Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, July 8, 2014

புரபசர் லூஸ்னோஸ்கியும் அரை இறுதி கால்பந்தாட்டமும்

ஜெர்மனியின்  தென்பகுதியில் உள்ள சிறிய கிராம பூங்காவில்  மாலைநேர இருளில் கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். கோடைக்காலம் என்றுதான் பெயர் குளிர் எலும்பை அசைத்துப்பார்த்தது.

ஏதோ யோசனையில் பூங்காவின் கடைசி பக்க புல்வெளிக்கே வந்துவிட்டேன். திரும்ப வீடுவரை செல்ல ஐந்து கி.மீ நடக்க வேண்டும். குறுக்கு வழி என்றால் பக்கவாட்டில் உள்ள மலைகுன்றை தாண்டினால் போதும் இரண்டு கி.மீ சென்றுவிடலாம். மெல்ல மலைக்குன்றில் ஏறத்துவங்கினேன்.

இதயம் வாய்க்கே வந்துவிடும் அளவுக்கு மூச்சுவாங்கியது. எப்பொழுதும் குறுக்குவழியில் பாதி வந்தவுடன் தான் நேர்வழியே தேவலாம் என தோன்றும். கொஞ்சம் தளர்வாகி நடக்கலாம் என சுற்றும் நோட்டம் விட்டேன்.

குன்றின் மேல் ஒரு கருப்பு நிற பழைய கோட்டை கண்ணில்பட்டது. பாதி செதிலம் அடைந்து உட்புற கற்கள் தெரிய ஒரு திகில் உணர்வுடன் காட்சி அளித்தது.  அந்த கோட்டையை உள்ளே பார்க்கும் நோக்கில் சென்றேன்.

வவ்வால் எச்ச நாற்றமும் கருகிய முடியின் வாசனையும் கலந்த மணம் கோட்டையில் பரவி இருந்தது. மெல்ல சுற்றியும் நோட்டம் விட்டேன். எங்கும் மாலை நேர அரை இருள் கவ்வி இருந்தது. பக்கவாட்டில் உள்ள அறையில் மங்கிய வெளிச்சம் தெரியவே பழைய கோட்டையில் யாராக இருக்கும் என தூணில் மறைந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.

பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்நியன்பட பாணியில் கருப்பு அங்கி அணிந்து சிலர் கையில் துடைப்பம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் சரியாக தெரியாத வண்ணம் அங்கி மறைத்து இருந்தது. அறை தீப்பந்தத்தால் ஒளி ஊட்டப்பட்டு இருந்தது.

அறையின் மறு பக்க திறப்பில் சலசலப்பு கேட்டது. அறையில் அங்கி அணிந்த அனைவரும் "புரபசர் லூஸ்னோஸ்கி" என கோஷ்மிட்டார்கள்.

சாலையை கூட்டும் துடைப்பத்தை ஸ்கூட்டர் போல  காலுக்கு இடையே வைத்து காற்றில் பறந்துவந்தார் புரபசர் லூஸ்னோஸ்கி.

அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு "இன்று நான் நம் மாய மந்திர உலகிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இன்று நடக்கும் (ஜூலை 8) பிரேசில் - ஜெர்மனி கால்பந்தாட்ட போட்டியில் ஜெர்மனி தோல்வி அடையும். இரண்டாம் பகுதியில் முல்லர் அடிக்கும் கோல் வீணாக போகும்.  நாளை (ஜூலை 9)நடக்கும் போட்டியில் அர்ஜண்டினாவின் அதிரடியை காணலாம்.மிஸ்ஸி மிஸ் செய்வதில்லை" என சொல்லி துடைப்பத்தில் அமர்ந்து பறந்தார். அறையில் இருந்த அனைவரும் திசைக்கு ஒருவராக துடைப்பத்தில் பரந்தனர். தீப்பந்தம் தானாக அணைந்தது.

வேக்குவம் க்ளீனர் கண்டறிந்த விஞ்ஞான காலத்திலும்  துடைப்பத்தில் பறக்கும் இவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே வீடுவந்தேன்.

Wednesday, June 26, 2013

ஒரு யோகியின் பயணம்

அந்த யோகி விமானத்தின் உள்ளே சென்று தனது பயணச்சீட்டில் அச்சிட்டிருந்த ‘11B’ என்ற இருக்கையை தேடிக்கொண்டிருந்தார்.

மூன்று இருக்கைகள் கொண்ட ABC வரிசையில் இவருடையது நடுஇருக்கையாக அமைந்திருந்தது.



யோகியின் வலதுபக்கம் நெற்றிநிறைய திருமண் பூசியபடி ஒரு ஆத்திகர் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொன்னார்.

இடதுபக்கம் எந்த சலனமும் இல்லாமல் ஒருவர் அமந்திருந்தார். இடதுசாரியில் இருப்பவர்களுக்கு அனேகமாக இறை நம்பிக்கை இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை.

அவரிடமும் வணக்கம் சொல்லி யோகி அமர்ந்தார். அனைவரையும் வானில் சுமந்து பறந்தது ராக்‌ஷத பறவை.

சில நிமிடம் கரைந்திருக்கும், வலதுபக்கம் இருப்பவர் யோகியை பார்த்து...

“ஸ்வாமிஜி, இறைவனை பற்றி நான் நினைத்து ஆச்சரியப்படாத நாளே இல்லை..இறைவன் மிகப்பெரியவன் இல்லையா” என தன் ஏழு 

மணிநேர பயணத்திற்கு தேவையான பேச்சை துவங்கினார்.

சில நிமிடம் மெளனமாக கரைந்தது...

யோகி வலது பக்கம் இருந்த ஆத்திகரை நோக்கி கேட்டார், “ ஒரு புல்வெளியில் மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாம் ஒரே வகையான புல்லை சாப்பிட்டாலும் ஏன் அவைகள் சாணமிடும் பொழுது ஒரே போல இல்லாமல்  மாடு சாணியாகவும், குதிரை உருண்டையாகவும் ஆடு புழுக்கையாகவும் கழிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?”

“தெரியவில்லையே ஸ்வாமிஜி. இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் ஆத்திகர்.

“விஞ்ஞானத்தின் அடிப்படையே தெரியவில்லை உங்களுக்கு மெய்ஞானத்தின் தலைவனாக கடவுளை பற்றி கருத்து சொல்லுகிறீர்கள். கடவுளின் படைப்பையே உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே. எதை வைத்து கடவுள் பெரியவன் என சர்ட்டிபிக்கேட் கொடுக்க வந்தீர்கள்?”

எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்த வலதுசாரிக்காரர் விமானத்தில் கொடுக்கப்படும் புத்தகத்தை பிரித்து அதில் முகம் புதைத்தார்.

இந்த சம்பாஷணையை கேட்டபடி இருந்த இடதுசாரிக்காரர் “ம்க்கூம்...” என தொண்டையை கணைத்து யோகியின் முகம் பார்த்தார்.

பிறகு “ஐயா, எனக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை தெரியும். மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை ஒரே புல்லை சாப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றின் குடல் அமைப்பும் ஒன்றல்ல. அதனால் அவற்றின் மலக்குடலின் அமைப்புக்கு ஏற்ப அவை மலம் கழிக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்” என கூறி முகத்தை பெருமிதத்துடன் வைத்துக்கொண்டார்.

அவரை புன்புறுவலுடன் பார்த்த யோகி, “ வாழ்க்கையில் மலத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே திருப்தி அடைவதை விட்டுவிட்டு உயர்ந்த விஷயத்தை உணர முயலுங்கள். விஞ்ஞானம் எல்லைக்கு உட்பட்டது. மெய்ஞானம் எல்லையற்றது. மலத்தை விடுத்து உங்கள் பார்வையை மேம்படுத்தினால் இறைவனும் இருக்கிறார் என தெரியவரும்” என்றார்.

வலது சாரிகளும் இடது சாரிகளும் மெளமாக நடுநிலையாக அமர்ந்திருந்த யோகியின் பயணம் தொடர்ந்தது...

Tuesday, November 1, 2011

வானில் கேட்ட அசிரிரீ

போஸ்ட் ஆபீஸில் தபால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்ததும் புன்னகையுடன் என்னிடம் வந்து...

”நீங்க....அந்த”

“ஆமாம்.. ப்ரணவ பீடம்..சொல்லுங்க..”

”அது இல்லைங்க...நீங்க....ச்சே சரியா ஞாபகம் வரலை...”

“வேதிக் ஐ ப்ளாக் எழுதரவனும் நாந்தான்..அத்தானே நீங்க கேட்கனும்?..”

“ம்..இல்லை.. தொண்டையில நிற்குது ஞாபகம் வரல...ச்சே..”

“பதட்டப்படாம யோசிங்க.. எம் பேரு ஸ்வாமி ஓம்கார்”

“ம். இப்ப ஞாபகம் வருது ... அந்த தி....”

“ஆமா.ஆமா..தினம் தினம் திருமந்திரம் புத்தகம் எழுதுனது நாந்தான்”

“அது இல்லைங்க.. திலகாவோட மச்சினன் தானே நீங்க?”

"................................."

அப்பொழுது கேட்ட அசிரிரீ “ எத்தனை வாட்டி ஆணவம் அழிக்க உதவினாலும் நீ திருந்தமாட்ட...”

Saturday, July 10, 2010

சேஷூவும் உலகக் கோப்பை இறுதி போட்டியும்...

மானச சஞ்சரரே....பிரம்ம நீ.....மாஅ...னச சஞ்சரரே.... இன்னைக்கு நித்யஸ்ரீ கலக்கிட்டாபோ.. கச்சேரின்னா இன்னைக்கு நடந்ததான் ஓய்...கச்சேரி என்றவாறே உள்ளே நுழைந்தார் சேஷூ என்கிற சேஷாத்ரி ஐய்யர்.

எங்கள் தெருவில் அனைவரும் கதிகலங்க வைக்கும் ஒருவர் . வாய்நிறைய வெற்றிலை சீவல், வாயை ரயில் எஞ்சின் புகைபோக்கி போல உயர்த்தி, இரண்டு கைகளிலும் பூணலை இழுத்து பிடித்து முதுகு சொறிந்தவண்ணம் அவர் பேசுவதை பார்த்தாலே நமக்கு லேசாக முதுகில் நமைச்சல் வரும்.

எப்படிபட்ட கூட்டமாக இருந்தாலும் இவர் சென்றால் சிதறி ஓடிவிடுவார்கள். அதனால் சேஷூ மாமாவுக்கு செல்லமாக நாங்கள் வைத்த பெயர் புரட்சி வீரன் சே..! தனக்கு தெரியாததே கிடையாது என்பது போன்ற அலட்டல் அவரிடம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும். இதனல் சிலர் இவரை விக்கிப்பிடியா என்பது போல சேஷூபிடியா என்றும் அழைப்பார்கள்.

“என்னடா பசங்களா...வேலைவெட்டிக்கு போகாமல் பேசிண்டு இருக்கேள்... அரசியலா கிரிகெட்டா ?”என எங்கள் கூட்டத்தினுள் தனது கொரில்லா தாக்குதலை துவக்கினார் சே..!

“ஆமாண்டா இவரு நம்ம ஊரு கலெக்டரு...நாம தாண்டா வெட்டிப்பசங்க” என முணுமுணுத்தான் கோயிந்து.

“என்னடா குட்டி ராஸ்கல் முணுமுணுக்கறே...நானும் உங்களோட சேர்ந்து பேசிண்டு இருக்காலாம்னு பார்த்தா அசடு மாதிரி நிக்கறேள்?”

பொறுமை இழந்த நான், “மாமா நாங்க வேல்ட் கப் புட்பால் பத்தி பேசிண்டு இருக்கோம்” என்றேன்.

“பேஷா....பேசுங்கோ நானும் கேட்கறேன். எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்..நண்ணா இருக்குமோல்யோ?”

“அது என்ன நண்ணா இருக்குமோல்யோ? நல்லா இருக்குமா இல்லையா? தெளிவா சொல்லுங்கோ மாமா” என்றான் கோவிந்து. இன்று அவன் சரியான பார்மில் இருப்பது புரிந்தது.

“அசமந்தமா பேசாதேடா... உனக்கு என்ன டீம் ரொம்ப இஷ்டம், சொல்லு..” “நாங்க எல்லோரும் ஜெர்மனி ரசிகர்கள் மாமா..ஆனா அவாதான் தோத்துட்டா” என்றேன் நான்.

“பேஷ் நானும் தாண்டா. நம்ம தாயாதிகள் ரசிகரா இருக்கேள். எனக்கு சங்கடம் தான் போங்கோ”

“ஏம்மாமா கெட்டவார்த்தையில திட்டரேள்” என்றான் கோவிந்து.

“கோயிந்தூ...தாயாதிகள்னா உங்க பாஷையில பங்காளிகள்னு அர்த்தம்டா..”

“ஜெர்மன்காரங்க எப்படி மாமா நம்ம பங்காளிகள் ஆக முடியும்? ”

“ஜெர்மனியிலிருந்து தாண்டா ஆரியர்கள் எல்லாம் சிந்து நதி வழியா வந்து இந்தியாவில குடியேரினா தெரியுமோ? நம்ம கலர் எங்கிருந்து வந்துதுனு தெரியுமோ? எல்லாம் மேடின் ஜெர்மன். அதனால தான் பிராமணனை ‘சர்மாணி - சர்மா’ என சாஸ்திரம் சொல்லுது. ஜெர்மனிங்கிரதோட திரிபு இது புரிஞ்சுதோ? அதனால தாண்ட வைதீக சாஸ்திரத்தையெல்லாம் அவா இன்னும் கொண்டாடரா. ”

“மாமா புட்பாலை பத்தி பேசினா நீங்க ஜாதி கலவரமே செய்வீங்க போல இருக்கே...ஆமாம் மாமா டிவியில பார்த்தேளா? அக்டொபஸ் எல்லாம் யாரு ஜெயிப்பானு சொல்லிடுது. நீங்க ஜோதிட புலி ஆச்சே உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கோ?”

மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து.

“எந்த டீவியிலடா காமிச்சான்? நான் பாக்குற எம் டிவியில அது வரலையே...”

எல்லோரும் தலையில் அடுத்துக்கொண்டனர்..

“சரி சரி ரொம்ப சங்கடப்படாதீங்கோடா பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பானு சொல்லறேன். நான் யாரு ஜோதிட சாம்ராட், ஜோதிட வித்வபூஷன் பட்டமல்லாம் வாங்கிருக்கேன்”

“டேய் பாருங்கடா மாமாவே சொல்லிட்டார். வாங்கிருக்காராம். யாரும் குடுக்கலையாம்”

“அம்பி கோயிந்து உனக்கு என்னமாதிரியே குயிக்திடா.. நேத்து நான் பிரம்ம முஹூர்த்தத்தில பஞ்சாங்கம் பார்த்ததில் நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதர பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பா தெரியுமோ?” என சொல்லி நிறுத்தினார்..

அனைவரும் அவர் முகத்தை பார்த்தோம்.

“என்னடா பார்க்கரேள் எனக்கு சில்லி கோபி வாங்கி கொடுப்பேன்னு சொல்லுங்கோ அப்பத்தான் சொல்லுவேன்”

அனைவரும் நொந்து கொண்டோம். ஜோசியத்தை சில்லி கோபிக்கு தர முடிவு செய்த சேஷூ மாமாவிடம் கோரசாக “சரிமாமா சொல்லுங்கோ” என்றோம்.

தனது வெற்றிலை சீவலை உமிழ்ந்துவிட்டு.. “ஸ்பெயின் சுண்டக்காய் மாதிரி நெதர்லாந்தை ஜெச்சுடுவா பாரேன். இல்லைனா நான் வெத்தலை சீவலை விட்டுடுரேன்” என்றார்.

“ஏன் மாமா உங்களுக்கு நெதர்லாந்து பிடிக்காதா?” எனக்கேட்டோம். “அசடுகளா எனக்கு காவி டிரஸ் போட்டுண்டவாளை பிடிக்காதுடா.... நானெல்லாம் ஆச்சாரியாளை அரஸ்டு பண்ணும் போதே அடுத்த வேளைக்கு பருப்பு உசிலி வைக்கலாமானு பேசிண்டு இருந்தவன்...என்னாண்ட வந்து காவி போட்ட நெதர்லாந்துகாரணை பத்தி பேசிரையே நன்னவா இருக்கு?”

“அது சரி மாமா மூன்றாவது இடத்திற்கு இன்னைக்கு போட்டி இருக்கே அதில் ஜெர்மனி தானே ஜெயிக்கும்...அவாதான் உங்க பங்காளிகள் ஆச்சே...” என்றான் கோயிந்து.

“இல்லையோ பின்ன.. அவாளோட ஸ்டைல் அப்படி” என மாமா துவங்க.... அச்சமயம் ஒரு பெண் எங்களை கடந்து சென்றாள்.

“யாரு அது பரிமளமா? ஆடி விஷேஷத்திற்கு வீட்டுக்கு அனுப்புச்சுட்டாளா? உன் ஹஸ்பெண்டு பாவமாச்சேடி....:” என தன் தொழிலை அங்கே துவங்கினார்...

நாங்கள் விடுதலையானோம்..!

Wednesday, July 7, 2010

மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி

என் நண்பனின் கட்டாயத்தால் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அமைதியான இடங்களை ஏன் மயான அமைதி என சொல்லுகிறார்கள் என அன்று தான் புரிந்தது. காரணம் நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் மயானம்.

இரவு சுமார் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென சலங்கை சத்தம் கேட்கத்துவங்கியது. வயதான தோற்றம் கொண்ட ஒருவர் நீண்ட தலை முடியும் முன் வழுக்கையுமாக வந்துகொண்டிருந்தார். அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நின்றிருந்தனர்.

அவர் தான் மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி..!

கையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்தவராக ஆடினார். சில நிமிடங்கள் ஆட்டம் ஆடி ஓய்து அமர்ந்தார். அவருக்கு எனர்ஜி டிரிக்காக ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தம் கொடுக்கப்பட்டது.

“டேய் வாங்கடா வாங்க என்ன பிரச்சனைடா உங்களுக்கு...” என வெற்றிலை போடாமலே சிவந்த வாயால் கர்ஜித்தார்.

எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்..!

“சாமி..அது வந்து தொழில்ல.....”

நிறுத்து என்பது போல கை காட்டிவிட்டு தன் பக்கம் இருந்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் கருப்பு மையை வட்டமாக வரைந்தார். அதை உற்றுபார்த்தார்..

“உன் தொழில்ல போட்டி இருக்கு. உங்கூட இருக்கறவன் எதிராளிக்கு சாதகமா இருக்கான்.

சொல்லு அவனை என்ன செய்யலாம்? ஒரு கை விளங்காம போக கட்டிடுவோமா? 150 ரூபாய் வெட்டு..” என பொரிந்தார்.

“அதெல்லாம் நானே பாத்துக்கறேன் சாமீ...” என அவர் முன் சில நூறு ரூபாய்களை வைத்தான். நானும் அவனும் திரும்பி நடக்க துவங்கினோம்.

“டேய்.. நில்லுங்கடா... உன் கூட வந்தவனுக்கு என்ன பிரச்சனை” என என்னை பார்த்தவாரே நண்பனிடம் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னும் இல்லை சாமீ..எங்கூட சும்மாத்தான் வந்தான்” என்றான் அடக்கவாதி.

“அவனை பார்த்தா ஏதோ கேட்பான் போல இருக்கு...நீ அவனை கேக்க சொல்லு...” என்றார் குடமுருட்டி..

கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்... “சாமீ எனக்கு ரெண்டே கேள்வி தான். கேட்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்ம்..” என்றார் மா.மே.கு.குப்புசாமி.

“இன்னைக்கு (7-ஜூலை) ஜெர்மனி- ஸ்பெயின் மோதும் அரையிறுதி போட்டியில யாரு ஜெயிப்பாங்க?”

மீண்டும் புதிய மையை கண்ணாடியில் தடவி என்னையும் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்தார். தனது எனர்ஜி டிரிங்கை ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்...

“என்னவிட இவனுங்க நல்லா ஆடுவாங்கடா...ஆடுவாங்க... சரியான போட்டி.. சமமா விளையாடுவானுங்க. மறக்காம பாரு..ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான். அவனுங்களுக்கு மந்திரிச்சு கட்டினா சரியாயிடும். விளையாட்டு மைதானத்தில பலி கொடுத்து பூஜை செஞ்சா ஜெயிப்பானுங்க... இல்லைனா தோத்து போயி ரத்தங்கக்கிடுவானுங்க...” என்றார்.

“சாமி விளையாட்டு நடக்கிறது வெளிநாட்டுல உங்களை கூட்டிகிட்டு போக நேரம் இல்லை” என்றான் என் நண்பன். இவன் அடக்கத்திற்கும் கடமை உணர்ச்சிக்கும் அளவே இல்லையா என்பது போல பார்த்தேன்.

“ஒன்னோட ரெண்டாவது கேள்வி என்ன?” என்னை பார்த்து கேட்டார்.

“சாமி கண்ணாடியில மை தேச்சு எல்லாத்தையும் பார்க்கறீங்களே, நானும் வீட்டுக்கு போயி எங்க வீட்டு கண்ணாடியில மை போட்டா இது எல்லாம் தெரியுமா? எனக்கு இந்த மை எப்படி செய்யறதுனு சொல்லி கொடுங்களேன்..”

“டேய் இது எல்லாம் சாதாரண விஷயமில்லை... சித்திரை மாசம், பெளர்ணமிக்கு மழையில்லாத நாளில் கொல்லி மலைக்கு மேல போயி அங்கே கர்ப்பமா இருக்கிற குரங்கோட உச்சி தலைமுடியை எடுத்து வந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திர உரு ஏத்தி அதை கருக்கி செஞ்ச மை இது. அப்படி நீயும் செஞ்சா எல்லாம் இதில் தெரியும்.”

“இதுக்கு ஒரே வார்த்தையில முட்டாப்பயலே எதுனா இருந்தா என்கிட்டையே வந்து கேளுனு சொல்லி இருக்கலாம்” என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்பினோம்.

Tuesday, July 6, 2010

ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...

நெற்றியில் டிராபிக் சிக்னலில் தெரியும் சிவப்பு விளக்குக்கு நிகரான பொட்டு, உலகில் மஞ்சள் தட்டுப்பாடுக்கு இவரின் முகத்தில் இருக்கும் மஞ்சளின் அளவு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு மங்கள முகம். முகத்தை முன்புறம் பார்க்கும் பொழுதே தலைக்கு பின்னால் இருக்கும் கனகாம்பர பூ தெரியும் அளவுக்கு அலங்காரம் என்ற தோற்றத்தில் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு குச்சியுடன் அனுகினாள்.

"ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... தம்பி உனக்கு விரைவில் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வரப்போறா..."

நண்பர்களுடன் கடற்கரையில் சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் இவர்கள் செய்யும் இம்சை அளவில்லாதது என நினைத்தவாறே வேறுபுறம் திரும்பினேன். அந்த பெண் விடுவதாக இல்லை.

“ஏந்தம்பி திரும்பிட்டே.. உன்னை பத்தி எல்லாம் சொல்றேன் தம்பி.. சரியா இருந்தா மட்டும் காசு கொடு”

என் நண்பன் கோவிந்து குசும்புடன் அவளை திரும்பி பார்த்து பேச்சு கொடுத்தான்.

“ஏம்மா என்னை பத்தி நீ சொல்லா அதற்கு நான் ஏம்மா காசு கொடுக்கனும்? என்னை பத்திதான் எனக்கே தெரியுமே? அதைப்போயி நான் காசு கொடுத்து வேற தெரிஞ்சுக்கனுமா?”

ஓ இவன் பொழுது போக்க முடிவு செய்துவிட்டான் இவனை ஒன்னும் செய்ய முடியாது என நானும் கவனிக்க துவங்கினேன்.

“தம்பிக்கு வேற என்ன தெரிஞ்சுக்கனும்னு சொல்லுங்க ஜக்கம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”

“ஜக்கம்மா கிட்ட கேட்டு எல்லாம் சொல்லவேணாம். முடிஞ்சா ஜக்கம்மாவை எங்க கூட அனுப்பி வை. வேணுங்கறப்ப நாங்களே கேட்டுக்கறோம்.”

“தம்பி வாயில சனி இருக்கு போல...ஜெய் ஜக்கம்மா” என்றவாறே கோயிந்து தலையில் குச்சியை வைக்க, கோவிந்து மயங்கி சரிந்தான்.

நாங்கள் பதட்டமானோம். “என்னம்மா இப்படி செஞ்சுட்டீங்க...”

“ஜக்கம்மாவா எகத்தாளம் பேசினா இதுதான் கதி. என்கிட்ட ஏதாவது குறிகேளு அப்பத்தான் இவனை எழுப்பிவிடுவேன்”

“காசு வேணும்னா கொடுக்கறோம் இவனை எழுப்பிவிடுமா...தாயே”

“ஜக்கம்மா பிச்சை எடுக்காது. குறிகேட்டு காசு கொடுத்துட்டுப்போ...”

பீச்சில் உலாத்தும் ஜக்கம்மாவின் மேன்மையான கொள்கை எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.

“அம்மா இன்னைக்கு( 6 ஜூலை ) உலகக்கோப்பை கால்பந்து போட்டியில உருகிவே நாடும், நெதர்லாந்தும் போட்டி போடறாங்க. அதில் யாரு ஜெயிப்பானு சொல்லு”

கண்களை மூடி ம்ம்ம்ம்ம்ம் என வாயில் சப்தம் எழுப்பினாள் அந்த பெண். பிறகு கண்களை விரித்து எங்களை பார்த்து“உருகுவே இன்னைக்கு தோத்து போயிடும்” என்றாள்.

என் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்தேன். மீண்டும் குச்சியால் கோவிந்தை தட்டினாள். அவன் எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்பது போல பேந்த பேந்த முழித்தான்.

அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்னது உங்களுக்கு ஜக்கம்மா சொல்லுவதில் நம்பிக்கையில்லையா? அந்த குச்சியுடன் உங்ககிட்ட வந்தா தெரியும்...


Saturday, July 3, 2010

கிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..!

நேற்று வீதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிளி ஜோதிடர் எதிர்ப்பட்டார். ஐயா எதிர்காலம் பார்க்கறீங்களா என்றார்.

ஜோதிடரே எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் எதிரா இருக்க பிடிக்காது. இணக்கமா வேணும்னா இருப்பேன். எதிர்-காலம் வேண்டாம் என்றேன்.

ஐயா நீங்க கிளிக்கு வேலை கொடுத்தா அதுக்கு நான் ரெண்டு நெல் மணி போடுவேன். உங்க புண்ணியத்தில அது சாப்பிடும் என்றார்.

சரி நான் பார்க்குறேன், ஆனால் என்னை பற்றி அல்ல. உலக கால்பந்து போட்டி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் கிளியிடம் சீட்டு எடுக்கச்சொல் என்றேன்.

கிளிக்கு நெல் கிடைத்தால் போதும் என தன் விரிப்பை விரிந்து சீட்டுக்களை அடுக்கினார்.


நான் முதல் கேள்வி கேட்டேன் “இன்று (3-ஜூலை) நடக்கும் அர்ஜெண்டினா - ஜெர்மனி போட்டியில் யாரு வெற்றி பெறுவார்கள்?”

கிளி என்னை சைடாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தத்தி தத்தி சென்று ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. அதில் தாமஸ் முல்லர் என்பவரின் புகைப்படம் இருந்தது. அவர் ஜெர்மனி அணியின் முதன்மை வீரர். ஓ கிளி ஜெர்மனி வெற்றி பெரும் என்கிறதே..!

இவ்வளவு சூட்டிப்பான கிளியை நான் கண்டதில்லை. அதனால் என் அடுத்த கேள்வியை கேட்டேன், “கிளியே இன்று பராகுவே மற்றும் ஸ்பெயின் அணி விளையாடும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்”?

தன்னை தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு மீண்டும் சீட்டின் வரிசையில் தேடத்துவங்கியது கிளி. முடிவில் ஒரு சீட்டை எடுத்து தந்தது. அதில் பராகுவே அணி தலைவர் டென்னிஸ் கண்ஸா படம் இருந்தது. கிளியின் ஜோதிட அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது..!

அப்படியானால் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி பராகுவே நாட்டை சந்திக்கும் போலும் என நினைத்துக் கொண்டேன்.

“கிளியே நீ கூறியவை சரியாக இருந்தால் நாளை இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றி உன்னிடம் கேட்கிறேன். இந்தா சில நெல்மணிகள்” என அதன் முன் வீசினேன்.

என்ன தான் உலக கோப்பை அணிகள் பற்றி கூறினாலும் கிளிக்கு கிடைக்கப் போவது என்னவோ நெல்மணிகள் தான்.

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.

நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!

Monday, September 7, 2009

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

டிஸ்கோ லோகுவின் கடைக்கு வந்தான் மெண்டல் பாஸ்கர்.

“என்னடா காலையிலேயே வந்துட்டே...” இது டிஸ்கோ லோகு.

இருங்கள்...இவனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? டிஸ்கோ லோகு. என்றவுடன் தொப்பியில் ஒரு கையும் கால்சட்டையின் ஜிப்பில் ஒரு கையும் வைத்து மூன் வாக் போவான் என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு அதிகப்பிரசங்கி...! நகரின் மையத்தில் மணவறை அலங்காரம், சீரியல் லைட்டிங் செய்யும் கடைவைத்திருப்பவன். அதனால் இவன் பெயர் 'டிஸ்கோ' லோகு.

மெண்டல் பாஸ்கர் இவனின் உற்ற சகா. மெண்டல் பாஸ்கர் என்றவுடன் ஒரு அரை லூஸை நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களுக்கு நூறு மார்க். அவன் அப்படித்தான். திடீரென உணர்ச்சிவசப்படுவான் ஏன் எதுக்கு என அவனுக்கே தெரியாது.

இருவருக்கும் முழுநேரத்தொழில் பக்தியை பரப்புவது. உபதொழில் டிஸ்கோ டெக்கரேஷன்.

காலையில் டீ குடித்துவிட்டு பைக்கில் நகரை உலா வருவார்கள். காரணம் என்ன தெரியுமா? எல்லாம் ஆன்மீக தேடல்தான். நகரில் புதிதாக யாராவது ஆன்மீகவாதி வருவதாக போஸ்டர் பேனர் இருந்தால் அதை பார்த்து குறித்துகொள்ளுவார்கள். பிறகு அவரிடம் சென்று ஆசி பெறுவார்கள். அல்லது யோக பயிற்சி கற்றுக்கொள்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்


ஆன்மீகவாதியின் மகிமைகளை விளக்குவார்கள். ஆன்மீகவாதியின் படத்தை வைத்து பூஜித்து தினமும் பக்தி மணம் கமழ பஜன் செய்வார்கள். இது எல்லாம் அடுத்த ஆன்மீகவாதி பற்றிய போஸ்டர் ஒட்டும்வரை நடக்கும்.

புதிய ஆன்மீகவாதியை பின்பற்ற துவங்கியதும் பழைய ஆட்களை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்வது இவர்களின் வாடிக்கை. இல்லை என்றால் இவர்களின் நண்பர்கள் புதியவரை பின்பற்றமாட்டார்களே?

தனது இருதயம் கோளாறு , ஒரு ஆன்மீகவாதி சொஸ்தபடுத்தியதாகவும் லோகு அடிக்கடி வெளியே சொல்லுவான். உண்மையின் அவனுக்கு ஒரு கேடும் இல்லை. இப்படி சொன்னால் தானே தான் வழிபடும் ஆன்மீகவாதியை பிறர் மதிப்பார்கள்?

மெண்டல் பாஸ்கர் இதற்கு ஒரு படிமேல். ஒரு ஆன்மீகவாதியை பார்க்க பேருந்து ஏறினானாம், டிரைவர் சீட்டில் அந்த ஆன்மீகவாதியே உட்கார்ந்து 'வாடா என் மகனே' என அழைத்திருக்கிறார். உடனே அவன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, உங்களை காண கிளம்பினேன் நீங்களே இங்க இருக்கீங்களே என கூறி பேருந்திலிருந்து இறங்கி திரும்பி ஊருக்கு வந்துவிட்டான். வரும்பொழுது மறக்காமல் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆசிரமத்திற்கு போன் செய்து ஆன்மீக குரு அங்கேயும் இருக்கிறாரா என கேட்டுகொண்டான். இரண்டு இடத்தில் காட்சி கொடுத்தால் தானே அதிசயம்?

இப்படியே இருவரும் செய்வதால் டிஸ்கோ லோகுவும், மெண்டல் பாஸ்கரும் நாட்டாமையின் தீர்ப்பு இல்லாமலே ஊரில் ஒதுக்கிவைக்கபட்டனர். ஆனால் இருவரும் தாங்கள் ஆன்மீக முன்னேற்றத்தால் மக்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக எண்ணிக்கொண்டார்கள்.

ஆன்மீக பெருவெள்ளத்தில் இப்படி அவர்கள் மூழ்கி திளைக்கும் ஒரு காலை நேரத்தில் தான் மெண்டல் பாஸ்கர் , லோகுவின் கடைக்குவந்தான்...

“ஒன்னும் இல்லைடா மச்சான், இன்னைக்கு காலையில நம்ம வீட்டு பக்கம் ஒரு பேனர் பார்த்தேன். ஒரு ஸ்வாமிஜீ நம்ம ஊருக்கு வரார். அவரை சந்திச்சாலே வாழ்க்கையில் பல அதிசயம் நடக்குதாம். கேட்ட வரத்தை கொடுப்பாராம்...”

“போடா லூஸு... இதை எல்லாம் நம்புவாங்களா?”.. என்றான் டிஸ்கோ லோகு.

லோகு இப்படித்தான் முதலில் நம்பமாட்டான், குதர்க்கமாக பேசுவான். நம்பிவிட்டான் என்றால், அதை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள மாட்டான். அவன் பின்பற்றும் சாமியார் ஒருவரை இன்னும் பரோலில் சந்தித்துவருகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“லோகு நம்புடா, இப்படி அவநம்பிக்கையா இருந்து நல்ல சான்ஸ்சை மிஸ் பண்ணிடாத.”

”டேய் பாஸ்கி, கேட்டது எல்லாம் கிடைச்சா மனுஷனுக்கு ஆணவம் வந்துடும்னு நீ படிச்சது இல்லையா?”

”அதெல்லாம் ரொம்ப பழைய தத்துவம்டா... இது புதுசு கண்ணா புதுசு. பாரதியாரே வரம் கேட்டுருக்கார் தெரியுமா?”

”அப்படியா? என்னடா வரம் கேட்டார்” என்றான் டிஸ்கோ லோகு.

பாரதியார் பாடல்கள் புத்தகத்தை எடுத்து உரக்க படிக்கதுவங்கினான் மெண்டல் பஸ்கர்.


நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலி என்னியல்பு அறியாயோ?

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

“டேய் பாஸ்கி ...நிறுத்து..... ” இடைமறித்தான் லோகு.

“இது ஒரு சினிமாவில வரும் வசனம். கமல் பேசுவார். யாரை ஏமாத்த பார்க்கற?”

“கஷ்டம்டா லோகு, இது பாரதியார் பாடல். இதில் இருக்கிறதை தாண்டா அவர் பேசினார்...”

”சரி மேல படி....”


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

பழைய சரித்திர படத்தில் வரும் வசனத்தை போல ஏற்ற இறக்கத்துடன் படித்து முடித்தான் மெண்டல் பாஸ்கர்.

“கேட்டியாடா லோகு பாரதியார் என்ன எல்லாம் கேட்டர்னு...? நாமும் அந்த ஸ்வாமிஜீ கிட்ட கேட்பமா?”

“பாரதியார் கேட்டது இருக்கட்டும். காளி தேவி அவருக்கு இதெல்லாம் கொடுத்தாளா?”

“லோகு நீ வர வர நாத்திகன் மாதிரி பேசர...”

“பாஸ்கி காளிகிட்ட இவ்வளவு அவர் கெஞ்சி, மிரட்டி கேட்டே கிடைக்கல, இந்த ஸ்வாமி கிட்ட கேட்ட கிடைக்குமா?”

“இவர் சாதாரண ஸ்வாமிஜீ இல்லை”

“பின்ன? குருவா?”

“இல்லை”

“இறைவனின் தூதரா?”

“இல்லை”

“பின்ன யாரு. சொல்லித்தொலை”

“அவரே கடவுள் தாண்டா”

“..........................................”
டிஸ்கோ லோகு ஒன்றும் பேசாமல் மெண்டல் பாஸ்கரை பார்த்தான்.


”பாரதியார் ரொம்ப காலம் முன்னாடி வாழ்ந்துட்டார். இப்போ வாழ்ந்திருந்தா ஸ்வாமிஜீயின் நிகழ்ச்சிக்கு வந்து இந்த பாட்டை பாடிருந்தா அவருக்கு எல்லாம் கிடைச்சுருக்கும்”

“அப்படிங்கற?.. சரி நாம போலாம்.”

--------------------------------------------------------------
டுத்த நாள் நகரின் ஒதுக்குபுறமாக இருந்த அந்த பொருட்காட்சி அரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிஸ்கோ லோகு தனது செல்வாக்கை பயன்படுத்தி முன்வரிசையில் சென்று அமர்ந்தான். மெண்டல் பாஸ்கருக்கு உற்சாகம் தாங்கவில்லை.வரிசையாக ஸ்வாமிஜீயிடம் சென்று அனைவரும் வரம் வாங்கிகொண்டிருந்தார்கள். மெண்டல் பாஸ்கரின் முறை வந்தது. பரபரப்புடன் சென்று அவரை கட்டி அணைத்துகொண்டான். கண்ணீர்விட்டு அழுதான். அவன் கிளப்பிய ஓலம் அங்கே பாடிய பஜனையால் அமுக்கபட்டது. அவனை தேற்றிய ஸ்வாமிஜீ உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்.

‘நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்க வேண்டும்” என்றான் மெண்டல் பாஸ்கர்.

ஸ்வாமிஜி அவனுக்கு அவரின் பெரிய படத்தை கொடுத்தார். ”இதை வைத்துக்கொள். நான் உன்னுடன் எப்பொழுதும் இருப்பேன்” என்றார்.மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தான் பாஸ்கர்.

கவனிக்கவும்...வெறும் பாஸ்கர்.

ஸ்வாமிஜீயின் படமும், இவனின் அடைமொழியும் பரிமாற்றம் அடைந்திருந்தது....!

அடுத்து டிஸ்கோ லோகுவின் முறை....

அவரின் முன் முழந்தாளிட்டு நின்றான் டிஸ்கோ லோகு....

சுற்றியும் பார்த்தான்... ஸ்வாமிஜீயின் சிஷ்யர்கள் அவரின் அருகில் அதிகமாக இருந்தார்கள். டிஸ்கோ லோகுவின் முகத்தை பார்த்த ஸ்வாமி அவனின் உள்ள கிடக்கையை புரிந்து கொண்டு அனைவரையும் விலகி நிற்க சொன்னார்.

டிஸ்கோ லோகு தனது வரத்தை கேட்க துவங்கினான்.....

“ஸ்வாமி நீங்க போன வருஷம் வந்த போதும் சரி, இப்போ வந்திருக்கும் பொழுதும் சரி.... உங்க மேடை அலங்காரம் எல்லாம் நான் தான் செஞ்சேன்.... ஆனா உங்க ஆளுக எனக்கு பேமெண்ட் கொடுக்கல... நீங்க தான் ஸ்வாமி எனக்கு அது கிடைக்க வரம் கொடுக்கனும்”

ஸ்வாமிஜீ அவனை பார்த்தார்.....தனது சட்டை பாக்கெட்டில் இருந்து விசிடிங் கார்ட் எடுத்து அவரிடம் கொடுத்தான் டிஸ்கோ லோகு.

ஸ்வாமிஜீயும் அவர் அருகில் இருந்த நகரின் பெரிய மனிதரை அழைத்து அதை கொடுத்தார். பெரிய மனிதர் டிஸ்கோ லோகுவை பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமி தனது கைகளில் வரம் அருளினார்.

கடவுளின் வரத்தால்.....டிஸ்கோ லோகு தன்யன் ஆனான்

நீங்களும் முயற்சி செய்யுங்கள்....
உங்கள் வாழ்க்கையும் வரங்களால் நிரப்பப்படலாம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்...
தட்டுங்கள் திறக்கபடும்...!

---------------------------------------------------------
டிஸ்கி 1 : படத்தில் இருப்பவர் மாடல் மட்டுமே. அவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. :))

டிஸ்கி 2: இந்த புனைவு யாரையும் குறிப்பது அல்ல.
..!

Sunday, August 2, 2009

ஹிரண்யம்

உலகில் செல்வத்திற்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டாலும் ஹிரண்யம் என்ற பெயரில் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ஹிரண்யம் என வார்த்தையை நீங்களும் சொல்லிப்பாருங்கள் ஒரு கம்பீரம் வரும். ஹிரண்யம் அதிகமாக வைத்துகொண்டதால் ஒரு அசுரனுக்கு ஹிரண்யகசிப்பு என பெயர். அவனைத்தான் நரசிம்ம அவதாரத்தில் வயிற்றை பிளந்து வதம் செய்தார் ஸ்ரீ நாராயணர்.

பணம் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவனின் ஆட்டம் தாங்கமுடியாது என்பதற்கு ஹிரண்யகசிப்பு ஒரு உதாரணம். ஹிரயண்ய கர்ப்பா என்ற ஒரு இடம் உண்டு. அதாவது செல்வத்தின் கருவரை என அர்த்தம். லக்‌ஷ்மி இங்குதான் இருப்பாளாம். குபேரன் அவளின் ஃபண்டு மேனேஜர். இவர்களின் செல்வம் முழுவதையும் எடுத்துகொண்டன் கசிப்பு.

ஹிரண்ய கசிப்பு யாராலும் வெல்ல முடியாத வரம் வாங்கி இருந்தானாம். ஹிரண்ய கசிப்பு இப்படித்தான் எப்பொழுதும் என சொல்ல முடியாது, ஆனால் எப்பொதும் இப்படித்தான் என சொல்லாம்.

அவனின் தந்தை ஒரு மகரிஷி. அவர் சந்தியாகாலத்தில் தியானத்தில் இருக்கும் பொழுது அழகாகவும் தேஜசாகவும் தெரிந்தார். அவரின் மனைவிக்கு அவர் மேல் மோகம் வந்து தன்னுடன் இணைய சொன்னாள். அப்பொழுது சந்தியாகாலம் அதனால் இணைய கூடாது என மறுத்தார். மனைவி கேட்டும் இணையவில்லை என்பது அதர்மம் என்றார் மகரிஷியின் மனைவி. தர்மவழியில் இருக்கும் மகரிஷி இணைந்ததால் இரட்டைகுழந்தை பிறந்தது அதில் ஒருவன் தான் ஹிரண்யகசிப்பு. அவனின் தம்பியும் ஒரு அசுரனே.

நம் சாஸ்திரம் என்ன சொல்லுகிறது தம்பதிகள் இருவரும் இணைகிறார்கள் என்றால் அது அவர்களின் சொந்தவிஷயம். இணைந்து குழந்தை பெறுகிறார்கள் என்றால் அது சமூகம் சார்ந்த பொது விஷயம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இணையும் பொழுது நேரம் காலம் அவசியமாம். இன்று எத்தனையோ தம்பதிகள் எத்தனையோ ஹிரண்யகசிப்புவை பெற்று எடுத்திருக்கிறார்கள். மகரிஷியாக இருந்து சந்தியாகாலத்தில் கூடியதற்கே ஹிரண்யகசிப்பு மகன் என்றால் சாதாரண ஆசாபாசத்துடன் பெற்றால். ஆண்டவா...!

ஒரு ஹிரண்யன் இருந்தால் நரசிம்மர் வரலாம். இங்கே நரசிம்மர்கள் அவுட் ஆப் ஸ்டாக். எப்பொழுதும் மனது எதிர்மறையாகவே சிந்திக்கும். ஹிரண்யர்கள் பலர் வந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிரகலாதர்கள் தானே? அப்பொழுது பக்திமான் பிரகலாதன் இருக்க வேண்டுமானால் ஹிரண்யர்கள் இருக்க வேண்டுமல்லவா?

பணம் வந்து ஹிரண்ய கசிப்பு ஆடினான் என்றேன். அது எப்படி என்றால் தேவலோகத்தையும் அனைத்து லோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவதான். பணம் இருந்தால் அதிகாரம், பதவி என அனைத்தும் வாங்கிவிடலாம். தேவலோகம் என்பது ஒன்றும் இல்லை. நம் எல்லோருக்கு உள்ளேயும் ஹிரண்ய கசிப்பு இருக்கிறார். இல்லையென்றால் கோவிலில் சிறப்பு தரிசனம், அரசு அலுவலகத்தில் லஞ்சம் என அனைத்திலும் ஹிரண்ய வேலை செய்வோமா?.

ஹிரண்யம் என்ற பணம் வேலை செய்ய வேண்டுமானால் மனம் என்ற கருவி வேண்டும். ஆயிரம் ரூபாய் நோட்டு எடுத்து ஒரு பசுமாட்டிடம் காண்பியுங்கள் அதன் கண்கள் விரியாது. இதே ஒரு மனிதனிடம் காண்பித்தால் அவனுக்கு அங்கங்களில் பூரிப்பு தெரியும். மனிதனிடம் புல்லுக்கட்டை காண்பித்தால் ஒன்றும் நடக்காது. அவர் அவர் பணம் அவர் அவருக்கு.

மனம் என்பது ஒரு அதிசய உறுப்பு. ஆம் மனிதனின் மனம் ஒரு உறுப்புதான்.மனம் எங்கே இருக்கிறது என ஒருவரிடம் கேளுங்கள் தன் உடலுக்கு வெளியே இருக்கிறது என சொல்ல மாட்டார். உடலுக்கு வெளியே இல்லையென்றால் மனம் ஒரு உறுப்புதானே?

மனதை எப்படி கட்டுபடுத்துவது என என்னிடம் கேட்ப்பார்கள். மனதை நிற்க வைத்து ஒரு கயிரை எடுத்து வலமாக இருமுறை இடமாக இருமுறை கட்டுங்கள் என்பேன். அது எப்படி என கேட்டால் மனம் என்ற ஒன்று இருந்தால் தானே அது கயிறு ஒன்று இருப்பதை சிந்திக்கமுடியும்? இல்லாத ஒன்றையா கட்ட சொல்லுகிறேன். இருக்கும் மனதை கட்டுங்கள்.

ஆனால் மனது நீங்கள் நினைப்பது போல அல்ல, அதை கட்டுப்படுத்த முடியாது. மனம் எப்பொழுதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இப்பொழுது கூட பாருங்கள் உங்கள் மனது என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்கள் மனதை நான் வைத்திருக்கிறேன். இதை சோதிக்கலாமா? இந்த வரிகளுக்கு பிறகு இரண்டு பத்திகளை எழுதுகிறேன் மனது உங்கள் கட்டுப்பாடில் இருந்தால் மேற்கொண்டு அதை படிக்காமல் விட்டுவிடுங்கள் பார்க்கலாம்...!

மனது ஒரு ரப்பர்பேண்ட் போல வளையக்கூடியது. ரப்பர் வளையத்தை எடுத்து அதனுள் என் விரல்களை நுழைத்து இழுத்து விளையாடுவதை போல உங்கள் மனதையும் செய்ய முடியும். பாருங்கள் உங்கள் மனத்தில் எனது இரண்டு விரல்களை நுழைத்துவிட்டேன். இப்பொழுது வலமாக இழுக்கிறேன். உங்கள் மனம் வலப்பக்கம் அதிகரிக்கிறது.

விட்டுவிட்டேன். இடமாக இழுக்கிறேன் இடப்பக்கம் பாருங்கள் பெரிதாகிவிட்டது. அதையும் விட்டுவிட்டேன். இரண்டு பக்கமும் மாறி மாறி இழுக்கப்போகிறேன். தயாரா?

வலது ... இடது .... வலது ....
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
இலது ... வடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..

சரி உங்கள் மனதை இழுக்கவில்லை விட்டுவிட்டேன். மனதை ஆட்டுவிப்பது உங்கள் புலன்கள் தான். வலது இடது சொல்லும்பொழுது நடுவில் மாற்றி சொன்னேன் உடனே அதை கண்டு கொண்டீர்கள் தானே? உங்க புலன் மனதை இயக்குகிறது. உங்கள் புலனை மனம் மூலம் நான் இயக்குகிறேன். மனது இல்லை என்றால் இத்தனை பிரச்சனை இல்லை. உங்கள் மனம் என்னிடம் சிக்கி இழுபடாது.

உங்கள் மனம் எனது கருத்தில் தொங்குவதில்லை. எனது வார்த்தை ஜாலத்தில் தொங்குகிறது. எனது வார்த்தையை வைத்து கொண்டு என்ன செய்வீர்கள். ஆனாலும் இதை நீங்கள் படிக்க வேண்டி இருக்கிறது..

மனம் இருந்தால் பணம் பண்ணலாம். பணம் இருந்தால் மனம் பண்ண முடியுமா? ஹிரண்யம் என்பது மனசு இருக்கும் வரைதான். ஹிரண்ய கர்ப்பா என்றால் எங்கோ இருக்கும் இடமில்லை. உங்களுக்குள் ஹிரண்ய கர்ப்பம் இருக்கிறது. பணத்தை பிரசவிக்கும் கருப்பை ஹிரண்யம். மனம் இயங்கும் வரை கர்ப்பம் தரிக்க முடியாது. மனம் இருந்தால் நீங்கள் மலடுதான். சரி உங்கள் மனதை நான் ஏன் வைத்து விளையாட வேண்டும்? மனதை விட்டு விடுகிறேன்.

இப்பக்கத்தை மூடிவிடுங்கள்.

அனைத்தும் சுபம்.

Monday, July 20, 2009

மனம்


ஓம் ஓம் ஓம் .... இப்படி சொன்னால் மனசு அமைதி ஆகும்னு யோகா மாஸ்டர் சொன்னார்.. மனசு அமைதியாகனும்னா நான் யாருனு கேட்கனும்னு என் யோகா மாஸ்டரோட மாஸ்டர் சொன்னாராம்.
ரமணர் கூட இப்படித்தான் சொன்னார் அதற்காக நாம ரமணராக முடியுமா? ரமணாஸ்ரமம் ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கிற மயில் அருமையா கத்தும். எங்க தமிழ் வாத்தியார் கூட சொல்லுவார் மயில் கத்தும்னு சொல்லாதடா மயில் அகவும்னு சொல்லும்பார். திருவண்ணாமலையில எங்கையுமே மயில் அதிகமா இருக்காது.

ரமணாஸ்ரமத்தில தான் இருக்கும். கிரிவலம் வரும்போது பாத்திருக்கேன். இப்போ திருவண்ணாமலை நல்லா சுத்தமா அமைதியா இருக்கு. இதே பதினஞ்சு வருசம் கழிச்சு இப்படியே இருக்குமானு தெரியாது. இந்திர லிங்கம் பக்கதில வீடுகள் இல்லாம இருந்துச்சு. இப்போ நிறைய வந்திருச்சு. சுதாவும் ரெண்டு வருசமா வீடுகட்டனும்னு சொல்லறா இருக்கிற காசுல கம்பெனியே நடத்த முடியல இதுல வீடுவேற. அவளுக்கு எங்க என் கஷ்டம் தெரியுது.

கடனுக்கு வட்டி கட்டியே எனக்கு டிப்ரெஷன் ஆகுது. இந்திர லிங்கம்னு சொன்னதும் ஞாபகம் வருது இந்திர விழானு ஒரு படம் நமீதா நடிச்சுருக்கா... பார்க்கனும். நமீதா இருக்கானு சொன்னா சுதா வரமாட்டா. ஸ்ரீகாந்தை சொல்லி கூட்டிகிட்டு போகவேண்டியது தான். இப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல ஒரு படம் போயி பாதியில எழுந்து வரச்சொல்லி தகராறு பண்ணீட்டா.. அவளுக்கு குழந்தை மனசு. ஒரு நாள் காலையில திடீருனு என்னை கட்டிபிடிச்சுக்கிட்டு கொஞ்சினா... அவளுக்கு ஈவினிங் வரும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரனும்.

கதிர் ஈவினிங் வந்து பேமெண்ட் தறேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்தப்பிறகு தான் அடையார் ஆனந்தபவன் போகனும். சுதாவுக்கு பாசந்தி பிடிக்கும். அது நிலா மாதிரி இருக்கும். இப்படித்தான் ரசகுல்லாவை பாசந்தினு நினைச்சு வாங்கிவந்துட்டேன். நான் என்ன நார்த் இண்டியனா இதைபத்தி சொல்ல. அடுத்தவருஷம் யோகாமாஸ்டர் கைலாஷ் கூட்டிகிட்டு போறேனு சொன்னார்.

ஓம் ஓம் ஓம்...

இப்படியாக எனது இன்றைய தியானம் கழிந்தது...


Monday, June 1, 2009

எழுத்துப் பிறவி

னது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். “திலி என்ன அவசரம் உனக்கு” என்றால் அருகில் அமர்ந்திருந்த அவனது அலுவலகத் தோழி சரண்யா.

இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான தேகம் கொண்ட இளைஞன் திலீபன். அவனைவிட இரண்டு வயது இளையவள் சரண்யா. இருவரிடமும் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. திலீபன் எங்கே சென்றாலும் அவனுடன் ஒட்டுக்கொண்டு வருவது சரோ என அழைக்கப்படும் சரண்யாவின் பழக்கங்களில் ஒன்று.


“சரோ உனக்கு தெரியாது என்னோட பிரச்சனை. தினமும் ராத்திரி தூங்க முடியறது இல்லை. காலையில ஆபீஸ் வந்தா பாஸ் ஓட பிரஷர். நான் நானாக இல்லை.”


“நீ சொல்லறது விசித்திரமா இருக்கு திலி. ஸ்டில் ஐ காண்ட் பிலீவ் இட்.”


“சொன்னால் புரியாது சரோ. கண்ணை மூடினால் எனக்கு போன ஜென்ம விஷயங்களா தெரியுது. எங்க அம்மா - எனக்கு குழந்தையா தெரியறாங்க. நம்ம பாஸ் போன ஜென்மத்தில் எனக்கு மனைவியா இருந்திருக்காரு. அவரை மனைவியா பார்க்கறதா இல்லை பாஸா பார்க்கறதானே குழப்பம். ஒரே நேரத்தில் ரெண்டு வாழ்க்கை வாழ முடியுமா சொல்லு?”


“திலி இந்த கம்யூட்டர் காலத்தில போன ஜென்மம் இந்த ஜென்மம் எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கியா?”


“எஸ்னு சொல்லறதை தவிர வேற விளக்கம் இல்லை சரோ. என்னை நம்பு. எனக்கே முழுசா ஒன்னும் தெரியல. முழுசா தெரிஞ்சுக்கத்தான் நானும் நீயும் அந்த சாமியாரோட ஆசிரமத்திற்கு போறோம்.”


பச்சை பட்டு விரித்த புல்வெளிகள் வரவேற்க அந்த ஆசிரமத்தில் நுழைந்தது கார்...நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்த ஆசிரமத்தின் நடுவே பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டிருந்தது.
கைகள் கூப்பிய நிலையில் பெரிய கட்-அவுட்டில் சாமியார் சிரித்துக்கொண்டிருந்தார்..

புத்த பிக்‌ஷு போல இருந்த ஒருவர் இன்முகத்துடன் கரம் குவித்து வரவேற்றார். அவரின் தோள்பட்டையில் “In Silence" என எழுதி இருந்தது. அனுமதி சீட்டை பார்த்ததும் மெல்ல பின்தொடருமாறு சைகை காட்டிவிட்டு முன்னே நடந்தார்.

பிரம்மாண்ட கதவுடன் கூடிய ஒரு கருங்கல் கட்டிடத்திற்கு அழைத்து சென்று ஒரு அறையில் அமர்த்தினார். சுவரில் வெண் தாடியுடன் ஆனந்த சிரிப்பில் சாமியாரின் தத்துவங்கள் எழுதிய புகைப்படங்கள் மாட்டப்படிருந்தது. சில மணித்துளிகள் இடைவெளியில் சிறிய சலசலப்பிற்கு இடையே படத்தில் இருந்தவர் ஒரு நீண்ட வெள்ளை தாடியுடன் தரையை உரசும் அங்கியுடன் உள்ளே வந்தார்.

இவர்கள் முன் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். திலீபனும் சரண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மெல்ல கண்களை திறந்து இருவரையும் ஆழமாகப் பார்த்துவிட்டு திலீபன் மேல் கண்களை நிலைபடுத்தினார்.

“தம்பி, போனஜென்ம விஷயங்களால மனசு ரொம்ப சஞ்சலப்படுதா?” என்றார்.


இருவரும் இதை சற்று எதிர்பார்க்கவில்லை. திலீபன் ஆமோதிப்பதை போல தலையாட்டினான்..


அவர் தொடர்ந்தார்...“தம்பி. எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் இருக்கு இல்லையா. எப்பவோ ஒரு செயலை செஞ்சுருக்கீங்க இப்ப அது எதிர் செயலை செய்யுது. உன்னோட போன ஜென்ம கர்மாதான் உன்னை இப்படி சங்கடப்படுத்தும். ஏதோ நிராசை இருக்கு... ” என்றார் அமைதியாக.


“ஒன்னும் புரியலை சாமி. போன ஜென்ம விஷயங்கள் அறைகுறையாத்தான் தெரியுது. ஒருத்தரை பார்த்தா அவங்களுக்கும் எனக்கு போன ஜென்ம பந்தம் என்னானு புரியுது. ஆனா மேற்கொண்டு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள நிகழ்காலத்திற்கு வந்துடறேன். எனக்கு இதிலிருந்து விடுதலைகொடுங்க. பல நாட்களா இதில் சிக்கி இருக்கேன்.”


“கவலைப்படாதீங்க. உங்களோட ஜென்மாந்திர பந்தம் என்னானு தெரிஞ்சுக்குங்க அதை பூர்த்தி செஞ்சா போதும். நான் உங்களுக்காக ப்ரார்த்தனை செய்யறேன். என் தகப்பன் இருக்கான் அவன் பார்த்துப்பான்”


பொருமை இழந்தவளாக வேறு திசையில் பார்த்தாள் சரண்யா..


“ஏன்னம்மா என்ன ஆச்சு”?


“சாமி.. இந்த விஞ்ஞான காலத்தில இதெல்லாம் நம்ப முடியல. திலிக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுது? இது போன ஜென்ம சிக்கல் மாதிரி தெரியல மனநிலையில் ஏதோ பிரச்சனையோனு சந்தேகம்.”


“விஞ்ஞான கண்ணோட்டத்தில் இதை எல்லாம் நம்ம முடியாதுமா... மீன் குஞ்சுக்கு யார் நீந்த கத்துக்கொடுத்தா? ஆட்டுக்குட்டி பிறந்தவுடனே துள்ளி ஓடுதே இது எப்படி? எந்த ஒரு பிறப்புக்கும் பிறந்த உடனே சில குணம் இருக்கும். இது எல்லாம் ஒரு ஜென்மத்தில் செஞ்சதை மீண்டும் செய்யுது. அது போல மனித பிறப்புக்கு எதுவும் இல்லை. காரணம் மனுஷன் விழிப்புணர்வோட பிறக்கும் ஜீவன். அவனுக்கு குணம் ஏற்பட்டா அவனால வாழமுடியாது. திலிபனுக்கு விழிப்புணர்வு நிலையில் அவனோட போன ஜென்ம சமஸ்காரம் தடுத்து இழுக்குது. அதனால அவனோட நிகழ்கால வாழ்க்கை பாதிக்குது..”


“சாமி திலீக்கு மட்டும் இது எப்படி தெரியுது? எனக்கு ஏன் தெரியல?”


“நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்னு பகவத்கீதையில் பகவான் சொல்றார். பாகவதத்தில ஒரு உபகதை இருக்கு. ஒரு முனிவர் காட்டில் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். கடைசி காலத்தில ஒரு மான் அவர்கிட்ட அடைக்கலம் ஆகிடுது. மானை பிரியமோட வளர்க்கிறார்.

இறக்கும் தருவாயில அந்த மானை நினைச்சுக்கிட்டே பிறக்கிறதால அவர் அடுத்த ஜென்மத்தில மானாவே பிறக்கிறார். இறக்கும் போது நம்மோட கடைசி எண்ணம் எதுவோ அதுவாவே அடுத்த பிறவி எடுப்போம். இதைத்தான் புராணங்களும் சொல்லுது. நீ மார்டனா வளர்ந்த பொண்ணு அதனால நம்பிக்கை இல்ல...உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா உங்க போன ஜென்மத்தை உங்களுக்கு காட்டறேன்”

தனக்குள் இருக்கும் பிரச்சனைக்கு விடையைத்தேடி ஒரு அமானுஷமான முயற்சிக்கு தயாரானான் திலீபன். சரண்யாவின் தயக்கத்தை பார்த்த திலீபன் கண்களால் கெஞ்சினான்.அவளின் மெளனம் சம்மதமானது.


“சரி சாமி. நாங்க ட்ரை பண்ணரோம்”


சாமியார் இருவரையும் அருகில் இருக்கும் தியான அறைக்கு கூட்டி சென்று கண்களை மூடி அமரவைத்தார்.. சில நிமிடங்கள் அமைதியாக கரைந்தது..

இருவரின் புருவ மத்தியில் தனது விரலால் மெல்ல அழுத்தினார் ..
பல எண்ணங்களால் சிதறி இருந்த அவர்களின் மனம் ஒரு ராட்டினம் போல சுழன்று ஒரு புள்ளியில் அடங்கியது.... அடங்கிய புள்ளி வெடித்து பல்வேறு காட்சிகளாக விரிவடைந்தது....

---------------------------------------------------------------------------

ன்ணா ஒங்களத்தான்... நான் மாடா மனுஷியா காட்டுகத்து கத்தறேன் ஒரு வார்த்த பதில் பேஷரேளா? வீட்டுக்கு வெளிய உங்க நாய் கத்தறது.... இங்கே நான் கத்தறேன் ....அவ்வளவுதான் வித்தியாசம்...எல்லாம் என்னோட தலைவிதி...”

“இப்போ என்னடி என்னை பண்ண சொல்றே?” . வீட்டுக்குள் வந்த நாய் அவன் கால்களை சுற்றி வளையவந்தது.

“இப்போ என்ன பண்ணனும் அத்தான் எல்லாமே பண்ணிட்டேளே.. நல்ல சர்க்கார் உத்தியோகம்னு சொல்லி உங்களுக்கு என்னை கொடுத்தா.. கல்யாணம் ஆன அடுத்த வாரமே...என் தோப்பனார் முகத்தில கரியை பூசினாப்போல ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேள். வீட்டுக்கு ஒரு பைசா கொடுக்க துப்பில்லை. கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு என் ப்ராணனை வாங்கறேள்.. உங்களை கல்யாணம் பண்ணின அஞ்சு வருஷத்தில இதோ இடுப்புல இருக்கே இது ஒன்னுதான் மிச்சம்... மாமனார் காசில சாப்பிடரோம்னு ஒரு தோஷமும் உங்களுக்கு தோனலை. போனமாசம் அவரையும் பகவான் அழைச்சுண்டுட்டான். விடிஞ்சா கடங்காரன் ஒவ்வொருத்தனா வந்து வாசல்ல நிக்கறான்...நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு”


நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு... என்ற கடைசி வார்த்தைகள் தீனதயாளின் காதுகளில் ரீங்காரமிட்டது...


பாதி புகைத்து அணைத்த சிகரெட்டை மீண்டும் எடுத்து பற்றவைத்தான்...


என்ன செய்ய...யுத்த நடக்கறது...பத்திரிகைகளுக்கு காகிதமே பிரிட்டீஷ் அரசாங்கம் ரேஷனில் தான் கொடுக்கறா... இந்த லக்‌ஷணத்தில் என் கதை வெளியிட பத்திரிகை முன் வந்து, பிறகு அவர்கள் சன்மானம் அனுப்பினால் குடும்ப்பத்தை ஓட்டனும். எத்தனை வருடம் தான் இந்த முயற்சியில் இருப்பது? நேற்றுகூட பத்திரிகைகளில் இருந்து கதைகள் திரும்ப வந்துடுத்து. இனி தபால் செலவுக்கு கூட பைசா இல்லை. கல்கி மாதிரி வாரனும்னு திலி என்றெல்லாம் பேரை மாத்தி வைச்சு பார்த்தாச்சு... பச்... என்னத்தை சொல்ல ஒரு மனுஷாள் மதிக்கறாளா? புலவன் வாழ்க்கை புலராதுனு சொல்லுவா அதுமாதிரிதான் இருக்கு..


ஒரு முடிவு எடுத்தவனாக...தனது மேஜையை மேல் தேடினான்... பேனா வைக்கும் பெட்டியில் ஐந்தணா இருந்தது. தனது சட்டையின் கைமடிப்பில் வைத்துக்கொண்டு கடைவீதிக்கு புறப்பட்டான். அவனது நாய் அவனை பின் தொடர்ந்தது..


கொஞ்சம் அரிசியும், வாசம் இல்லாத கெமிக்கல் விஷமும் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அரிசியை விட விஷம் விலை ஜாஸ்தியாக இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்துக்கொண்டான்.


பையை திண்ணையில் அமர்ந்திருந்தவள் முன் வைத்தான்.. “என்ன துரை அரிசியேல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேள்? தெவசத்துக்கு போனா இன்னும் கூட கிடைக்குமே.. சரி இன்னைக்கு கஞ்சியாவது கிடைக்கட்டும்..”


உலை கொதித்துகொண்டிருந்தது... தீனதயாளின் மனமும் தான். தனது குழந்தையை குளிப்பாட்டும் மனைவியை பார்த்தான்.. மனது மேலும் ரணமானது...மெல்ல நடந்து அடுப்புக்கு அருகில் சென்று விஷத்தை கலந்தான்...


எத்தனையோ கதைகள் எழுதி அதை வெளியிட முயற்சி செய்தும் ஒன்னும் பலன் இல்லை...இவளை போல வைர அட்டிகைக்கும் பட்டு சேலைக்குமா ஆசைப்பட்டு எழுதினேன்? சமூக கோவம்... இலக்கியத்தில இருக்கிற ஆசை.. நாலுபேரு என்னை ஒரு கதாசிரியன்னு சொல்லனும்.. இதை தவிர என்ன வேணும்?
சமூகத்தை திருத்த கதை எழுதனும்னு நினைச்சேன். சமூகமே என்னை புறக்கணிக்கும் போது இந்த சமூகத்தில ஏன் வாழனும்...

நங்... கஞ்சியை ஊற்றிய தட்டு இவன் முன் விழுந்தது.....“இந்தாங்கோ இதை குடிச்சுட்டு ஜம்முனு கதை எழுதுங்கோ..”


மனைவியும் குழந்தையும் கஞ்சியை குடிப்பதை பார்த்தான்... தனக்குள் எந்த சலனமும் ஏற்படாதது அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது...


அமுதத்தை குடிப்பது போல மெல்ல மெல்ல ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.... கண்கள் சொருக ஆரம்பித்தது... பார்வை இருண்டது..
கைகளில் இருந்து அந்த தட்டு தவறி கீழே விழுந்தது....வெட்டப்பட்ட காட்டு மரம் போல சரிந்தான்.

சிதறிய கஞ்சியை அவன் வளர்க்கும் நாய் சரோஜினி எனும் சரோ சுவைக்க துவங்கியது...

---------------------------------------------------------

“திலி என்ன ஆச்சிரியம் சண்டே ஆனா குளிக்காம சோம்பேறியா பெட்டுல படுத்திருப்பியே.. வாட் ஆர்யூ டூயிங் மேன்..”

“கதை எழுதறேன் சரோ”

“வாவ்.. என்ன இது. உலக மக்களே இங்கே பாருங்க... சாப்ட்வேர் ப்ரொபெஷனல் கதை எழுதறார்”


“சரோ எப்ப பார்த்தாலும் உனக்கு கிண்டல் தான். இண்டர்நெட்ல உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதை போட்டி வைச்சுருக்காங்க. அதில பார்டிசிபேட் பண்ண போறேன்”


“எனது போட்டியா... யூ ஆர் கிரேஸி திலி ? . முதல்ல எழுத கத்துக்கோ அப்பறம் போட்டிக்கு போகலாம்.”


“ இப்போதான் ஆரம்பிச்சுருக்கேன்.. நான் தான் ஏற்கனவே நிறைய எழுதி பார்த்திருக்கேனே..” என அவளை பார்த்து கண் சிமிட்டினான் திலீபன்.


“திலி...அப்போ நான் என்ன செய்ய எனக்கு போர் அடிக்கிதே..”


“உனக்கு வேணா பிஸ்கட் வாங்கிதறவா ?” என்ற திலீபனை விரட்ட தொடங்கினாள் சரண்யா...


மேஜை மேல்.. “தனது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். ..” என எழுதபட்ட காகிதம் காற்றில் படபடத்தது...


---------------
[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதை போட்டிக்காக எழுதபட்டது]

டிஸ்கி : ஸ்வாமி இது உங்களுக்கு தேவையா? நீங்க கதை எழுதி போட்டிக்கு எல்லாம் போலாமா? என கேட்பவர்களுக்கு விளக்கம் வரும் பதிவில். இப்போதைக்கு கதை எப்படி இருக்கு என்ற நடுநிலையான விமர்சனத்தை கூறவும்.