Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சக்தி. Show all posts
Showing posts with label சக்தி. Show all posts

Monday, September 21, 2009

தசமஹா வித்யா பகுதி 2

தசமஹவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்து விதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹா சக்திகளை முழுமையாக உணர முடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் - அஷ்டமா சித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும்ஞானி ஒருவர் வாழ்ந்துவந்தார். தினமும் அவரிடம் பலர்அறிவுரைகேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் "நானே" காரணம் என்றார். 'நான்' என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள் தனமே.


தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அது சுவை [ நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம்.

1. மாதங்கி : என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி : மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி : பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி : பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா : நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம்.
வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி : கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி : கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கையில் புகைகக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுர பைரவி : பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜய தசமி வரை இவர்களே வணங்கப்படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடபடுவதாக சொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹா சக்தியின் அம்சம் உண்டு. மஹா சக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹா சக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன்.


மஹா சக்திகளின் தொடர்பு கொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளிய வடிவமே இந்த தொகுப்பு.


தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இதுபோல வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இந்த நவ தானியங்களில் அரிசி ,கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யாவாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின்மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹா வித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதி சங்கராச்சாரியார் இதை தொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீ சக்ரத்தில் அமைந்திருக்கும் மஹா சக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்துகொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹா சக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்துவித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

Thursday, September 17, 2009

தசமஹா வித்யா

தசமஹா வித்யா
- சக்தியின் வடிவங்கள்.

பிரபஞ்ச ரகசியங்களில் பல விஷயங்கள் மனித நிலையில் உணர முடியாது. பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுவதும், அழிவதும் ஏன் என்பதும் - அவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதும் விடுவிக்க முடியாத முடிச்சாகவே இருக்கிறது. மனித அறிவால் உணரமுடியாத விஷயங்களை தெய்வீக நிலையால் உணரலாம். மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாற்றமடைவது எளிதான விஷயமா? பல பிறவிகளாகவும் பல யுகங்களாகவும் பலர் முயற்சி செய்து கிடைக்காத விஷயத்தை நம்மால் பெறமுடியுமா என உங்கள் கேள்விகள் விரிவடைந்து கொண்டே செல்வதை நான் அறிவேன். உலகின் மும்முதல் பணி என அழைக்கப்படும் படைத்தல் - காத்தல் - அழித்தல் இவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த பணிகளை செய்பவராக மாறினால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

தெய்வீகமான முப்பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவுடன் உங்களின் நிலை முழுமையை பெறும். இந்த நிலையே முக்தி அல்லது பிரம்மஞானம் என கூறப்படுகிறது. மேற்சொன்ன வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். முப்பணிகளை செய்ய "ஆற்றல்" அவசியம். இந்த ஆற்றலே "சக்தி" என அழைக்கப்படுகிறது.

நடைமுறையில் ஆற்றல் என்ற சொல்லும், சக்தி என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறானது. ஆற்றலுக்கு அழிவில்லை. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம் என விஞ்ஞான ரீதியாக குறிப்பிடுபவை "ஆற்றல்" என கூறலாம். தோற்றமும், முடிவும் அற்ற எங்கும் எல்லா பொருட்களிலும் வியாபித்து இருக்கும் ஓர் வஸ்து "சக்தி" எனலாம். இதை எளிய உதாரணம் மூலம் தெரிந்துகொள்வோம். வயது முதிர்ந்த ஒருவர் இளைஞகளைப் போல ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டார் என்றால் அவருக்கு இளைஞர்களைப் போல ஆற்றல் உண்டு எனலாம். ஓர் இடத்தில் இல்லாதது மற்றொரு இடத்தில் இருப்பதால் ஆற்றல் அழிவதில்லை. இடமாற்றம் அடையும் எனும் கூற்று கூறப்படுகிறது.


தனது குழந்தையின் மேல் தாய் காட்டும் பாசம் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. இந்த தாய்மை உணர்வு பெண்களுக்கு ஏற்பட எந்த தூண்டுதலும் கிடையாது. தாய்மை எனும் உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் பொதுவானது மற்றும் ஏற்றத்தாழ்வு இருக்காது. இதனால் தாயுணர்வு இங்கு சக்தியாக மாறுகிறது. வெவ்வேறு வயதில் தாய்மை அடைந்தாலும் தாய்மை எனும் சக்தி மாறாது. ஆற்றலுக்கு மாறும் தன்மை உண்டு. ஆனால் சக்தி மாற்றம் அடைந்தாலும் சக்திநிலை மாற்றம் அடையாது. ஆங்கிலத்தில் Energy, power என்று பொதுவாக கூறப்பட்டதால் ஆற்றல், சக்தி என்ற வார்த்தைகள் பொதுவாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.


இவற்றை விளக்க காரணம் முப்பணிகளை செய்யும் தெய்வீக நிலைக்கு " சக்தி " அவசியம். சக்தி நிலை இல்லை என்றால் எதுவும் இயங்காது. உடனே சிவம் பெரிதா, சக்தி பெரிதா எனும் பட்டிமன்றத்தை துவங்க வேண்டாம். இரு நிலைகளும் இருந்தால் மட்டுமே செயல் நடைபெறும். சிவம் என்பது உடல், சக்தி என்பது உயிர். இதில் எது இருந்தால் நல்லது என கூறமுடியுமா? இரண்டும் இணைந்த நிலையே சக்தி நிலை என கூறப்படுகிறது.


பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயலுக்கும் ஒரே சக்தி காரணமாக இருக்கிறது. இந்த மாபெரும் சக்தியே மஹாசக்தி என கூறப்படுகிறது. இந்த சக்தி இல்லாத பிரபஞ்சத்தை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. காரணம் அந்த கற்பனையை செய்வதும் செய்ய தூண்டுவதும் இந்த மஹாசக்தியே ஆகும்.

இந்த மஹாசக்தி தனது நிலையை பத்து விதமாக வெளிப்படுத்துகிறது. பத்து விதமான மஹாசக்தியை தசமஹாசக்திகள் என அழைக்கலாம். இந்த மஹாசக்திகளை அறிந்துகொள்ளும் முறை "தசமஹாவித்யா" என்றழைக்கப்படுகிறது. 'வித்யா' எனும் வார்த்தை இங்கு ஞானம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மந்திரசாஸ்திரம் பற்றி விவாதித்தோம். சென்ற மாதத்தில் யந்திர சாஸ்திரம் பற்றி விளக்கி இருந்தேன். யந்திர - மந்திர மற்றும் தந்திர எனும் மூன்றாக பிரிக்கப்பட்ட சாஸ்திரத்தில் தசமஹாவித்யா என்பது தந்திர சாஸ்திரத்தின் ஓர் பகுதியாகும். தந்திர சாஸ்திரம் என்றதும் அனைவரும் தவறான மதிப்பீட்டையே வைத்திருக்கிறார்கள். "தந்த்ரா" எனும் சொல்லுக்கு உயர்நுட்ப முறை என்று அர்த்தம். யந்திர மற்றும் மந்திரசக்தி துணை கொண்டு ஓர் இலக்கை அடையும் முறையே தந்த்ரா என புரிந்துகொள்ளுங்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இது எல்லாம் வழக்கத்தில் உள்ளதா அல்லது பயன்படுமா என நீங்கள் கேட்கலாம்.

கணிப்பொறி இயந்திரம் ஒர் செயல்படாத பொருள். அதன் உதிரி பாகங்களை பிளந்து பாருங்கள் ஒன்றும் இருக்காது. மேலும் அவை சிலிகா எனும் மண், செப்பு கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உயிரற்ற கருவிகள் மனிதன் இடும் கட்டளைக்கு செயல்பட்டு பல விதங்களில் மனித வாழ்வை உயர்த்துகிறது. இதே தத்துவத்தின் உயர்நிலை வடிவம் தான் தந்த்ரா.


கணிப்பொறியை நம்பும் மனிதன் கண்ணால் பார்க்காத காரணத்தால் தந்த்ர சாஸ்திரத்தை நம்புவதில்லை. இங்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இதைவிட கீழ்நிலையில் தந்த்ரா உணரப்படுகிறது. ஆண் - பெண் பாலின தொடர்பு மூலம் உயர்நிலையை அடையும்முறை என சில இந்திய ஆன்மிக வாதிகளால் கூறப்பட்டதால் மேல் நாட்டினர் தந்த்ரா என்றதும் ஆன்மீக உயர்வை அடையாமல் பாதாளத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.


தந்த்ரா பல வழிகளில் கையாளப்பட்டாலும் யாருக்கும் பாதிக்காத நிலையில் இருந்து ஆன்ம உயர்வுக்கு மட்டுமே பயன்படும் பகுதிதான் தசமஹாவித்யா. தந்த்ராவை எளிமையாக புரிந்துகொள்ள இதைவிட வேறுபகுதி இல்லை. அதே நேரத்தில் இந்த எளிய வழியின் மூலம் ஏற்படும் விளைவு பிரமாண்டமானது. Technology எனும் ஆங்கில வார்த்தை ஓரளவு தந்த்ரா என்னும் வார்த்தையை மொழிபெயர்க்கும். [Science] அறிவியல் ஆராய்ச்சி என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுபெறாத அறிவு எனலாம். உயர்நுட்பம் Technology என்றால் வளர்ச்சி அடையக்கூடிய முற்றுப்பெற்ற முழுமையான அறிவியல் என்று பெயர். இதைப்போல மெய்ஞானத்தின் திறவுகோல் என்பது தந்த்ரா.


நவராத்திரி துவங்கும் இவ்வேளையில் தந்திர முறையில் செயல்படும் தசமாஹாவித்ய பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.


(தொடரும்)