Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, July 28, 2009

எனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...


தலைப்பை படிச்சுட்டு சாமீ..... நீங்களுமா என கேட்பவர்களுக்கு.

எனக்கு உலகசினிமா பத்தியும் நம்மூர் சினிமா பத்தியும் அறிவு கம்மி. சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.
ஆனால் எந்த ஒரு ஊடகத்திற்கும் நல்லது கேட்டதுனு இரண்டு கோணம் இருக்கும். ஊடகம் எப்பொழுதும் கத்தி மாதிரி யார் கையில் இருக்குங்கிறதை பொருத்து வேலை செய்யும்.

அந்த வகையில நான் ரசித்த சினிமாவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு எச்சரிக்கை :

வாக்கிங் ஸ்டிக்குக்கு ஜீன்ஸ் டீசர்ட் போட்டு அது இருபத்து அஞ்சு பேரை அடிச்சுட்டு, கேமராவை பார்த்து நான் யாரு தெரியும்ல என கூறும் படங்களை பாத்துரசிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இதுவரைக்கும் வந்ததே பெருசு. என் அடுத்த பதிவை படிச்சுக்குங்க.

முதல் படம் : What the Bleep do we Know

இந்த படம் குவாண்டம் அறிவியல் கொள்கைகளை ஒரு கதையாக விளக்கும் படம். படத்திற்கு நடுவே சில விஞ்ஞானிகள் அறிஞர்களின் உரையும் உண்டு. படத்தின் தலைப்பே பல விஷயங்களை சொல்லிவிடும். ரியாலிட்டி (இருப்பு நிலை) மற்றும் கால பரிணாமம் ஆகியவற்றை கூறும் சிறந்த ஆக்கம். பல அறிவியல் தகவல்களை கொண்டது. 2004 ஆம் ஆண்டு வந்த படம். திரையாக்கம் மற்றும் ஒளியாக்கம் அருமை. பொழுதுபோக்குக்காக பார்க்கவேண்டும் என நினைத்தால் தலைவலி நிச்சயம். :) டாக்குமெண்டரி பாணி திரைப்படம் என்பதால் விவாதமாக எடுத்து பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள சுட்டி

இரண்டாவது படம் : THE LAST MIMZY

குழந்தைகளுக்காக குழ்ந்தைகள் உலகில் பெரியவர்களின் விஷயத்தை கொண்ட படம். அறிவியல் புனைகதைகள் என்றாலும் 90 நிமிடம் அசையமுடியவில்லை. இயக்குனர் இந்திய கலாச்சாரத்தை தெரிந்தவர் என நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் மற்றும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயத்தை அறிவியல் புனைவில் சேர்த்திருக்கிறார். திபத்திய கலாச்சாரம் என திரைப்படத்தில் காட்டினாலும் அது இந்திய கலாச்சார அம்சமே.(இப்ப தெரிஞ்சுதா எனக்கு ஏன் இந்த படம் பிடிச்சுருக்குனு :) ).

குழந்தைகளை பெற்றோர் நடத்தவேண்டிய முறைகள், குழந்தைகள் உலகம் என படத்தில் அருமையான விவரிப்பு. இதில் வரும் சிறுவன் ஸ்ரீயந்திரத்தை வைத்து சில காட்சிகளை காண்பான். அவை யந்திர சாஸ்திரத்தில் உண்மையில் அப்படித்தான் இருக்கும். இதை தெரிந்து சேர்த்தார்களா தெரியாமல் சேர்த்தார்களா என புரியவில்லை.இவ்விஷயங்கள் ஆன்மீகத்தின் உயர்வில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. திரையில் அந்த சிறுமியின் முகமும் அவளின் நடிப்பு திறனும் விவரிக்க முடியாத அழகு.

மேற்கண்ட இரு திரைபடத்ததில் THE LAST MIMZY என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் சொல்ல வந்த அறிவியல் விஷயத்தை கதையாக சொன்ன விதம் அருமை.

கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....

இதில் ஒரு நன்மை என்ன வென்றால் சென்னை பதிவர்களிடம் நாங்களும் ஒலகபடம் பார்ப்போம்னு சொல்லிகிடலாம்

இந்த இரண்டு படமும் ரொம்ப பழசு. முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

நம்மூரில் THE LAST MIMZY போன்ற திரைப்படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். இத்தகைய திரைப்படம் எடுக்கப்பட்டால் முதல் காட்சியில் முதல் டிக்கெட் வாங்கி அந்த இயக்குனருக்கு என்றென்றும் உபகாரமாக இருப்பேன்.

Sunday, February 15, 2009

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா

நமது பாரத கலாச்சாரம் தொன்மையானது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் உலகின் மூன்றாம் நிலையில் அதிகமாக பின்பற்றப்படும் கலாச்சாரம் நம்முடையது. மேற்கத்திய நாடுகள் அறிவியல் பூர்வமான விஷயங்களில முன்னோடியாக இருந்தாலும் , குடும்ப அமைப்புகள் உணர்வு பூர்வமான பாசங்கள் போன்றவற்றில் நம்மை விட பின் தங்கியே இருக்கிறார்கள்.

மேல் நாட்டிநாட்டினர் நம் நாட்டிற்கு வரும் பொழுது ( குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) அவர்கள் ஓர் முன்நிர்ணயம்(Predefined Mind set) செய்த மனோநிலையில் வருகிறார்கள். எதை முன்னால் முடிவுசெய்கிறார்கள் என பார்த்தால் , பாரத தேசத்தவர்கள் எந்தவிதமான கலாச்சாரமும் நாகரீகமும் அற்றவர்கள் என்பது தான்.அவர்களை பொருத்தவரை நம் மக்கள் மருத்துவம் இல்லாமல், சுகாதாரம் இல்லாமல் இருக்கிறோமாம். ஒரே வார்த்தையில் சொல்லுவதேன்றால் காட்டுமிரண்டிகள் என சொல்லலாம். மிகையாக நான் சொல்லுவதாக உங்களுக்கு படலாம்.

ஐரோப்பியர்கள் நமது நாட்டை ஆளும் காலத்தில் அவர்களின் மனோபாவத்தால் நிறைய விஷயங்கள் நம் கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டது. அதே சமயம் அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்த இந்தியாவை உலகிற்கு காட்டி,இது தான் இந்த பாம்பாட்டிகளும் - சாமியார்களும் கொண்ட காட்டுமிராண்டி தேசம் என சொன்னார்கள்.

நம் நாட்டவர்களோ அவர்களின் நிறத்தாலும், அடக்கு முறை ஆற்றலாலும் பயந்த நாம் அவர்களை “துரை” என அழைத்து அவர்கள்
உயர்ந்தவர்கள் என்று அவர்களை போற்றி புகழ்ந்தோம்.சிந்து நதிக்கரையிலிருந்து தென்பகுதியை தேசமாக கொண்டதால், இந்தியா என வெளிநாட்டினர் தான் நமது தேசத்திற்கு பெயரையும் வைத்தார்கள். சிந்தியா என்று தானே வைக்கவேண்டும் என நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு "Si" என்ற உச்சரிப்பு "ze" என்று தான் வரும். சுகந்திரத்திற்கு முன் இருக்கும் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க பத்திரங்கள், அரசு ஆவணங்களில் "zenthu" என்றே இந்தியனை அவர்கள் அழைத்தார்கள்.

அதனால் தான் நம் நாட்டை பாரதம் எனும் சொல்லில் அழைக்கிறேன். காரணம் வெளிநாட்டினர் வைத்ததாற்காக அல்ல, பாரதி நம் தேசத்தை பாரதம் என்றே அழைத்தான். அது தான் நம் நாட்டின் உண்மையான பெயரும் கூட.

முதல் குழந்தை பிறந்ததும் முதலைக்கோ, கொடிய மிருகங்களுக்கோ கொடுத்துவிடுவார்கள். அந்த நாடு முழுவதும் பாம்பாட்டிகளும் சாமியார்களும் நிறைந்து இருப்பார்கள் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மை பற்றி மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு பயணமாகும் பொழுது இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைத்தார்கள் என்பது மேற்கண்ட தகவல்களுக்கு ஓர் சான்று. இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார்த்தால் பாம்பாடிகளை வைத்து வேடிக்கை காட்டுவார்கள். இது எல்லாம் எதற்கு என கேட்டால்... நாம் இந்தியர்கள் என நிரூபிக்க வேண்டாமா? சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா வந்த உணர்வு ஏற்படுத்த வேண்டாமா என கூறுவார்கள். விவேகானந்தர் சிகாக்கோவுக்கு பயணமாகி ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையிலும் இந்த நிலையே நீடிக்கிறது.

ஹைஜீனிக் (hygienic) எனும் விஷயம் நாம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டுமாம். இதை பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சாமியார்களும் பாம்பாட்டிகளும் என்றாவது குளித்தார்களா? துய்மை என்பதே அவர்களுக்கு கிடையாதே. அதனால் அதான் நாம் மேலை நாட்டினரிடத்திலிந்து துய்மையாக இருப்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹைஜீனிக் என்றவுடன் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வரும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் ஓர் அரசு முறை விருந்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டதும், ஸ்பூனை பயன்படுத்தாமல் கையால் உணவை சாப்பிட ஆரம்பித்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மேலைநாட்டுக்காரர் ஒருவர் , ஜனாதிபதியை நெருங்கி “ ஐயா, கரண்டியை பயன்படுத்தாமல் கையால் சாப்பிடுவது சுகாதரமானது அல்ல” என கூறி நீண்ட உரையாற்றினார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட திரு ராதகிருஷ்ணன் அவர்கள், “ஐயா, நீங்கள் கையில் வைத்திருக்கும் கரண்டியில் எத்தனையோ நபர்கள் உணவு அருந்தி இருப்பார்கள். எனது கையில் நான் மட்டும் தான் உணவருந்துவேன். கையில் உண்பதே சுகாதாரமானது” என்றார்.

இன்றைய உலகில் நாகரீகம் என்ற பெயரிலும் சுகாதாரம் என்ற பெயரிலும் எத்தனையோ கோமாளித்தனங்கள் நடக்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஐரோப்பிய ம்னோபாவம் தான் இத்தனைக்கும் காரணம். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் நம்மை ஆண்டதால் நமக்கும் உண்டு. நைஜீரியா மற்றும் உகாண்டாவை பற்றி உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். மக்கள் எலும்பும் தோலுமாக பட்டினியால் சாகிறார்கள் என்பதே அவர்கள் பதிலாக இருக்கும். உண்மையில் உகாண்டாவில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், தனது கழிவறையை தங்கத்தால் அலங்கரித்தவர்கள் அங்கே அதிகம். ஆனால் செய்தி ஊடகங்களும் மேலைநாட்டு மேதாவிகளும் துயரத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். தற்சமயம் உகாண்டாவின் அரசர் முடுசூட்டப்படும் பொழுது எடுத்த படம் உங்களுக்காக



எப்படி ஏழ்மையாக எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என சொல்லப்படும் நிலையில் ஆப்பிரிக்கா சித்தரிக்கப்படுவதை போல பாரதமும் சித்தரிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் சதம்
அடித்தாலும், சந்திராயன் அனுப்பினாலும் அவர்களுக்கு சென்றடையாது. ஆனால் சாமியார் ஒருவர் லிங்கம் எடுத்தால் தென் அமெரிக்காவின் முனையில் இருப்பவருக்கு சென்றடையும் மர்மம் இது தான்.

சினிமாவில் கலாச்சாரம் சீரழிவு என சொல்லிவிட்டு ஐரோப்பிய மனோபாவத்தை சாடுகிறீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. செய்தி ஊடகங்களும் சில மேதாவிகளும் பல நூற்றாண்டுகளாக செய்து வந்த மாபெரும் செம்பணியை தற்காலத்தில் சினிமா எனும் ஒரே ஊடகம் திறம்பட செய்கிறது.

என்னிடம் சாஸ்திரம் கற்க பல மேலை நாட்டுக்காரர்கள் வருவதுண்டு. அவர்கள் வரும் பொழுது கூறுவது, ”நான் நினைத்த இந்தியா ஒன்று. இங்கே இருப்பது ஒன்று.” அவர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்கள் எப்படி ஆடை உடுத்த வேண்டும், இங்கு உள்ள உணவு முறை, தட்பவெப்பம் எப்படி இருக்கும் என கூறிவிடுவேன். பிரச்சனை உடை விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். குறிப்பாக மேலை நாட்டு பெண்கள் இந்திய திரைப்பட நடிகையின் படத்தை காண்பித்து , இந்திய பெண்கள் இவ்வாறு உடை அணியும் பொழுது நாங்கள் அணியும் உடை மேன்மையானதாகவே இருக்கும் என்பார்கள். அதன் பிறகு இங்கு வந்து நம் பெண்களை பார்த்து உடை மாற்றி புடவை கட்டி அழகு பார்ப்பார்கள் என்பது வேறு விஷயம்.


இந்தியாவை தெரிந்து கொள்ள அவர்கள் நம் சினிமாவையும்,
தொலைகாட்சியையும் நாடுகிறாரர்கள் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும்.

சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையான தன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாக இருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் எப்படி இருந்தார்கள் என இலக்கியத்தை பார்த்து
தானே தெரிந்து கொள்கிறோம்? புலியை அடித்து விரட்டிய பெண்யை பற்றி யுவான்சுவாங்கின் நூல் குறிப்பிலா தெரிந்துகொள்கிறோம் ? அது போல பெண்கள், சமூதாய உறவுகள்,ஆன்மீகம் என அனைத்தும் சினிமாவில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றுமாக இருக்கிறது. சில காலத்திற்கு பிறகு பாரதம் இப்படித்தான் இருந்தது என வரலாறு சொல்ல இவர்கள் துணைபோகிறார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையும் சினிமாவில் வந்த கட்டபொம்மனின் வாழ்க்கையும் வேறு வேறானது என எத்தனை சராசரி தமிழனுக்கு தெரியும்?

சினிமாவில் காண்பிக்கப்படும் சில அபத்தங்களை இங்கே பட்டியலிட வேண்டி இருக்கிறது. இதன் மூலம் சினிமாவின் தவறான கலாச்சார ஊடுருவலை உணர முடியும்.

பாசிச மன நிலை : காதல் படங்களை எடுக்கும் பொழுது மத ரீதியான பாஸிச கொள்கை கொண்டு எடுக்கப்படுகிறது. பாரத கலாச்சாரம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதல் மணம் புரிவது போல் எடுக்கும் படங்களில் சில அபத்தங்கள் உண்டு. இது போன்ற படங்களில் அதிகபட்சம் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக காட்டப்படும். உதாரணம் அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள் துவங்கி காதலுக்கு மரியாதை வரை பெரிய பட்டியலே உண்டு.

கிருஸ்துவ பெண் என்பதால் வேறு மதத்தவருடன் எளிதில் பழகுவா
ள் என காண்பிப்பது எவ்வளவு கொடுமையானது. பாரதத்தில் எந்த மதத்தில் பிறந்தாலும் பெண் அவளுக்கே உண்டான குணத்தில் இருக்கிறாள் என்பதே உண்மை. கிருஸ்துவை கும்பிட்டாலும், கிருஷ்ணனை கும்பிட்டாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை பாரத தேசத்திற்க்கே உரிய பண்பாடு நிறைந்தது என ஏன் மறந்து விடுகிறார்கள்? உங்களுக்கு விளக்க வேண்டியதற்காக தமிழ் படங்களை பட்டியலிட்டுள்ளேன், அனைத்து மொழி இந்திய படங்களில் இது போல நிறைய உண்டு.

சமூதாயத்தை தவறாக சித்தரிப்பது : திருநெல்வேலி என்றவுடன் வீச்சரிவாளை காண்பிப்பது. மதுரை என்றவுடன் அடிதடி செய்வது என காண்பிப்பது ஒட்டு மொத்த மக்களையும் அசிங்கப்படுத்தவதாக இருக்கிறது. இவர்கள் சினிமாவில் காட்டுவதை பார்த்தால், திருநெல்வேலி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகள் கூட மினி அருவாளுடன் பிறக்கும் என நினைக்க தோன்றுகிறது.

சென்னையை விட்டு தாண்டாத உங்கள் சாப்ட்வேர் நண்பரிடம் திருநெல்வேலி
பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் சினிமாவிலிருந்து எடுத்த தகவலைத் தான் பகிர்ந்து கொள்ளுவார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இதுதான் நிலை. இங்கே திருநெல்வேலி என்றால் அங்கே பீகார் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு.

ஆன்மீகம் : சினிமாவில் அதிகம் சீரழிவது ஆன்மீகம் தான். தாங்கள் ஆன்மீகத்தை காண்பிக்கிறோம் என அவர்கள் செய்யும் அவமானங்கள் எல்லை இல்லாதது. ஆன்மீகம் என்றவுடன் மத ரீதியான சாயம் பூசுவது இவர்கள் செய்யும் சேட்டையின் முதல் படி.

கஷ்டம் வரும்பொழுது அம்மன் கோவில் வாசலில் நின்று கதறி
அழும் பொழுது மணி காற்றில் ஆட .... புயல் அடிக்க...அங்கு அம்மன் வந்து கஷ்டத்தை நிவிர்த்தி செய்வதாக காண்பிக்கப்படுவது உச்சக்கட்டம். இப்படி நடப்பது உண்மை என்றால் ஒவ்வொரு கோவிலிலும் இண்டஸ்ட்ரியல் விசிறி வாங்கி வைத்து தினமும் புயலை கிளப்ப வேண்டி வரும். பனங்காட்டு அம்மனோ, பாளையத்து அம்மனோ ஏதோ ஒரு படம், அதில் ஓரு காட்சி. அம்மனாக வரும் அந்த நடிகை அடுத்த காட்சியில் குறைந்த ஆடையுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். வில்லனாக வரும் கதாப்பத்திரத்தை அம்மன் மயக்குகிறாளாம். என்ன கொடுமை இது? இந்தியாவின் ஆன்மீக படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைப்பான்?

இதெல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் எனது யோக வகுப்பில் சேர ஒருவர் வந்தார். எது போல யோக பயிற்சி எடுக்கிறீர்கள் என கேட்டார். விளக்கினே. திடீரென தனது கைவிரலை மடக்கி இது போல யோகா சொல்லி தருவீர்களா என கேட்டார். பள்ளி நாட்களில் “டூ” விட்ட நண்பரிடம் “பழம்” என காண்பிப்பது போல இருந்தது அந்த செய்கை. பின்புதான் தெரிந்தது ஒரு சினிமா நடிகர் சினிமாவில் யோகாவை அப்படி அசிங்கப்படுத்தினார் என்பது.அப்படி எல்லாம் யோகா கிடையாது என எவ்வளவு விளக்கினாலும் , வந்த நபர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்சமயம் அகோரிகளை அசிங்கப்படுத்தி ஓர் சினிமா. அனைவருக்கும் அகோரிகள் என்பவர்கள் யார் என தவறாக பதிவு செய்வதில் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறது. கபாலிகர்கள் எனும் ஆன்மீகவாதிகளின் வழி வந்த அகோரிகள் மிகவும் தூய்மையானவர்கள், மாமிசம் உண்ணமாட்டார்கள், கஞ்சா குடிக்க மாட்டார்கள் என நான் சொன்னால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு இந்த பக்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்.

நாகாசன்யாசிகள் எனும்
பரம்பரை அகோரிகள் எனும் பிரிவை கொண்டது. பல நாட்கள் உணவு உண்ணாமல், எங்கே சென்றாலும் கால் நடையாகவே செல்லும் ஓரு வகை சன்யாசிகள் அகோரிகள். பெரும் ஞானம் கொண்ட இவர்களை புரிந்து கொள்வது கடினம். இவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்ததால் எனக்கு இவர்களின் செயல் ஓரளவு தெரியும் இவர்களை பற்றி விரிவான பதிவே போடலாம் (நீங்கள் விரும்பினால் வெளியிடுகிறேன்). ஆனால் சினிமா இவர்களை நரமாமிசம் தின்பவர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாக காட்டுவது மிகப்பெரிய கலாச்சார அதிர்வை உண்டு பண்ணுகிறது.

ஐரோப்பியர்கள் இன்று கூட காசியில் மனிதன் மனிதனை தின்பதாக படங்கள் வெளியிடுகிறார்கள். சில வீடியோ வலைதளத்தில் அகோரிகள் என தேடினீர்கள் என்றால், நர மாமிசம் தின்பவனைதான் காட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏதோ ஒருவர் சினிமா எடுப்பதால் எப்படி உலக மக்கள் அனைவரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என நீங்கள் வாதம் செய்யலாம். இணைய தளத்தின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் "அகோரி" என கொடுத்து தேடினால் என்னவருகிறது என கீழே கொடுத்திருகிறேன்.


(படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கவும்)

எதிர்காலத்தில் ஒருவர் அகோரிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த திரைப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் காரணம் தகவல் களஞ்சியமே சிபாரிசு செய்துவிட்டதே...!

எத்தனையோ விஷயங்கள் இப்படி நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை நெருப்பில் ஒருவர் கருகி சாவதை கைகொட்டி சிரிப்பதை போல கலாச்சாரம் நெருப்பில் அழியும் பொழுது நாம் சினிமா அரங்குகளில் கைகொட்டி ரசிக்கிறோம். ஒரு நாட்டிற்காகவோ, மதத்திற்கவோ சார்பாக நான் இங்கே பேசவில்லை.

உண்மை தவறாக பதிவு செய்யும் பொழுது அதை சுட்டிக்காடுவதை கடமை என நினைத்து கூறுகிறேன். என்னை பொருத்தவரை உலக ஜீவராசிகள் அனைவரும் என்னில் ஒருபகுதியாகவே பார்க்கிறேன். ஆனால் எனது உடலின் உறுப்பு ஒன்று சீழ் பிடித்து புண்ணாக இருக்கும் நிலையில் பிறரிடம் காட்டி ஆறுதல் தேடும் முயற்சிதான் இது. ஒரு சில நல்ல படங்கள் வெளிவரலாம் , ஆனால் பெருவாரியான படங்கள் இவ்வாறு இருந்தால் நல்ல படங்கள் இதன் முன் மறைந்து விடும். நல்ல படங்களை மட்டுமே சினிமாவாக பதியவேண்டும் என சொல்ல முடியாது.



எனது வேண்டுகோள் எல்லாம் இதுதான்.

உண்மைக்கு புறம்பானவற்றை சினிமாவாக எடுக்காதீகள். சாகசம் செய்யும் இருசக்கர வாகன விளம்பரங்களில் வரும் எச்சரிக்கை செய்தியை போல, திரைபடம் துவங்கும் முன் இதில் வரும் பாத்திரங்கள் சினிமாவுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறுங்கள்.

உங்கள் குறுகிய மனப்பான்மையை சினிமாவாக எடுத்தால்
வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சமூகத்தில் அம்பலமாக்காதீர்கள். சமூக ஆர்வலர் சிலரிடம் கருத்துக்கள் கேட்டு சினிமாவை எடுங்கள் அல்லது காண்பித்தபின் வெளியிடுங்கள்.

எதிர்காலத்தில் இயக்குனார்களாகவோ, திரைப்பட தயாரிப்பாளராகவோ, கதையாசிரியர்களாகவோ வரக்கூடிய ஏனையோர் இந்த பதிவை படிக்கலாம். அதில் யாரேனும் எனது கருத்தை புரிந்து கொள்வீர்கள் எனும் நோக்கத்தில் இக்கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். நீண்ட கட்டுரையை படித்த உங்களுக்கு நன்றி

சத்தியமேவ ஜெயதே..!


டிஸ்கி : பல பக்கங்கள் எழுதிய இப்பதிவு சில காரணங்களால் சுருக்கி வெளியிடுகிறேன். எனது கோபங்கள்,ஆற்றாமைகள் மற்றும் புலம்பல்கள் மூன்றில் ஒருபகுதியாக குறைக்கப்பட்டு இந்த பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Monday, January 26, 2009

நான் கடவுள் - சிறப்பு புகைப்படம்



போலியாக ஆன்மீக தன்மைகளை காண்பிக்கும் சினிமா மேல் கோபத்தில் “நான்” உருவாக்கிய படம்.

- ஸ்வாமி ஓம்கார்

Saturday, October 18, 2008

சினிமா சினிமா

அறிவிப்பு :
  • ஸ்வாமி என்ன சினிமாவை பற்றி சொல்லிவிட போகிறார் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
  • இதை ஓர் ஆன்மீகவாதியின் பதிவாக படித்தால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.!


முன்குறிப்பு :

ஆன்மீகத்தில் இருக்கும் எனக்கு சினிமா அறிவு தேவையா? இல்லையா என விவாதிப்பதற்கு முன் ஒரு வாழ்வியல் சம்பவம்.

முன்காலத்தில் காசி மாநகரம் உலகதரம் வாய்ந்த கல்விக்கான நகரமாக இருந்ததால் அனைத்து அறிஞர்களும் தங்கள் மேன்மையான கல்வி கற்கவும் - கற்று கொடுக்கும் இடமாகவும் விளங்கியது. அங்கு சர்வயங்ஞ பீடம் எனும் தலைமை இடம் உண்டு. இந்த பீடமானது தற்கால பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு ஒப்பானது எனலாம் -ஆனால் அது உலக பல்கலைகழகம்.அதில் 64 கலைகளையும் கற்று தெளிந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும். 64 கலைகள் என்பதில் அனைத்து கலைகளும் அடங்கும். அப்பீடத்தில் அமருபவர்கள் பல அறிஞர்களால் சோதிக்கப்படுவார்கள்.(இப்பொழுது போல லஞ்சம் கொடுத்து பதவி வாங்க முடியாது...!)

ஆதிசங்கரர் சர்வயங்ஞ பீடம் ஏற வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் தனது ஆன்மீக கொள்கையை எளிமையாக வெளிபடுத்த முடியும் என்பது அவரின் திட்டம். பல வகையான சோதனை அதிசங்கரருக்கு வழங்கப்பட்டது. அனைத்து சோதனையிலும் பல கலையில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். கடைசியாக ஓர் அறிஞர் உங்களுக்கு பாதுகை(செருப்பு) தைக்க தெரியுமா என கேட்டார். இந்த கேள்வி, சன்யாசியாக இருந்ததால் தோலால் ஆன பாதுகையை தொடமாட்டார் என்றும் மரத்தால் ஆன பாதுகையை அணிந்திருந்த ஆதி சங்கரருக்கு தோலால் ஆன பாதுகையை தைக்க தெரியாது என்று நினைத்து அவரை தோற்கடிப்பதற்காக கேட்கப்பட்டது.


அறிஞர்கள் சூழ ஓர் செருப்பு தைப்பவனிடம் சென்று அறுந்த செருப்பை வாங்கி, நூலின் ஒரு முனையை வாயில் கவ்வி, மறுமுனையை இடதுகையில் வைத்து, பாதுகையை தனது இருகால்களுக்கும் இடையே வைத்து,வலது கையில் ஊசியை கொண்டு அவர் தைத்த லாவகத்தை பார்த்த செருப்பு தொழிலாளி அவரின் காலகளில் விழுந்து குருவாக ஏற்று கொண்டான்.
பின்பு அவர் சர்வயங்ஞ பீடத்தில் அமர்ந்திருப்பார இல்லையா என்பது உங்களுக்கே தெரியும் தானே?

ஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.

தற்சமயம் எனது நிலையும் இதுவே. கோவி.கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

எனது சினிமா அறிவை சினிமா அறி(ந்தவ)ஞர்கள் விமர்சிக்கட்டும். எனது சொந்த அனுபவத்தையோ வாழ்க்கையையோ இதுவரை வெளியிட்டதில்லை. இதை படித்துவிட்டு எனது வாழ்க்கை வரலாற்றை முடிவு செய்யவேண்டாம். இந்த வலைதளத்தில் எனது சுயகருத்துக்களை எழுதுவதில்லை- சாஸ்திரத்தை பற்றி மட்டுமே எழுதி வருகிறேன். இப்பதிவு அதற்கு விதிவிலக்கானது. ஜனரஞ்சக பதிவாளர் போல நானும் எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.

----------இத்துடன் முன்னுரை முடிந்தது-கலாட்டாவுக்குபோகலாம்.--------

இந்த கட்டுரையை கோவிகண்ணன் போன்ற பல மூத்த வலையுலக பதிவர்களுக்கும் (அவர் சொல்ல சொன்னதாக சொல்லவேண்டாம் என்றார்) சமர்ப்பிக்கிறேன்.

எச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.

இனி கேள்விக்கு போகலாம்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எனது தாயார் நான் வயிற்றில் இருக்கும் பொழுது சினிமா பார்க்க சென்றதாக கேள்வி. அவர்கள் கண் மூலம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

பல திரையரங்கில் சினிமா போட்டவுடன் தூங்கிவிடுவேன் ( அந்த லக்‌ஷணத்தில் தானே படம் எடுக்கிறார்கள்). சிறிது நேரம் கழித்ததும் நினைவு வரும். இன்னுமா படம் முடியலை என உணர்வேன்? அதை தானே கேட்கறீங்க?

சரி சரி சீரியஸா சொல்றேன்..பாயும் புலி - தான் பார்த்த முதல் சினிமா. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். பின்பு நினைவு தெரிந்து - ”தங்க மகன்”- சிறுவயதில் எனது உறவினர்கள் எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்) இதே படத்துக்கு 25 முறைக்கு மேல் அழைத்து சென்றார்கள். அப்புறம் என்ன உணர? இனிமேல் யாரும் கூட்டிகொண்டு செல்ல கூடாது என வேண்டிக் கொண்டேன்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)

பாபா எனும் திரை காவியத்தைதான் பார்த்தேன். எனது ஆன்மீக நண்பர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ததால் சென்றேன். அது மட்டுமல்ல பரமஹம்ச யோகானந்தர் எனும் யோகியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கபட்டது என கூட்டி சென்றார்.அந்த புத்தகம் யோகியின் சுயசரிதை என்பதாகும்.

எனது 8 வயதில் இப்புத்தகம் படித்தேன். எனது வாழ்க்கையில் எப்பொழுது கேட்டாலும் அதில் வரும் சம்பவங்களை துல்லியமாக விவரிக்கும் அளவுக்கு என்னுள் பதிந்த புத்தகம் அது. ஆனால் திரையறங்கில் நான் கண்ட படத்தின் கதைக்கும் அந்த புத்தகத்தில் வரும் ஒரு இரு சம்பவத்தை தவிர வேறு சம்பந்தம் இல்லை. அந்த யோகியையும் - ஆன்மீகத்தையும் இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது. முதலும் கடைசியுமாக இவரின் படம் அமைந்தது ஓர் அசந்தர்ப்பமே.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கேள்வியை மீண்டும் பகடி செய்ய விரும்பவில்லை நேரடியாக பதிலுக்கு செல்கிறேன்.

பெரியார் - சினிமா படத்தை பார்த்தேன். ஒரு மாமனிதனின் சுயசரிதையை எடுக்க பலர் இருந்தாலும் அவரை போல தோற்றத்தில் மற்றொரு மனிதர் அமைவது சிரமம். பல சுயசரிதை சினிமா கதைநாயகனின் தோற்றத்தினாலயே தோல்வியடைந்திருக்கிறது. உதாரணம் - காமராஜர். இவை அனைத்தும் இருந்தாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு, பெரியாரின் சுயசரிதை வீணடிக்கப்பட்டது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றியது.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இன்னும் எடுக்கப்படவில்லை.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அரசியல் சம்பவம் என்பதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா ஆர்வம் என்னை தாக்கியது. ஒரு நடிகரின் படம் வெளியிடும் அன்று இதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் இந்தியா வந்து பல லட்சத்தை செலவிட்டதாக செய்திகிடைத்தது. ஆனால் அவர்கள் தாய் தந்தை இறந்தால் web cam கொண்டு இறுதி சடங்கு செய்கிறார்கள். இதை நினைத்தால் நாளை சந்திரனுக்கு போனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் என எண்ணினேன்.

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
மயா பஜார் எனும் படம். சிக்கலான திரைக்கதை கொண்ட புராண கதையை கையாண்ட விதம். இன்னும் தமிழ் சினிமாவில் புராண கதை எடுக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹாரிபாட்டர் எனும் உலக சினிமாவை மிஞ்சும் புராண கதைகள் நம்மிடம் இருந்தாலும் அதை ஒளிபடுத்த சிறந்த இயக்குனர்கள் இல்லை. அதனால் அடிக்கடி உலக சினிமா தரம் என சொல்லுவதை இவர்கள் நிறுத்தினால் நல்லது.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தமிழ் சினிமாவில் வாசிக்க ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன். ஐரோப்பிய , ஈரானிய திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் , இயக்குனருக்கும் ஒர் வலியான அனுபவம் உண்டு. அதை படித்தாலாவது பிரயோஜனம் உண்டு. இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)


7) தமிழ்ச்சினிமா இசை?

பல திறமையான இசையமைப்பளர்களை கொண்டது தமிழ் திரையுலகம். ஆனால் அவர்கள் அனைவரும் சூழ்நிலைகைதியாக இருக்கிறார்கள். என் பால்ய வயதில் இசையை கற்றுக்கொண்டேன். பல வாத்தியங்களை வாசிக்கும் அறிவும் உண்டு. ஆதனால் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஆதனால் அவர்கள் சிக்கி கொண்டதை என்னால் உணர முடிந்தது.

இருந்தாலும் சில இசை அமைப்பாளர்களின் மாஸ்டர் பீஸ் என ஒன்று உண்டு அல்லவா?

விஸ்வநாதன் -ராம மூர்த்தி : தில்லான மோகனாம்பாள் - மறைந்திருந்தே பார்க்கும் -இன்னும் பல

இளையராஜா : செந்தாழம் பூவில் , செந்தூரப்பூவே, ஹேராம்

விஸ்வநாதன் + இளையராஜா இசையில் : குழலு ஊதும் கண்ணனுக்கு...

ஏ.ஆர் ரஹ்மான் : உழவன் மற்றும் உயிரே - இதில் இவரின் அரெஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கும்.

இவரின் ஜெண்டில்மேன் - ஜீன்ஸ் இவரின் மோசமான வேலைக்கு உதாரணம். இதை புரிந்து கொள்ள தற்சமயம் மீண்டும் ”ஒட்டகத்தை கட்டிக்கோ”- ”கொலம்பஸ்” கேட்டுப்பாருங்கள் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியாது.

வேதா (தேவேந்திரன்) - இவர் இசையமைத்த வேதம் புதிது எனும் படம் - அருமையான இசைவடிவம். பலர் இளையராஜ என நினைக்க வைத்தாலும், இசையில் ஓர் நவீனம் இருந்தது. இவர் வேறு படங்களுக்கு இசையமைத்தாரா என தெரியவில்லை.

இள இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் சாஸ்திரிய சங்கிதத்த தவிர்த்து செயல்படுவதால் மனதில் பதிவதில்லை.அதற்காக நான் சாஸ்திரிய சங்கீதத்தை மட்டும் ரசிக்கும் கிழவன் என நினைக்காதீர்கள்.

இமானின் -(கையவச்சுக்கிட்டு) , யுவனின் -(அறியாத வயசு) இசை நன்றாக இருந்தாலும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் பல உண்டு.

இள இசையமைப்பளர்கலின் திறமை இவர்களை வாழ வைத்தாலும் ரீமிக்ஸ் எனும் விஷம் நின்று கொல்லும்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

எனக்கு தமிழ் சினிமாவை விட உலக சினிமா அதிகம் தெரியும் என எண்ணுகிறேன்.

ஐந்தாவது கேள்வியை ”உலக சினிமாவில் உங்களை பாதித்தது” என கேட்டிருந்தால் -இப்படி விவரித்திருப்பேன்

காந்தி. 1982 ஆம் ஆண்டு மூன்று லட்சம் மனிதர்களை ஒன்றிணைத்து எடுத்த யுக்தி - மேலாண்மை பிடித்திருந்தது. இந்த விஷயம் கின்னஸில் இடம் பிடித்தது.மேல் நாட்டுக்காரரான (பென் கிங்ஸ்லி) நடிகருக்கு இந்திய காந்தி வேடம் பொருந்தியது. மேலும் காந்தி திரைப்படத்தை எந்த இந்தியரும் எடுக்க முன்வராதது என சொல்லிக்கொண்டே போகலாம்.

உலக சினிமாவில் வரிசைப்படுத்த நூற்றுக்கும் மேம்பட்ட படங்கள் உண்டு.

இதை விடுத்து ரன் லோலா ரன் எனும் படம் 12பி-யாகவும், பைசைக்கிள் தீப் எனும் படம் பொல்லாதவன் ஆனதையும் பார்த்தவுடன் உலக சினிமாவை தமிழில் ”அப்படியே” பார்க்க முடியும் என்றவுடன் உலக சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
சினிமாவுடன் தொடர்பு இல்லை. ஆனால் சினிமா தொழில் செய்பவர்களுடன் தொடர்பு உண்டு.

என்னிடம் யோக பயிற்சிக்கும், ஜோதிடம் கேட்கவும் வருவார்கள்.
இவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம், என்னிடம் தங்களை அறிமுகப்படுத்தியவுடன் பேசி முடிப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது தாங்கள் சினிமாவில் இன்னாரக இருக்கிறோம் என மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடிப்பார்கள்.

தங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு இருப்பதாக என்னிடம் சொல்லும் இவர்களிடம் ஒரு சின்ன அளவில் கூட அது இல்லாததை கண்டு அவர்களை கண்டித்திருக்கிறேன். சினிமாவை அவர்களின் தொழிலாக பார்ப்பதால் அவர்களும் என்னுடன் சரியாக பழக முடிகிறது.

மக்களுக்கு சிறந்த தமிழ் படம் கொடுக்க இவர்களிடம் ஆன்மீக மற்றும் ஆன்ம ஆற்றல் இல்லை. என்னிடம் தொடர்பு கொண்ட பிரபல இயக்குனர்கள் பலர் உண்டு. அனைவரும் பெரும் நடிகர்களை வைத்து இயக்கியவர்கள் என்றார்கள். என்னிடம் உள்ள சமூக சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்து அதை சினிமாவாக எடுக்க சொல்லி இருக்கிறேன். சிலர் அதன் முயற்சியில் இருக்கிறார்கள். என் சினிமா அறிவை கண்டு சிலர் பயந்ததும் உண்டு. என் கருத்தை இயக்குனர்களை கொண்டு இயக்குவதில் பல ஆனந்தமான விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது -என் பெயர் வெளியே வராதல்லவா?


10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை ஜோதிடம் மூலம் சொல்லலாமா? :-)

என்னை பொருத்த வரை சிலர் மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சமூக சிந்தனை கூடிய ஜனரஞ்சகமான சினிமா எடுத்தால் சினிமா மேம்படும். பல இயக்குனர்களுக்கு நல்லவர்கள் பின்புலத்தில் இருக்க நன்றாகவே சினிமா வளரும் என நினைக்கிறேன். ( இந்த கருத்துக்கும் 9ஆம் கேள்விக்கும் சம்பந்தம் கிடையாது :-) )


10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அரசியலில் இருக்கும் சினிமா நடிகரை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பார்கள். அடுத்த வருடம் இன்னும் சில உலக சினிமாக்கள் தமிழில் வரும். (பின்ன ஒருவருடம் உட்கார்ந்து பார்த்த DVDயை என்ன செய்ய? )

எனக்கு நிம்மதியாக இருக்கும் - 365 நாள் சில கழிசடையான படங்கள் வந்து தமிழ் சினிமா தரத்தை கெடுக்காதல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைதளத்திற்கு புதிது என்பதால் என்னால் வேறு யாரையும் அழைக்கத் தெரியவில்லை.
அதனால் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐந்து கேள்விகளை கேட்டு திரு.கோவி.கண்ணனுக்கே இதை திருப்பி அனுப்புகிறேன். அவர் அதற்கு பதில் சொல்லி , இவரிடம் கேள்வி கேட்டவரிடத்தில் அனுப்பட்டும். அந்த பாதை மீண்டும் “சினிமா சினிமா “ கேள்வி ஆரம்பித்தவரிடமே சென்று சேரும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கேள்விகள் :

1) உங்களை இயக்குனராக வைத்து திரைப்படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த திரைப்படத்திற்கு என்ன கதைஅம்சம் இருக்கும்?அதற்கான ஒன் லைன் சொல்ல முடியுமா?

2) தமிழ் நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் என அவார்ட் கொடுக்க சொன்னால் யாருக்கு கொடுப்பீர்கள். ஏன்?

3) உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்?

4) உலகளவில் பிரபலமானவர்களின் சுயசரிதையை தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்க வேண்டியது என்றால் யாருடையது?

5) தற்சமயம் உள்ள தமிழ் சினிமா உலகம் ”இதை” தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது எது?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவுரை : ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் . எனது பல்துறை அறிவு சிலருக்கு எப்பொழுதும் ஆச்சரியப்படுத்தும். இக்கட்டுரை சிலருக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதால் எழுதினேன்- பொழுது போக்காக அல்ல. இதற்கு பிறகு எனது வலையுலக பதிவில் என் வாலை சுருட்டி கொள்கிறேன் மீண்டும் எனது பதிவுகள் ஜோதிடம் சார்ந்து இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். எனது நீண்....ட பதிவை வாசித்தமைக்கு நன்றி.