Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, July 3, 2019

முக்திநாத் ஆன்மீக திருப்பயணம்

அடியேனும் மனைவியும் முக்திநாத் ஆன்மீக பயணத்திற்கு தயாரக இருந்தோம். அடியேனுக்குதான் மிகுந்த கனவுகள். முக்திநாத்தை அடைந்தவுடன் உலகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு (அப்பாடா!) ஶ்ரீமன் நாராயனனால் அனுப்பிவைக்கப்படும் புஸ்பக விமானத்தில் ஏறி அமர்ந்து வைகுண்டத்தை வெகு சௌக்கியமாக அடந்ததுவிடலாம் என்ற ஒரு ஆசை, பேராசை! (சுஜாதவின் புதினங்களைப் படித்ததால் வந்த விளைவு)!
சுவாமிஜி பயணத்திற்கு தேவையான பொருட்களுடன், பக்தி (devotion), சுவதயா (team sharing of spiritual knowledge), யோகா (integrity with Divine), இவை மூன்றையும் மறக்காமல் கொண்டு வர அன்புக்கட்டளை இட்டிருந்தார்.

இவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு பல பகீரதப்பிரயணத்தங்களுடன் எங்களின் முக்தியை நோக்கிப்பயணம் இனிதே ஆரம்பமானது. பயணம் ஆரம்பமாகும் இந்த தருணத்தில், குருவை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கிளம்பினோம்.

"தியான மூலம் குருர் மூர்த்தி" The Root of Meditation is the Form of the Guru

பயணப் பாதை - டெல்லி - காத்மாண்டு - பொக்கரா - ஜொம்சொம் - முக்திநாத், மீண்டும் டெல்லி வந்தடைதல்.

22.5.2019

பகலில் டெல்லி வழியாக காத்மாண்டு வந்தடைந்தோம்.  விமான நிலையத்திற்கு வெளியே 'Swami Omkar & group' என்ற பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வாகனத்தில் பயணப் பைகளையும் எங்களையும் ஏற்றக்கொண்டு விடுதி வந்தடைந்தது. விடுதியில் மதிய உணவுக்குப்பின் (அருமையான தமிழக சப்பாடு) சிறிது இளைப்பாறினோம். சுவாமிஜி முன்னமே வந்துவிட்டிருந்தார்.ஓய்வுக்குப் பின், சுவாமிஜியை சந்தித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றோம்.

"பூஜா மூலம் குருர் பதம்" The Root of Worship is the Feet of the Guru.

பிறகு காபி அருந்திவிட்டு (தொடர்ந்து பல பயணம் இருப்பதால் ருசியாக இருந்தாலும், அடக்கமாகவும் சாப்பிட வேண்டியிருந்தது) பசுபதிநாத் கோவிலுக்கு சென்றோம்.

பசுபதிநாத்

உள்கோவிலுக்கு வெளியே இருந்த சிறு கோவில்களையும் லிங்கங்களையும் தரிசித்துவிட்டு அன்பர்கள் சிலர் அங்கிருந்த புரோகிதர் மூலம் சங்கல்ப அர்ச்சனை செய்து கொண்டனர். சிலர் ஜபம் செய்தோம். பிறகு பசுபதிநாத் கோவிலை வந்தடைந்தோம். கோவிலில் நல்ல கூட்டம். பசுபதிநாத்தை பார்த்தபடி பெரிய நந்தி. பசுபதிநாதர் ஒரு லிங்க வடிவில் மொத்தம் நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கமும் ஒரு அலங்கார சிவ லிங்க ரூபமாகவும், லிங்கத்தின் உச்சியில் ஐந்தாவது அரூபமாகவும் ஐந்து லிங்கங்களாக காட்சி தந்தார். வரிசையில் நின்று ஒவ்வொரு பக்கமுமாக சென்று பசுபதிநாதரை தரிச்சித்தோம்.

பிறகு விடுதிக்கு வந்து இரவு உணவருந்தி விட்டு சுவாமிஜின் சத்சங்கம்.

சத்சங்கத்தின் சுருக்கம்: மோக்ஷம் & முக்தி

மோஷம் புத்த மத வார்த்தை. முக்தி வேத-உபநிஷத்தில் இருந்து வந்தது.புத்த மதம் பற்றற்ற நிலையை, உடம்பிலிருந்து விடுதலை அடைவதை குறிக்கிறது (nirvana or Moksha). அதோடு நின்று விடுகிறது. விடுபட்டு எங்கே செல்கிறோம் என்று பேசுவது இல்லை. ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம் அங்கே இல்லை.

இந்த இடத்தில்தான் வேத-உபநிஷத்துக்கள் முக்தியைப் பற்றி சொல்கிறது.
ஜீவாத்மா பரமாத்மாவைடன் கலப்பதே முக்தி. அப்படி அடைய கூடிய முக்தி நான்கு வகையானதாக இருக்கிறது.

1. சகஜ முக்தி - எந்த சாதனைகளும் செய்யாமல் வாழும் போக்கில் வாழ்ந்துவிட்டு, மூச்சு பிரியும் சமயத்தில் ஆண்டவனை நினைப்பது. குருவருளாளும் இது நடக்கலாம்.

2. ஜீவன் முக்தி(விதேக முக்தி) - அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள், கடும் பயிற்சிகள் செய்து உயிருடன் இருக்கும்பொழுதே, இறைவனை அடைந்து விடுவது. மீண்டும் உலக வாழ்க்கைக்கு வராமல் இறைநிலையிலேயே இருப்பவர்கள் ஜீவன்முக்தி அடைந்தவர்கள்.

3. பரம் முக்தி - ஜீவன் முக்தி அடைந்து மீண்டும் உலகிற்கு வந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள்.

4. அவதாரம் - தாய் வயிற்றில் பிரசிக்காதவர்கள். ஒரு நோக்கத்தோடு அவதரிப்பவர்கள் (பிரவேசிப்பவர்கள்). உதாரணமாக ஶ்ரீராமர், ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமச்சீந்தரநாத் (நாத பரம்பரையில் அவதரித்து விஞ்ஞான பைரவ தந்த்ரா மற்றும் பல நூல்களை நம் உயர்வுக்காக எழுதியவர். உடனே இந்த புத்தகங்களை தேட வேண்டாம். அவை கிடைக்கப்பெற்றாலும் குருவருள் இல்லாமல் புரியப்போவதில்லை. அனைத்தையும் தேடி ஓடுவது உலக இயல்பு. இனி குருவருளை வேண்டுவோம், அனைத்தும் கிடைக்கப்பெறும்).

23.5.2019

காலையில் மந்திர ஜபம் செய்ய கோரக்நாத் கோவிலுக்கு சென்றோம். போகும் வழி எல்லாம் சிவ லிங்கங்கள் உள்ள சிறு சிறு கோவில்கள். சுவாமிஜி சொன்னபடி இவை பல நாதர்களின் ஜீவ சமாதிகள். சிவலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு காலப்போக்கில் விஷயம் அறியாதவர்கள் நாதர்களின் ஜீவ சமாதிகளின் அதிர்வுகளை உணர்ந்து உள்வாங்காமல் நிறைய சிவாலயங்கள் என நினைத்து கடந்துசென்றுவிடுகிறார்கள். 

சுவாமிஜின் ஆசீர்வாத்த்தால் எங்களுக்கு தெளிவு பிறந்தது. இவர்களுக்கும் குருவருள் கிடைத்து ஆன்மீக தெளிவு ஏற்படவேண்டும் என்று எல்லாம் வல்ல குருவருளையும் இறையருளையும் பிரார்த்திப்போம்.

கோரக்நாதரின் ஜீவசமாதிக்கு மேலிருந்த கோபுரத்தில் தங்கத்தாமரை இருந்தது.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு மந்த்ர ஜபம் செய்யும்பொழுது உள்ளேயும் தங்கத்தாமரை தெரிந்தது !

மந்த்ர ஜபம் செய்துவிட்டு கண்களை திறந்து பார்க்கும்பொழுது சுவாமிஜி நடந்து வந்துகொண்டிருந்தார்!

"மந்த்ர மூலம் குருர் வாக்யம்" The Root of Mantra is the Word of the Guru

விடுதிலுக்கு வந்து காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் பொக்காரா வந்தடைந்தோம். சிறிது ஓய்வுக்குப்பின் காபி அருந்திவிட்டு மாலை சத்சங்கம். இந்த சத்சங்கம் அடுத்த நாளைய முக்திநாத் பயணத்திற்கு எல்லோரையும் தயார்படுத்தும் சத்சங்கமாக இருந்தது. பிறகு இரவு உணவு. பின் ஓய்வு.

சத்சங்கத்தின் சுருக்கம் : நாத பாரம்பரியம்

ஆதிநாத் தான் நாதபாரம்பரியத்தின் ஆதிகுரு. இவருடன் இணைந்து ஒன்பது நாதர்கள் நவ நாதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பாரம்பரியத்தில் நாம் வருகிறோம். 

நாதர்கள் தங்களது ஆற்றலை உலக ஷேமத்துக்காக பல இடங்களில் ஸ்தாபித்திருக்கிறார்கள். காசி விஸ்வநாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உள்ள தலங்களும் நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களே. சூட்சுஸமாக ஆற்றலும், வடிவமாக லிங்கங்களும் இருப்பதால் காலப்போக்கில் காரணகாரியங்கள் மறந்துபோய், சிவ தலங்களாக பார்க்கப்படுகின்றன. விஷ்ணு தலங்களாக பார்க்கப்படும் தலங்ளிலும நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்து இருக்ககிறார்கள். உதாரணத்திற்கு ஶ்ரீரங்கநாத், முக்திநாத் (இது ஒரு புத்த மத கோவில்). 

உருவ வழிபாடு கடந்து இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நாதர்களின் ஆற்றலை உணர நாம் முயற்சிக்க வேண்டும். நாதர்கள் இந்தியாவிலும், இந்து மதத்திளும் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிளும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். நாதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒரு கற்பனை செய்து வைத்திருப்பதால் நாம் பல சமயங்களில் நாதர்கள் என்று உணராமல் அவர்களை கடந்து சென்றிருப்போம். விழிப்புணர்வு வேண்டும். இதற்கு அபியாசத்துடனும், வைராக்கியத்துடன் சாதனைகள் செய்யவேண்டும்.

நாதர்கள் தங்கள் ஆற்றலை ஸ்தாபித்த தலங்களில் கடல் மட்டத்திற்கு சமமாக ராமேஸ்வரம். உச்ச நிலையில் மலை சிகரத்தில் முக்திநாத் அமைந்திருக்கிறது.

24.5.2019

காலை உணவிற்குப்பின் சிறிய விமானம் மூலம் ஜொம்சம் வந்தடைந்தோம்.
விடுதிலுக்கு வந்து குளுருக்கான உடைகள் அணிந்துகொண்டு, கடல் மட்டத்திலிருந்து 3800 மீ உயரத்தில் பயணிக்க இருப்பதால் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக்கொண்டு தயாராக இருந்த வாகனத்தில் உடனே முக்திநாத் நோக்கி கிளம்பினோம். 

வண்டி இமய மலை வழியாக சென்றது கண்கொள்ளாக் காட்சி. வழியில் இறங்கி பல போட்டோக்களை க்ளிக் பண்ணிக்கொண்டோம்.  வண்டி கரடு முரடான பாதையில் செல்லக்கூடிய தூரம் வரை சென்றது. பிறகு வண்டியில் இருந்து இறங்கி மேடு போன்ற பாதையில் சுவாமிஜியுடன் நடக்க ஆரம்பித்ததோம். 
இரு பக்கமும் கடைகள், தங்குமிடங்கள், உணவகங்கள் போன்றவை இருந்தன. எங்கள் குழுவில் சிலர் இரு கால்களாளும், சிலர் முக்கால்களுடன் (இரண்டு கால்கள் + ஒரு mountain climbing stick = மூன்று கால்கள்) நடந்தோம். அங்கு வந்திருந்த யாத்ரிகர்களில் சிலர் குதிரைகளில் சவாரி செய்தபடி 'நடந்தார்கள்'.

இப்படி பலவிதமாக ஒரு மணி நேரம் நடந்து வந்து முக்திநாத் அடைந்தபொழுது மனம் குதூகலம் கொண்டது. முக்திநாதரை தரிசிக்கப்போகிறோம், முக்தி அடையப்போகிறோம் என்ற குதூகலம்தான். சுவாமிஜி தரிசன வழிமுறைகளை கூறினார்.

அங்கே 108 தீர்த்தங்கள் இருந்தன. 108 தீர்த்தங்களும் அங்கே 108 பசுவின் வாயில் இருந்து தீர்த்தம் கொட்டுவது போன்ற அமைப்பு (shower tap) கொட்டுமாறு அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு தீர்த்தத்திலும் உடம்பும் முக்கியமாக தலையும் நனையும்படி 108 தீர்த்தங்களையும் ஓடியே கடந்து வந்தோம். காரணம் அவ்வளவு குளிர்.

தீர்த்தமாடிய பிறகு, இரண்டு குளங்கள் இருந்தன. முதலில் பாவக்குளம். அங்கே மூன்று முறை முங்கி எல்லா பாவங்களையும் கழித்தோம். இரண்டாவது புண்ணியகுளம். அங்கேயும் மூன்று முறை முங்கி எல்லா புண்ணியங்களையும் கழித்தோம். பாவபுண்ணியங்கள் இரண்டையும் கழித்தால்தானே பிறப்பிற்ற முக்தி நிலை.

இரண்டு குளங்களுக்கும் பிறகு முக்திநாத் தரிசனம்.

கோவிலில் நல்ல கூட்டம். மெல்ல மெல்ல முன்னேறி நாங்கள் கருவறைக்கு அருகாமையில் வந்துவிட்டோம. முக்திநாத் ஒரு புத்த மதத்தலம். அங்கே புத்தரை (கௌதம புத்தர் அல்ல) விஷ்ணு அம்சமாக முக்திநாதராக தம்பதி சமேதராய் அலங்கரித்திருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சி. சுவாமிஜியுடன் தம்பதி சமேதர முக்திநாதரை தரிசித்தோம். 

ஆனந்தமயமான தரிசனம். அப்போது சுவாமிஜி சொன்னது நினைவிற்கு வந்தது. விக்கரக வழிபாடு கடந்து ஆற்றலை உணர வேண்டும். அந்த சூழலின் தெய்வீகத்தன்மையை அனுபவவித்து உள்வாங்கி நாதர்களின் ஆற்றலை உணர முயன்றோ(ஓ)ம். 

சுவாமிஜியுடன் உருவமாக முக்திநாதரையும் அருவமாக ஆற்றலையும் தரிசித்தது, சுவாமிஜியே எங்கள் கைகளைப்பிடித்து முக்திநாதரின் கைகளில் ஒப்படைத்துவிட்டதுபோல் ஒரு பிரம்மை ஏற்பட்டது!

"மோக்‌ஷமூலம் குரு கிருபா” The Root of Liberation is the Grace of the Guru


முக்திநாதரை தரிசித்ததவுடன், ஒரு நிழலான இடத்தில் அமர்ந்தோம். தரிசனம் சிறப்பாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உலக நன்மைக்காகவும் சுவாமிஜி மஹாமிருதஞ்சய யாகம் செய்தார். பிறகு கொண்டுவந்திருந்த மதிய உணவை உண்டுவிட்டு இருக்குமிடம் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஐபமாலை, சாலக்கிராமம் போன்றவற்றை ஷாப்பிங் செய்தபடி நடந்து கீழே வந்து சேர்ந்தோம்.

கீழே ஒரு சிறு காப்பி, டீ கடை இருந்தது. அங்கே நுழைந்தால் முக்திநாத் சென்று வந்த 30, 40 யாத்ரீகர்கள் இருந்தனர். எப்படி ? சிலர் அசதியாகவும், சிலர் வாந்தி எடுத்துக்கொண்டும், சிலர் உடல்நலமில்லாமலும் இருந்தனர். பார்ப்பதற்கு டீக்கடை மாதிரி இல்லாமல் சிறிய மருத்துவமனை மாதிரி இருந்தது. ஏன் ? 3800 மீட்டர் கடல் மட்டத்தின் மேலே இருப்பதால் முக்திநாத்தின் தட்ப வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. மேலே செல்ல, செல்ல oxygen குறைந்து மூச்சுவிட சிரமமாக இருப்பதும் சில காரணங்கள். குருவுடன் வந்ததால் அவர் எங்களை பாதுகாப்பாக கரையேற்றவிட்டிருந்தார். குருவிருக்க பயமேன்? சுவாமிஜிக்கு வந்தனமும், நன்றிகளும் 


25.6.2019
காலையிலேயே கிளம்பி விமானம் மூலம் பொக்காரா வந்து விடுதிலை அடைந்து குளித்து காலை உணவிற்குப்பின் பொக்காரா கோவில் சுற்றுலா கிளம்பிணோம். முக்கயமாக குகைக்குள்ளே சென்று தரிசனம் செய்த மஹாதேவ் கோவில் சிறப்பாக இருந்தது.

26.5.2019
விமானம் மூலம் மீண்டும் காத்மாண்டு வந்து விடுதி அடைந்து மதிய உணவு, பிறகு ஓய்வு. இரவு பசுபதிநாத் கோவிலுக்கு சென்று மந்த்ர ஜபம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.



27.5.2019

காலையிலேயே கிளம்பி காத்மண்டு நகர கோவில்களை காண சென்றோம். முக்கயமாக சங்க மகாதேவ் (உலகிலேயே மிக உயரமான நிற்கும் நிலையில் சிவபெருமான் - 114 அடிஉயரம்), டோலேஷ்வர் மஹாதேவ் (கேதார்நாத்தின் தலைப்பாகம் என்று நம்பப்படுகிறது ), சங்குநாராயணன், ஜலநாராயணன் கோவில்கள் கண்டு மகிழ்ந்தோம்.


28.5.2019
காலை கோரக்நாத் கோவில் சென்று மந்த்ர ஜபம். பின் சுவாமிஜின் சத்சங்கம். பிறகு காலை உணவிற்குப்பின் காத்மாண்டு விமான நிலையம் வந்து டெல்லி திரும்பினோம்.

திரும்பி வரும் பயணத்தில் முக்திநாத் சென்ற அன்று நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுப் பார்த்தபோது, அவற்றுக்குள் மறைந்திருந்த ஆன்மீக உண்மைகள் குரு அருளாளும் இறை அருளாளும் தெள்ளத்தெளிவாக ஒரு புதிய ஆன்மீக பரிணாமத்தில் புரியத்தொடங்கின. சுவாமிஜியின் மௌனமான சத்சங்கம் மனதிற்குள் கேட்டது. தெளிவு பிறந்தது. 24.5.2019 நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை அன்புகூர்ந்து படித்துவிட்டு வாருங்கள்.

நம் பிறவிப்பயன் பிறப்பற்ற நிலையான முக்தி அடைவதே. இதற்கு ஒரு வழி குருவருளுடன் அபியாசத்துடனும் வைராக்கியத்துடனும் சாதனைகள் செய்வது. வாழ்க்கையின் பரபரப்பிரலும், அலைக்கழிப்பிலும் நாம் சில சமயங்களில் சாதனைகளை தற்காலிகமாக நிறுத்திவிடலாம், மறந்துவிடலாம். 

இதை நமக்கு உணர்த்த ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் சிங்கப்பூர் (SOF) மாத சத்சங்கங்களும், SOF அன்பர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள். அதோடு குருவும் நம்மை மீண்டும் சரியான ஆன்மீக பயணப் பாதைக்கு கொண்டுவர எப்படிப்பட்ட U-turnயையும் எடுப்பார். 

பாதை கரடுமுரடாக இருந்தாலும் குருவுடன் பயணிப்பத்தால் சௌகர்யமான பயணமே. இப்படி எந்நேரமும் ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் குருவின் சத்சங்கம், அருகாமை, துணையுடன் பயணிக்க, பயணிக்க, நம்மிடம் இருந்து ஆன்மா என்னும் ஒளியை மறைத்துக்கொண்டு இருக்கும் மும்மலங்களான ஆணவம், மாயை, கன்மம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும் என உணர்தேன்.
மேலும் மும்மலங்களின் ஒழிப்பை, 108 ருட்ராஷங்கள் அடங்கிய ஜபமாலையுடன் செய்யும் குரு மந்த்ரஜபம் துரிதப்படுத்தும். இப்படி குரு மந்த்ர ஜபம் செய்யச்செய்ய ஒரு கட்டத்தில் நம் பாவபுண்ணியங்கலெல்லாம் ஒழ்ந்துவிடும். இவையெல்லாம் கடந்து வந்தால் குருவருளால் ஆன்மா ஒளிபெற்று முக்தி கிட்டும் .

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முக்தியே
- திருமந்திரம் 1598

அன்புடன் ரா.தி.