Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 31, 2009

யந்திர சக்தி - நிறைவு பகுதி

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

முக்கோணம் :

சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் என அறிந்துகொண்டோம். அப்பரம் பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.

மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.

இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.

இணைந்த முக்கோணங்கள் ஆக்க சக்தியின் வடிவங்கள். இவ்வகை யந்திரம் தென்பகுதி இந்தியாவில் ஸுப்ரமண்ய கடவுளின் வடிவமாக வணங்கப்படுகிறது. இப்பொழுது 'சரவணபவ' என மூல மந்திரம் எழுதிய சரவண யந்திரம் உங்கள் நினைவில் நிழலாடும் என நினைக்கிறேன். ஸுப்ரமண்யர் கார்த்திகை நட்சத்திரப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் நட்சத்திர வடிவம் எடுத்தவர் என புராணம் சொல்லும் காரணம் யந்திர சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டது.

யந்திர விதிகள் சாதாரண கோடுகளுக்கும், சதுரத்திற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. முடிவு பெற்ற வடிவங்களை ஆன்மா உணர்வதில்லை. சதுரத்தில் உள்ள நான்கு கோணங்களும் ஆன்மாவின் தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. சதுரம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சதுரத்தின் பக்கங்களை திறந்த வடிவில் ஆற்றலை வெளிவிடுமாறு அமைக்கிறார்கள்.


வரிவடிவில் உள்ள வட்டமும் முக்கோணமும் என்ன தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ? உண்மையில் இவை குறிப்பது என்ன? என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.


ஓர் சக்தி கேந்திரத்தின் வடிவமே யந்திரங்கள். உதாரணமாக ஓர் மோட்டார் இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். பல இடங்களில் இந்த மோட்டார் பேருதவி செய்து வருகிறது. வாகன இயக்கம், நீர்ஏற்றம் மற்றும் விசைத்தறி என பல துறைகளில் வேகப்படுத்தவும் நேரத்தை குறைக்கவும் மின்சார மோட்டார் பயன்படுகிறது.
இத்தகைய மோட்டாரின் அமைப்பு சக்தியின் அடையாளம். பொறியியல் துறையில் இதை வடிவமைக்கும் பொழுது பல கோணங்களில் மோட்டாரின் அமைப்பை வரைந்து கொள்வார்கள். இரண்டாக பிளந்த [ section drawing ] முறையில் பார்த்தால் மின்சாரமோட்டார் யந்திரம் போல காட்சியளிக்கும்.


இதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் கூறலாம். ஓர் ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது வாழ்வில் பல தருணங்களில் இது பயன்படுகிறது. ஒரு நீளமான ஆணியின் தலைப்பகுதி கீழே இருக்குமாறு வைத்து கீழ்பகுதியை உங்கள் கண்ணுக்கு நேராக வைத்துப் பாருங்கள். ஒரு வட்டத்தின் மையத்தில் நட்சத்திரம் இருப்பது போல தோன்றும். யந்திரத்தின் தத்துவமும் இதுவே. முப்பரிமாணமாக உள்ள விஷயத்தை வரி வடிவில் இரு பரிமாண பிம்பங்களால் நமது உள்நிலை முப்பரிமாணமாக அதை உணரும்.


ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் என பல சக்தி யந்திரங்கள் உண்டு. நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் [ Top view ] பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.


வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.


யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். உண்மையில் யந்திரம் வரைவதும், பயன்படுத்துவதற்க்கும் பல நெறிமுறைகள் உண்டு.


யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.


கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.


யந்திரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெறும் படம் போல சட்டத்தில் தொங்கவிடுதல் கூடாது யந்திர அமைப்பை முழுமையாக தியானிக்க வேண்டும். எனது யோகப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யந்திர தியானம் கற்றுக்கொடுப்பதுண்டு. இவர்கள் யந்திரத்தை பயன்படுத்தும் விதம் தெளிவாக தெரிந்துகொள்வார்கள்.


இதை பயிற்சி பெற்றவர்கள் செயல், சிந்திக்கும் திறன் மற்றும் வாழ்வியல் நிலையில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். யந்திர தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல, அனைத்தையும் பட்டியலிட முடியாது. யந்திர தியானம் ஏற்படுத்தும் மாற்றம் பட்டியலுக்கு அப்பாற்பட்டது. உடலில் உள்ள ப்ராண சக்திகளின் ஏற்றத்தாழ்வை பொறுத்து நமது சுக துக்கங்கள் அமைகிறது. கல்வி, பொருளாதார உயர்வு, திருமண வாழ்க்கை, உடல் நோய் என வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் சிறந்த நிலையில் அமைய யந்திரத்தை பயன்டுத்தலாம். வாழ்க்கை சம்பவத்தைக் காட்டிலும் ஆன்ம உணர்வுக்கும், ஞான முதிற்சிக்கும் யந்திரயோகம் எனும் தியான பயிற்சி மிகவும் உறுதுணையானது.

5 கருத்துக்கள்:

Mahesh said...

அடேங்கப்பா.... இப்பத்தான் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குது...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி

மதி said...

யந்திர பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன். இதைப் பற்றி அறிய நூல் எதேனும் உண்டா?

"யந்திர தியானம்" பயிற்சி பற்றி... முடிந்தால் இன்னும் கொஞ்சம் விளக்கவும்.

நன்றி.

Sanjai Gandhi said...

ஸ்வாமி, குமுதம், நக்கீரன் எல்லாம் தங்களோட பக்தி இதழ்களோட யந்திரம் குடுக்கிறாங்களே. அதெல்லாம் பூஜித்து தராங்களா? இல்ல கப்சாவா?

/யந்திரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெறும் படம் போல சட்டத்தில் தொங்கவிடுதல் கூடாது யந்திர அமைப்பை முழுமையாக தியானிக்க வேண்டும். எனது யோகப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யந்திர தியானம் கற்றுக்கொடுப்பதுண்டு. இவர்கள் யந்திரத்தை பயன்படுத்தும் விதம் தெளிவாக தெரிந்துகொள்வார்கள். //