Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label போலி ஜோதிடர். Show all posts
Showing posts with label போலி ஜோதிடர். Show all posts

Wednesday, May 20, 2009

'கிராப்'பாலஜி


[தொலைக்காட்சியில் அந்த தொகுப்பாளினியின் முகத்தை நெருக்கமாக காட்டி பின்னோக்கி நகர்த்துகிறார்கள்]

அன்பர்களே வணக்கம்...

நமது தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு மேல் பல மாமேதைகளை கொண்டு மண்டை காயவைக்கும் நிகழ்ச்சியை செய்து வருகிறோம். உலக மக்களை உய்விக்க எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த ஆலஜிகளின் அலறல்கள் அதிகம். பெயரை மாற்றியும், வீட்டை மாற்றியும் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியவர்கள் பலர். தனது பெயரின் கடைசியில் ஒரு A சேர்த்திக்கொண்டு தொடர் 'வெற்றி' பெரும் அரசியல்வாதிகள் கொண்டது நமது தமிழ்நாடு.

அந்த வரிசையில் நம்மிடையே வந்திருக்கும் மாமேதை, மகாபுருஷர் உலகிலேயே முதல் கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி.

[இப்பொழுது திரையில் இருவரும் தெரியும் வண்ணம் காட்சி நகருகிறது. தலையை நூடுல்ஸ் போல வைத்துக்கொண்டு கோட் சூட்டுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார் ]

அவரின் பிஸி நேரத்திலும் நம்மிடையே உரையாட வந்திருக்கிறார். அவரிடம் நாம் பேசலாம்...

கிராப்பாலஜிஸ்ட் : வணக்கம் எனது புத்திசாலி மக்களே...உங்கள் வாழ்க்கை வளமாக்கவும், வாழ்க்கையில் எளிமையாக வாழைக்காய் வாங்கவும் கிராப்லாஜியை பயன்படுத்துங்கள்.

தொகுப்பாளினி : என்ன சார் நீங்க வாழைக்காய்-னு ஏதோ சொல்லறீங்களே?

கிராப்பாலஜிஸ்ட் : ஒரு ரைமிங்க இருக்கட்டுனு சொன்னேன். கேள்வியை கேளுமா..

தொகுப்பாளினி : கிராப்பாஜினா என்ன சார் சொல்லுங்க..

கிராப்பலஜிட் : முதலில் என்னை சாருனு கூப்பிடாதீங்க. என்னை ஜீ-னு கூப்பிடலாம். உங்க அழகுக்கு பக்கிரினு என் பேரை சொல்லி கூட கூப்பிடலாம்.. ஹி ஹி..

தொகுப்பாளினி : சரிங்க சார் ஜி. சொல்லுங்க...

கிராப்பலஜிட் : [இரண்டு கைகளையும் சினிமா டைரக்டர் போல வைத்துக்கொண்டு தொடர்கிறார் ] கிராப்பாலஜி-னா எல்லாரும் ஏதோ கையெழுத்து வைச்சு சொல்லும் விஷயம்னு நினைச்சுக்கராங்க. இது அப்படி இல்லை... என்னோட பல வருஷ ஆய்வுகளில் சோறு தண்ணி இல்லாமால் கண்டுபிடிச்ச முறைதான் இந்த கிராப்பாலஜி.. ஒருத்தரோட தலைமுடி எப்படி இருக்கோ அதை பொருத்துதான் அவரோட வாழ்க்கை அமையும். இது தான் கிராப்பாலஜி...

தொகுப்பாளினி : ஜீ நீங்க உங்க அளவுக்கு அறிவு பூர்வமா பேசரீங்க.. எங்க அளவுக்கு கொஞ்சம் எளிமையா சொல்லுங்களேன்...

கிராப்பலஜிட் : ஒருத்தர் அவர் தலை எழுத்து சரியில்லைனு சொன்னா அவர் தலை எழுத்த மாத்துர மாதிரி அவர் தலைமுடியின் ஸ்டைலை மாத்திட்டா அவர் வாழ்க்கையே மாறிடும். நீங்க கேட்ட மாதிரி எளிமையா சொல்லனும்னா கிராப்பை மாத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் மாபெரும் அறிவியல் தான் கிராப்பாலஜி.

தொகுப்பாளினி : அருமை ஜி, உங்க விளக்கத்தை கேட்டவுடனே எனக்கு புல்லரிக்கிது.. கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்னு நம்ம நேயர்களுக்கு சொல்லுங்க..

கிராப்பலஜிட் : பிரபஞ்சத்திலிருந்து வர கதிர்வீச்சு மனுஷனுக்கு தலைபகுதியில் நுழையுது. அதனால அந்த கதிவீச்சை நம்ம தலைக்குள் லாவகமா போகிறமாதிரி ஹார் ஸ்டிலை மாத்திட்டா நம்ம் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிதான்... உதாரணமா நமக்கு பிறக்கும் போது ஒரு ஹார் ஸ்டைல் இருக்கும். ஸ்கூலுக்கு போகும்போது அம்மா வழிச்சு சீவி விடும்பொழுது சட்டியை கவித்திய மாதிரி இருக்கும்... காலேஜ்க்கு போகும்போது நாய் சிலிப்பிக்கிட்ட மாதிரி மாறும்... இதிலிருந்து என்ன தெரியுது? [பெருமை பொங்க தொகுப்பாளினியை பார்க்கிறார்..]

தொகுப்பாளினி : தெரியலை ஜி. நீங்களே சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : தலை முடியோட அமைப்பு மாற மாற மனித வாழ்க்கையும் மாறுது...

தொகுப்பாளினி : வாவ்... உலத்துக்கு மாபெரும் தகவலை கொடுத்திருக்கீங்க... கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி எல்லோருக்கும் உதவும். எல்லோருக்கும் மண்டை இருக்கு இல்லையா..?

தொகுப்பாளினி : ஒருத்தர் தனது வாழ்க்கையை எப்படி எல்லாம் கிராப்பாலஜி மூலமா மாத்திக்க முடியும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி ரொம்ப எளிமையானது... [தலை கோதியபடியே] உங்களுக்கு சினிமா நடிகராகனுமா... அதுக்கு ஒரு ஹார்ஸ்டைல் இருக்கு..[இருபக்க முடியை சுழித்துவிட்டபடி] விஞ்ஞானி ஆகனுமா அதுக்கொரு ஹார்ஸ்டைல் இருக்கு அதுக்கேத்தமாதிரி மாத்திகனும்...கிரிக்கெட் வீரர் தோணியை எடுத்துக்குங்க... அவர் எதுனால பேமஸ் ஆனார்? அவங்க நோக்கத்திற்கு ஏற்ப அவங்க தலை முடியை மாத்தி கிரகங்களோட கதிர் வீச்சை மாத்திடுவேன்...

தொகுப்பாளினி:கிரக கதிவீச்சை கூட பொருத்துக்கலாம் போல இருக்கு.. ஆனா... ஸ்ப்பபா.... அடுத்த ஷோவிற்கு வரும்போது கோட்டை டிரைக்கிளீனிங் பன்னுங்க.. கிராப்பாலஜி பிரகாரம் அதிக முடி இருந்தா நல்லதா இல்லை குறைவா இருந்தா நல்லதா ?

கிராப்பாலஜிஸ்ட் : அதிக முடி இருந்தா கதிர்வீச்சை நம்ம தலைக்குள் போகவிடாம தடுக்கலாம்... இதை எப்படி சொல்லறீங்கனு கேட்பீங்க கரக்டா?

தொகுப்பாளினி : இல்லை நான் கேட்கவே இல்லையே...

கிராப்பாலஜிஸ்ட் : இல்லை எனக்கு தெரியும் அது தான் கேட்கரீங்க... ஒரு பிரபல நடிகர் என்கிட்ட வந்தார் அவருக்கு தலைமுடியே இல்லை. அவருக்கு விக்கு வைச்சு கிராப்பாலஜி செஞ்சேன். இப்போ அவருக்கு விக்கு தலையில இருக்கு அத்னால அவர் படமெல்லாம் நல்லா விக்குதாம்.

தொகுப்பாளினி : தமிழ் நாட்டு பெண்கள் தங்களோட ஹார்ஸ்டைலை அவ்வளாவா மாத்திகறது இல்லை. அவங்களுக்கு கிராப்பாலஜி வர்க் ஆகுமா?

கிராப்பாலஜிஸ்ட் : தமிழ்நாட்டு பெண்கள் பெரிய அளவில் வராம இருக்கிறதுக்கு காரணமே அவங்க தலை தான்.

தொகுப்பாளினி : ஜி என்ன சொல்லறீங்க?

கிராப்பாலஜிஸ்ட் :
(சுதாரித்து..) தலைமுடியோட அமைப்புதான். கிரன்பேடி எடுத்துக்குங்க. அவங்க பின்பாதி பெயர் பயப்படுவது போல இருந்தாலும்,
அவங்க ஹார்ஸ்டைல் தான் அவங்களை ஒரு புதுமை பெண்ணா காமிச்சுது.

தொகுப்பாளினி : முடியல ஜீ. எப்படி எல்லா கேள்விக்கும் இப்படி ஒரு பதில் சொல்லறீஙக?

கிராப்பாலஜிஸ்ட் : என் தலையை பார்த்தீங்களா? முதலில் என் தலையை நான் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி வைச்சுக்கிட்டேன். அதனால உலக புகழ்
அடைஞ்சேன்...

தொகுப்பாளினி : உலகப்புகழ்..? (மனதுக்குள்...எனக்கே இவரை தெரியாதே) ஜீ மைக்கேல் ஜாக்சன் மாதிரி உங்க தலையை வைச்சுக்கிட்டா நீங்க
மியூஸிக்ல பெரியாளா வராம ஏன் கிராப்பாலஜிஸ் ஆனிங்க...

கிராப்பாலஜிஸ்ட் : (மனதுக்குள் : குடுத்த காசுக்கு ஓவரா கேள்வி கேட்கறது தப்பாச்சே...) நான் மியூஸிக்ல உலக புகழ் பெற்ற ஆளா வரனும்னு தான் இப்படி என்னோட ஹார்ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.. நான் பெரிய பாப் சிங்கர் ஆனப்பிறகு இந்த மாபெரும் அறிவியல் உண்மையை மக்களுக்கு சொல்ல முடியாது இல்லையா? அத்தான் கிராப்பாலஜிஸ்ட் ஆயிட்டேன்.(அப்பாடா மூச்சுவிடாம பேசியாச்சு)

தொகுப்பாளினி : ஜீ கடைசி கேள்வி நான் சில சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன்.பலவருஷம் தினமும் எல்லாரு விட்டிலும் நடு ஹாலிலும் ஒப்பாரி வைச்சுருக்கேன். அப்புறம் சான்ஸ் கிடைக்கலை.. என் வாழ்க்கை மீண்டும் முன்னேற என் ஹார்ஸ்டைலை கிராப்பாலஜி பிரகாரம் எப்படி மாத்திகனும் சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : ( மனதுக்குள்.... நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்ன கேள்விங்கிற பேர்ல உனக்கு பலனை கேட்கறியா... இரு உனக்கு இருக்கு). நிச்சயமா சொல்லறேன். உங்க ஹார்ஸ்டைல் தான் உங்க பின்னடைவுக்கு காரணம். வலைபதிவு எழுதும் ஒரு ஸ்வாமி இருக்கார். அவர் பதிவை நான் படிக்கறது உண்டு. நீங்களும் படிக்கறீங்கனு நினைக்கிறேன். அவரோட ஹார்ஸ்டைல் உங்களுக்கு நல்ல இருக்கும். அந்த ஹார்ஸ்டைல் வைச்சுகுங்க அப்பறம் பாருங்க...

திரை மெல்ல இருளுகிறது...

[இது ஒரு பாபா ஹார்லைன்ஸ் பிரசண்டேஷன்]

Tuesday, April 21, 2009

அக்‌ஷய திரிதியையும் அலுமினிய பாத்திரமும்

நமது பண்டிகை கொண்டாட்டங்களில் அனைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் தன்மையை சார்ந்த திதிகள் எனும் அமைப்பில் இருக்கிறது. அமாவாசை, பெளர்ணமி போக பிற திதிகளும் நாம் விரத நாட்களாகவோ, வழிபாட்டு தினமாகவோ கடைபிடிக்கிறோம். உதாரணமாக சஷ்டி, சதுர்த்தி மற்றும் ஏகாதசி ஆகியவை திதிகளில் அதிகம் கொண்டாடப்படுகிறது. விரத தினங்கள் என்றும் சொல்லலாம். திரியோதசி திதி 13ஆம் திதியாக வருகிறது. அன்று ப்ரதோஷம் கொண்டாடப்படுகிறது.

சூரியன் நமது ஆன்மாவையும், சந்திரன் மனதையும் குறிக்கும். திதிகள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வால் ஏற்படுவதால் குறிப்பிட்ட திதிகளில் அன்று நமது ஆன்மாவும், மனமும் எளிதாக ஒருமுகப்படுகிறது.

வருடம் முழுவதும் சதுர்த்தி, ஷஷ்டி,திரேயோதசி திதிகள் கொண்டாடப்பட்டாலும் “திரிதியை” திதி மட்டும் கொண்டாடப்படுவதில்லை. திதிகளில் மூன்றாம் திதியான திரிதியை ஆன்மீக ரீதியான சிறப்பை பெறுவது சித்திரை மாதம் மட்டும் தான். காரணம் சூரியன் மேஷ ராசியிலும் சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் இந்த நிலை வேறு காலத்தில் ஏற்படாது.

சுக்ல பக்‌ஷம் எனும் வளர்பிறை காலகட்டத்தில் மட்டுமே சித்திரை மாதம் திரிதியை
இவ்வகையில் அமையும். தேய்பிறை காலத்தில் முதல் இரு ராசிகளில் சூரிய சந்திரர்கள் அமையமாட்டார்கள்.

இதனால் என்ன சிறப்பு?

சூரியன் தனது சுய ராசியான சிம்மத்திலிருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில் அமர்வார். சந்திரன் தனது சுயராசியான கடகத்திலிருந்து 11ஆம் இடத்தில் அமைவார். 9 மற்றும் 11 ஆம் இடங்கள் தர்ம, லாப ஸ்தானங்கள் என ஜோதிடத்தில் சிறப்பாக கூறப்படும் இடம்.

தர்ம, லாப ஸ்தானங்களில் நமது ஆன்மாவான சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் சேருவதால் அன்று செய்யும் தர்ம காரியங்கள் மேன்மை பெரும்.

சூரியன் மற்றும் சந்திர கிரகங்கள் குறிக்கும் தானியமான கோதுமை அல்லது அரிசியை தானம் செய்யும் பொழுது நமது கர்மவினையில் மேம்பாடு எற்பட்டு தீயவினைகள் குறையும் என்பது நம்பிக்கை. தீவினை குறைகிறதோ இல்லையோ பிறர் வாழ்க்கைக்கு சிறிது உதவுவதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.

நிற்க.


ஆனால் தற்சமயம் அக்‌ஷய திரிதியை வியாபார ரீதியாக பயன்படுவது மிகவும் வருத்தப்பட செய்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மக்களை தங்க நகை வாங்கச் செய்ய சில வியாபாரிகள் செய்யும் யுக்தி அருவருக்க தக்கதாக இருக்கிறது.

நமது சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்கம் வெள்ளி நீங்கலாக வேறு உலோகங்களை உடலில் அணியக்கூடாது. மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. உடலின் சக்தி நிலையை மேம்படுத்த உடலில் ஆபரணத்தை பயன்படுத்திய கலாச்சாரம் இது. வேதியியல் மூலக்கூறு அட்டவணையில் உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி முதல் இடத்தை பிடிப்பதை கொண்டு இதன் முக்கியத்துவம் அறியலாம். ஆனால் பிளாட்டினம், டைடானியம் என பல உலோகங்கள் உடலின் சக்தி நிலையை தடுமாறச்செய்யும்.

வியாபாரிகள் வியாபாரத்திற்காக செய்கிறார்கள் அது அவர்கள் தர்மம். மக்கள் அவர்கள் பின்னால் செல்கிறார்கள் அது அவர்களின் ஆசை. அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்கு துணைபோகிறார்கள் என்பது தெரியவில்லை. சாஸ்திரத்தை சந்தைக்கடையில் விற்கும் இவர்களின் தன்மை காசுக்காக எதையும் விற்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு ஜோதிடர் நான்கு வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்க விளம்பர மாடலாக பயன்பட்டார். தற்சமயம் சுக்ல பக்‌ஷம் திரிதியை என்பதால் வெள்ளை பொருட்களை வாங்க வேண்டும் என விளம்பரம் செய்கிறார். வியாபாரிகளின் தூண்டுதலால் சாஸ்திரத்தை விற்றுவிட்டார் என தெரிகிறது.

வெள்ளை உலோகம் வாங்க வேண்டும் என்றால் வெள்ளி வாங்க சொல்லலாம். பிளாட்டினம் வாங்குங்கள் என குறிப்பிட்டு சொல்லும் தன்மை அவரின் சாஸ்திர அறிவை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

இவர்கள் மத்தியில் இருந்து ஜோதிடம் சாஸ்திரம் என பேசவே கூசுகிறது. காரணம் இவர்களை வைத்துதான் மக்கள் ஜோதிடர்களை அளக்கிறார்கள். இவர்கள் தான் ஜோதிடர்கள் என கூறி ஜோதிடம் உண்மையா எனும் கருத்தாய்வில் தொலைக்காட்சியில் அழைக்கிறார்கள்.

"ஸ்வாமி ஜாதகம் பார்த்த பின் பரிகாரமே சொல்லவில்லையே.. நீங்கள் சொன்ன பலன் பலிக்குமா? " என மக்கள் கேட்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இவர்களை போல வேஷம் போட்டல் மட்டுமே நல்ல ஜோதிடர்கள் என மக்கள் நம்புவார்கள் போல.

ஆதலால் சொல்கிறேன்...

அக்‌ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.

அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்

அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.

-விளம்பர உதவி கமலா பாத்திர கடை.

Saturday, September 13, 2008

ஜோதிடத்தின் சாபம்

ஜோதிடம் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மையை ஏற்படுத்த சொல்லப்படும் விளக்கங்களெல்லாம் எந்தக் காலத்திலும் லாஜிக்காகவும் அழகாகவும் இருக்கின்றன. ஜோதிடப் புத்தகங்களின் முன்னுரைகள் மிக அற்புதமாக இருக்கின்றன். ஆனால் கணிப்பதில் சரியாகச் செய்வதை விட ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆட்கள் தான் இந்தத் துறையில் மிகுந்து காணப்படுகிறார்களே.


கலையின் ஆழத்தை அறிவதற்குப் பயில்வதை விடுத்து, மக்கள் தொகைப் பெருக்கமும் பெரும்பாலானோரின் தன்னம்பிக்கைக் குறைவும் தமக்கு மூலதனமாக இருப்பதையே சாதகமாக்கிக்கொண்டு வாழ்வதே இந்தத் துறையினரின் வாழ்நெறி ஆனது எதனால்? - ரத்னேஷ்

அன்பு ரத்னேஷ்,

உண்மையை எப்பொழும் திணிக்க வேண்டியது இல்லை. எப்பொழுதும் அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வலைபூ ஜோதிடம் உண்மை என சொல்ல துவங்கப்பட்டது அல்ல. ஜோதிடத்தை நான் எனது சிறிய அறிவால் புரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமே இது.

ஜோதிடத்திற்கு என ஒரு சாபக்கேடு உண்டு.

மருத்துவம் படித்த மருத்துவர் தவறுசெய்தால் மருத்துவரை தவறானவர் என கூறுகிறோம். ஆனால் ஜோதிடர் தவறு செய்தால் ஜோதிடம் தவறு என கூறுகிறோமே தவிர ஜோதிடர் தவறு என சொல்லுவதில்லை. அதனால் இந்த கூற்று ஜோதிடர்கள் தவறு செய்ய உதவியாக இருக்கிறது. இதைதான் சாபம் என கூறினேன்.

எல்லா துறையிலும் தவறானவர்கள் இருக்கதான் செய்கிறார்கள் அதனால் அந்த துறையே தவறு என சொல்லிவிட கூடாது.

ஜோதிடர் தவறாகலாம் ஜோதிடம் தவறாகாது.


ஜோதிடம் ஒர் கலை அல்ல. அது மெய்ஞான தந்திரம். அதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று
பயன்படுத்தலாம். அதை விடுத்து ஜோதிடர்கள் போலி போலி என கூறிவதால் என்ன பயன்?

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தவர் அனைவரும் கேட்காத கேள்வியை நரேந்திரன் எனும் சிறுவன் கேட்டதால் அவனுக்கு கடவுள் சொரூபம் தெரிந்தது. அது போல தவறானவரை பற்றி கவலைப்பட்டமல் உங்களால் நல்லவர்களை உருவாக்க முடியுமா என பாருங்கள். நன்றாக ஜோதிடம் கற்று பிறருக்கு உதவுங்கள், தானே போலிகள் ஒழிவார்கள்.

ஜோதிடர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அவர்களை தவறு செய்ய தூண்டுவது யார் என்றும் பார்க்கவேண்டும். ஜோதிடத்தால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது. உங்கள் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். ஆனால் யாரும் இதற்கு தயாரக இல்லை. நமக்கு என்றும் தேன் மழை பொழியும் நாளும், சூரியன் மறையாத காலையும் , செல்வம் குறையாத பண முடிப்பும் தேவை. இந்த பேராசையுடன் ஜோதிடரிடம் செல்லும் பொழுது அங்கு பேராசை எனும் வியாதி அவருக்கும் பிடிக்கப்பட்டு இருவரும் அழிவில் செல்கிறார்கள்.

ஜோதிடத்தால் எதையும் மாற்ற முடியாது என்றால் ஜோதிடம் எதற்கு என உங்களுக்கு கேள்வி தோன்றலாம்...

அதை ஒரு நாள் விவாதிப்போம்..