ஏன் காரில் பயணிக்கிறீர்கள் அங்கே ரயில் விமானம் எதுவும் இல்லையா என பலர் கேட்டிருந்தார்கள். ரயில் பயணங்கள் இந்தியாவை போல உலகில் வேறு எங்கும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஜண்டினாவின் மக்கள் தொகை காரணமாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவும் அர்ஜண்டினா அரசு ரயில் சேவையை 1980ல் நிறுத்திவிட்டது. மேலும் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் விமான சேவை குறைவு. எந்த ஊருக்கும் தலைநகரை தொடாமல் விமானத்தில் பயணிக்க முடியாது. உதாரணமாக நீங்கள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமானால், சென்னை-டெல்லி சென்று அங்கிருந்து டெல்லி-பெங்களூரு செல்ல வேண்டும். அனைத்து நகரின் விமான சேவையும் பியோனிஸ் ஏரிஸ் தலைநகரை மையம் கொண்டே இருக்கிறது.
காரின் கிலோமீட்டர் காட்டும் கருவியின் இறுதி எண்களில் பூஜ்ஜியங்கள் கடக்க கடக்க...வெளியே சூழலும் மாறத் துவங்கியது. சுற்றியும் சமவெளி...கண்களுக்கு உயிரினமே காணக்கிடைக்காத சமவெளி. எங்கள் சாலை நீளமாக பல கிலோமீட்டரை ஒரே காட்சியாக காட்டிக்கொண்டிருந்தது. காரின் இன்ஜின் சப்தத்தை தவிர வேறு சப்தங்கள் இல்லை...!
வெளியே மட்டுமல்ல என் மனதின் உள்ளேயும் நிசப்தம் கூடி இருந்தது. மெல்ல என் ஆணவம் தன் தலையை சிலிர்ப்பி எழுந்து அமர்ந்தது.
ஆன்மீக வளம் மிக்க இந்தியாவிலிருந்து ஆன்மீகமே இல்லாத இந்த பூமியில் ஆன்மீகத்தை பரப்ப வந்திருக்கிறேன். இந்த மக்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ என சொல்லி அந்த ஆணவம் என் தலையில் ஏறி ஆடத் துவங்கியது.
இறைவனுக்கும் எனக்குமான ஊடல்களில் எப்பொழுதும் பகடையாவது இந்த ஆணவம் தான். என்னை நற்பணிகளில் ஈடுபத்துபவர் அவரே..அதன் பலனை உணர்ந்து என்னை ஆணவமாக்கி உணர செய்பவரும் அவரே. பிறகு என் ஆணவத்தை பெரிய சுத்தி கொண்டு அடித்து தகர்ப்பவரும் அவரே...!
“என்னை நன்றாக படைத்தனன்” - தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என சொன்ன திருமூலரை விடவா ஆணவம் வந்துவுடப்போகிறது? இருந்தாலும் விஷம் என்பது ஒரு துளி போதுமே?
இப்படி என்னை பற்றி நானே பீற்றிக்கொண்டு இருக்கும் சமயம் 800 கிலோமீட்டர் கடந்து விட்டிருந்தேன்.
மலைகளும் பனிசிகரங்களும் தெரியத் துவங்கின, சூரியன் மறைந்து இருள் சூழ துவங்கியது. “ஸ்வாமி, உலகின் இரண்டாவது பெரிய சிகரம் நோக்கி செல்லுகிறோம். அதற்கு முன் இங்கே மலை அடிவாரத்தில் என் நண்பர் இருக்கிறார். அவர் வீட்டில் இன்று இரவு தங்கி நாளை பயணம் செய்யலாமா?” என ராம தாஸி கேட்டார்.
“அதனால் என்ன பேஷாக தங்கிவிடலாம். அவருக்கு ஆன்மீகத்தில் சில விஷயங்களை கத்துக்கொடுத்து அவரையும் மேம்படுத்தலாமே” என்றேன். இது நான் சொல்லவில்லை. உள்ளே இருந்த அது சொல்லியது.
“ஆமாம் சாமி. இவங்களை என்னை மாதிரி முன்னேத்துங்க” இது சுப்பாண்டியின் துணைக்குரல்.
GPS காட்டிய வழியில் ராமதாஸியின் நண்பர் வீட்டின் முன் நிறுத்திய எனக்கு பேரதிர்ச்சி...!
அங்கே ஒரு அழகிய இந்திய கோவிலும் அருகே ஒரு குடில் போன்ற ஆசிரமும் இருந்தது. அந்த குடிலின் முகப்பில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கையில் ஒரு புத்தகம்...அதன் தலைப்பு...
“யோக வாசிஷ்டம் - ஞானத்தின் திறவுகோல்”
”படார்...” ஆம் இது நீங்கள் நினைத்தது போல இறைவன் சுத்தியால் அடித்து நொறுக்கிய சப்தம் தான் அது...
ஆழ்ந்து ஆன்மீக அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே படித்து புரிந்துகொள்ளும் புத்தகம் இது. வசிஷ்டர் தன் மாணவரான ஸ்ரீராமருக்கு நீ ஒரு அவதாரம், மனிதன் அல்ல என ஞானம் வழங்கிய கருத்துக்கள் நிறைந்த புத்தகம் அது....!
பல்லாயிரம் கிமீ கடந்து இந்திய கலாச்சாரத்தின் நிழல் விழுகாத இடத்தில் ஒருவர் யோக வாசிஷ்டம் படித்துக்கொண்டிருந்தது என்னால் தாங்க முடியவில்லை. ஆணவத்தால் என் புகைச்சலை அடக்கிக் கொண்டேன்.
வில்லி..என்ற அந்த எளிய மனிதர் எங்களை வரவேற்று தங்க இடமும் அறுசுவை உணவும் அளித்தார். அவரை செல்லமாக வில்லி புத்திரர் என அழைப்போம்.
ஏதோ ஒரு நாள் , இந்திய ஆன்மீகவாதி ஒருவர் என் இல்லத்தில் தங்குவார் என தெரிந்து அவருக்காக ஒரு அறையைகட்டி இருக்கிறேன். தற்சமயம்
அதில் என் குரு இருக்கிறார். அவருடன் நீங்கள் தங்கிக்கொள்ளுங்கள் என கூறி என்னை அழைத்து சென்றார். நானும் சுப்பாண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
மிகவும் குறுகுறுப்பாக நானும் சுப்பாண்டியும் அவரின் குருவை காண சென்றோம். வில்லிபுத்திரரின் குரு புகைப்படமாக இருந்தார்.படத்தை பார்த்ததும் சுப்பாண்டி நெளிய துவங்கினான்.
அறையில் வில்லிபுத்திரரின் குரு “உன்னை யாரடா இங்கே வரச்சொன்னது?” என கேட்பது போல அவரின் படம் அமைந்திருந்தது.