Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 31, 2009

யந்திர சக்தி - நிறைவு பகுதி

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

முக்கோணம் :

சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் என அறிந்துகொண்டோம். அப்பரம் பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.

மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.

இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.

இணைந்த முக்கோணங்கள் ஆக்க சக்தியின் வடிவங்கள். இவ்வகை யந்திரம் தென்பகுதி இந்தியாவில் ஸுப்ரமண்ய கடவுளின் வடிவமாக வணங்கப்படுகிறது. இப்பொழுது 'சரவணபவ' என மூல மந்திரம் எழுதிய சரவண யந்திரம் உங்கள் நினைவில் நிழலாடும் என நினைக்கிறேன். ஸுப்ரமண்யர் கார்த்திகை நட்சத்திரப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் நட்சத்திர வடிவம் எடுத்தவர் என புராணம் சொல்லும் காரணம் யந்திர சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டது.

யந்திர விதிகள் சாதாரண கோடுகளுக்கும், சதுரத்திற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. முடிவு பெற்ற வடிவங்களை ஆன்மா உணர்வதில்லை. சதுரத்தில் உள்ள நான்கு கோணங்களும் ஆன்மாவின் தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. சதுரம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சதுரத்தின் பக்கங்களை திறந்த வடிவில் ஆற்றலை வெளிவிடுமாறு அமைக்கிறார்கள்.


வரிவடிவில் உள்ள வட்டமும் முக்கோணமும் என்ன தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ? உண்மையில் இவை குறிப்பது என்ன? என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.


ஓர் சக்தி கேந்திரத்தின் வடிவமே யந்திரங்கள். உதாரணமாக ஓர் மோட்டார் இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். பல இடங்களில் இந்த மோட்டார் பேருதவி செய்து வருகிறது. வாகன இயக்கம், நீர்ஏற்றம் மற்றும் விசைத்தறி என பல துறைகளில் வேகப்படுத்தவும் நேரத்தை குறைக்கவும் மின்சார மோட்டார் பயன்படுகிறது.
இத்தகைய மோட்டாரின் அமைப்பு சக்தியின் அடையாளம். பொறியியல் துறையில் இதை வடிவமைக்கும் பொழுது பல கோணங்களில் மோட்டாரின் அமைப்பை வரைந்து கொள்வார்கள். இரண்டாக பிளந்த [ section drawing ] முறையில் பார்த்தால் மின்சாரமோட்டார் யந்திரம் போல காட்சியளிக்கும்.


இதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் கூறலாம். ஓர் ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது வாழ்வில் பல தருணங்களில் இது பயன்படுகிறது. ஒரு நீளமான ஆணியின் தலைப்பகுதி கீழே இருக்குமாறு வைத்து கீழ்பகுதியை உங்கள் கண்ணுக்கு நேராக வைத்துப் பாருங்கள். ஒரு வட்டத்தின் மையத்தில் நட்சத்திரம் இருப்பது போல தோன்றும். யந்திரத்தின் தத்துவமும் இதுவே. முப்பரிமாணமாக உள்ள விஷயத்தை வரி வடிவில் இரு பரிமாண பிம்பங்களால் நமது உள்நிலை முப்பரிமாணமாக அதை உணரும்.


ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் என பல சக்தி யந்திரங்கள் உண்டு. நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் [ Top view ] பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.


வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.


யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். உண்மையில் யந்திரம் வரைவதும், பயன்படுத்துவதற்க்கும் பல நெறிமுறைகள் உண்டு.


யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.


கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.


யந்திரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெறும் படம் போல சட்டத்தில் தொங்கவிடுதல் கூடாது யந்திர அமைப்பை முழுமையாக தியானிக்க வேண்டும். எனது யோகப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யந்திர தியானம் கற்றுக்கொடுப்பதுண்டு. இவர்கள் யந்திரத்தை பயன்படுத்தும் விதம் தெளிவாக தெரிந்துகொள்வார்கள்.


இதை பயிற்சி பெற்றவர்கள் செயல், சிந்திக்கும் திறன் மற்றும் வாழ்வியல் நிலையில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். யந்திர தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல, அனைத்தையும் பட்டியலிட முடியாது. யந்திர தியானம் ஏற்படுத்தும் மாற்றம் பட்டியலுக்கு அப்பாற்பட்டது. உடலில் உள்ள ப்ராண சக்திகளின் ஏற்றத்தாழ்வை பொறுத்து நமது சுக துக்கங்கள் அமைகிறது. கல்வி, பொருளாதார உயர்வு, திருமண வாழ்க்கை, உடல் நோய் என வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் சிறந்த நிலையில் அமைய யந்திரத்தை பயன்டுத்தலாம். வாழ்க்கை சம்பவத்தைக் காட்டிலும் ஆன்ம உணர்வுக்கும், ஞான முதிற்சிக்கும் யந்திரயோகம் எனும் தியான பயிற்சி மிகவும் உறுதுணையானது.

Monday, March 30, 2009

யந்திர சக்தி - பகுதி 2

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

யந்திரங்கள் அதிக அளவில் வட்டங்களை அடித்தளமாக கொண்டது. முக்கோணங்கள், கோடுகள் குறைந்த அளவே பயன்பட்டாலும் அவற்றின் உபயோகம் மிக முக்கியமானது. வரைகலை வடிவங்கள் இயற்கையிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம்.

யந்திரங்கள் என்பது ஏதோ ஒரு மந்திரவாதி படிக்கவேண்டிய விஷயம் நாம் ஏன் இதை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.


ஒரு குறிப்பிட்ட வரிவடிவத்தை பார்த்ததும் நமது மூளையின் ஞாபக அடுக்குகளில் ஒரு சலனம் ஏற்படுகிறது. உள்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த வரிவடிவமே யந்திரம் என்கிறோம்.

உண்மையில் யந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுதினமும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. எந்திரத்தின் எளிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனம் அல்லது அரசு சார்ந்த அமைப்பின் சின்னம் (logos) நவீன கால யந்திரமாகும். அசோக சக்ரம் தாங்கிய சிங்க வடிவங்கள் பார்த்ததும் உங்களுக்கு இந்திய அரசின் ஞாபகம் வருகிறது அல்லவா?

யந்திரங்கள் மொழி,மதம் என அனைத்தும் கடந்த ஒரு மெய்ஞானம். வாகனத்தில் பயணமாகி கொண்டிருக்கிறீர்கள். வழியில் இந்த சின்னத்தை பார்க்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? இதில் மொழி மதம் எனும் அடையாளம் ஏதேனும் உண்டா? அது போல யந்திரங்கள் வரிவடிவில் ஒரு தனியொரு உயிரை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்.

வட்ட வடிவம் :

வட்டம் என்பது சாதாரணமாக ஒரு வரிவடிவமாக நினைத்துவிட கூடாது. பிரபஞ்சத்தின் அனைத்து பொருளுக்கும் வட்டமே ஆதாரம். இயற்கையில் எந்த ஒரு வஸ்து உண்டானாலும் அது வட்டத்தின் அடிப்படையில் அமையும்.

இந்த அண்டத்தின் வடிவம் வட்டம், பிரபஞ்சத்தின் இந்த வடிவத்திலிருந்து தோன்றும் அனைத்தும் அவ்வடிவத்தையே மூலமாக கொண்டுள்ளது. அண்டத்தின் வடிவமே அதன் பிண்டங்களில் பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் வட்டத்தின் முழு வடிவமான கோள வடிவத்தை கொண்டது. சூரியனும், சந்திரனும் மற்றும் பிற கிரகங்களும் வட்ட வடிவங்கள். அதன் சுற்றும் பாதைகளும் வட்ட வடிவமானது. பூமியில் தோன்றும் இயற்கையான முத்து, கற்கள் மற்றும் நீர்துளி அனைத்தும் கோள வடிவத்தை கொண்டது.

உயிர் பிறக்க சூல்வடிவம் எடுக்கும் கரு வட்ட வடிவத்தை எடுத்த பிறகே உருபெறுகிறது. அணுவும் அணுக்கருவும் வட்டத்தை அடிப்படையாக கொண்டது. சக்தியும் அதிர்வும் பரவுகின்ற வடிவம் வட்ட வடிவமாக கொண்டு விரிவடையும். நீரில் ஒரு கல்லை வீசும் பொழுது அதில் ஏற்படும் வட்டத்தை கவனித்தால் அந்த சக்தி அதிர்வு எத்தகையது என உணரலாம். இயற்கை வடிவான லிங்கமும் ஆவுடையாரும் தெய்வீகத்தை உணர்த்தும் வட்ட வடிவங்கள்.


இயல்பாகவே நமது ஆன்மாவுக்கு வட்ட வடிவில் ஓர் ஈர்ப்பு உண்டு. குழந்தை மாயையால் பீடிக்கப்படாமல் ஆன்மாவினால் இயங்கும் தன்மை கொண்டது. சதுர வடிவத்திலும், வட்ட வடிவத்திலும் ஆன இரு பொருட்களை குழந்தையின் முன் வைத்துவிட்டு கவனியுங்கள். அந்த குழந்தை முதலில் வட்ட வடிவ பொருளை எடுத்து விளையாட துவங்கும். பிற பொருள்களை காட்டிலும் பந்து வைத்து விளையாடுவதை குழந்தைகள் பெரிதும் விரும்புவதை அனைவரும் அறிவோம். எனவே ஆன்மாவால் ஈர்க்கப்படும் வட்ட வடிவம் யந்திர வடிவங்களில் முதன்மையாகின்றது. நடைமுறை வாழ்க்கையில் இந்த வட்ட வடிவம் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குகிறது.

பிரபலமான சில நிறுவனங்களின் சின்னங்களை [ Logos ] கவனித்தால் அந்த சின்னங்களில் வட்ட வடிவம் பிரதானமாக இருக்கும். அந்த அடையாளமாக சின்னத்தை பார்த்தாலே அந்த நிறுவனத்தை பற்றிய எண்ணங்கள் மனதில் வெளிப்படும். எனக்கு தெரிந்த வகையில் சில உலக நிறுவனங்களின் சின்னம் யந்திர கோட்பாடுகளை போன்று உள்ளது. அந்த நிறுவனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தமைக்கு அந்த கோட்பாடும் ஒரு முக்கிய காரணம். உங்களுக்கு தெரிந்த ஐந்து பிரபல நிறுவனங்களை பட்டியலிடுங்கள். அதில் நான்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வட்டவடிவத்தை அடிப்படையாக கொண்ட சின்னங்களை வைத்திருப்பார்கள். காரணம் உங்கள் ஆன்மா வட்டவடிவத்தை கண்டால் ஈர்க்கப்படுகிறது.

உங்கள் பார்வைக்கு சில நிறுவனங்களின் சின்னத்தை கொடுக்கிறேன்மேற்கண்ட சின்னங்களை பார்த்ததும் உங்களுக்கு அந்த நிறுவனம் ஞாபகம் வந்துவிடுகிறது அல்லவா? .
இது தான் வட்ட வடிவ யந்திரத்தின் வெற்றி .

வட்ட வடிவத்திற்கும் இறைதன்மைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நிலைத்தன்மை, முழுமை, ஆரம்பம் முடிவு அற்ற நிலை, மையத்தை கொண்டு விரிவடைதல், மையத்தில் ஒடுங்குதல், பிற வடிவங்களுக்கு மூல காரணமாக இருத்தல் என வட்ட வடிவத்தையும் பரம்பொருளையும் தொடர்பு படுத்தும் இலக்கணங்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டது. இதன் மூலம் வட்டவடிவம் என்பது இறைத்தன்மையின் முழுமையான வரி வடிவம் என்பதை உணரலாம்.

எனது பணியில் ஒன்றாக சில ஆண்டுகளாக மந்திர சாஸ்திர முறையில் நிறுவனங்களுக்கு பெயரையும், யந்திர சாஸ்த்திர முறையில் சின்னம் அமைத்து கொடுப்பதுண்டு. சாஸ்த்திரம் அறிந்து இப்பணிகளை செய்தால் சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் நன்மை ஏற்படும்.


அடுத்த பகுதியில் முக்கோணம் ..


Saturday, March 28, 2009

சக வலைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்

சக வலைப்பதிவாளர்களுக்கு,

சமூக ரீதியாக பல கருத்துக்களை வெளிப்படுத்தியும், உங்கள் எழுத்தாற்றல் மூலமாக சமூக கருத்துக்களை கூறும் வலைபதிவாளர்களா நீங்கள்?

எங்கள் சமூக பணியில் கலந்து கைகோர்க்க விருப்பமா?

ஆன்மீக விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கில் ப்ரணவ பீடம் எனும் அமைப்பை தோற்றுவித்து செயல்பட்டுவருகிறோம். அதன் செயல் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கில் பல பொது நிகழ்ச்சிகள் செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி (சித்திரை 1ஆம் தேதி) கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சி ஐந்தாவது ஆண்டாக இந்த வருடம் கோவை - சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது.

ஜோதிட உற்சவம் எனும் தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக மற்றும் சாஸ்திர விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இந்நாளை பயன்படுத்தி நமது கோவையை சேர்ந்த வலைபதிவாளர்களை சந்திக்கும் சூழலை ஏற்படுத்தலாம் எனும் எண்ணம் உண்டு.


நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக ”ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையா -விஞ்ஞானமா?” எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. சமூக அக்க்றை கொண்ட உங்களை போன்ற வலைபதிவாளர்கள் இதில் பங்கு கொண்டு உரையாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

மேலும் அன்று ஒரு வலைபதிவு சார்ந்த ஒரு கருத்தாய்வை தனி சூழலில் கலந்துரையாடவும் விருப்பம் உண்டு.

கோவையை சார்ந்த வலைபதிவாளர்கள் மட்டுமல்ல அனைவரும் இதில் வரவேற்கப்படுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களையும் வருகையையும் எனது மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறவும்.

தியானிக்கும்

ஸ்வாமி ஓம்கார்

டிஸ்கி : திரு பரிசல்காரன், திரு சுப்பையா போன்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளேன். பிற பதிவர்களின் மின்னஞ்சல் தெரியவில்லை, இந்த பதிவை பொதுவான வெளியீடாக கருத்தாமல் தனி விண்ணப்பமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Friday, March 27, 2009

யந்திர சக்தி

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

பிரபஞ்ச சக்தி அனைத்து பொருளிலும் வெளிப்படுகிறது. இந்த பிரபஞ்ச சக்தி இல்லாத இடமே இல்லை என கூறலாம். சக்தி நிலையை மெய்ஞானத்தால் உணர்ந்தவர்கள் "சர்வம் சக்தி மயம் " என கூறினார்கள். சக்தி இல்லாத இடமே இல்லை என்பதை தாண்டி இந்த கூற்றில் பல அர்த்தங்கள் நிறைந்துள்ளது.

ஆற்றல் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. கிரக ஆற்றல், நட்சத்திர ஆற்றல் என்பவை ஆற்றலின் சில வடிவங்கள் ஆகும். கிரக
ஆற்றலை கொண்டு மனிதன் பல விஷயங்களை செய்தான். ஆற்றலை உணர்ந்ததன் மூலம் சாஸ்திரங்கள் அவனின் உள்ளங்கையில் வசப்பட்டது.

வேதகால மனிதன் சக்தி வடிவங்களாக அனைத்தையும் கண்டுணர்ந்த பிறகு சக்தி மூலங்களை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டான்.
இந்த முயற்சியிலும் விரைவிலேயே வெற்றி கண்டான். ஆற்றலின் மூலம் எது, எங்கிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. என சக்தியின் உள்கருவை மெய்ஞான வடிவில் உணர்ந்தனர். ஆற்றல் வெளிப்படுவது நிரந்தரமற்றது. மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். ஆற்றல் அழிவதில்லை. ஆற்றலின் செயலும் அதன் மூலமும் மாற்றம் அடைவது இயல்பு.

பேராற்றல் மாற்றம் அடைவதையும் பல சக்தி ரகசியங்களைக் கண்டு உணர்ந்த வேத கால மனிதன் ரிஷி என அழைக்கப்பட்டான். ரிஷி
என்னும் சொல்லுக்கு "கண்டுணர்ந்தவன்" என பொருள் கூறலாம். ரிஷிகள் மூலத்தையும் சக்தி மாற்றத்தையும் உணர்ந்து கொண்ட பின்பு சக்தியை நிலைப்படுத்தும் நிலையான யுக்தியை வகைப்படுத்தினார்கள். சக்தியை மாற்றம் அடையாமல் நிலையான செயலுக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையான சக்திமையங்கள் " சக்தி கேந்திரம்" என அழைக்க்கப்பட்டது. ரிஷிகளால் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டாலும், சக்தி கேந்திரங்கள் இயற்கை தன்மையிலிருந்து எடுக்கப்பட்டது.
மலை முகடுகள், அருவிகள் மற்றும் குகைகள் அனைத்தும் இயற்கையின் எளிய ஆற்றல் மையங்கள்
ஆகும். தெய்வீக வாழ்வில் ஈடுபடாதவர்கள் கூட மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் பொழுது உள்நிலையில் மாற்றம் அடைவார்கள். இயற்கையான சக்தி கேந்திரங்கள் அனைத்து இடத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாக ரிஷிகள் சக்தி கேந்திரத்தை செயற்கை முறையில் உருவாக்கி தாங்கள் செல்லும் இடமெல்லாம் கொண்டு சென்றனர். இந்த சக்தி கேந்திரங்களே யந்திரம் என ரிஷிகளால் அழைக்கப்பட்டது.

நவீன காலத்தில் யந்திரம் எனும் சொல்லுக்கு தவறான அர்த்தமே கற்பிக்கப்படுகிறது. யந்திரம் என்பது ஆற்றல் செயல்வடிவில்
இல்லாமல் வரிவடிவில் அமைக்கப்பட்டது. இந்த யந்திர சாஸ்திரத்தை எளிய உதாரணம் மூலம் விளக்கலாம். நாம் வாழும் நகரத்தின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு முக்கிய வீதிகள் மற்றும் இடங்களை காண்கின்றோம். அந்த சமயம் நமது எண்ணங்களில் முக்கிய வீதிகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி விரிந்துகொண்டே இருக்கும். உண்மையில் நாம் அந்த வீதிகளில் சென்ற உணர்வை கொடுக்கும். யந்திரமும் இது போன்றே செயல்படுகிறது. ஒருமுறை யந்திரத்தை பார்த்தவுடன் உங்கள் உள்நிலையில் சிறு மாற்றத்தை அது ஏற்படுத்துகிறது.

வீடுகட்டுவதற்கு முன்பு அதற்கு உண்டான திட்டத்தை வரைபடமாக உருவாக்குகிறோம். அந்தவரைபடத்தை பார்க்கும் பொழுது நமக்கு
காகிதமோ, கோடுகளோ தெரிவதில்லை. அவை மனதில் கட்டிடத்தின் தோற்றத்தை உருவாக்குகின்றது. வரைகலை வடிவில் உருவாக்கப்பட்ட வடிவங்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். நடைமுறை வாழ்க்கை உதாரணம் ஓரளவே யந்திர சக்தியை விவரிக்கும். யந்திரத்தால் உருவாக்கப்படும் மாற்றம் மனதின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சக்தியூட்டப்பட்ட எந்திரம் மனதை தாண்டி உங்கள் ஆன்மாவில் வேலை செய்யும்.

கம்யூட்டர் யுகத்தில் யந்திரம் வேலை செய்யுமா? என தோன்றலாம். சரியான முறையில் யந்திரம் அமைத்து அதில் சக்தியூட்ட தெரிந்தவர்கள் இருந்தால் தாராளமாக வேலை செய்யும். உங்கள் அலைபேசியில் இருக்கும் சிம் கார்டு அல்லது கம்யூட்டரில் இருக்கும் PCB வடிவ தகடுகளில் இருக்கும் வடிவம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? ஆனாலும் அது வேலை செய்கிறது தானே? அது போலத்தான் யந்திரங்களும்.

கம்யூட்டர் சில்லை
சரியான பொறியியலாளரிடம் கொடுத்தால் அவர் இயங்க வைப்பார். அதை விடுத்து அந்த மின்னனு வரை படத்தை கழுத்தில் தொங்க விட்டால் வேலை செய்யுமா?

திடீரென உலகம் அழிந்துவிட்டதாக வையுங்கள், எஞ்சிய பொருளில் அலைபேசியின் சிம்கார்டு மட்டும் எஞ்சி நிற்கிறது. நினைத்து பாருங்கள் அலைபேசி கிடையாது, அதை ஒலிபரப்பும் கோபுரம் இல்லை, அலைபேசியை நிர்வாகிக்கும் நிறுவனம் இல்லை. ஆனால் சிம்கார்டு மட்டும் உண்டு. மனித சமுதாயம் மீண்டும் உருவானதும் அவர்களிடம் இது கிடைத்தால் என்ன செய்வார்கள்? மிக எளிமையாக பதில் சொல்லிவிடலாம் சிலர் யந்திரங்களை இப்பொழுது எப்படி பயன்படுத்துகிறார்களோ அது போல சிம்கார்டில் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது போல நாமும் நமது நாகரீகத்தை தொலைத்து கைகளில் வெறும் தகடுகளுடன் திரிகிறோம்.

யந்திரங்கள் என்பது இயங்கு சக்தி கொண்ட சாதனம். இந்த சொல்லின் தமிழ் வடிவமே இயந்திரம் (பொறி) என்கிறோம். இயங்கும் சாதனமே யந்திரம் எனும் பொழுது யந்திரங்கள் இயங்கி பார்த்திருக்கிறீர்களா? தற்கால அறிவியல் தானியங்கி இயந்திரங்களை வடிவமைக்கிறது. உண்மையில் யந்திரங்கள் சக்தியூட்டப்பட்டால் தானியங்கி மற்றவைகளையும் இயக்குகிறது.யந்திரத்தை கவனித்தோம் எனில் பல கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் அதில் காண முடியும்.

ஏன் அவ்வாறு இருக்கிறது என அடுத்த பகுதியில் காண்போம்.

Wednesday, March 25, 2009

பழைய பஞ்சாங்கம் 25 - மார்ச் - 2009

சரஸ்வதியும் டாய்லெட் பேப்பரும்

கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து ஒரு மாணவர் நமது சாஸ்திரங்களை கற்றுகொள்ள வந்திருந்தார். பிறந்தது முதல் அமெரிக்காவை விட்டு எங்கும் சென்றதில்லை அவர். முதல் வெளிநாட்டு பயணமாக நேரடியாக தமிழகம் வந்தார் அவர்.

நமது ஒவ்வொரு செயலும் அவருக்கு வியப்பாக இருந்தது. பாடங்கள் கற்றுகொள்ளுவது போக மீதி நேரத்தில் “அது என்ன இது என்ன?” என என்னை
தொடர்ந்து கேட்டு குறிப்பு எடுத்தவண்ணம் இருந்தார்.

ஒரு நாள் வகுப்புக்கு இடையே எனது உதவியாளரிடம் சில பணிகளை சொல்லும் பொழுது , அவர் தவறுதலாக கீழே கிடந்த ஒரு பத்திகையில் கால்களை வைத்தவண்ணம் இருந்த்தார். உணர்வில்லாமல் ஒரு பத்திரிகையில் கால்களை வைத்து நிற்பதை நான் கண்டிக்க, உதவியாளர் பத்திரிகையை எடுத்து வைக்கும் முன் கண்களில் ஒற்றி பின்பு மேலே வைத்தார்.

எனது மாணவர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றார். நானோ “எழுது பொருட்களில் கல்வி கடவுள் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள் அதனால் தான் என்றேன்”. மேலும் சரஸ்வதி தேவியின் புகைப்படத்தை காட்டி, எளிமையாக விளக்குவதாக நினைத்து “சரஸ்வதியின் உடையை பார், வெள்ளை நிற காகிதம் போல் இருக்கிறது அல்லவா?” என்றேன்.

அடுத்த நாள் சின்ன சின்னதாக சில நோட்டுபுத்தகங்களை கொண்டுவந்து கொடுத்தார் மாணவர். அலுவலக பணிகளுக்காக இது உதவட்டும் என்றார். திடீரென ஏன் இந்த நோட்டு புத்தகங்கள் என்றேன். நேற்று சரஸ்வதியை பற்றி கூறியதால் எனது டாய்லெட் பேப்பர்களை நோட்டு புத்தகமாக்கிவிட்டேன், சரஸ்வதியை டாய்லெட்டில் பயன்படுத்துவதில் எனக்கு சங்கடமாக இருந்தது என்றார்.

மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவாஜி தி வாரியார்


திருமுருக கிருபானந்தவாரியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை ஒரு பிரபல சொற்பொழிவாளர் கூற கேட்டேன்.

சொற்பொழிவுக்கு இடையே கேள்விகளை கேட்டு சரியான பதில் சொல்லுபவர்களுக்கு பழம், பூமாலை என பரிசுகள் வழங்குவது வாரியார் ஸ்வாமிகளின் பழக்கம்.

ஒரு சிறுவனை அழைத்து “எம்பெருமான் முருகனுனின் தந்தை பெயர் என்ன?" என கேட்டார்.


திருவிளையாடல் திரைப்படம் வெளிவந்து அனைவராலும் கவரப்பட்ட காலம் அது.

அந்த சிறுவன் யோசிக்காமல் கூறினான் “சிவாஜி”.

கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். வாரியார் கூட்டத்தினரை பார்த்து கூறினார்..“ நேருவை நேருஜீ என்றும் காந்தியை காந்தி ஜீ என்று மரியாதையாக சொல்லுவது போல , எம்பெருமான் முருகனின் தந்தையை சிவாஜி என்கிறான் இந்த பையன். இதில் என்ன தவறு?” என்றார்.

ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நுண்ணறிவு வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒட்டகமான பெற்றோர்கள்


ஒரு குட்டி ஒட்டகம் , தாய் ஒட்டகத்தை பார்த்து கேட்டதாம்..
“அம்மா ஏன் நமக்கு நீண்ட கால்கள் இருக்கிறது?”

“பாலைவனத்தில் மணலில் சரியாக நடப்பதற்காக...”

“அம்மா நமக்கு ஏன் முதுகில் ஒரு மூட்டை போல இருக்கிறது”

“பாலைவனத்தில் நீர் எளிதில் கிடைக்காது அதனால் முதுகில் சேமித்து வைத்து கொள்ள அப்படி இருக்கிறது. இதன் பெயர் திமிள்”

“அம்மா நமக்கு ஏன் பெரிய பெரிய பற்கள் இருக்கிறது”

“பாலைவனத்தில் முள்செடிகளும் கள்ளிச்செடியையும் உண்ணவேண்டும் அதற்காகத்தான்.”

“அது சரி அம்மா... இத்தனையும் இருந்து நாம் ஏன் மிருககாட்சி சாலையில் இருக்கிறோம்?”

“------------”


மேற்கண்ட உரையாடல் போல
“ஏன் சிவன் கழுத்தில் பாம்பு இருக்கிறது?
நாம் ஏன் பொட்டு வைக்கிறோம்?
கோவிலுக்கு சென்றால் அங்கே ஏன் இத்தனை சன்னிதி ?
என அனேக குழந்தைகள் கேட்க பெற்றோர்கள் வாய் அடைத்து நிற்கிறார்கள்.

எப்பொழுது தான் இவர்கள் மிருக காட்சி சாலையிலிருந்து தங்கள் பூமிக்கு திரும்புவார்கள்?
---------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் கிசு கிசு


எனது மாணவர்கள் என்னிடம் கேட்டார்கள், “குருஜி, மழை பெய்வது, ஆஸ்கார் விருது என எத்தனையோ விஷயங்களை கணிக்கிறீர்கள். எங்களுக்காக வரும் தேர்தலை பற்றி கணிக்க கூடாதா ?” என கேட்டார்கள்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் கீழே

கூறலாம், எனக்கு அரசியல் பிடிக்காது அதனால் அதை கணிக்க எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்காக வேண்டுமானால் அடுத்த பழைய பஞ்சாங்கத்தில் கூறுகிறேன்.


[ என்ன பதில் கூறும் இடம் காலியாக இருக்கிறதா? உங்கள் மெளஸ் வைத்து காலியான இடத்தை செலக்ட் செய்யுங்கள்.]

நாங்க சொல்லற பதிலுக்கு மெளஸ் வர வெச்சுடோம்ல.... :)

Tuesday, March 24, 2009

யந்திர - மந்திர - தந்திரா
யந்திர - மந்திர - தந்திரம் என்றால் என்ன? அது செயல்படும் விதம் உண்மையா?
நவீன யுகத்தில் இவை வேலை செய்யுமா ? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் விரைவில் ஒரு பதிவு வெளிவர இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக இந்த ஒளிப்பட காட்சி. உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

Monday, March 23, 2009

பேய் எழுதும் எழுத்து

எச்சரிக்கை :

  • உங்கள் ஊரில் இரவு பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டால் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.
  • பலவீனமானவர்கள் சேலம் சித்தவைத்தியரிடம் மருந்து சாப்பிட்ட பிறகு படிக்கவும்.


உங்களுக்கு பேய் பிசாசு மேல் நம்பிக்கை உண்டா?
பேய் பார்த்திருகீங்களா?

பேயிடம் பேசி கேட்டிருக்கீங்களா???

உங்கள் வீட்டுக்கார அம்மணியை பற்றி கேட்கவில்லை. (என்ன ஒரு சந்தோஷம் ..!)

பேய் எழுதி பார்த்திருக்கீங்களா? உங்களிடம் நான் பேச போவது "பேய் எழுத்தை" பற்றி.

பேய் எழுத்துக்கு முன் ஆவி எழுத்தில் ஏற்பட்ட எனது அனுபவத்தை சொல்றேன்.

சிலர் ஆவியை கூப்பிட்டு எழுதுவார்கள்.
இறந்து போன அரசியல் தலைவர்கள் எல்லாம் இவர்கள் கூப்பிட்டவுடன் வருவார்கள்.

உயிரோடு இருக்கும் பொழுது யாருக்கும் பதில் சொல்லாத வி.ஐ.பி எல்லாம் இவர்களின் (கெ)கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் நிலை இருக்கிறது.

இவர்கள் கேட்ட கேள்விக்கு எதிர்கால பலன் எல்லாம் வி.ஐ.பி ஆவி சொல்லும். ஆனால் ஆவியிடம் காலையில் நான் என்ன சாப்பிட்டேன் சொல்லு என கேட்டால், ஆவி மலையேறி விடும்.

ஆவியின் “அறைக்கு” பயந்து யாரும் இது போன்ற சின்ன புள்ளத்தனமான கேள்விகளை கேட்ப்பதில்லை.எனது நண்பர் அவரின் உறவினர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் ஆவி.அமல்ராஜ். எம்.ஜி.ஆர் , ராஜிவ் காந்தியுடன் பேசுவார்” என அவரை அறிமுகப்படுத்தினார்.

ஆனந்த விகடன் -ல இருக்காரா? என்றவாறே “பேசுவார்”-னு சொல்றீங்களே. “பேசினவர்னு” சொல்லுங்க என நான் அவரின் தமிழை வளப்படுத்தினேன். என்னை இருவரும் ஒரு பூச்சி மாதிரி பார்த்து விட்டு , இவர் ஆவி கூட பேசறவர்னு அவர் சொல்ல. எனக்கு அடிவயிற்றில் ஒரு “திடுக்கு” -னு இருந்துச்சு.


இதெல்லாம் சாத்தியமானு அவரை மெல்ல பார்த்தேன். அவரோ தன்னோட மூஞ்சியை பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கின மாதிரி வைச்சுக்கிட்டார்.

அதெப்படி ஆவியுடன் பேச முடியும்? என நான் கேட்க, மொபைல் போன்ல எத்தனையோ கிலோமீட்டர் அந்த பக்கம் இருக்கறவங்க கிட்ட பேசறோம். வயர் கனெக்சென் இல்லாம கண்ணுக்கு தெரியாத ஒரு ஆற்றல் இருக்கே அதை நம்பரோம் இல்லையா? அது மாதிரி தான் இதுவும் என்றார் அமல்ராஜ்.

இப்படி ஆவி டெக்னாலஜியை, டெலிகம் டெக்னாலஜி கூட லிங்க் பண்ணி சொன்ன உதாரணம் எனக்கு பிடிச்சுருந்துச்சு.

என் நண்பர் (நண்பனா அவன்) சில வெள்ளை பேப்பர்களை அவரிடம் கொடுத்து, “ம்” ஒரு வார்த்தை தான் சொன்னான்.

திருவள்ளுவர் கையில் வைத்திருக்கும் எழுத்தாணி ஸ்டைலில் பேனாவை பிடித்து உறுமலுடன் அந்த வெள்ளை பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தார் ..... சாரி எழுத்த ஆரம்பித்தார்.

நான் எனது நண்பனை ஒரு பார்வைப் பார்த்தேன். கோவில் கர்ப்ப கிரகத்திற்கு முன் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தனை போல ஆவி மனிதரை பார்த்துகொண்டிருந்தான். திடீரென என்னை பார்த்து திரும்பி “வந்திருச்சு.... வந்திருச்சு...” என சொல்ல. எனக்கிருந்த பதட்டத்தில் டய்லெட்டை காட்டி தொலைத்தேன்.

“சே உனக்கு எப்பவும் விளையாட்டுத்தான் . சார் இப்போ கனெக்‌ஷன்ல இருக்கிறார்” என்றான்.


அவர் கையில் மொபைல் போன் இல்லையே என யோசிக்கும் முன், ஐயா அமல் ராஜ் இல்லை. இல்லை... ஆவி என்னை உறுமலுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

உனக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு என்றான் நண்பன்.


எனக்குள் என்ன கேள்வி கேட்கலாம்னு ஒரே யோசனை.

நம்ம வலையுலகத்தில யாராவது ஜோதிடம் பத்தி எழுதினா, நல்லா நாத்திக பேசரவங்க வந்து “2011ல் யாரு முதல்வர்னு” அறிவுப்பூர்வமா கேட்பாங்களே அது மாதிரி கேட்கலாமா?

இல்லை இன்னைக்கு அரசி சீரியல்ல என்ன நடக்கும்னு கேட்கலாமா? என ஒரே குழப்பம்.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஐயா பேரு என்ன”

என் பேரா? ம்ம்ம்ம்ம்... இதில் இருக்கு படி. என சொல்லி அவர் எழுதிய பேப்பரை நீட்டினார்.
அதில் வட்டவட்டமாக பால்வாடி ஸ்கூல் செல்லும் பையனை போல ஏதோ கிறுக்கி இருந்தார்.

ஒன்றும் புரியவில்லை. அவரை ஏக்கமாக பார்த்தேன்.

“என்னை தெரியலே? நான் தான் உன் தாத்தா வந்திருக்கேன்.” என்றார்.

இது என்னடா வம்பு, நான் பிறக்கும் போது பூமியில் இருக்கும் என் தாத்தாமார்களை மேலே அனுப்பிவிட்டுத்தானே வந்தோம். என அமைதியாக அவரை கவனித்தேன்.

எனது நண்பன் நான் யோசிப்பதை பார்த்துவிட்டு, “ஏதாவது கேளு” என்றான்.

“தாத்தா நான் பிறக்கும் போது எங்க இருந்த்தீங்க?”

“வேற எங்கடா என்பேராண்டி ஆஸ்பிட்டல் வாசலில் இருந்தேன்”- எனது தாத்தா சொல்ல, சாரி ஆவி.அமல்ராஜ் சொல்ல.

உஷாரான நான். முடிவுக்கு வந்தவனாக சராமாரியாக சில கேள்விகள் கேட்க, தாத்தா மலையேறினார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அசுவாசமான அமல்ராஜ் என்னை பார்த்து “நீங்க இப்படியா கேள்வி கேட்கறது” என்றார்.

“ஆவி உங்களுக்கு உள்ள இருக்கும் பொழுது நான் கேட்ட கேள்வியை எங்கிருந்து அமல்ராஜ் பார்த்தீங்க? உங்க உடம்பு என்ன கொரியன் மொபைலா இரண்டு சிம் கார்டு போட?” என்றேன்.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சடாரன வெளியே சென்றுவிட்டார் ஆவி.அமல்ராஜ்.


மனுசன் உடம்புல இருக்கும் போதே இன்னொரு மனுசன் கேட்கற கேள்வி கண்ணை காட்டுது. இதில் இவங்க ஆவியை கூப்பிட்டு என்ன சொல்ல முடியும்னு தெரியலை.

ஆவியை வைச்சு ஏமாத்தரவங்கள கூட மன்னிக்கலாம். பேய் வைச்சு எழுதறவங்களை மன்னிக்கவே கூடாது.

அது என்ன பேய்னு கேட்கறீங்களா?


சில பிரபலமானவங்க அவங்க பேர்ல எழுத சில எழுத்தாளர்களை வேலைக்கு வைச்சுப்பாங்களாம்.

உதாரணமா ஒரு அரசியல்வாதியோ, கிரிக்கெட் வீரரோ அவரோட சுய சரிதை எழுதறார்னு வைச்சுக்கோங்க, அவரே அதை எழுத மாட்டாராம். ஒரு எழுத்தாளர் எல்லாம் எழுதி அவரிடம் காட்டினால் அதை சரிபார்த்துட்டு இவங்க பேர்ல அதை வெளியிடுவாங்க. எழுத்தாளர் எழுதினதுக்கு கூலிவாங்கிப்பார்.

இதுக்கு கோஸ்ட் ரைட்டிங்னு பேரு.


அதைத்தான் நான் தமிழ்-ல பேய் எழுத்துனு சொல்றேன்.

பிரபலமானவங்க கிட்ட இருந்த கெட்ட பழக்கம் இப்போ அனேகம் பேருக்கு வந்துடுச்சு. சினிமாவில் அதிகமாம். இசையமைப்பாளரோட டியூன், டைரக்டரோட கதைனு எல்லாம் ஒரே கோஸ்ட் மயம்தானாம்.

பேய் எழுத்து ஆன்மீகவாதிகளையும் விட்டுவைக்கலை.

பிரபலமான பத்திரிகையில் எழுதும் ஆன்மீகவாதிகளுக்கும் அவங்க கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் கோஸ்ட் ரைட்டிங் தான்.

நீங்களும் கோஸ்ட் ரைட்டர் ஆக ஒரு வழி சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க.
என் குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்ன செய்யட்டும்? நான் சந்தோஷமாக வாழ என்ன வழி ?

மாதிரியான சில கேள்விகளை போட்டுவிட்டு அதற்கு அட்வைஸ் சொல்லுங்க, அப்புறம் நடுவில ஒரு ஜென் கதை. மீண்டும் அட்வைஸ் சொல்லுங்க.

அவ்வளவுதான். நீங்களும் ஏதாவது ஒரு ஆன்மீகவாதியின் பேய் ஆயிடலாம். அவங்க உங்க “payee" ஆயிடுவாங்க.

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிட்ட கேட்டார் “ஸ்வாமி உங்க பேர்ல இந்த கட்டுரைகளை வெளியிடலாமா ?”

( இந்த பதிவை அந்த உதவி ஆசிரியர் படிப்பார் என்பது தனி செய்தி).

அந்த கட்டுரைகள் நான் எழுதும் கட்டுரைகளை விட கேவலமாக இருந்தச்சு. கட்டுரையின் கரு மாறாமல் சில மாற்றங்களை செய்து கொடுத்தேன். அவங்க வெளியிடல. பேய் எழுதினாதான் வெளியுடுவாங்களோ ?

கொஞ்ச நாள் முன்னால மாணவர்களுக்காக ஜோதிட பத்திரிகை நடத்திகிட்டு இருந்தோம். அதில மாணவர்கள பெயர் போட்டு நான் கட்டுரை எழுதிடுவேன். :)

பத்திரிகை வெளிவந்தவுடன அதில் இருக்கும் கட்டுரையை படிச்சுட்டு அந்த மாணவர் என்னை பார்த்து மிஸ்டர் மிஸ்டர்னு முழிப்பார். அத்தாங்க திரு திருனு.

இது பத்தாதுனு , சக மாணவர்கள் அவங்க கிட்ட கட்டுரை சம்பந்தமா சீரியசா கேள்வி கேட்க அவங்க நிலை தகறாராயிடும்.

மாணவர்கள் சிலருக்கு நல்ல எழுத தெரிஞ்சாலும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும், அதை இல்லாம பண்ண இந்த டெக்னிக்கை நான் யூஸ் பன்னுவேன். சக மாணவர்களோட பாராட்டை கேட்டதும், நாம் எழுதாத விஷயத்திற்கே இப்படி பாராட்டராங்களே நாம உண்மையா எழுதினா எப்படி பாராட்டுவாங்கனு அவங்க நினைச்சுக்கிட்டு அடுத்த மாசத்தில கட்டுரையும் கையுமா நிப்பாங்க.

இப்படி மாணவர்களுக்கே பேய் எழுத்தாளரா இருந்த அனுபவம் எனக்கு இருக்கு.

பேய் எழுத்தாளர்கிட்டயே வந்து பேய் எழுத்து வேணுமானு கேட்கலாமா?

போய் எழுத்தாளராகர வேலையை பாருங்கையா...டிஸ்கி : இக்கட்டுரையை நான் தான் எழுதினேன்.

Thursday, March 19, 2009

ஜோதிட கல்வி பகுதி - 6


நட்சத்திர மண்டலம்

முதல் பாடத்தில் கிரகத்தை காட்டிலும் நட்சத்திரங்கள் முக்கியமானது என பார்த்தோம்.

ஒரு கண்ணாடியில் ஒளி விழுவதாக கொள்வோம். கண்ணாடியின் தன்மைக்கும், நிறத்திற்கு ஏற்ப அந்த ஒளி தன்னை மாற்றிக்கொள்ளும். கண்ணாடி சிவப்பு நிறமாக இருந்தால் ஒளியும் சிவப்பாகவும், கண்ணடி தடிமனாக இருந்தால் ஒளி அளவில் குறைவாகவும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

மேற்கண்ட உதாரணத்தில் கண்ணாடி என்பது கிரகத்தையும் , ஒளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும். ஒளி இல்லை என்றால் கண்ணாடியின் தன்மையை உணர முடியாது அது போல, கிரகமும் நட்சத்திரமும் இணைந்து செயல்பட்டுதான் உலகின் செயல்களுக்கு காரணமாக இருக்கிறது.


நட்சத்திரம் என நான் சொல்லுவது ஒரே ஒரு நட்சத்திரத்தை குறிப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்னிலா கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது. எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சில தலைப்புகளில் பிரித்துவிடலாம்.

பிறப்பால் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் அரசும்,மக்களும் ஜாதீய அடிப்படையில் பிரிவு பெருகிறார்களே அது போல. பிரபஞ்ச நட்சத்திரங்கள் 27 வகையானது என பிரிவுபடுகிறது. கவனிக்க. 27 நட்சத்திரங்கள் அல்ல. 27 வகையான நட்சத்திர கூட்டங்கள்.


ராசிமண்டலம் 360 டிகிரி கொண்டது என்பது நாம் கண்டோம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.

360 டிகிரியில் 27 பிரிவு என கொண்டால் (360 / 27= 13 பாகை 20 கலை ) 13.20 என வரும்.

உதாரணமாக ஒரு பெட்டியில் ஒரு டஜன் குளிர்பான பாட்டில்கள் வைக்கலாம் என்றால், உங்களிடம் நான்கு பெட்டியும் நாற்பது குளிர்பான பாட்டில்களும் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்வி போன்று இருக்கிறதா?

முதல் பெட்டியில் [1 முதல் 12]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]

என பிரித்து வைப்போம் அல்லவா?


அதே போல ராசி எனும் பெட்டியில் நட்சத்திரம் எனும் குளிர்பான பாட்டில்களை அடுக்குவோம். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13.20. இதை வரிசையாக ராசிமண்டலத்தில் அடுக்கி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒரு ராசியானது 30 டிகிரி கொண்டது. எனவே இதில் 13.20 + 13.20 என இரண்டு நட்சத்திரங்கள் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு 26.40 டிகிரி போக ஒரு ராசியில் மீதம் 3.20 டிகிரி எஞ்சி நிற்கும்,அதில் ஒரு நட்சத்திரத்தின் ஒரு பகுதியை வைத்து மீதியை அடுத்த ராசிக்கு எடுத்து செல்லலாம். அடுத்த ராசியில் நட்சத்திரத்தின் 10டிகிரி வரும்.


இவ்வாறாக ராசிமண்டலம் முழுவதும் 27 நட்சத்திரங்களை வைக்க முடியும்.

நமது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்தால், வானம் சதுரமாக தெரியும். ஆனால் வானம் சதுரம் அல்ல. அது போல ராசி மண்டலம் மூலம் பார்க்கும் பொழுது நட்சத்திரம் 13.20 பாகை அளவே தெரிகிறது. அதனால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் 13.20 அளவில் தான் இருக்கிறது என முடிவு செய்ய கூடாது.


ஒன்பது கிரகங்கள் மூன்று நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது. 9X3 =27.

கீழ்கண்ட படத்தில் நட்சத்திரங்கள் எப்படி ராசிமண்டலத்தை அமைக்கிறது என காணலாம்.


நட்சத்திர பெயர்கள் நமக்கு தேவை இல்லை. அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களை மனப்பாடம் செய்ய தேவை இல்லை. கீழ்கண்ட வரிசையை மனதில் வையுங்கள். நட்சத்திரத்தை ஆளும் கிரகமும் அது எடுத்துக்கொள்ளும் டிகிரியும் மட்டுமே முக்கியம்.

கேது------13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20

கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது.

இதில் சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.

இன்றைய பாடம் உங்களுக்கு கணிதமாக இருப்பதாக தோன்றலாம், உண்மையில் இது லாஜிக்கலான விஷயமே அன்றி கணக்கு சார்ந்த விஷயம் அன்று. நட்சத்திர மண்டலம் எனும் இந்த விஷயம் மிகவும் முக்கியனானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் ஜோதிடத்தை கற்றும் பயனில்லை.

நட்சத்திர மண்டலம் எனும் பாடம் இன்றுடன் முடியவில்லை. அடுத்த பாடத்திலும் தொரும்.

------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :
மேற்கண்ட நட்சத்திர மண்டல படத்தில்,மேஷம் முதல் கன்னி ராசி வரை மேலிருந்து கீழாக நட்சத்திரங்களை குறித்தோம். ஆனால் துலாம் முதல் மீனம் வரை கீழிருந்து மேலாக குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்?

[கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் உங்கள் புத்திசாலிதனத்திற்கும், கவனிப்பு திறனுக்கும் உள்ள கேள்விகள். பல ஜோதிட புத்தகங்களை படித்து பதில் சொல்லவேண்டிய கேள்வி அல்ல. சிந்தித்து பதில் கூறுங்களேன் ]

-------------------------------------------------
சிரிக்க சில நொடிகள் :

அவள் : என் புருஷன் ஜோதிடரா இருக்கிறதால எனக்கு ஒரே பிரச்சனை.
இவள் : ஏன் என்னாச்சு?
அவள் : எனக்கு ஜல“தோஷம்”-னு சொன்னா மருந்துவாங்கி கொடுக்காம பரிகாரம் செய்ய சொல்லறாரு.

Tuesday, March 17, 2009

எனது குருவை பற்றி சில ரகசியங்கள்


நம் ஆட்களுக்கு ஒரு பழக்கம்...

ஒர் அலுவலகம் சென்றார்கள் என்றால் அங்கே இருக்கும் நபரிடம் வேலை விஷயமாக பேசி முடித்தவுடன் என்ன செய்வார்கள்?

கொஞ்ச நேரம் அங்கே இருக்க வேண்டும் என வைத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

அந்த நபர் தீர்ந்தார்...

அந்த நபரிடம் நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தையோ, புத்தி பூர்வமாகவோ பேச மாட்டோம்...

என்ன சார், நீங்க எங்கிருந்து வரீங்க?

தினமும் அந்த வழியாதான் வருவீங்களா?

எத்தன வருஷமா சார் இங்கே வேலை பார்க்கறீங்க?

இதே இருவரும் பெண்ணாக இருந்தால்..

உங்க சேலை நல்லா எடுப்பா இருக்கு. எந்த கடையில எடுத்தீங்க?


இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய போகிறார்கள்? ( இல்லை...என்ன செய்ய போகிறீர்கள் :) )

சிலரிடம் இதை நேரடியாக கேட்டதுண்டு. “சும்மா ” கேட்க கூடாதா? என்பார்கள்.

இதையெல்லாம் விடுங்கள் பொருத்துக்கொள்ளலாம். என்னை போன்ற ஆட்கள் இவர்களிடம் சிக்கினால் தொலைந்தோம்..

பின்வரும் கேள்வியை சராமாரியாக கேட்பார்கள்.

ஸ்வாமி உங்க குரு யாரு ?

தினமும் சாப்பிடுவீங்களா?

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

சினிமா பார்க்கிறது ..... உண்டுங்களா?

ஒரு குறிப்பிட்ட ஆன்மீகவாதி (வியாதி) பெயரை சொல்லி.. அவரை பத்தி என்ன நினைக்கிறீங்க?

இந்து மதம் மாதிரி வேற எங்கையுமே கிடையாது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

சமாதி-னா என்ன ஸ்வாமி?

குண்டலினி எனக்கு எந்த சக்ரத்தில இருக்குனு சொல்லுங்க..


எஃசெட்ரா..
எஃசெட்ரா..
எஃசெட்ரா.....

ஆன்மீகமாக வாழ்வதால் தேவலாம். இல்லையென்றால் மன அழுத்தத்தில் மன நல மருத்துவ மனைக்கு ஒரு நல்ல நோயாளி கிடைத்திருப்பார்.

எந்த கேள்வியை வேண்டுமானால் சகித்து கொள்ளலாம்.

உங்க குரு யாரு ? என கேட்கப்படும் கேள்விக்கு என்னால் உண்மையாக உணர்வுகளை காட்ட முடியாது.

அவ்வாறு காட்டினால் கேள்வி கேட்டவர் தாங்க மாட்டார் என்பதே உண்மை.

எனது குரு யாராக இருந்தால் என்ன? அதை தெரிந்து கொண்டு இவர் என்ன செய்ய போகிறார்?
இல்லை எனது குருவிடம் சென்று கற்று என்னை போல ஆகவேண்டும் என நினைக்கிறாரா?
அல்லது என்னை பற்றி எனது குருவிடம் புகார் சொல்ல போகிறாரா?

புகழ் பெற்றவரின் பெயரை சொல்லி இவர்தான் என் குரு என சொன்னால் என்னையும் நல்லவர் என முடிவு செய்வாரா?

“கொல்லிமலை ஒத்த வேர் சித்தர்” என ஒருவரை சொல்லி இவர் தான் எனது குரு என சொன்னால் என்ன செய்ய போகிறார்?

-என எனக்குள் பல கேள்விகள் எழும்.

எனது ஒரு கேள்வியை பற்றி சில விஷயங்களை சொன்னதற்கே இத்தனை குழப்பம் உங்களுக்கு இருக்கிறதே. என்னை சிந்தித்து பாருங்கள்..!

இளம் பெண்ணிடம் வயதையும், ஆண்களிடம் சம்பார்த்தியத்தையும் கேட்க கூடாது என்பார்கள்.

இதில் இன்னொன்றையும் சேர்த்திக்கொள்ளுங்கள், ஆன்மீகவாதிகளிடம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள்.

பரசுராமர் தனது குருவிடம் தனது குருவின் குருவை பற்றி கேட்டார். பரசுராமரின் குரு தத்தாத்ரேயர், அவர் தனக்கு 24 குருமார்கள் இருக்கிறார்கள் என்றும் எறும்பு, சிலந்தி,கடல், நரி என விளக்கி கொண்டே போனார். அது போல எனக்கும் நிறைய குருமார்கள் இருக்கிறார்கள்.

எனது குரு பிரம்மாண்டமானவர் அவர் இந்த பிரபஞ்சத்தின் எல்லையை உணர்ந்தவர். அப்படிப்பட்டவரை சிறிய மூளையால் உணர்ந்து, சின்னஞ்சிறு வாய் கொண்டு கூற முடியுமா?

இருந்தாலும் எனது ஒரு குருவை பற்றி கூறுகிறேன்.

எனது குரு பட்டாம்பூச்சி.

பட்டாம்பூச்சி தனது பிறப்பால் புழுவாக இருந்தாலும், தனது அறிய முயற்சியால் வண்ணம் கொண்ட இறகு பெற்று உலா வருகிறது.

இதன் மூலம் பிறப்பால் எப்படி பட்டவனாக இருந்தாலும், ஆன்மீக சாதனையால் உன்னை விடுதலையாக்கு என்பதை வண்ணத்துப்பூச்சி எனக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்தார்.

தினமும் ஒரு பூவில் அமராமல் பல இடங்களுக்கு சென்று வருவது எனது குருவின் இயல்பு. இதன்மூலம் உனக்கு நிரந்தரமான உடல், வீடு, பந்தம் என்பது இல்லை என்பதை கற்றுகொடுத்தார்.

பூக்களுக்கு சுயமாக மற்றொரு பூவை உருவாக்கும் தன்மை இல்லை. வண்ணத்துப்பூச்சிகளே பூக்களை எங்கும், என்றும் மலர காரணமாக இருக்கிறது.
எங்கு எல்லாம் உயிர்கள் உயிர்பற்று இருக்கிறதோ அங்கே சென்று உயிரை மலரசெய் என எனது குரு கற்றுகொடுத்தார்.

தனது தோற்றம் கூட பிறரை கவர்ந்து ஒரு ஷணம் என்னில் அனைவரும் தியானித்து இருக்க செய்ய வேண்டும் எனும் பழக்கத்தை ஊட்டியவர்தான் எனது குரு.

வண்ணத்து பூச்சி என எனைவராலும் அழைக்கப்ப்ட்டாலும்
எனது குரு வண்ணங்களால் மட்டுமல்ல
எனது வாழ்க்கையின் எண்ணங்களால் நிர(ற)ப்பபட்டவர்.

----------------------------------------------------------------------------
எதற்கு இந்த குரு புராணம் என்று தானே கேட்கிறீர்கள்?

திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் என்னை பட்டாம்பூச்சி விருது வழங்கி தொடர் பதிவு எழுத சொன்னார். நமக்கு தான் ஜனரஞ்சகமாக எழுத தெரியாதே, அதனால் எனது குருவை பற்றி சில வார்த்தைகள் எழுதினேன்.
ஆன்மீக பதிவுகள் எழுதினாலும் மக்கள் படிப்பார்கள் என எனக்கு நம்பிக்கையூட்டியவர்களில் திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும் ஒருவர்.

MLM போல இதை மூன்று பேருக்கு வழங்கி தொடர செய்ய வேண்டுமாம்.

சரி எனக்கு தெரிந்த மூவரை அழைக்கிறேன். அவர்கள் பின் தொடர்வார்களா என தெரியாது.
ஆன்மீகத்தில் கூட என்னை பின் தொடர வேண்டும் என யாரையும் நிர்பந்தித்தது கிடையாது.
இருந்தாலும் அவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

என்னை கவர்ந்த வலைபதிவாளர்களை அழைத்தால் கண்டிப்பாக உதைப்பார்கள். காரணம் அவர்கள் பெரிய தலைகள் :)

ஆனால் என்னை கவர்ந்த நல் உள்ளங்களுக்கு விருதுகளை வழங்க இருக்கிறேன்.

திரு கோவி.கண்ணன். இவரை பற்றி தனி பதிவே எழுதி விட்டேன். இருந்தாலும் சில வார்த்தைகள். மேலே சொன்ன எந்த கேள்வியும் என்னிடம் கேட்காமல் பழகும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

திரு.எம்.எம் அப்துல்லா - இவரை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் உள்ளுணர்வு இவரை பற்றி சில நற்கருத்துக்களேயே சொல்லுகிறது. இவரின் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ சமீபமாக எதையும் எழுதுவதில்லை. :)

திரு.ரவிசங்கர் - இவரின் பதிவுகள் சில கவிதையும், சிறுகதையும் “அட” போட வைக்கும். நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர் என நினைக்கிறேன்.பலதளங்களில் பதிவு செய்வது இவரின் பலம் என நினைக்கிறேன்.

எனக்கு விருது வழங்கியவரும், நான் தொடர சொன்னவர்கள் இருவரும் தமிழ்மண விருதுவாங்கியவர்கள். மோதிர கையால் குட்டு வாங்க வேண்டும் என்பார்கள். என் தலை தாங்காது சாமி :).


------------------------------------------------------------------------------------
பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Thursday, March 12, 2009

பழைய பஞ்சாங்கம் 12-03-2009


பஞ்சாங்கம் என்பது கிரக நிலையை காண உதவும் ஒரு புத்தகம். கிழமை, நட்சத்திரம்,திதி,யோகம் , கரணம் என்ற ஐந்து அங்கங்களை கொண்டதால் பஞ்ச- அங்கம் என அழைக்கப்படுகிறது. பஞ்ச அங்கங்களை தவிர கிரகநிலையின் மாற்றம், அதன் நிலை என மேலும் பல தகவல்களை கொண்டது பஞ்சாங்கம். கணிதா எனும் பழமையான ஜோதிட நூல் ஒன்பது ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட கிரகநிலையை ஆதாரமாக கொண்டது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் ஆற்றலை பாரத நாட்டினர் கொண்டிருந்தார்கள். நாள் காட்டியை போல தினமும் பயன்படக்கூடியது பஞ்சாங்கம். ஜோதிடர்கள் அல்லாதவர்கள் கூட பயன்படுத்துவார்கள். ஆனால் பழைய நாள் காட்டியை யாராவது பயன்படுத்துவார்களா? அது போல பழைய பஞ்சாங்கம் என்ற சொல்லாடல் கூட எதற்கும் பயன்படாதவர்களை குறிக்கிறது.

நாள்காட்டி புதியதாக இருந்தாலும் அதில் இருக்கும் எண்களும், தலைவர்களின் பிறந்த நாள் பற்றிய செய்தியும் பழையதாக தானே அமையும்? அது போல பஞ்சாங்கம் பழையதாக இருந்தாலும் பலவருடங்களுக்கு முன்பு பிறந்தவர்களின் ஜாதகத்தை கணிக்கவும், குறிப்பிட்ட நாளின் நட்சத்திரம் தெரிந்தி கொள்ளவும் பழைய பஞ்சாங்கம் தேவை.


எதற்கு இந்த் செய்தி என கேட்கிறீர்களா? சுவையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் வந்த செய்திகள் இனி பழைய பஞ்சாங்கம் எனும் தலைப்பில் வர இருக்கிறது.

பழைய தகவலாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு சுவையாக இருப்பதால், இனி மேல் இது பழைய பஞ்சாங்கம் என அழைப்போம்.
இந்த மாற்றத்தை கொடுக்க உதவிய கோவிகண்ணன், பரிசல்காரன் இருவருக்கும் நன்றி.

-------------------------------------

ப்ரம்மச்சரியமா அல்லது கிரகஸ்தமா?

எனது ரயில் பயணம் நாக்பூர் எனும் ஊரிலிருந்து சென்னையை நோக்கி அமைந்திருந்தது. என்னுடன் இளைஞர் ஒருவர் பயணமாகி கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாமல் சக பயணிகளுடன் சப்தமாக பேசியபடியே வந்தார். திருநெல்வேலிக்காரர்களின் சொல்லாடலில் சொல்லுவார்களே ஓலைபாயில் என்னவோ என்று அது போல இருந்தது அவரின் பேச்சு. சாப்பிடும் பொழுது கூட சப்தமாக பேசியும் சகபயணிகள்,அரசியல், சினிமா என அனைவரையும் பகடி செய்தபடியும் பயணம் செய்தார் அவர்.


ஜன்னலோர இருக்கையில் நான் வெளியே முகத்தை காட்டியபடி உட்கார்ந்திருந்ததால் என்னை அவர் வம்புக்கு இழுக்கவில்லை.

ரயில் பயணங்களில் சிலர் பொழுதுபோகாமல் ஏதாவது கேள்வி கேட்டவண்ணம் வருவதை பார்த்திருக்கிறேன். கேள்வியை கேட்டுவிட்டு வேறு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்கள். உயிரை கொடுத்து பதில்சொன்ன நாம் முட்டாளாகி இருப்போம் :)

விதியாரை விட்டது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் பேச முயன்றார். தான் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என்றும், ஓர் ஊரில் உப ஆட்சியராக சேரப்போவதாக சொன்னார். என்னிடம் பேச்சை துவங்கியதும் பிற பயணிகள் என்னை பார்க்க துவங்கினார்கள்.


ஸ்வாமி ஜீ உங்களை பார்த்தால் பிரம்மசாரி போல தெரிகிறதே, நான் நினைப்பது சரியா? நான் ஆமாம் என்றேன்.

உடனே முகத்தில் பெருமிதத்துடன், "பிரம்மசரியம் சிறந்ததா அல்லது திருமணம் செய்து குடும்பம் நடத்தும் கிரகஸ்த வாழ்க்கை சிறந்ததா?" - சொல்லுங்கள் ஸ்வாமி என்றார்.

ஒரு நிமிடம் மெளனமாக பார்த்துவிட்டு சொன்னேன்.


கிரகஸ்தம் தவறு என்றால், நான் பிறக்க காரணமாக எனது தந்தை செய்த செயல் தவறாகிவிடும். பிரம்மசரியம் தவறு என்றால் நான் செய்வது தவறாகிவிடும்.

பிரம்மச்சரியம் சரி என்றால், கிரகஸ்தம் எனும் தவறிலிருந்து பிறந்த நான் எப்படி சரியானதை செய்ய முடியும்?

என்னை சரி என்றோ அல்லது எனது தந்தையை சரி என்றோ என்னால் சொல்ல இயலாது. தந்தை என சொன்னதில் உங்கள் தந்தையும் அடங்குவார் என்றேன்.


பயணம் முடியும் வரை அவர் யாரிடமும் பேசவே இல்லை. என்ன காரணம் என்றே தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்ததா?

--------------------------------------------------------------------------------

ரமணரும் மேற்கத்திய திருவண்ணாமலையும்


பகவான் ரமண மகரிஷியை பற்றி பல சம்பவங்கள் வியக்க வைப்பது உண்டு. தனது 16ஆம் வயதில் திருவண்ணாமலை வந்த மஹான் அதற்கு பிறகு வேறு எங்கும் சென்றதில்லை. திருவண்ணாமலையே தனது குருவாக கொண்டு தன்னை அருணாச்சலமாக்கியவர்.

ஒரு முறை ஒரு வெளிநாட்டு பெண்மணி ரமணரிடம் திருவண்ணாமலை இந்தியாவில் இருப்பதால் ஆன்மீக ஆற்றல் இருப்பதாக் சொல்லுகிறீர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நாங்கள் பல தூரம் பயணம் செய்து வர வேண்டி இருக்கிறது. எங்கள் பகுதியில் இதை போன்ற ஆற்றல் கொண்ட மலை இல்லையா என கேட்டார்.


இந்தியாவை விட்டு வேறு எங்கும் செல்லாத பகவான் ரமணர் ஞானம் நிறைந்த முகத்தில் தெய்வீக புன்னகையுடன் கூறினார். திருவண்ணாமலையை அமைப்பிலேயே பூமியின் மற்றொரு பகுதியில் ஒரு மலையுண்டு. திருவண்ணாமலைக்கு சரியாக பூமியின் பின்பகுதியில் வரும். அதற்கும் திருவண்ணாமலையை போன்ற சக்தி உண்டு என்றார் மகரிஷி.

இந்த செய்தியை படித்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. ( google earth ) கூகுள் எர்த் எனும் மென் பொருளை கொண்டு திருவண்ணாமலையை அடைந்தேன். அதன் அட்சாம்சம் ரேகாம்சம் (latitude ,longitude) எடுத்து அதை பூமியின் மறுபக்கம் சரிபார்த்தேன். தென்அமெரிக்காவின் வடபகுதியில் ஓர் தீவில் திருவண்ணாமலை போன்ற அமைப்பில் ஓரு மலை இருந்தது.

"Ho! lord Arunachalaa..! "

Wednesday, March 4, 2009

அஷ்டாங்க யோகம்எட்டுவிதமான யோகத்தில் அப்படி என்ன சிறப்பு?
என்றனர் எதுவும் தெரியாதவர்கள்.

யாம நியம ஆசன பிராணாயமமே முதல் நான்கு படி.
பிரதியாகார தாரணை தியானமுஞ் சமாதியே பின்நான்கு படி.
அதை நீ நன்கு படி.

விளக்க சொன்னால் விளங்க சொல்லுவேன்.

பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.
பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.
இது
யாமம்

மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,
கலவாதிரு, களவாதிரு.
இது நியமம்.

இவ்விரண்டு படிகளை கடந்தாலே நீ ஆவாய் யோகி.

ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.
உன்னை வளைக்க உடலை வளை - எலி எனும்
இறைவன் இருக்க உன் உடலே வளை.

மிருகத்தை பார் ஆசனம். மலையை பார் ஆசனம்.
எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.
உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.

உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.
உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.
உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே
ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.

இயற்கையின் இசைக்கருவியான உனது உடலில் இல்லதா இசையே இல்லை.
நாதனை உணர நாதத்தை உணரு.

நான்காம்படியை நன்றாக படித்தால் பிற நான்கும் நன்றாகும்.

அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்கு
பிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதே ப்ரதியாகாரம்.

நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.
நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.

செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,
தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.

ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.
நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.
நீயே சத்தியம் அது தத்வமஸி.
நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.

எட்டா சித்தியாம் அட்டமா சித்தியை அடைய முயலுவது ஏன்?
அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.
உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.

Monday, March 2, 2009

மந்திர சக்தி - பகுதி இரண்டு


சென்ற பகுதியின் தொடர்ச்சி...

ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு மந்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம். .....

ஒரு அரசனுக்கு தனது மந்திரியின் மேல் ஒரு சந்தேகம். மந்திரியின் புத்தி சாதுர்யத்திற்கு அவர் செய்யும் மந்திர ஜெபமே காரணம் என எண்ணினார். தானும் மந்திர ஜெபம் செய்தால் மந்திரியைப் போல புத்தியை அடையலாம் என நினைத்தான். ஒரு நாள் மந்திரியிடம் தனது ஆவலை தெரிவிக்க, மந்திரியோ, அரசனான நீங்கள் சரியான அதிகாரி இல்லை. உங்களுக்கு மந்திர ஜெபம் சித்திக்காது என்றான்.

அரசன் தனது அஹங்காரத்தாலும், அதிகார மோக உச்சத்திற்கு சென்றான். உன்னால் அந்த மந்திரத்தை கூற முடியுமா, முடியாதா? என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று "முட்டாளே ! முதலில் இந்த மதிகெட்ட மந்திரியை சிறையில் அடையுங்கள்" என்றார். உடனே காவலர்கள் மந்திரியை சிறை பிடித்தனர்.

புன்னகை பூத்தவாரே மந்திரி கூறினார். "அரசே நான் கூறிய அதே வார்த்தையைத் தான் நீங்களும் கூறினீர்கள். உங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்கள், என் வார்த்தைக்கு கீழ்படியவில்லை. அது போன்றதே மந்திர ஜெபம்; நான் கூறினால் சித்திக்கும் மந்திர ஜெபம் நீங்கள் கூறினால் சித்திக்காது. தவறை உணர்ந்த அரசன் தான் அதற்கு அதிகாரி அல்ல என்பதையும் அறிந்தான்.


இந்த கதை மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் நாம் எந்த மந்திரத்திற்கு அதிகாரியோ, அதை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். மேலும் அதை உணர்ந்த குருவிடம் தீட்சையாக பெறவேண்டும். மந்திர ஜெபம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபிக்கப்பட வேண்டும். உலக நன்மைக்காக, முக்தியை வேண்டி, உடல் குறைகளை போக்க, சித்திகளை பெற என நோக்கம் வேறுபட்டாலும் மந்திர ஜெபம் எனும் செயல் ஒன்று தான்.

மந்திர ஜெபம் செய்து நோக்கம் பூர்த்தி அடைவதை சித்தி அடைதல் என்பார்கள். மந்திர சித்தி அடைதல் இயல்பாக ஏற்படும் ஓர் விளைவு. முக்தியை வேண்டி மந்திர ஜெபம் செய்தால் நம்முடைய கூர்மையான எண்ணம், ஜெபிக்கும் முறை, நம்பிக்கையை பொறுத்து மந்திர சித்தி ஏற்படும்.ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.


மந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.


4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.

5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.


வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.


6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.


7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.


8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.


மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.