Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, June 29, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 4

உலகில் ஒரு சமுதாயம் தங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சமூகத்திற்கு ஊறு விளைவிக்காமல் அதே சமயம் முன்னேற்றம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டது என்றால் அது வேதகால சமூகம் மட்டுமே என்பேன்.

ஒருவர் மற்றொருவரை படுகொலை செய்துவிடுகிறார். உடனே அவை நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம். நீதி விசாரணையில் பல ஆண்டுகள் சென்றுவிடும். இறுதியில் ஒரு நாள் அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவார்கள். பிறகு அவர் ஜனாதிபதி மனு அளித்து தண்டனையை குறைப்பார். மேல் முறையீடு செய்வார். இந்த சமூகமும், ஊடகங்களும் குற்றவாளியை பற்றியும் அவனுக்கு கிடைத்த தண்டனை பற்றியும் பேசும். ஆனால் அனைவரும் படுகொலை மூலம் இறந்தவரின் குடும்பத்தை மறந்துவிடுவோம்.

படுகொலை செய்தவனை தாங்களும் தண்டனை என்ற பெயரில் படுகொலை செய்கிறது தற்கால சட்டமும் நீதியும். வேதகாலத்தில் இருந்த தர்மசாஸ்திரம் கொலை குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனை என்ன தெரியுமா? இறந்தவனின் குடும்பம் மேம்பட்டு விளங்கும் வரை தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சொத்தில் பெரும்பகுதி கொடுக்க வேண்டும். மேலும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்கிறது. வேதகால சமூகம் தங்களின் செயல் எப்பொழுதும் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இருக்க வேண்டும் என நினைத்தது.

வேதகால நடைமுறையில் ஒன்றுதான் அக்னிஹோத்ரம் என உணருங்கள்...! அதனால் தனிமனிதனும் சமூகமும் மேம்படும் என்கிறது இதன் அடிப்படை உண்மை. உங்கள் புறச்சூழலும் அகச்சூழலும் ஒன்று சேர மேம்பாடு அடைவது அக்னிஹோத்ரம் என்ற நடைமுறையினால் மட்டும் தான்.வறட்டியையும் அரிசியையும் எரிப்பதால் என்ன நடக்கும்? அக்னி ஹோத்திரத்தால் சுற்றுசூழலில் என்ன நடக்கும்? ஸ்வாமி சரடு விடுகிறாரே என நினைக்க தோன்றுகிறதா?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமானல் நம் வாழும் சூழலில் அயனியாக்கம் என்பது எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வு. எதிர் அயனிகள் மற்றும் நேர்மறை அயனிகள் என்ற இருதன்மை சூழலில் இருக்கும்.வேதி வினைகளில் அயனியாக்கம் என்பது ஒரு நிகழ்வு உண்டு. தனிமம் மற்றும் வாயுக்களின் அனுவில் அயனியாக்கம் நடைபெறும் பொழுது அதன் தன்மைக்கு ஏற்ப மாற்றம் அடைகிறது.

அக்னிஹோத்ரம் நடைபெறும் சூழலில் உள்ள ஆக்ஸிஜன் அயனியாக்கம் அடைந்து எதுவாக மாறுகிறது தெரியுமா? ஓசோனாக மாறிவிடுகிறது. அதாவது O2 என்பது O3 ஆக மாற்றமடைகிறது. எளிமையாக கூறுவது என்றால் ஓசோன் என்பது பல கோடி ஆக்ஸிஜனை டெபாஸிட் செய்து வைத்த வங்கி கணக்கு. அதில் வரும் வட்டியே நம்மை வளமாக்கும். ஓசோனுக்குள் பல மடங்கு ஆக்ஸிஜன் உண்டு. ஆக்ஸிஜனை உருவாகுவதை காட்டிலும் ஓசோனை உருவாக்கினாலேயே பலமடங்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்.

இப்பொழுது சொல்லுங்கள் வாகனத்தில் பயணித்தும், மரங்களை வெட்டியும் ஓசோனை கெடுக்கும் சமூகம் நாகரீகம் அடைந்ததா? அல்லது அக்னிஹோத்ரம் மூலம் ஓசோனை வளர்க்கும் சமூகம் நாகரீகம் அடைந்ததா?

ஓசோனில் ஓட்டை விழுகிறது என்றவுடன் நவீன விஞ்ஞானிகள் செய்தது என்ன? நம்மை நோக்கி விரல் நீட்டினார்கள். உங்களின் வாகன பயன்பாட்டால் தான் உலகம் நிர்மூலம் ஆகப்போகிறது என்றனர். ஆனால் ஓசோனை மேம்படுத்த இந்த நிமிடம் வரை என்ன செய்தார்கள்?

மாற்று எரிபொருள் கண்டுபிக்க பல பில்லியன்கள் செலவு செய்கிறார்கள். இனிவரும் காலத்தில் மாற்று எரிபொருளால் வாகனம் ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். ஆனால் இதுவரை கெட்டு போன ஓசோனுக்கு என்ன பதில்?

ஓசோனை மேம்படுத்தவும் இனி கெடாமல் காக்கவும் இருக்க ஒரே வழிதான் உண்டு. அது அக்னிஹோத்ரம்...!

அறிவியல் ஆய்வுகளில் அக்னிஹோத்ரம் ஆச்சரியப்படும் விடைகளை கொடுத்திருக்கிறது. மேலை நாட்டில் அக்னிஹோத்ரம் காங்கிரஸ் என்று ஒரு சங்கம் துவங்கி விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அக்னிஹோத்ரத்தின் அறிவியல் உண்மைகளை உணர்ந்து பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

நம் சகோதரி ஒருவர் சாணம் வறட்டி கிடைக்கவில்லை என்கிறார். ஆனால் வெளிநாட்டில் வறட்டி என்றாலே என்ன என தெரியாதவர்கள் அக்னிஹோத்திரம் தினமும் செய்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக தெரியுமா? கடந்த 15 வருடங்களாக. நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம்.

இவ்வளவு சிறப்பு மிக்க அக்னிஹோத்திரத்தை அனைவரும் செய்ய வேதகால சமூகம் அனுமதிக்கவில்லை. சிலர் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது என்கிறது...!

நண்பர்களே இந்த வரியை படித்ததும் கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு தயாராகிவிட்டீர்களா?

[அக்னி ஒளிரும்]
நன்றி : Smithsonian national museum of natural history

Friday, June 25, 2010

அக்னி ஹோத்ரம் - பகுதி 3

நம் மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் எந்த காரியம் செய்தாலும் உடனடியாக அதற்கு பிரதி பலன் உண்டாக வேண்டும். இல்லை என்றால் அக்காரியத்தை அடுத்த முறை செய்ய மாட்டார்கள்.

தலை முடி வளரும் தைலம் என போலியாக ஒரு எண்ணெய்யை ஒருவர் தலையில் கட்டியிருப்பார். நம் ஆள் அதை விடிய காலை எழுந்து தலையில் தேய்த்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன் ஆயிரம் முறை கண்ணாடியை பார்ப்பார்கள். வாங்கிய பொருளின் பலனை சோதனை செய்கிறார்களாம்.

அதனால் தான் யாரேனும் என்னிடம் தியானம் செய்தால் என்ன பயன் என கேட்டால், “ஒரு பயனும் இல்லை என்பேன்”. தியானம் செய்தால் அந்தரத்தில் பறக்கலாம் என கூறுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடி தியானிக்க துவங்கி சில வினாடிகள் கூட கழிந்திருக்காது, கண்களை திறந்து எத்தனை அடி மேலே பறக்கிறோம் என குனிந்து பார்த்துக் கொள்ளுவார்கள். :)

இவ்வாறு இருக்க அக்னிஹோத்திரம் செய்தால் சூரிய பகவான் உங்களை ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கூட்டி சென்று பிரபஞ்சத்தை சுற்றிக்காட்டுவார் என்றால் என்ன நடக்கும்? :)

அக்னிஹோத்திரம் செய்து சில வினாடிகளில் வெளியே ஓடி சென்று குதிரை வண்டி வந்தாச்சா என பார்ப்போம்.

அக்னிஹோத்திரம் ஒரு வித யோக பயிற்சி போன்றது. தினமும் அக்னிஹோத்திரம் காலையும் மாலையும் செய்ய வேண்டும். தினமும் செய்ய செய்ய நம் உடல், நம் வசிக்கும் இடம், நம் ஆன்மா, நம் பாரம்பரியம் என பல்வேறு தளங்களில் அக்னிஹோத்ரம் பலன்களை அள்ளித் தெளிக்கும். இவற்றை பட்டியலிட்டு செய்வதை விட பூரண நம்பிக்கையுடன் செய்வதே நன்று.

சரி அக்னிஹோத்ரம் எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போமா?

அக்னிஹோத்ரம் என்ற புனித யாகம் செய்யும் முறையை படிப்படியாக காண்போம்.

அக்னிஹோத்ரம் செய்ய தேவையான பொருட்கள் :

1) சிறிய ஹோம குண்டம்,

ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.

2) சாண வறட்டி

சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.

3) முனை உடையாத பச்சரிசி.

இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.

4) பசு நெய்

சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.

இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.

அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :

சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.

அக்னிஹோத்ரம் செய் முறை :

ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.

பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.

நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும்.

இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது.

அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..


அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :

சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்

அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

அவ்வளவுதான். அக்னிஹோத்திரம் இது செய்வதற்கு ஏதேனும் கஷ்டம் உண்டா?

அக்னிஹோத்திரத்திற்கு என சின்னதாக ஒரு பை தயார் செய்து அப்பொருட்கள் அதனுள் வைத்திருந்து தினமும் பயன்படுத்தலாம்.
-----------------------


அக்னிஹோத்திர மந்திரங்களை சமஸ்கிருதத்தில் கூறமாட்டேன், செம்மொழியாம் தமிழ் மொழியில் கூறுவதாக இருந்தால் செய்கிறேன் என்பவர்களுக்கு தமிழ் மாத்திரைகள் (மந்திரங்கள்) கொடுக்கப்பட்டுள்ளது.

அக்னி வேள்வி :

கதிர் உயரும் நேரம் கூறும் மாத்திரைகள் :

கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.

கதிர் சாயும் நேரம் கூறும் மாத்திரைகள் :

அக்னியை சரணடைகிறேன்
அக்னியை இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.
-------------------------

அக்னிஹோத்ரம் கொடுக்கும் உண்மையான விளைவு என்ன?

நமக்கு அறிவியல் பூர்வமாக சொன்னால் தானே ஏற்றுக்கொள்வோம் ? நாம் எல்லோரும் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே... இருங்கள் விவரிக்கிறேன்.

(..அக்னி ஒளிரும்)

Thursday, June 17, 2010

அக்னி காரியம் - பகுதி 2

அக்னிஹோத்ரம் என்பது ஒரு வழிபாட்டு முறை அல்ல. பலர் அது ஒரு மதத்தின் வழிபாட்டு சின்னமாகவும். அக்னி வளர்த்தி யாகம் செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடிப்படையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று நான் அவ்வளவு தூய்மையானவன் கிடையாது. நான் வழிபடலாமா என கேட்கிறார்கள். எதற்கு இந்த தாழ்வு மனப்பான்மை?

பாரத கலாச்சாரம் சூரியனை ஆழ்ந்து ஆராய்ந்து வழிபட்ட சமூகம். அதனால் தான் உலகிலேயே எந்த கலாச்சாரமும் செய்யாத அளவில் சூரியனுக்கு கோவில் கட்டி வழிபட்டனர்.சூரியன் நம் கண் முன்னால் இருக்கும் இறையாற்றல் என கூறுகிறார்கள். மேலும் ஆறுவித வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடு என்பதும் ஒன்று. ஆகையால் சூரியனை வழிபடுவது நம் கலாச்சாரத்தில் ஒன்று.

ஒரிசா மற்றும் பல ஊர்களில் சூரியனார் கோவில் உண்டு. பிற மத கோவிலில் கூட சிவனை ருத்ர ரூபமாகவும், விஷ்ணுவை சூரிய நாராயணர் என்றும் வழிபட்டனர். கோவிலின் கட்டமைப்பில் கூட சூரியன் குறிப்பிட்ட நாளில் விக்ரஹத்தின் மேல் விழுமாறு செய்து மகிழ்ந்தனர். ஆக சூரியன் ஒரு தெய்வாம்சம் என்பது பாரத கலாச்சாரத்தின் சான்றாகிறது.

நம் உடல் பிரபஞ்சத்தின் வடிவமாக கருதினால் நம் ஆன்மா சூரியனாக இருக்கும். சூரியன் என்பது சுயம் பிரகாசிக்கும் ஒன்று. ஆன்மாவும் எந்த தூண்டுதலும் இல்லாமல் நம்மில் என்றும் உண்டு. அக்னிஹோத்ரம் என்பது ஓர் வித ஆன்மாவை அறியும் தியானம் என்று உணரப்பட வேண்டும்.

அக்னிஹோத்ரம் என்றால் சுயமாக உருவான அக்னியை நாம் உருவாக்கிய அக்னியால் வணங்கி நன்றி கூறுவது அக்னிஹோத்ரம் என எளிமையாக கூறலாம். அதன் படி சுயமான அக்னியாகிய சூரியனை, நாம் உருவாக்கும் அக்னி கொண்டு நன்றி தெரிவிப்பது அக்னிஹோத்ரம் என புரிந்துகொண்டால் போதுமானது.

அக்னியை வணங்கவோ அல்லது வளர்த்தவோ நீங்கள் ஒரு மனிதனாகவும் உங்கள் ஆன்மாவை உணர விரும்புபவராகவும் இருந்தால் போதுமானது. மற்றபடி அக்னிஹோத்ரம் ஜாதி,மத மற்றும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

வேடிக்கையாக நான் ஒன்று கூறுவது உண்டு. நாத்திகார்கள் கூட சூரியனை வழிபட துவங்கிவிட்டனர். பல்வேறு வருடமாக நாத்திகாராக இருந்த ஒருவரிடம் “ஓம் நமோ நாராயணா” என கூறச்சொன்னால், அவர் “சூரியனுக்கு வணக்கங்கள்” என கூறுகிறாராம். அதனால் பகுத்தறிவாளியாகவோ அல்லது ‘பகூத்’ அறிவாளியாக இருந்தாலும் பூமியின் செயல்,வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தலாம்.

இவ்வளவு கூறினாலும் என் உள்ளத்தையும் என்னிடம் உள்ளதையும் திருடிய திருமூலரின் வார்த்தையில் அக்னி என்றால் என்ன என பார்ப்போம்.

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.
-திருமந்திரம் 222

அக்னிஹோத்ரம் மற்றும் பிற ஹோமம் செய்யும் பொழுது இருக்கும் அக்னியும், இடுகாட்டில் உடலில் இடும் அக்னியும், உடலின் உள்ளே இருக்கும் அக்னியாக வினை செய்பவனும், வேதத்தில் அக்னி என்று போற்றப்படுபவனும் ஈசனே ஆகும். இறைவன் அக்னி சொரூபம் என்பதையும் அனைத்து இடத்திலும் இருக்கும் அக்னியும் இறைவனின் சொருபமே என்றும் விளக்கும்.

அக்னிஹோத்ரம் தற்காலத்திற்கு தேவையா? நம் வாழ்க்கை முறைக்கு ஒத்து வருமா?
இத்தகைய அக்னிஹோத்ரம் எப்படி செய்வது என பார்ப்போமா?

(அக்னி ஒளிரும்)

Monday, June 14, 2010

அக்னி காரியம்

பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும்.

சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார்.

தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர்.

ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும்.

பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.

பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும்.

தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன? அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் - அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர்.


இப்படி எங்கும் எதிலும் நீக்கமற நிரைந்திருக்கும் அக்னியை வணக்குவதும் அதற்கு நன்றி அறிவிப்பதும் நம் கடமையல்லவா? நாம் என்றாவது அக்னிக்கு நன்றி கூறி இருக்கிறோமா?எதற்கு இந்த கேள்வி ? இப்பொழுது எதற்கு அக்னி புராணம் என நீங்கள் நினைக்கலாம். அக்னிஹோத்ரம் எனும் புனித வேள்வியை பற்றி இனி கூறப்போகிறேன்.

அதற்கான முன்னோட்டமே இது. அக்னிஹோத்ரம் என்பதை பற்றி விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. அதை களையும் பொருட்டே இந்த கட்டுரைத் தொடர்.

நம் ஆட்களுக்கு அக்னிஹோத்திரம் என்றவுடன் போப்பால் விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட அபத்தமான ஓரு வதந்தியை நினைவு கூறுவார்கள்.

நாத்திகம் பேசும் பகுத்தறிவு புலிகளாக இருந்தால் அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியை நினைப்பார்கள். தாத்தாச்சாரி கூறியதை ஆராய்ந்தவர்கள் கூட அவர் பெயரில் ஒட்டி இருக்கும் அக்னிஹோத்திரம் என்பது என்ன என ஆராயவில்லை என்பது வேடிக்கை.

அக்னிஹோத்ரம் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் காத்திருங்கள்....

( அக்னி ஒளிரும்..)

Thursday, June 3, 2010

ஆன்மீக மாத இதழ்களின் தவறான போக்கு

சில நாட்களுக்கு முன் பழைய பஞ்சாங்கத்தில் காஞ்சி பெரியவரை ஆன்மீக ஆற்றலை பற்றி எழுதாமல் சில பத்திரிகைகள் அதிசயம் என்ற பெயரில் அவமதிப்பதாக எழுதி இருந்தேன். அதற்கு ஒரு சகோதரி கொதித்தெழுந்து விமர்சனங்கள் கொடுத்திருந்தார். தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை தொகுக்கும் பொழுது அப்பெயர் வேண்டாம் என முதலில் மறுத்தவர் காஞ்சி பெரியவர். பிறகு சிலரின் வேண்டுளின் அடிப்படையில் அவ்வாறு வெளியிடப்பட்டது.

ஆனால் தற்சமயம் சில ஆன்மீக பத்திரிகைகள் காஞ்சி பெரியவரை பற்றி எழுதினாலே புத்தகம் விற்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரிடம் அனுபவ கட்டுரைகள் எழுத சொல்லுகிறோம் என்ற தன்மையில் காஞ்சி மஹானை பற்றி வேறு ஒரு பிம்பத்தை கொடுக்கிறார்கள்.

மஹான்கள் எல்லோரும் பல்வேறு அதிசயங்கள் செய்பவர்களாக இருக்கட்டும்...! ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒன்று போல அதிசயம் செய்யமாட்டார்கள். சிலர் கடிகாரத்தை கைகளில் பதுக்கி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் கொடுத்து தான் அவதாரம் என்பார்கள் அவர்கள் போல் இவர் என்ன ரோலக்ஸ் வாட்ச் கம்பெனியா வைத்திருந்தார் ?

மடாதிபதிகள் பட்டாடை மற்றும் ஆபரணம் தரிக்கலாம் என்றபொழுதும் எளிமையாக கதர் உடை தரித்து வாழ்ந்து நமக்கு எளிமையை கற்றுக் கொடுத்தவருக்கு இவர்கள் செய்யும் மரியாதை கவலை அளிக்கிறது.

ஆன்மீக பத்திரிகைகள் அளவுக்கு மீறி செயல்படுகிறது என நான் கூறுவதில் சிலருக்கு சந்தேகம் வரலாம். அவற்றை உணர்த்தவே கீழ்கண்ட படத்தை வெளியிடுகிறேன்.


இந்த மாதம் அப்பத்திரிகையின் அட்டையில் வந்திருக்கும் படம் இது.

அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி யூகம் செய்யுங்கள். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் காமம் சார்ந்த தலைப்பில் வியாபாரம் செய்யும் பத்திகைக்கும் இவர்கள் போன்ற ஆன்மீக பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இவர்கள் ஆன்மீக பத்திரிகை நடத்தினாலும், இவர்களுக்கு காசே தான் கடவுளடா..!