஈசனின் லீலா வினோதங்களையே திருவிளையாடல் படம் பார்த்துத்தானே தெரிந்துகொள்கிறோம். அது மாதிரியே விஸ்வாமித்ரரை பற்றியும் ராஜரிஷி என்ற அற்புத திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விஸ்வாமித்ரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் இந்த டயட்டுக்கு தூண்டுகோல்.

ஒருமுறை பாரத தேசம் முழுவதும் பட்டினியும் பஞ்சமும் பரவியது. மழையில்லாமல், வேளாண்மை இல்லாமல் மக்கள் உணவுக்காக கஷ்டப்பட்டனர். அந்த சமயத்தில் விஸ்வாமித்ரர் பயணம் செய்து பக்கத்து தேசத்துக்கு சென்று இருந்தார்.  அவர் திரும்பி பாரத தேசத்துக்குள் நுழைந்தால் தர்மம் குன்றி, பஞ்சம் பரவி இருப்பதை கண்டார்.

பிரம்ம ரிஷிக்கு யாரும் உரிய மரியாதை செய்யவில்லை. தனக்கே இங்கே வாழும் சூழல் இல்லாத நிலையில் பிரம்ம ரிஷிக்கு எப்படி உணவு கொடுத்து மரியாதை செய்வது என அனைவரும் விலகி சென்றனர்.

பாரத தேசத்தில் பல இடங்களில் சென்ற விஸ்வாமித்ரர் உணவு சாப்பிடாத காரணத்தால் பலம் குன்றி கீழே விழுந்தார். அவர் அருகே ஒரு நாய் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உணவுக்காக காத்திருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த விஸ்வாமித்ரரை சாப்பிட அது எண்ணியது. ராஜரிஷி உயிருடன் இருந்ததால் சாப்பிட முடியாமல் நாய் உயிர்விட்டது.. சில நாட்கள் கொடூர பசியுடன் காத்திருந்த விஸ்வாமித்ரர் இறந்த நாய்க்கு யாரும் உரிமைகொண்டாடவில்லை என்பதால் அதை உண்டு தன் உயிரை மேம்படுத்தினார். இறந்து சில நாட்கள் ஆனதால் நாய் உடல் அழுகி இருந்தது.  இருந்தாலும் தனது உயிர் தாங்கி உடலுடன் நம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தர்மம் அவரை இச்செயலை செய்ய தூண்டியது.


என்னய்யா இது டயட் என்று இறந்து அழுகிய நாயை சாப்பிட சொல்கிறீர்களா? என கேட்ப்பது புரிகிறது.

சிலர் இதையும் சாப்பிட விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம். விஸ்வாமித்ரர் இப்படி உணவு சாப்பிடாதும் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை. ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கும் ஒரு மாமுனிவர் மாமிசம் சாப்பிட்டால் பாவம் சேரும் ஆனால் விஸ்வாமித்ரருக்கு ஒன்றும் நேரவில்லை. காரணம் அவர் உணவை மூன்று நாட்கள் கவனமாக கண்டு ஆத்ம விழிப்புணர்வுடன் சாப்பிட்டார் என்பதே இதில் நாம் பார்க்க வேண்டிய உட்கருத்து.

ஒரு லட்சியத்தை நிர்ணயம் செய்து கொண்டு (உங்கள் மொழியில் - கோல்) விழிப்புணர்வுடன் நீங்கள் விரும்புவதை சாப்பிட்டு அந்த லட்சியத்தை அடைவதையே விஸ்வாமித்ர டயட் என்கிறோம்.

மூன்று வேளையோ அல்லது ஆறு வேளையோ எப்பொழுது எத்தகைய உணவு பொருளை சாப்பிட்டாலும், முழு கவனத்துடன் இதை நான் சாப்பிடுகிறேன்-இந்த உணவில் இத்தகைய சத்துக்கள் உண்டு. இதில் இத்தனை பாதகம் உண்டு என ஆய்வு செய்து கவனம் முழுவதும் உணவில்  இருக்குமாறு விழிப்புணர்வுடன் உட்கொள்ளுங்கள்.

உங்கள் எடை 100 கிலோவா? அதை 70 கிலோவாக மாற்ற வேண்டுமா? சுலபம். இருக்கவே இருக்கு விஸ்வாமித்ர டயட்.

மூன்று மாதம் லட்சியம் வைத்திக்கொள்ளுங்கள். 

தினமும் காலையில் சுப்ரபாதம் (இதை முதலில் பாடியவர் விஸ்வாமித்ரர்தான் என்பது எத்தினி பேருக்கு தெரியும்?) இசைக்கும் வேளையில் எழுந்து என் லட்சியம் இது இன்று முழுவதும் உணவை லட்சியம் நிறைவேறவே சாப்பிடுகிறேன் என விழிப்புணர்வுடன் சொல்லுங்கள்.

தண்ணீர் அருந்தும் பொழுது, பலகாரம் சாப்பிடும் பொழுது என எப்பொழுதும் இந்த கவனம் இருக்கட்டும். 

கவனம் சிதறாமல் இருக்க வலது கை மணிக்கட்டில் ஒரு காசி கயிற்றில் உள்புறமாக சிறிய அட்டைகாகிததில் உங்கள் லட்சியத்தை கட்டி தொங்கவிடலாம்...!

ஒவ்வொரு கவளம் சாப்பிடும் பொழுதும் இந்த காதிக அட்டை நினைவூட்டி உங்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும்.

விஸ்வாமித்ர டயட் சொல்லுவதெல்லாம் இது தான், நீங்கள் விழிப்புணர்வுடன் சாப்பிடாத காரணத்தால் உடல் மற்றும் மனதில் பிரச்சனை வந்தது. விழிப்புணர்வுடன் மனதை உணவில் வைத்து சாப்பிடுங்கள் நீங்கள் நினைத்த ஆரோக்கியம் மற்றும் பெருவாழ்வு பெறுவீர்கள்.

கொழுப்பு டயட், கார்ப் டயட் என எதை எடுத்தாலும் எடுப்பவருக்கு இதை சார்ந்து தான் உணவு உண்கிறோம் என தெரியாதவறை அந்த டயட் அவர் உடலில் செயல்படாது. எத்தனையோ வகை டயட் மற்றும் ஹீலிங் முறை பின்பற்றினாலும் அனைத்தும் விழிப்புணர்வு என்ற தளத்தில் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே இந்திர லோகத்திலிருந்து உங்கள் தவத்தை கலைக்க தேவ கன்னிகளை பலர் அனுப்பலாம். அதில் சபலமடையாமல் விழிப்புணர்வுடன் இருங்கள்.

Wednesday, May 29, 2013

சுப்பாண்டி சின்ரோம்

அன்று வழக்கம் போல ஒரு தினமாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதில் ஒரு மாற்றம் வந்தது. காலையில் பணிகளை முடித்துவிட்டு வெளியே செல்ல கிளம்பும் நேரத்தில் பெரிய வாகனம் இரண்டு வாசலில் வந்து நின்றது. அஜானுபாகுவாக பல வெள்ளைக்காரர்களும் சில நம்மூர் ஆட்களும் இறங்கி வந்தனர்.

கருப்பு கோட்டு, கருப்பு கண்ணாடி அணிந்த இருவர் காதில் ஒரு கருவியையும், கோட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள மைக்கிலும் என் அடையாளங்களை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருக்கும் தெருவின் முனைகளை சிவப்பு-வெள்ளை பட்டைகளை கொண்டு அடைத்து போக்குவரத்தை மூடிவிட்டனர். சில நிமிடத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஒரு சில வெள்ளைக்காரர்கள்,  “என்னை நெருங்கி நாங்கள் உங்களுடன் பேச வேண்டும். சில மணிநேரம் ஒதுக்க முடியுமா?” எனக் கேட்டனர். என்னையும் மதித்து சிலர் கேட்கும் பொழுது தவிர்க்கவா முடியும்? சரி என்றேன்.

அவர்கள் சொன்ன விஷயங்களை டப்பிங் செய்து உங்களுக்காக தமிழில் இங்கே தருகிறேன்.நாங்கள் அமெரிக்காவின் மனோவியல் ஆய்வாளர்கள். கடந்த 2009ஆம் ஆண்டு நாங்கள் அனுப்பிய சாட்டிலைட்டில் எங்கள் ஆய்வுக்கான நபர் நீங்கள் என அது GPSல் சுட்டிக்காட்டுகிறது. எங்களின் ஆய்வுக்கு ஒத்துழையுங்கள், இது உலக மனோவியல் ஆராய்ச்சியில் மிகவும் புதிய தெளிவை உண்டு செய்யும். 

நம்மால் உலகுக்கு நன்மை நடக்கிறது என்றால் இல்லை என்று சொல்வோமா? உடனே சரி என்றேன். இதில் ஒரு அற்ப சந்தோஷமும் இருந்தது. போலியாக ஆன்மீகவாதிகள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், தங்களை இப்படி ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தி கருவிகளை கொண்டு ஞானம் அடைந்ததாக சொல்லி கல்லாக்கட்டுவார்கள். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என நினைத்து ஆய்வுக்கு சம்மதித்தேன்.

கையில் இருக்கும், பெட்டியை திறந்து அதில் உள்ள வயர்களை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டனர். என் தலை, மார்பு, கைகள் கழுத்து என பல இடங்களில் சிறிய க்ரீம் தடவி அதில் வயர்களை ஒட்டவைத்தனர்.

சில நிமிடங்கள் கரைந்தது. கருவிகளில் வரைபடங்கள் மேலும் கீழும் துள்ளிக்கொண்டே இருந்தது. வயதான டாக்டர் ஒருவர் என்னிடம் நெருங்கி வந்து தன் கண்ணாடியை கழற்றினார். சினிமாவில் வருவதை போல இனி 24 மணிநேரம் கழித்துதான் சொல்ல முடியும் என வசனம் பேசிவிடுவாரோ என யோசனையுடன் அவரை பார்த்தேன்.

நாங்க தேடி வந்த ஆள் நீங்க இல்லை. உங்களுக்கு எல்லாம் நார்மலா இருக்கு...என்றார். அப்பாடா இலவசமா செக் செஞ்சு நாம நார்மல்லு தெரிஞ்சுக்கிட்டமே என நிம்மதி அடைந்தேன்.

டாக்டர் என்னிடம் தொடர்ந்து பேச துவங்கினார். “நாங்க தேடி வந்தது ஒரு ஸ்பெஷல் பர்சன். அவர் ஐன்ஸ்டின், எடிசனுக்கு பிறகு அவங்களை விட ஐக்,.யூவில பெரிய நிலையில் இருப்பவர். எடிசன் ஐன்ஸ்டின் எல்லாம் எழுதும் பொழுது ஒரு வார்த்தையையோ அல்லது வரியையோ முண்ரன்பாடா எழுதுவாங்க. உதாரணமா , I am here - அப்படீங்கிறதை ereh ma I. அவங்க இப்படி திருப்பி எழுதறது கண்ணாடியில் காட்டி கூட படிக்க முடியாது. ஆனா நாங்க தேடி வந்த ஆள் யோசிக்கும் போதும், பேசும் போதும் இப்படி செய்வாருனு எங்க சாட்டிலைட் சொல்லுது. ஒரு வார்த்தையை நீங்க சொல்லும் போது அதற்கு சமமா ஒலிக்கும் வேறு ஒரு வார்த்தை அவரோட மனசுல வரும் அதையே அவர் ஞாபகம் வச்சுக்குவார்.  இவங்களோட ஐக்,யூல இருக்கிற குழந்தைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். இயல்பு குழந்தை போல இல்லையேனு  வருத்தப்படாமல் வளர்த்தா அவங்க பெரிய விஞ்ஞானியா வருவாங்க.”  

இவ்வாறு டாக்டர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே “அப்ப அந்த குழந்தைகளுக்கு ஹோம்ப்ளான் சாப்பிட கொடுக்கலாமா?” என கையில் ஒரு வீட்டின் வரைபடத்துடன் நின்று கொண்டிருந்தான் சுப்பாண்டி...!

இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. டாக்டர்கள் தேடிவந்தது என்னை இல்லை..! சுப்..சுப்..சுப்பாண்டியை..!

ஒரு நாள் நான் ஆங்கிலத்தில் ஆன்மீக கட்டுரை ஒன்றை டிக்டேட் செய்துகொண்டிருந்தேன். GOD என வரும் இடத்தில் எல்லாம் DOG என எழுதி இருந்தான். ஏன் இப்படி என கேட்க, பைரவரும் சாமி தானே என என்னை லாஜிக்கால் மடக்கினான். பல வேலைகளை எக்குத்தப்பாக செய்யும் பொழுது சரி அவன் முட்டாளாக இருப்பான் என நினைத்தால், அவனை ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு ஆய்வு செய்ய இவர்கள் வேறு கிளம்பி வந்து இருக்கிறார்கள். இவனை போய் ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து வந்திருக்காங்களே என பொறாமையும் ஒரு புறம் அதிகரித்தது.

“சாமி உடம்பு செரியில்லையா? ட்ராக்டர்கள் எல்லாம் வந்திருக்காங்களே?” என கேட்டுவிட்டு கையில் இருந்த பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து, “சாமி இதை சாப்பிடுங்க சரி ஆயிடும்” என்றான். என்ன என்பதை போல பார்த்தேன்.

“இது போப்பாண்டவர் கோவில் பஞ்சாமிர்தம்” என கொடுத்தான். டப்பாவில் பழனியாண்டவர் பஞ்சாமிர்தம் என எழுதி இருந்தது...!

ஓ இவன் டாக்டர்கள் சொல்லுவதை மறைந்திருந்து கேட்டுவிட்டு வேண்டுமென்றே இவர்களிடம் பெயர் வாங்கப்பார்க்கிறான் என யோசித்தேன். இருந்தாலும் இவன் ஐக்யூ மேல் ஒரு நம்பிக்கை வந்தது.

க்க்கும்...தொண்டையை கணைத்து, டாக்டர்கள் வந்த விஷயத்தை சொன்னேன்..சுப்பாண்டி உடனே சுறு சுறுப்பாகிவிட்டான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி போல தலையை ஒரு பக்கம் சாய்த்து புருவம் உயர்த்தி, இடுப்பில் கை வைத்து அமெரிக்கர்களை பார்த்து கேட்டான்...

“யாரை செய்கிறார் டெக்ஸ்டு, எதற்காக செய்ய வேண்டும் டெக்ஸ்டு. செயலுக்கு வந்தாயா வாத்து நட்டாயா...” என சுப்பாண்டி பேச பேச அவனுக்குள் இருந்த சந்திரமுகி வெளியே வந்தாள். இவன் தான் அந்த ஆராய்ச்சி பீஸு என எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

இவனின் இந்த மன பிரள்வை சுப்பாண்டி சின்ரோம் என பெயரிட்டிருக்கிறார்கள். சுப்பாண்டியை அமெரிக்காவிக்கு ஆய்வுக்காக கூட்டி செல்லப்போகிறார்கள். உங்களுக்கும் இப்படி ஏதேனும் இருந்தால் கூறவும். நீங்களும் இலவசமாக அமெரிக்கா செல்லலாம்.

அமெரிக்கா செல்லும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, “சாமி என்னை அமெரிக்க கூட்டிக்கிட்டு போறது ராணி முகர்ஜிக்கு தெரியுமா?” என கேட்டான். நான் குழப்பத்துடன் அந்த நடிகைக்கு எதுக்குடா நீ போறது தெரியனும்னு கேட்டேன்.

நடியையா? அவங்க தானே நம்ம நாட்டு ஜனாதிபதி என்றான் சுப்பாண்டி..!


-----------------------------------

வேதகால மனோவியலை (Vedic psychology) ஒரு தொடராக எழுதலாம் என இருக்கிறேன். கடினமான இந்த சரக்கை நகைச்சுவையால் எளிமையாக்கலாம் என எண்ணம். அதன் முன்னோட்டமே இந்த கட்டுரை.

Sunday, April 7, 2013

பழைய பஞ்சாங்கம் 7-4-2013


சுப்பாண்டியார் - சுப்பாண்டி யார் ?

நமது வலைபக்கத்தை வாசிக்கும் பலருக்கு சுப்பாண்டியை நன்றாக அறிமுகம் உண்டு. நான் பல ஊர்களுக்கு பயணிக்கும் பொழுது சுப்பாண்டி கூட வந்திருக்காரா? என கேட்பதுண்டு. தொலைபேசியில் என்னுடன் பேசுபவர்கள் கூட பேச்சின்முடிவில் சுப்பாண்டியை கேட்டதாக சொல்லுங்க என்பார்கள். அவனுக்கு தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எழுதி அதற்கு ஆலோசனை வேண்டி பலர் கடிதம் எழுதுகிறார்கள். நான் ஒருவன் இங்கே இருப்பதையே சுப்பாண்டி மறைத்துவிடுகிறான். ஒரு சில வேளைகளில் இவன் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து எனக்கு பொறாமை கூட ஏற்படுவதுண்டு. இந்த சுப்பாண்டியை பலருக்கு அறிமுகம் செய்துவைத்ததே நான் தான். அவன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனான் தெரியுமா?


ஒரு நாள் பல்பொருள் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பணம் செலுத்தும் இடத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. நமக்குத்தான் பிறர் பிரச்சனையில் ஆர்வம் அதிகம் வருமே? உடனே சென்று கூட்டத்தை விலக்கிப்பார்த்தேன்.

அங்கே குழந்தை தனமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சுப்பாண்டி. இப்படி ஒரு அப்பாவியை அடித்திருக்கிறார்களே என நினைத்து, என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டேன்.

கடையில் ஒருவர் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பணம் வாங்குபவரிடம் சுப்பாண்டி கேட்டானாம்.., 

“ஏன் சார் காசு கொடுத்து தானே சிகரெட் வாங்கரீங்க? நல்ல சிகரெட் கொடுக்காம, கடைக்காரர் எப்படி உங்களை ஏமாத்தரார் பாருங்க” 

என அவன் சிகரெட் பெட்டியை காண்பிக்க, அதில் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என எழுதி இருந்தது. முகத்தை பெருமையாக வைத்துக்கொண்டு கடைக்காரரை பார்த்து, “உடம்பை கெடுக்காத சிகரெட்டா கொடுங்க” என கூறவும், நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

இத்தனை அறிவு கொண்ட ஆள் நம்முடன் இருக்கட்டும் என அவனை அழைத்துவந்தேன். அன்று பிடித்தது...!

-------------------------------

மனைவி எப்படி நிற்கனும்?

என்னிடம் ஆசிவாங்கும் தம்பதியினர் பெரும்பாலும் என் முன் கபடி ஆடுவதை பார்த்திருக்கிறேன். கணவனுக்கு எந்த பக்கம் மனைவி நின்று கொண்டு ஆசிவாங்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆசிவாங்க குனியும் பொழுதே சந்தேகம் வரும். பிறகு வலது இடது என கணவனும் மனைவியும் மாறி கபடிக்கு ஒப்பாக பாவனை செய்வார்கள். நம் சம்பரதாயத்தில் இறைவனின் ஆண் தன்மை வலது புறமும், பெண் தன்மை இடது புறமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது சிவன் சக்தியோ, பெருமாளும் தாயாருமோ என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் பல்வேறு கலாச்சரத்திலும் ஆண் பெண் தன்மை வலது இடதாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்மீக நிலை கொண்ட ஒரு இடத்தில் தம்பதிகளாக ஆசி வாங்கும் பொழுது ஆணின் வலது பக்கம் பெண் இருக்க வேண்டும். அதனால் தம்பதிகளின் பெண், ஆன்மீகவாதியின் பெண் தன்மைக்கும், தம்பதிகளின் ஆண் ஆன்மீகவாதியின் ஆண் தன்மைக்கும் வணக்கம் செய்வதை போல ஆகும்.

எனக்கு இத்தகைய வெளிச்சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஒருவன் பக்தியுடன் வணங்கினால் எப்படி இருந்தாலும் தவறில்லை என நினைப்பவன். ஆனால் தற்கால குடும்பங்களில் பெரியவர்கள் வழிகாட்டுவதற்கு இல்லை என்பதால் அனேக தம்பதியினர் என்னிடம் கேட்பார்கள். நானும் பொறுமையாக கூறுவேன். இருந்தாலும் அடுத்த முறை ஆசிவாங்க வரும் பொழுது அவர்களுக்கு குழப்பம் வந்துவிடும். மீண்டும் என்னிடம் கேட்ப்பார்கள். இப்படி குழப்பத்துடன் இருந்த தம்பதிகள் என்னிடம் அடிக்கடி கேட்க, நான் பொறுமை இழந்து சுப்புவை கைகாட்டி இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.

அடுத்த முறையிலிருந்து அவர்களிடம் குழப்பம் இல்லை...! நானும் ஆச்சரியத்துடன் எப்படி சுப்பு இவங்க குழப்பத்தை தீர்த்த? நானே தீர்க்க முடியாம இருந்தேனே என கேட்டேன். 

“வேற ஒன்னும் இல்லை சுவாமிஜி, கீப்  லெப்டு - மனைவி தான் எப்பவும் ரைட்டுனு சொன்னேன்” என்றான். எனக்கு இதில் ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு புரிஞ்சுதா?

-------------------------------

அரேபிய விமானம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாட்டிற்கு உண்டான விமான சேவையையே பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் விமான சேவை மிக குறைந்த கட்டணமாக இருக்கும். அல்லது அந்த நாட்டின் பிரத்யோகமாக குறைந்த கட்டண சேவையை தேர்ந்தெடுப்பதும் உண்டு. பெரும்பாலும் எனக்கான விமான சீட்டு வேறு ஒருவர் தான் எடுப்பார்கள். 

எனக்கு விருப்ப தேர்வு என இருக்காது. சமீபத்தில் எனது ஐரோப்பிய பயணத்திற்கு இதே போல மற்றொருவர் விமான சேவையை தேர்வு செய்தார். எதிஹாட் ஏர்வேஸ் என்ற விமான சேவை அது. துபாய் நகரை மையம் கொண்டு செயல்படும் நிறுவனம். முதன் முதலாக அரேபிய விமானத்தில் பயணம். 

நான் பயணம் செய்ய துவங்கும் முன் ப்ரார்த்தனையில் ஈடுபடுவது உண்டு. அதே போல இந்த விமானத்தில் அமர்ந்ததும் பெல்ட் அணிந்து கண்களை மூடி ப்ரார்த்தனை செய்ய துவங்கும் சமயம், ஸ்பீகரில் குரல் ஒலித்தது....! திருக்குரானிலிருந்து அற்புதமான வரிகள்..என் ப்ரார்த்தனைக்கு மிகவும் நெருக்கமான வரிகள் மெய்சிலிர்த்து போனேன்.

பெரும்பாலான விமான சேவைகள் ப்ரார்த்தனை செய்வதில்லை. இஸ்லாமிய விமான சேவை அனைத்திலும் இது போன்ற ப்ரார்த்தனைகள் இருப்பதாக அறிந்து மகிழ்ந்தேன். அனைத்து விமானங்களிலும் இச்சேவையை துவங்கலாம். சமயசார்பற்ற நாடுகள் அனைத்து சமய ப்ரார்த்தனையையும் செய்யலாம். இது ஒரு வேண்டுகோள்.

அது சரி அந்த திருக்குரான் ப்ரார்த்தனை என்ன என்று தானே கேட்க்கிறீர்கள்? எனக்கு தெரிந்த முறையில் மொழி பெயர்த்துள்ளேன்.

முழுமுதற்கடவுளின் பெயரால் அவரை வணங்குகிறேன். இறையருள் நம் அனைத்து பயணங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே இறையருள் திரும்பி வருவதற்கும் துணை நிற்கட்டும். 

இப்படி அனைத்து விமானங்களிலும் ப்ரார்த்தனை செய்ய துவங்கினால்., மத நம்பிக்கையும் ப்ரார்த்தனையில் நம்பிக்கையும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் ஒரு வழி உண்டு. அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே பஞ்சு வாங்கி காதில் வைத்துக்கொள்ளலாம்..!

---------------------------------------
ஜென்னிசம்

வானிலிருந்து இறங்கிய 
பனித்துளியால் புல் நிறம் மாறவில்லை 
மாறாக தலைசாய்த்து பணிந்தது...!

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

Tuesday, April 12, 2011

சாமீ....கருமம் கருமம்....!

நம் வாழ்க்கையில் பல வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் பல வார்த்தைகள் நான் ஏன் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாமல் பயன்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்திலும் நம் முன்னோர்களாலும் செம்மையாக பயன்படுத்தபட்ட பழக்கவழக்கங்கள் நாளடைவில் வார்த்தையாகி, அவ்வார்த்தையே வெறும் சொற்களாக நம்மிடையே உலாவுகிறது. அப்படிப்பட்ட வார்த்தை தான் “கருமம்”.

நம் சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் ஆன்மீகத்தை ஒரு பகுதியாக வாழமல், வாழ்க்கையையே ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்கள்.

தங்களின் ஒவ்வொரு செய்லும் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். கர்ம வினைகளால் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மங்களையும் உணர்ந்து தெரிந்து செயல்பட்டார்கள்.

தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் கர்மவினைகள் அதிகரிக்காது. கர்மவினை அதிகரிக்காத பட்சத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து கஷ்டப்படாமல் முக்தியை அடையலாம்.

இக்கருத்து நம் முன்னோர்களுக்கு ஆழமாக இருந்ததால் கர்மவினையை பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஒருங்கே கொண்டிருந்தார்கள்.

நம் செய்யும் செயல் (கர்மா) என்பது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போன்றது. அதை மீண்டும் உள்ளே அடைக்க முடியாது, மேலும் அது செல்லும் திசையில் உள்ள இலக்கை அடையாமல் விடாது. குண்டின் இச்செயலை நாம் முடக்க வேண்டுமானல் துப்பாக்கியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு தக்க செயலை செய்யாமல் தான் ஒரு ஜவளிக்கடை அதிபராக வேண்டும் என முயல்கிறார் என்றால் அவரின் கர்மா அங்கே நீட்டிக்கப்படுகிறது.

துறவிகள் தங்களின் செயல்களில் சமுதாய பயனுடன் செயல்படுவார்கள். அப்படி செயல்படும் சமயம் தங்களை உணராமல் தன் சுய நலனுக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது கர்மவினையாக தங்களை தாக்கும் என்று நம்புவார்கள். அவ்வாறு தங்களுக்கு கர்மவினை சேராமல் இருக்க தங்கள் செயலை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க சிலரை அருகே வைத்திருப்பார்கள். அப்படி சுய நலன் மேலோங்கும் பொழுது அவர்கள் துறவியின் காதில் “கர்மம் கர்மம்” என கூறுவார்கள். துறவியும் உடனே உணர்ந்து அச்செய்கையை கைவிடுவார்.

இவ்வாறு தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள்.

தமக்கு ஒவ்வாத கர்மம் செய்ததன் பலனை கிரகங்கள் அடுத்த பிறவியில் தீவினையாக அளிக்கிறது. கிரகங்களால் கர்மவினை தாக்கம் பீடிக்கப்பட்டு மன நிலையிலோ அல்லது உடல் நிலையிலோ கஷ்டப்படுவார்கள். இதை கொங்கு மண்டல கிராமங்களில் “கிரகம் புடிச்சவனே” என சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிறர் கருமம் செய்வதையும் அதனால் அவர்களின் வாழ்க்கை சிரமத்தையும் எச்சரித்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் நடைமுறையில் நாம் பல விஷயங்களை எச்சரிக்க தவறுகிறோம்.

உதாரணமாக சென்ற வருடம் ஒரு நடிகை செய்ததை பார்த்து “கருமம் கருமம்” என நீங்கள் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது அந்த நடிகையுடன் இருப்பவர் பார்த்து “கிரகம் புடிச்சவன்” என சொல்லி இருக்க வேண்டும். மாறாக இதை டீவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து நாமும் கர்மம் செய்தோம்..!

மேலும் உதாரணம் சொல்லலாம். இரு நடிகர்கள். ஒருவர் மற்றொருவரை ஏதோ காரணத்தால் துன்புறுத்திவிட்டார். அது கர்மம் தான். ஆனால் அதை நாம் “கர்மம் கர்மம்” என எச்சரிக்கவில்லை. இப்பொழுது அந்த நடிகர் மற்றொரு நடிகரை குடிகர் என வீதிக்கு வீதி அசிங்கமாக பேசுகிறார். எப்பொழுதோ செய்த கர்மம் கிரகங்களால் பிடிக்கபட்டது பார்த்தீர்களா?

ஆகவே இனிவரும் காலத்தில் இவ்வாக்கியங்களை தவறாக பயன்படுத்தாமல் உள் அர்த்தத்துடன் பயன்படுத்துங்கள்.

டிஸ்கி : இவற்றை நான் எழுதக் காரணம் உங்களின் செயல்களை பார்த்து “கருமம் கருமம்” என எச்சரிக்கத்தான். இதை படித்து நான் “கிரகம் பிடித்தவன்” என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..! :)

Wednesday, August 11, 2010

வேதாந்த வகுப்பில் சுப்பாண்டி

சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒருவர் வந்து வேதாந்த கருத்துக்களை கொண்டு தர்க்கம் செய்தார். நான் இயல்பாகவே தர்க்கங்களில் ஆர்வம் செலுத்தாததால் மெளனமாக இருந்தேன். இதை கண்ட சுப்பாண்டி மிகவும் மன வருத்தம் கொண்டான். நான் வேதாந்தம் தெரியாமல் தோற்றுவிட்டதாகவும், என்னை பின்பற்றும் அவனுக்கு அது மிகப்பெரிய அவமானமாகவும் கருதி வருந்தினான். இந்த வரலாற்று அவமானத்தை சரி செய்ய தானே வேதாந்தம் கற்பது என முடிவுக்கு வந்துவிட்டான்.

பிறகு ஒரு நாள் வந்து “குருஜீ நான் வேதாந்தம் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்றான். போகிறேன் என எங்கோ இருக்கும் இடத்தை குறிப்பிடுகிறான் என்பதால், “நான் வேண்டுமானால் கற்றுக்கொடுக்கவா?” என கேட்டேன். என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தவாறே, “உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏன் கத்துக்கப்போறேன்” என்றான். இதற்கு நான் ஒன்றும் கூறவில்லை. சரி சென்று வா என வாழ்த்தி அனுப்பினேன்.

ஓவர் டூ வேதாந்த வகுப்பு .......

வேதாந்த ஆசிரியர் ராஜூ சாஸ்திரியின் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தான் சுப்பாண்டி.

“சுப்பாண்டி இன்று நாம் ஆன்மா என்பதை பற்றி பேசுவோம். ஆன்மா என்பதே உன் சொரூபம், நீ உடல் அல்ல, நீ மனம் அல்ல. ஆன்மாவே உண்மை”

“ஆன்மா-னா என்ன? அது எப்படிப்பட்டது?”

“எது தீயால் சுட முடியாதோ, எது நீரால் மூழ்கடிக்க முடியாதோ, எது காற்றை விட லேசானதோ, எது ஆகாயத்தை போல தூய்மையானதோ அதுவே ஆன்மா”

“அப்படிப்பாத்தா சூப்பர் ஸ்டார் தான் ஆன்மாவா? அவரைத்தான் வில்லன்களால எதுவுமே செய்ய முடியாது”

“ஸ்ப்ப்பா... அது இல்லை சுப்பாண்டி. சினிமா என்பது மாயை, பொய் பிம்பம். ஆன்மா என்பது உண்மையான வஸ்து”

”ஆன்மானே ஒரு சினிமா வந்துச்சே...அப்போ அது பொய்யா? கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க”

”சுப்பு.... கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ....
கண் எதனால் பார்க்கப்படுகிறதோ, கண் எதை பார்க்காதோ அது ஆன்மா.
காது எதனால் கேட்கிறதோ, காது எதை கேட்காதோ அது ஆன்மா.
வாய் எதனால் வேலை செய்கிறதோ வாயால் எதை உணர முடியாதோ அது ஆன்மா.”

“நம்ம கண்ணு காதுல உணர முடியாத குப்ப சமாச்சாரத்தை பத்தி நாம ஏன் பேசனும்? வேற எதாவது உருப்படியா சொல்லித்தாங்க சாஸ்திரி”

“என்னது குப்ப சமாச்சாரமா? ஆன்மா என்பதை புரிந்து கொண்டால் தான் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியும். உதாராணமா உன் உடல் நீ இல்லைனு சொன்னேன் இல்லையா? நீ போட்டிருக்கும் உடை மாதிரி இந்த உடலை ஆன்மா போட்டுருக்கு. இந்த உடலை நீ என சொல்லிக்க கூடாது. இந்த பேண்ட் டீ சர்ட் உன் உடலோட உறுப்பு இல்லை இல்லையா? அது போல உன் உடல் நீ அல்ல, பேண்ட் சர்ட் அழுக்காச்சுன்னா மாத்திக்கிற மாதிரி இந்த ஆன்மா உடல் வேலை செய்யலைனா மாத்திக்கும்.”

“ஓஹோ, அப்ப வேற வேற உடல் நமக்கு கிடைக்கும்? உடல் நிரந்திரம் இல்லை அப்படித்தானே”

“சபாஷ், இப்பத்தான் நீ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்க..”

“நீங்க எப்பவும் வெள்ளை வேஷ்டி மேல் துண்டு போட்டுருக்கீங்க. என் குருஜீ எப்பவும் காவி கலர் போட்டிருக்காரு, அப்ப உங்க உடை மாறாதே? அப்ப உங்க உடல் தான் நீங்களா?”

“அ...அத்..து..அ...அப்படி இல்லை..தம்பி...உடை நிறம் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரே வேஷ்டியவா நான் கட்டிப்பேன்? அதுபோலத்தான் உடை நிரந்திரமல்ல. ஆன்மாவே நிஜம்”

“அப்ப உடை இல்லாம இருக்கிறவங்கதான் நிஜமா இருக்கறவங்களா? நீங்க சொல்லித்தர்ரது ஒரே அசிங்கமா இருக்கே”

"அது இல்லடா... ஆன்மா அஹங்காரம்னு உடை போட்டிருக்கு. அதனால மாயை அதில் சேர்ந்திருக்கும். அஹங்காரமும் மாயையும் இணைஞ்சுருக்கரதால ஆன்மாவை பார்க்க முடியாது. அஹங்காரமும் மாயையும் அழிஞ்சாத்தான் ஆன்மாவை முழுமையா உணர முடியும். “

“நம்ம வீட்டில கொசு கரப்பான் அழிச்சா வீடு சுத்தமாகிற மாதிரி சரியா?”

“சரியாச்சொன்னடா”

”அப்ப அஹங்காரம் மாயை அழிக்கும் பூச்சி மருந்து எங்க கிடைக்கும்?”

“டேய் அறிவு கெட்டவனே.. விளங்காமாறி...உன்னையெல்லாம் எவண்டா இங்க அனுப்பினது..

நீ வேதாந்தம் படிக்கலைனு யாரு அழுதா? வேனும்னே என்னை கலாய்க்கிறியா? போடாங் ?!?!!@!@!@*@!@*&*””

“சாஸ்திரி....முதல்ல சுப்பாண்டின்னீங்க, அப்பறம் சுப்பு, அப்பறம் தம்பி.. கடைசியா டேய்..இப்ப கெட்டவார்த்தையில திட்டீட்டீங்க... அப்படி என்ன நான் தப்பா கேள்வி கேட்டேன்? புரியலைனு தானே கேட்டேன்.. சரி சரி கோபப்படாதீங்க. ஏதோ ஆன்மா ஆன்மானு சொன்னீங்களே அப்படினா என்னானு சொல்லுங்க”

“என்னது திருப்பியும் முதல்ல இருந்தா........”

Wednesday, July 7, 2010

மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி

என் நண்பனின் கட்டாயத்தால் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அமைதியான இடங்களை ஏன் மயான அமைதி என சொல்லுகிறார்கள் என அன்று தான் புரிந்தது. காரணம் நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் மயானம்.

இரவு சுமார் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென சலங்கை சத்தம் கேட்கத்துவங்கியது. வயதான தோற்றம் கொண்ட ஒருவர் நீண்ட தலை முடியும் முன் வழுக்கையுமாக வந்துகொண்டிருந்தார். அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நின்றிருந்தனர்.

அவர் தான் மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி..!

கையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்தவராக ஆடினார். சில நிமிடங்கள் ஆட்டம் ஆடி ஓய்து அமர்ந்தார். அவருக்கு எனர்ஜி டிரிக்காக ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தம் கொடுக்கப்பட்டது.

“டேய் வாங்கடா வாங்க என்ன பிரச்சனைடா உங்களுக்கு...” என வெற்றிலை போடாமலே சிவந்த வாயால் கர்ஜித்தார்.

எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்..!

“சாமி..அது வந்து தொழில்ல.....”

நிறுத்து என்பது போல கை காட்டிவிட்டு தன் பக்கம் இருந்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் கருப்பு மையை வட்டமாக வரைந்தார். அதை உற்றுபார்த்தார்..

“உன் தொழில்ல போட்டி இருக்கு. உங்கூட இருக்கறவன் எதிராளிக்கு சாதகமா இருக்கான்.

சொல்லு அவனை என்ன செய்யலாம்? ஒரு கை விளங்காம போக கட்டிடுவோமா? 150 ரூபாய் வெட்டு..” என பொரிந்தார்.

“அதெல்லாம் நானே பாத்துக்கறேன் சாமீ...” என அவர் முன் சில நூறு ரூபாய்களை வைத்தான். நானும் அவனும் திரும்பி நடக்க துவங்கினோம்.

“டேய்.. நில்லுங்கடா... உன் கூட வந்தவனுக்கு என்ன பிரச்சனை” என என்னை பார்த்தவாரே நண்பனிடம் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னும் இல்லை சாமீ..எங்கூட சும்மாத்தான் வந்தான்” என்றான் அடக்கவாதி.

“அவனை பார்த்தா ஏதோ கேட்பான் போல இருக்கு...நீ அவனை கேக்க சொல்லு...” என்றார் குடமுருட்டி..

கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்... “சாமீ எனக்கு ரெண்டே கேள்வி தான். கேட்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்ம்..” என்றார் மா.மே.கு.குப்புசாமி.

“இன்னைக்கு (7-ஜூலை) ஜெர்மனி- ஸ்பெயின் மோதும் அரையிறுதி போட்டியில யாரு ஜெயிப்பாங்க?”

மீண்டும் புதிய மையை கண்ணாடியில் தடவி என்னையும் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்தார். தனது எனர்ஜி டிரிங்கை ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்...

“என்னவிட இவனுங்க நல்லா ஆடுவாங்கடா...ஆடுவாங்க... சரியான போட்டி.. சமமா விளையாடுவானுங்க. மறக்காம பாரு..ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான். அவனுங்களுக்கு மந்திரிச்சு கட்டினா சரியாயிடும். விளையாட்டு மைதானத்தில பலி கொடுத்து பூஜை செஞ்சா ஜெயிப்பானுங்க... இல்லைனா தோத்து போயி ரத்தங்கக்கிடுவானுங்க...” என்றார்.

“சாமி விளையாட்டு நடக்கிறது வெளிநாட்டுல உங்களை கூட்டிகிட்டு போக நேரம் இல்லை” என்றான் என் நண்பன். இவன் அடக்கத்திற்கும் கடமை உணர்ச்சிக்கும் அளவே இல்லையா என்பது போல பார்த்தேன்.

“ஒன்னோட ரெண்டாவது கேள்வி என்ன?” என்னை பார்த்து கேட்டார்.

“சாமி கண்ணாடியில மை தேச்சு எல்லாத்தையும் பார்க்கறீங்களே, நானும் வீட்டுக்கு போயி எங்க வீட்டு கண்ணாடியில மை போட்டா இது எல்லாம் தெரியுமா? எனக்கு இந்த மை எப்படி செய்யறதுனு சொல்லி கொடுங்களேன்..”

“டேய் இது எல்லாம் சாதாரண விஷயமில்லை... சித்திரை மாசம், பெளர்ணமிக்கு மழையில்லாத நாளில் கொல்லி மலைக்கு மேல போயி அங்கே கர்ப்பமா இருக்கிற குரங்கோட உச்சி தலைமுடியை எடுத்து வந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திர உரு ஏத்தி அதை கருக்கி செஞ்ச மை இது. அப்படி நீயும் செஞ்சா எல்லாம் இதில் தெரியும்.”

“இதுக்கு ஒரே வார்த்தையில முட்டாப்பயலே எதுனா இருந்தா என்கிட்டையே வந்து கேளுனு சொல்லி இருக்கலாம்” என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்பினோம்.

Tuesday, July 6, 2010

ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...

நெற்றியில் டிராபிக் சிக்னலில் தெரியும் சிவப்பு விளக்குக்கு நிகரான பொட்டு, உலகில் மஞ்சள் தட்டுப்பாடுக்கு இவரின் முகத்தில் இருக்கும் மஞ்சளின் அளவு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு மங்கள முகம். முகத்தை முன்புறம் பார்க்கும் பொழுதே தலைக்கு பின்னால் இருக்கும் கனகாம்பர பூ தெரியும் அளவுக்கு அலங்காரம் என்ற தோற்றத்தில் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு குச்சியுடன் அனுகினாள்.

"ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... தம்பி உனக்கு விரைவில் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வரப்போறா..."

நண்பர்களுடன் கடற்கரையில் சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் இவர்கள் செய்யும் இம்சை அளவில்லாதது என நினைத்தவாறே வேறுபுறம் திரும்பினேன். அந்த பெண் விடுவதாக இல்லை.

“ஏந்தம்பி திரும்பிட்டே.. உன்னை பத்தி எல்லாம் சொல்றேன் தம்பி.. சரியா இருந்தா மட்டும் காசு கொடு”

என் நண்பன் கோவிந்து குசும்புடன் அவளை திரும்பி பார்த்து பேச்சு கொடுத்தான்.

“ஏம்மா என்னை பத்தி நீ சொல்லா அதற்கு நான் ஏம்மா காசு கொடுக்கனும்? என்னை பத்திதான் எனக்கே தெரியுமே? அதைப்போயி நான் காசு கொடுத்து வேற தெரிஞ்சுக்கனுமா?”

ஓ இவன் பொழுது போக்க முடிவு செய்துவிட்டான் இவனை ஒன்னும் செய்ய முடியாது என நானும் கவனிக்க துவங்கினேன்.

“தம்பிக்கு வேற என்ன தெரிஞ்சுக்கனும்னு சொல்லுங்க ஜக்கம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”

“ஜக்கம்மா கிட்ட கேட்டு எல்லாம் சொல்லவேணாம். முடிஞ்சா ஜக்கம்மாவை எங்க கூட அனுப்பி வை. வேணுங்கறப்ப நாங்களே கேட்டுக்கறோம்.”

“தம்பி வாயில சனி இருக்கு போல...ஜெய் ஜக்கம்மா” என்றவாறே கோயிந்து தலையில் குச்சியை வைக்க, கோவிந்து மயங்கி சரிந்தான்.

நாங்கள் பதட்டமானோம். “என்னம்மா இப்படி செஞ்சுட்டீங்க...”

“ஜக்கம்மாவா எகத்தாளம் பேசினா இதுதான் கதி. என்கிட்ட ஏதாவது குறிகேளு அப்பத்தான் இவனை எழுப்பிவிடுவேன்”

“காசு வேணும்னா கொடுக்கறோம் இவனை எழுப்பிவிடுமா...தாயே”

“ஜக்கம்மா பிச்சை எடுக்காது. குறிகேட்டு காசு கொடுத்துட்டுப்போ...”

பீச்சில் உலாத்தும் ஜக்கம்மாவின் மேன்மையான கொள்கை எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.

“அம்மா இன்னைக்கு( 6 ஜூலை ) உலகக்கோப்பை கால்பந்து போட்டியில உருகிவே நாடும், நெதர்லாந்தும் போட்டி போடறாங்க. அதில் யாரு ஜெயிப்பானு சொல்லு”

கண்களை மூடி ம்ம்ம்ம்ம்ம் என வாயில் சப்தம் எழுப்பினாள் அந்த பெண். பிறகு கண்களை விரித்து எங்களை பார்த்து“உருகுவே இன்னைக்கு தோத்து போயிடும்” என்றாள்.

என் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்தேன். மீண்டும் குச்சியால் கோவிந்தை தட்டினாள். அவன் எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்பது போல பேந்த பேந்த முழித்தான்.

அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்னது உங்களுக்கு ஜக்கம்மா சொல்லுவதில் நம்பிக்கையில்லையா? அந்த குச்சியுடன் உங்ககிட்ட வந்தா தெரியும்...


Saturday, July 3, 2010

கிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..!

நேற்று வீதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிளி ஜோதிடர் எதிர்ப்பட்டார். ஐயா எதிர்காலம் பார்க்கறீங்களா என்றார்.

ஜோதிடரே எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் எதிரா இருக்க பிடிக்காது. இணக்கமா வேணும்னா இருப்பேன். எதிர்-காலம் வேண்டாம் என்றேன்.

ஐயா நீங்க கிளிக்கு வேலை கொடுத்தா அதுக்கு நான் ரெண்டு நெல் மணி போடுவேன். உங்க புண்ணியத்தில அது சாப்பிடும் என்றார்.

சரி நான் பார்க்குறேன், ஆனால் என்னை பற்றி அல்ல. உலக கால்பந்து போட்டி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் கிளியிடம் சீட்டு எடுக்கச்சொல் என்றேன்.

கிளிக்கு நெல் கிடைத்தால் போதும் என தன் விரிப்பை விரிந்து சீட்டுக்களை அடுக்கினார்.


நான் முதல் கேள்வி கேட்டேன் “இன்று (3-ஜூலை) நடக்கும் அர்ஜெண்டினா - ஜெர்மனி போட்டியில் யாரு வெற்றி பெறுவார்கள்?”

கிளி என்னை சைடாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தத்தி தத்தி சென்று ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. அதில் தாமஸ் முல்லர் என்பவரின் புகைப்படம் இருந்தது. அவர் ஜெர்மனி அணியின் முதன்மை வீரர். ஓ கிளி ஜெர்மனி வெற்றி பெரும் என்கிறதே..!

இவ்வளவு சூட்டிப்பான கிளியை நான் கண்டதில்லை. அதனால் என் அடுத்த கேள்வியை கேட்டேன், “கிளியே இன்று பராகுவே மற்றும் ஸ்பெயின் அணி விளையாடும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்”?

தன்னை தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு மீண்டும் சீட்டின் வரிசையில் தேடத்துவங்கியது கிளி. முடிவில் ஒரு சீட்டை எடுத்து தந்தது. அதில் பராகுவே அணி தலைவர் டென்னிஸ் கண்ஸா படம் இருந்தது. கிளியின் ஜோதிட அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது..!

அப்படியானால் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி பராகுவே நாட்டை சந்திக்கும் போலும் என நினைத்துக் கொண்டேன்.

“கிளியே நீ கூறியவை சரியாக இருந்தால் நாளை இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றி உன்னிடம் கேட்கிறேன். இந்தா சில நெல்மணிகள்” என அதன் முன் வீசினேன்.

என்ன தான் உலக கோப்பை அணிகள் பற்றி கூறினாலும் கிளிக்கு கிடைக்கப் போவது என்னவோ நெல்மணிகள் தான்.

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.

நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!

Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!