
மேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.
மேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.
யாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.
ஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.
என்ன கேள்வி இது சாமி? முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.
ஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....
அலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா?
தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.
இதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.
சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்
“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)
இதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.
(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு ?
இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.
கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.
இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா?
வலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..
நீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)
எழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..
இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து
ஏமாந்த சாமானியன்
டிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)
டிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.” என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)