Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 31, 2009

ஹதயோகம் - பகுதி இரண்டு

நவநாகரீகம் என்ற பெயரில் உடலை நாம் மிகவும் கடினமாக நடத்துகிறோம். உடல் தனது வளைவு தன்மையை சிறுவயதில் இழந்து விடுகிறது. குழந்தைகள் தற்காலத்தில் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. படி என சொல்லியும் வீட்டிலேயே விளையாடு என்றும் அவர்களுக்கு பதின்ம வயதில் உடல் பருமன் அதிகரித்து இள வயதில் அதிக வியாதியின் இருப்பிடமாகிறார்கள்.

பெண்களும் தங்களுக்கு உண்டான உடல் வேலைகளை அசைவு பெற செய்வதில்லை. இதனால் 50% சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறார்கள். 50% அவர்களின் பிறப்பு தன்மை காரணம். சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.

தற்காலத்தில் எத்தனை பேர் தரையில் நீண்ட நேரம் உட்கார முடியும்? உணவருந்த டைனிங் டேபிள் உடல் அசையா வாகனம், தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சொகுசு சோபா என எதற்கும் உடலை வளைவு தன்மைக்கு கொண்டு செல்லுவதில்லை. வீட்டில் இருக்கும் மர சாமான்களுக்கு இணையாக நம்மிடமும் வளைவு தன்மை இல்லாமல் மரசட்டம் போல் இருக்கிறது. உடல் வளைவு தன்மை இல்லாத காரணத்தால் நோய் வருவதும், அந்த நோயை குணமாக முயற்சிக்கையில் உடல் மருத்துவத்தை ஏற்றுகொள்ளாத நிலையும் ஏற்படும்.

சரி........ நாகரீகம் என்றால் ஐந்திலும் வளைவதில்லை ஐம்பதிலும் வளைவதில்லை என்பது தானே?

ஹதயோகத்தின் உற்பிரிவுகளை கூறுகிறேன் என்றேன் அல்லவா அதை பார்ப்போம்.

ஆசனம்
: உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். நமது உடலின் அனைத்து பகுதியையும் நாம் இயக்குவது இல்லை. அதனால் நமக்கு மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். பூனை, நாய் போன்ற விலங்குகள் தூக்கத்திலிருந்து எழுந்ததும் தங்களின் உடலை முறுக்கேற்றி உற்சாகம் ஆக்கிக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். அது போல விலங்குகள், இயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.

பிராணாயாமம் : பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்தி நமது உயிர்சக்தியையும் மேம்படுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என பெயர்.

முத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட சைகை முறையில் வைப்பது முத்திரை எனலாம். இறைவனின் விக்ரஹங்களில் அவர்கைகளில் ஒரு வித சைகை இருப்பதை பார்த்திருப்போம். உதாரணமாக அம்மன் விக்ரஹத்தில் உள்ளங்கள் நம்மை பார்த்துகாட்டி ஆசிர்வதிப்பதை போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை என பெயர்.

[முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...! ]

பந்தங்கள் : நமது சுவாசம் மற்றும் உடலில் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தி அல்லது கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்த சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலுசேர்க்கும்
. வட மொழியில் பந்தா என இதற்கு பெயர். யோகிகள் காட்டும் ஒரே 'பந்தா' இது தான்.

கிரியா : கிரியா என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியா என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் என பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை, அதை தக்க முறையில் தூய்மையாக்க ஆறு வழிகள் ஹடயோகம் கூறுகிறது. இவை ஷட்கிரியா என வழங்கப்படுகிறது.

ஹதயோகம் என்றவுடன் தலைகீழாக நிற்பது கடினமாக உடலை வளைப்பது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். இயல்பான வாழ்க்கை நிலையில் ஒருவர் ஹதயோகத்தை செய்ய முடியும். மேலும் ஹதயோகம் மொழி, மதம், ஜாதி என எதற்கும் சார்ந்தது இல்லை. உடல் இருப்பவர்கள் யார் செய்தாலும் வேலை செய்யும். அதனால் தான் ஹதயோகம் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவ முறைக்காக மட்டுமே உபயோகப்படும் ஹதயோகத்தை யோகசிகிச்சை என பெயர். ஹதயோகம் மருத்துவ முறைக்கானது மட்டுமல்ல அதனால் எண்ணிலடங்கா பலன்கள் உண்டு.


ஹதயோகத்தை பயன்படுத்தும் அவசியத்தை பற்றி ஏனைய நூல்கள் கூறினாலும், ஹதயோக பரதீப்பிகா எனும் நூல் ஹதயோகம் செய்யும் முறையை விரிவாக அலசுகிறது. இந்த நூல் ஐயாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதிலிருந்து நமது நாட்டின் தொன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் பதஞ்சலி முனிவர் ஆசனம் செய்வதின் அவசியமும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஒற்றை வரியில் சொல்லிகிறார்.
“ஸ்திரம் சுகம் ஆசனம்”

உங்களை தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உங்கள் உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் உங்களை வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.

தற்கால நவநாகரீக உலகில் உணவு முறை என்பது துரித உணவின் தாக்கத்தால் சீரிழிந்து வருகிறது. உடலையும், மனதையும் பேணிக்காப்பதால் மட்டுமே சிறந்த ஆன்மீக வளர்ச்சி அடைய முடியும்.
சிறிது நேரம் தியானத்தில் உற்காருவதற்குள் கால்கள் மரத்து போவது, உடல் பிடிப்பு ஏற்படுவது, கீழே உற்கார உடல் ஒத்துழைக்காதது என பல பிரச்சனைகளுக்கு ஹதயோகம் தீர்வாகும். இதனால் தான் எனது யோக பயிற்சி முறையில் ஹதயோகத்துடன் அனைத்து யோக முறையும் இணைத்துள்ளேன்.


சிறந்த யோக ஆசிரியரை நாடி, உங்கள் வயது வாழ்க்கை சூழலுக்கு தக்க ஹதயோக பயிற்சியை தினமும் செய்யுங்கள். ஹதயோக ஆசனங்களை செய்து உங்கள் உடலை இறைவன் இருக்கும் அரியாசனமாக்குங்கள். ஹரி அந்த ஆசனத்தில் நிரந்தரமாக வீற்றிருப்பான்.

Thursday, July 30, 2009

ஹதயோகம்

நமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.

யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.

ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.


உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.

ஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(.........யோகம் தொடரும்)

Tuesday, July 28, 2009

எனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...


தலைப்பை படிச்சுட்டு சாமீ..... நீங்களுமா என கேட்பவர்களுக்கு.

எனக்கு உலகசினிமா பத்தியும் நம்மூர் சினிமா பத்தியும் அறிவு கம்மி. சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.
ஆனால் எந்த ஒரு ஊடகத்திற்கும் நல்லது கேட்டதுனு இரண்டு கோணம் இருக்கும். ஊடகம் எப்பொழுதும் கத்தி மாதிரி யார் கையில் இருக்குங்கிறதை பொருத்து வேலை செய்யும்.

அந்த வகையில நான் ரசித்த சினிமாவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு எச்சரிக்கை :

வாக்கிங் ஸ்டிக்குக்கு ஜீன்ஸ் டீசர்ட் போட்டு அது இருபத்து அஞ்சு பேரை அடிச்சுட்டு, கேமராவை பார்த்து நான் யாரு தெரியும்ல என கூறும் படங்களை பாத்துரசிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இதுவரைக்கும் வந்ததே பெருசு. என் அடுத்த பதிவை படிச்சுக்குங்க.

முதல் படம் : What the Bleep do we Know

இந்த படம் குவாண்டம் அறிவியல் கொள்கைகளை ஒரு கதையாக விளக்கும் படம். படத்திற்கு நடுவே சில விஞ்ஞானிகள் அறிஞர்களின் உரையும் உண்டு. படத்தின் தலைப்பே பல விஷயங்களை சொல்லிவிடும். ரியாலிட்டி (இருப்பு நிலை) மற்றும் கால பரிணாமம் ஆகியவற்றை கூறும் சிறந்த ஆக்கம். பல அறிவியல் தகவல்களை கொண்டது. 2004 ஆம் ஆண்டு வந்த படம். திரையாக்கம் மற்றும் ஒளியாக்கம் அருமை. பொழுதுபோக்குக்காக பார்க்கவேண்டும் என நினைத்தால் தலைவலி நிச்சயம். :) டாக்குமெண்டரி பாணி திரைப்படம் என்பதால் விவாதமாக எடுத்து பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள சுட்டி

இரண்டாவது படம் : THE LAST MIMZY

குழந்தைகளுக்காக குழ்ந்தைகள் உலகில் பெரியவர்களின் விஷயத்தை கொண்ட படம். அறிவியல் புனைகதைகள் என்றாலும் 90 நிமிடம் அசையமுடியவில்லை. இயக்குனர் இந்திய கலாச்சாரத்தை தெரிந்தவர் என நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் மற்றும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயத்தை அறிவியல் புனைவில் சேர்த்திருக்கிறார். திபத்திய கலாச்சாரம் என திரைப்படத்தில் காட்டினாலும் அது இந்திய கலாச்சார அம்சமே.(இப்ப தெரிஞ்சுதா எனக்கு ஏன் இந்த படம் பிடிச்சுருக்குனு :) ).

குழந்தைகளை பெற்றோர் நடத்தவேண்டிய முறைகள், குழந்தைகள் உலகம் என படத்தில் அருமையான விவரிப்பு. இதில் வரும் சிறுவன் ஸ்ரீயந்திரத்தை வைத்து சில காட்சிகளை காண்பான். அவை யந்திர சாஸ்திரத்தில் உண்மையில் அப்படித்தான் இருக்கும். இதை தெரிந்து சேர்த்தார்களா தெரியாமல் சேர்த்தார்களா என புரியவில்லை.இவ்விஷயங்கள் ஆன்மீகத்தின் உயர்வில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. திரையில் அந்த சிறுமியின் முகமும் அவளின் நடிப்பு திறனும் விவரிக்க முடியாத அழகு.

மேற்கண்ட இரு திரைபடத்ததில் THE LAST MIMZY என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் சொல்ல வந்த அறிவியல் விஷயத்தை கதையாக சொன்ன விதம் அருமை.

கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....

இதில் ஒரு நன்மை என்ன வென்றால் சென்னை பதிவர்களிடம் நாங்களும் ஒலகபடம் பார்ப்போம்னு சொல்லிகிடலாம்

இந்த இரண்டு படமும் ரொம்ப பழசு. முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

நம்மூரில் THE LAST MIMZY போன்ற திரைப்படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். இத்தகைய திரைப்படம் எடுக்கப்பட்டால் முதல் காட்சியில் முதல் டிக்கெட் வாங்கி அந்த இயக்குனருக்கு என்றென்றும் உபகாரமாக இருப்பேன்.

என் பெயரை கண்டுபிடியுங்கள்..!

வேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தில் எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிலர் பின்னூட்டம் மூலமும் மின்னஞ்சல் மூலமும் என்னை தொடர்பு கொண்டு சுவையான மற்றும் பிறருக்கு பயன்படும் கேள்விகளை கேட்கிறார்கள்.

சில கேள்விகள் அவர்களின் வாழ்கையில் தனிபட்ட விஷயத்தை சார்ந்தது. சிலது என்னை உச்சகட்ட புகழ்ச்சியில் மூழ்கி எடுப்பது (எல்லாம் நேரந்தான் :) ) என பலவகையான கடிதங்கள் உண்டு. இவ்வாறு வரும் கடிதங்களில் சில சுவையானதும் நமக்கும் தெரிந்து கொள்ளவேண்டும் என விருப்பம் இருக்கும் நபர்களுக்காக இந்த பதிவு.

பிறந்ததில் இருந்து எனக்கு இரட்டை சுழி என்பதால் (சொல்லாமலே தெரியுமே) எந்த விஷயத்தையும் இரு கோணங்களில் அனுகுவேன். ஒன்று மிகவும் சீரியஸானது. இரண்டாவது நகைச்சுவையானது.

எனது சுழிகளில் சிந்திய சிந்தனைகளுக்கு ஏற்ப ஒரு நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கோ..!

சீரியஸ் சுழி :

ஸ்வாமி உங்களிடம் சில கேள்விகள்.

1. ஸ்வாமி உங்கள் இயர் பெயர் என்ன ?

பலருக்கு பலமுறை சொன்ன பதில் இருந்தாலும் சொல்லுகிறேன். எனது உடலுக்கு பெயர் உண்டு எனக்கு இல்லை. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட பெயரில் என்னை அடையாளபடுத்திக் கொள்ள விருப்பம் இல்லை.


2. சாத்விக உணவு என்றால் என்ன? சிலவற்றை கூறவும்.

சாத்வீக உணவு என்றால் எளிதில் ஜீரணிக்கும், உடலை காக்கும் உணவுகள். உதாரணம் பச்சைகாய்கறிகள், பழங்கள், சமைக்கப்படாத இயற்கை உணவுகள். கோதுமை, கம்பு, சோளம் முதலியன சாத்வீக உணவுகள்.


3. உடம்பை குறைக்க எளிய வழி கூறவும்.
தினமும் ஹதயோக பயிற்சி செய்யவும். உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சியால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் வரலாம். உடல் இயக்கம் கொள்ளும் வேலையை தினமும் செய்யவும். அத்துடன் எளிய உணவு பயிற்சி அவசியம். உங்களுக்கான ஹதயோக ஆசன படங்கள் கீழே.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.
இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும் :)



நகைச்சுவை சுழி :

1. ஸ்வாமி உங்கள் இயர் பெயர் என்ன?

கடைசி கேள்விக்கான பதில் படித்ததும் உங்களுக்கே தெரியும்.

2. சாத்விக உணவு என்றால் என்ன? சிலவற்றை கூறவும்.

மலைப்பாம்பு போல உணவு உற்கொண்டு நகரமுடியாமல் இருக்கிறீர்களா? அது சாத்வீக உணவு அல்ல. நாக்கு ருசிக்காக சாப்பிடாமல் உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுங்கள். சாப்பிடுவது என்பதை ஒரு தியானமாக செய்யுங்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடக் கூடாது.

3. உடம்பை குறைக்க எளிய வழி கூறவும்.
உடலை குறைக்க முடியாது. வேண்டுமானால் உடல் எடையை குறைக்கலாம்.
மேற்சொன்ன தியானத்தை தினமும் செய்யாதீர்கள். உடல் எடை தானாக குறையும்.

நிற்க.

இப்படி பட்ட பதில்களை கேட்டதும் உங்கள் வாயில் என்னை பற்றி ஒரு வார்த்தை வந்திருக்குமே?

அதுதான் முதல் கேள்வியின் பதில்..!

Friday, July 24, 2009

ஜோதிட கவிதைகள்

ஆயுள்
----------
நெடுந்தூர பைக் பயணத்தில்
ரயில்வே கேட் குறுக்கிட்டது
அதன் அருகே இருந்த கைரேகை
பார்ப்பவனிடம் கைகளை காண்பித்தேன்.

உங்கள் ஆயுள் ரேகை வீக் என்றான்.
புன்னகைத்தவாரே கையுரையை அணிந்தேன்.

என்னை பார்த்து புன்னகைத்த
கைரேகைக்காரன்
ஆயுள் ரேகைக்கு க்ளவுஸ்
போடாதீங்க சார்.
தலைக்கு ஹெல்மெட்
போடுங்க என்றான்.


பரிகாரம்
------------
தொழில் சரியில்லை
பத்தாயிரத்திற்கு பரிகாரம்
செய்ய வேண்டுமாம்.
யாருக்கு என சொல்லவில்லை
ஜோதிடன்.

நியூமராலஜி
------------------
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.

எதிர்காலம்
-----------------
குழந்தையால் உங்கள் எதிர்காலம்
பாதிக்கும் என்ற பலனை கேட்டதும்
வீட்டுக்கு வந்து குழந்தையை கொன்றேன்.
எனக்கு ஆயுள் தண்டணை.
ஜோதிடம் உண்மையோ?

நாத்திகமா ஆத்திகமா
--------------------------------
அரசியல்வாதியின் ஆயுளை சொல்ல
வந்த ஜோதிடரை - உன் ஆயுள் தெரியுமா
என மிரட்டிய காட்சியை கண்டு
மகிழ்ந்தான் நாத்திகன்.

ஜோதிடர் சொன்ன அதே நாளில் அரசியல்வாதி இறந்ததை
நினைத்து மகிழ்ந்தான் ஆத்திகன்.

மண வாழ்க்கை
-----------------------
நவ கிரகங்களும் உங்களுக்கு
சாதகமாக இருக்கு
உங்கள் மணவாழ்க்கையில்
பிரச்சனை வர வாய்ப்பில்லை
என்ற ஜோதிடருக்கு தெரியுமா
நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக்கொள்ளுவதில்லை என்று.



Thursday, July 23, 2009

பழையபஞ்சாங்கம் 23-ஜூலை 2009

சூரிய கிரகண விளைவு

நம்புங்கள் நாராயணன் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தினமும் எனக்கு ஒரு மின்னஞ்சலாவது வந்துவிடும். சும்மா இருந்த எனக்கும் பீதியை கிளப்பிவிட்டார்கள் நம் மக்கள்.

தொலைக்காட்சியில் பேசும்பொழுது ஜோதிடத்தை பற்றி பேசாமல் வானவியலை பற்றி பேசி மக்களை குழப்பி தானும் குழம்பும் இவர்களை கருத்தில் எடுத்துக்கொள்ளுவதே வீண். வானவியலும் சரி ஜோதிடமும் சரி அவருக்கு பிடிபடவில்லை என்பதே உண்மை. உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடம் முண்டேன் ஜோதிடம் என்பார்கள். அப்படி உலக நிகழ்வுகளை கூறும் ஜோதிடர்கள் எப்பொழுதும் தீய பலன்களையே கூறுவார்கள். காரணம் அப்பொழுது தானே பெயரும் புகழும் கிடைக்கும்.?

மீண்டும் கூறுகிறேன் பூமியின் எந்த பகுதியில் சூரிய கிரகணம் தெரிகிறதோ அந்த புள்ளியில் எதுவும் நிகழாது. அதன் எதிர் புள்ளியில் விபரீதம் நிகழும். அதனால் தான் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன், நம்புங்கள் நாராயணனை .... ஜோதிடரை அல்ல..!


இப்படி சுய விளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் ஆட்களை தடைசெய்யவோ தண்டிக்கவோ ஏதேனும் வழி உண்டா?


நமது சக பதிவர் நாமக்கல் சிபி இதை பற்றி எழுதிய நிதர்சன கவிதை உங்களுக்காக.. சுட்டி
-----------------------------------------------------
சுனாமி பார்க்காத பினாமி



சுனாமி வரும் என பீதியை கிளப்பியதால் இராமேஸ்வரம் சென்று நேரில் பார்க்கலாம் என சென்றேன். சுனாமியை நேரில் பார்க்க ஒரு திரில்லாக இருக்குமே அதனால் தான். கடைசியில் அது ஏமாற்றிவிட்டது. இராமேஸ்வரத்திற்கு சுனாமி பார்க்க செல்கிறேன் என்னோட வாங்கனு சொன்னேன் , என் பினாமிகள் கூட எஸ்கேப்..!

சூரியகிரகணத்தின் சமயம் முழுமையாக நீராடி ஜெபம் செய்தும், தியானத்தில் இருந்ததும் மிக அலாதியாக இருந்தது. ஆமாம் அங்கே கல்லு மிதக்குதே ராமர் பாலம் உண்மையா இருக்குமோ ?
Photo courtesy : : Swami Omkar :-)
---------------------------------------------
கழட்டி போடுங்கள்

திருநள்ளாறு நள தீர்த்தத்தில் மக்கள அசுத்தமாக நடந்து கொள்கிறார்கள் என நான் எழுதிவிட்டு ராமேஸ்வரம் சென்றால் இங்கே அதைவிட அதிகமாக ஆடி அமாவாசைக்கு மக்கள் உடையை கழற்றி வீசி இருக்கிறார்கள். அக்னிதீர்த்தத்தில் இறங்கினாலே பழம்துணி காலில் தட்டுப்படுகிறது. நல்ல சுகாதாரம். இதை தவிர்க்க நடந்து நடந்து பல மீட்டர் உள்ளே சென்றேன். இலங்கை வந்துவிடுமோ என ஒரு பயம் வேறு. கடைசியில் தூய்மையான இடத்தை அடைந்து குளித்தேன்.

குளித்து விட்டு வருகையில் ஒருவர் தலையை சுற்றி துணியை வீச முற்பட்டார். அவரின் கைகளை பிடித்து சராமாரியாக கண்டித்தேன். இப்படி வெறிகொண்ட ஒரு ஆன்மீகவாதியை அவர் பார்த்திருப்பாரா என தெரியவில்லை. எனக்கு கிரகணத்தினால் பைத்தியம் என எண்ணி தலைதெறிக்க ஓடிவிட்டார். தீர்த்தங்களில் நீராடும் பொழுது உங்கள் காமம், பொறாமை, துவேஷம் இவற்றை கழற்றி எறியுங்கள் உடைகளை அல்ல...!

---------------------------------------------
என்ன தவம் செய்தனை.....

வேதத்தின் கண் எனும் இந்த வலைதளத்தை எழுத துவங்கி என்னத்தை கிழிச்ச? என கேட்பவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.

விலைமதிக்க முடியாத பரிசு திரு அப்துல்லா அவர்கள் எனக்கு அனுப்பி இருந்தார். தனது ஹஜ் பயணத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களில் இறுதி பேருரை நடந்த இடத்தில் ஜெபமாலை விற்றுகொண்டிருந்தார்களாம். அவ்விடத்தை கடக்கும் பொழுது என் நினைவுவில் வாங்கி இந்தியா வந்து அனுப்பி உள்ளார். அதன் ஒவ்வொரு மணியும் எலுமிச்சை பழத்தின் அளவு இருக்கும். நூறு மணிகள் கொண்டது. இராமஸ்வரத்தில் அதுவும் என்னுடன் புனிதநீர் ஆடியது.

அப்துல்லாவிற்கு கோடான கோடி நன்றிகள். அவருக்கு உங்கள் சார்ப்பில் ஒரு வேண்டுகோள். மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே...!

சிலரின் மனதில் நான் நிற்கிறேன் என்பதற்கு இது ஒரு சாட்சி. வேறு என்ன வேண்டும்?

Monday, July 20, 2009

மனம்


ஓம் ஓம் ஓம் .... இப்படி சொன்னால் மனசு அமைதி ஆகும்னு யோகா மாஸ்டர் சொன்னார்.. மனசு அமைதியாகனும்னா நான் யாருனு கேட்கனும்னு என் யோகா மாஸ்டரோட மாஸ்டர் சொன்னாராம்.
ரமணர் கூட இப்படித்தான் சொன்னார் அதற்காக நாம ரமணராக முடியுமா? ரமணாஸ்ரமம் ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கிற மயில் அருமையா கத்தும். எங்க தமிழ் வாத்தியார் கூட சொல்லுவார் மயில் கத்தும்னு சொல்லாதடா மயில் அகவும்னு சொல்லும்பார். திருவண்ணாமலையில எங்கையுமே மயில் அதிகமா இருக்காது.

ரமணாஸ்ரமத்தில தான் இருக்கும். கிரிவலம் வரும்போது பாத்திருக்கேன். இப்போ திருவண்ணாமலை நல்லா சுத்தமா அமைதியா இருக்கு. இதே பதினஞ்சு வருசம் கழிச்சு இப்படியே இருக்குமானு தெரியாது. இந்திர லிங்கம் பக்கதில வீடுகள் இல்லாம இருந்துச்சு. இப்போ நிறைய வந்திருச்சு. சுதாவும் ரெண்டு வருசமா வீடுகட்டனும்னு சொல்லறா இருக்கிற காசுல கம்பெனியே நடத்த முடியல இதுல வீடுவேற. அவளுக்கு எங்க என் கஷ்டம் தெரியுது.

கடனுக்கு வட்டி கட்டியே எனக்கு டிப்ரெஷன் ஆகுது. இந்திர லிங்கம்னு சொன்னதும் ஞாபகம் வருது இந்திர விழானு ஒரு படம் நமீதா நடிச்சுருக்கா... பார்க்கனும். நமீதா இருக்கானு சொன்னா சுதா வரமாட்டா. ஸ்ரீகாந்தை சொல்லி கூட்டிகிட்டு போகவேண்டியது தான். இப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல ஒரு படம் போயி பாதியில எழுந்து வரச்சொல்லி தகராறு பண்ணீட்டா.. அவளுக்கு குழந்தை மனசு. ஒரு நாள் காலையில திடீருனு என்னை கட்டிபிடிச்சுக்கிட்டு கொஞ்சினா... அவளுக்கு ஈவினிங் வரும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரனும்.

கதிர் ஈவினிங் வந்து பேமெண்ட் தறேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்தப்பிறகு தான் அடையார் ஆனந்தபவன் போகனும். சுதாவுக்கு பாசந்தி பிடிக்கும். அது நிலா மாதிரி இருக்கும். இப்படித்தான் ரசகுல்லாவை பாசந்தினு நினைச்சு வாங்கிவந்துட்டேன். நான் என்ன நார்த் இண்டியனா இதைபத்தி சொல்ல. அடுத்தவருஷம் யோகாமாஸ்டர் கைலாஷ் கூட்டிகிட்டு போறேனு சொன்னார்.

ஓம் ஓம் ஓம்...

இப்படியாக எனது இன்றைய தியானம் கழிந்தது...


ஓம் சிவ சிவ ஓம்

ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை. மாண்டூக்கிய உபநிஷத் ஒலியால் பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் உள்ளும் ஒலி நிறைந்திருக்கிறது. சங்கை எடுத்து காதில் வைத்து பார்த்தால் ஒருவித ஒலி கேட்கும். கடல் அலைகளில் ஒலி உண்டு. நமது ஸ்வாசத்திற்கும் ஒலி உண்டு.

அதனால் தான் இறைவனை 'நாதப்பிரம்மம்' என்கிறார்கள். மத சடங்குகள் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் தன்மை செய்கிறார்கள்.


ஜூன் 6ஆம் தேதி நடந்த குருபூர்ணிமா அன்று பல நாம ஜெபங்கள் மற்றும் பஜன் நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட நாம ஜபத்தை மட்டும் இங்கு உங்களுக்கு கொடுக்கிறேன்.

Shiva Shiva Om.mp3


இந்த மந்திரம் உடலின் ஆதாரங்களையும் நாடிகளையும் தட்டிஎழுப்பி உங்களை இயக்கநிலைக்கு மாற்றும். இயல்பாக கண்களை மூடி கேளுங்கள். ஒரு விதமான அலை அசைவு உங்களுக்குள் இருக்கும். இதை கேட்டு ஒரு நாள் முடிவடைவதற்குள் உங்களை அறியாமல் ஒருமுறை உங்கள் மனதில் இந்த மந்திரம் வந்து செல்லும்.

கடவுளை காட்டிலும் கடவுளின் நாமம் பெரிது என்றார்கள். காரணம் கடவுளுடன் நம்மை இணைப்பது கடவுளின் நாமம்.

Friday, July 17, 2009

மதுரையில் ஒரு அதிசயம்..!

னைவருக்கும் இது இவ்வளவு நாள் நான் சொல்லவில்லை. ரகசியமாக வைத்திருந்தேன். காரணம் அதிசயத்தை வெளியே சொல்ல முடியுமா என்ன?

அப்படி என்ன மதுரையில் அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள். வேறு ஒன்றும் இல்லை. அடுத்த வார இறுதி முழுவதும் நான் அங்கே தான் இருப்பேன். இதைவிட அதிசயம் வேறு வேண்டுமா?

ஜோதிட பயிற்சி கொடுப்பதற்காக 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன்.

உலகை காக்கும் மீனாட்சியும் சுந்தரேஷ்வரரை சந்திப்பதாக சொல்லி இருக்கிறேன். மதுரை சார்ந்த பதிவர்கள் விருப்பபட்டால் ஒரு எளிய பதிவர் சந்திப்பை செய்யலாம்.

உங்கள் விருப்பத்தை எனது மின்னஞ்சலில் தெரிவியுங்கள். நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்வோம்.


பின் குறிப்பு :

மதுரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன் :) என தாழ்மையுடன் கூறிக்கொ'ல்'கிறேன்.

Tuesday, July 14, 2009

மீண்டும் ஜென்


மதிப்பு
--------
நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.

தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.


வில்லு
-----------

கிளி தெரியவில்லை.
கிளியின் கண் மட்டும் தெரிந்தது.
விஜயன் ஜென் ஆனான்.


குரு
-----
குரு பாதுகை ஓசை கேட்டதும்
நான் விழித்தேன்.
குரு நடப்பதை நிறுத்தியதும்
அவரின் பாதுகை என்னிடத்தில்
இருக்கிறது.


காமம்
--------
மீன் குளத்தில் நிறைந்து இருக்கிறது.
அங்கும் இங்கும் அலைகிறது.
நிற்கும் போதும் செவுள் அசைகிறது.

வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை.

சடங்கு
--------
பல காலம் புத்தரை வணங்கினேன்.
புத்தர் சிலையால் என் தலையில் அடித்தார் குரு.
புத்தர் சிலையானார்...!


Saturday, July 11, 2009

சூரிய கிரகணம்

கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. பெளர்ணமி மற்றும் அமாவாசைகளில் நிலவின் மாற்றத்தை கண்டு உணர்ந்த மனிதன் தனது இயற்க்கை அறிவில் அதிக முன்னேற்றம் அடைந்தது கிரகண கோட்ப்பாடு மூலமாகத்தான்.

உலக மக்கள் கிரகணம் ஒரு பேரழிவு நிகழ்வு என பயந்து வந்த காலத்தில் நமது பாரத தேசத்தில் இருக்கும் அறிஞ்சர்கள் கிரஹணங்களை ஆய்வு செய்து மனித மேம்பாட்டுக்கு பயன்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். கிரகணத்தை சிறப்பாக ஆய்வு செய்ததால் தான் நமது சாஸ்திரங்களில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்ற விஞ்ஞான கோட்பாட்டை கூற முடிந்தது. சாஸ்திர அறிவியல் கோட்பாட்டை பின்பற்றி ஆரியபட்டர் மற்றும் பாஸ்கராச்சாரியர் முதலியெ பேரறிஞ்சர்கள் அறிவியலில் இன்றுவரை யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தனர் .

கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள். மனிதன் அறியாமையாலும், சோகத்தாலும் ஒளியிழந்து காணப்படுவதை கூட கிரஹணத்தின் அடைப்படையில் “கிரஹணி” என வடமொழியில் கூறப்படுகிறது.

பல நூற்றாண்டுக்கு முன்னால் உள்ள பஞ்சாங்க கணிதத்தில் கிரஹனங்களை எப்படி கண்டறிவது அதற்காக கணிதம் எப்படி அமைப்பது என நம்மிடையா குறிப்புகள் உண்டு. இன்று பல்லாயிரம் கோடி செலவழித்து செய்யும் விஷயத்தை அன்று ஒரு சாதாரண மனிதன் இங்கே மரத்தடியில் செய்துகொண்டிருந்தான் என நினைக்கும் பொழுது நமது கலாச்சாரத்திற்கும் முன்னோர்களுக்கும் தலைவணங்காமல் இருக்க முடியவில்லை.

சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள் எது ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.

இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்

செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.
இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.

தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.

கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.

வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.

கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.

மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.

ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.

இந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி இந்தியாவில் முழு கிரஹணம் ஏற்படுகிறது. காலை 5.29 முதல் 7.15 வரை கிரஹண நேரம்.

கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.

  • கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
  • கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
  • ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
  • தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
  • சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
  • சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
  • கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
  • கிரஹணம் பூச நட்சத்திரத்தில் அமைவதால் கடகராசி, மகராசியில் பிறந்தவர்களும் , அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அதிக ஆன்மீக முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்வதோ அல்லது வீட்டில் இருந்து ஜபம் செய்வதோ மேன்மை கொடுக்கும்.

கிரஹணம் மும்பையில் துவங்கி ஜப்பான் நாட்டை தாண்டி கடலில் முடிவடைகிறது. முழுமையான சூரிய கிரஹணத்தை மும்மை மற்றும் வட நாட்டு பகுதிகளில் காணலாம். நமக்கு சில பகுதிகள் மட்டும் மறைக்கப்பட்டு தெரியும்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.

உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது. இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?


Friday, July 10, 2009

பழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்..!

இது சுப்பாண்டி ஸ்பெஷல். சுப்பாண்டியை பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள அவசியம் இல்லை. காரணம் அவனை பற்றி படித்தாலே அவனை தெரிந்து கொள்ளலாம். அப்படி இருந்தும் நீங்கள் விருப்பப்பட்டால் இந்த சுட்டியில் அவனை பற்றி படியுங்கள்.
------------------------------------------------------------------------------------

ருசிக்காக சாப்பிடாதீங்க


ஒரு வெளிநாட்டு பெண்மணியின் வீட்டில் நானும் சுப்பாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். தனது உடல் பருமன் நாளுக்கு நாள் கூடிவருகிறது என வருத்தப்பட்டார் அந்த பெண் மணி. அவர் வருத்தப்பட்டு முடிக்கும் முன் சுப்பாண்டி தனது நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தான். உணவு என்பது உடலில் உயிர் தங்குவதற்கு தான் சாப்பிடவேண்டும். நாக்கு ருசிக்காக சாப்பிட கூடாது. உயிருக்காக சாப்பிடால் உடல் பருமன் வராது. அவனது பிரசங்கம் எனக்கே தாங்க முடியவில்லை.

ஆனந்தமாக இருப்பதை பற்றி சில
ஆன்மீகவாதிகளின் பிரசங்கத்தை ஒத்து இருந்தது.தனது வாழ்க்கையில் பயன்படுத்தாத ஒன்றை பற்றிய வறட்டு அறிவுரையாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பெண் எங்களுக்கு உணவை பரிமாறினார். மேற்கத்திய பாணியில் பாஸ்தாவும், குழம்பும் கொடுத்தார்.

மிக அருமையான சுவையில் இருந்தது. அதை கூற சுப்பாண்டி பக்கம் திரும்பினால், அவன் பாத்திரத்திற்குள் தலையை விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பெண்மணிக்கு தெரியாமல் அவனை கூப்பிட்டு, “சுப்பு, ருசிக்காக சாப்பிடக்கூடாதுனு சொன்னியே...” என கேட்டேன். என் பக்கம் திரும்பாமலேயே சுப்பாண்டி கூறினான்.. “ஸ்வாமி.. பாஸ்த்தான எனக்கு உசிறு..”
------------------------------------------------------------------------

மெளனவிரதம்

மாணவர்களுடன் திருவண்ணாமலை பயணம் செல்லும் சமயங்களில் ஒரு நாள் முழுவதும் மெளனமாக இருப்பது வழக்கம். மெளனவிரதம் அல்ல. தங்களை ஜடப்பொருளாக பாவித்து சைகையோ, பேச்சோ இல்லாமல் இருப்பது. அதனால் ஏற்படும் பலனை பின்பு ஒருநாள் கூறுகிறேன். மெளனவிரதம் இருந்த பிறகு அடுத்த நாள் சுப்பாண்டி எண்ணிடம் வந்து ஒரு அழகிய விளக்கை காண்பித்து, “ஸ்வாமி நன்றாக இருக்கிறதா? ஆசிர்வதித்து கொடுங்கள்” என்றான். அந்த விளக்கின் அழகில் மயங்கி கேட்டேன்..

“விலை அதிகமா இருக்கும் போல இருக்கே..எப்போ வாங்கினே?”. சுப்பாண்டி கிசுகிசுப்பான குரலில் சொன்னான். “நேத்து மெளனவிரதம் இருந்தோம் இல்லியா? அப்போ விலை'பேசி' வாங்கினேன்.”
-------------------------------------------------------------------------

டிஜிட்டல் ஐ


சுப்பாண்டிக்கு உலகில் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டு என்றால் அது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். அதில் இருக்கும் பொத்தான்கள் மற்றும் அமைப்புகளை பார்த்தாலே ஒருவித மன பிரயாசையில் இருப்பான்.

எந்த விஷயத்தையும் வேண்டாம் என
ஒதுக்காதே. அவ்வாறு ஒதுக்கினால் அவை மீண்டும் மீண்டும் உன் முன்னால் வரும். அதை உள்வாங்கிக்கொள்ள முயன்றுபார். அதை வாழ்க்கையில் கடந்துவிடலாம் என அறிவுரை சொன்னேன்.

ஒரு விழாவிற்கு என்னுடன் வந்தவன், நவீன டிஜிட்டல் புகைப்பட கருவியை கையில் எடுத்துக்கொண்டான். புகைப்படம் எடுப்பவர் எவ்வளவோ கூறியும். தான் முயற்சிப்பதாக கூறிவிட்டானாம். ( பாருங்கள் என் அறிவுரை வேலை செய்கிறது).

விழா முடிந்ததும் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் அனைத்திலும் சுப்பாண்டியுன் கண்கள் தெரிகிறது. டிஜிட்டல் கேமராவின் டிஸ்பிளே பகுதியில் தான் புகைப்படம் பதிவாகும் என எண்ணி சுப்பாண்டி பெருந்தகை அவ்வாறு எடுத்திருக்கிறது. போக்கஸ் பகுதியில் கண்களை வைத்து படம் எடுத்தால் வேறு எப்படி வருமாம்?
------------------------------------------------------------------------
ஜென் கவிதை

என் சமஸ்காரம்
------------------------
நான் ஒர் ஓவியம் வரைந்தேன்.
அந்த ஓவியத்தில் நான் என்னை வரைந்தேன்.
அந்த ஓவியத்திலும் நான் என்னையே வரைந்தேன்.
நான் வரைந்த ஓவியத்திலும் நான் என்னையும் வரைந்தேன்.
நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? ஓவியத்திலா?
ஓவியம் வரைவதிலா?

Tuesday, July 7, 2009

குரு பூர்ணிமா

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - 139.





இதை விட இன்று சொல்ல என்ன இருக்கிறது?

Saturday, July 4, 2009

ஜென்

ஜென் எனும் வார்த்தை பல பரிமாணங்களை ஏற்படுத்தவல்லது. ஆனால் ஜென் என்றால் கார் என்ற அளவில் மட்டுமே நம் மக்களுக்கு தெரியும். ஜென் கதைகளும், கவிதைகளும் இலக்கிய இலக்கணத்தை கட்டவிழ்த்தே செயல்படும். கதைகளுக்கு உண்டான கட்டமைப்பு இல்லாவிடினும்நமக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கும். படித்து முடித்ததும் பலமணி நேரம் நம் உள்ளே பிசையும். பலகாலங்களாக ஜென் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை ஒரு துளி உங்களுடன் பகிர்ந்தேன். இது அனைவருக்கும் நடக்கும் என சொல்ல முடியாது. இதற்கு மேலும் நடக்கலாம்.

ஜென் கதைகள் இருவரியில் இருக்கும், சில நேரம் பல வரிகள் கூட இருக்கும். நான் முன்பு சொன்னது போல ஜென்னின் நோக்கம் நம்மில் ரசாயனத்தை உண்டாக்குவதுதான். உதாரணமாக நான் ரசித்த ஜென் கதையை இங்கே தருகிறேன்.
----------------------------------------------------------
ஞானம் முன்னும் - பின்னும்

ஒருவன் ஞானம் தேடி காடுமலைகளில் அலைந்தான்.
அவன் குருவை தேடி செல்லும் பொழுது அருவிகள் மற்றும் மரங்களை கண்டான்.
குருவின் பணியில் ஈடுபட்டு ஞானம் அடைந்து வீடு திரும்பினான்.
மீண்டும் காட்டுவழியில் செல்லும் பொழுது அருவி மற்றும் மரங்களை கண்டான்.
அவை அருவி மற்றும் மரங்களாகவே தெரிந்தது.
-----------------------------------------------------------

இது போன்று ஏனைய கதைகள் மற்றும் கவிதைகள். ஜென் என்பது ஒரு மதம் என பலரும் தவறாக அனுகுகிறார்கள்(zen buddhism). பாரதகலாச்சாரம் எப்படி மதமாக்கபட்டதோ அதுபோல ஜென்னும்
மதமாக்கப்பட்டது.குரு சிஷ்யன், ஞானம் என்ற உயர் சிந்தாந்த கோட்பாட்டை தெளிவுபடுத்தும் ஒரு
நிலை ஜென். ஜென்னை விளக்க விளக்க அதை அசிங்கப்படுத்துகிறோம் என அர்த்தம். அது புரிதல் ஏற்படவேண்டியது. விளக்க வேண்டியது அல்ல. இத்துடன் நான் அசிங்கப்படுத்தியதை நிறுத்திக் கொள்கிறேன்.

எனது முயற்சியில் சில ஜென் கவிதைகளை தருகிறேன். நன்றாக இருக்கிறது என சொன்னால் இம்சை தொடரும்.

நானும் குருவும்
----------------------------
நானும் குருவும் இருந்தோம்.
குரு இருந்தார்
பிறகு ஒன்றும் இல்லை.










மனத் தவளை
-------------------------
இங்கும் அங்கும் குதித்தது
கத்தியது.
சர்ப்பத்தின் வாயில் மாட்டியதும்
கால்களை அசைத்தது.
அதுவரைக்கும் தான் தெரியும்.

ஞானம்
-------------
மரத்தில் கடைசி இலை
உதிரும் பொழுது
கூட நினைக்கவில்லை
ஞானம் அடைவேன் என்று.

Friday, July 3, 2009

உலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரிசும்

உலகின் எந்த மூலையில் ஒரு கேவலமான சம்பவம் நடந்தாலும் அதில் எனக்கு சங்கடம் நேரும். காரணம் என்னில் இருந்து இந்த உலகை வேறாக என்னால் பார்க்க முடியவில்லை. போரினாலும் இனபடுகொலையிலும் மக்கள் இறந்து போவதை பார்க்கும் பொழுது அதை உங்கள் “கர்மா” என்று தாண்டி செல்ல முடியாவில்லை.அதே நேரம் கேவலமான நோபல்பரிசுக்கோ, இந்தியாவின் பத்ம ஸ்ரீ பட்டத்திற்கோ ஆசைபட்டு தமிழினத்தை காப்பாற்றுகிறேன் என என்னால் பிறரை ஏமாற்றவும் முடியாது.

வலையுலகமே அதைபற்றி கொதித்தபோது நான் அமைதியாக இருந்ததன் காரணம் என்னால் முடிந்த விஷயத்தையே செய்ய விரும்புகிறேன். எனது உடலின் ஒரு பகுதி காயமாகி விட்டது என்றவுடன் அதை வலையுலகில் எழுதி , “எனக்கு தலையில் காயம் அநீதியை பாரீர்” என எழுதுவது எவ்வாறு முட்டாள் தனமோ அதற்கு சமமானது நான் படுகொலைகளை பற்றி எழுதுவது.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் ஒரு நாட்டின் எல்லையை
கொண்டோ, மொழியின் எல்லையை கொண்டோ அடக்கிவிட முடியாது. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு அனுவும் ஆன்மீகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களின் ஒரு பகுதியே. அந்த ஒரு அனுவில் அசைவும் இவர்களை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது.

பிற உயிருக்கு கூட அல்ல பிற பொருளுக்கு ஏற்படும் துன்பம் உங்களின் துன்பம் ஆகிவுடும். பிறரின் இன்பம் உங்கள் இன்பம் ஆகிவிடும்.ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் அனுபவிக்க போகும் நிலை இதுதான்.

ஒரு வேடிக்கை கதை உண்டு. ஒருவன் யாருக்கும் தெரியாமல் கடவுளின் கோட்டைக்குள் புகுந்துவிட்டான். அது பல்லாயிரக்கணக்கான மாடிகள் கொண்டது. அதில் லிப்ட் வசதியும் இருந்தது. யார் கண்ணிலும் படாமல் லிப்டினுள் நிழைந்து கடவுளின் அறை என்ற பொத்தானை அழுத்தினான். சிலமணித்துளி பயணத்திற்கு பிறகு அது ஒரு தளத்தில் நின்றது. திறந்தவுடன் எதிரில் இருக்கும் அறையில் நுழைந்தான். அங்கே ஒரு மேஜையில் சில கோப்புகளை பார்த்தவாறு கடவுள் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு மேஜை விளக்கு இருந்தது. சரியான மின்சாரம் இல்லாத சூழல் போல அது விட்டு விட்டு எரிந்தது.

“வா மனிதா. உன்னுடைய வாழ்க்கை கோப்பைத்தான் படித்துக்கொண்டிருந்தேன். நீ இங்கே வருவாய் என இதில் இருக்கிறது என்றார். இவனுக்கோ ஒரே ஆச்சரியம். கடவுள் இவனிடம் சகஜமாக பேசுவதை எண்ணி மகிழ்ந்தான். “இறைவா உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றவாறே தொடர்ந்தான்.. இந்த கோட்டை எப்படி கட்டப்பட்டது? இதில் இருக்கும் வசதிகள் எப்படி செயல்ப்படுகிறது” என்றான்.

“மனிதா... உலகில் இருக்கும் ஜீவராசிகள் தங்களை பற்றி எண்ணும் தவறான எண்ணங்களை மனக்கோட்டை என்போம். அக்கோட்டைகளை திரட்டி இங்கே வாழ்விடமாக்கினேன். மக்கள் இன்ப-துன்பம் அடையும் பொழுது ஒரு ஆற்றல் பரவும். அதில் இருந்து மின்சாரம் எடுத்தே இக்கோட்டையில் வசதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

“அப்படியா? இன்பதுன்பம் என்பது சரியான அளவில் இருக்காதே எப்படி அதில் மின்சாரம் எடுக்க முடியும்? ” என்றான் மனிதன். புன்சிரிப்புடன் தொடர்ந்தார் கடவுள்...“உன் சந்தேகம் சரியானது தான். மனிதனின் துன்பங்களில் இருந்து எடுக்கும் மின்சாரம் லிப்டிலும், இன்பத்திலிருந்து எடுக்கும் மின்சாரம் எனது மேஜை விளக்கிலும் பயன்படுகிறது..!”

நமது உலகில் சமாதனம் ஏற்படுத்துகிறோம் பேர்வழி என நிறையபேர் கிளம்பி இருக்கிறார்கள். முக்கியமாக மதம் சார்ந்தவர்கள் மனிதனை வளையக்க பயன்படுத்தும் ஆயுதம் இதுதான். கஷ்டத்தில் உழலும் மனிதனுக்கு உலகசமாதம் ஏற்படுத்துகிறோம்.

உலகில் தானே நீயும் இருக்கிறார் எனவே உனக்கும் அதில் சமாதானம் ஏற்படும் என சொல்லுவார்கள்.

“இந்து மதம்” என்ற பெயரில் உலக சமாதானத்திற்கு அதிருத்ர
மஹாயஞ்சம் செய்தவர்களை கேட்கிறேன்.. சதுர்யுகத்தில் யுத்தம் இல்லாத யுகம் எது? கிருதாயுகத்தில் நரசிம்மவதம்,திரிதாயுகத்தில் ராவண வதம், துவாபர யுகத்தில் பாரத போர் என எத்தனையோ யுத்தங்கள் தர்மத்திற்காக நிகழ்த்தபட்டுள்ளதே? அக்காலத்தில் அவதார புருஷர்களுக்கு அதிருத்ர மஹாயஞ்சம் செய்யத்தெரியாதா?

இக்கருத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அப்பாவிமக்களை உயிர்பலி இடும் பிற மதங்களுக்கும் பொருந்தும்.

அப்படியானால் உலக சமாதானம் என்ற ஒன்றே இல்லையா?

சமாதானம் என்பது தனிமனிதனுக்கொள் நடக்க வேண்டும். உலகில் அல்ல.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுள்ளே சமாதனத்தை தேடினால் உலகம் சமாதானம் அடையும். அதற்கு ஒரே வழி தான்னை போல பிற உயிர்களையும் மதிக்க வேண்டும். பிற உயிர்களில் ஏற்படும் சலனம் தன்னுள் ஏற்பட்டதாக கொள்ளவேண்டும்.

ஒரு ஆன்மீக ஆசரமத்தில் அழைப்பின் பேரில் சென்று அதன் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு தான தர்மம் பற்றி திரும்பியது.

சுனாமியில் பலகோடி ரூபாய்க்கு வீடும், உடையும் கொடுத்ததை பற்றி பேசினார் அவர்.எனது கருத்தில் இரத்த தானம் சிறந்தது என்றேன். உடனே அங்கும் இங்கும் பார்த்துவிட்டு இரத்ததானம் தவறானது என்றார். காரணம் கேட்டதற்கு ஒருவருக்கு இரத்தம் அல்லது உடல் உறுப்பை தானம் செய்தால் அதில் நம் கர்மாவும் இணைந்துவிடுமாம். போன ஜென்ம கர்மாவின் காரணமாகவே இந்த உடல். அதனால் உடல் பகுதிகளை தானமாகினால் அவர்கள் செய்யும் கர்மா நாம் செய்ததாக ஆகிவிடும் என்றார்.

இந்த ஆன்மீக சுயநலமிகளிடன் என்ன பேசுவது? தான் நரகம் அடைந்தாலும் மக்கள் சொர்க்கம் செல்லட்டும் என கோபுரத்தில் ஏறி கூவிய ராமனுஜரின் செயலில் ஒரு சதவிகிதம் கூட இல்லயே?

எனது இருசக்கர வாகனம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் தான் மைலேஜ் கொடுக்கிறது. உங்கள் வாகனம் 60கிலோமீட்டர் கொடுக்கிறது என்றால் என் வாகனத்தில் இருக்கும் பெட்ரோலை உங்கள் வாகனத்தில் செலுத்தினால் உங்கள் வாகனத்திற்கும் 30 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்குமா?

இவர்களை யார் நல்வழிப்படுத்துவது? மது, புகைப்பழக்கம் இருப்பவர்களை விட ஆசிரம வாழ்க்கையில் இருக்கும் இவர்களும் இவர்களின் சீடர்களும் இரத்த தனம் செய்தால் எவ்வளவு தூய்மையான இரத்தம் கிடைக்கும்.?

வீடு உடை யார்வேண்டுமானாலும் கொடுக்கலாம், இரத்தம் செயற்கையாக உருவாக்க முடியுமா? பலவருடங்களாக ஆராய்ச்சி செய்தாலும் விஞ்ஞானிகள் தோல்வியையே பார்க்கிறார்கள்.
இந்தியாவில் இது போன்ற அனைத்து ஆன்மீக அமைப்புகளும் முனைந்தால் இரத்தம் தட்டுப்பாடு இருக்காது. வீண் விளம்பரங்களுக்கு போராடும் இவர்கள் என்று திருந்துவார்கள்.? உலக சமாதனம் எனும் விஷயத்தை ஒரு விளம்பர யுக்தியாக இருப்பதை காணும் பொழுது வேதனை அதிகரிக்கிறது.

அகிம்சை என்ற வார்த்தையும், ஜீவகாருண்யம் என்ற வார்த்தையை பார்த்தால் எனது இரத்தம் கொதிக்கும்.

இம்சையிலிருந்து விடுதலை வாங்கவே அகிம்சை. ஜீவனுக்கு கருணை காட்டுங்கள் என்பது ஜீவகாருண்யம். விடுதலை அளிக்கவும், கருணை காட்டவும் நீங்கள் யார்? நீங்கள் பிற உயிரை விட மேம்பட்டவர்களா? பிறருக்கு விடுதலை அளிக்கிறேன் என்ற வாக்கியம் நீங்கள் சொல்லவில்லை உங்கள் ஆணவமே சொல்லுகிறது.

தனிமனிதனாக ஒவ்வொருவரும் தினமும் நமது ப்ரார்த்தனையில்
அனைத்து உயிரும் முழுமையான ஆனந்தத்தை அடைய
ப்ரார்த்திப்போம்

இயற்கையின் இயல்பு என்பது இரு துருவங்களில் செயல்படும். அதனால் இரவு,பகல், இன்பம் துன்பம் என இரு தளம் இல்லாமல் இருக்க முடியாது. முழு சமாதானம் என ஏற்பட சாத்தியம் இல்லை என்றாலும் சமாதானம்த்தின் விகிதத்தை 99% அதிகரித்து 1% துயரம் என்ற நிலைக்கு கொண்டு சென்றால் நன்மையே.

இன்றைய நாளிதழில் இரு செய்தியை பார்த்தேன். ஒன்று சின்ன சேலத்தில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு மற்றது மணப்பாறையில் 1500 எருமை மாடுகளை.

நன்றி : தினமலர்

பாரத கலாச்சாரத்தில் இருக்கும் சடங்குகள் நம்மிடம் இருக்கும் துர்குணங்களை களைய உருவாக்கப்படது. சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமது ஆணவத்தை ஒரு ஷ்ணத்தில் சிதறி இல்லாமல் செய்ய வேண்டும் என்பதன் குறியீடு. அது எப்படி ஆணவமும் தேங்காயும் ஒன்றாக முடியும் என கேட்கலாம்.

கணிதத்தில் x = 1 என்றவுடன் எப்படி x என்பது
ஒன்றாக மாறிவிடுமோ அதுபோலத்தான். நமது ஆணவம் மனசங்கல்ப்பத்தை சார்ந்தது. அது நினைக்கும் பொருளை உடனே உருவகப்படுத்தும். அதனால் சிதறுதேங்காய் ஒரு சடங்காகியது. தேங்காய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் உயிர்சக்திக்கு இணையான சக்தியாக இருப்பதால் அதை மனிதனாக உருவகித்து பலியிடும் சடங்கு உண்டு. ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு மனிதன் தலையில் அதை அடிப்பது முட்டாள் தனம்.

அதே போல துர் குணங்களை நீங்குபவள் துர்கா. துர்குணம் என்பது பொறாமை, துவேஷம், சோம்பேறித்தனம் ஆகியவை மனிதனை தகர்க்கும் குணங்கள். அதை குறியீடாக சொல்லவே அவளின் காலடியில் இருக்கும் எருமை.

இதை புரிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பலி கொடுக்கிறோம் என்ற முட்டாள் தனத்தை நிறைவேற்றுகிறார்கள்.

மந்தகாசுரனை வதம் செய்யத்தான் துர்கா இருக்கிறாளே? இவர்கள் சும்மா இருக்க வேண்டியது தானே?

ஆன்மீகவாதிகள் என்பவர்களுக்கு இது இனப்படுகொலையாக தெரிவதில்லை. காரணம் எருமை சமாதனத்திற்கான விருது கொடுக்காதே?

நர பலிகொடுக்கும் கபாலிகர்களின் முன் தன்னை பலிகொடுக்க சொன்ன சங்கரரை தினமும் துதிக்கும் மஹான்களே முதலில் உங்கள் 'காலடி'யில் இருக்கும் சிறு எறும்புகளை காப்பாற்றுங்கள். அப்புறம் பிற நாடுகளில் இருக்கும் மக்களுக்கு மேன்மை கொடுக்கலாம்.

இறைவனின் கருணை அவர்களுக்கு கிடைக்கட்டும்...

எருமை இனமே சோம்பேறியாக இருக்க கூடாது என்பதை நான் உணர எனக்கு குருவாக இருந்தீர்கள். உங்கள் ஆன்மா மேன்மை அடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

இவண்

உலக அமைதி வேண்டி
அறியாமையை நீக்க
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Wednesday, July 1, 2009

ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....

நமது வலைமனையை சார்ந்தவர்கள் முதலில் டைம்பாஸ்க்காக “ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி” என எழுத துவங்குகிறார்கள். அப்பறம் பாஸ் டைம் இல்லாமல் எழுதும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனபது மகிழ்ச்சியான செய்தி. இவ்வாறு முன்னேற்றம் அடைய என்ன காரணம் என திரு சுப்பையா அவர்கள் தன்னுடைய வலையில் எழுதி இருந்தார்.

வாசகர்களின் நோக்கம் அறிந்து அந்த நேரத்திற்கு தேவையாக தலைப்புகளில்
எழுதுவது அதை சுவாரசியமாக எழுதுவது என்பது காரணமாக இருக்கலாம். 'நேரத்திற்கு' தேவையான என கருத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். எதையும் நேரத்தில் செய்தால் அதிர்ஷ்டத்தின் பார்வை - அந்தாங்க லக்கி லுக் உங்களுக்கு கிடைக்கும்...!

திருவள்ளுவர் சொன்னது போல காலம் கருதி செயல்கள் செய்தால் ஞாலமும் உங்கள் கையில் வரும்.

“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் என
பொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோரா என்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல் பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம்.

(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் என பிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )

ஹோரை என்பது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நேரம் என கணிக்கப்படுகிறது. வாரத்தில் ஏழு கிழமைகள் ஏழு கிரகங்களின் தன்மையால் ஆளப்படுகிறது. நவக்கிரஹங்களில் உருவ நிலையில் இருப்பது ஏழு கிரகங்கள். ராகு கேது என்பது நிழல் கிரகம் அல்லது அருவ கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் முழுமையான கால கணக்குகளுக்கு ஏழுகிரகங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஏழுகிரஹங்கள் வார நாட்களை ஆட்சி செய்வது போல ஒவ்வொரு நாளில் இருக்கும் உட்பகுதியையும் ஆட்சி செய்கிறது.

சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை (சுமார் 60 நாழிகை) ஒரு நாள் என கணிக்கப்படுவது நமது நாள் கணக்கு. சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் வீதம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். இதற்கு ஹோரா என பெயர்.

உதாரணமாக சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று சூரிய உதயம் காலை 6 மணி எனக்கொண்டால் 6 முதல் 7 வரை சூரிய ஹோரை ஆகும்.

ஒவ்வொரு நாளின் அதிபதியும் அந்த வார நாளில் முதல் ஹோரையை ஆட்சி செய்து துவக்குவார்கள். ஹோரை அமைப்பை மனதில் வைத்துகொள்ளுவது எளிது.

ஒவ்வொரு நாளுக்கும் அதிபதியை பின்னோக்கு - ஒன்று விட்டு பயன்படுத்தினால் போதும். உதாரணமாக திங்கள் கிழமை முதல் ஹோரை சந்திரன். அடுத்த ஹோரை திங்கள் கிழமையிலிருந்து பின்னோக்கு சென்றால் ஞாயிறு அதை விட்டு அடுத்த நாள் சனி.

எனவே சனி ஹோரை. சனி கிழமை பின்னோக்கி வெள்ளி - அதை விட்டு வியாழன். திங்கள் கிழமை மூன்றாம் ஹோரை குரு.

ஞாயிறு அன்று ஹோரையை பார்த்தோமானல் அதன் அதிபதிகள் கீழ்கண்ட நிலையில் இருப்பார்கள்.

அதிபதி : சூரியன் - சுக்கிரன் - புதன் - சந்திரன் - சனி - குரு - செவ்வாய்
கிழமை : ஞாயிறு - வெள்ளி - புதன் - திங்கள் - சனி - வியாழன் - செவ்வாய்

இப்படியாக 7 மணி நேரம் வீதம் 7 கிரகங்கள் மூன்றே கால் முறை ஒரு நாள் முழுவதும் ஆட்சி செய்யும்.

மனக்கணக்கிலேயே இதை கணிக்க முடியும். இதையும் மீறி எனக்கு மூளை குறைவு -ஞாபக சக்தி குறைவு என சொல்லுபவர்களுக்கு :)) சுப்பையா அவர்களின் பதிவில் இருக்கும் அட்டவணையை பார்க்கவும். சுட்டி

வெளி நாட்டில் வசிப்பவர்கள் சூரிய உதயத்தை தான் கணக்கில் கொள்ள வேண்டும். Day Light Saving கணக்கில் கொள்ள கூடாது.

பஞ்சபட்சி சாஸ்திரம் என சாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் ஹோரா எனும் காலமுறை. ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்கு அவ்வளவே.

தற்சமயம் நாம் காலத்தை எண்களால் கணிக்கிறோம். ஒரு மணி , ரெண்டு மணி என...24 மணி நேரம். நீயூமராலஜியில் 5ஆம் எண் நல்லது, 8ஆம் எண் கெட்டது என்பார்கள். இக்கருத்தை நாம் பார்க்கும் கடிகார மணியில் இணைத்துக்கொண்டு 8மணி என்பது கெட்ட நேரம் என சொன்னால் அது எவ்வாறு முட்டாள்தனமோ அது போன்றது சனி ஹோரை கேட்டது குரு ஹோரை நல்லது என சொல்லுவதும்.

இன்று காலை 10 மணிக்கு உலக மக்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான செயல் நடந்திருக்குமா? அது போன்றது தான் ஹோரையை வைத்துகொண்டு சுப நேரங்களை பொத்தம் பொதுவாக தேர்ந்தெடுப்பதும்.

உங்கள் ஜாதகத்தில் சனி என்ற கிரகம் சிறப்பாக இருந்தால் சனி ஹோரை நல்ல காலம்தான். குரு மோசமாக இருந்தால் குரு ஹோரையில் நீங்கள் அனுபவிப்பது வெளியில் சொல்ல முடியாது. ஆகவே ஹோரை காலத்தை உங்கள் பிறப்பு ஜாதகத்துடன் தொடர்புப்படுத்தியே பயன்படுத்த வேண்டும் அப்பொழுது தான் சரியான பலன்கிட்டும். அப்படி இல்லாமல் மேம்போக்காக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நீங்கள் பகுத்தறிவாளராக நேரிடும். :)

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் முதல் ஹோரை அந்த நாளின் அதிபதியால் ஆட்சி செய்யபடுகிறது அல்லவா அந்த நேரம் எல்லா நாளும் நல்ல நேரம் தான். [ சனிக்கிழமை முதல் ஹோரை சனி என்றாலும் நல்ல காலம் தான்].

ஜோதிடத்தில் எண்ணற்ற கால கணிதம் உண்டு. அதில் ஒருவகைதான் ஹோரா எனும் பகுப்பு. ஆதலால் இதை பயன்படுத்துவது என்றால் இதை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உதாரணமாக ராகு காலம் , எமகண்டம் காலத்தையும் ஹோராவையும் இணைத்து பயன்படுத்துகிறேன் என்றால் உங்களை காலதேவந்தான் காப்பாற்ற வேண்டும். காரணம் சில நல்ல ஹோரா நேரத்தில் பாதி அளவு ராகு காலத்தில் வரும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இவ்வாறு காலத்தை கருதி செயல்படுங்கள் இல்லை என்றால் டவுசர் கிழியும் தாவு தீரும்... :)

பி.கு : இக்கட்டுரையை எழுத தூண்டிய திரு சுப்பையா அவர்களுக்கு நன்றிகள் பல.