Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 26, 2013

கும்பமேளா 12


அற்புதமான காட்சியை கண்ட பரவசத்தில் இருந்தார் அப்பு. பல லட்சம் மக்களும் அப்புவாகவே இருக்க..எங்கும் அப்புவின் தோற்றம் தெரிய அனைத்தும் தாமாகவே இருக்கும் உணர்வை பெற்றார்.

தனது ஆனந்தத்தை வெளிப்படுத்த சோமநாதரை நோக்கி திரும்பினார் அப்பு. அங்கே சோமநாதர் இல்லாமல் அங்கும் அப்புவின் உருவமே தெரிந்தது. அனைத்தும் தானாகி அனைத்தும் அவனாகி நின்ற தருணம் அப்புவை ஆனந்தத்திற்கு அப்பால் செலுத்தியது.

சில ஷணங்களுக்கு பிறகு தன்னிலை திரும்பினார் அப்பு. கண்களில் கண்ணீர் பெருக சோமநாதரை விழுந்து வணங்கினார்.

மெல்ல சோமநாதரின் உருவம் மறைந்து பெரும் ஒளியாக காட்சியளித்தார். பூமியிலிருந்து வானம் வரை பெரும் பிரகாசமாக ஒளிப்பிளம்பாக சோமநாதர் மாறினார்.

அந்த ஒளி சிறிது சிறிதாக பெரிதாக அப்புவை சுற்றியும், அப்புவின் உள்ளும் பிரகாசிக்க ஒளிதுகள்களாக வெடித்து சிதறி அதனில் கலந்தான் அப்பு.

-------------------------------------

சூரியன் உதிக்கும் அதிகாலை நேரம்...

பரமானந்த அனுபவத்திற்கு பிறகு அப்புவிடம் அசைக்க முடியாத ஒரு உள்நிலை ஆனந்தம் ஓடியபடியே இருந்தது.

மஹா கும்பமேளா தன்னை பல்வேறு ஆன்மீக அனுபவங்களை ஏற்படுத்தியது என உணர்ந்தார் அப்பு. ஆனாலும் ஆதிநாதரை பார்க்காத கவலை எஞ்சி இருந்தது.

சோமநாதர் முன் சென்று, “குருவே உங்களுக்கு தெரியாத ஒன்றை நான் புதிதாக கேட்க முடியாது. பேரானந்த அனுபவங்களை அளித்த நீங்கள் எனக்கு ஆதிநாதரையும் காட்டி அருளுங்கள்” என கேட்டு அவரின் பாதங்களில் சரணடைந்தான்.

மெல்ல தன் பாதத்தை எடுத்து அப்புவின் மார்பில் வைத்தார் சோமநாதர்.

கூடாரத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரகாசமாக ஒளிரத்துவங்கியது. நீண்ட சங்கின் ஒலி கேட்க அங்கே பிரகாசமான ஒரு உருவம் தோன்றியது. கண்களால் காணமுடியாத பிரகாசமான ஒளி உருவை வணங்கினான் அப்பு.

மெல்ல ஒளி குறைந்து உருவமாக வெளிப்பட அங்கே அப்புவின் தோற்றத்தில் இருந்தார் ஆதிநாதர்...!

தலை மழிக்கப்பட்டு, காது மடல்களில் துளையிட்டு செப்பு வளையங்கள் அணிந்து கையில் வலம்புரி சங்குடன் இருந்தார்.  தன் உருவமாகவே இருந்த ஆதிநாதரை வியப்புடன் பார்த்தான் அப்பு.

“என் பிரிய அப்பு, எனக்கு உருவம் என்பது இல்லை. உன்னுள் இருக்கும் ஆவலை தீர்க்கவே இவ்வாறு உன் உருவில் காட்சி அளிக்கிறேன். உண்மையில் நான் எப்பொழுதும் எங்கும் உன்னுடனேயே இருக்கிறேன். ஆதிநாதனும், சோமநாதனும், அப்புவும் வேறுவேறு அல்ல. அனைத்தும் ஒன்றே..!” என கூறி...

இரண்டு அடிகள் நடந்து சோமநாதருடன் ஆதிநாதர் முழுமையாக கலந்தார்.
சோமநாதர் சில அடிகள் முன் வந்து அப்புவடன் கலந்தார்.

தன்னுள் அனைத்தும் ஒடுங்க இறைஒளி விளங்க பரமானந்தத்தில் திளைத்தார் அப்பு.

இறைவனும் குருவும் வேறுவேறல்ல என்பதையும், தானும் குருவும் வேறுவேறல்ல என்பதையும் உணர்ந்து எல்லைகள் இல்லா பேரானந்தத்தில் மூழ்கினார்

தன் உணர்வு பெரும் பொழுது சோமநாதர் தன் முன் அமர்ந்திருக்க, அவர் முன் அமர்ந்திருந்ததை உணர்ந்தார். அப்புவின் தலை மழிக்கப்பட்டு அவரின் காதுகளில் செப்பு வளையம் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று முதல் நாதப் பாரம்பரியத்தில் மற்றும் ஒரு நாத் மலர்ச்சி அடைந்தார்.

------------------------

சோமநாதர் மெல்ல நடந்து சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்கையும், ருத்திராட்ச மாலையையும் எடுத்தார். அவை ஒளியுடன் பிரகாசித்து துகள்களாக மாற்றி தன்னுள் ஐக்கியமாக்கினார்.

அதே நேரம் தாயாரின் வீட்டிலிருந்து அப்பு கிளம்பி சோமுவுடன் தன் வீடு நோக்கி பயணமானார்கள்.

--------------------

சோமநாதர் அப்புவின் உடலை மெல்ல தொட்டார். சோமநாதரின் தொடும் காரணத்தை உணர்ந்த அப்பு கண்களை மூடினார். இருவரும் அந்த மாநகருக்குள் இருக்கும் மலைக்கோவிலின் குகையில் இருந்தார்கள்.

சோமநாதரின் உதவியுடன் தன் உடலை பெற்றும் முழு உணர்வுக்கு திரும்பினார் அப்பு. அங்கே விட்டு சென்ற நிலையிலேயே உடல் இருந்தது. உடல் உணர்வு நிலைபெற்றாலும், சூட்சம உடலின் தோற்றமும் உணர்வும் மேலோங்கி இருந்தது.

சாதாரண ஜீவனாக சென்ற அப்பு ஜீவன் முக்தனாக சோமநாதருடன் திரும்பி வந்தான்.வீட்டில் இயல்பாக சென்று, தன் இருப்பையும் ஆன்மீக உயர் நிலையையும் வெளிப்படுத்தாமல் சாதாரண கணவனாகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும் வாழ்ந்து வருகிறான்.

சோமநாதர் என்ற சோமு வழக்கமான குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு சென்று, அதிக மார்க் எடுக்கும் போட்டியில் போராடி வருகிறார்.

(மேளா நிறைவு பெற்றது)

Tuesday, January 15, 2013

கும்பமேளா - 11


கும்பமேளா மைதானத்தின் மையத்தில் இருந்த அந்த கூடாரத்தின் உள்ளே அப்புவும், சோமநாதரும் அமர்ந்திருந்தனர்.

புனித ஸ்நானம் செய்துவிட்டு வந்து அமர்ந்திருந்த அப்பு ஒருவித பரவச நிலையில் இருந்தார். வந்து சில நாட்களாக இங்கே இருக்கிறோம் எந்த விதமான பசியோ களைப்போ ஏற்படவில்லை என்பதை உணர்ந்திருந்தார்.

இந்த எண்ணத்துடன் அப்பு சோமநாதரை பார்த்தார், “நமக்கு ஐந்து உடல் இருக்கு. சதை எலும்பு கொண்ட ஊண் உடல் காலத்திற்கும், இடத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனா மிச்ச நாலு உடம்பும் அப்படி இல்லை. நாம ஊண் உடலை விட்டுட்டு இங்கே வந்துட்டோம். அந்த உடம்புக்குத்தான் பசி, தூக்கம் எல்லாம் இருக்கும்” என்றார் குருஜி.

அப்புவால் நம்பமுடியவில்லை. அனைத்தும் உணர்வதை போலவும், உண்மை போலவும் இருக்க எனக்கு உடம்பு இல்லை என எப்படி நம்புவது என தெரியாமல் முழித்தார்.

அப்புவின் அருகே வந்த சோமநாதர், அப்புவின் இதய மையத்தை தொட்டார். கண்களில் கூடாரம் மறைந்து ஒரு மலைப்பாதை தெரிந்தது. அங்கே அப்புவின் உடல் தளர்வாக படுக்கவைக்கப்பட்டிருந்தது. அருகே சோமநாதர் அமர்ந்து அப்புவுக்கு அவரின் உடலை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் சிறிது இதய மையத்தை அழுத்தினார் சோமநாதர். அங்கே அப்புவின் தாயார் அவரின் வீட்டில் இருப்பதை கண்டான். அப்புவின் அம்மா அப்புவை பார்க்க புறப்பட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

மீண்டும் கூடாரத்தில் இருப்பதை உணர்ந்து அப்பு தன்னிலைக்கு திரும்பினான். 

“குருஜி, அம்மா என்னை பார்க்க புறப்பட்டு வரங்க. வீட்டுக்கு வந்து நான் இல்லைனு தெரிஞ்சா அவ்வளவு தான். பெரிய பிரச்சனை ஆயிடும். தயவு செய்து நாம திரும்பி போயிடலாமா?” என கேட்டான்.

“ஓ போகலாமே. அப்பு உங்களுக்கு அருள்நிறைந்த ஆதிநாத்தை தரிசிக்க வேண்டாமா?” என சோம்நாதர் கேட்க, இயலாமையால் தவித்தார் அப்பு.

சப்தமாக சிரித்த சோமநாதர், தன் கையில் வைத்திருந்த வலம்புரி சங்கை எடுத்து அப்புவின் தலைக்கு அருகே வைத்து பிறகு கீழே மணலில் குத்தி நிறுத்தினார். 

ருத்திராட்சத்தை எடுத்து தன் தலை அருகே வைத்து வலம்புரி சங்கின் மேல் வைத்தார். வலம்புரி சங்கின் பெரிய பகுதிக்கு மேலே முண்டாசு கட்டினது போல ருத்திராச மாலை இருந்தது. ஸ்ரீசக்ரத்தை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டார். 

அப்புவை அருகே அழைத்து அந்த ஸ்ரீசக்ரத்தை தொட சொன்னார்.அப்புவின் கண்களில் காட்சி விரிந்தது.  தன் அம்மாவின் வீட்டிற்குள் அப்பு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்புவின் தோளில் சோம்நாத் குருஜி அமர்ந்துகொண்டு கைகளை அப்புவின் தலையில் முண்டாசு போல கட்டிக்கொண்டு இருந்தார்.அப்புவையும் தன் பேரனையும் பார்த்த தாயார் சந்தோஷத்தில் மிதக்க அப்படியே காட்சி சுருங்கி மஹாகும்பமேளாவின் கூடாரத்தில் இருந்தார் அப்பு.

காட்சியில் பார்த்ததை நம்பமுடியாமல் சோமநாதரை நோக்கி, “ இது எல்லாம் உண்மையா? இல்லை மாய காட்சிகளா?” என கேட்டார்.

“அப்பு அனைத்தும் உண்மையே..நீ இங்கே இருப்பதும், உன் தாயுடன் இருப்பதும், மலைக்கோவிலில் உடலாக இருப்பதும் உண்மையே...எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்வோம். அனைத்து உயிர்த் தன்மைகளும் ஒன்றாக இருக்க அனைத்தும் நாமாக இருக்கக்கூடாதா?” என விளக்கிய சோமநாதர் அப்புவின் கைகளை பிடித்து மேலே எழும்பி கூடாரத்தை விட்டு விண்ணில் பறந்தார்.அப்பொழுது அப்பு முதன்முதலாக அதான் சூட்சம உடலில் இருப்பதை உணர்ந்தான்.


மேலே சில மீட்டர்கள் உயரத்தில் மிதந்த வண்ணம் மஹாகும்பமேளா நடக்கும் சங்கம் மைதானத்தை முழுவதும் பார்த்தார் அப்பு. அங்கே லட்சக்கனக்கான மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

சற்று உற்று பார்த்தான் லட்சக்கணக்கான மனிதர்கள் அனைவரும் அப்புவாகவே இருந்தார்கள்...! சோமநாதர் புன்னகைத்தார்.

(மேளா தொடரும்)

Friday, January 11, 2013

கும்பமேளா - 10

தியானம் செய்ய இடையூராக இருக்கிறது என மனிதர்கள் இல்லாத இடத்தை நோக்கி பல முறை சென்று இருக்கிறார் அப்பு. ஆனால் இங்கே லட்சக் கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தாலும் ஒரு வித தியான நிலை தொடர்வதை உணர முடிந்தது.

உணவு, உறக்கம் போன்ற உடல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் குறைந்து இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் குருஜி சோமுவுடன் கழிப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதுமாக சென்றது.

அன்று வழக்கத்தை விட இரண்டு பங்கு மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. குருஜியிடம் கேட்க அவரை நோக்கி திரும்பினான், அவனை சைகையால் அமர்த்திவிட்டு, “இன்று முக்கியமான குளியல் நாள் அதற்காகத்தான் மக்கள் கூட்டமாக போகறாங்க” என கூறினார் குருஜி.

தன் மனதில் உதித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருஜியின் தன்மை அப்புவுக்கு  பழக்கமாகி இருந்தது என்பதால் ஆச்சரியமாக இல்லை.

குருஜி தொடர்ந்தார், “ மஹா கும்பமேளா, சூரியன், சந்திரன் மற்றும் குரு கிரக இணைவால் வருவதாக சொன்னேன் இல்லையா? இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிணையும் நாட்கள் கும்பமேளாவின் மிக முக்கியமான நாட்களாகும். தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி ஆகிய நாட்களில் நடைபெறும் கும்பமேளா எல்லா நாளும் அற்புதமான நாட்கள் தான் என்றாலும், பெளர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி ஆகிய நாட்கள் மிக முக்கிய நாட்கள். அன்னைக்குத்தான் வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் குரு கிரங்கள் நெருங்கின தொடர்புல இருக்கும். அன்று ஸ்நானம் செஞ்சா 21 தலை முறைகள் முக்தி அடையும் என ஆதிநாத் ஆசிர்வதிச்சிருக்கார். அதனாலதான் பாருங்க மக்கள் எத்தனை பேரு கூட்டம் கூட்டமா வர்ராங்க..”

“ஓ இவ்வளவு விஷயம் இருக்கா  கும்பமேளாவில்?அப்ப நான் ஸ்நானம் செஞ்சுட்டு வரட்டுமா?” என்றார் அப்பு.

“இருங்க, நானும் உங்களோட வர்ரேன்” என சொல்லி அப்புவுடன் நடக்கத் துவங்கினார் குருஜி.

கூட்டத்தின் நடுவே பல்வேறு மனிதர்களையும், யோகிகளையும், ஞானிகளையும் கடந்து கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு ஒரு படகில் ஏறி சென்றார்கள்.

அங்கே மையத்தில் இறங்கி குளிக்கத் துவங்கினார்கள். அப்பு இடுப்புவரை நீர் ஓடிக் கொண்டிருந்தது. குருஜிக்கு கழுத்துவரை நீர் ஓடிக்கொண்டிருந்தது.

இடுப்பில் ஒரு துண்டுடன் அளவுக்கதிகமான குளிரில் உடல் வெடவெடக்க அப்பு ஸ்நானம் செய்துகொண்டு ப்ரார்த்தனை செய்தான்.

அப்புவை படகில் ஏறி உட்கார சொல்லிவிட்டு, குருஜி மட்டும் நீரில் நின்று இருந்தார். 

நீரின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அப்பு சோம்நாதரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்புவும் சோமுவின் அப்பா என்ற நிலையை கடந்திருந்தான்.

கண்களை மூடி மெல்ல நீரின் உள் சென்றார் குருஜி. சில வினாடிகள் சலனமே இல்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தார். அவர் கை உயர்த்தி பெரிய ருத்திராட்ச மாலையை அளித்தார்.

மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்தார். மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து ஸ்ரீசக்ரம் ஒன்றை கொடுத்தார். 

மூன்று முறை முங்கி எழுந்து ஒவ்வொரு பொருளையும் அப்புவிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு படகில் ஏறி அமர்ந்தார்.

ஆற்றலுடன் இருந்த மூன்று பொருட்களையும் பார்த்து குருஜியிடம்  “என்ன இதுவெல்லாம்?” என கேட்டான் அப்பு.

“முன்பு வேறு உடலில் இருக்கும் பொழுது என் யோக ஆற்றலை இதில் சேமித்து வைத்திருந்தேன். ஆதிநாதரிடம் இவை இருந்தது. அவரிடம் இருந்து இந்த உடலுடன் வாழ இதை மீண்டும் வாங்கினேன்” என்றார் குருஜி.

பல்வேறு கேள்விகளால் உந்தப்பட்டான் அப்பு.“இத்தனை நாள் யோக சக்தி இல்லாமலா இருந்தீர்கள்? இதிலிருந்து சேமித்து பிறகு பெற முடியுமா?”

“ஆம். முடியும். சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்.. நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள் ”

“ஓ..சரி. இந்த பொருட்களை எல்லாம் அளிக்க ஆதிநாதர் இப்பொழுது இங்கே வந்தாரா?”

“ஆதிநாதர் வர வேண்டியதில்லை. அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் வந்து செல்லும் பயணி இல்லை. மஹா கும்பமேளாவை நடத்தும் முதன்மையானவர் இல்லையா? ”

“என்னால் பார்க்க முடியவில்லையே?”

“மீனுக்கு நீரை பார்க்க முடியுமா அப்பு? அது அதிலேயே மூழ்கி இருக்கிறது. அதுபோல ஆதிநாதர் எப்பொழுதும் இங்கே சூட்சமமாக இருக்கிறார்”

தத்துவார்த்தமான பதிலால் திருப்தி அடையாத அப்பு தலைகவிழ்த்தான்.

“ஏன் அவசரம்? நீங்கள் கண்டிப்பாக ஆதிநாதரை ஸ்தூலமாக சந்திப்பீர்கள்” என்றார் குருஜி.

இவ்வாறு இவர்கள் மஹாகும்பமேளாவில் மஹா உன்னதமாக இருக்கும் நேரத்தில் அப்புவின் அம்மா அப்புவின் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்பு அங்கு செல்வதாக சொல்லிவிட்டு தானே வந்திருந்தான்?

(மேளா தொடரும்)

Sunday, January 6, 2013

கும்பமேளா - 9


செய்வதறியாது திகைத்தான் அப்பு. சோமுவை காணாத பதட்டம் அதிகரித்தது. தன்னை சுற்றி கூடாரங்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் இருப்பதும் கண்டவுடன் ஒருவித இறுக்கம் பரவியது.

சங்கம் பாபாவை நோக்கி, “யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? சோமு எங்க?” என கேட்க...

சங்கம் பாபா அருகில் வந்து அப்புவின் சட்டையை கொத்தாக பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு அருகே இருக்கும் கூடாரத்தினுள் போட்டார். தடுமாறி விழுந்தவன் எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க..அங்கே ஒல்லியான தேகமும் பெரிய வயிறும் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

அந்த கூடாரத்தில் வேறு யாரும் இல்லை. நிர்வாண நிலையில் இருந்தாலும் பெரிய தொப்பை அவரின் தொடைபகுதி வரை மறைத்திருந்தது. கையில் பெரிய தடி ஒன்று வைத்திருந்தார். அதன் முனைப்பகுதியில் கொண்டை போன்ற அமைப்பு பள்ளி ஆசிரியரின் பிரம்பை நினைவூட்டியது.

இவற்றையெல்லாம் பார்த்த அப்பு..குழம்பிய நிலையில் இருந்தான். உடலில் நாமம் வரையபட்டு நிர்வாணமாக இருந்தவரின் கண்கள் மட்டும் அப்புவை விட்டு விலக வில்லை. சிறிது நேரத்திற்கு பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் கேட்டான், “என் பையன் சோமு எங்கே?”

“பட்”

கம்பில் இருந்த கொண்டையால் அப்புவின் நடு உச்சியில் அடி விழுந்தது.

“எதுக்கு என்னை அடிக்கிறீங்க? நான் சோமு எங்கேனு தானே கேட்டேன்?” குரல் கம்மிய நிலையில் அப்பு பரிதாபமாக கேட்டான்.

“பட்” மீண்டும் அடிவிழுந்தது.

தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட சுயபச்சாதாபம் மேலிட அப்புவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

சில நிமிடம் மெளனத்தில் கரைந்தது. விடைதெரியாமல் எப்படி இருக்க முடியும்? அடி வாங்க உடலை தயார்படுத்திக்கொண்டு “ சோமு எங்கே?”  என கேட்டான்.

நிர்வாண சுவாமியின் முகத்தில் சிறிய புன்னகை பூத்தது. 

“அப்பு....நான், எனது என யார் என்னிடம் கேட்டாலும் அவர்களுக்கு அடியே பரிசு. அடி உனக்கு விழவில்லை. உன் அகம்பாவத்திற்கே விழுந்தது. என்ன குழப்பம் உனக்கு? என்னை பார்த்தால் சோமுவாக தெரியவில்லையா?” என கேட்டுவிட்டு...

நிர்வாண ஸ்வாமி தன்னை சோமுவாகவும். சங்கம் பாபாவாகவும், மாறிமாறி காண்பித்தார். கடைசியில் மீண்டும் சோமுவாக மாறி அப்புவின் கைகளை பிடித்தார். அப்புவின் உடல் சிலிர்த்தது. 

அப்பு கண்ணீர் மல்க சோம் நாத் குருஜியின் கால்களில் விழுந்தான். மனது லேசாகி ஒருவிதமாக ஆகாயத்தில் பறப்பதை போல இருந்தது.

 “குருஜி, ஏன் இத்தனை உருவங்கள்? ஏன் என்னை இப்படி குழப்புகிறீர்கள்?” என்றான் அப்பு.

“அப்பு, நீங்க என்னை குழந்தையாக வளர்த்தாலும், என்னால் உருவான குழந்தை என்ற ஆணவம் உங்களுக்கு இருந்தது. உங்களை இங்கே அழைத்து வந்தவனே நான் தான் என்றாலும் என்னை காணவில்லை என தேடும் தகப்பனாக நீங்க இருந்தீங்க..! அதனாலேயே எனது பிற உருவங்களையும் உங்களுக்கு காட்ட வேண்டி இருந்தது..!”

அப்பு, சோம் நாத் குருஜியை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

“குருஜி, உங்களுடன் இருப்பதே எனக்கு போதுமானதாக இருந்தாலும்,   என் மனது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் என் அறிவு அமைதி அடையும் என நினைக்கிறேன். கேட்கவா?”

“தாராளமாக கேளுங்க” என பச்சை கொடி காட்டினார் குருஜி...!

“முன்னாடியே கேட்ட கேள்விதான். என் மனைவி வந்ததால நீங்க பதில் சொல்ல முடியாம போச்சு.. மீண்டும் கேட்கறேன்...பல ஆன்மீக குழுக்கள் மற்றும் மதங்கள் இருந்தாலும் அவங்க எல்லாம் ஏன் ஒன்று கூடனும்? இந்த உலக அதிசயமா மக்கள் கூடுவது எப்போ ஆரம்பிச்சுது?” என மீண்டும் விடுபட்ட கேள்வியை கேட்டான் அப்பு.

கேள்வியை உள்வாங்கி கூடாரம் விட்டு வெளியே நடக்கத்துவங்கினார் குருஜி. அவருடன் நடந்தவண்ணம் பின் தொடர்ந்தான் அப்பு.

மக்கள் கூட்டமாக நடந்துகொண்டும் அமர்ந்துகொண்டும்  கூடாரங்களில் பஜனை செய்தவண்ணமும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருந்தது...

கங்கையும் யமுனையும் ப்ரவாகமாக ஓடி தங்களை ஒன்றோடு ஒன்றாக கலந்துகொண்டிருந்தன. ஆற்றின் கரையில் பிரம்மாண்டமான கோட்டை ஒன்று இருந்தது. அதன் அருகே மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அங்கே சென்று அமர்ந்தார் அப்பு..

“உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் முதலில் நாத சம்பிரதாயத்தை பற்றி சொல்லியாக வேண்டும். உலகத்தில தொன்மையான ஆன்மீக பாதைகளில் பழமையானது நாத வழி. இறைவன் முதலில் மனித உருவில் குருவாக தோற்றம் அளித்து மனிதர்களை வழிநடத்த துவங்கினார். அவரின் ஆன்மீக வழிகாட்டுதலை பின்பற்றி மோக்‌ஷத்தை அடைந்தார்கள். ப்ரணவம் என்ற ஓம் என்ற சப்தம் நாதம் என அழைக்கப்படுகிறது. இதுவே மனித உருவில் வந்து அறியாமையை களைந்து மோக்‌ஷத்தை அளித்தது. 

இவர்களை நாதர்களின் வழி அல்லது நாத சம்பிரதாயம் என அழைக்கப்படுகிறது.  முதன் முதலில் நாதம் உரு பெற்று இறை ரூபமாக வந்த நிலைக்கு பெயரிடப்படவில்லை. அதனால் அவ்வாறு வந்த முதல் குருவை ஆதிநாதர்(ஆதிநாத்) என்கிறார்கள். நாதம் வழி வந்த அனைவரின் பெயரும் நாத் என முடியும். இது தலைவன் என்ற பொருளில் நாதன் என்றும் நாதம் என்ற ஒலி வழி சார்ந்தவர்கள் என்றும் இரு பொருள் கொண்டு அழைக்கப்படுகிறது. தொன்மையான நாதர்கள் வழிக்கு ஆசிரமம், மடம் சார்ந்த முறைகள் கிடையாது. 

இவர்கள் இயற்கையானவர்கள். இறையாற்றலை முழுமையாக உணர்ந்து அந்த ஆற்றலை அனைவரையும் உணரச்செய்து இறையின்பத்தில் ஆழ்த்துவதே இவர்களின் பணி. ஆதிநாத் முதல் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப இறைவன் நாத வடிவம் எடுத்துள்ளான். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் நாதர்கள் இறைவனால் அருளப்பட்டுள்ளனர். 

பலர் இறைதூதர்களாகவும் பலர் ஆன்மீகவாதியாகவும் அறியப்பட்டுள்ளனர். இறைவனின் சங்கல்ப்பத்தால் அவதரிக்கும் நாதர்கள் தங்களின் உருவத்தை சக்தி மிகுந்த நிலைக்கு உயர்த்தி சமாதி அடைவார்கள். அவ்வாறு அவர்கள் சமாதி அடைந்த அல்லது உருவான இடங்கள் தான் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் கோவில்களாக உள்ளது. 

கேதார் நாத், முக்தி நாத், பத்ரி நாத், விஸ்வநாத், ஜகன்னாத் என இறைவன் நாத ரூபமாக வந்து நிலை பெற்ற இடங்களின் பெயர்கள் இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கின்றது. நாத சம்ப்ரதாயத்தை சார்ந்தவர்கள் இயல்பான நிலையில் இருப்பார்கள். சப்த ரிஷிகள் என கூறப்படும் ஏழு ஆன்மீகவாதிகள் நாத சம்ப்ரதாயம் கொண்டவர்களே ஆகும். இவர்கள் அனைத்து மக்களின் நிலையிலும் இருப்பார்கள். சராசரி மக்களின் வாழ்க்கையின் உள்ளே ஊடுருவி அவர்களை மோக்‌ஷத்தை நோக்கி அனுப்புவார்கள். ஆதிசங்கரர் காலத்திற்கு பிறகே சில நாத சம்பிரதாயம் கொண்டவர்கள் ஆசிரமங்களை வைக்க துவங்கினார்கள். அதற்கு முன்பு வரை நாத சம்ப்ரதாயம் கொண்டவர்களுக்கு என ஓர் இடம் இல்லை. மக்களுடன் மக்களாகவே இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் பல்வேறு மக்களுடன் கலந்து இருந்ததால் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஓரே இடத்தில் சந்திக்கும் சூழலை ஆதிநாத் உருவாக்கினார். அந்த இடத்தின் பெயர்தான் சங்கம். கங்கை- யமுனை கூடும் மஹா கும்பமேளா...! ஒவ்வொரு மஹா கும்பமேளா சமயத்திலும் ஆதிநாத் தலைமையில் அனைத்து நாதர்களும் ஒன்றிணைகிறார்கள். ”

அனைத்தையும் புருவம் விரிய கேட்ட அப்புவின் உதட்டிலிருந்து கேள்வி உதிர்ந்தது. “அப்ப இன்னும் ஆதிநாத் இருக்காரா?”

“இது என்ன கேள்வி அப்பு, அவர் இல்லாமல் இருக்க முடியுமா? எப்பவும் எதிலும் இருக்கார். நாத சம்பிரதாயத்தை வழிநடத்திச் செல்லும் ஒரு நபர் அவர் தானே? உலக சூழலை உருவாக்கி அதில் எங்கெல்லாம் நாதர்கள் வரவேண்டும் என முடிவு செய்து அங்கே அவர்களை உருவாக்குபவர்களும் அவர் தான். எங்கே விழிப்புணர்வு தேவையோ அங்கே நாதர்கள் வெளிப்படுவார்கள். அதன் பின்னே இருப்பவர் ஆதி நாத் மட்டும் தான். நாத சம்பிரதாயம் வழி வந்தவர்கள் ஆன்மீகவாதிகளாக மட்டும் இல்லாமல், உலக விஷயங்களை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.  உதாரணமாக நாத சம்பிரதாய ஸ்வாமி ஒருவர் விஞ்ஞானியாக இருக்கலாம், அரசியல்வாதியாக இருக்கலாம், ஏன் ஒரு தீவிரவாதியாக கூட இருக்கலாம். விழிப்புணர்வை அளிக்க அவர்கள் எந்த வேடம் எடுக்கவும் தயங்குவதில்லை. தனிநபரின் ஆன்மீக விழிப்புணர்வுக்காக ஆதிநாத்தின் கட்டளையை ஏற்று எந்த உருவை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

இது இன்று நேற்று அல்ல பல்வேறு யுகங்களாக நடக்கிறது. இந்த நாட்டை அரசர்கள் ஆண்டு கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு அரசியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர்கள் நாதர்கள் தான். முகமதிய அரசர்கள் காலத்திலும் இவர்களின் பணி தொடர்ந்தது. நாதர்கள் ஜாதி மத வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். உதாரணமாக அக்பர் சக்ரவர்த்தியாக இருந்தாலும் அவனின் ஆன்மீக தேடலை தூண்டியவர்கள் நாதர்கள் தான். அதனால் தான் அவன் மதம் கடந்த இறைவழிபாட்டுக்கு தீன்ஹிலாகி என்ற புதிய வழியை கண்டறிய முற்பட்டார். இதோ பார் நாம் அமர்ந்திருக்கும் இந்த கோட்டை யாருடையது தெரியுமா? அக்பர் கட்டியது தான். கும்பமேளாவில் கலந்து கொள்ள அக்பர் வருவதற்காக கட்டப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் நாதர்களின் பங்கு அதிகம். மேலும் காந்தியை வழிநடத்தியது, சுபாஷ்சந்திர போஸை நெருப்பாக்கியது என பல்வேறு வழிகள் இவர்கள் காட்டியது தான். 

நாதர்களின் பணி முடிவதில்லை. இன்றைய சமுதாயம், கலை, அரசியல் என பல்வேறு நிலைகளில் இவர்களின் ஊடுருவல் இல்லாமல் இல்லை. இந்த மஹாகும்பமேளா அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடம், இதில் அவர்கள் புது உத்வேகம் பெற்று ஆதிநாத் அருளை பெற்று மேலும் தங்கள் ஆன்மீக பணியை செய்ய கிளம்பி செல்வார்கள். முதலில் தோன்றிய ஆதிநாத பரம்பரைகள் சில காரணங்களால் வெவ்வேறு வடிவம் எடுக்க துவங்கி பல்வேறு சம்பிரதாயங்களாக மாறியது. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடுவதால் பல்வேறு சம்பிரதாயம் மற்றும் மத ஆட்கள் கும்பமேளாவில் இணைவதை போல தோன்றுகிறது. உண்மையில் அனைவரும் ஒன்றே..!”

நீண்ட உரையை கேட்டு ஏதோ புரிந்ததை போல தலையாட்டினான் அப்பு. அங்கே மெளனம் மட்டும் குடிகொண்டது. கங்கை யமுனையை தழுவியவண்ணம் கலந்தாடி சென்றுகொண்டிருந்தது.

சில நிமிட இடைவெளிக்கு பிறகு அப்பு குருஜியை பார்த்து கேட்டான், “ஒவ்வொரு மஹா கும்பமேளாவும் ஆதிநாத் தலைமையில் நடப்பதாக இருந்தால் இந்த மஹாகும்பமேளாவும் அவரின் தலைமையில் தானே நடக்கும்? அவரை நான் நேரில் சந்திக்க முடியுமா?”

பெரும் குரல் எடுத்து சிரித்தார் சோம்நாத் குருஜி...!

மெல்ல சிரிப்பொலி அடங்கி, “ ஆதிநாதர் என்ன அரசியல் தலைவரா? நேரம் கேட்டு சந்திக்க? இறைவனாகிய ஆதிநாதர் மிக எளிமையானவர் அவரை சந்திக்க நீ நினைத்தால் உன்முன் அவர் வந்து நிற்பார். நாம் வேறு எதற்கு இங்கே வந்திருக்கிறோம்? அவரை சந்திக்க மட்டும் தானே?”

அப்புவிற்கு பெருகிய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்ததது....!

(மேளா தொடரும்)

Wednesday, January 2, 2013

கும்பமேளா - 8


திடீரென அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி, பிள்ளை முன் பணிவுடன் அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து அதிர்ந்து, “என்னங்க அவன் முன்னாடி ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?” என கேட்கவும், தன் மனைவி வந்ததையே அப்பொழுது தான் பார்த்த அப்பு செய்வது அறியாமல் தடுமாற்றத்துடன் திரும்பி மனைவியை பார்த்தார்

பிறகு சமாளித்து, “உம்பையன் மரியாதை தெரியாம வளந்திருக்கான். அப்படியே உன் அப்பன் மாதிரி. அதனால தான் பெரியவங்க கிட்ட எப்படி இருக்கனும்னு கத்து கொடுத்தேன்...”

“இந்தபாருங்க...வீணா எங்க அப்பாவை இழுக்காதீங்க.. நீங்க எங்களை விட்டுட்டு போனப்ப எங்களை வச்சு காப்பாத்தினதே அவர்தான். அதை மறந்துட்டு பேசாதீங்க...”

இப்படியாக குடும்ப சண்டை தொடர, அப்புவின் மனைவி தான் கண்ட காட்சியை மறந்தாள். இவற்றை பார்த்தவண்ணம் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார்  குருஜி சோம் நாத்...! 
---------------------------------------------
மறுநாள் காலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் எழுப்பப்படுவதை உணர்ந்து எழுந்தார் அப்பு.

தன் அருகே சோமு அமர்ந்திருந்தது கண்டு...எழுந்து அமர்ந்தார்...

தூக்க கலக்கத்தில் தன் பிள்ளையை குருஜி என அழைப்பதா அல்லது சோமு என அழைப்பதா என தெரியாமல் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் குழம்பி...எதுவும் அழைக்காமல்...

“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என கேட்டார் அப்பு.

“பிரச்சனை ஒன்னும் இல்லை.  நேத்து நாம பேசினதை முழுசா முடிக்கலை அதனால பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றார் குருஜி.

“ஒரு நிமிஷம்” என சொல்லிப்போய் பல நிமிஷங்களை செலவழித்து தன்னை தூய்மையாக்கிக் கொண்டு வந்தார் அப்பு.

சோம்நாத் குருஜியை ஒருமுறை பார்த்துவிட்டு “நேத்து உங்க அம்மா வந்தாளா அதனால பேச்சு தடைபட்டுப்போச்சு.... அவளை பேச்சு மாத்தி சமாளிக்கிறதுக்குள்ள...” என சொல்லி தொடர..

இடைமறித்த குருஜி... “அவங்க என் உடம்பை கொடுத்தவங்க. உங்க மனைவி. என் அம்மா என்றால் இறைவன் மட்டும் தான். என்னது நீங்க சமாளிச்சீங்களா?” என மையமாக ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு... “நாம் இன்னைக்கு கும்பமேளாவுக்கு கிளம்பனும் உங்க மனைவியிடமும் மத்த எல்லாருக்கும் உங்க அம்மாவீட்டுக்கு போறதா சொல்லிட்டு கிளம்புங்க..”

“குருஜி, அப்படி என்னால கிளம்ப முடியாது. நான் குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு போனதிலிருந்து எல்லாரும் என் மேல சந்தேகமா இருக்காங்க. மனைவி இல்லாம தனியா எங்கையும் என்னை போகவிட மாட்டாங்க...”

“யாரு தனியா போக சொன்னா? என்னையும் கூட்டிக்கிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயி சில நாள் தங்கிட்டு வரதா சொல்லுங்க..இன்னைக்கு மதியம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு அருகே இருந்த பூஜை அறையில் சென்று தியானத்தில் அமர்ந்தார் குருஜி.

தடுமாறத்துவங்கினார் அப்பு....! குடும்பத்தாரிடம் சொல்லுவது தொடங்கி ...பயணத்திற்கான பொருளாதார செலவுகளை எப்படி சமாளிப்பது என.. பல எண்ணங்கள் வந்து சென்றன...

காலை உணவு சாப்பிடும் பொழுது மனைவியிடம், “மனசு சரியில்லை, சோமுவை அழைச்சுட்டு அம்மாவை பார்த்துட்டு வரேன்..” கூறி சமாளித்தான். மதியம் உடைகளை தயார் செய்து அடுக்கி, சோமுவை அழைத்துக்கொண்டு வண்டியில் ரயில் நிலையம் நோக்கி பயணித்தான்.

அதுவரை மெளனமாக இருந்த குருஜி அப்புவை நோக்கி, “ரயில் நிலையம் வேண்டாம். மலைக்கோவிலுக்கு போங்க” என சொல்லவும்..விசித்திரமாக பார்த்துவிட்டு அந்த நகரில் இருக்கும் பிரசித்திபெற்ற மலைக்கோவிலுக்கு வண்டியை திருப்பினான்.

பல நூறு படிகள் கடந்து கோவிலின் பின்பக்க வழியில் பயணம் செய்தார் குருஜி. 

முதன் முறையாக இந்த இடத்திற்கு சோம் நாத் குருஜியை அழைத்துவந்தாலும் குருஜி முன் செல்ல அவரை பின் தொடர்ந்தார் அப்பு.

கோவிலுக்கு பின்புறம் உள்ள சித்தர் குகைக்கு போகும் வழியில் சென்று வலதுபுறம் திரும்பி கன்னிமார் சன்னிதிக்கு மேலே மலை உச்சிக்கு செல்லும் வழியில் ஏறத்துவங்கினார் குருஜி.

மணித்துளிகள் கரைய யாரும் இல்லாத மலைப்பாதையில் இருவரும் மெளனமாக பயணித்தார்கள். பழக்கப்பட்ட இடத்தில் நடமாடுவதைப்போல குருஜி நடந்து சென்று அங்கே இருக்கும் ஒரு பாறைக்கு அப்பால் திரும்பி நின்று அப்புவை அழைத்தார்.

அருகில் சென்றதும் பாறைக்கு பின்புறம் இருக்கும் சிறிய குகை போன்ற பகுதியை காட்டி அங்கே பயணத்திற்காக கொண்டுவந்த பையை வைக்க சொல்லிவிட்டு..அந்த பாறையின் மீது ஏறி அப்புவின் உயரத்திற்கு வந்து, அப்புவை அருகே அழைத்தார்.

அப்புவின் நெற்றியில் தன் கைகளை வைத்தார். கண்களை மூடி தன்னுள் செல்லும் குருவின் ஆற்றலை அனுபவித்த வண்ணம் இருந்தார் அப்பு.

“அப்பு கண்களை திற...” என்ற குருவின் ஓசை மிகத்தொலைவில் கேட்டது. சிறிது சிறிதாக அதே குரல் மிக அருகில் கேட்டவுடன் தன்னை சுதாரித்து கண் திறந்தான் அப்பு.

அங்கே சோம்நாத் குருஜி இல்லை... பதிலாக மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு சால்வை போர்த்தி சங்கம் பாபா நின்றிருந்தார்....!

அதிர்ச்சியுடன் சுற்றியும் பார்த்தார் அப்பு.... சோமுவை காணவில்லை...!

அவன் இருந்த இடம்...அலஹாபாத் நகரில் உள்ள...

மஹா கும்பமேளா மைதானம்...!

(மேளா தொடரும்)