Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label ஜோதிட ஆய்வு. Show all posts
Showing posts with label ஜோதிட ஆய்வு. Show all posts

Thursday, June 8, 2023

செங்கோல்..! செங் - கோள்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.


சிவனை வணங்கும் ஒருவருக்கு நவக்கிரகங்கள் கேடு செய்யாது என துவங்கும் கோளரு பதிகத்தை பாடி மதுரை ஆதீனகர்த்தா செங்கோலை பிரதமருக்கு வழங்கினார். செங்கோல் பெற்ற நாள் முதல் செம்மையான ஆட்சி மலர்ந்ததோ இல்லையோ பல சர்ச்சைகள் புறப்பட்டு வந்தவண்ணம் இருக்கிறது.


 தமிழ்நாட்டின் ஆதீனங்கள் ஒன்றிணைந்து சென்ற வாரம் பிரதமருக்கு அளித்த செங்கோல் தற்பொழுது சர்ச்சைக்கோலாக மாறி இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை என்றால் செங்கோல் வழங்கப்பட்ட பிறகு இருநூறு பேரை பலி கொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது. இதற்கு காரணம் அந்த செங்கோல் தான் என்கிறார்கள். விவாதங்கள் எத்திசையிலும் பறக்கிறது. 


பல ஜோதிடர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் அறிவை தொலைக்காட்சி விவாதங்களில் சிதற விடுகிறார்கள். நிமித்தம் சரியில்லை, ஏதோ இறைவன் ரயில் விபத்தால் சொல்ல துடிக்கிறார். அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக மாட்டார் அதனால் செங்கோலை இனி அவர் கண்களால் பார்க்கக்கூடாது என இப்படி பலவகையான விவாதங்கள் மற்றும் வியாக்கியானங்கள்.


செங்கோல் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமா? கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல், தனியார் சரக்கு ரயில் தடம் புரண்டது என ரயில் வண்டி பிரச்சனையாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. 


செங்கோலை பிரதமரிடம் கொடுத்தார்களா இல்லை ஏதேனும் ரயில் தண்டவாளத்தில் நெம்புகோலாக கொடுத்தார்களா என ஐயம் ஏற்படும் அளவுக்கு ரயில் விபத்து சர்ச்சைகளை சுமந்துகொண்டு இருக்கிறது செங்கோல்.


செங்கோல் என்பது இத்தகைய விளைவை ஏற்படுத்துமா என சாஸ்திரங்களின் வாயிலாக பார்ப்போம். முதலில் செங்கோல் என்பது ஆட்சியாளர்களின் அடையாளமாக இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் அதிகாரத்தின் அடையாளமாக, அரசன் செல்ல முடியாத சூழலில் செங்கோலை மன்னனாக பாவித்து முடிவுகள் எடுப்பார்கள். மக்கள் ஆட்சிகாலத்தில் மேயர் முதல் நீதிபதிகள் வரை அவர்களின் அடையாளச்சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக செங்கோலை பயன்படுத்த முடியாது.


தமிழ் நாட்டின் மேல் பற்றுக்கொண்ட பிரதமர் ஆதீனங்கள் கொடுத்த ஒரு மரியாதையை பெற்றுக்கொண்டார் என்ற அளவிலேயே இதை பார்க்க வேண்டும். பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் இத்தகைய செங்கொல் அளிக்கப்பட்டால் அதற்கு ஒருவகை முக்கியத்துவம் உண்டு என கருதலாம். புதிய பாராளுமன்றத்தில் இருக்கும் மற்றும் ஒரு அலங்காரப்பொருள் என்பதை தவிர செங்கோலுக்கு வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை. 


பல கோவில்களில் மரியாதை ஏற்பதற்காக பரிவட்டம் கட்டியதால் ஊர் பெரியவருக்கு முடி உதிர்ந்து வழுக்கையானது என கிராமத்தில் பேசுவதற்கு சமமானது செங்கொல் நாட்டில் தீமைகளை ஏற்படுத்துகிறது என பேசுவது. கோவிலுக்கு செல்லும் ஊர் முக்கியஸ்தருக்கு செய்யும் மாலை மரியாதையை போன்றது செங்கோல் என்பதை தவிர அதில் அர்த்தம் கொள்ள ஏதும் இல்லை.


செங்கோல் ரயில் விபத்துக்கு காரணம் என பல ஜோதிடர்கள் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. மதுரை ஆதீனம் அவர்கள் கோளரு பதிகம் பாடி செங்கோலை பாரத பிரதமருக்கு வழங்குகிறார். ஜோதிடர்  கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் கோளரு பதிகம் பாடிய பின் கோளாரு வந்திருக்க கூடாது. திருஞான சம்பந்தருக்கும் , சம்பந்தரின் வழிவந்த ஆதீன கர்த்தருக்கும் தெரியாத புதிய மெய்யறிவு ஜோதிடர்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.


ஜோதிட சாஸ்திரத்தில் முண்டேன் ஜோதிடம் என்ற ஒரு வகை உண்டு. இயற்கை சீற்றங்கள், குழு மரணங்கள் (group death) , பேரிடர் இவற்றை முன்பே கணிக்க உதவும் ஜோதிட வகையாகும். 


செவ்வாய் விபத்துக்கான கிரகம், சூரியன் அரசை குறிக்கும் கிரகம், குரு ஆட்சியாளர்களை குறிக்கும். இப்படி ஒன்பது கிரகங்களும் ராசிமண்டலத்தில் இருக்கும் அமைப்பை கொண்டு ஒரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிர்கால பலனை சொல்லும் தன்மை முண்டேன் ஜோதிடத்திற்கு உண்டு. 


புதன் என்ற கிரகம் ரயில் பெட்டி மற்றும் ரயில் போக்குவரத்தை குறிக்கும்.   ஜூன் இரண்டாம் தேதி  ராகு கேது என்ற தீய விளைவுகளை ஏற்படுதும் கிரகங்களுக்கு இடையே புதன் என்ற கிரகம் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறது. ராகு கேது மற்றும் புதன், சந்திரன் ஆகியவை மேஷ துலா ராசிகளில் ஒன்றிணைந்த காலத்தில் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது. இத்தகைய கிரக சஞ்சாரம் செங்கோல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நிகழும். 

 

ஜூன் 8ஆம் தேதி வரை ரயில் சார்ந்த விபத்து செய்தி நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கும். பெரிய விபத்துகளுக்கு சாத்தியம் இல்லை என்றாலும் புதன் மேஷ ராசியை விட்டு நீங்கும் வரை தண்டவாளம் பாதுகப்பு குறைந்தே இருக்கும். ஜூன் 13ஆம் தேதி முதல் சந்திரன் மீண்டும் ராகு கேதுவுக்கு இடையே நுழைகிறார். இந்த முறை புதன் மேஷ ராசியில் இருந்து நகர்ந்துவிடுவார் அதனால் ரயிலில் விபத்து நடக்காது. ராகு கேதுவுக்கு இடையே சந்திரனுடன் குரு அமர்வதால் விமான விபத்துக்கள் ஹெலிகாப்டர்கள் விபத்து நடக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல் தலைவர்கள் விபத்தில் சிக்க நேரலாம். இதற்கும் செங்கோல் காரணம் என கிடைத்த கேஸ் எல்லாம் எளியவர்கள் மேல் எழுதுவதை போன்றது இது.


இரவு பகல் எப்படி இயல்பானதோ அது போல கிரகங்களின் நல்ல மற்றும் தீய பலன்கள் சமூகத்திற்கு நன்மையும் தீமையையும் கலந்தே அளிக்கிறது. ஜோதிட ரீதியாக கிரகங்கள் என்ற நவகோள்கள் விபத்துக்கு காரணமே தவிர செங்கோல் அல்ல..! காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததை போல என்பார்கள் இது குருவி உட்கார பலாப்பழமே விழுந்தது போன்று இருக்கிறது.


தமிழக ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் டில்லியில் பிரதமார் வாங்கினார் என்றால் ஒடிசாவில் எப்படி விபத்து நடக்கும் என கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 

 

அரசியல் மற்றும் ஜாதீய காழ்புணர்வு ஆகியவையே இத்தகைய சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. செங்கோல் என்பது ஒரு காரணம் மட்டுமே. இதில் ஜோதிடர்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.





Thursday, December 14, 2017

வேளாண்மை பஞ்சாங்கம்- 2018

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (ஹேவிளம்பி -விளம்பி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

வேளாண்மை பஞ்சாங்கம் 2018


இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 
வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.
 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Thursday, December 10, 2015

ரங்கராஜ் பாண்டேயின் கேள்விக்கு எங்கள் பதில்..!


கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் சென்னை பேரிடரை ஜோதிட ரீதியாக அலசும் வகையில் சென்ற வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் திரு.ரங்கராஜ் பாண்டே சில கேள்விகளை முன் வைக்க பிரபல ஜோதிடர் ஷெல்வி பதில் அளித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அடிப்படையானது மேலும் தர்க்க ரீதியாக பொதுமக்கள் கேட்க விரும்பிய கேள்விதான். நெறியாளர் பாண்டேயின் கேள்விகள் மிகவும் ஆய்வு செய்து கேட்கப்பட்டதல்ல. ஆனால் யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் பல பதில்கள் தெளிவாக இல்லாமலும் மேலும் ஜோதிடத்திற்கு முரணாகவும் இருந்தது.

கேள்விக்கான பதில்கள் பலருக்கு சாஸ்திர உண்மையை சொல்லும் என்பதாலும் தெளிவு கிடைக்கும் என்பதாலும்  அக்கேள்விகளை எனது ஜோதிட மாணவர்களிடம் கொடுத்து பதில் அளிக்க சொன்னேன். அவர்களின் பெரும்பாலனவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள். அவர்கள் அளித்த பதில் இங்கே தொகுத்துள்ளேன்.


கேள்வி பதில்


1. இயற்கை பேரழிவுகளை தலைவிதியா? நிர்வாகத்தின் அலட்சியமா?

இது தலைவிதியோ அலட்சியமோ இல்லை. இது வானிலையின் இயற்கை செயல்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றி வருவது நமக்கு தெரியும். நீள் வட்டப்பாதையில்ஒரு பக்கம் சூரியனிலிருந்து தள்ளியும் ஒரு பகுதி அருகிலும் இருக்கும். அருகில் இருக்கும் சூழலில்கோடை காலமும், சூரியனின் வெப்பமும் அதிகமாக இருக்கும், தள்ளி இருக்கும் சூழலில் குளிர்காலமும் சூரியனின் தாக்கம் குறைந்தும் இருக்கும். இதை நாம் எப்படி வானிலை நிகழ்வு என சொல்லுகிறோமேஅது போல பூமிக்கும் சனிக்கு இடையே இருக்கும் இடைவெளியை பொருத்தும் பூமியில் வானிலை மாற்றம் நிகழும். பூமி சூரியனை சுற்றி வர நமக்கு ஒருவருடம் ஆகிறது அதனால் குளிர் மற்றும் கோடை காலம் நமக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும். ஆனால் சனி பூமி ஆகியவற்றின் சுழற்சி 30 வருடம் எடுத்துக் கொள்ளுகிறது.
 
இதனால் சுமார் 15 வருடம் ஒரு முறை அதிக மழையும் , வறட்சியும் ஏற்படும். இடைக்கடார் சித்தரின் பாடல்கள் பரவலாக ஜோதிடத்தில் பயன்படுத்துவதில்லை, மன்மத வருஷம் மாரி உண்டு என அவர் சொல்லுவது பஞ்சாங்கத்தின் முன்னால் ஒரு பொது பலனாக இருக்குமே தவிர அவை கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில்லை. இந்த பொதுப்பலனும் சனியின் தன்மையும் இணையும்காலத்தில் அவை மிகச்சரியாக நடக்கும்.

முண்டேன் ஜோதிடம் என்ற பிரிவு ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அவை சமூகம் மற்றும் மக்கள் சார்ந்த பலன் சொல்லும் பகுதியாகும். அவ்வாறு முண்டேன் ஜோதிடம் கற்றவர்களால் இயற்கை பேரிடர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் கூற முடியும்.

2. 60 வருடத்திற்கு ஒரு முறை இதே பிரச்சனை வருமா?

அவை பொதுப்பலன் சனி நீர் ராசி சம்பந்தப்பட்டு, குரு+சூரியன் ஆகியவை இணைந்தால் தான் இவை நடக்கும்.  

60 வருடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் கட்டாயம் 10 வருடத்திற்கு ஒரு முறை சனி நீர் ராசி சம்பந்தப்படும் எனவே அது மன்மத வருடமாக இல்லை என்றாலும் நடக்கும். 2004 டிசம்பர் சுனாமி, 2015 இப்பொழுது அடுத்தது 2026 செப்டம்பர் என  நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

இதுக்கு எதுக்கு கூகுள்..!


3.மழை வருடா வருடம் வருதே, இதற்கு எதற்கு ஜோதிடம்?

மழை வருடா வருடம் வரும் என சொன்னாலும் இனி வரும் காலத்தில் 2017 முதல் 2020 வரை சனி நெருப்பு ராசியான தனுசில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் 2014 முதல் 2017 வரை இருந்த மழையின் அளவை விட மிகவும் குறைவாக இருக்கும். 2018 ஆண்டு மழை இல்லாமல் பொய்க்கும். முன்பு சொன்னது போல பூமிக்கும் சனிக்கு இடைவெளி பெருகுவதால் இவை நடைபெறுகிறது.

4. மன்மத வருடத்தில் இயற்கை பேரழிவு நடக்கும்னு நம்பரீங்க?

எந்த வருடமும் அழிவு பேரழிவு என சொல்லிவிட முடியாது. கிரகங்களின் சுழற்சியே அதை முடிவு செய்கிறது. 2017 வரை சனி விருச்சிக ராசியில் இருக்கும்

அப்படி இருக்க அது வரை சில பேரழிவு விஷயங்கள் நடைபெறும். ஜனவரி முதல் வாரம் ராகு/கேது பெயர்ச்சி உண்டு. அது மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது. ராகு சனி உடன் சம்பந்தப்படும் பொழுது 2016 ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்கள் மனித செயலால் குழு மரணங்கள் நிகழும்.

5. கார்த்திகை பிறகு மழை இல்லை, கர்ணனை மீறிய கொடை இல்லை.  அப்பொழுது எப்படி?


கார்த்திகைக்கு பிறகு தான் மழை இல்லை. அதாவது மார்கழி மாதம். நாம் பேசும் இக்காலத்தில் கார்த்திகை முடியவில்லை. மேலும் இத்தகைய பழ மொழிகள் ஜோதிடம் இல்லை. அதனால் ஜோதிட சார்ந்த கேள்விகளை கேளுங்கள்.

6. இந்த கார்த்திகைனு சொல்றீங்களே... நம் நாட்டுக்கா? தமிழ் நாட்டுக்கா?

சனியும் சூரியனும் விருச்சிக ராசியில் 13 ஆம் டிகிரியில் சென்றார்கள். சூரியன் சனியின் டிகிரியை நெருங்க நெருங்க நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து சென்னை பாதிக்கப்பட்டது. காரணம் சென்னையின் ரேகாம்சம் 13 டிகிரி. சனி விருச்சிக ராசியில் பயணம் செய்ய செய்ய பல டிகிரியில் மாற்றம் அடையும் அது குறிக்கும் ரேகாம்ச இடங்கள் எல்லாம் பாதிக்கப்படும்.

7. 2016 தை வரை, ஜனவரி 29  வரை கவனம் தேவை. தமிழன், தமிழக முதலமைச்சர், தமிழகம் எல்லாம் கவனமாக இருக்க வேண்டுமா? இனியும் பேரிடர் நடக்கலாமா?

இனி பேரிடர் தமிழகம் சார்ந்து இல்லை. ஆனால் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் குழு மரணம், போராட்டத்தை ஒடுக்கும் பொழுது மரணம் ஆகியவை நடைபெறும்.

8. ஒரு ஐம்பது வருஷமா நீர் நிலை, கடவுள் வணங்காம இருந்திருப்பமா? அப்போ பேரழிவு இப்பதான்னே நடக்குதா? அதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையா?

முன்பே சொன்னது போல வானிலை மாற்றங்கள் கிரக சுழற்சிக்க ஏற்ப நிகழும். நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் இயற்கை அதன் வேலையை செய்யும்.
 
சூரியனை நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் எப்படி ஒளி கொடுக்குமோ அது போலவே இது. ஜோதிட சாஸ்திரம் எதையும் வணங்க சொல்லுவதில்லை. மதங்கள் தான் இறைவனை வணங்கு இல்லை உனக்கு தீயவை நடக்கும் என பயத்தினால் பக்தியையும் மதத்தையும் வளர்க்கிறது. ஜோதிடத்தை மதம் போன்று மலிவாக மாற்றம் செய்ய வேண்டாம் என வேண்டுகிறேன்.

9. உங்கள் கருத்துப்படி பேரழிவு நடந்தே தீரும் இது விதி இல்லையா?
முன்பே சொன்னது போல இது விதி அல்ல, இயற்கை சுழற்சி. குளிர்காலம் வரும் என தெரிந்து கம்பளி உடை வாங்குவது போல, நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படலாம். அதை புரிந்து கொண்டு செயலாற்றவே ஜோதிடம் சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. எதையும் மாற்றவோ, இது தான் விதி என உங்களை தாழ்தவோ ஜோதிடம் செயல்படுவதில்லை. அது ஒரு முன்கூர் (ஃபோர்காஸ்டிங் டூல்) கருவி.

10. இதுக்கு பரிகாரம் இருக்கா?

இது ஒரு கருவி இதனால் அளவிட மட்டுமே முடியும். ஆன்மீகம் , இறையா ப்ரார்த்தனைகள் மாற்றம் செய்யலாம். ஆனால் கிரகத்தை வணங்குவதாலோ அல்லது கிரகம் சார்ந்த தேவதைகளை ப்ரார்த்தனை செய்வதோ ஜோதிட சிந்தாந்தத்தில் இல்லை.

[சனி சார்ந்த பரிகாரம். சனி - சூரியன் சம்மந்தப்பட்டா ஆஞ்சனேயரை வணங்க வேண்டும் - என திரு,ஷெல்வி - கூறுகிறார்]
சக்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு சக்கரை சாப்பிடுங்கள் என சொல்லுவதை போன்று ஒரு தவறான வழிகாட்டுதல் இது.  சனி மற்றும் சூரியன் என்ற இரு

கிரகத்தால் தான் இத்தகைய பிரச்சனை நடைபெறுகிறது. அப்படி இருக்க அவர்களை வணங்குவது சரியாக வருமா என சிந்திக்க வேண்டும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகும் என நான் சொன்னால் நீங்கள் இளநீர் அருந்துதல் , உடலை குளிர்விக்க முயலவேண்டுமே தவிர கோடையில் வெப்பத்தை கொடுப்பது சூரியன் தான் என கூறி வெளியில் சென்று சூரியனை வணங்கினால் வெப்பம் குறையுமா?

11. இதை செய்தால் ஆஞ்சனேய ப்ரீதி நீங்கள் சொல்வதை போல செய்தால்  ஜனவரி 29 வரை நடக்கும் பேரழிவு தடுக்கலாமா?

ஜோதிடமும், ப்ரார்த்தனையும் வேறு வேறு.

வானிலை அறிக்கை போல சூழலை சொல்லுவது மட்டுமே ஜோதிடத்தின் வேலை. அதன் ப்ரீதி, பரிகாரம் ஆகியவை தர்ம சாஸ்திரம் மற்றும் ஆன்மீக அடிப்படையில் சொல்லப்படுகிறது.

12. பரிகாரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கம் தவிர்க்க முடியும் என்றால் ஜோதிட பலன் தவறாகிவிடும். ஜாதகம் உண்மையாக இருந்தால் பரிகாரம் பொய்யாகிவிடும். பரிகாரம் உண்மையாக இருந்தால் ஜோதிட பலன் பொய்யாகிவிடும். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

அதனால் தான் இவை இரண்டும் வேறு வேறு என்கிறேன். ஆனால் இவை இணையும் ஒரு புள்ளி ஒன்று உண்டு. ஜோதிடம் என்பது பரிசோதனை நிலையம் போன்று உங்கள் ஜாதகம் ஆராய்ந்து இது இப்படி இருக்கிறது என சொல்ல மட்டுமே முடியும். மாற்றம் செய்ய மருத்துவர் போன்று ஆன்மீகவாதிகள் தேவை. அவர்கள் மாற்றம் செய்தபின் தேடினால் ஜாதக பலனும் மாறுபடும். இதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஜோதிடத்தின் எல்லையை புரிந்து கொள்ளுங்கள்.

[ திருஞான சம்பந்தரே கோளரு பதிகம் கொடுத்திருக்கார் அதை படித்தால் கிரக கோளாரு நீங்கும் - என திரு,ஷெல்வி கூறுகிறார்.]
ஆம் உணமைதான்... ஆனால் நமக்கு பார்வதி தேவி 3 வயதில் ஞானப்பால் கொடுத்திருந்தால், நாமும் பக்தியில் திருஞானசம்பந்தரை போல இருந்தால் கோளாரு பதிகம் வேலை செய்யும். நீங்கள் அப்படியா என முடிவு செய்து கொள்ளுங்கள்.

13. பரிகாரம் செய்தால் விபத்தே நடக்க கூடாது. பரிகாரம் செய்தால் விபத்து காலில் மட்டும் அடுபட்டு செரியாகும் என்பது உணமையா?
ஜோதிடத்தில் பரிகாரம் இல்லை. அது அளவீட்டு கருவிதான். ஒருவருக்கு விபத்து நடக்கும் என கிரகம் சொல்லுகிறது என்றால் அவர் ஆன்மீக வழியில் ஈடுபட்டால் முற்றிலும் தவிர்க்க முடியும்.  நாகாஸ்திரம் ஏவப்பட்ட நிலையில் அர்ஜுனன் தப்பித்தார் அல்லவா அது போல. பகவான் கிருஷ்ணன்  நாகாஸ்திரத்தை நிறுத்தவில்லை அவர் தேரையே தாழ்த்தினார். பகவானாக இருந்தாலும் உங்களை காப்பாற்றுவார், ஆனால் இயற்கையை தடுக்க மாட்டார்.

14. 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 200க்கு மேல் இறந்திருக்கார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே ராசியா? ஒரு கிரக அமைப்பா? ஒரே ஜாதகமா?

ஆம் இதில் சந்தேகம் என்ன. ஒரே ராசியாக, ஒரே ஜாதகம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இறப்பை கொடுக்கும் கிரக அமைவுகள் [ மாரக பாதக ஸ்தான இணைவுகள்] ஒன்று போல இருக்கும்.

இறப்பு என்பது நமக்கு ஒரு வித மன ரீதியாக நெகிழ்ச்சி கொடுக்கும் செயலாக இருப்பதால் இப்படி கேள்வி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 200 குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது , இறப்பும் சாத்தியமே. 

ஜோதிடத்தை பொருத்தவரை இறப்பு / பிறப்பு / கல்வி/ திருமணம் / குழந்தை பேறு என அனைத்தும் நிகழ்வு தான் இதில் செண்டிமெண்டுடன் பார்த்தால் இறப்பு ஒருவித மன அழுத்தத்தை தருகிறது. ஒரு முகூர்த்த நாளில் சென்னையில் மட்டும் 300க்கும் அதிகமான திருமணம் நடக்கும். அதெப்படி ஒரே நாளில் 300 திருமணம்? அனைவருக்கும் ஒரே ராசியா என கேள்வி நமக்கு ஏன் எழவில்லை என சிந்திப்பது நல்லது.


15. சனியால கூட்டு மரணம் ஏற்படும் இந்த ராசியில் சஞ்சரிக்கு பொழுது ஏற்படும்னு சொல்றீங்க.. இது இங்கே தமிழகத்தில்..சென்னையில் நடக்கும் என குறிப்பிட்டு சொல்ல முடியுமா? இது எப்படி எந்த ஊரில் விஜயவாடாவா? டெல்லியா எப்படி தெரிந்து கொள்வது?

சனியின் டிகிரி , சூரியனின் டிகிரி அவற்றை முடிவு செய்யும் என சொன்னேன். ஊரின் ரேகாம்சம் அதனுன் இணைந்து செயல்படும். அதைவைத்தே முண்டேன் ஜோதிடத்தில் சொல்லுவார்கள். இதை தவிர பல நுட்பமான விதிகளும் உண்டு. நம்மை விட வெளி நாட்டினர் முண்டேன் ஜோதிடத்திலும், லோக்கேஷனல் அஸ்ராலஜி என்ற இடம்சார் ஜோதிடத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

16. டெல்லி குஜராத்தில் குழு மரணம் நடக்கும் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்?

என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. காரணம் கிரகங்களின் ரேகாம்சம் குஜராத், டெல்லியை சுட்டிக்காட்டுவதில்லை.

[தலைவர்கள் / பிரதமர் ஜாதகத்தை வைத்து முடிவு செய்ததாக திரு.ஷெல்வி கூறுகிறார். மேலும் தலைவர் ஜாதகம் உண்மை இல்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

ஒரு ஜோதிடர் தன் கையில் இருக்கும் ஜாதகம் சரியா என பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஜாதக தகவல் சரி இல்லை என்றால் தகவலை ஜோதிட ரீதியாக கண்டரிந்து சரி செய்யதெரியவேண்டும். அதை விடுத்து கொடுக்கபட்ட ஜாதகம் தவறாக இருந்தால்  நான் என்ன செய்வது என கேட்பது ஜோதிடம் முழுமையாக கற்ற அறிவை குறிக்காது ]

17. இந்தியாவுக்கு ஜாதகம் போடுவீர்களா? நரேந்திர மோடி ஜாதகம் வைத்து இந்தியாவுக்கு சொல்லுவீர்களா?
18. மாநிலத்திற்கும் ஜாதகம் உண்டா?
19. அந்திர மாநில முதலைமைச்சர் ஜாதகம் சிறப்பா இருக்கு, ஆனா அங்க 100 பேருக்கு ஜாதகம் சரியில்லை என்றால் என்ன  நடக்கும்?
20. சந்திரபாபு நாயுடு ஜாதகம் நாட்டுக்கே பேசுமா?
21. இந்தியாவை ஆள்வது நரேந்திர மோடி என சொல்லி அவர் ஜாதகத்தை பார்ப்பீர்களா? அல்லது ஜனாதிபதியின் ஜாதகம் பேசுமா?
24. ஆள்பவர் ஜாதகமா? இந்தியாவின் பெயர் ராசியா? சுகந்திரம் அடைந்த தேதியா எதைவைத்து சொல்வீர்கள்?

22. முருகேசன் ஜாதகத்தில் தொழில் சரி ஸ்தானம் இல்லை. மனைவி கையெழுத்தில் தொழில் நடக்கும் என்றால் தொழில் கையெழுத்து போடுவது ஜாதகம் மூலமே நடக்கும் அல்லவா?


மேற்கண்ட அனைத்தும் ஜோதிடத்திற்கு முரணான செயல்.
 
விம்சோத்தரி தசா என்பது 120 வருடம் கொண்ட காலக்கணக்கு. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை கொண்டு ஜாதகம் ஆராய்வதாக கொண்டால், 120 வருடத்திற்கு மேல் இந்தியா இருக்காதா என கேள்வி வரும். அமெரிக்க நாடு தோன்றி 200 வருடங்கள் ஆகிவிட்டது. அமெரிக்கா உருவான தினத்தை கொண்டு ஜாதகம் கணித்திருந்தால் பலன் 120 வருட தசா தீர்ந்த நிலையில் இப்பொழுது வருமா என சிந்திக்க வேண்டும். அப்படியானால் பிரிட்டீஷ் அரசுக்கு எப்படி ஜாதகம் போடுவது? அவர்கள் யாரிடம் இருந்தும் சுகந்திரம் பெறவில்லை. தோற்ற நாள் கிடையாது. அப்படியானால் பிரிட்டனுக்கு ஜாதகமே கிடையாதா?

ப்ரசன்ன ஜோதிடம் என்ற முறையிலேயே இதை பார்க்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் அந்த நாடு, மாநிலம் மற்றும் குழுவுக்கு செயல்படாது.
இதை புரிந்துகொள்ள சரியான முறையில் முண்டேன் ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் ஜாதகம் ஆந்திர மக்களுக்கு செயல்படும் எனபது ஜோதிடத்திற்கு முரணான தகவல்.
 
ஒரு பஸ் ட்ரைவர் இருக்கிறார். அவருக்கு இன்று மாரக தசா நடக்கிறது மரணிக்க போகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 53 பயணிகள் பஸ்ஸில் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் இறப்பு இல்லை என ஜாதகம் சொல்லுகிறது என வைத்துக்கொள்வோம். பஸ் ட்ரைவர் ஜாதகம் தான் பேசும். அவர் போனால் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதை போன்ற முட்டாள் தனமான ஆய்வு இது.

பிரதமர்கள், முதலமைச்சர்கள் ஜாதகம் மக்களுக்கு நடக்கும் என்றால் சில பிரதமர்கள் கொல்லப்படும் பொழுது நாட்டு மக்களும் அவர்களுடன் சேர்ந்து இறந்திருக்க வேண்டும் அல்லவா?

தலைவர்கள் ஜாதகம் அவர்களின் தனிப்பட்ட பதவி, நிர்வாகம் கட்சி சார்ந்த செயல்பாடு இவைகளையே காட்டும். மக்களின் ஜாதகம் தான் அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. மக்களின் வாழ்வும் அதன் தரமும் உயரும் என இருந்தால் அதன் தாக்கம் தலைவர்களின் செயலில் அது வெளிப்படும். இதற்கு தலைவர்களின் ஜாதகம் ஒத்துழைக்கும்.

என் ஜாதகத்தில் (பத்தாமிடம்) தொழில் ஸ்தானம் சரியில்லை என்றால் என் மனைவி ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரியாக இருக்கிறது என ஜோதிடம் சொன்னால் என் மனைவி பெயரில் தொழில் செய்வது என்பது தற்கால நடைமுறையில் இருக்கிறது. ஆனால் உணமையில் இது ஒரு மனரீதியான தீர்வு தானே தவிர உணமையான தீர்வு அல்ல.

என் தொழில் நன்றாக இல்லை தொழில் நன்றாக இருக்கும் ஒருவரின் பெயர் தொழிலை நடத்தும் என்றால் நான் முக்கேஷ் அம்பாணி பெயரில் தொழில் செய்துவிட்டு போகலாமே..!

என் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரி இல்லை , என் மனைவுக்கு தான் சரியாக இருக்கும் என்றால் நான் தொழிலை மனைவியிடம் நடத்த சொல்லிவிட்டு வீட்டில் சும்மா இருப்பது நல்லது. அதைவிட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றி கையெழுத்து போடும் அதிகாரம் கொடுத்துவிட்டால் தொழில் மாறாது. காரணம் தொழில் முடிவு எடுப்பது நீங்கள் தான். கிரகங்கள் உங்களின் மனதில் இயங்கி முடிவை எடுக்க செய்யும். யார் கையெழுத்திட்டால் என்ன, தவறான முடிவு எடுத்தால் தொழில் என்ன ஆகும் என சிந்தியுங்கள்.

23. ஜோதிடம் ஒரு கணிதம் என்றால் ஏன் ஜோதிடருக்கு ஜோதிடர் ஏன் மாறுகிறது? 2 ம் 2ம் 4 என்றால் எல்லாரும் ஒன்று தானே சொல்ல வேண்டும்?

ஆம் ஒன்று தான் சொல்ல வேண்டும். சரியாக படித்த ஜோதிடர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். எங்கள் ஜோதிட பயிற்சியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகவே பலன் இருக்கும் முரண்படாது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நடக்கும் எங்கள் அறக்கட்டளையின் ஜோதிட ஆய்வு வகுப்புக்கு வாருங்கள் அனைவரும் ஒரே பதிலை அளிப்பதை காணலாம்.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் -ஒரே காலேஜில் படித்த மருத்துவரே வேறு வேறு மாத்திரை கொடுப்பாங்க.. ]

ஜோதிடர் மருத்துவர் போன்றவர் அல்ல. அவர்கள் இரத்த பரிசோதகர்களை போன்ற ப்யோடெக்னாலஜிஸ்ட்கள். ஒவ்வொரு ரத்த பரிசோதனையும் வெவ்வேறு தகவல் தந்தால் ஒத்துக்கொள்வீர்களா? ஒன்றாக படிக்கவில்லை என்றாலும் ரத்த பரிசோதகர்களின் முடிவுகள் முரண்படாது.  மருத்துவர்க்கு தேவையான ஆய்வு தகவல் கொடுப்பது தான் இவர்கள் வேலை மருத்துவம் பார்ப்பது அல்ல..!

நாம் யார் என்ன செய்கிறோம் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.


25. நீங்கள் ஒரிஜினல் மத்தவங்கள் எல்லாம் போலியா?

சரியான சாஸ்திர அறிவு கொண்டவர்கள் ஒரிஜினல் சுயநலத்திற்காக, பணத்திற்காக மற்றும் பிரபலத்திற்காக ஜோதிடம் பயன்படுத்தினால் போலி என கூறலாம்.

26. அடுத்த முதல்வர் யார் என பொட்டுல் அடிச்ச மாதிரி சொல்லனும்? ஒவ்வொருவர் ஒன்னு சொன்னா சரியா வருமா?

சரியாக ஜோதிட அறிவும் கல்வியும் இருந்தால் பொட்டில் மட்டுமல்ல பூவில், கம்மலில், ஜடையில் என அனைத்திலும் அடித்து சொல்லலாம். :)

27. அரைகுறை ஜோதிடர் நாட்டுக்கு கேடு அல்லவா?
அரைகுறை அறிவு ஜோதிடத்தில் மட்டுமல்ல அனைத்திலும் பிரச்சனையே.

28. ஆள் ஆளுக்கு ஒரு பதில் சொன்னா யாரை நம்புவது?
உங்களுக்கு எந்த பலன் சரியாக இருக்கிறதோ / வாழ்க்கையில் நடக்கிறதோ அதை நம்புவது நல்லது.

29. இதுக்கு சக்சஸ் ரேட் இருக்கா?

ஒவ்வொரு ஜோதிடருக்கும் இருக்கிறது. அவர்களில் ஜோதிட அறிவை பொருத்து மாறும். அனுபவத்தை பொறுத்து மாறாது. சிலர் சொல்லுவார்கள் நாம் 30 வருடமாக ஜோதிடம் பார்க்கிறேன். நான் 40 வருடமாக பார்க்கிறேன். அதனால் சக்சஸ் ரேட் அதிகம் என சொல்லுவது சரி அல்ல.

ஐந்து வருடத்தில் ஒரு பசுமாடு பால் கொடுக்க துவங்கிவிடும். 15 வருடம் ஆனாலும் காளை பால் தராது. 15 வருடம் புல் தின்ற அனுபவம் உண்டு என பால் கறக்க முயற்சி செய்ய கூடாது..! பால் தேடி செல்வது பசுவா காளையா என்பதில் முதலில் உங்களுக்கு தெளிவு வேண்டும்.

30. திருக்கணிதம், வாக்கியம் இதில் எது சரி?
வாக்கியம் என்பதும் திருக்கணிதம் என்பதும் வட மொழி பெயர்களே. வாக்கியம் என்பது பொதுவான கணக்கு. திருக்(Drig) - என்பது திசையை குறிப்பிடுவது. திசை சார்ந்து கணிப்பது திருக்கணிதம்.

வான மண்டலத்தில் உள்ள கிரகத்தின்  நிலையை ஒவ்வொரு நாளுக்கும் முன்கூட்டியே கணித்து வைப்பது தான் பஞ்சாங்கம். பூமியின் நிலையில் இருந்து

சந்திரன் எங்கே இருக்கிறது என கணிப்பதாக வைத்துக் கொள்வோம். பூமியின் விட்டத்திற்கும் சந்திரனின் விட்டத்தை கணக்கிட்டால் நீங்கள் வாக்கிய

பஞ்சாங்கம் செய்கிறீகள் என  அர்த்தம். பூமியில் சென்னையை / டெல்லியை மையமாக கொண்டு சந்திரன் எங்கே இருக்கிறது என கணித்தால் அது

திருக்கணிதம். ரேகாம்சம் / அட்சாம்சம் என்பவை திசை சார்ந்தது.

வாக்கியம் பொதுவாக கணிக்கப்பட்டதால் வாக்கிய கிரக மாற்றம் திருக்கணித கிரக மாற்றத்திற்கு சில நாள் வித்தியாசம் வரும். ஆனால் முற்றிலும் முரண்படாது. உதாரணமாக சனி வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் மேஷத்தில் இருக்கிறது என்றால், திருக்கணிதம் தனுசில் இருக்கிறது என சொல்ல மாட்டார்கள். இன்னும் துல்லியமாக மேஷத்தில் எங்கே இருக்கிறது உங்கள் ஊரின் அடிப்படையில் சொல்லுவார்கள்.

பொது நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உதாரணமாக கோவில் திருவிழா, ஊரில் பொதுவாக கட்டிடம் கட்ட ஆகியவைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்ய வேண்டும். தனிமனித நிகழ்வுகளுக்கு திருக்கணிதம் படி முடிவு செய்ய வேண்டும். நாம் எந்த ஊரில் வசிக்கிறோமே அதை பொருத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி விழாக்கள் கோவிலில் நடைபெறுவதால் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்வார்கள். ஏன் என்றால் இது அனைவருக்கும் பொழுதுவான நிகழ்வு.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் - திருத்தி அமைக்கபட்ட வாக்கியம் பஞ்சாங்கம் திருக்கணிதம். வாக்கிய பஞ்சாங்கம் என்றும் திருத்தி அமைக்கப்பட்டது இல்லை. ரிஷிகள் காலத்தில் இருந்தே அப்படி தான் இருக்கிறது. இது ஒன்றே போதும் இவரின் ஜோதிட தெளிவை அறிய.]

31. திருத்தப்பட்டது தானே செல்லும்? ஏன் வாக்கியம் இன்னும் நிலுவயில் இருக்கிறது?
திரு. பாண்டேயின் இந்த கேள்வி மிகச்சரியானது. மேலே நான் சொன்ன விளக்கம் பெற்றால், திரு.பாண்டே இந்த கேள்வி கேட்கமாட்டார். என்ன செய்ய, ஜோதிடத்தின் அடிப்படையான பஞ்சாங்கத்திலேயே குழப்பம் என்றால் திரு.பாண்டே என்ன செய்வார்?

31. ஜனவரி 8 முதல் தேர்தல் சூடு பிடிக்கும்? சரியா?

திரு.ஷெல்வி அவர்கள் -ராகு கேது பெயர்ச்சி அதனால் சூடு பிடிக்கும் என்கிறார். ராகு-கேது பெயர்ச்சி புத்தக விற்பனை வேண்டுமானால் சூடுபிடிக்கும்.

மார்ச் முதல் வாரம் சூடு பிடிக்கும் ஜனவரியில் ஒன்றும் பிடிக்காது. ராகு சிம்ம ராசியில் பிரவேசித்தவிடன் சூரியனின் நட்சத்திரத்தை கடக்கும் வரை தேர்தல் விஷயங்கள் நடைபெறாது. சுக்கிரன் நட்சத்திரத்திற்கு சென்றதும் நடைபெறும்.


32. அடுத்த முதல்வர் யார்? அதிமுக, திமுகா, மக்கள் நல கூட்டணி எது வெற்றி பேரும்?

என் குருஜி ஸ்வாமி ஓம்கார் 2015 அர்ஜண்டினா அதிபர் தேர்தல் பற்றி எழுதி இருந்தார். ஜோதிடத்தில் சொல்வது எளிது.வேறு ஊராக இருந்தால் ஜோதிடத்தில் தெரிந்து கொள்ள தலையை உடைத்துக்கொள்ளலாம். கடந்த 20 வருடங்கள் யார் ஆட்சி செய்கிறார்கள் என பாருங்கள். அடுத்த முதல்வர் யார் என கணித்து தெரிய வேண்டியது இல்லை.

33. எனது கேள்வி தனி நபர் பற்றி இல்லை. கட்சி யார் என கேட்கிறேன்.

கூட்டணியுடன் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதாவது தி.மு.க. என்கிற கட்சி. முதல்வர் யார் என நீங்கள் கேட்காததால் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

35. பேரிடர் தவிர்க்கனும்னா ப்ரார்த்தனை செய்யனும் சரியா?

ப்ரார்த்தனை எப்பொழுதும் செய்ய வேண்டும். பேரிடர் வந்தாலும் சரி பேரானந்தம் வந்தாலும் இறைவனை வணங்க வேண்டும். அதைத்தான் நம் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

-----------------------------------------------------------

இச்சமயத்தில் திரு. ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஜோதிடத்தை ஒரு பொருட்டாக எடுத்து அதை தொலைகாட்சி விவாதமாக்குவதை வரவேற்கிறேன். அதே சமயம் திரு.யதார்த்த ஜோதிடர் போன்ற ஜோதிடர்கள் பிரபலமடைவதற்கு மட்டும் இல்லாமல் பிறருக்கு சரியாக வழிகாட்டவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.  

Monday, May 31, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 3

கேள்வி : நீங்க பங்குசந்தையை பற்றி எழுதுவது விளம்பர நோக்கிலா? உங்களிடம் எல்லோரும் பங்கு சந்தை பற்றிய ஜோதிட தகவலை SMS மூலம் பெறும் நோக்கில் எழுதுகிறீர்களா?

பதில் : உண்மையை கூற வேண்டுமானால் - இல்லை. திருவண்ணாமலையை பற்றி எழுதினேன், காசியை பற்றி எழுதினேன் அந்த ஊர்களுக்கு நான் வழிகாட்டியா என கேட்பது போன்றது இது. பங்கு சந்தையை தினமும் கணித்து SMS மூலம் பலருக்கு அனுப்புகிறோம். விபரங்களுக்கு
vediceye.in. இங்களின் பங்கு சந்தை சேவையில் இதுவும் ஒன்று. இதற்கு கட்டணமும் உண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கிறோம். தற்சமயம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஏற்படுத்த முடியாத அளவுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.


கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடத்தில் கணிப்பது எதற்கு? ஜோதிடத்தை நிரூபணம் செய்யவா?

பதில் : சான்றோர்கள் கண்டறிந்த ஜோதிடத்தை யாரும் நிரூபணம் செய்ய வேண்டியது இல்லை. ஜோதிடம் தன்னை தானே நிரூபணம் செய்து கொள்ளும். நான் பங்குசந்தை ஜோதிடம் மூலம் முயலுவது எனது ஜோதிட ஆற்றலை எவ்வளை தூரம் செலுத்த முடியும் என என்னை நானே பரிசோதனை செய்யும் களம் தான்.

அதன் மூலம் சிலர் பயன்படுவதால் வெளிப்படையாக செய்கிறேன். எனது பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அது பங்குசந்தை போல வெளிப்படையாக பலரால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எனக்கு தெரியும்.

கேள்வி : சென்ற வாரம் நீங்கள் கூறிய பங்கு சந்தை கணிப்பு எப்படி இருந்தது? அதைபற்றி கூறுங்களேன்.

பதில் : முன்பு கூறியது போல 80% சரியாக அமைந்திருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை கணித்ததில் செவ்வாய் கிழமையும், புதன் முற்பகலும் தவறாக இருந்தது. மற்ற தினங்கள் சரியாக அமைந்தது. தினமும் எந்த பங்குகள் விலை ஏறும் என கூறியது மிகச்சரியாக வந்தது.

உதாரணத்திற்கு திங்கள் கிழமை எனது கணிப்பையும், சந்தையின் போக்கை பற்றிய வரைபடத்தையும் கீழே தருகிறேன்.


சந்தை ‘up' என குறிப்பிட்டது போல கிடக்கை மட்ட சிகப்பு கோட்டில் இருக்கும் சென்ற நாளின் அளவை விட மேலே இருப்பது காணலாம்.
அம்புஜா சிமெண்ட் பங்கு குறிப்பிட்டதை போல உயர்ந்து இருப்பதை காண முடியும்.

வரைபடம் nseindia.com என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய பங்கு சந்தையின் தின நடவடிக்கைகள் nseindia.com என்ற தளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் எனது கணிப்பை சரிபார்க்க முடியாமல் சிரமம் கொண்டார்கள் என கேள்விப்பட்டேன். இனி இந்த வலைதளம் பயன்படும். பல பதிவர்கள் மற்றும் பங்கு சந்தை சார்ந்தவர்கள் எங்களை தனிமடலில் பாராட்டினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.

கேள்வி : பங்கு சந்தையை எப்படி கணிப்பது? அதற்கான பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். விபரங்கள் கூறுங்களேன்.

பதில் : இந்த சுட்டியில் பாருங்கள் முழுமையான விபரம் கிடைக்கும். விபரம்

முழுமையாக ஜோதிடம் தெரியாதவர்களுக்கு கூட பங்குசந்தை கணிக்கும் அளவுக்கு அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொடுக்கிறோம். அதனால் அனைவரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கேள்வி : பங்கு சந்தை ஜோதிட பயிற்சிக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறதே?

பதில் : உண்மையில் இது அதிகம் இல்லை. சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழலில் பயிற்சி ஆகியவை கொடுப்பதற்கான கட்டணம். மேலும் நாங்கள் வழங்கும் கையேடு மற்றும் சான்றிதழ்கள் இக்கட்டணத்தில் அடங்கும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் ரூபாய் 6600 என்ற கட்டணம், படித்து முடித்த பிறகு உங்களின் ஒரு நாள் லாபம் என புரிந்திருக்கும்.

வருமானத்திற்கான கல்வி வருமானத்தை கொடுக்கும் முதலீடு என மறந்துவிடாதீகள்.

Friday, May 21, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 2

கேள்வி : பங்கு சந்தை என்பது அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை சார்ந்தது செயல்படும் ஒன்று. உதாரணமாக நானோ கார் ஒன்று தீப்பிடித்து விபத்து ஆனது என்றால் உடனடியாக டாடா மோட்டார் நிறுவன பங்குகள் விலை குறையும். பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் பங்கு சந்தை தடுமாற்றம் காணும். அப்படி இருக்க இவற்றை எல்லாம் ஜோதிடத்தில் கண்டு பங்கு சந்தையை நிர்ணயம் செய்ய முடியுமா?

பதில் : முடியும். உங்கள் பார்வை மிகவும் உலகியல் சார்ந்ததாக இருப்பதால் அவ்வாறு நினைக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு லாட்டரி தொழில் செய்யும் தொழில் அதிபர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்தார். இன்னும் ஆறு மாதங்களில் உங்களுக்கு தொழில் மாறும் என்றேன். தமிழகத்தில் பிரபல லாட்டரி அதிபரான அவர் என்னை கிண்டலாக பார்த்துவிட்டு சென்றான். பின்னர் அரசு ஆணையால் அவருக்கு தொழில் மாறியது என்பது உண்மை.

அரசு தடை செய்யப்போகிறது என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அரசு, உலக நிகழ்வு மற்றும் இயற்கை சீற்றங்களை கணிக்க ஜோதிடத்தில் வேறு தனி முறைகள் உண்டு. ஆனால் தனிநபர் ஜாதகத்தில் அவர் தொழில் மாறுவார் என சொல்லலாமே தவிர எப்படி என கூற முடியாது. அது போலவே இன்று வங்கி பங்குகள் உயர்வடையும், இன்று ஆட்டோமொபைல் பங்கு உயர்வடையும் என ஜோதிடத்தில் கூற முடியும் ஆனால் எதனால் உயர்கிறது என கூற இயலாது.

என்னிடம் காரணம் கேட்டால் சூரியன், குரு சேர்க்கையால் வங்கி பங்கும், சுக்கிரன் செவ்வாயால் ஆட்டோமொபைல் பங்கும் உயர்ந்தது என்பேன்.


கேள்வி : ஸ்ரீ திருஷ்டி என்பது என்ன? நீங்கள் கணித்து சொல்லுவீர்கள் அதன் படி நாங்கள் முதலீடு செய்ய வேண்டுமா? ஸ்ரீதிருஷ்டியில் மென்பொருட்கள் உண்டா?

பதில் : ஸ்ரீ திருஷ்டி என்பது ஒருவகை ஜோதிட ஆய்வு முறை. இம்முறை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையை கணிக்கலாம். நான் கணிக்கிறேன் என கூறுவதற்காக பங்கு சந்தை ஜோதிடத்தை கற்றுக்கொடுப்பதில்லை. சிந்திக்கும் அறிவு இருக்கும் யாவரும் எங்களிடம் கற்றுக்கொண்டு நீங்களாகவே கணிக்கவும், முதலீடும் செய்யலாம். கற்றுக்கொடுத்த பிறகு எனக்கோ உங்கள் முதலீடுக்கோ தொழிலுக்கோ சம்பந்தம் இல்லை.

ஸ்ரீதிருஷ்டி என்பது ஜோதிட சிந்தாந்தம் என்பதால் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் இருந்தால் நீங்களும் கணிக்கலாம். இது ஜோதிட கணிதம் செய்யும் கால விரயத்தை குறைக்கும். மற்றபடி மென்பொருள் பங்கு சந்தையை கணிக்காது.


கேள்வி : ஸ்வாமி, நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன். தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா? எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?

கரன்ஸி டிரேடிங் தாராளமாக பயன்படுத்த முடியும். மேலும் இந்தியாவில் இன்னும் கரன்ஸி டிரேடிங் முழுமையாக திறக்கப்படவில்லை. அவ்வாறு முழுமை பெற்றால் 80% கணிக்க முடியும்.

கேள்வி : என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? இதற்கு கட்டணம் உண்டா?

சமூக சேவை செய்ய முடியுமா? ஆன்மீக வழியில் செல்லுவேனா போன்ற பொது நல கேள்விகளுக்கு கட்டணம் இல்லாமல் வழிகாட்டுவேன். உங்கள் பொருளாதார உயர்வுக்காக கேட்கிறீர்கள் அதற்கு கட்டணம் இருக்கும். சேவை நோக்கமான கேள்விக்கு மட்டுமே இலவசம்.

கேள்வி : அடுத்த வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும் ?

24-05-2010 முதல் 28-05-2010 வரை உள்ள தேசிய சந்தை நிலவரம்(NIFTY) தினவாரியாக கணிக்கப்பட்டது.


இது மேலோட்டமான கணிதம் மட்டுமே. பங்கு சந்தை ஜோதிடம் கற்றால் இது ஆழமாக செயல்படுத்த முடியும். எனது ஜோதிட அறிவை சோதிக்கவே இங்கே கணிதம் செய்துள்ளேன். இதை கொண்டு யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட பலன் 75 முதல் 85% சரியாக இருக்கும்

கேள்வி :சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?

ஜூன் மாதத்தில் முதல் வாரம் அதிக தடுமாற்றத்துடன் காணப்படும். புள்ளிகள் 4900 முதல் 5190 வரை இருக்கும். 17 ஜூனுக்கு பிறகு சந்தை ஏற்றம் காணும்.

தேசிய பங்கு சந்தை குறைந்த புள்ளியாக 4780 புள்ளிகளும் அதிகபட்சம் 5380 புள்ளிகளும் பெறும்.
மே மாதத்தை விட வர்த்தகம் செய்ய நல்ல மாதமாக இருக்கும்.


Wednesday, May 19, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]

பங்கு சந்தை பற்றிய மினி தொடர் ஒன்று எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. எனது பணிச்சூழல் கருதி தற்சமயம் எழுத இயலவில்லை. ஆனால் பங்கு சந்தையும் ஜோதிடமும் எப்படி இணையும் என பலருக்கு பல்வேறு கேள்விகள் இருப்பதால் அவற்றை விளக்கும் பொருட்டே இந்த பதிவு. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [அ.கே.கே- Frequently asked questions] அதற்கான விளக்கமும் இதில் இடம் பெறும்.

1.கேள்வி : பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்லவா? அதை ஆன்மீக வழியில் இருக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளலாமா?

சூதாட்டம் என்றால் என்ன? உங்கள் மனம் யாரோ சொன்ன ஒரு விஷயத்தை கொண்டு கட்டமைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சூதாட்டத்தை ஒரு நாள் அனைவரும் புறக்கணித்தால் இந்திய நாடு என்ன ஆகும் தெரியுமா? வெளிப்படையான கணக்குகளுடன் தேர்ந்த பொருளாதார நிபுணர்கள் குழுவுடன் செயல்படும் பங்குசந்தை எப்படி சூதாட்டம் என கூறமுடியும்?

உற்பத்தி விலையை மறைத்து வியாபாரி மற்றொரு விலையில் பொருட்களை விற்கிறார். அவரிடம் உற்பத்தி விலையை கேட்டால் கூறமாட்டார். அவரை நாம் சூது கொண்டவர் என கூறி வியாபாரமே சூதாட்டம் தான் என கூற முடியுமா?

அரசால் அங்கீகாரம் செய்யபட்ட வெளிப்படையாக லாப நஷ்டங்கள் தெரியக்கூடிய விஷயங்கள் எதுவும் சூதாட்டம் ஆகாது. அதிர்ஷ்டம் என்ற தன்மையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விதியில் அடிப்படையில் இயங்கி வருமானம் பெருக்கும் விஷயங்கள் சூதாட்டம் ஆகாது.


முன் காலத்தில் உணவு என்பது மிகவும் அத்தியாவசிய விஷயமாக இருந்தது. உணவு கிடைக்காத மனிதனின் ஆன்மீக வளர்ச்சி தடை ஏற்பட்டது. அதனால் ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் தங்களின் சேவை மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என அன்னதானம் செய்தனர்.

வள்ளலார் இதில் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

ஆனால் தற்சமயம் இருக்கும் சமூக சூழல் உணவை தாண்டிய நுகர்பொருள் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவுடன் மனிதன் திருப்தி அடைவதில்லை. அதனால் தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி அளித்தாலும் தொலைக்காட்சி பெட்டியையும் இலவசமாக அளிக்கிறது. அரிசி, தொலைக்காட்சியுடன் தேவை நின்றுவிடுவதில்லையே..!

உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும். உங்களுக்கு உணவையும் பொருளையும் கொடுத்து சோம்பேறிகளாக்காமல் உங்களுக்கு அறிவை போதித்து அதன் மூலம் வாழ்க்கை வளத்தை பெருக்குவதே எனது நோக்கம்.

உங்களின் வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை தேடும் வழி உங்களுக்கு தெரிந்திருந்தால் என் உதவி உங்களுக்கு தேவை இல்லை.

மாறாக பொருளாதார தன்னிறைவு பெறாதவர்களாக இருந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


2.கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடம் மூலம் எப்படி கணிக்க இயலும்?

ஜோதிடம் என்பது அடுத்த வினாடி என்ன நிகழும் என கணிக்கும் கருவி. ஜோதிடம் எதிர்காலத்தை கணிக்கும் விஷயம் என்பதால் அடுத்த வினாடியும் எதிர்காலம் தானே? பல்வேறு ஜோதிட முறைகள்

இருந்தாலும் நாங்கள் பயன்படுத்தும் ஜோதிட முறை மிகவும் நுட்பமானது. நட்சத்திர ஜோதிடம் என அதற்கு பெயர்.

நாங்கள் பயன்படுத்தும் ஜோதிடத்தில் -
கிரிகெட்டில் எந்த அணி வெற்றி பெறும்,
எவ்வளவு ரன் எடுப்பார்கள்,
முதலில் எந்த அணி பேட் செய்வார்கள்,
தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்,
எம் எதிரில் இருக்கும் மனிதர் மனதில் இருக்கும் விஷயங்கள் என்ன,
கைத் தொலைபேசியில்

அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் போன்றவற்றை விஷயங்களை கணிக்க முடியும். அவ்வாறு இருக்கும் பொழுது மிக நுட்பமான பங்குசந்தையையும், அதைவிட மிகவும் சிக்கலான எந்த விஷயத்தையும் ஜோதிடத்தில் கையாளலாம்.

கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒருவித தாக்கத்தை மனித மனதில் ஏற்படுத்துகிறது. அதை பொருத்தே மனிதனின் முதலீடு செய்யும் அமைப்பு இருக்கிறது. முதலீடுகள் எப்படி அமையப்போகிறது என தெரிந்துகொண்டால் அதன் படி நாமும் முதலீடு செய்து லாபம் அடையலாம்.

3. தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் பலர் பங்கு சந்தை நிலவரம் கூறுகிறார்களே அதற்கும் ஜோதிட ரீதியாக சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் ?

பொருளாதார நிபுணர்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்திகள் (Technical analysis) கூறும் ஆய்வுகள் மற்றும் முந்தைய பங்குசந்தை வரலாறு அடிப்படையாக கொண்டது. மேலும் இத்தகைய செய்திகள் 30% அளவே வெற்றி வாய்ப்பு கொண்டது என தொழில் நுட்ப நிபுணர்களே கூறுகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் பங்கு சந்தையை கணிப்பது எளிது. படித்த சில நாட்களிலேயே உங்களால் 80% கணிக்க முடியும். உங்கள் மதி நுட்பத்தால் 80 சகவிகிதம் என்பதை மேலும் அதிகரிக்க முடியும். 80% சதவிகிதம் என்பது பல்வேறு தொழில்நுட்பவாதிகள், பங்கு வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் முன் நிரூபணம் செய்யப்பட்ட விஷயம்.

4.பங்கு சந்தையில் ஜோதிடத்தைக் கொண்டு எவற்றை எல்லாம் கணிக்கலாம்?

நிஃப்டி என்ற தேசிய பங்கு சந்தையின் போக்கை ஜோதிடம் மூலம் கணிக்கலாம். ஒரு நாளில் சந்தையின் நிலை துவங்கி ஒரு வருடத்திற்கு எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியும். ஈக்குவிடி மற்றும் டெரிவேட்டிவ் என்ற இரு பகுதியிலும் ஜோதிடத்தில் கணிக்க முடியும்.

கமாடிட்டி மற்றும் கரன்ஸி டிரேடிங் ஆகியவையும் கணிக்கலாம். ஆனால் இவை இரண்டும் முழுமையான சட்ட தெளிவுக்கு வரவில்லை என்பதால் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

5.ஜோதிடம் மூலம் கணிக்கும் பொழுது என் ஜாதகம் வேண்டுமா?

ஆம். உங்கள் ஜாதகம் இருந்தால் கூடுதல் செளவுகரியம் உண்டு. கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் பயன்படுத்தும் ஸ்ரீதிருஷ்டி என்ற பங்கு சந்தை ஜோதிட கோட்பாட்டில் மூன்று நிலைகள் உண்டு.

ஜோதிடம் மூலம் சந்தையை கணித்தல்.
ஜோதிடம் மூலம் தனிமனிதனின் எவ்வளவு லாபம் அடைவார் என நிர்ணயம் செய்யலாம்.
ஜோதிடம் மூலம் ஒருவர் எந்த பங்கு வங்கினால் லாபம் அடையலாம் என கூறமுடியும்.

இதனால் பெரிய லாபங்கள் ஈட்டவில்லை என்றாலும் ஏற்படும் நஷ்டத்தை முற்றிலும் தவிர்க்கலாம். உங்களுக்கு பிறப்பு ஜாதகம் இல்லை என்றாலும் ஆருட ஜாதகம் கணித்து அதே அளவுக்கு பயன்பெற முடியும்.

6.யார் எல்லாம் பங்கு சந்தை ஜோதிடம் பயிற்சி எடுக்கலாம்?

அடிப்படை பங்குசந்தை தெரிந்தவர்கள், இல்லத்தரசிகள், முழு நேரம் பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள். பங்கு வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் இதில் பயிற்சி செய்யலாம்.

ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. பயிற்சியில் பங்கு சந்தைக்கு தேவையான அளவு ஜோதிட விதிகளை கற்றுக்கொடுக்கிறோம். அதனால் ஜோதிடம் கற்றவர்கள், கல்லாதவர்கள் பேதம் இல்லை.

7. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை நிர்ணயித்தால் அனைவரும் லாபம் அடைந்துவிடுவார்களே?
உங்களிடம் பயின்றவர்கள் எல்லாம் அதிக லாபம் ஈட்டுகிறார்களா?

ஜோதிடத்தை பங்கு சந்தையில் பயன்படுத்தலாம் என பலருக்கு தெரியாது. 15 கோடிக்கும் மேல் இருக்கும் பங்கு வர்த்தகர்களில் ஆயிரம் பேர் ஜோதிடத்தை பயன்படுத்துகிறார்கள் என்றாலே அது அதிக எண்ணிக்கை.

நாங்கள் கற்றுத்தருவது அதிக லாபம் அடைய அல்ல. தெளிவாக லாபங்கள் அடையவும், நஷ்டத்தை தவிர்க்கவும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரீதிருஷ்டி என்ற எங்கள் ஜோதிட முறையில் சரியாக கையாண்டால் முதலீட்டை 10 முதல் 15 சதவீதம் ஒரு மாதத்தில் உயர்த்தலாம். ஆனால் அதிக ஆசையுடன் 50 முதல் 70 சதம் உயர்த்த எண்ணினால் வீழ்ச்சியே மிஞ்சும்.

நிதானமாக முதலீடு செய்து நிரந்தரமாக வருமானம் பார்க்க ஸ்ரீதிருஷ்டி முறை பயன்படும். பணம் இரட்டிப்பு ஆக்கும் முறை அல்ல இது.

என் மாணவர்களில் பலர் நிதானமாக வருமானம் சேர்க்கிறார்கள். நானும் அதன் அடிப்படையிலேயே இயங்குகிறேன்.

[தொடரும்]
----------------------------------------------------
இது போன்று கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள் அடுத்த பகுதியில் வெளிவரும்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்ற எனது கணிப்பு வெளிவரும்.

Wednesday, April 29, 2009

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்
- ஆயுள் தரும் வேதம்.

மனித குலம் தோன்றியதிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஒரு விஷயம் நோய்தடுப்பு. உடல் ஆரோக்கியம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். புதிய வியாதிகளுக்கு மருந்து கண்டறிந்ததும் , மேலும் பல புதிய வியாதிகள் தோன்றி சவாலாக இருப்பதையும், கண்கூடாக காண்கிறோம். மனிதன் ஆயுளை வளர்க்கும் எண்ணத்தில் களைப்படையாமல் தொடர்ந்து போராடி வருகிறான் என்பது உண்மை.

நவீன மருத்துவத்துறை தற்சமயத்தில் அறிவியல் சார்ந்து பல வளர்ச்சியை கண்டிருக்கிறது. மேலும் பல புதிய ஆராய்சிகள் நடை பெற்றுவருகிறது. நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளை காட்டிலும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அதிகம் எனலாம். மருத்துவதுறையின் சேவைகள் முடிவற்றது, வளர்ச்சி அடையக்கூடிய ஓர் துறை. மனிதனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மருத்துவத்தால் குணமாக்கும் மருத்துவர் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறார். மனித உடம்பை இயந்திரமாக பாவித்து வாகனத்தை பழுது பார்ப்பதைப் போல உதிரிபாகங்களை பழுது பார்க்கும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், எனினும் நல்லவர் ஒருவர் இருந்தாலும் உலகில் மழை பொழியும் எனும் சான்றோர் வாக்கினைப்போல பல மனித நேய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


நமது பாரத கலாச்சாரம் அனைத்து துறையிலும் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நிலையை அடைந்த பொற்காலம் உண்டு. இந்திய தேசத்தை காண வந்த வெளிநாட்டினர்களின் பயணக்குறிப்பை கண்டால் இந்தியாவின் உயர்வை உணர முடியும். 750 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பயணித்த பயணியின் குறிப்பேட்டில் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயம் இருந்தது. இந்தியாவில் சிலருக்கு நெற்றிப்பகுதியில் முக்கோணமாக தழும்பு இருப்பதைக் கண்டார்கள். அந்த காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மூக்கு பகுதியை துண்டிக்கச் செய்தார்கள். இதனால் மருத்துவர் புருவ மத்தியிலிருந்து தலைகீழாக முக்கோண வடிவில் தோலை எடுத்து மூக்கு பகுதியை உருவாகினார்கள்.

வெளிநாட்டினரின் பயணகுறிப்பில் எழுதப்பட்ட இந்த தகவல் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வித்தாக அமைந்தது. நமது வேதங்களின் பிற சேர்க்கையாக இருப்பது உப வேதங்கள் என்கிறோம். இதில் தர்ம சாஸ்திரம், தனுர் வேதம் [போர்கலை ] மற்றும் ஆயுர்வேதம் என பல உப பகுதிகள் உண்டு.


ஆயுர்வேதம் எனும் இந்த மருத்துவ பிரிவு, 100 பிரிவுகளையும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் கொண்டது. ஆயுளை கூட்டும் வேத மந்திரம் என்பதால் இதை ஆயுர்வேதம் என்கிறோம். சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.


இவர் பயன்படுத்திய கருவிகளை கண்டு தற்கால அறுவைசிகிச்சை மருத்துவர்கள் வியப்படைந்தார்கள், இவர் வழியில் வந்த மாணவர்கள் தான் வெளிநாட்டினர் கண்ட மூக்கு அறுவை சிகிச்சையை செய்தவர்கள். மேற்கண்ட ரிஷியிகளின் குறிப்பிலிருந்து நவீன மருத்துவர்கள் பல விஷயங்களை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். மருந்து தயாரித்தல், அறுவை சிகிச்சை வியாதியை ஆராய்தல் என ஆயுர்வேதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.


மனித உடல் மூன்று அம்சங்கள் கொண்டது என ஆயுர்வேதம் வரையறுக்கிறது. 'தோஷ தாது மல மூலம் ஹி சரீரம் ' என்பது ஆயுர்வேத கூற்று. மூன்று தோஷம், எழு தாதுக்கள், மும்மலங்கள் உடலை உருப்பெற செய்கிறது என்பதே இதன் விளக்கம்.


வாதம் - பித்தம் - கபம் என்பது மூன்று தோஷங்கள். இவை சம நிலை தவறும் பொழுது உடல் நோய் ஏற்படும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.


ரசா, இரத்தம், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்லம், சதை [மாமிசம்] என்பவை சப்த தாதுக்கள் எனவும், வியர்வை, மலம், சிறுநீர் என்பவை மும்மலம் எனவும் பிரிக்கப்படுகிறது. மூன்று தோஷத்தின் பாதிப்பு சப்த தாதுக்களிலும் ' மும்மலத்திலும் எதிரொலிக்கும் என்பது ஆயுர்வேத விளக்கம்.


இந்த தெய்வீக மருத்துவ முறை உப வேதத்தில் இருப்பதற்கு காரணம், மனித உடல் நோயினால் பாதிப்பு அடைவதற்கு கர்ம வினை காரணம் என உறுதியாக கூறுகிறது. வேதத்தின் சாரம் என அழைக்கப்படும் வேதாந்தங்களின் உண்மை இதில் பளிச்சிடுவதை நாம் உணர வேண்டும்.


சாத்வ, தமோ, ரஜோ குணங்கள் கொண்டு ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்கள் பிரிக்கப்படுகிறது. சாத்வ குணம் கொண்டது பித்தம், தமோ குணம் கொண்டது கபம், ரஜோ குணம் கொண்டது வாதம் என கூறலாம். இவை சம நிலையில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமும்,

சமநிலை தவறி எந்த தோசம் ஆளுமை செலுத்துகிறதோ அதன் அடிப்படையில் உடல் செயல் அமையும். உதாரணமாக கபம் அதிகரித்தவர்கள் தமோ குணத்திற்கு ஏற்ப மந்த தன்மையையும் செயலில் பின்னடைவும் ஏற்படுவதை உணரலாம்.

உடலின் விஞ்ஞானம் மட்டுமல்லாமல், சூழ்நிலையின் விஞ்ஞான உண்மைகளையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும், என்ன பொருளை உணவாக உட்கொண்டால் பருவ காலங்களில் உடல் ஆரோக்கியம் பெறலாம் என ஆயுர்வேதம் நீண்ட பட்டியலை தருகிறது.


வேதத்தின் அங்கம் ' வேதாங்கம்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேத பிரிவுகளும் [அங்கங்களும்] பிற அங்கங்களுடன் தொடர்புடையது. ஆயுர்வேதம் எனும் இந்த தெய்வீக மருத்துவ முறை, ஜோதிடம் எனும் மற்றொரு வேத அங்கத்துடன் இணைந்து சக்தி மிக்கதாக செயல்பட்டு வந்தது. தற்சமயத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஜோதிட அறிவுடன் செயல்படுவது குறைவே. கர்ம வினையை கருவாக கொண்ட இரு பரிமாணங்கள் தான் ஜோதிடமும், ஆயுர்வேதமும். ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவரின் நோய் தன்மையை ஆராய்ந்து மருத்துவம் செய்வதில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் ஒருவருக்கு குணமாகாது என ஜோதிடத்தில் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைபாடுடன் வந்தால், முதலில் அவர்களின் ஜாதகத்தை கொண்டு குழந்தை பாக்கியம் உண்டா என ஆராய்ந்த பின் மருந்து கொடுக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் செயல்முறை.


இந்த முறையில் செயல்படாத பட்சத்தில் மருத்துவருக்கும், ஆயுர்வேதத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதே இதற்கு பின்னால் உள்ள உண்மை.


ஜோதிடம், வேத கால மருத்துவ முறையில் சோதனை களமாக இருந்தது. தற்கால இரத்த பரிசோதனை, எக்ஸ் - ரே என்பதற்கு பதிலாக செலவில்லாத சோதனை களமாக பயன்பட்டது.





மும்மலங்கள், தோசங்கள் மற்றும் தாதுக்கள் இவை நவகிரகங்களின் தொடர்புடன் இயங்குகிறது. இதன் பட்டியல் பின்வருமாறு:


மூன்று தோசங்கள் மூலம் பிரிக்கப்படும் 27 நட்சத்திரங்கள்.


வாதம் : அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
பித்தம் : பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
கபம் : கிருத்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.

சப்த தாதுக்கள் குறிக்கும் கிரகங்கள்

ரசம் [உணவிலிருந்து ஜீரணிக்கப்பட்ட சத்து] : சூரியன்
இரத்தம் : செவ்வாய்
மாமிசம் [சதை] : குரு
கொழுப்பு : சந்திரன்
எலும்பு : சனி
எலும்பு மஜ்ஜை : சனி / புதன்
சுக்லம் : சுக்கிரன்

மும்மலங்கள் குறிக்கும் கிரகங்கள்

வியர்வை : சனி
சிறுநீர் : சந்திரன்
மலம் : செவ்வாய்

நோய் கொடுக்கும் 6 ஆம் பாவம் மேற்கண்ட நட்சத்திரங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது உடலில் நோய் உண்டாகிறது. இதை வைத்து நீங்களும் எளிதாக நோயை ஆராயலாம்.

ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் இணைத்து மருத்துவம் செய்பவர்கள் மிகவும் குறைவு. தற்காலத்தில் சிலர் ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் சாஸ்திரத்திற்கு புறம்பாகவே செயல்படுகிறார்கள். ஆயுர்வேதத்தை பொறுத்த வரை மருந்து தயாரிக்கும் கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்தும் சாதகமாக இருந்தால் தான் மருந்து தயாரிக்க வேண்டும். நோயாளியின் ஜென்ம நட்சத்திரத்திற்கு வேதை நட்சத்திரத்திலோ, வேதை திதியிலோ மருந்து உட்கொள்ள துவங்கக் கூடாதுஎன ஆயுர்வேதம் விளக்குகிறது.

ஆனால் தற்சமயம் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் போன்று மருந்தை தயாரித்து சேமித்து வைக்கிறார்கள். மேலும் நோயளியின் நட்சத்திரத்தை பார்த்து மருந்து உட்கொள்ள சொல்லுவதில்லை. இதனால் ஆயுர்வேத மருத்துவத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவருகிறது. ப்ரணவ பீடம் சார்பில் ஜோதிடமும், ஆயுர்வேதம் இணைந்த பயிற்சியும் கொடுக்கும் எண்ணம் உள்ளது. பரப்பிரம்மத்தின் கருணையால் அது நடைபெறும் என நம்புவோமாக.


மார்ச் 2007

Wednesday, February 11, 2009

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்குமா?


சிறப்பான திறமையை கொண்டவர்களை பாரதம் எப்பொழுதும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் திறமையை பாராட்டும் அனைத்து துறையிலும் இவர்கள் ஒருவரேனும் இருப்பார்கள். நோபல் பரிசு முதல் ஆஸ்கார் வரை எந்த பட்டியல் எடுத்தலும் அதில் நம்மவர்கள் இடம் பிடிக்க தவறுவதில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு பாரதத்தின் மேல் ஓர் அபிமானம் வர இதுவும் ஓர் காரணம் என சொல்லலாம். ராமன் விளைவோ ரஹமான் விளைவோ அவர்களுக்கு வித்தியாசம் இல்லை காரணம் அவர்கள் சிறப்பானவற்றை ரசிக்க தவறுவதில்லை.

திறமைசாலிகளுக்கு பணமோ புகழோ நோக்கமல்ல. மக்கள் தங்களை ரசிக்கிறார்கள் என்பதை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒரு திறமைசாலிக்கு உலகின் உயர்விருதை கொடுத்துவிட்டு மக்கள் உங்களை ரசிக்கவில்லை என சொன்னால், அதைவிட துன்பம் அவருக்கு இல்லை என சொல்லாம். மாற்றாக.. விருதுகள் கொடுக்கப்படாமல் இருந்தாலும் மக்களின் உயிரில் கலந்திருந்தால் திறமைசாலிகளுக்கு தினமும் விருதுகள் கிடைத்த மகிழ்ச்சி உண்டாகும்.

சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்பவர் திறமையான நாடகங்களை நடத்தி மக்களின் மனதில் நின்றவர். நாடக உலகின் தந்தை என போற்றப்பட்டவர். அவருக்கு உலகின் எந்த உயர்விருதும் கிடைக்கவில்லை. அவரின் திறமையால் தமிழகம் இன்னும் திறமையான திரை துறை சார்ந்தவர்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் திரையுலகில் யாருக்கு விருது கிடைத்தாலும் சங்கரதாஸருக்கு கிடைத்து என்றே சொல்லவேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சிலர் விருது பெற்று புகழ் அடைகிறார்கள். சிலரால் விருதுகள் புகழடைகிறது.

ஆஸ்கார் பரிசு எனும் அகாடமி அவார்டுகள் ஒருவரின் திறமைக்காக கொடுக்கப்படும் பரிசாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் உலக மக்கள் கவனத்திற்கு ஓர் திறமையாளர் வருகிறார் என்றால் ஆஸ்கார் தேவைப்படுகிறது என சொல்லலாம். முன்பு சொன்னது போல ஆஸ்காருக்கு புகழ் சேர்க்க திரு ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு பரிந்துரைகள் உள்ளன. இந்த சூழலில் அவரின் பிறப்பு ஜாதகத்தை ஆராயவேண்டும் என தோன்றியது.


ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நேர தகவல்கள் தெளிவற்ற நிலையில் இருந்ததால் பல ஜோதிட முறைகளின் துணைகொண்டு அவரின் ஜாதகத்தை உருவாக்கி உள்ளேன். இவரின் ஜாதகம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

பெயர் : ஏ ஆர் ரஹ்மான்
தேதி : 6-ஜனவரி-1966
நேரம் : 18:42 ISD
இடம் : சென்னை



கடக லக்னத்தில் பிறந்திருக்கிறார்.ஒருவர் கலைத்துறையில் புகழ் பெற 3,5 மற்றும் 11ஆம் வீடுகள் தொடர்பு தேவை. அதன் படி 5ஆம் மற்றும் 10ஆம் வீட்டுக்கு உண்டான செவ்வாய் 7ஆம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார்.

லக்னாதிபதி சந்திரன் 12ஆம் பாவகத்தில் இருப்பதும் சனிக்கு திரிகோணத்தில் இருப்பதாலும் அவரின் இயற்ப்பெயரை மாற்றும் சூழல் ஏற்பட்டது. மேலோட்டமாக ஜோதிடத்தை அறிந்தவர்கள் இவரின் ஜாதகத்தை பார்த்தால், பல தோஷங்கள் இருப்பதாக சொல்லி வாதிடுவார்க்ள். உண்மையில் நட்சத்திர நிலை வைத்து ஆராய்ந்தோமானால் அனைத்து கிரகங்களும் மேன்மையை கொடுக்கிறது.

நடப்பு தசா நாதன் சனி 1991 முதல் இவருக்கு சிறப்பான மேம்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். சனி தசா 2010 மார்ச் மாதம் வரை இருக்கிறது. சனிதசா நடந்தால் அலறி ஓடும் கனவான்களே பாருங்கள் இவரை. ஒளவை சொன்னது போல இளமையில் வறுமை கண்டவருக்கு செல்வ வருமையை கொடுத்தது சனி தசா காலமே.

சனிதசா கலத்திற்கு பிறகு வரும் புதன் தசா காலம் இவரின் புகழை மேலும் ஓங்கச் செய்யும். புதன் தசா காலத்தில் சனிதசாவில் சாதித்ததெல்லாம் எள் அளவே என சொல்லுவார்கள்.


ஆஸ்கார் கிடைக்குமா?

பிப்ரவரி 22ஆம் தேதி ஆஸ்கார் விருதுகள் வெளியிடப்படுகிறது. இவர் பெயர் இரண்டு நிலைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் ஜாதக ரீதியாக சனிதசா, குரு புக்தி மற்றும் சுக்கிரன் அந்திர காலம் நடைபெறுகிறது. சனி,குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இவருக்கு சாதக பலனை தரும் அமைப்பில் இருக்கிறது. கோச்சார கிரகங்கள் சிறிது சாதகமற்று இருப்பதால் அவருக்கு முழுமையான மேன்மை கிடைக்காது என சொல்லலாம். கிடைக்க வேண்டிய இரண்டில் ஒரு விருது கிடைக்க வாய்ப்புண்டு. முடிவாக சொல்லவேண்டுமானால் ஆஸ்கார் இவருக்கு கிடைத்து ஆஸ்கார் விருது புகழ்பெறும்.

ஜோதிட ரீதியாக ஆய்வு தேவையா?

ஆஸ்கார் விருது பலமுறை முயற்சி செய்து கிடைக்காதவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு பல அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒருவருக்கு கிரக பலன் இல்லையென்றால் கிடைப்பது சிரமமாகி விடுகிறது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?


ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்..