Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 31, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 3

கேள்வி : நீங்க பங்குசந்தையை பற்றி எழுதுவது விளம்பர நோக்கிலா? உங்களிடம் எல்லோரும் பங்கு சந்தை பற்றிய ஜோதிட தகவலை SMS மூலம் பெறும் நோக்கில் எழுதுகிறீர்களா?

பதில் : உண்மையை கூற வேண்டுமானால் - இல்லை. திருவண்ணாமலையை பற்றி எழுதினேன், காசியை பற்றி எழுதினேன் அந்த ஊர்களுக்கு நான் வழிகாட்டியா என கேட்பது போன்றது இது. பங்கு சந்தையை தினமும் கணித்து SMS மூலம் பலருக்கு அனுப்புகிறோம். விபரங்களுக்கு
vediceye.in. இங்களின் பங்கு சந்தை சேவையில் இதுவும் ஒன்று. இதற்கு கட்டணமும் உண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கிறோம். தற்சமயம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஏற்படுத்த முடியாத அளவுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.


கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடத்தில் கணிப்பது எதற்கு? ஜோதிடத்தை நிரூபணம் செய்யவா?

பதில் : சான்றோர்கள் கண்டறிந்த ஜோதிடத்தை யாரும் நிரூபணம் செய்ய வேண்டியது இல்லை. ஜோதிடம் தன்னை தானே நிரூபணம் செய்து கொள்ளும். நான் பங்குசந்தை ஜோதிடம் மூலம் முயலுவது எனது ஜோதிட ஆற்றலை எவ்வளை தூரம் செலுத்த முடியும் என என்னை நானே பரிசோதனை செய்யும் களம் தான்.

அதன் மூலம் சிலர் பயன்படுவதால் வெளிப்படையாக செய்கிறேன். எனது பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அது பங்குசந்தை போல வெளிப்படையாக பலரால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எனக்கு தெரியும்.

கேள்வி : சென்ற வாரம் நீங்கள் கூறிய பங்கு சந்தை கணிப்பு எப்படி இருந்தது? அதைபற்றி கூறுங்களேன்.

பதில் : முன்பு கூறியது போல 80% சரியாக அமைந்திருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை கணித்ததில் செவ்வாய் கிழமையும், புதன் முற்பகலும் தவறாக இருந்தது. மற்ற தினங்கள் சரியாக அமைந்தது. தினமும் எந்த பங்குகள் விலை ஏறும் என கூறியது மிகச்சரியாக வந்தது.

உதாரணத்திற்கு திங்கள் கிழமை எனது கணிப்பையும், சந்தையின் போக்கை பற்றிய வரைபடத்தையும் கீழே தருகிறேன்.


சந்தை ‘up' என குறிப்பிட்டது போல கிடக்கை மட்ட சிகப்பு கோட்டில் இருக்கும் சென்ற நாளின் அளவை விட மேலே இருப்பது காணலாம்.
அம்புஜா சிமெண்ட் பங்கு குறிப்பிட்டதை போல உயர்ந்து இருப்பதை காண முடியும்.

வரைபடம் nseindia.com என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய பங்கு சந்தையின் தின நடவடிக்கைகள் nseindia.com என்ற தளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் எனது கணிப்பை சரிபார்க்க முடியாமல் சிரமம் கொண்டார்கள் என கேள்விப்பட்டேன். இனி இந்த வலைதளம் பயன்படும். பல பதிவர்கள் மற்றும் பங்கு சந்தை சார்ந்தவர்கள் எங்களை தனிமடலில் பாராட்டினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.

கேள்வி : பங்கு சந்தையை எப்படி கணிப்பது? அதற்கான பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். விபரங்கள் கூறுங்களேன்.

பதில் : இந்த சுட்டியில் பாருங்கள் முழுமையான விபரம் கிடைக்கும். விபரம்

முழுமையாக ஜோதிடம் தெரியாதவர்களுக்கு கூட பங்குசந்தை கணிக்கும் அளவுக்கு அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொடுக்கிறோம். அதனால் அனைவரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கேள்வி : பங்கு சந்தை ஜோதிட பயிற்சிக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறதே?

பதில் : உண்மையில் இது அதிகம் இல்லை. சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழலில் பயிற்சி ஆகியவை கொடுப்பதற்கான கட்டணம். மேலும் நாங்கள் வழங்கும் கையேடு மற்றும் சான்றிதழ்கள் இக்கட்டணத்தில் அடங்கும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் ரூபாய் 6600 என்ற கட்டணம், படித்து முடித்த பிறகு உங்களின் ஒரு நாள் லாபம் என புரிந்திருக்கும்.

வருமானத்திற்கான கல்வி வருமானத்தை கொடுக்கும் முதலீடு என மறந்துவிடாதீகள்.

Tuesday, May 25, 2010

பழைய பஞ்சாங்கம் 25 - மே - 2010

வெள்ளிங்கிரி பயணம்

வெள்ளிங்கிரி என கூறப்படும் தென்கைலாய மலைக்கு பயணம் சென்றேன். வருடா வருடம் செல்லும் இடம் தான் என்றாலும் இந்த முறை பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல உடல் சற்று திடமாக இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இருதய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதன் மூலம் பயணத்தின் சிக்கலை உணர்ந்து கொள்ளலாம்.

1800 மீட்டர் உயரத்தில் மலையின் உச்சியில் ஒரு குகை உண்டு. அங்கே சுயம்புவாக தோன்றிய பஞ்ச லிங்கங்கள் உண்டு. இந்த வருடம் செல்லும் பொழுது புதிய சில குகைகளை கண்டேன். அங்கும் பரவசமான உணர்வுகள்.

என்னுடன் மலை ஏற ஒரு வலைப் பதிவரும் வந்திருந்தார். கட்டதுரை மாதிரி ஏறிய அவர் இறங்கும் பொழுது கைப்புள்ள போல நடந்து வந்தார் என்பது சிறப்பு செய்தி...!

-------------
மஹா பெரியவர்

காஞ்சி பரமாச்சாரியார் அவர்களை பலருக்கும் தெரியும். ஆன்மீகம், சமூகம் மற்றும் மொழியியல் ஆழ்ந்த அனுபவம் பெற்று சதமடித்து சமாதியானவர். ஒரு முறை வெளி ஊரில் பயணம் மேற்கொண்டிருந்த சமயம் ஒரு இடத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் தங்கி இருந்தார்.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு தன்னை துயில் எழுப்புமாறு ஆசிரம சேவகர் ஒருவரிடம் கூறினார். கடிகாரம் பரவலாக புழக்கத்தில் இல்லாத காலம் அது. முதல் நாள் காலை சரியாக எழுப்பிய சேவகர் அடுத்தநாள் வேலை பழுவால் தூங்கிவிட்டார். அதனால் மஹாபெரியவர் தாமதமாக எழ வேண்டி அமைந்தது.

மறு நாளில் காலை 4.20 க்கு மஹாபெரியவரே அறையிலிருந்து வெளியே வந்து சேவகரை எழுப்பினார். இந்த செய்கை அடுத்த சில நாட்களும் தொடர்ந்து. எப்படி இவர் கடிகாரமும் அலாரமும் இல்லாமல் சரியாக எழுந்திருக்கிறார் என சேவகருக்கோ ஒரே ஆச்சரியம். தனது வியப்பை பற்றி பெரியவரிடம் கேட்டார்.

மஹாபெரியவர் கூறினார் “4.20க்கு ஒரு ரயில் நாம் தங்கி இருக்கும் இடத்தை கடந்து செல்லுகிறது. அதை ஒரு நாள் கவனித்தேன். ரயில் சப்தம் கேட்டவுடன் எழுந்துவிடுவேன். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை” என்றார்.

தற்சமயம் வெளிவரும் சில ஆன்மீக பத்திரிகைகள் இவரை சுற்றி சில அதிசய பிம்பங்களை கொண்ட கதைகளை ஏற்படுத்துகிறது. விளம்பரங்களை தவிர்த்து மிகவும் எளிமையாக வாழ்ந்த ஒரு மஹானை பற்றி தவறான தகவல் எதிர்கால தலைமுறைக்கு செல்லுகிறது. அவரின் ஆன்மீக பெயர் மறந்து அனைவரும் மஹாபெரியவர் என அழைக்கிறார்கள் என்பதை விட அதிசயம் தேவையா?
----------

சென்னையில் திருமந்திரம்

பல அன்பர்கள் சென்னையில் திருமந்திர புத்தகம் எங்கே கிடைக்கும் என கேட்டு மின்னஞ்சல் செய்கிறார்கள். நம் பதிவுலக நண்பர்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.

புத்தக நிலையத்தின் முகவரி கீழே :

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கேகே.நகர் சென்னை 78.
தொலைபேசி : 9940446650

இப்பணிக்கு உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

----------------

ஜென் கவிதை

இதுவமது
--------------

பூவின் நடுவில்
மகரந்தம்

மகரந்தத்தின் உள்ளே
பூக்கள்

Friday, May 21, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 2

கேள்வி : பங்கு சந்தை என்பது அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை சார்ந்தது செயல்படும் ஒன்று. உதாரணமாக நானோ கார் ஒன்று தீப்பிடித்து விபத்து ஆனது என்றால் உடனடியாக டாடா மோட்டார் நிறுவன பங்குகள் விலை குறையும். பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் பங்கு சந்தை தடுமாற்றம் காணும். அப்படி இருக்க இவற்றை எல்லாம் ஜோதிடத்தில் கண்டு பங்கு சந்தையை நிர்ணயம் செய்ய முடியுமா?

பதில் : முடியும். உங்கள் பார்வை மிகவும் உலகியல் சார்ந்ததாக இருப்பதால் அவ்வாறு நினைக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு லாட்டரி தொழில் செய்யும் தொழில் அதிபர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்தார். இன்னும் ஆறு மாதங்களில் உங்களுக்கு தொழில் மாறும் என்றேன். தமிழகத்தில் பிரபல லாட்டரி அதிபரான அவர் என்னை கிண்டலாக பார்த்துவிட்டு சென்றான். பின்னர் அரசு ஆணையால் அவருக்கு தொழில் மாறியது என்பது உண்மை.

அரசு தடை செய்யப்போகிறது என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அரசு, உலக நிகழ்வு மற்றும் இயற்கை சீற்றங்களை கணிக்க ஜோதிடத்தில் வேறு தனி முறைகள் உண்டு. ஆனால் தனிநபர் ஜாதகத்தில் அவர் தொழில் மாறுவார் என சொல்லலாமே தவிர எப்படி என கூற முடியாது. அது போலவே இன்று வங்கி பங்குகள் உயர்வடையும், இன்று ஆட்டோமொபைல் பங்கு உயர்வடையும் என ஜோதிடத்தில் கூற முடியும் ஆனால் எதனால் உயர்கிறது என கூற இயலாது.

என்னிடம் காரணம் கேட்டால் சூரியன், குரு சேர்க்கையால் வங்கி பங்கும், சுக்கிரன் செவ்வாயால் ஆட்டோமொபைல் பங்கும் உயர்ந்தது என்பேன்.


கேள்வி : ஸ்ரீ திருஷ்டி என்பது என்ன? நீங்கள் கணித்து சொல்லுவீர்கள் அதன் படி நாங்கள் முதலீடு செய்ய வேண்டுமா? ஸ்ரீதிருஷ்டியில் மென்பொருட்கள் உண்டா?

பதில் : ஸ்ரீ திருஷ்டி என்பது ஒருவகை ஜோதிட ஆய்வு முறை. இம்முறை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையை கணிக்கலாம். நான் கணிக்கிறேன் என கூறுவதற்காக பங்கு சந்தை ஜோதிடத்தை கற்றுக்கொடுப்பதில்லை. சிந்திக்கும் அறிவு இருக்கும் யாவரும் எங்களிடம் கற்றுக்கொண்டு நீங்களாகவே கணிக்கவும், முதலீடும் செய்யலாம். கற்றுக்கொடுத்த பிறகு எனக்கோ உங்கள் முதலீடுக்கோ தொழிலுக்கோ சம்பந்தம் இல்லை.

ஸ்ரீதிருஷ்டி என்பது ஜோதிட சிந்தாந்தம் என்பதால் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் இருந்தால் நீங்களும் கணிக்கலாம். இது ஜோதிட கணிதம் செய்யும் கால விரயத்தை குறைக்கும். மற்றபடி மென்பொருள் பங்கு சந்தையை கணிக்காது.


கேள்வி : ஸ்வாமி, நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன். தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா? எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?

கரன்ஸி டிரேடிங் தாராளமாக பயன்படுத்த முடியும். மேலும் இந்தியாவில் இன்னும் கரன்ஸி டிரேடிங் முழுமையாக திறக்கப்படவில்லை. அவ்வாறு முழுமை பெற்றால் 80% கணிக்க முடியும்.

கேள்வி : என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? இதற்கு கட்டணம் உண்டா?

சமூக சேவை செய்ய முடியுமா? ஆன்மீக வழியில் செல்லுவேனா போன்ற பொது நல கேள்விகளுக்கு கட்டணம் இல்லாமல் வழிகாட்டுவேன். உங்கள் பொருளாதார உயர்வுக்காக கேட்கிறீர்கள் அதற்கு கட்டணம் இருக்கும். சேவை நோக்கமான கேள்விக்கு மட்டுமே இலவசம்.

கேள்வி : அடுத்த வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும் ?

24-05-2010 முதல் 28-05-2010 வரை உள்ள தேசிய சந்தை நிலவரம்(NIFTY) தினவாரியாக கணிக்கப்பட்டது.


இது மேலோட்டமான கணிதம் மட்டுமே. பங்கு சந்தை ஜோதிடம் கற்றால் இது ஆழமாக செயல்படுத்த முடியும். எனது ஜோதிட அறிவை சோதிக்கவே இங்கே கணிதம் செய்துள்ளேன். இதை கொண்டு யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட பலன் 75 முதல் 85% சரியாக இருக்கும்

கேள்வி :சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?

ஜூன் மாதத்தில் முதல் வாரம் அதிக தடுமாற்றத்துடன் காணப்படும். புள்ளிகள் 4900 முதல் 5190 வரை இருக்கும். 17 ஜூனுக்கு பிறகு சந்தை ஏற்றம் காணும்.

தேசிய பங்கு சந்தை குறைந்த புள்ளியாக 4780 புள்ளிகளும் அதிகபட்சம் 5380 புள்ளிகளும் பெறும்.
மே மாதத்தை விட வர்த்தகம் செய்ய நல்ல மாதமாக இருக்கும்.


Wednesday, May 19, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]

பங்கு சந்தை பற்றிய மினி தொடர் ஒன்று எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. எனது பணிச்சூழல் கருதி தற்சமயம் எழுத இயலவில்லை. ஆனால் பங்கு சந்தையும் ஜோதிடமும் எப்படி இணையும் என பலருக்கு பல்வேறு கேள்விகள் இருப்பதால் அவற்றை விளக்கும் பொருட்டே இந்த பதிவு. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [அ.கே.கே- Frequently asked questions] அதற்கான விளக்கமும் இதில் இடம் பெறும்.

1.கேள்வி : பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்லவா? அதை ஆன்மீக வழியில் இருக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளலாமா?

சூதாட்டம் என்றால் என்ன? உங்கள் மனம் யாரோ சொன்ன ஒரு விஷயத்தை கொண்டு கட்டமைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சூதாட்டத்தை ஒரு நாள் அனைவரும் புறக்கணித்தால் இந்திய நாடு என்ன ஆகும் தெரியுமா? வெளிப்படையான கணக்குகளுடன் தேர்ந்த பொருளாதார நிபுணர்கள் குழுவுடன் செயல்படும் பங்குசந்தை எப்படி சூதாட்டம் என கூறமுடியும்?

உற்பத்தி விலையை மறைத்து வியாபாரி மற்றொரு விலையில் பொருட்களை விற்கிறார். அவரிடம் உற்பத்தி விலையை கேட்டால் கூறமாட்டார். அவரை நாம் சூது கொண்டவர் என கூறி வியாபாரமே சூதாட்டம் தான் என கூற முடியுமா?

அரசால் அங்கீகாரம் செய்யபட்ட வெளிப்படையாக லாப நஷ்டங்கள் தெரியக்கூடிய விஷயங்கள் எதுவும் சூதாட்டம் ஆகாது. அதிர்ஷ்டம் என்ற தன்மையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விதியில் அடிப்படையில் இயங்கி வருமானம் பெருக்கும் விஷயங்கள் சூதாட்டம் ஆகாது.


முன் காலத்தில் உணவு என்பது மிகவும் அத்தியாவசிய விஷயமாக இருந்தது. உணவு கிடைக்காத மனிதனின் ஆன்மீக வளர்ச்சி தடை ஏற்பட்டது. அதனால் ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் தங்களின் சேவை மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என அன்னதானம் செய்தனர்.

வள்ளலார் இதில் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

ஆனால் தற்சமயம் இருக்கும் சமூக சூழல் உணவை தாண்டிய நுகர்பொருள் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவுடன் மனிதன் திருப்தி அடைவதில்லை. அதனால் தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி அளித்தாலும் தொலைக்காட்சி பெட்டியையும் இலவசமாக அளிக்கிறது. அரிசி, தொலைக்காட்சியுடன் தேவை நின்றுவிடுவதில்லையே..!

உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும். உங்களுக்கு உணவையும் பொருளையும் கொடுத்து சோம்பேறிகளாக்காமல் உங்களுக்கு அறிவை போதித்து அதன் மூலம் வாழ்க்கை வளத்தை பெருக்குவதே எனது நோக்கம்.

உங்களின் வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை தேடும் வழி உங்களுக்கு தெரிந்திருந்தால் என் உதவி உங்களுக்கு தேவை இல்லை.

மாறாக பொருளாதார தன்னிறைவு பெறாதவர்களாக இருந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


2.கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடம் மூலம் எப்படி கணிக்க இயலும்?

ஜோதிடம் என்பது அடுத்த வினாடி என்ன நிகழும் என கணிக்கும் கருவி. ஜோதிடம் எதிர்காலத்தை கணிக்கும் விஷயம் என்பதால் அடுத்த வினாடியும் எதிர்காலம் தானே? பல்வேறு ஜோதிட முறைகள்

இருந்தாலும் நாங்கள் பயன்படுத்தும் ஜோதிட முறை மிகவும் நுட்பமானது. நட்சத்திர ஜோதிடம் என அதற்கு பெயர்.

நாங்கள் பயன்படுத்தும் ஜோதிடத்தில் -
கிரிகெட்டில் எந்த அணி வெற்றி பெறும்,
எவ்வளவு ரன் எடுப்பார்கள்,
முதலில் எந்த அணி பேட் செய்வார்கள்,
தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்,
எம் எதிரில் இருக்கும் மனிதர் மனதில் இருக்கும் விஷயங்கள் என்ன,
கைத் தொலைபேசியில்

அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் போன்றவற்றை விஷயங்களை கணிக்க முடியும். அவ்வாறு இருக்கும் பொழுது மிக நுட்பமான பங்குசந்தையையும், அதைவிட மிகவும் சிக்கலான எந்த விஷயத்தையும் ஜோதிடத்தில் கையாளலாம்.

கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒருவித தாக்கத்தை மனித மனதில் ஏற்படுத்துகிறது. அதை பொருத்தே மனிதனின் முதலீடு செய்யும் அமைப்பு இருக்கிறது. முதலீடுகள் எப்படி அமையப்போகிறது என தெரிந்துகொண்டால் அதன் படி நாமும் முதலீடு செய்து லாபம் அடையலாம்.

3. தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் பலர் பங்கு சந்தை நிலவரம் கூறுகிறார்களே அதற்கும் ஜோதிட ரீதியாக சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் ?

பொருளாதார நிபுணர்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்திகள் (Technical analysis) கூறும் ஆய்வுகள் மற்றும் முந்தைய பங்குசந்தை வரலாறு அடிப்படையாக கொண்டது. மேலும் இத்தகைய செய்திகள் 30% அளவே வெற்றி வாய்ப்பு கொண்டது என தொழில் நுட்ப நிபுணர்களே கூறுகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் பங்கு சந்தையை கணிப்பது எளிது. படித்த சில நாட்களிலேயே உங்களால் 80% கணிக்க முடியும். உங்கள் மதி நுட்பத்தால் 80 சகவிகிதம் என்பதை மேலும் அதிகரிக்க முடியும். 80% சதவிகிதம் என்பது பல்வேறு தொழில்நுட்பவாதிகள், பங்கு வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் முன் நிரூபணம் செய்யப்பட்ட விஷயம்.

4.பங்கு சந்தையில் ஜோதிடத்தைக் கொண்டு எவற்றை எல்லாம் கணிக்கலாம்?

நிஃப்டி என்ற தேசிய பங்கு சந்தையின் போக்கை ஜோதிடம் மூலம் கணிக்கலாம். ஒரு நாளில் சந்தையின் நிலை துவங்கி ஒரு வருடத்திற்கு எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியும். ஈக்குவிடி மற்றும் டெரிவேட்டிவ் என்ற இரு பகுதியிலும் ஜோதிடத்தில் கணிக்க முடியும்.

கமாடிட்டி மற்றும் கரன்ஸி டிரேடிங் ஆகியவையும் கணிக்கலாம். ஆனால் இவை இரண்டும் முழுமையான சட்ட தெளிவுக்கு வரவில்லை என்பதால் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

5.ஜோதிடம் மூலம் கணிக்கும் பொழுது என் ஜாதகம் வேண்டுமா?

ஆம். உங்கள் ஜாதகம் இருந்தால் கூடுதல் செளவுகரியம் உண்டு. கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் பயன்படுத்தும் ஸ்ரீதிருஷ்டி என்ற பங்கு சந்தை ஜோதிட கோட்பாட்டில் மூன்று நிலைகள் உண்டு.

ஜோதிடம் மூலம் சந்தையை கணித்தல்.
ஜோதிடம் மூலம் தனிமனிதனின் எவ்வளவு லாபம் அடைவார் என நிர்ணயம் செய்யலாம்.
ஜோதிடம் மூலம் ஒருவர் எந்த பங்கு வங்கினால் லாபம் அடையலாம் என கூறமுடியும்.

இதனால் பெரிய லாபங்கள் ஈட்டவில்லை என்றாலும் ஏற்படும் நஷ்டத்தை முற்றிலும் தவிர்க்கலாம். உங்களுக்கு பிறப்பு ஜாதகம் இல்லை என்றாலும் ஆருட ஜாதகம் கணித்து அதே அளவுக்கு பயன்பெற முடியும்.

6.யார் எல்லாம் பங்கு சந்தை ஜோதிடம் பயிற்சி எடுக்கலாம்?

அடிப்படை பங்குசந்தை தெரிந்தவர்கள், இல்லத்தரசிகள், முழு நேரம் பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள். பங்கு வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் இதில் பயிற்சி செய்யலாம்.

ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. பயிற்சியில் பங்கு சந்தைக்கு தேவையான அளவு ஜோதிட விதிகளை கற்றுக்கொடுக்கிறோம். அதனால் ஜோதிடம் கற்றவர்கள், கல்லாதவர்கள் பேதம் இல்லை.

7. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை நிர்ணயித்தால் அனைவரும் லாபம் அடைந்துவிடுவார்களே?
உங்களிடம் பயின்றவர்கள் எல்லாம் அதிக லாபம் ஈட்டுகிறார்களா?

ஜோதிடத்தை பங்கு சந்தையில் பயன்படுத்தலாம் என பலருக்கு தெரியாது. 15 கோடிக்கும் மேல் இருக்கும் பங்கு வர்த்தகர்களில் ஆயிரம் பேர் ஜோதிடத்தை பயன்படுத்துகிறார்கள் என்றாலே அது அதிக எண்ணிக்கை.

நாங்கள் கற்றுத்தருவது அதிக லாபம் அடைய அல்ல. தெளிவாக லாபங்கள் அடையவும், நஷ்டத்தை தவிர்க்கவும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரீதிருஷ்டி என்ற எங்கள் ஜோதிட முறையில் சரியாக கையாண்டால் முதலீட்டை 10 முதல் 15 சதவீதம் ஒரு மாதத்தில் உயர்த்தலாம். ஆனால் அதிக ஆசையுடன் 50 முதல் 70 சதம் உயர்த்த எண்ணினால் வீழ்ச்சியே மிஞ்சும்.

நிதானமாக முதலீடு செய்து நிரந்தரமாக வருமானம் பார்க்க ஸ்ரீதிருஷ்டி முறை பயன்படும். பணம் இரட்டிப்பு ஆக்கும் முறை அல்ல இது.

என் மாணவர்களில் பலர் நிதானமாக வருமானம் சேர்க்கிறார்கள். நானும் அதன் அடிப்படையிலேயே இயங்குகிறேன்.

[தொடரும்]
----------------------------------------------------
இது போன்று கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள் அடுத்த பகுதியில் வெளிவரும்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்ற எனது கணிப்பு வெளிவரும்.

Friday, May 14, 2010

உள்ளங்கை அளவிலான ஒரு நூல்

சக்தி விகடன் புத்தக விமர்சனம்
இதழ் 27.05.2010

Thursday, May 13, 2010

அகந்தை செய்யும் விந்தை

ஆணவம் என்பது ஒருவித வித்தியாசமான வஸ்து. இறைவனின் படைப்பில் மிக விசித்திரமானது எது என்றால் ஆணவம் என்பேன்.

வடநாட்டு இனிப்பு கடைகளில் இனிப்பு அனைத்தும் பால்கோவாவின் அடிப்படையாக இருக்கும். ஒன்றில் பாதம் போட்டிருப்பார்கள், மற்றதில் ஜீராவில் போட்டிருப்பார்கள். ஆனால் அடிப்படையில் எல்லாம் பாலல் செய்யப்பட்ட பொருட்கள்தான். அது போல இறைவன்அனைத்து உயிர்களையும் ஒன்றாக படைத்துவிட்டு உயிர்களின் தேவைக்கு ஏற்ப ஆணவம் என்பதை இணைக்கிறார். ஆணவத்தின் அளவை பொருத்து உயிரின் வாழ்க்கை நிலை மாற்றம் அடைகிறது.

பள்ளி காலத்தில் நாம் பயின்ற கணக்கு சமன்பாடுகளை வைத்து இதை எளிமையாக விளக்கலாம்.


உயிர் + ஆணவம் = மனிதன்
உயிர் - ஆணவம் = தெய்வம்
உயிர் X ஆணவம் = அசுரன்
உயிர் / ஆணவம் = தேவர்கள்


மனிதனின் ஆணவத்தை நிர்மூலமாக்கி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துவது ஆன்மீகம் என்ற கருவி மட்டும்தான். ஆன்மீகம் என்பது ஆணவத்தை ஒழித்தால் மட்டுமே உயர்நிலையை அடைய முடியும் என்பது தெளிவு. அனைத்து உயிர்களையும் நாம் நேசிக்க வேண்டுமானால் நம் ஆணவமில்லாத நிலையில் இருக்க வேண்டும். இறைவனின் அனுபூதி என்பது மிகவும் மெல்லிய தென்றல் போன்றது, அத்தகைய அனுபூதியை உணர வேண்டுமானால் ஆணவம் என்ற தடித்த தோல் நம்மை மூடி இருக்க கூடாது.


ஆன்மீகத்தில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒருவன் ஆணவத்தை ஒழிக்க ஆன்மீகத்தை பின்பற்றினால் ஆரம்ப நிலையில் ஆன்மீகமே ஆணவத்தை வளர்த்துவிடும்.
ஆன்மீகம் என்ற மருந்து ஆணவம் என்ற நோயை வளர்த்து முற்றிய பிறகே ஒழிக்கும். ஆன்மீக சாதகர்கள் தங்களை பிறரைவிட மேம்பட்டவர்கள் என ஆரம்பத்தில் நினைக்க வைக்கும். நம்மை விட பிறர் அறியாமையில் இருக்கிறார்களே என புலம்பத்தோன்றும்.

இறைவா இவர்களுக்கு எப்பொழுது நல்வழிகாட்டுவாய் என கேட்கத்தோன்றும். இவையெல்லாம் ஆணவத்தின் அடையாளங்களே. ஆனால் இதே ஆணவம் விரைவில் அடுத்த நிலைக்கு கடந்துவிடும். குரு என்ற ஒருவரின் மூலம் இறைவன் ஆணவம் என்ற பெரும் மலைக்கு வெடி வைத்துவிடுவார்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, அயமத்ம பிரம்மா போன்ற மஹாவாக்கியங்கள் ஒருவன் ஆணவத்தை ஒழித்திவிட்டு கூறினால் இறைவனாக தெரியும். வெறும் வாய்வார்த்தையாக கூறினால் ஆணவத்தின் உச்சமாக தெரியும் அஹம் பிரம்மாஸ்மி என்பதை ஒரு திரைப்படத்தில் ஹீரோ பிறரைவிட உயர்ந்தவன் என காண்பிக்கவே பயன்படுத்தினார்கள்.


ஒரு ஜென் குருவிடம் அவரின் பிரதான சிஷ்யன் கேட்டான், “ குருவே நான் அனைத்தும் கற்றுவிட்டேன். வேறு என்ன நான் செய்ய வேண்டும்?” என்றான்.

ஜென் குரு கூறினார், “முதலில் கழிவறையை சுத்தம் செய். மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்”.


இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து செயல்படமாட்டார்கள். [சிலர் விதிவிலக்கு]. காரணம் தங்கள் சித்தாந்தம் தான் சரி, தங்கள் குருவே மேன்மையானவர் என்ற எண்ணம் இதற்கு காரணம். ஆணவத்தை ஒழிக்க சென்ற இடத்தில் அவர்களுக்கு கிடைத்தது என்ன என்று பார்த்தீர்களா?

பத்திரிகை டீவி செய்திகளை பார்த்துவிட்டு பலர் ஒரு செய்தியை பற்றி பலவாறு கூறினார்கள். அந்த நபரின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் காரணம், நடிகை காரணம், மண் ஆசை காரணம், பெண் ஆசை காரணம் என பல்வேறு கருத்துக்கள் கூறினார்கள். உண்மையில் தான் அனைத்தையும் அடைந்துவிட்டேன், எல்லோரும் எனக்கு கீழேதான் என நினைத்த ஆணவமே காரணம் என பலர் மறந்துவிட்டார்கள்.

ஒரு அற்புதமான அனிமேஷன் குறும்படத்தை பாருங்கள். ஜான் என்ற அமெரிக்கர் உருவாக்கிய அருமையான படம். அதன் தொழில்நுட்ப யுக்திகள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த 'குரு'ம்படத்தின் அடிப்படை கருத்து ஆணவம் அனைத்தையும் அழிக்கும்.



எளிமையாக சொல்லவேண்டுமானால்
ஆங்காரம் இருந்தால் ஓங்காரம் இல்லை
ஆங்காரம் இல்லயேல் ஓங்காரம் மட்டுமே உண்டு....!


Monday, May 10, 2010

ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்


சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம். சத்- உண்மை, சங்கம் கூடும் இடம். இது ஒரு முரண்பாடான வார்த்தை தான். உண்மை என்பது பன்மையாக இருக்காது.

உண்மைகள் என்னும் சொல் வேடிக்கையானது. பொய் வேண்டுமானால் பன்மையாக இருக்க முடியும். ஒரு உண்மையை மறைக்க பல பொய் என்று தானோ கூறுகிறோம்.

உண்மை என்பது ஒன்றுதான் என்றால் எப்படி சந்திக்க முடியும். இரண்டு விஷயம் இருந்தால் தானே சங்கம் - சந்திப்பு என்பது சாத்தியம் ஆகும் என கேள்வி எழலாம்.

நம்மில் இறைவன் ஆன்ம வடிவில் உறைகிறான் என்பது உண்மை. இந்த உண்மை உங்களிடமும் என்னிடமும் உணர்ந்துகொள்ள இரு ஆன்மாவும் இணையும் இடமே சத்-சங்கம்.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தின் பின்வருமாறு கூறுகிறார்.

சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.

கடந்த பத்து வருடங்களாக பல ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை கடந்து வந்துள்ளேன். ஆன்மீக சாதகர்கள், ஆன்மீக தேடல் கொண்டவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது அலாதியானது.

ஆணவம் கொண்ட அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு இறைவன் அருளிய பதிலால் ஆணவத்தை சிதறடித்து அவர்களை முழுமையை நோக்கி பயணிக்கச் செய்வது அலாதியான அனுபவம்.

எனது சத்சங்க கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறோம். இப்புத்தகம் தயாராகி வருகிறது. உங்களுக்கும் கேள்விகள் எழுமானால் கேளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை அளிக்கிறேன்.

இனிவரும் நாட்களில் ‘சத்சங்கம்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

உங்களுக்காக சத்சங்கத்தில் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியையும் அதன் பதிலையும் கீழே விவரித்துள்ளேன்.

-------------------------

கேள்வி : நீங்கள் துறவியா?

பதில் : என்னை பற்றி நான் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், நான் பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.

துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே என் குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் என் பொறுப்பு என்றும் இருப்பவன் துறவி.

கேள்வி : துறவி என்றால் பிச்சை எடுத்து தானே வாழ வேண்டும்.? நீங்கள் அப்படியா?

பதில் : ஆம். தனக்காக எதையும் உருவாக்காமல் பிறருக்காக உருவாக்கி அதில் தான் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும். இதுவே துறவு. நான் தொழிலதிபர் என்றோ அல்லது வியாபாரி என்றோ என்னை அடையாளப்படுத்த முடியுமா? நான் என்னை பிச்சைக்காரன் என கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி : நான் உணவுக்காக பிச்சை எடுப்பதை கூறுகிறேன் நான். நீங்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்தது உண்டா?

பதில் : உண்டு. என் செயல்பாடுகளும் நான் தினமும் உண்ணும் உணவும் பிறர் அளிக்கும் பிச்சை தான். நான் எதையும் உருவாக்குவதில்லை.

கேள்வி : பிச்சையாக எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா?

பதில் : பிச்சை எடுக்க மட்டுமே எனக்கு உரிமை உண்டு. பிச்சையாக இதை கொடு என கேட்டால் அது பிச்சையாக இருக்காது அல்லவா?

கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.

கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!


Tuesday, May 4, 2010

மரம் வெட்டி மாநாடு கொண்டாடுவோம்..!


சுப்பாண்டியும் நானும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்காக பயணம், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் சுப்பாண்டி வாகனம் செலுத்த துவங்கினான்.எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்று இருப்போம் மிகப்பெரிய வாகன நெரிசல். நீண்ட தூரத்திற்கு வாகனம் நெருக்கடியில் நின்று இருந்தது. கோவையில் சில சாலைகள் தவிர பிற இடங்களில் வாகன நெரிசல் காண முடியாது.

நாங்கள் சென்று கொண்டிருந்தது கோவை நகரிலிருந்து வெளிப்புறம் இருக்கும் சாலை. இடையர்பாளையம் மற்றும் வடவள்ளி என்ற இரு ஊர்கள் சந்திக்கும் நான்கு முனை சாலைகள். இந்த சாலையில் என்றுமே இவ்வாறு நெரிசல் இருந்தது இல்லை. இது போன்ற வாகன நெரிசல் எதற்கு என தெரியவில்லை.

பொருமை இழந்த சுப்பாண்டி விஷயம் என்ன என விசாரிக்க சென்றான். அங்கே இருந்த ஒரு முதியவரிடம் என்ன விஷயம் என நான் கேட்டேன்.

முதியவர் கலங்கிய குரலுடன், “சாமீ...இடையர்பாளையம் வடவள்ளி சந்திப்பில் இருக்கிற நூறு வருஷ அரசமரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. செம்மொழி மாநாட்டுக்கு ரோடு அகலப்படுத்தி கோபுர லைட் போடராங்களாம். வீணா போனவங்க.” என்றார்.

எனக்கு ஏதோ நெருக்கமானவர்கள் இறந்தால் ஏற்படும் துக்கத்தை போல தொண்டையை அடைத்தது. அதுக்குள் சுப்பாண்டி வந்து சேர்ந்தான்.

“சாமீ செம்மொழி மாநாட்டுக்கு ரோடு போடறாங்களாம். அது தான் டிராபிக் ஜாம்” என்றான்.

சரியாக விசாரிக்காமல் வந்த சுப்பாண்டி மேல் கோபம் வந்தது. இருக்கும் துக்கத்தில் இவன் தொல்லை வேறு என்று.. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சாலையின் சந்திப்புக்கு சென்றோம்.அங்கே நூறுவருட மரம் படுகொலைச் செய்யப்பட்டிருந்தது.

கோபமும் துக்கமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னக்கு தடுமாற்றத்தை உண்டு செய்தது.

சினிமாவில் காட்டும் பஞ்சாயத்து காட்சியில் வருவது போல திண்ணை கட்டப்பட்ட அரசமரம். பலர் ஓய்வாக அமரவும், நான்கு வழிச்சாலையின் ஒதுக்கு புறமாகவும் இருந்த இம்மரம் இப்பொழுதுஇல்லை.

நூறு வருட அரசமரத்தை வெட்டி, ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்று இருக்கிறார்கள். மரம் இருப்பதால் வேகத்தடை போல செயல்பட்டது பலர் மெதுவாக வந்து சென்ற சாலை எதிர்காலத்தில் விபத்துபகுதியாக மாறும்.

மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு உயரத்தை குறைத்து பிறகு இவர்களின் மேம்பாட்டு பணியை செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வேருடன் சாய்த்திருக்கிறார்கள். நூறுவருட மரத்தை ஒரு மணி நேரத்தில் வெட்டி விடலாம். ஆனால் நூறு வருடம் முயற்சித்தாலும் அதே மரத்தை வளர்க்க முடியுமா?

சுப்பாண்டியிடம் இப்படி புலம்புக்கொண்டே வந்தேன். வேறு வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். நிகழ்சி முடித்து வரும் வழியில் மீண்டும் அதே இடத்தை கடக்க வேண்டி இருந்தது.

வெட்ட பட்ட மரம் மற்றும் அந்த சாலை அனைத்தும் வெறுமையாக காட்சி அளித்தது.

“மரம் தாவரம்னு எப்பவுமே பேசறீங்களே சாமி, மரம் அப்படி என்ன கொடுக்குது?” என்றான் சுப்பாண்டி.

“சுப்பு. விருக்‌ஷ ஆயுர்வேதம் என்ற சாஸ்திர நூல் மரம் 150 பலன்கள் மனிதனுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்லுது. நம்ம சும்மா விரல் விட்டு எண்ணினாலே பல பலன்கள் வரிசைப்படுத்தலாம். காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகளுக்கு வீடு, அதன் மூலம் இயற்கை சுழற்சி, மரச்சாமான்கள், சுத்தமான காற்று, மருத்துவ குணம் கொண்ட சூழல், மன அமைதி, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு செய்தல், பல நுண்ணுயிர்கள் பெருக்குதல், சூழலில் வெப்பத்தை குறைத்தல், ப்ராணனை மேம்படுத்துதல். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். தாவரம் தாய் மாதிரி சுப்பு என்றேன்” என்றேன்.

எங்கள் அறக்கட்டளையின் வாசலை வந்து அடைந்ததும் நான் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே செல்ல நடக்கையில் பின்னாலிருந்து சுப்பாண்டியின் குரல்...

“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”

என்ன என்பதை போல பார்த்தேன்.

“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.