அந்த யோகி விமானத்தின் உள்ளே சென்று தனது பயணச்சீட்டில் அச்சிட்டிருந்த ‘11B’ என்ற இருக்கையை தேடிக்கொண்டிருந்தார்.
மூன்று இருக்கைகள் கொண்ட ABC வரிசையில் இவருடையது நடுஇருக்கையாக அமைந்திருந்தது.
யோகியின் வலதுபக்கம் நெற்றிநிறைய திருமண் பூசியபடி ஒரு ஆத்திகர் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொன்னார்.
இடதுபக்கம் எந்த சலனமும் இல்லாமல் ஒருவர் அமந்திருந்தார். இடதுசாரியில் இருப்பவர்களுக்கு அனேகமாக இறை நம்பிக்கை இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை.
அவரிடமும் வணக்கம் சொல்லி யோகி அமர்ந்தார். அனைவரையும் வானில் சுமந்து பறந்தது ராக்ஷத பறவை.
சில நிமிடம் கரைந்திருக்கும், வலதுபக்கம் இருப்பவர் யோகியை பார்த்து...
“ஸ்வாமிஜி, இறைவனை பற்றி நான் நினைத்து ஆச்சரியப்படாத நாளே இல்லை..இறைவன் மிகப்பெரியவன் இல்லையா” என தன் ஏழு
மணிநேர பயணத்திற்கு தேவையான பேச்சை துவங்கினார்.
சில நிமிடம் மெளனமாக கரைந்தது...
யோகி வலது பக்கம் இருந்த ஆத்திகரை நோக்கி கேட்டார், “ ஒரு புல்வெளியில் மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாம் ஒரே வகையான புல்லை சாப்பிட்டாலும் ஏன் அவைகள் சாணமிடும் பொழுது ஒரே போல இல்லாமல் மாடு சாணியாகவும், குதிரை உருண்டையாகவும் ஆடு புழுக்கையாகவும் கழிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?”
“தெரியவில்லையே ஸ்வாமிஜி. இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் ஆத்திகர்.
“விஞ்ஞானத்தின் அடிப்படையே தெரியவில்லை உங்களுக்கு மெய்ஞானத்தின் தலைவனாக கடவுளை பற்றி கருத்து சொல்லுகிறீர்கள். கடவுளின் படைப்பையே உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே. எதை வைத்து கடவுள் பெரியவன் என சர்ட்டிபிக்கேட் கொடுக்க வந்தீர்கள்?”
எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்த வலதுசாரிக்காரர் விமானத்தில் கொடுக்கப்படும் புத்தகத்தை பிரித்து அதில் முகம் புதைத்தார்.
இந்த சம்பாஷணையை கேட்டபடி இருந்த இடதுசாரிக்காரர் “ம்க்கூம்...” என தொண்டையை கணைத்து யோகியின் முகம் பார்த்தார்.
பிறகு “ஐயா, எனக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை தெரியும். மாடு, குதிரை மற்றும் ஆடு ஆகியவை ஒரே புல்லை சாப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றின் குடல் அமைப்பும் ஒன்றல்ல. அதனால் அவற்றின் மலக்குடலின் அமைப்புக்கு ஏற்ப அவை மலம் கழிக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்” என கூறி முகத்தை பெருமிதத்துடன் வைத்துக்கொண்டார்.
அவரை புன்புறுவலுடன் பார்த்த யோகி, “ வாழ்க்கையில் மலத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே திருப்தி அடைவதை விட்டுவிட்டு உயர்ந்த விஷயத்தை உணர முயலுங்கள். விஞ்ஞானம் எல்லைக்கு உட்பட்டது. மெய்ஞானம் எல்லையற்றது. மலத்தை விடுத்து உங்கள் பார்வையை மேம்படுத்தினால் இறைவனும் இருக்கிறார் என தெரியவரும்” என்றார்.
வலது சாரிகளும் இடது சாரிகளும் மெளமாக நடுநிலையாக அமர்ந்திருந்த யோகியின் பயணம் தொடர்ந்தது...